.

Pages

Showing posts with label அதிரை திருட்டு. Show all posts
Showing posts with label அதிரை திருட்டு. Show all posts

Friday, May 17, 2019

அதிராம்பட்டினத்தில் ஆசிரியர் வீட்டில் 31 பவுன் நகைகள் திருட்டு!

அதிராம்பட்டினம், மே 17
அதிராம்பட்டினம் கரையூர் தெருவைச் சேர்ந்தவர் முருகன் (45). பட்டுக்கோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். இவர் சில நாட்களுக்கு முன் வீட்டைப் பூட்டிவிட்டு, குடும்பத்துடன் வெளியூர் சென்றிருந்தார்.

இந்நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை அதிகாலை முருகன் வீட்டின் வாசல் கதவை உடைத்து மர்ம நபர்கள் உள்ளே புகுந்துள்ளனர். பின்னர், அங்குள்ள அலமாரியை திறந்து அதிலிருந்த 31 பவுன் நகைகள், ரூ.35 ஆயிரம் ரொக்கம் ஆகியனவற்றை திருடிச் சென்றுவிட்டனராம்.

இதுபற்றி தகவலறிந்து ஊர் திரும்பிய முருகன், புதன்கிழமை அளித்த புகாரின் பேரில், அதிராம்பட்டினம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

Tuesday, April 2, 2019

அதிரையில் திருடு போன நகைகள் மீட்பு: போலீசாருக்கு பாராட்டு (படங்கள்)

அதிராம்பட்டினம், ஏப்.02
அதிராம்பட்டினம் திலகர் தெருவைச் (ஓ.கே.எம் லேன்) சேர்ந்தவர் என்.சிபஹத்துல்லா (வயது 63). அதே பகுதியில் கடந்த 20 வருடங்களாக நகைக் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில், கடந்த ஜனவரி மாதத்தில் நகைக் கடையின் பூட்டை உடைத்து சுமார் ரூ.50 லட்சம் மதிப்பிலான தங்கம், வெள்ளி நகைகளை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர்.

அப்போது சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மகேஸ்வரன், பட்டுக்கோட்டை டி.எஸ்.பி எஸ்.கணேசமூர்த்தி, கும்பகோணம் டி.எஸ்.பி செங்கமலக் கண்ணன், பட்டுக்கோட்டை காவல் ஆய்வாளர் அன்பழகன், அதிராம்பட்டினம் காவல் நிலைய ஆய்வாளர் தியாகராஜன் உள்ளிட்ட போலீசார் விசாரணை நடத்தினர்.

இதுகுறித்து, அதிராம்பட்டினம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து பல்வேறு இடங்களில் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு திருடு போன நகைகளை மீட்டு நகைக் கடை உரிமையாளர் என். சிபஹத்துல்லாவிடம் போலீசார் ஒப்படைத்தனர்.

இதையடுத்து, நகைகளை மீட்பதற்கு துரிதமாக பணியாற்றிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர், துணை கண்காணிப்பாளர், காவல் ஆய்வாளர் உள்ளிட்ட காவல்துறையினருக்கு நன்றி தெரிவித்தார். மேலும், பட்டுக்கோட்டை டி.எஸ்.பி எஸ்.கணேசமூர்த்தி, அதிராம்பட்டினம் காவல் நிலைய ஆய்வாளர் ஆகியோருக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.

மேலும், நகை வியாபாரிகள், வர்த்தகர்கள், பத்திரிகையாளர்கள், கல்வியாளர்கள், ஜமாத்தார்கள், அதிரை பைத்துல்மால் நிர்வாகிகள்,  வாடிக்கையாளர்கள், நண்பர்கள், உறவினர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.
 
 

Wednesday, March 13, 2019

அதிராம்பட்டினத்தில் திருடு போன நகையை வாங்கிய விவகாரம்: அடகுக் கடைக்காரரிடம் விசாரணை!

