.

Pages

Showing posts with label கல்விச் செய்திகள். Show all posts
Showing posts with label கல்விச் செய்திகள். Show all posts

Wednesday, January 9, 2019

CBSE பள்ளிக்கூடங்களில் Artificial Intelligence - AI பாடம் அறிமுகம்!

அதிரை நியூஸ்: ஜன.09
இந்தியா, அமீரகம் உள்ளிட்ட அனைத்து சிபிஎஸ்இ பள்ளிக்கூடங்களிலும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப பாடம் அறிமுகம்

இந்திய மத்திய அரசின் கல்வி வாரியமான சிபிஎஸ்இ (Central Board of Secondary Education - CBSE) பாடத்திட்டப் பள்ளிக்கூடங்கள் இந்தியா மற்றும் வெளிநாடுகளிலும் செயல்பட்டு வருகின்றது. இந்தப் பள்ளிகள் இந்தியாவில் சுமார் 20,300 மற்றும் அமீரகம் உள்ளிட்ட 25 வெளிநாடுகளில் சுமார் 220 பள்ளிகள் என மிகப்பெரியளவில் செயல்பட்டு வருகின்றது.

இந்த சிபிஎஸ்இ பாடத்திட்டப் பள்ளிகளில் (CBSE syllabus) எதிர்வரும் இந்தியக் கல்வியாண்டு முதல் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பப் பாடம் (Artificial Intelligence - AI) 8, 9 மற்றும் 10 ஆம் வகுப்புக்களில் விருப்பத்தேர்வு பாடங்களில் ஒன்றாக நடத்தப்படும் என சிபிஎஸ்இ எனப்படும் மத்திய கல்வி வாரியம் தெரிவித்துள்ளது. இந்திய கல்வியாண்டு ஏப்ரல் மாதத்தில் துவங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

செயற்கை நுண்ணறிவு தொழிற்நுட்பம் வளர்ந்த மற்றும் வளரும் நாடுகளின் பல்வேறு துறைகளிலும் உட்புகுத்தப்பட்டு வருகின்றது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமே எதிர்காலத்தில் வேலைவாய்ப்புத்துறை, தொழிற்துறை மற்றும் தனிமனித வாழ்வியலிலும் பெரும் தாக்கம் செலுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் ஊடக இயந்திரங்கள் மனிதர்களின் உதவியின்றியே எந்த ஒரு விஷயத்தையும் தெளிவாக உள்ளுணர்ந்து கொள்ளவும், தேவைக்கு ஏற்ப சுயமாக முடிவெடுக்கவும், தன்னுடைய பணியை பிசிரின்றி செய்து முடிக்கவும் இயலும். இவை எதிர்காலத்தில் வேலைவாய்ப்பு துறை, உற்பத்தித்துறை மற்றும் தனிமனித வாழ்வியலிலும் பெரும் தாக்கம் செலுத்தும்.

இந்த செயற்கை நுண்ணறிவு இயந்திரங்கள் மனிதர்களின் கேள்விகளுக்கு பதில் சொல்வது, உணவகங்களில் முன்பதிவு செய்வது, முக அடையாளம் காண்பது, கார் போன்ற வாகனங்களை அடையாளம் காண்பது மற்றும் இயக்கம் என்பதுடன் அமீரகத்தில் பல்வேறு அரசுசார் பணிகளாலும் ஈடுபடுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

Saturday, January 13, 2018

தஞ்சை மாவட்டத்தில் +2 மாணவர்களுக்கு "யங் இராமானுஜம்" கணித பாடத் தேர்வு (படங்கள்)

சென்னை, தாம்பரம் - படப்பையில் அமைந்துள்ள தானிஷ் அஹ்மது இஞ்சினியரிங் கல்லூரி சார்பில் தஞ்சை மாவட்டத்தில் அமைந்துள்ள 50 க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் பனிரெண்டாம் வகுப்பு கணித பாடப் பிரிவு மாணவர்களுக்கு "யங் இராமானுஜம்" என்ற பெயரில் கணிதப் பாட தேர்வு நடைபெற்றது.

தேர்வில் கலந்துகொண்ட சுமார் 4000 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. அந்தந்த பள்ளிகளில் முதல் மூன்று இடங்களை பிடித்தவர்களுக்கு சிறப்பு சான்றிதழ்கள், பதக்கங்கள்  வழங்கப்பட்டன.

