.

Pages

Showing posts with label தேசிய செய்திகள். Show all posts
Showing posts with label தேசிய செய்திகள். Show all posts

Sunday, June 30, 2019

துபையிலிருந்து மங்களூரு வந்த விமானம் விபத்தில் சிக்கியது (படங்கள்)

அதிரை நியூஸ்: ஜூன் 30
இன்று (30.06.2019 ஞாயிறு) மாலை சுமார் 5.40 மணியளவில் மங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கிய ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் ஓடுபாதையில் விலகி விபத்திற்குள்ளானது.

இன்று துபையிலிருந்து 181 பயணிகள், 2 விமானிகள் மற்றும் 6 விமான ஊழியர்களுடன் புறப்பட்டு வந்து விபத்தில் சிக்கியது எனினும் பயணிகள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

விமான ஓடுதளத்திலிருந்து விமான நிலையத்தில் டேக்ஸிவே எனப்படும் விமான நிறுத்தத்தை நோக்கி வந்தபோது விமானம் புல்தரை மண்ணிற்குள் சறுக்கிச் சென்று புதைந்ததால் தான் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.

கண்ணீர் நினைவலைகள்:
கடந்த 2010 ஆம் ஆண்டு மே 22 ஆம் தேதி அதிகாலை 6 மணியளவில் இதேபோல் துபையிலிருந்து மங்களூர் வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான தரையிறங்கும் போது ஏற்பட்ட விபத்தில் சிக்கி 158 பயணிகள் உயிரிழந்தது இந்தியர்கள் மத்தியில் சோக அலையை எழுப்பியிருந்தது நினைவு கூறத்தக்கது.

Source: Indian Express
தமிழில்: நம்ம ஊரான் 
 
 
 
 
  
 
 
 
 
  
 
 

Friday, January 11, 2019

கட்டாய எமிக்கிரேசன் சட்டத்தை மீண்டும் அமல்படுத்த மத்திய அரசு திட்டம்!

அதிரை நியூஸ்: ஜன.11
கடந்த நவம்பர் மாதம் இந்திய மத்திய அரசு 14 இஸ்லாமிய நாடுகளில் வேலைவாய்ப்பு ரெஸிடென்ஷியல் விசாக்களில் உள்ளவர்கள், புதிதாக செல்பவர்கள் மட்டும் கட்டாயம் ஆன்லைன் வழியாக ஈ-மைக்ரேட் என்ற இணையதளத்தின் வழியாக பதிவு செய்ய வேண்டும், தவறுவோர் இந்திய விமான நிலையங்களிலிருந்து திருப்பியனுப்பப்படுவர் என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது.

அதேவேளை இதுபோன்ற கெடுபிடி சட்டங்கள் இந்திய வங்கிகளிலிருந்து பல்லாயிரக்கணக்கில் கோடிகோடியாய் பணத்தை சுருட்டிக் கொண்டு ஓடுபவர்களுக்கோ அல்லது அவர்கள் சென்று பதுங்கும் நாடுகளுக்கு செல்வோர் மீதோ விதிக்கப்படவில்லை என்பதுடன் 'ப்ளு காலர்ஸ்' எனப்படும் படிப்பறிவு குறைந்த சாதாரணத் தொழிலாளர்களே இதனால் கடுமையாக பாதிக்கப்படுவர் என்பதாலும் கடும் எதிர்ப்புக்கள் எழுந்ததையடுத்து இச்சட்டம் ஒத்திவைக்கப்படுவதாக இந்திய வெளியுறவுத்துறை அறிவித்தது.

இந்நிலையில் இந்த சட்டத்தை மீண்டும் தூசிதட்டியுள்ள இந்திய அரசு The draft Emigration Bill 2019 என்ற பெயரில் சில மாற்றங்களுடன் மீண்டும் அறிமுகம் செய்திடும் வகையில் 'வரைவு சட்ட திருத்தத்தை' வெளியிட்டு பொதுமக்களின் கருத்தை எதிர்வரும் ஜனவரி 20 க்கு முன் சமூக  ஊடகங்கள் வழியாக தெரிவிக்கும்படி கேட்டுக் கொண்டுள்ளது ஆனால், இம்முறை குறிப்பிட்ட 14 நாடுகள் என்றில்லாமல் பொதுவாக வெளிநாடு வாழ் இந்தியர்கள் மற்றும் உயர்கல்வி பயிலச் செல்லும் மாணவர்கள் எனக் குறிப்பிட்டுள்ளது.

இந்தியர்கள் இந்த வரைவுச் சட்டம் குறித்து படித்து அறிந்து கொள்ள https://mea.gov.in/emigrationbill.htm என்ற இணையதளத்திற்குள் செல்லவும்.

உங்களுடைய கருத்தை இந்திய வெளியுறவுத்துறைக்கு அனுப்ப கீழ்க்காணும் முகவரிகளை பயன்படுத்திக் கொள்ளவும்.

dsoia1@mea.gov.in
so2oia1@mea.gov.in

பொதுவாக, இதுபோன்ற சட்டங்கள் தவறாகவே பயன்படுத்தப்பட அதிகம் வாய்ப்புள்ளது என பெருவாரியான இந்தியர்கள் கருதுவதால் இது தேவையே இல்லை, தற்போதுள்ள நடைமுறையே போதுமானது என நாமும் கருதுகிறோம்.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

Friday, December 21, 2018

காஷ்மீரில் பள்ளி மாணவர்கள் கலாச்சார உடை அணிந்து வர தடைக்கான உத்தரவு வாபஸ்!