அதிராம்பட்டினம், மார்ச் 13
திருட்டு நகையை வாங்கியது தொடர்பாக கடலூரைச் சேர்ந்த அடகுக் கடைக்காரரிடம் அதிராம்பட்டினம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் பகுதியில் ஒரு நகைக் கடையில் அண்மையில் நகைகள் திருடுபோனது. இதுகுறித்து, அதிராம்பட்டினம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த வழக்கு தொடர்பாக பிடிபட்டவரிடம் விசாரணை நடத்தியதில் அவர் திருட்டு நகைகளை கடலூர் திருப்பாதிரிப்புலியூர் உள்ள அடகுக் கடையில் விற்றதாகக் கூறினாராம். இதையடுத்து, அந்த நபரை அழைத்து கொண்டு அதிராம்பட்டினம் போலீசார் ஞாயிற்றுக்கிழமை கடலூர் வந்தனர். பின்னர் திருப்பாதிரிப்புலியூரில் உள்ள குறிப்பிட்ட கடைக்கு சென்று விசாரணை நடத்தினர்.

அப்போது, சம்பந்தப்பட்ட அடகுக் கடைக்காரர், திருட்டு நகைகளை விற்றதாகக் கூறும் நபர் யார் என்று தனக்கு தெரியாது என போலீஸாரிடம் கூறினாராம். மேலும், அதுபோன்ற நகைகளை வாங்கவில்லை என்றும் தெரிவித்தார். ஆனால், அதிராம்பட்டினம் போலீஸார் இது தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டனர். மேலும், அடகுக் கடைக்காரரை அதிராம்பட்டினத்துக்கு அழைத்துச் செல்லும் முயற்சியில் ஈடுபட்டனர். இதனால் இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பொதுமக்கள் அப்பகுதியில் திரண்டனர் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து தகவலறிந்த திருப்பாதிரிப்புலியூர் காவல் ஆய்வாளர் அ.குமாரய்யா தலைமையிலான போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். சம்பவம் குறித்து போலீஸார் தரப்பில் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Friday, January 25, 2019

அதிரையில் பட்டப் பகலில் பைக் திருட்டு: போலீசில் புகார்!

அதிராம்பட்டினம், ஜன.25
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் சேது ரோட்டைச் சேர்ந்தவர் சேக் அப்துல்லா (62). இவர் இன்று வெள்ளிக்கிழமை பகல் கடந்த 5 மாதத்திற்கு முன் புதிதாக வாங்கிய தனது இருசக்கர வாகனத்தை வீட்டின் முன்பாக நிறுத்திவிட்டு வீட்டிற்குள் சென்றுள்ளார். பின்னர் சில மணி நேரங்கள் கழித்து மீண்டும் வந்து பார்த்தபோது பைக் காணாமல் போனது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அதிராம்பட்டினம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் பட்டப்பகலில் பைக் திருட்டுப் போன சம்பவம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.

காணமல் போன பைக் பற்றிய விவரங்கள்:
ஹோண்டா ஆக்டிவா (வெள்ளை நிறம்)
வண்டி எண்: TN-49 BU 2100
தொடர்புக்கு: 7094400173 / 8122269285

அதிரையில் நகைக் கடையில் பூட்டை உடைத்து திருட்டு ~ எஸ்.பி விசாரணை (படங்கள்)

அதிராம்பட்டினம், ஜன.25
அதிராம்பட்டினத்தில் நகைக் கடையின் பூட்டை உடைத்து சுமார் ரூ.50 லட்சம் மதிப்பிலான தங்க, வெள்ளி நகைகளை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர்.

அதிராம்பட்டினம் திலகர் தெருவைச் (ஓ.கே.எம் லேன்) சேர்ந்தவர் என்.சிபஹத்துல்லா (வயது 63). அதே பகுதியில் கடந்த 20 வருடங்களாக நகைக் கடை நடத்தி வருகிறார்.

