.

Pages

Showing posts with label வெள்ளி தலையங்கம். Show all posts
Showing posts with label வெள்ளி தலையங்கம். Show all posts

Friday, January 30, 2015

அமெரிக்கா ~ இந்தியா பாய், பாய் ! டாக்டர் ஏ.பீ. முகமது அலி, பிஎச்,டி, ஐ.பீ.எஸ் (ஓ)

இந்திய பத்திரிக்கைகளிலும், எலக்ட்ரானிக் மீடியாக்களிலும் இந்த ஆண்டு(2015) தொடக்கத்திலே ஒரு தொற்று நோய் ஏற்பட்டது போல பரபரப்பாக வெளியிடப் பட்ட செய்தி அமெரிக்காவின் ஜனாதிபதி பாரக் ஒபாமா இந்திய வருகைதான் என்றால் மிகையாகாது. அதேபோன்ற பரபரப்பு பிரான்ஸ் ஜனாதிபதி ஹாலந்த் 14-2-2013 ல் வருகை தந்தபோதோ, பிரிட்டிஷ் அரசின் பிரதமர் டேவிட் கேமரோன்  19-2-2013 ல் வருகை தந்தபோதோ, சீனாவின் ஜனாதிபதி ஜிம் பிங் 17-9-2014 ல் வருகை தந்தபோதோ, அல்லது ரஷ்ய ஜனாதிபதி  புடின் 10-12-2014 ல் வருகை தந்தபோதோ ஏற்படவில்லையே, அது ஏன் என்று உங்களைப் போன்ற படித்த பெருமக்களுக்கு கேட்கத் தோணும். ஆனால் ஒட்டிய வயிறும், கட்டிய கையும், குழிவிழுந்தக் கன்னங்களும் கொண்ட பாமரனுக்கு கொண்டுள்ள சாதாரண பாமரனுக்குத் தெரியாதல்லவா?

அமெரிக்காவின் இந்திய தொடர்பு இரண்டாம் உலகப் போர் சமயத்தில் பிரிட்டிஸ் அரசின் பிடியிலிருந்து இந்தியாவினை மீட்க நடந்த  விடுதலைப் போரின் பயனாக ஏற்பட்டது. அப்போது இங்கிலாந்து பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் தலைமையில் கூட்டுப் படை செயல் பட்டது. இந்திய மக்களின், 'கத்தியின்றி, ரத்தமின்றி  சத்தியாகிரக யுத்தம்' பிரிடிஸ் அரசிற்கு எதிராக தொடங்கியதினைக் கண்டு உலகமே வியந்தது. அப்போதைய அமெரிக்காவின் ஜனாதிபதி பிராங்கிளின் ரூஸ்வெல்ட் பிரிடிஸ் பிரதமரிடம் 1945 ஆம் ஆண்டு இந்தியாவிற்கு பேசாமல் விடுதலைக் கொடுத்து விடுங்கள் என்று வலியுறித்தினார். அது தான் முதல் ஆரம்பம்.

சுதந்திர இந்தியாவிற்கு முதல் வருகை தந்த(1959) அமெரிக்க ஜனாதிபதி ஐசனோவர் ஆகும்.

இந்தியாவின் கூட்டுச் சேரா கொள்கை இந்திய நலனுக்கு பின்னடைவு ஏற்பட்டுது எதனால் என்றால் சீனா நம்மீது 1962 ஆம் ஆண்டு படை எடுத்தபோது  எந்த வல்லருசும் இந்தியாவிற்கு ஆதரவாக வரவில்லை. இந்திய மண்ணில் சீனா கண்ட வெற்றி அமெரிக்க வெளிவிவகார கொள்கையில் மாற்றம் ஏற்பட்டு இந்தியா பக்கம் சாய்ந்தது, காரணம் எங்கே சீனா ஆசிய கண்டத்தில் ஒரு வல்லரசாக ஆகிவிடுமோ என்ற அச்சம் தான். அமெரிக்க ஜனாதிபதியாக ஜான் எப் கென்னெடி காலத்தில் நட்புறவின் பயனாக ஏற்பட்டது தான் உத்தரப் பிரதேசம் கான்பூரில் இருக்கும் பிரசித்திபெற்ற பொறியியல் வல்லுனர்களை உருவாக்கிய  ஐ.ஐ.டி கல்வி நிறுவனமாகும்..

அந்தக் கூட்டுறவு 1970 ஆம் ஆண்டு  நிக்சன் ஜனாதிபதியாக இருந்தபோது முறிய ஆரம்பித்தது. இந்தியாவின் இரும்பு பெண்மணி இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது இந்தியாவின் ராணுவ பலத்தினை நிரூபிக்க கிழக்கு பாகிஸ்தானில் நடந்த சுதந்திரப் போருக்கு ஆதரவு தெரிவித்து 1971 ஆம் ஆண்டு பங்களாதேஸ் என்ற நாட்டினை சுதந்திர நாடாக்கிய போது, அதனை தடுத்து நிறுத்தி, இந்தியாவினை பயமுறுத்த வங்காள கடல் பகுதிக்கு 'யு.எஸ்.எஸ். எண்டர்ப்ரைசெஸ்' என்ற விமானத் தாங்கிய போர்க் கப்பலை அமெரிக்கா அனுப்பியது. ஆனால் அமெரிக்காவினால் பங்களா தேஷ் உருவானதினைத் தடுக்க முடியவில்லை.