அதிரை நியூஸ்: டிச.21
காஷ்மீர் பள்ளிக்கூடங்களுக்கு கலாச்சார உடை அணிந்து வரக்கூடாது என்ற உத்தரவு ஏற்படுத்திய எதிர்ப்பை தொடர்ந்து வாபஸ்

காஷ்மீர் ஆண், பெண் என இருபாலர் மக்களின் வாழ்வியலோடு, கலாச்சாரத்தோடு பின்னிப் பிணைந்தது 'பேரான்' (Pheran) என்ற உடை. இது நீண்ட அங்கியை போன்றது, இவை முழுமையாக கம்பளி (Wool) அல்லது கம்பளி மற்றும் பருத்தி (Cotton) கலந்து நெய்யப்படுகின்றது. இந்த ஆடை காஷ்மீரில் நிலவும் குளிரைத் தாங்கவல்லது.

இந்த ஆடையை உடுத்திக் கொண்டு ஸ்ரீநகரில் உள்ள மாநில அரசின் தலைமை செயலகத்திற்கு (The General Administration Department of the Civil Secretariat in Srinagar) வரும் அரசு அலுவலகர்கள் மட்டும் அங்கு வெளிலுள்ள நீண்ட இரும்புக் கம்பங்களில் 'பேரானை' மாட்டி வைத்துவிட்டே உள்ளே செல்ல வேண்டும் என பாதுகாப்பை காரணம் காட்டி உத்தரவிடப்பட்டிருந்த நிலையில், இந்த உத்தரவை மட்டும் வைத்துக் கொண்டு பள்ளிக்கூடங்களுக்கும் 'பேரான்' அணிந்து வரக்கூடாது என மாநில கவர்னர் அரசு உத்தரவிட்டது.

இதனைத் தொடர்ந்து மக்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பு ஏற்பட்டதையடுத்து மாநில அரசு பள்ளிக்கூடங்களுக்கான உத்தரவை மட்டும் வாபஸ் பெற்றுக் கொண்டதுடன் தலைமைச் செயலகத்திற்கான உத்திரவு மட்டுமே செல்லும் என அறிவித்துள்ளது. காஷ்மீர் மாநிலத்தை தற்போது மத்தியில் ஆளும் மோடி தலைமையிலான பீஜேபி அரசின் ஏஜென்டாக இருந்து கவர்னர் ஆண்டு வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில் கலாச்சாரத்தின் மீதான தாக்குதலாக (Cultural onslaught) கருதப்படும் இந்த அநியாய உத்தரவிற்கு எதிராக பலரும் தங்களின் எதிர்ப்பை சமூக தளங்களில் பதிவு செய்தனர்.

அவற்றில் சில மட்டும் உங்களின் பார்வைக்கு...
நானும், எனது தந்தையும் பலமுறை 'பேரான்' உடையை அணிந்து பல்வேறு அரசு விழாக்களில் பங்கேற்றுள்ளோம், இனிமேலும் அணிவோம். அரசாங்கத்தின் முட்டாள்மனமான உத்தரவுகள் ஒருபோதும் நீடிக்காது – உமர் அப்துல்லா, முன்னாள் ஜம்மு காஷ்மீர் மாநில முதலமைச்சர்.

எனது காஷ்மீரக் கலாச்சாரமே எனது அடையாளம். 'பேரான்' எனது கலாச்சாரத்தின் ஒர் பிரிக்க முடியாத அங்கம். இதை நான் அணிவதற்கோ அல்லது அணியாமல் இருப்பதற்கோ எவருடைய அனுமதியை பெற வேண்டிய தேவையில்லை. எனது காஷ்மீரக் கலாச்சாரத்தை இறுதிமூச்சு உள்ளவரை பேணுவேன் - இம்தியாஸ் பாண்டவ்.

நம் நாட்டிலுள்ள ஒரு மிகச்சிறு பிரிவினரின் கட்டளைகளை விரும்பியோ, விரும்பாமலோ பன்முக கலாச்சாரமுடைய பெரும்பான்மை இந்தியர்கள் குருட்டுத்தனமாக பின்பற்றியே ஆக வேண்டும் என நினைக்கின்றது. நாம் எதை உண்ண வேண்டும், எதை உடுத்த வேண்டும் என தீர்மானிக்கின்றது. நம்மை அடிமைகளாக கருதும் இந்த தேசம் உலகின் மிகப்பெரும் ஜனநாயக நாடு என தன்னை அழைத்துக் கொள்வதில் தான் எவ்வளவு போலித்தனம் நிறைந்துள்ளது! – அப்துல்காதர்MB.

இந்தியா பன்முகக் கலாச்சாரத்தை பின்பற்றும் நாடு ஆனால் 'பேரான்' போன்ற கலாச்சார உடைகள் அவர்களுக்கு திடீரென சங்கடங்களாக தெரிகின்றன, ஆனால் ஏன்? – அப்ராருல் ஹக்.

'பேரான்' திடீரென தடைசெய்யப்படுவது அபத்தமானது, இது மக்களின் கலாச்சாரம் மற்றும் எலும்புகளை சில்லிட வைக்கும் குளிரிலிருந்து காக்கும் கவசம். காஷ்மீருக்கு வரும் எண்ணற்ற சுற்றுலாவாசிகள் கூட 'பேரான்' அணிந்து புகைப்படம் எடுத்துக் கொள்வதை தங்களின் வாழ்நாள் நினைவாக போற்றுகின்றனர். – லவ்கேஷ் மால்வியா

என பலரும் இத்தடையை கண்டித்து கருத்திட்டு வருகின்றனர்.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

Wednesday, December 12, 2018

5 மாநில சட்டமன்ற தேர்தலில் வென்ற முஸ்லீம் சட்டமன்ற உறுப்பினர்கள்!

