.

Pages

Showing posts with label அதிரை செய்திகள். Show all posts
Showing posts with label அதிரை செய்திகள். Show all posts

Saturday, December 12, 2020

தேர்தலில் வாக்குச்சீட்டு முறை கோரி அதிராம்பட்டினத்தில் கோரிக்கை முழக்கம் (படங்கள்)

அதிராம்பட்டினம், டிச.12
மின்னணு வாக்கு இயந்திர எதிர்ப்பு ஒருங்கிணைப்புக் குழுவின் சார்பில், தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்துக்குப் பதிலாக வாக்குச்சீட்டு முறையையே மீண்டும் அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி அதிராம்பட்டினம் பேருந்து நிலையம் அருகில் கோரிக்கை முழக்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்வில், அக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் ஏ.ஜெ ஜியாவுதீன் தலைமை வகித்து, கண்டன உரை நிகழ்த்தினார். இந்நிகழ்வில், பெண்கள் உள்பட திரளானோர் கலந்துகொண்டு, 'மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை திரும்பப்பெறு' என்பன உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகையை கைகளில் ஏந்தியவாறு, தேர்தலில் பயன்படுத்தப்பட்டு வரும் மின்னணு வாக்குப்பதிவு  இயந்திரத்தை தடை செய்ய கோரியும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்துக்குப் பதிலாக வாக்குச்சீட்டு முறையையே மீண்டும் அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி முழக்கமிட்டனர்.


Wednesday, December 9, 2020

தேர்தலில் வாக்குச்சீட்டு முறை கோரி அதிராம்பட்டினத்தில் பிரச்சாரம் (படங்கள்)

அதிராம்பட்டினம், டிச.09
தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்துக்குப் பதிலாக வாக்குச்சீட்டு முறையையே மீண்டும் அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி அதிராம்பட்டினத்தில் மின்னணு வாக்கு இயந்திர எதிர்ப்பு ஒருங்கிணைப்புக் குழுவினர் விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அதிராம்பட்டினத்தில் ஜமாத் நிர்வாகிகள், கிராம பஞ்சாயத்தார்கள், சமூக நல அமைப்பு நிர்வாகிகள், அரசியல் கட்சி பிரமுகர்கள், வர்த்தகர்கள், தன்னார்வலர்கள் உளிட்டோரை நேரில் சந்தித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். மேலும், அதிரை ஏ.ஜெ ஜியாவுதீன் தலைமையில், எதிர்வரும் 11-12-2020 அன்று மாலை அதிராம்பட்டினத்தில் நடைபெற இருக்கும் பேரணி மற்றும் கோரிக்கை முழக்க நிகழ்வுக்கு அழைப்பு விடுத்து வருகின்றனர்.

இதில், சாந்தா சாகுல் ஹமீது, கிஜார் முகமது, அகமது அனஸ், காமில் உள்ளிட்ட மின்னணு வாக்கு இயந்திர எதிர்ப்பு ஒருங்கிணைப்புக் குழுவினர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


Tuesday, December 8, 2020

விவசாயிகளுக்கு ஆதரவாக அதிராம்பட்டினத்தில் கடைகள் அடைப்பு, சாலை மறியல்: 200 பேர் கைது (படங்கள்)

அதிராம்பட்டினம், டிச.08
வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாய அமைப்புகளின் நாடு தழுவிய போராட்டத்திற்கு ஆதரவாக, அதிராம்பட்டினத்தில் திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் கடை அடைப்பு, சாலை மறியல் போராட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்ட 200 பேர் கைது செய்யப்பட்டனர். 

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் திருத்தச் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி தில்லியில் நடைபெறும் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக, திமுக அதிராம்பட்டினம் பேரூர் செயலாளர் இராம.குணசேகரன் தலைமையில் சாலைமறியலில் ஈடுபட்ட இந்திய தேசிய காங்கிரஸ், இடதுசாரி கட்சிகள், மதிமுக, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், எஸ்டிபிஐ, தமுமுக, மனிதநேய மக்கள் கட்சி, மனிதநேய ஜனநாயகக் கட்சி, நாம் தமிழர், விடுதலை சிறுத்தைகள், நாம் மனிதர் உள்ளிட்ட எதிர்கட்சிகளைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்து, தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர்.