இந்நிலையில், இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை கடையின் ஷட்டர் திறந்து கிடப்பதைப் பார்த்து அவ்வழியே சென்றவர்கள் சிபஹத்துல்லாவுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, கடைக்கு சென்று பார்த்த சிபஹத்துல்லா அதிர்ச்சி அடைந்தார். கடையினுள் அடுக்கி வைக்கப்பட்டிருந்த தங்கச் சங்கிலிகள், மோதிரம், வளையல் என சுமார் 1 கிலோ எடையுள்ள தங்கம், சுமார் 30 கிலோ எடையுள்ள வெள்ளி நகைகள், ரொக்கம் ரூ.10 ஆயிரம், நகைக்கடையினுள் பொருத்திருந்த கண்காணிப்பு கேமிரா, ஹார்ட் டிஸ்க், இன்வெர்ட்டர் ஆகியன திருடப்பட்டிருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மகேஸ்வரன், பட்டுக்கோட்டை டி.எஸ்.பி எஸ்.கணேசமூர்த்தி, கும்பகோணம் டி.எஸ்.பி செங்கமலக் கண்ணன், பட்டுக்கோட்டை காவல் ஆய்வாளர் அன்பழகன், அதிராம்பட்டினம் காவல் நிலைய ஆய்வாளர் தியாகராஜன் உள்ளிட்ட போலீசார் விசாரணை நடத்தினர். சம்பவ இடத்திற்கு மோப்ப நாய் ராஜராஜன் மற்றும் விரல் ரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு சோதனையிடப்பட்டது. திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர். இக்சம்பவம், இப்பகுதியில் மிகுந்த பரபரப்பையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. திருடப்பட்ட நகைகளின் மதிப்பு சுமார் ரூ.50 லட்சம் என சிபஹத்துல்லா தெரிவித்தார்.
 
 
 
 
 
 
 
 
 
  
  
  
 
 
 

Thursday, October 18, 2018

அதிரை அருகே வியாபாரியிடம் வழிப்பறி ~ தலையில் வெட்டுக் காயங்களுடன் சிகிச்சை!

அதிராம்பட்டினம், அக்.18
மதுரையைச் சேர்ந்தவர் சிவக்குமார் (42). வியாபாரி, இவர், தனது இருசக்கர வாகனத்தில் முத்துப்பேட்டையிலிருந்து, ஈஸ்ட் கோஸ்ட் சாலை வழியாக அதிராம்பட்டினத்திற்கு புதன்கிழமை மாலை சென்று கொண்டிருந்தார். வாகனம் தம்பிக்கோட்டை அருகே வந்தபோது, இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக வந்த இரு மர்ம நபர்கள் சிவக்குமாரை வழிமறித்து, அருவாளால் தலையில் வெட்டிவிட்டு, அவரிடம் இருந்த கைப்பை, செல்போன், ரூ.5 ஆயிரம் ஆகியவற்றை பறித்துக்கொண்டு தப்பியோடினராம்.

தலையில் வெட்டுக் காயங்களுடன் உயிருக்கு போராடியவரை அப்பகுதியினர் மீட்டு அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர், உயர் சிகிச்சைக்காக பட்டுக்கோட்டை தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதுகுறித்து அதிராம்பட்டினம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Saturday, September 29, 2018

அதிராம்பட்டினத்தில் 2 இடங்களில் பைக் திருட்டு!

அதிராம்பட்டினம், செப்.29
அதிராம்பட்டினம் பழஞ்செட்டித் தெருவைச் சேர்ந்தவர் ஏ.சடையன் (45). இவர் செப்.22-ம் தேதி இரவு தன்னுடைய வீட்டு வாசலில் தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தி வைத்துள்ளார். மறுநாள் காலை பார்த்தபோது இவருடைய மோட்டார் சைக்கிளை யாரோ மர்ம நபர் திருடிச் சென்றிருப்பது தெரிய வந்தது.