அதிரை நியூஸ்: டிச.12
நேற்று (11.12.2018 – செவ்வாய்) 5 மாநில சட்டசபை தேர்தலின் முடிவுகள் எண்ணப்பட்டு அறிவிக்கப்பட்டன. இதில் வென்ற முஸ்லீம் சட்டமன்ற உறுப்பினர்களின் பெயர்கள் வருமாறு:

சட்டீஸ்கர் - மொத்தம் 90 தொகுதிகள்
1. அக்பர் பாய் - காங்கிரஸ் - கவர்தா தொகுதி

தெலங்கானா - மொத்தம் 119 தொகுதிகள்
1. ஷகீல் ஆமிர் முஹமது – டிஆர்எஸ் - போதான்
2. முஹமது மோஸம் கான் - இத்திஹாதுல் முஸ்லிமீன் - பகதூர்புரா
3. அக்பருத்தீன் ஓவைஸி - இத்திஹாதுல் முஸ்லிமீன் - சந்திராயன்குட்டா
4. மும்தாஜ் அஹமது கான் - இத்திஹாதுல் முஸ்லிமீன் - சார்மினார்
5. கௌஸர் மொஹியுத்தீன் - இத்திஹாதுல் முஸ்லிமீன் - கர்வான்
6. அஹ்மது பின் அப்துல்லா பலாலா - இத்திஹாதுல் முஸ்லிமீன் - மலக்பேட்
7. ஜாஃபர் ஹூசைன் - இத்திஹாதுல் முஸ்லிமீன் - நம்பள்ளி
8. சையத் அஹமது பாஷா குவாதிரி - இத்திஹாதுல் முஸ்லிமீன் - யாகுத்புரா

ராஜஸ்தான் - மொத்தம் 199 தொகுதிகள்
1. வாஜிப் அலி – பகுஜன் சமாஜ் பார்ட்டி – நாகர்
2. ரபீக் கான் - காங்கிரஸ் - ஆதார்ஷ் நகர்
3. ஹகம் அலி கான் - காங்கிரஸ் - பத்தேஹ்பூர்
4. ஜஹீதா கான் - காங்கிரஸ் - காமன்
5. அமீன் காக்ஸி – காங்கிரஸ் - கிஸான் போலி
6. ஷாலி முஹமது – காங்கிரஸ் - பொக்ரான்
7. தானீஷ் அப்ரார் - காங்கிரஸ் - சவாய் மதோபூர்
8. அமீன் கான் - காங்கிரஸ் - ஷியோ

மத்திய பிரதேஷ் - மொத்தம் 230 தொகுதிகள்
1. ஆரிஃப் மசூத் - காங்கிரஸ் - போபால் மத்திய
2. ஆரிப் ஆகீல் - காங்கிரஸ் - போபால் உத்தர்

மிஸோரம் மாநிலத்தில் முஸ்லீம்கள் யாரும் போட்டியிடாததால் யாரும் தேர்வு செய்யப்படவில்லை.

மிஸோரம் தவிர்த்த ஏனைய 4 மாநிலங்களிலும் சில முஸ்லீம் வேட்பாளர்கள் 2 நிலையில் வந்து தோற்றுள்ளனர். மேலும் முஸ்லீம் பெயர் கொண்ட சிலரும் பிஜேபி சார்பாக போட்டியிட்டு பெரும் தோல்வியை சந்தித்துள்ளனர், அவர்களை அக்கட்சியை சேர்ந்த மாடுகள் கூட மதிக்கவில்லை என்பது அவர்கள் பெற்றுள்ள ஓட்டுக்களிலிருந்து தெரிய வருகின்றது.

Thanks to: http://eciresults.nic.in

செய்தித் தொகுப்பு
அதிரை அமீன்

Monday, December 10, 2018

தாஜ்மஹால் நுழைவுக்கட்டணம் இந்தியர்களுக்கு 5 மடங்கு உயர்வு!

அதிரை நியூஸ்: டிச.10
தாஜ்மஹால் நுழைவுக்கட்டணம் இந்தியர்களுக்கு 5 மடங்காக உயர்த்தப்பட்டது

வெண்ணிற பளிங்கு கற்களால் 17 ஆம் நூற்றாண்டில் மொகலாய மன்னர் ஷாஜஹான் தன் மனைவி மும்தாஜ் மஹாலின் மண்ணறையின் மீது எழுப்பிய கட்டிடமே பிரசித்தி பெற்ற தாஜ்மஹால். இது உலக பாரம்பரிய சின்னமாக யுனெஸ்கோ (UNESCO) அமைப்பால் அங்கீகரிக்கப்பட்டுள்ளதுடன் 7 உலக அதிசயங்களில் ஒன்றாகவும் திகழ்கின்றது.

தாஜ்மஹாலை பார்ப்பதற்காக உலகெங்கிலுமிருந்து பல்லாயிரக்கணக்கான சுற்றுலாவாசிகள் வருகை தருகின்றனர். சில மாதங்களுக்கு முன்பு வரை நாள்தோறும் சராசரியாக 70,000 பேர் வருகை தந்து கொண்டிருந்தனர். இந்நிலையில் உத்தர பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் என்பவர் தலைமையில் இயங்கும் மாநில அரசு நாள் ஒன்றுக்கு 40,000 பேர் வரை மட்டுமே அனுமதிக்கப்படும் என அறிவித்தது.

தாஜ்மஹாலின் நுழைவுக்கட்டணமாக இதுவரை இந்தியர்களுக்கு 50 ரூபாயும், வெளிநாட்டினருக்கு 16 டாலர்களும் வசூலிக்கப்பட்டு வந்ததை அதிரடியாக இந்தியர்களுக்கு 250 ரூபாயாகவும், வெளிநாட்டவர்களுக்கு 19 டாலர்களாகவும் உயர்த்தியுள்ளனர்.