முன்னதாக, விவசாயிகளுக்கு ஆதரவாக, அதிராம்பட்டினத்தில் கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது. இதில், அதிராம்பட்டினம் பேருந்து நிலையம், பழைய அஞ்சலக சாலை, ஆஸ்பத்திரி சாலை, பெரிய கடைத்தெரு, பட்டுக்கோட்டை சாலை உள்ளிட்ட பகுதிகளின் வர்த்தகக் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.


Wednesday, November 25, 2020

அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனையில் தேசிய பச்சிளம் குழந்தைகள் வார விழா (படங்கள்)

அதிராம்பட்டினம், நவ. 25
ஒவ்வோா் ஆண்டும் நவம்பா் மாதம் மூன்றாம் வாரத்தில் தேசிய பச்சிளம் குழந்தைகள் வார விழா கொண்டாடப்படுகிறது. அதன்படி, தஞ்சாவூர் மாவட்ட சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை சாா்பில், மாவட்ட சுகாதாரப் பணிகள் இணை இயக்குநர் வழிகாட்டுதலின் படி, வாரவிழா அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனையில் கொண்டாடப்பட்டது

அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் கார்த்திகேயன் தலைமையில் நடந்த நிகழ்வுகளில், பிரசவித்த தாய்மார்களுக்கு பச்சிளம் குழந்தைகளை நல்ல ஆரோக்கியத்துடன் பராமரிக்கும் முறை, குழந்தை பெற்றெடுக்கும் தாய்மாா்களுக்கு சுகாதார அறிவுரைகள், தாய்ப்பாலின் அவசியம் பற்றி விளக்கிக்கூறப்பட்டது. தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டன. பிறந்த குழந்தைகளுக்கு அம்மா குழந்தை நல பரிசுப்பெட்டகங்கள் வழங்கப்பட்டன. 

இதில், அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனை மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் அணைத்து மருத்துவப் பணியாளர்கள் பங்கேற்று, பச்சிளம் குழந்தைகள் பராமரிப்பு முறை பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.


Monday, October 19, 2020

அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனையில் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி!

அதிராம்பட்டினம், அக்.19
உலகம் முழுவதும் அக்டோபர் மாதம் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதமாக அனுசரிக்கப்படுகிறது. அதன்படி, மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில், மாவட்ட சுகாதாரப் பணிகள் இணை இயக்குநர் வழிகாட்டுதலின் படி, மார்பகபுற்று நோய் பற்றிய விழிப்புணர்வு நிகழ்வு அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்வுக்கு, அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் டாக்டர் எஸ்.கார்த்திகேயன் தலைமை வகித்தார். நிகழ்வில், புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வு மற்றும் சுயபரிசோதனை செய்துகொள்தல் பற்றி விளக்கமாக எடுத்துரைக்கப்பட்டது. மருத்துவமனை மருத்துவர்கள், செவிலியர்கள் மார்பக புற்றுநோய் உறுதிமொழியை எடுத்துக்கொண்டனர். இதில், 30க்கும் மேற்பட்ட பெண்கள் சமூக இடைவெளியுடன் முகக்கவசம் அணிந்து கலந்து கொண்டனர். 


Friday, October 9, 2020

வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தத்தாழ்வு பகுதி: அதிராம்பட்டினம் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை!

அதிராம்பட்டினம், அக்.09
அந்தமான் கடல் பகுதியில் உருவாகிய புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காரணமாக, மத்திய வங்கக்கடல், வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் மணிக்கு 50 கி.மீ. முதல் 60 கி.மீ. வேகத்தில் சூறாவளிக் காற்று வீசும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டது.

இதையடுத்து, தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் பகுதியை உள்ளடக்கிய காந்தி நகா், கரையூா் தெரு, ஏரிப்புறக்கரை, மறவக்காடு, கீழத்தோட்டம் பகுதி மீனவர்கள் சனிக்கிழமை காலை கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. இதனால், ஏரிப்புறக்கரை உள்ளிட்ட அதிராம்பட்டினம் பகுதியில் உள்ள அனைத்து துறைமுகங்களும் வெறிச்சோடி காணப்பட்டன. துறைமுகங்களில் படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 


Tuesday, October 6, 2020

பேரூராட்சி பகுதிகளில் நூறு நாள் வேலைத் திட்டத்தை அமல்படுத்தவேண்டும்: மனுக்கொடுத்து ஆர்ப்பாட்டம்!