மற்றொரு சம்பவம்: 
அதிரை காந்தி நகரைச் சேர்ந்தவர் எம். அய்யாமுருகன் (30). இவர் செப்.23-ம் தேதி இரவு அதே பகுதியிலுள்ள பிள்ளையார் கோயில் எதிரில் சிவக்குமார் என்பவர் வீட்டு வாசலில் தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தி வைத்துள்ளார். மறுநாள் காலை பார்த்தபோது இவருடைய மோட்டார் சைக்கிளை யாரோ திருடிச் சென்று விட்டார்களாம். மேற்கண்ட சம்பவங்கள் தொடர்பான புகார்களின் பேரில், அதிராம்பட்டினம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்

Friday, September 14, 2018

அதிராம்பட்டினம் அருகே இருசக்கர வாகனம் திருட்டு!

அதிராம்பட்டினம், செப்.14
அதிராம்பட்டினம் மேலத்தெருவைச் சேர்ந்தவர் எஸ்.பகுருதீன் (52). இவர் செப்.7-ம் தேதி பிற்பகல் தொக்காலிக்காடு காமராஜர் அணைக்கரையில் தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு சென்றுள்ளார். சிறிது நேரத்தில் திரும்பி வந்து பார்த்தபோது இவருடைய மோட்டார் சைக்கிளை யாரோ மர்ம நபர் திருடிச் சென்றிருப்பது தெரிய வந்தது.

இதுகுறித்து, பகுருதீன் புதன்கிழமை அளித்த புகாரின் பேரில் அதிராம்பட்டினம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இருசக்கர வாகனம் பற்றிய தகவல் கிடைத்தால் கீழ்காணும் அலைப்பேசி எண்ணில் தொடர்பு கொண்டு தெரியப்படுத்தலாம்.
மாடல்: யமஹா FZ
பதிவு எண்: TN 49 AS7905
தொடர்புக்கு: 9788525353

Wednesday, July 18, 2018

அதிரையில் வீடு புகுந்து 10 பவுன் நகை திருட்டு!

அதிராம்பட்டினம், ஜூலை 18
அதிராம்பட்டினம் ஹாஜா நகரைச் சேர்ந்த பைசூல்தீன் மனைவி தமீம்பானு (43). அண்மையில் இவர் நடைப்பயிற்சிக்காக காலை 6 மணிக்கு வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்றுள்ளார். 1 மணி நேரத்துக்கு பிறகு நடைப்பயிற்சியை முடித்துவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது,  வீட்டின் வாசல் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்துகிடந்ததாம். வீட்டினுள் சென்று பார்த்தபோது யாரோ மர்ம நபர்கள் அலமாரியை உடைத்து, அதிலிருந்த ஒன்பதே முக்கால் பவுன் நகைகளைத் திருடிச் சென்றிருப்பது தெரிய வந்தது. இதுகுறித்து தமீம்பானு திங்கள்கிழமை (ஜூலை 16) அளித்த புகாரின் பேரில் அதிராம்பட்டினம் காவல் உதவி ஆய்வாளர் ஞானசேகரன் வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறார்.

Friday, November 17, 2017

அதிரையில் பெட்டிக்கடை பூட்டை உடைத்து திருட முயற்சி (படங்கள்)

அதிராம்பட்டினம், நவ.17
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் கடற்கரைத்தெருவை சேர்ந்தவர் ஜமாலுதீன் (70). இவர் ஹாஜா நகர் பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். வழமைபோல், நேற்று வியாழக்கிழமை இரவு கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றுள்ளார். மறுநாள் வெள்ளிக்கிழமை காலை கடையை திறக்க வந்தபோது, கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து, அதிராம்பட்டினம் காவல் நிலையத்தில் புகார் அளிக்க உள்ளார்.

