.

Pages

Showing posts with label கீழத்தோட்டம் செய்திகள். Show all posts
Showing posts with label கீழத்தோட்டம் செய்திகள். Show all posts

Thursday, May 14, 2020

அதிமுக சார்பில் கீழத்தோட்டத்தில் 75 பேருக்கு அத்தியாவசியப் பொருள்கள் வழங்கல்!

அதிராம்பட்டினம், மே.14
ஊரடங்கு உத்தரவின் காரணமாக, கீழத்தோட்டத்தில் வேலையின்றி வீட்டில் முடங்கிக் கிடக்கும் மீனவ குடும்பத்தினர் 75 பேருக்கு அரிசி, காய்கறிகள் கொண்ட தொகுப்பு வியாழக்கிழமை வழங்கப்பட்டது.

அவற்றை, பட்டுக்கோட்டை எம்.எல்.ஏ சி.வி சேகர் ஏற்பாட்டின் பேரில், அதிமுக பட்டுக்கோட்டை ஒன்றியச் செயலர் பி.சுப்பிரமணியன் வழங்கினார். அதிமுக பட்டுக்கோட்டை நகர செயலாளர் சுப.ராஜேந்திரன், அதிராம்பட்டினம் பேரூர் எம்ஜிஆர் இளைஞர் அணி செயலர் கே.சிவக்குமார், கீழத்தோட்டம் ஊராட்சி மன்ற தலைவர் மோகன்தாஸ் மற்றும் வெற்றிவேல், பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் நிகழ்வில் பங்கேற்றனர்.
 

Thursday, November 28, 2019

கடலில் இருந்து வெளியான மெகா மணல் திட்டு ~ முகத்துவாரம் அடைக்கப்பட்டதால் மீன்பிடித் தொழில் முடக்கம்!

அதிராம்பட்டினம், நவ.28
அதிராம்பட்டினம் அருகில் உள்ள ராஜாமடம் ஊராட்சியை சேர்ந்த கீழத்தோட்டம் கிராமம் .இந்த கிராமத்தில் 750க்கும் மேற்பட்ட மீனவ குடும்பங்கள் உள்ளன .இங்கு 200 நாட்டுப் படகுகள் உள்ள நிலையில் தினந்தோறும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் அக்னி ஆற்றில் இருந்து வரும் காட்டாற்று நீர் கடலில் கலக்கும் முகத்துவாரம் கடலில் இருந்து வெளியான மணல்திட்டு கிட்டத்தட்ட 20 அடி உயரத்திலும், 500 மீட்டர் நீளத்திலும் 200 மீட்டர் அகலத்திலும் மூடப்பட்டதால் கீழத்தோட்டம் துறைமுக வாய்க்கால் தடுக்கப்பட்டுள்ளது. இதனால் மீனவர்கள் படகுகளை கடலுக்குள் கொண்டு செல்ல முடியாமல் போய்விட்டது. மேலும் தற்போது மழைக்காலம் என்பதால் காட்டாற்றில் வெள்ளம் அதிகரித்து வருகிறது.

இந்த மணல் திட்டுகள் அடைக்கப்பட்டுள்ளதால் காட்டாற்று வெள்ளம் கடலில் கலக்க முடியாமல் காட்டாற்று நீர் மக்கள் வசிக்கும் பகுதிக்குள் உட்புகுந்து தெருக்களில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி உள்ளது. இதனால் தொற்றுநோய் பரவும் நிலையில் உள்ளது. மேலும் தொடர்ந்து மழை பெய்தால் இந்த காட்டாற்று நீர் வீடுகளுக்குள் புகும் நிலை ஏற்படும் என இப்பகுதி மக்கள் அஞ்சுகின்றனர். மேலும் மீன்பிடித் தொழிலை மட்டுமே வாழ்வாதாரமாக வைத்திருக்கும் கீழத்தோட்டம் கிராம மக்கள் இந்த மணல் திட்டுகளால் கடலுக்குச் செல்ல முடியாத நிலையில் தொழில் முடக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் வருமானம் இன்றி தற்போது தவித்து வருகின்றனர்.