தஞ்சாவூர் அக்.06-
பேரூராட்சி பகுதிகளிலும் நூறுநாள் வேலைத்திட்டத்தை அமல்படுத்த வேண்டும். நூறு நாள் வேலையை 200 நாட்களாகவும், தினக்கூலியை ரூ 600 ஆகவும் உயர்த்தி வழங்க வேண்டும். கொரோனா காலத்திற்கு சிறப்பு நிவாரணமாக குடும்பத்திற்கு ரூ 7,500 வழங்க வேண்டும். 60 வயதைக் கடந்த அனைவருக்கும் முதியோர் ஓய்வூதியமாக மாதம் ரூ 3 ஆயிரம் வழங்க வேண்டும். 

கொரோனா பேரிடர் காலம் முழுவதும் ரேசன் கடைகளில், பொருட்களை குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவசமாக வழங்க வேண்டும் என வலியுறுத்தி, அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில், பேரூராட்சி அலுவலகங்களில், அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் மனு கொடுத்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

தஞ்சாவூர் மாவட்டத்தில் வல்லம், சுவாமிமலை, அதிராம்பட்டினம், பெருமகளூர் ஆகிய 4 இடங்களில் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களில் 1500 பேர் கலந்து கொண்டனர். 2,100 மனுக்கள் அளிக்கப்பட்டன. 

கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்ட பேரூராட்சி செயல் அலுவலர்கள் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பி வைப்பதாக தெரிவித்தனர். 

தஞ்சாவூர் 
தஞ்சாவூர் ஒன்றியம் வல்லம் பேரூராட்சி அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, விதொச ஒன்றியச் செயலாளர் கே.அபிமன்னன் தலைமை வகித்தார். எம்.ஜி.அந்தோணிசாமி, இ.பார்வதி முன்னிலை வகித்தனர். சிஐடியு மாவட்டத் தலைவர் து.கோவிந்த ராஜூ தொடங்கி வைத்துப் பேசினார். சிபிஎம் ஒன்றியச் செயலாளர் எம்.மாலதி கண்டன உரையாற்றினார். விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் பி.செந்தில்குமார் நிறைவுரையாற்றினார். எல்.ராமராஜ், சௌந்தரராஜன், அபிமன்னன் மற்றும் ஏராளமான பெண்கள் உள்ளிட்ட 620 பேர் கலந்து கொண்டு, 850 மனுக்களை அளித்தனர். 

சுவாமிமலை
கும்பகோணம் ஒன்றியம் சுவாமிமலை பேரூராட்சி அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு விதொச ஒன்றியச் செயலாளர் ஆர்.தெட்சிணாமூர்த்தி தலைமை வகித்தார். ஒன்றியத் தலைவர் ஆர்.நாகமுத்து, ஒன்றியப் பொருளாளர் கே.கலையரசன், அ.இ.ஜ.மாதர் சங்கம் ஒன்றியத் தலைவர் ஆர்.கலா, ஒன்றியச் செயலாளர் எஸ்.மகேஸ்வரி, ஒன்றியக்குழு உறுப்பினர் கே.புவனேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் கே.பக்கிரிசாமி, துவக்கி வைத்துப் பேசினார். விதொச மாநிலக்குழு உறுப்பினர் சி.நாகராஜன், சிபிஎம் ஒன்றியச் செயலாளர் பி.ஜேசுதாஸ், நகரச் செயலாளர் கே.செந்தில்குமார்,  மற்றும் ஒன்றியக் குழு உறுப்பினர்கள் மற்றும் 200 பெண்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். வேலை கேட்டு 500 மனுக்கள் கொடுக்கப்பட்ட.ன. 

சேதுபாவாசத்திரம் 
சேதுபாவாசத்திரத்தில் ஒன்றியம், பெருமகளூர் பேரூராட்சி அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, விவசாயத் தொழிலாளர்கள் சங்க ஒன்றியத் தலைவர் கணேசன் தலைமை வகித்தார். மாவட்டக்குழு உறுப்பினர் வீ.கருப்பையா முன்னிலை வகித்தார். விதொச மாவட்டத் தலைவர் ஆர்.வாசு கண்டன உரையாற்றினார். சிபிஎம் ஒன்றியச் செயலாளர் ஆர்.எஸ்.வேலுச்சாமி, ஒன்றியக்குழு உறுப்பினர் பி.கே.சண்முகம் மற்றும் சோனமுத்து மற்றும் விவசாயத் தொழிலாளர்கள் கலந்து கொண்டு 210 மனுக்களை அளித்தனர். 