தேர்வு எழுதிய 50க்கும் மேற்பட்ட பள்ளிகளில் பயிலும் மாணவ , மாணவிகளில் மாவட்ட அளவில் முதல் முதலிடத்தை , பட்டுக்கோட்டை அரசு பெண்கள் பள்ளி மாணவி சுரேகாவும், இரண்டாம் இடத்தை, திருவோணம் நவீனா மேல்நிலை பள்ளி மாணவி தமிழரசியும், மூன்றாம் இடத்தை , மதுக்கூர் விக்ரமம் காந்தி மெட்ரிக் பள்ளி மாணவி ரக்‌ஷனாவும் பெற்றனர்.

இவர்களுக்கு கல்லூரி முதல்வர் மூஸா மற்றும் கல்லூரிச் செயலர் காதர் ஷா , மக்கள் தொடர்பு அலுவலர் ரஜினி ஆகியோரின் வாழ்த்துகளுடன் கல்லூரி பேராசிரியர் கோபி மற்றும் ஒருங்கினைப்பாளர் யஹ்யா ஆகியோர் சான்றிதழ்கள், பதக்கம் மற்றும் பரிசுகளை வழங்கினர்.

இத்தேர்வு மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்தது என பள்ளி தலைமை ஆசிரியர்கள், கணித ஆசிரியர்கள் தெரிவித்ததாக கல்லூரி நிர்வாகிகள் தெரிவித்தனர்.
 
 
 
 
 
 
 
 
 
  
 
 
 
 
 
 

Friday, June 17, 2016

எம்.பி.பி.எஸ் தரவரிசை பட்டியல் வெளியீடு !

தமிழ்நாட்டில் 20 அரசு மருத்துவ கல்லூரிகள் உள்ளன. இவற்றின் மூலம் கிடைக்கும் 2655 எம்.பி.பி.எஸ் இடங்களில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்கள் (15 சதவீதம்) 398 போக 2257 இடங்களை தமிழக அரசு இந்த ஆண்டு கலந்தாய்வு மூலம் நிரப்புகிறது.

அதுபோக சென்னை கே.கே. நகரில் மற்றும் கோவை இ.எஸ்.ஐ மருத்துவ கல்லூரிகளும் உள்ளன. இவற்றில் தலா ரூ.100 வீதம் 200 இடங்கள் மொத்தம் உள்ளன.

இதில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்கள் மற்றும் இ.எஸ்.ஐ தொழிலாளர் குழந்தைகளுக்கான ஒதுக்கீட்டு இடங்கள் தலா 35 வீதம் 2 கல்லூரிகளிலும் 70 இடங்கள் போக மீதமுள்ள 130 இடங்களையும் இந்த ஆண்டு தமிழக அரசு நிரப்புகிறது.

இதுதவிர தனியார் மருத்துவ கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்கள் 470 என ஆக மொத்தம் 2853 எம்.பி.பி.எஸ் இடங்கள் இந்த வருடம் நிரப்பப்படுகிறது.

இது போல அரசு பல் மருத்துவ கல்லூரி மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களும் இதன் மூலம் நிரப்ப விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

மாணவர்களிடம் இருந்து மொத்தம் 26017 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதில் ஒன்றுக்கு மேற்பட்ட விண்ணப்பங்களை சமர்பித்த 203 படிவங்கள், தகுதியற்றவை என 435 நிராகரிக்கப்பட்டன. தகுதியுள்ளதாக 25,379 விண்ணப்பங்கள் ஏற்று கொள்ளப்பட்டன.

இதில் மாணவர்கள் 9017 பேரும் மாணவிகள் 16,361 பேரும் ஆவர்.

சுப்பிரமணி என்ற திருநங்கை ஒருவரும் தகுதி உடையவராக சேர்க்கப்பட்டுள்ளார்.

மருத்துவ படிப்பில் சேருவதற்கான தரவரிசை பட்டியல் இன்று வெளியிடப்பட்டன. மருத்துவ கல்வி இயக்குனர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் கலந்து கொண்டு ரேங்க் பட்டியலை வெளியிட்டார். தரவரிசைப் பட்டியலை www.tnhealth.org என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ( http://cms.tn.gov.in//sites/default/files/whatsnew/mbbs_bds_meritlist_170616.pdf )

ரேங்க பட்டியலில் முதல் 10 இடங்களை பிடித்த மாணவ-மாணவிகள் விவரங்களை அவர் அறிவித்தார். இதில் 3 பேர் 200 கட்-ஆப் மதிப்பெண் பெற்று தரவரிசையில் முதல் இடத்தை பிடித்தனர். மற்ற 7 மாணவர்கள் 199.75 கட்-ஆப் மார்க் எடுத்துள்ளனர். முதல் 10 இடங்களை பிடித்த மாணவ-மாணவிகள் விவரம் வருமாறு:-