அண்மை காலமாக, அதிராம்பட்டினம் பகுதியில், நள்ளிரவில் தொடர் திருட்டில் ஈடுபடும் திருடர்களின் அட்டுழியம் அதிகரித்து வருகிறது. போலீசார் இரவில் வாகன ரோந்தில் ஈடுபட்டு திருடர்களின் நடமாட்டத்தை கட்டுக்குள் கொண்டுவர தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வர்த்தகர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

செய்தி மற்றும் படங்கள்:
முகமது ராவுத்தர் (மாணவச் செய்தியாளர்)

Monday, October 16, 2017

அதிரையில் கடை பூட்டை உடைத்து பணம், பொருட்கள் திருட்டு !

அதிராம்பட்டினம், அக்.16
அதிராம்பட்டினம், மேலத்தெருவில் நள்ளிரவில் பெட்டிக்கடை பூட்டை உடைத்து பணம், பொருட்கள் திருட்டு.

தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் மேலத்தெருவை சேர்ந்தவர் சாகுல் ஹமீது (50). இவர் அதே பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். வழமைபோல், இரவு 7.30 மணியளவில் கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றுள்ளார்.  இந்நிலையில், இன்று திங்கட்கிழமை காலை கடையை திறக்க வந்தபோது, கடையின் பூட்டு உடைக்கப்பட்டு, அதில் இருந்த ஹார்லிக்ஸ் பாட்டல் 3, பூஸ்ட் பாட்டல் 3, சிகரெட் கார்டன் 1, ரொக்கம் ரூ.9,500 ஆகியவை திருட்டு போயிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து, அதிராம்பட்டினம் காவல் நிலையத்தில் புகார் அளிக்க உள்ளார்..

அண்மை காலமாக, அதிராம்பட்டினம் பகுதியில், நள்ளிரவில் தொடர் திருட்டில் ஈடுபடும் திருடர்களின் அட்டுழியத்தை கட்டுக்குள் கொண்டுவர போலீசார் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வர்த்தகர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

Sunday, August 27, 2017

அதிரையில் திருட்டு ~ சிசிடிவி கேமரா உதவியால் திருடன் பிடிபட்டான் ~ பொருட்கள் மீட்பு (படங்கள்)

அதிராம்பட்டினம், ஆக.27
அதிராம்பட்டினம், கீழத்தெருவில் உள்ள மளிகை கடையினுள் புகுந்து பணம், பொருட்கள் திருட்டு. சிசிடிவி கேமரா உதவியால் திருட்டு பொருட்கள் உடனடி மீட்பு. தொடர் திருட்டால்  வர்த்தகர்கள் கவலை - அதிர்ச்சி.

தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தை சேர்ந்தவர் கே.கே ஹாஜா நஜ்முதீன். கீழத்தெரு பிரதான சாலையில் மளிகை கடை நடத்தி வருகிறார். நேற்று சனிக்கிழமை இரவு வியாபாரத்தை முடித்துவிட்டு கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார்.

இந்நிலையில், இன்று ஞாயிற்றுக்கிழமை காலை கடையை திறந்து பார்த்த போது, கடையினுள் உள்ள கல்லா உடைக்கப்பட்டு, பொருட்கள் திருட்டு போயிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே கடையினுள் பொருத்தி இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்த காட்சியைப் பார்த்த போது, அதில் நள்ளிரவில் திருடன் ஒருவன் பெண்கள் கவுண்டர் வழியே கடையினுள் புகுந்து, கல்லாவை உடைத்து பணம், சிகரெட் பண்டல்கள், அமுல் ஸ்ப்ரே, சாக்லேட் உள்ளிட்ட பொருட்கள் திருடுவது தெளிவாகப் பதிவாகி இருந்தது. இதையடுத்து திருடன் வசிக்கும் வீட்டின் முகவரியை தெரிந்துகொண்ட கடை உரிமையாளர் கே.கே ஹாஜா நஜ்முதீன், நேரில் சென்று திருட்டுப் பொருட்களை திருடனிடமிருந்து மீட்டு வந்தார். இதன் மதிப்பு ரூ. 25 ஆயிரம் என கூறப்படுகிறது. இது குறித்து கடை உரிமையாளர் அதிராம்பட்டினம் போலீசாரிடம் தகவல் தெரிவித்துள்ளார்.