இந்த விலை ஏற்ற நடவடிக்கையின் மூலம் மக்கள் தாஜ்மஹாலை சுற்றிப்பார்க்க வருவது சுமார் 15 முதல் 20 சதவிகிதம் வரை குறையும் அதேவேளை விலை ஏற்றத்தால் வருமானமும் அதிகரிக்கும் என்றும் சுற்றுலாவாசிகள் குறைவதால் தாஜ்மஹாலுக்கு ஏற்பட்டு வரும் பாதிப்பு குறையும் என்றும் இந்தியத் தொல்பொருள் ஆய்வுத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவின் மாசு நிறைந்த ஆறுகளில் ஒன்றான யமுனா நதிக்கரையில் அமைந்துள்ள தாஜ்மஹாலை சுற்றியுள்ள தொழிற்சாலைகள் மற்றும் வாகனப் புகைகளால் மஞ்சள் நிறமாக மாறி வருவதுடன் சேதமும் அடைந்து வருகின்றது, இதைக் கட்டுப்படுத்த மாநில அரசு தயாரில்லை. இவர்களின் உள்நோக்கம் நிறைந்த இந்த நடவடிக்கை 'கண்ணாடியை திருப்பினால் ஆட்டோ ஓடும்' என்ற நகைச்சுவை காட்சியையே நினைவுபடுத்துகின்றது.

மேலும் கடந்த 2017 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் உத்தர பிரதேசத்தை ஆளும் பீஜேபி அரசால் வெளியிடப்பட்ட மாநில சுற்றுலா பட்டியலிலிருந்தும் உலக அதிசயங்களில் ஒன்றான இந்த சின்னம் நீக்கப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது நினைவிருக்கலாம். என்றாலும் பீஜேபி அரசு தன் தவறை திருத்திக் கொள்ள இதுநாள் வரை முன்வரவேயில்லை.

Source: Arab News
தமிழில்: நம்ம ஊரான்

Sunday, December 9, 2018

கேரளாவில் 4-வது சர்வதேச விமான நிலையம் திறப்பு! கன்னூர் ~ அபுதாபி இடையே முதல் விமானச்சேவை தொடக்கம்!

அதிரை நியூஸ்: டிச.09
கேரளாவில் 4வது சர்வதேச விமான நிலையம் திறப்பு! கன்னூர் - அபுதாபி இடையே முதல் விமானச் சேவை துவங்கியது!

இந்தியாவிலேயே முதன்முதலாக ஒரு மாநிலத்தில் 4 சர்வதேச விமான நிலையங்கள் அமைவது இதுவே முதன்முறை மேலும் கொச்சி விமான நிலையத்திற்கு அடுத்து தனியார் மற்றும் மத்திய, மாநில அரசுகளின் கூட்டுபங்களிப்புடன் அமையும் 2வது இந்திய விமான நிலையம் என்றப் பெயரையும் தட்டிச் சென்றது. Kerala is really proud to have 2nd PPP (Public-private partnership) model airport and our 4th International airport.

கேரளாவில் ஏற்கனவே திருவனந்தபுரம், கோழிக்கோடு மற்றும் கொச்சியில் சர்வதேச விமான நிலையங்கள் இயங்கி வருகின்றன. இங்கிருந்து முதலாவது சர்வதேச விமானச் சேவையாக அபுதாபிக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் தனது முதலாவது சேவையை இன்றிரவு 8.20 மணிக்கு துவங்குகின்றது, இந்த விமானம் அபுதாபி விமான நிலையத்திற்கு இன்றிரவு 10.55 மணிக்கு வந்து சேரும்.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

Thursday, November 15, 2018

உம்ரா செய்துவிட்டு ஊர் திரும்பிய 4 வயது சிறுவன் நடுவானில் மரணம்!

அதிரை நியூஸ்: நவ.15
உம்ராவிலிருந்து திரும்பிய 4 வயது கேரள சிறுவன் உடல்நலக் குறைவால் நடுவானில் மரணம்

தாய் தந்தையர் உள்ளிட்ட 11 குடும்ப உறுப்பினர்களுடன் உம்ரா செய்துவிட்டு திரும்பிய நிலையில் உடல்நலக் குறைவால் திங்கட்கிழமை மாலை நடுவானில் 4 வயது கேரளச் சிறுவன் யஹ்யா அவர்களின் உயிர் பிரிந்தது, இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிவூன்.

ஓமன் ஏர்வேஸ் விமானத்தில் மஸ்கட் வழியாக காலிகட் விமான நிலையத்திற்கு பறந்து கொண்டிருந்த போது நடவானில் திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டதை அடுத்து அபுதாபியில் விமானம் மிக அவசரமாக இறக்கப்பட்டது எனினும் அவர் இறந்துவிட்டதாக விமான நிலைய மருத்துவ வட்டாரங்கள் அறிவித்தன.

4 வயது யஹ்யா அவர்கள் பிறவியிலிருந்தே வலிப்பு நோய் பாதிப்பில் இருந்துள்ளார் மேலும் பேசும் திறனற்றும் இருந்துள்ளார் ஆனால் அனைவரையும் ஸ்நேகத்துடன் பார்த்து புன்னகை பூப்பாராம்.

யஹ்யாவுடைய உடலுடன் அவரது தந்தையும் அபுதாபியில் இறங்கிக் கொள்ள மற்ற குடும்ப உறுப்பினர்கள் தொடர்ந்து அதே விமானத்தில் பறந்தனர். இரவோடு இரவாக சிறுவருடைய தூதரகம் சம்பந்தப்பட்ட வேலைகள் மற்றும் சிறுவருடைய ஜனாஸாவை அவரது சொந்த ஊரான கன்னூர் கொண்டு சென்று அடக்கம் செய்வதற்கான பணிகள் நடைபெற்று நேற்று முன்தினம் செவ்வாய்கிழமை மாலையே நல்லடக்கம் செய்யப்பட்டார்.

அன்னாரது பெற்றோர் உற்றோர்கள் அனைவருக்கும் அல்லாஹ் அழகிய பொறுமையை தருவானாக! சிறுவரை ஜன்னத் அல் ஃபிர்தவ்ஸில் நுழையச் செய்வானாக!

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

கேரளாவில் 4-வது புதிய சர்வதேச விமான நிலையம் ~ டிச.9 ம் தேதி முதல் அபுதாபிக்கு நேரடிச்சேவை!