1. ஆதித்யாமகேஷ் (200), கன்னியாகுமரி
2. வி. விக்னேஷ் (200), ஈரோடு
3. ஞானவேல் (200), விஜயவாடா - ஆந்திரா
4. கே. கார்த்திக் (199.75), நாமக்கல்
5. சுஜின்குமார் (199.75), நாகர்கோவில்
6. அருனேஷ் (199.75), ஈரோடு
7. அக்‌ஷயா (199.75), தருமபுரி
8. அப்துல் ஷருக் (199.75), திருச்சி
9. தினேஷ்வர் (199.75), ஊத்தங்கரை
10. வி. ஆர்த்தி (199.75), ஊத்தங்கரை.

பின்னர் அமைச்சர் விஜயபாஸ்கர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தரவரிசை பட்டியலில் 200 கட்ஆப் மார்க் எடுத்து 3 பேர் முதலிடத்தில் உள்ளனர். 199 கட்-ஆப் வரை 190 பேர் உள்ளனர்.

முதல்கட்ட கலந்தாய்வு 20-ந்தேதி முதல் 25-ந்தேதி வரை நடைபெறுகிறது. ஓமந்தூரார் தோட்டத்தில் உள்ள அரசு பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை அரங்கத்தில் நடக்கிறது.

20-ந்தேதி விளையாட்டு வீரர்கள், மாற்றுத்திறனாளிகள், ராணுவ வீரர்களின் பிள்ளைகளுக்கான சிறப்பு கவுன்சிலிங் நடைபெறுகிறது. 21-ந்தேதி முதல் பொது கலந்தாய்வு தொடங்குகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை சிறப்பு செயலாளர் செந்தில் குமார், மருத்துவ கல்வி இயக்குனர் டாக்டர் விமலா, மாணவர் சேர்க்கை செயலாளர் செல்வராஜன் உள்ளிட்ட அதிகார்கள் கலந்து கொண்டனர். 

Wednesday, July 8, 2015

ஏழை மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்காத 500 தனியார் பள்ளிகளுக்கு நோட்டீஸ்: மெட்ரிக் பள்ளிகள் இயக்குநரகம் நடவடிக்கை

கோப்பு படம்
ஏழை மாணவர்களுக்கு 25 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்தாத 500 தனியார் பள்ளிகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
 
தமிழகத்தில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தனியார் சுயநிதி பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. மத்திய அரசின் இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்படி, தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கு 25 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும்.
 
இந்த ஒதுக்கீட்டில் சேர்க்கப்படும் மாணவர்களுக்கான கல்விச் செலவை (தனியார் பள்ளி கட்டண நிர்ணயக்குழு நிர்ணயித்துள்ள கட்டணம்) சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகத்தினருக்கு அரசே நேரடியாக வழங்கிவிடும். தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் 25 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் ஒரு லட்சத்து 17 ஆயிரம் இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. அவற்றில் நடப்பு கல்வி ஆண்டில் ஏறத்தாழ 61 ஆயிரம் இடங்கள் நிரப்பப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.
 
தனியார் பள்ளிகளில் இத்திட்டம் சரிவர அமல்படுத்தப்படுவதில்லை என்று பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து புகார் தெரிவித்து வருகின்றனர்.
 
இதுகுறித்து மாநில மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குநர் ஆர்.பிச்சை ‘தி இந்து’விடம் நேற்று கூறியதாவது:
 
இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் ஏழை மாணவர்களுக்கு 25 சதவீத இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தாத தனியார் பள்ளிகள் கண்டறியப்பட்டுள்ளன. அந்த வகையில், தமிழகம் முழுவதும் சுமார் 500 தனியார் பள்ளிகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளோம். இது தொடர்பாக 15 நாட்களுக்குள் பதில் அளிக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பள்ளி நிர்வாகத்தினர் அளிக்கும் விளக்கம் ஏற்றுக்கொள்ள முடியாத வகையில் இருப்பின், அவர்கள் மீது சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு பிச்சை கூறினார்.
 
நன்றி : தி இந்து , புதன், ஜூலை 8, 2015.

Tuesday, June 30, 2015

கவர்ச்சி ஆடைகள் அணியக்கூடாது - மாணவிகளுக்கு முஸ்லிம் கல்லூரி அதிரடி உத்தரவு!