போலீசார் உதவி இல்லாமல் திருட்டு பொருட்கள் மீட்பு - வர்த்தகர்கள் பாராட்டு:
போலீசார் உதவி இல்லாமல், சிசிடிவி கேமரா உதவியுடன் திருட்டு பொருட்களை உடனடியாக மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்ட கடை உரிமையாளர் கே.கே. ஹாஜா நஜ்முதீன் துணிச்சலை வர்த்தகர்கள் வெகுவாகப் பாராட்டினார்கள்.

அதிராம்பட்டினத்தில் தொடர் திருட்டால் வர்த்தகர்கள் கவலை - அதிர்ச்சி:
அதிராம்பட்டினத்தில் கடந்த ஆக.10 ந் தேதி நள்ளிரவில் கடைத்தெரு பகுதியில் மளிகை கடை நடத்தி வரும் அபூபக்கர் கடையின், பூட்டை உடைத்து கல்லாவில் இருந்த ரூ. 90 ஆயிரம் பணம் திருட்டு போனது.
அதே போல், கடந்த ஆக.19 ந் தேதி நள்ளிரவில், நடுத்தெரு பகுதியில் கடை நடத்தி வரும் நூருல் அமீன் கடையினுள் ரீ சார்ஜ் செய்வதற்காக வைத்து இருந்த ரூ. 10 ஆயிரம் மதிப்பிலான 8 செல்போன்கள், ரொக்கம் ரூ. 20 ஆயிரம் ஆகியன திருட்டு போனது. அண்மைகாலமாக, அதிராம்பட்டினம் வர்த்தக மற்றும் குடியிருப்பு பகுதிகளில் நள்ளிரவில் தொடர் திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வருவது கவலையும், அதிர்ச்சியும் அளிப்பதாக உள்ளது.

தொடர் திருட்டுகளை தடுக்கும் நடவடிக்கையில் காவல்துறையினர் துரிதமாக செயல்பட வேண்டும். இரவில் வாகன ரோந்தில் ஈடுபட வேண்டும். அதிராம்பட்டினம் பிரதானப் பகுதிகளில் சிசிடிவி கேமராக்கள் பொறுத்த ஏற்பாடு செய்ய வேண்டும் என வர்த்தகர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

Thursday, August 10, 2017

அதிரையில் நள்ளிரவில் மளிகை கடை பூட்டை உடைத்து பணம் திருட்டு !

அதிராம்பட்டினம், ஆக.10
அதிராம்பட்டினம் கடைத்தெருவில் உள்ள மளிகை கடையின் பூட்டை உடைத்து பணம் திருட்டு. வர்த்தகர்கள் அதிர்ச்சி.

தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தை சேர்ந்தவர் நூருல் அமீன். இவரது மகன் அபூபக்கர். கடைத்தெரு பிரதான சாலையில் மளிகை கடை நடத்தி வருகிறார். நேற்று புதன்கிழமை இரவு வியாபாரத்தை முடித்துவிட்டு பணத்தை கல்லாவில் வைத்துவிட்டு கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார்.

இந்நிலையில், அதிகாலையில் கடை திறந்து கிடப்பதைக் கண்ட அப்பகுதி வர்த்தகர் சகாபுதீன், அபூபக்கருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து கடைக்கு வந்து பார்த்த போது கடை ஷட்டர் பூட்டு உடைக்கப்பட்டு கல்லாவில் இருந்த பணம் கொள்ளை போயிருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து அதிராம்பட்டினம் காவல் நிலையத்தில் அவர் அளித்த புகாரில் ரூ. 90 ஆயிரம் கொள்ளை போயிருப்பதாக தெரிவித்துள்ளார். நள்ளிரவில் திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். கடைத்தெரு பிரதான சாலையில் நடந்த இச்சம்பவம் வர்த்தகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

Wednesday, June 14, 2017

அதிரையில் பட்டப் பகலில் பைக் திருட்டு: போலீசில் புகார் !