அதிரை நியூஸ்: நவ.15
டிச. 9 முதல் கேரளாவின் 4வது புதிய விமான நிலையத்திலிருந்து அபுதாபிக்கு விமான சேவை துவங்குகின்றது

எதிர்வரும் டிசம்பர் 9 ஆம் தேதி முதல் கேரள மாநிலத்தின் 4-வது சர்வதேச விமான நிலையமாக திறக்கப்பட்டுள்ள கன்னூர் விமான நிலையத்திலிருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் தனது முதலாவது சேவையை அபுதாபிக்கு ஆரம்பம் செய்கின்றது.

ஆரம்பமாக வாரத்தில் 3 நாட்களுக்கு அதாவது செவ்வாய், வியாழன் மற்றும் ஞாயிற்றுகிழமைகளில் கன்னூரிலிருந்து அபுதாபிக்கு சேவை வழங்கப்படும். கன்னூரிலிருந்து இந்திய நேரம் காலை 7 மணிக்கு புறப்படும் விமானம் அபுதாபி நேரம் பகல் 12.30 மணிக்கு வந்து சேரும். மீண்டும் அபதாபியிலிருந்து பகல் 1.30 மணியளவில் புறப்பட்டு இந்திய நேரம் இரவு 7 மணிக்கு கன்னூர் விமான நிலையத்தை சென்றடையும்.

நேற்று செவ்வாய்கிழமை இத்தடத்திற்கான முன்பதிவுகள் துவங்கிய உடனேயே கிட்டதட்ட அனைத்து இருக்கைகளும் நிரம்பிவிட்டன என ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த சேவையின் நேரங்கள் விரைவில் மாற்றப்படவுள்ளதுடன் ஆரம்பமாக அபுதாபி, தோஹா மற்றும் ரியாத் ஆகிய நகரங்களுக்கு கன்னூரிலிருந்து விமானச் சேவைகள் துவங்கவுள்ளன, பின்பு படிப்படியாக அமீரகத்தின் இதர விமான நிலையங்கள் உள்ளிட்ட பல சர்வதேச நகரங்களுக்கு விரிவுபடுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

Monday, November 5, 2018

பியூட்டிபுல் காஷ்மீரின் முதலாவது பனிப்பொழிவு சீஸன் தொடக்கம் (படங்கள்)

அதிரை நியூஸ்: நவ.05
இன்று குரங்கு கை பூமாலையாய் கந்தலாகி காட்சியளிக்கும் காஷ்மீர் ஒரு காலத்தில் பியூட்டிபுல் காஷ்மீராகத் தான் திகழ்ந்தது. சுற்றுலாவாசிகளின் பூலோக சொர்க்கம் இன்று பூலோக நரகிற்கு நிகராக அதன் காட்சிகள் மாறலாம், காலங்கள் மாறுமா! என்ன?

ஆகா! இந்த ஆண்டின் அற்புதமாக முதலாவது பனிப்பொழிவு சீஸன் துவங்கியுள்ளதை புகைப்படங்களாக ரசிக்கலாம் வாங்க!

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்
 
 

Tuesday, April 24, 2018

ஏர் இந்திய விமானம் நடுவானில் பறந்த போது ஜன்னல் கழன்று விழுந்ததால் பரபரப்பு (வீடியோ)

அதிரை நியூஸ்: ஏப்.24
அமிர்தசரஸிலிருந்து டெல்லிக்குச் (Amritsar to Delhi) சென்ற ஏர் இந்தியா 787 ட்ரீம்லைனர் மாடல் விமானத்தின் ஜன்னல் கண்ணாடி விமானம் சுமார் 15,000 உயரத்தில் பறந்து கொண்டிருந்த போது கழன்று விழுந்ததால் சுமார் 12 நிமிடங்கள் விமான தொடர்ந்து குலுங்கி பயணிகளுக்கு மரண பயத்தை ஏற்படுத்தியது.

இந்த நடுவான் சம்பவத்தால் 3 பயணிகள் காயமடைந்தனர். விமானப் பணிப்பெண் ஒருவர் கடும் பிரயாத்தனங்களுக்குப் பிறகு தற்காலிகமாக விழுந்த கண்ணாடி ஜன்னலை மீண்டும் பொருத்தியதை தொடர்ந்து விமானம் ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் வந்தது.

கடந்த வாரம் முழுவதும் பல விமானங்கள் பல்வேறு வகையான விபத்துக்களை சந்தித்திருந்த வேளையில் அமெரிக்காவின் நியூயார்க் நகரிலிருந்து டல்லாஸ் நகருக்கு பறந்து கொண்டிருந்த சவுத்வெஸ்ட் ஏர்லைன்ஸின் போயிங் 737 மாடல் விமானத்தின் எஞ்சின் ஒன்று வெடித்து சிதறியதில் விமானத்தின் ஜன்னல் கண்ணாடி ஒன்றும் நொறுங்கியது.

இந்த ஜன்னல் வழியாக ஜெனீபர் ரியோர்டன் என்ற பெண் பயணி ஒருவர் அழுத்தத்தால் பாதி உடலுக்கு மேல் வெளியே இழுக்கப்பட்டார் எனினும் சக பயணிகள் அவர் முற்றிலும் வெளியே சென்றுவிடாமல் மீண்டும் விமானத்திற்குள் இழுத்து காப்பாற்றினர் என்றாலும் அவருக்கு ஏற்பட்டிருந்த காயம் மற்றும் அதிர்ச்சியின் காரணமாக மருத்துவமனையில் உயிரிழந்தார்.

Source: Newshub / Msn
தமிழில்: நம்ம ஊரான் 




Sunday, April 1, 2018

இந்தியா சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகளுக்குப் பின் மும்பையின் தீவுக்கு மின்சாரம் !