கேரள மாநிலம் கோழிக்கோட்டில் உள்ள முஸ்லிம் கல்லூரி ஒன்றில் இறுக்கமாக, கவர்ச்சியான ஆடைகளை அணிந்து கல்லூரிக்கு வரக்கூடாது என்று உத்தரவிட்டுள்ளது.

கேரள மாநிலம், கோழிக்கோடு மாவட்டம், நடக்காவு பகுதியில் முஸ்லிம் பெண்கள் கல்லூரி ஒன்று உள்ளது. அங்கு பயிலும் மாணவிகள் இனி இறுக்கமான ஜீன்ஸ் பேண்ட்களையும், தொப்புளை காட்சிப்பொருளாக்கும் குட்டை மேல்சட்டைகளையும் அணிந்துவர தடை விதிக்கப்பட்டுள்ளது.

இக்கல்லூரியில் புதிதாக சேர்ந்துள்ள முதலாமாண்டு மாணவிகளுக்கு வரும் ஜூலை 8-ஆம் தேதி முதல் வகுப்புகள் தொடங்குகின்றன. அன்றிலிருந்து கல்லூரிக்கு வரும் மாணவிகளுக்கு சீருடையாக சுரிதார்- சல்வார் மற்றும் துப்பட்டாவுக்கு பதிலாக ‘ஓவர்கோட்’ கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. அதேபோல முஸ்லிம் மாணவியர் பர்தா அணிந்து, தலைக்கு துப்பாட்ட அணிந்து வரலாம் என்று கல்லூரி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த உத்தரவிற்கு சீனியர் மாணவிகள் ஆதரவளிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இஸ்லாமிய கல்விக்கழகத்தால் நிர்வகிக்கப்பட்டுவரும் இக்கல்லூரியின் உத்தரவிற்கு பெற்றோர்கள் அதிக ஆதரவளித்துள்ளனர்.

Wednesday, May 20, 2015

ஸ்கீம் 100 திட்டத்தில் சேர இஸ்லாமிய மாணவ மாணவிகளுக்கு அழைப்பு !

மத்திய அரசின் ஸ்கீம் 100 திட்டத்தின் கீழ் சென்னை இஸ்லாமியக் கல்வி விழிப்புணர்வு இயக்கம் சார்பில் தேர்வுச் செய்யப்பட்டு ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை மெட்ரிக் மேல் நிலைப்பள்ளியில் 2014-15ம் கல்வியாண்டில் பிளஸ் 1 படித்த இஸ்லாமிய மாணவ, மாணவிகள் 100 பேர் இவ்வாண்டு ஆர்டிபி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் டூ வகுப்பில் சேர்ந்துள்ளனர்.

இவர்கள் அனைவரும் ஸ்கீம் 100 திட்டத்தின் கீழ் கல்வி, தங்கும் விடுதி, உணவு, சீருடை, மற்றும் புத்தகங்கள், அனைத்தும் இலவசமாக வழங்கப்படுகிறது. இவர்கள் அனைவரும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் இல்மியால் தேர்வுச் செய்யப்பட்டவர்களாவர். இவர்கள் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 480 மதிப் பெண்களுக்கு மேல் பெற்றவர்களாவர்.

இதைப் போல் இவ்வாண்டும் பிளஸ் 1 வகுப்பிற்கு இதே திட்டத்தின் கீழ் 100 இஸ்லாமிய மாணவ, மாணவிகள் தேர்வுச் செய்யப்பட உள்ளனர். எனவே 10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெறும் மாணவ, மாணவிகள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ள பள்ளி நிர்வாகத்தினர் கேட்டுக் கொண்டுள்ளனர். 

நன்றி தினகரன்

ஆசிரியர்கள் செல்போன் பயன்படுத்தக்கூடாது - பள்ளி கல்வித்துறை உத்தரவு!

ஆசிரியர்களும் மாணவர்களும் செல்போன் பயன்படுத்துவது தொடர்பான தடை 3 ஆண்டுகளுக்கு முன்பு கொண்டுவரப்பட்டது. ஆனால் இந்த உத்தரவை ஆசிரியர்கள் சரியாக பின்பற்றுவதில்லை. இதனால் பள்ளிகளில் விரும்பத்தகாத சம்பவங்கள் நடைபெறுவதாக குற்றச்சாட்டுகள் வந்தன.