அதிராம்பட்டினம் 
பட்டுக்கோட்டை ஒன்றியம், அதிராம்பட்டினம் பேரூராட்சி அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, ஒன்றியக்குழு உறுப்பினர் கே.சோமசுந்தரம் தலைமை வகித்தார். சிபிஎம் மாவட்டக்குழு உறுப்பினர் எம்.செல்வம், ஒன்றியச் செயலாளர் எஸ்.கந்தசாமி, கிளைச் செயலாளர் தண்டபாணி, மணல் மாட்டு வண்டித் தொழிலாளர்கள் சங்கம் சக்திவேல் மற்றும் பெண்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். 

Wednesday, September 30, 2020

நடுத்தெரு அரசுப் பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை விழிப்புணர்வு முகாம் (படங்கள்)

அதிரை நியூஸ்: செப்.30
அதிராம்பட்டினம், நடுத்தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.  

நிகழ்வுக்கு, பள்ளித் தலைமை ஆசிரியை எஸ்.மாலதி தலைமை வகித்தார். முகாமில், ஆசிரியர்கள் ஏ.கிருஷ்ணவேனி, எஸ். உமா ராணி, கே. விஜயலட்சுமி, எஸ். டேவிட் ஆரோக்கிய ராஜ், கே. கலாதேவி, பி.அமுதா, ஏ.கனிமொழி மற்றும் முன்னாள் மாணவர்கள் கலந்துகொண்டனர். 

முகாமில், ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரையில் 40 மாணவர்கள் பள்ளியில் புதியதாகச் சேர்க்கப்பட்டனர். இதனால், பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை 180 ஆக உயர்ந்துள்ளது. புதிதாக இணைந்த மாணவர்களுக்கு புத்தகங்கள், எழுதுகோல், புத்தகப்பை உள்ளிட்டவை வழங்கப்பட்டன. 

2020 - 2021 ம் கல்வியாண்டில் பள்ளியின் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் பொருட்டு, நடுத்தெரு, புதுத்தெரு, முத்தம்மாள் தெரு, பிலால் நகர், காலியார் தெரு, வெற்றிலைக்காரத் தெரு உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று பெற்றோர்களைச் சந்தித்து மாணவர்களை அரசுப் பள்ளியில் சேர்க்க வேண்டியதன் அவசியம், பள்ளியில் வழங்கப்படும் செயல் வழிக்கற்றல் பயிற்சி, உடற்கல்வி, விளையாட்டு வகுப்புகள், கணினிப் பயிற்சி, காணொளி வழிக்கல்வி, நீதிபோதனை வகுப்புகள், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு அரசால் வழங்கப்படும் சலுகைகள் குறித்தும் விரிவாக விளக்கப்பட்டது.

இதுகுறித்து பள்ளித்தலைமை ஆசிரியை எஸ்.மாலதி கூறியது;
அதிராம்பட்டினம், நடுத்தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு முடிய சேர்க்கை கடந்த (17-08-2020) முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.

கட்டணம் கிடையாது. புத்தகம், பை, நோட், வண்ண பென்சில்கள் மற்றும் கணித வடிவியல் பெட்டி, சீருடை, கல்வி உதவித்தொகை உள்ளிட்ட அனைத்தும் இலவசமாக வழங்கப்படுகிறது.

மேலும், செயல் வழிக்கற்றல் பயிற்சி, உடற்கல்வி, விளையாட்டு வகுப்புகள், கணினிப் பயிற்சி, காணொளி வழிக்கல்வி, நீதிபோதனை வகுப்புகள் ஆகியவை நடத்தப்படுவது குறித்து பெற்றோர்களை வீடு வீடாக சென்று சந்தித்து அவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்.

பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அரசுப் பள்ளியில் சேர்த்து பயன்பெற வேண்டுமென பள்ளித் தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள் மற்றும் பள்ளி மேலாண்மைக்குழு, கிராமக்கல்விக்குழு, பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில் கேட்டுக்கொள்வதாக தெரிவித்தார்.