அதிரை நியூஸ்: ஏப் 01
இந்தியா சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகளுக்குப் பின் மும்பையின் தீவுக்கு மின்சாரம் வந்தது

மும்பை மாநகரம் இந்தியாவின் பொருளாதாரத் தலைநகர் (Financial Capital) என்ற சிறப்புப் பெயர் பெற்றது. இங்கிருந்து சுமார் 10 கி.மீ தொலைவிலுள்ளது தான் 'எலிபெண்டா தீவு' (Elephanta Island) இதன் இன்னொரு பெயர் 'காரபூரி' (Gharapuri) அதாவது குகைகளின் நகரம் (City of Caves) என்ற சிறப்புப் பெயர்.

1. யுனெஸ்கோ (UNESCO) நிறுவனத்தால் பாரம்பரிய வரலாற்றுச் சின்னமாக அறிவிக்கப்பட்டது.

2. சுமார் 1,500 ஆண்டுகளுக்கு முற்பட்ட அதாவது ஐந்தாம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்ட 7 குகைக் கோயில்களை கொண்டது.

3. பகலில் சுற்றுலாவாசிகளால் நிரம்பி வழிவது ஆனாலும்.....

இரவு வேளைகளில் இத்தீவிலிருந்து மும்பை மாநகரை பார்த்தால் மின்விளக்குகளால் ஜொலிப்பதை கண்டு ஏங்கவே முடியும், ஏன் இந்தக் கண்ணுக்கு முன் கண்ணாமூச்சி!

4. இந்திய சுதந்திரம் பெற்ற கடந்த 70 ஆண்டுகளாகவே மும்பைக்கு மிக மிக அருகிலுள்ள இந்தத் தீவுக்கு மின்சாரம் கிடையாது!

5. 1980களின் இறுதிவரை இந்தத்தீவிற்கு ஒளி வழங்கியது மண்ணெண்ணெய் விளக்குகளும், மெழுகுவர்த்திகளுமே.

6. அதன் பின்பே டீசல் எஞ்சின் ஜெனரேட்டர் மின்சாரம் மூலம் தினமும் மாலை 7 மணிமுதல் இரவு 10 மணிவரை 3 மணிநேரத்திற்கு மின்சாரத்தை கண்ணில் காட்டியுள்ளனர்.

7. தற்போது தான் மும்பையிலிருந்து சுமார் 10 கி.மீ தூரத்திலுள்ள இந்தத் தீவிற்கு கேபிள் அமைத்து, அதிலும் 7 கி.மீ தூரத்திற்கு கடல் அடியில் கேபிள் அமைத்து 24 மணிநேரமும் மின்சாரம் வழங்கத் துவங்கியுள்ளனர். இதற்கான செலவு சுமார் 25 கோடி இந்திய ரூபாய்கள்.

8. இந்தத் தீவில் சுமார் 1,200 பேர் வசிக்கின்றனர் ஆனால் இவர்களை விட குரங்குகளின் எண்ணிக்கை அதிகம்.

9. இங்கு கார்களே கிடையாது ஆனால் பூங்காக்களில் பயன்படுத்தப்படும் சிறிய ரயில் தீவை சுற்றி வருகிறது.

10. இங்கு மருத்துவமனையே கிடையாது அதனால் அவசர காலத்திற்கு மும்பைக்கே கடல்வழியாக படகில் வரவேண்டும் என்றாலும் மாலை 5.30 மணிக்கு மேல் படகு சேவை கிடையாது.

11. இருப்பது ஒரேயொரு பள்ளிக்கூடம் அதிலும் 16 வயதுக்குட்பட்டோர் வரை மட்டுமே படிக்க முடியும்.

12. மின்சாரம் இல்லாத காரணத்தால் சுற்றுலா பயணிகள் இங்கு இரவில் தங்குவதில்லை. மின்சார வரவு இந்த நிலையை மாற்றும் எனவும்,

13. சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு மற்றும் இரவு தங்கும் சூழலால் தங்களின் வருமானம் உயரும் என எதிர்பார்க்கின்றனர் இத்தீவு மக்கள்.

14. பொருளாதார பின்னனியில் சுற்றுலாவாசிகளுக்கான விடுதிகளும், வீடுகளும் கட்டப்படவுள்ள நிலையில், இங்கு வங்கி ஒன்றையும் ஏடிஎம் மெஷின் ஒன்றையும் நிறுவ வேண்டும் எனவும் விரும்புகின்றனர்.

15. பெரும்பாலோர் வாரம் ஒருமுறை மும்பைக்கு படகில் சென்று ஒரு வாரத்திற்கு தேவையான காய்கறி, மளிகை பொருட்களை வாங்கி வருகின்றனர்.

16. மின்சாரத்தால் ஏற்பட்டுள்ள இந்த திடீர் மாற்றங்களை நாங்கள் அச்சத்துடனே வரவேற்கிறோம் என்கிறார் ஒரு தீவுவாசி, இன்னொரு பெண் ஒருவரோ இனி நான் நள்ளிரவு வரை டிவி பார்ப்பேன் என தெரிவித்தார், தேவையான அச்சம் தான்.

17. இன்னும் எத்தனையோ ஆயிரம் கிராமங்கள் இன்னும் இருளில் தான் உள்ளன. அவற்றின் மின்சாரக் கனவுகள் எப்போது நிஜமாகும்?

Source: Saudi Gazette
தமிழில்: நம்ம ஊரான்

Saturday, March 10, 2018

கர்நாடகா பெண்ணிற்கு அறுவை சிகிச்சை மூலம் 99 பித்தப்பை கற்கள் அகற்றம்!

அதிரை நியூஸ்: மார்ச் 10
கர்நாடகாவின் துமாகூரு (Tumakuru) பகுதியை சேர்ந்த 45 வயது ஏழைப்பெண் ஒருவர் கடும் வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்தார். இவருக்கு நிதி உதவி செய்வோர் யாருமில்லாததால் மருத்துவம் செய்ய அனைத்து தனியார் மருத்துவமனைகளும் மறுத்துவிட்ட நிலை அரசு மருத்துவமனையில் சேர்ந்தார்.