அதிராம்பட்டினம், ஜூன் 14
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் கீழத்தெருவை சேர்ந்தவர் முகம்மது அசாருதீன் (22). இவர் நேற்று முன்தினம் திங்கட்கிழமை காலை தனது இருசக்கர வாகனத்தை வீட்டின் எதிரே நிறுத்திவிட்டு வீட்டிற்குள் சென்றுள்ளார். பின்னர் சில மணி நேரங்கள் கழித்து மீண்டும் வந்து பார்த்தபோது பைக் காணாமல் போனது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அதிராம்பட்டினம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் பட்டப்பகலில் பைக் திருட்டுப் போன சம்பவம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.

Friday, March 24, 2017

அதிரையில் அதிகரிக்கும் திருட்டு: வர்த்தகர்கள், பொதுமக்கள் கலக்கம் !

அதிராம்பட்டினம், மார்ச்-24
அதிராம்பட்டினத்தில் நள்ளிரவில் மர்ம நபர்கள் வீட்டின் ஜன்னலை உடைத்து செல்போன்- டேப்லட் கம்ப்யூட்டரை திருடிச்சென்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் பகுதிகளில் கடந்த சில மாதங்களாக தொடர் திருட்டு சம்பவங்கள் நடந்து வருகிறது. குறிப்பாக இரவு நேரங்களில் வீடுகளில் புகுந்து செல்போன்கள், நகைகள், பணத்தை திருடுவது, வீட்டின் முன்பாக நிறுத்தப்பட்டிருக்கும் வாகனங்களில் பெட்ரோல் திருடுவது, கடைகளை உடைத்து பொருட்களை திருடிச்செல்வது, ஆடுகள் திருடுவது என அதிகரிக்கும் சம்பவங்களால் வர்த்தகர்கள், பொதுமக்கள் கலக்கமடைந்துள்ளனர்.

இந்நிலையில், நேற்று நள்ளிரவில் அதிராம்பட்டினம் கடற்கரைத்தெருவில் உள்ள ஒரு வீட்டில் மர்மநபர்கள் வீட்டின் ஜன்னலை உடைத்து, அங்கு இருந்த விலை உயர்ந்த செல்போன், டேப்லட் கம்ப்யூட்டர் ஆகியவற்றை திருடிச் சென்றனராம்.

இதுகுறித்து சமூக ஆர்வலர் ஹாஜா முகைதீன் கூறுகையில்;
அதிரையில் கடந்த மாதம் பிப்-22 ந் தேதி நள்ளிரவில் மாரியம்மாள் என்பவர் வீட்டின் பின்பக்க கதவை உடைத்துக்கொண்டு உள்ளே புகுந்த  திருடர்கள் உறங்கிக்கொண்டிருந்த மாரியம்மாளின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி அவரிடமிருந்து பீரோ சாவியை பிடுங்கி பீரோவை திறந்து அதில் இருந்த சங்கிலி, மோதிரம் உட்பட 8 பவுன் தங்க நகையை கொள்ளை அடித்துச் சென்றனர். அதே போல் கடந்த வாரம் பட்டுக்கோட்டை சாலையில் உள்ள ஷோரூமில் முகமூடி அணிந்த மர்ம நபர்கள் ஷோரூம் ஷட்டரை உடைத்து அங்கு நிறுத்தப்பட்டிருந்த ரூ. 1 லட்சம் மதிப்புள்ள பைக்கை திருடிச்சென்றனர்.