மேலும் ஆசிரியர்கள் பாடம் நடத்துவதை விட்டு விட்டு செல்போனில் பேசிக் கொண்டிருப்பது தொடர்கி றது. வகுப்பில் பாடம் நடத்தும் போது செல்போன் அழைப்பு வருவதால், பாடம் நடத்துவது தடை படுகிறது. நடந்து முடிந்த பிளஸ் டூ தேர்வில், கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த ஒரு தனியார் பள்ளி ஆசிரியர்கள் கேள்வித் தாளை செல்போனில் படம் பிடித்து அனுப்பினர். இது போன்ற சம்பவங்கள் நடக்க வாய்ப்புள்ளதால் ஆசிரியர்கள் கண்டிப்பாக பள்ளி நேரத்திலோ, பள்ளி வளாகத்திலோ செல்போன் பயன்படுத்த கூடாது என்று பள்ளிக்கல்வித்துறை தடை கொண்டு வந்துள்ளது. ஜூன் மாதம் பள்ளிகள் திறந்த பிறகு ஆசிரியர்கள் கட்டாயம் இந்த உத்தரவை பின்பற்ற வேண்டும் என பள்ளி கல்வித்துறை அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

Thursday, March 19, 2015

மாணவர்களே.. இவை வெறும் தேர்வுகளே.. இயல்பாக எதிர்கொள்ளுங்கள்!


புழுதிவாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி ஒருவர் கணக்குப் பரீட்சைக்குப் பயந்து தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டதாக இன்று செய்தி.

படிக்கும் ஒவ்வொரு பெற்றோரையும் பதற வைக்கும் செய்தி இது. முன்பெல்லாம் தேர்வு முடிவுகள் வெளியாகும் தருணத்தில்தான் இந்த மாதிரி தற்கொலைச் செய்திகள் இடம்பெறும். இன்று தேர்வு நடக்கும்போதே இம்மாதிரி தற்கொலைகள் நடப்பது, மாணவர்கள் மீது அதிகரித்து வரும் நெருக்கடிகளையே காட்டுகிறது. 'பனிரெண்டாம், பத்தாம் வகுப்புகளுக்கு நடக்கும் அரசுத் தேர்வு மற்றுமொரு தேர்வுதான். பயம் கொள்ள வேண்டாம்' என அவர்களைத் தயார்ப்படுத்துவது, பாடம் சொல்லிக் கொடுப்பதற்கு இணையான முக்கியத்துவம் வாய்ந்தது. அதைவிட்டுவிட்டு, 'இந்த எக்ஸாம்ல கோட்டை விட்ட, வாழ்க்கையே போச்சு' என்கிற ரீதியில் பயமுறுத்துவது மாணவர்களுக்கு எந்த வகையிலும் நன்மை தராது. பள்ளியில், வீட்டில், ட்யூஷனில் எந்நேரமும் படித்துக் கொண்டே இருக்கும் மாணவ மாணவிகள், அதை எப்படி தேர்வில் பதட்டமில்லாமல் வெளிப்படுத்த வேண்டும் என்பதை ஆசிரியர்கள் கற்றுத் தரத் தவறிவிடுகிறார்கள். முன்புதான் மார்ச் தேர்வில் கோட்டை விட்டால், குறைந்த மதிப்பெண்கள் பெற்றால் அக்டோபர் வரை காத்திருக்க வேண்டும். இப்போது அந்த கஷ்டம் கூட இல்லை. அடுத்த இரு மாதங்களில் மீண்டும் தேர்வெழுதிக் கொள்ளலாம். தேர்ச்சி பெறத் தவறியவர்கள் தேறலாம்.. குறைந்த மதிப்பெண் வாங்கியவர்கள் அதிக மதிப்பெண் பெற்றுக் கொள்ளலாம். இத்தனை வாய்ப்புகள் இருப்பதால், வாழ்க்கையை முடித்துக் கொள்ள வேண்டிய அவசியமில்லை... தேர்வுகளையும் மதிப்பெண்களையும்விட உயிர் வாழ்வது மிக முக்கியமானது என்பதை, தேர்வுக்குப் போகும் ஒவ்வொரு மாணவரையும் உணர வைப்பது ஆசிரியர்கள், பெற்றோரின் இன்றியமையாத கடமை. மாணவர்களே... இவை வெறும் தேர்வுகள்தான். வாழ்க்கை இதைவிடப் பெரிது.
நன்றி. தமிழ்கேரீர் இந்தியா  டாட் காம்.







இப்படிக்கு.
கோ.மு.அ. ஜமால் முஹம்மது.
த/பெ. (மர்ஹூம்) கோ.முஹம்மது அலியார்.
Human Rights and Consumer Rights Included.
Thanjavur District Organizer. Adirampattinam-614701.
kmajamalmohamed@gmail.com