மருத்துவமனையில் ஸ்கேன் மூலம் பரிசோதிக்கப்பட்ட போது பித்தப்பையில் கல் அடைப்பு ஏற்பட்டுள்ளதுடன் முன்புற வயிற்றுச் சுவரில் வீக்கமும், தொப்புள் குடலிறக்கமும் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் கூடுதல் உபாதைகளாக நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், உடல் பருமன் மற்றும் இதய நோயும் இருந்துள்ளது.

இந்நிலையில் இவருக்கு அறுவை சிகிச்சை செய்த டாக்டர்கள் 12 மி.மீ அளவுள்ள 3 கற்களையும் மற்ற கற்கள் 4 முதல் 5 மி.மீ வரையும் என மொத்தம் 99 கற்களை அகற்றியதுடன் குடலிறக்கத்திற்கும் அறுவை சிகிச்சை செய்துள்ளனர். இந்த ஆபரேசன் சுமார் 2 ½ மணிநேரம் நடைபெற்றதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

இதற்கு முன் 2015 ஆம் ஆண்டு மேற்கு வங்க மாநிலத்தின் கொல்கத்தா நகரில் 51 வயது பெண்மணிக்கு செய்யப்பட்ட அறுவை சிகிச்சையின் மூலம் சுமார் 12,000 பித்தப்பை கற்கள் அகற்றப்பட்டதே சாதனையளவாக திகழ்கின்றது.

Sources: IBT / Financial Express / Msn
தமிழில்: நம்ம ஊரான்

Friday, February 23, 2018

மும்பையில் சூடான சட்னி சட்டிக்குள் தவறி விழுந்து 1 ½ வயது குழந்தை மரணம்!

அதிரை நியூஸ்: பிப்.23
மஹாராஷ்டிரா மாநிலம் ஆம்பர்நாத் எனும் பகுதியில் உள்ள சாஸ்திரி நகரில் 18 மாத பெண் குழந்தை ஒன்று புதன்கிழமை அதிகாலையில் சூடான தக்காளி சட்னி சட்டிக்குள் (அண்டா / கொப்பரை) எதிர்பாராத விதமாக தவறிவிழுந்து இறந்தது.

தனுஷ்கா என்ற இக்குழந்தையின் தந்தை ஒரு இட்லி வியாபாரி என்றும் அதிகாலையில் வியாபாரத்திற்காக தக்காளி சட்னி தயார் செய்து கொண்டிருந்தபோது இத்துயரச் சம்பவம் நடந்துள்ளது எனவும் தெரிய வந்துள்ளது.

சூடான தக்காளி சட்னி சட்டிக்குள் விழுந்ததால் உடல் வெந்துபோன குழந்தையை உல்லாஸ் நகரில் உள்ள ஒரு மருத்துவமனையில் சேர்த்தனர் எனினும் சிகிச்சை பலனின்றி இறந்து போனதாக அறிவிக்கப்பட்டது.

Source: Khaleej Times / Msn
தமிழில்: நம்ம ஊரான் 

Monday, February 12, 2018

வரதட்சணைக்காக மனைவியின் கிட்னியை திருடி விற்ற கணவன்!

அதிரை நியூஸ்: பிப்.12
வரதட்சணை என்பதே ஒரு பகல் கொள்ளை, ஊரறிந்த திருட்டு. இந்த திருட்டிற்காக தினந்தோறும் தினுசு தினுசாக வதைபடும் அபலைப்பெண்கள் இந்தியாவில் ஏராளம். நம் நாட்டில் கிட்னி திருட்டு என்பது அன்றாட நிகழ்வு தான் என்றாலும் பொதுவாக அந்நியரிடமிருந்தே திருடுவர் அல்லது ஏமாற்றிப் பறிப்பார்கள் ஆனால் இதற்கெல்லாம் மேலாக எவனுமே கற்பனை செய்திராத திருட்டை நடத்தியுள்ளான் ஒரு கணவன்.

மேற்கு வங்காள மாநிலத்தை சேர்ந்த ரீட்டா சர்க்கார் என்ற பெண்மணி 2 ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட கடும் வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்ததை தொடர்ந்து கொல்கத்தாவில் உள்ள ஒரு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு அடுத்த நாளே அப்பன்டிக்ஸ் எனும் குடல்வால் அகற்றல் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு வீடு திரும்பினார். எனினும், அப்பன்டிக்ஸ் ஆபரேசன் செய்யப்பட்டதையே வெளியே சொல்லக்கூடாது என கணவனால் மிரட்டப்பட்டு வந்துள்ளார்.

மீண்டும் கடந்த 6 மாதங்களாக முன்போலவே வயிற்று வலி பிரானனை வாங்கியுள்ளது எனினும் அவரை மருத்துவ மனைக்கு அழைத்துச் செல்ல கணவன் மறுத்துவிட்டார். இந்நிலையில் அப்பெண்ணின் உறவினர்களே இரக்கம் கொண்டு மருத்துவ மனையில் சேர்த்தனர். மருத்துவ பரிசோதனைகள் அவரது வலதுபுற கிட்னி திருடு போயுள்ளதை காட்டிக் கொடுத்துள்ளது.

ரீட்டாவிற்கும் சர்க்காருக்கும் திருமணமாகி 12 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையிலும் வரதட்சணைக்காக தினமும் கொடுமைப்படுத்தப்பட்டு வந்துள்ளார். ரீட்டாவின் பெற்றோர்களால் திருமணத்தின் போது ஒப்புக்கொண்ட 2,000 ரூபாய் வரதட்சணையை தர இயலவில்லை. எனவே, ரீட்டா வயிற்றுவலியால் துடித்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அவருக்கே தெரியாமல் கிட்னியை திருடி சண்டிகரை சேர்ந்த வர்த்தகர் ஒருவருக்கு 2 லட்ச ரூபாய்க்கு விற்றுள்ளான் இந்தக் கயவன்.