அதிராம்பட்டினம் பகுதிகளில் நடந்து வரும் தொடர் திருட்டு சம்பவங்கள் கவலை அளிப்பதாக உள்ளது. காவல்துறையினர் இரவு நேரங்களில் வாகன ரோந்தில் ஈடுபட வேண்டும். முக்கிய பகுதிகளில் கண்காணிப்பு கேமிராக்கள் வைக்க வேண்டும். இரவு நேரங்களில் நடமாடும் அறிமுகமில்லாத நபர்களை பிடித்து விசாரிக்க வேண்டும். தப்பிச்செல்லும் திருடர்களை பிடிக்க ஊர் எல்லைகளில் செக்போஸ்ட் அமைத்து கண்காணிக்க வேண்டும்.மேலும் வீட்டை பூட்டிவிட்டு வெளியூர் செல்லும் குடியிருப்புதாரர்கள் தகுந்த பாதுகாப்பை ஏற்படுத்திவிட்டு செல்ல வேண்டும்' என்றார்.
 
 

Wednesday, March 22, 2017

அதிரையில் துணிகரம்: ஷோரூம் ஷட்டரை உடைத்து பைக் திருட்டு !

அதிராம்பட்டினம், மார்ச்-22
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தை சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன். இவர் பட்டுக்கோட்டை சாலையில் பைக் ஷோரூம் வைத்துள்ளார்.

இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் இரவு முகமூடி அணிந்த மர்ம நபர்கள் ஷோரூம் ஷட்டரை உடைத்து அங்கு நிறுத்தப்பட்டிருந்த ரூ. 1 லட்சம் மதிப்புள்ள பைக்கை திருடிச்சென்றனராம். இதுகுறித்து அளித்த புகாரின் பேரில் அதிராம்பட்டினம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஷோரூமில் உள்ள சிசிடிவி கேமிராவில் பதிவான காட்சியை ஆய்வு செய்தபோது, அதில் இரவு 8 மணிக்கு காரில் வந்த மர்ம நபர்கள் 2 பேர் அப்பகுதியை நோட்டம் விட்டு சென்றதும், பின்னர் நள்ளிரவு 1 மணிக்கு மீண்டும் காரில் வந்து பைக்கை திருடிச்சென்றது தெரியவந்தது. தப்பிச்சென்ற திருடர்களை போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர்.

Wednesday, February 22, 2017

அதிரையில் தனியாக வசித்த மூத்தாட்டியின் கழுத்தில் கத்தி வைத்து மிரட்டி 8 பவுன் தங்க நகை கொள்ளை !

அதிராம்பட்டினம், பிப்-22
அதிராம்பட்டினத்தில் வீட்டில் தனியாக வசித்து வந்த மூதாட்டியிடம்
திருடர்கள் கத்தியைக் காட்டி மிரட்டி கட்டிப்போட்டு 8 பவுன் தங்க நகை கொள்ளை அடித்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் பட்டுக்கோட்டை சாலையில் வசிப்பவர் காளிமுத்து மனைவி மாரியம்மாள் ( வயது 55 ). பல ஆண்டுகளாக வீட்டில் தனியாக வசித்து வருகிறார். நேற்று நள்ளிரவில் இவரது வீட்டின் பின்பக்க கதவை உடைத்துக்கொண்டு உள்ளே புகுந்த 3 திருடர்கள் உறங்கிக்கொண்டிருந்த மூதாட்டியின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி அவரிடமிருந்து பீரோ சாவியை வாங்கியுள்ளனர். பின்னர் பீரோவை திறந்து அதில் இருந்த சங்கிலி, மோதிரம் உட்பட 8 பவுன் தங்க நகையை கொள்ளை அடித்துச் சென்றனராம்.

இதுகுறித்து அதிராம்பட்டினம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் கொள்ளை நடந்த மாரியம்மாள் வீட்டுக்கு கை ரேகை நிபுணர்கள், போலீஸ் மோப்ப நாய் ராஜராஜனுடன் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். மோப்ப நாய் சிறிது தூரம் ஓடிச்சென்று அருகில் உள்ளே மதுக்கடை அருகே படுத்துக்கொண்டது. இச்சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிந்து கொள்ளையர்களை தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.