இதுபற்றி முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் முருகன் கூறுகையில்;
எங்கள் பகுதியில் கடலில் இருந்து மணல் திட்டுகள் அதிக அளவில் வெளிவந்து கிட்டத்தட்ட 20 அடி உயரத்தில் 500 மீட்டர் நீளத்தில் உள்ளது. இதனால் அக்னி காட்டாற்று வெள்ளம் கடலில் உட்புகும் முகத்துவாரத்தை அடைக்கப்பட்டுள்ளது. இந்த வழியாகத்தான் எங்கள் பகுதியில் உள்ள மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல முடியும். இந்நிலையில் தற்போது இந்த முகதுவரம் அடைக்கப்பட்டதால் எங்களால் கடலுக்குச் செல்ல முடியவில்லை. இதனால் தற்போது நாங்கள் வேலை இழப்பு ஏற்பட்டு மிக வறுமையில் உள்ளோம். எங்களின் நிலை கருதி உடனடியாக  துறைமுக வாய்க்காலை தூர் வாரவும் , இந்த மணல் திட்டுக்களை அப்புறப்படுத்தவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Wednesday, July 17, 2019

கீழத்தோட்டம் துறைமுகத்தில் நிறுத்தப்பட்ட படகு, 50 லிட்டர் டீசல் திருட்டு!

அதிராம்பட்டினம், ஜூலை 17
அதிராம்பட்டினம் அருகே துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகு,கேன்களில் இருந்த 50 லிட்டர் டீசலை திருடிச் சென்றவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

அதிராம்பட்டினம் அருகிலுள்ள கீழத்தோட்டம் கிராமத்தைச் சேர்ந்தவர் மீனவர் என்.பாலமுருகன் (30). இவர் தனக்குச் சொந்தமான பைபர் படகு மூலம் கடலுக்கு சென்று, மீன்பிடித் தொழில் செய்து வருகிறார்.
இவர், செவ்வாய்க்கிழமை அதிகாலை கடலில் மீன் பிடிக்க, சக மீனவர்களுடன் கீழத்தோட்டம் துறைமுகத்துக்குச் சென்றார்.
அப்போது, துறைமுகத்தில் நிறுத்தியிருந்த பாலமுருகனின் பைபர் படகையும், அதனருகில் 2 கேன்களில் அவர் வைத்திருந்த 50 லிட்டர் டீசலையும் யாரோ திருடிச் சென்று விட்டனராம்.

இதுகுறித்து பாலமுருகன் அளித்த புகாரின் பேரில், அதிராம்பட்டினம் கடலோர காவல் நிலைய போலீஸார் விசாரிக்கின்றனர்

Thursday, February 14, 2019

அதிரை அருகே கடலில் மூழ்கி பெட்டிக்கடைகாரர் சாவு!

அதிராம்பட்டினம், பிப். 14
அதிராம்பட்டினம் அருகே உள்ள கீழத்தோட்டம் கடல் அலையில் சிக்கி பெட்டிக்கடைக்காரர் கடலில் மூழ்கி உயிரிழந்தார்.

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வாண்டையார்புறத்தை சேர்ந்தவர் என்.சுப்பிரமணியன் (45). அதே பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். இவரது நண்பர்கள் பழனி (37), ராஜா (41), தமிழழகன் (25), நடராஜன் (45) ஆகியோருடன் அதிராம்பட்டினம் அருகே உள்ள கீழத்தோட்டம் கடலில் புதன்கிழமை  குளிக்கச் சென்றுள்ளார். அப்போது, திடிரென சுப்பிரமணியனை கடல் அலை ஆழமான பகுதிக்கு இழுத்துச்சென்றதால் உயிரிழந்தார். மீனவர்கள் சிலர் சுப்பிரமணியன் சடலத்தை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். தகவலறிந்த அதிராம்பட்டினம் கடலோரப் பாதுகாப்பு காவல்நிலைய இன்ஸ்பெக்டர் சுபா, சப் இன்ஸ்பெக்டர் ராஜசேகரன் ஆகியோர் விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த சுப்பிரமணியனுக்கு மனைவி மற்றும் 5 வயது பெண் குழந்தை உள்ளது.