கணவனுடன் அவனுக்கு உடந்தையாக இருந்த அவனது சகோதரனும் கைது செய்யப்பட்டுள்ளனர், மாமியார் தலைமறைவாகி விட்டாளாம். இந்தத் திருட்டை கண்டிப்பாக சாமானியனான சர்க்கார் தனியாளாக செய்திருக்க முடியவே முடியாது. மருத்துவனும் மருத்துவமனையும் தான் இந்த திருட்டுக் குற்றத்தை தைரியமாக திட்டமிட்டு செய்திருக்க முடியும். இவர்களைப் போன்ற சமூக அவலங்கள் தயவுதாட்சண்யமின்றி துடைத்தெறியப்பட வேண்டும். கடமையை செய்ய மண்டியிடா அரசும், நீதிமன்றங்களும் முன்வர வேண்டும்.

Source: Newshub / Dailymail / Msn
தமிழில்: நம்ம ஊரான் 

Wednesday, February 7, 2018

வருடந்தோறும் பிப்.2 ல் மரணத்தை சந்திக்கும் இந்தியக் குடும்பம்!

அதிரை நியூஸ்: பிப்.07
மரணத்திலும் ஓர் தற்செயல் நிகழ்வு தொடர்ந்து 4 ஆண்டுகளாக பிப்ரவரி 2ல் மரணத்தை சந்திக்கிறது பிஹார் குடும்பம்.

பிறக்கும் போதே நிச்சயிக்கப்படுவது மரணம் ஆனால் தொடர்ந்து ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்களை ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி 2 ஆம் தேதி மரணம் பீடித்தால்? அதுவும் கல்வி மற்றும் பொது அறிவு வளர்ச்சியில் மிகவும் பின்தங்கியுள்ள பீஹார் மாநிலத்தின் ஒரு கிராமத்தில் வசிக்கும் ஒரு குறிப்பிட்ட குடும்பத்தினரை மட்டும் தொடர்ந்து 4 ஆண்டுகளாக துரத்தினால் அவர்களின் அரண்ட மனநிலை எப்படி இருக்கும்?

மாநிலத் தலைநகர் பாட்னாவிலிருந்து 90 கி.மீ தூரத்திலுள்ள சமஸ்டிபூர் மாவட்டத்தின் லக்கானிபூர்-மகேஷ்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் போக்கன் ராம். கடந்த 2015 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 2 ஆம் தேதி அவருடைய உறவினர் ஒருவர் இறந்துவிட்டார், இது கடவுளின் விருப்பம் என அமைதியாக கடந்துவிட்டனர்.

2016 ஆம் ஆண்டு பிப்ரவரி 2 ஆம் தேதி போக்கன் ராமின் இளைய சகோதரர் பேச்சன் ராம் என்பவர் இறந்துவிட்டார். அதேபோல் 2017 ஆம் ஆண்டு பிப்ரவரி 2 ஆம் தேதியும் அவருடைய இன்னொரு சகோதரர் பேகன் ராம் என்பவரும் இறக்க, 2018 ஆம் வருடத்தை நினைத்து குடும்பமே மருளத் தொடங்கியது.

அவர்கள் அச்சப்பட்டது போலவே நடப்பு 2018 ஆம் ஆண்டு பிப்ரவரி 2 ஆம் தேதி அவருடைய தந்தை சகிந்திர ராம் என்பவர் இறக்க அடுத்த வருஷம் யார் போகப் போகிறார்களோ என இப்போதே நடுங்கிப் புலம்ப ஆரம்பித்து விட்டார் போக்கன் ராம்.

இந்த துக்க நிகழ்வுகள் குறித்து அந்த கிராமத்தின் தலைவி பெனாஸிர் பானு கூறியதாவது, இது அதிர்ச்சியூட்டக்கூடிய ஒரு தொடர் நிகழ்வே என்றாலும் மரணம் எந்தத் தேதியிலும் நம்மை அடைந்தே தீரும் என்பதும் உண்மைதானே என்கிறார்.

கிராம கவுன்சிலின் உறுப்பினர்களில் ஒருவரான யோகேந்திர சிங் என்பவர், இது ஓர் தற்செயலான நிகழ்வு தான். எனவே, வரும் ஆண்டுகளை நினைத்து அச்சப்படத் தேவையில்லை என்றார்.

பீஹார் கிராமம் ஒன்றிலிருந்தும் மாறுபட்ட நன்நம்பிக்கை குரல்கள் வருவதும் வரவேற்கப்பட வேண்டியதே!

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான் 

Thursday, January 25, 2018

சிம்லாவில் 2018 பனிப்பொழிவு சீசன் தொடக்கம் (படங்கள்)

அதிரை நியூஸ்: ஜன.25
சிம்லாவில் இந்த ஆண்டிற்கான முதலாவது பனிப்பொழிவு சீசன் தொடங்கியது.

ஹிமாச்சல பிரதேச மாநிலத்தின் தலைநகர் சிம்லா ஓர் பிரசித்தி பெற்ற சுற்றுலாத் தலமாகும். இங்கு வருடந்தோறும் பொழியும் பனியை ரசிப்பதற்காகவே பல்லாயிரக்கணக்காக சுற்றுலாவாசிகள் வருகை தருவர். சிம்லாவில் இந்த ஆண்டிற்கான உறைபனி சீசன் துவங்கியுள்ளதை அடுத்து எங்கெங்கும் வெண்பனி போர்த்தி கண்கள், உடல், மனது என குளிரூட்டி குதூகலிக்கச் செய்து கொண்டுள்ளது. இவ்வருடம் சிம்லா போக வாய்ப்பில்லாதவர்களுக்கு 'இலுப்பை பூ சர்க்கரை போல்' இப்படங்கள் சமர்ப்பணம்.

இறைவனின் படைப்பான இயற்கை அற்பதங்கள் ஒரு பக்கம் அழிவையும் இன்னொரு பக்கம் அழகையும் தரவல்லவை.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்