கோல்ட் வார்' என்ற பனிப்போர் இரண்டு நாட்டிற்கும் நடந்தது. 1998 ஆம் ஆண்டு அடல் பிஹாரி வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது இந்தியா ராஜஸ்தான் மாநிலம் 'பொக்ரானில்' அணு ஆயுத சோதனை அமெரிக்க உறவில் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல இருந்தது. அதனைத் தொடர்ந்து அமெரிக்க ஜனாதிபதி பில் கிளிண்டன் இந்தியா மீது  பொருளாதார மற்றும் ராணுவ தடைகளை விதித்தார். ஆனால் குதுகூலமிட்ட இந்திய பொருளாதார வளர்ச்சியாலும், கொந்தளித்த வர்த்தக வளர்ச்சியாலும், விஞ்ஞானிகளின் ஆர்ப்பரித்த கண்டு பிடிப்புகளாலும், அமெரிக்காவின் தடைகளால் ஒன்றும் செய்ய முடியவில்லை. அதற்குக் காரணம் அமெரிக்காவின் நட்பு நாடான ஜப்பானைத் தவிர ஏனைய நாடுகள் அமெரிக்காவின் கட்டுப் பாடுகளைக் கடைப் பிடிக்கவில்லை. அதனை அறிந்த பில் கிளிண்டன் இந்தியாவிற்கு 2000 ஆம் ஆண்டு வருகை தந்து பாரதப் பிரதமர் அடல் பிஹாரி வாஜுபாயுடன் நல்லுறவினை ஏற்றுக் கொண்டார்.
அதனைத் தொடர்ந்து அமெரிக்காவில்  2001 ஆம் ஆண்டு நடந்த இரட்டைக் கோபுர தாக்குதலுக்குப் பின்பு வலுவான  ஆசிய நாடான இந்தியாவின் ஆதரவு ஆப்கானிஸ்தான் படையெடுப்பின் போதும், அதற்குப் பிறகு அந்த நாட்டின் கட்டுமானப் பணிக்கும்  தேவைப் பட்டதால் இந்தியாவினுடனான நல்லுறவினை அமெரிக்கா வளர்க்க ஆரம்பித்தது. அமெரிக்காவின் அதிபராக பாரக் ஒபாமா முதல் தடவையாக ஜனாதிபதியாக வந்தபோது 'தீவிரவாதத்திற்கு எதிரான போர்' என்ற கொள்கையால் பாக்கிஸ்தானுடன் உறவினை நெருக்கமாக வைத்துக் கொண்டு 'ஒசாமா பின் லேடன்' தேடுதல் வேட்டையினைத் தொடர்ந்ததால் இந்தியாவின் உறவில் சற்று தொய்வு ஏற்பட்டது.

2008 ஆம் ஆண்டு நடந்த மும்பை தீவிரவாதத் தாக்குதலுக்குப் பின்பு அமெரிக்காவின் உதவியினை இந்தியா நாட வேண்டி இருந்தது. இந்தியா அமெரிக்காவின் எதிரான பார்வையில் இருந்த ரஷ்யா, ஈரான், இலங்கை, மாலத்தீவு, பங்களா தேஷ் ஆகிய நாடுகளுடன் நட்புறவு வைத்திருந்ததால் 2009 ஆம் ஆண்டு  ஒபாமா  அமெரிக்காக் கம்ப்யுட்டர் கம்பனிகள் இந்தியா கம்பனிகளுக்கு 'அவுட் சோர்சிங்' என்ற வெளிவேலை தொடர்பான காரியங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்தார். அதற்கு அவர் சொன்ன காரணம் அமெரிக்காவின் பணம் இந்தியாவிற்குச் செல்கிறது, அமெரிக்க இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பில்லை என்பதுதான். அந்த தொய்வான உறவினை சரி செய்ய 2010 ஆம் ஆண்டு பாரக் ஒபாமா முதல் தடவையாக இந்தியா வந்தபோது அவருக்குச் சிகப்புக் கம்பளம் விரிக்கப் பட்டது.

அவருக்குச் சிறப்பு மரியாதைக் கொடுக்குமளவிற்கு இந்தியப் பாராளுமன்ற கூட்டுச் சபையில் 1959 ஆம் ஆண்டு அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஐஸ்நோவருக்குப் பின்பு  பாரக் ஒபாமாவிற்கு வாய்ப்பு அளிக்கப் பட்டது. அதன் பலன் தான் முன்னாள் பாரதப் பிரதமர் மன்மோகன் சிங் அமெரிக்கா சென்ற பொது வெள்ளை மாளிகையில் வேறு எந்த நாட்டுத் தலைவருக்கு மில்லாத தனி விருந்து ஒன்றினை பாரக் ஒபாமா வழங்கினார். அதன் பின்பு அமெரிக்காவின் தூதரக அதிகாரி தேவயாணி வேலையாள் விசா சம்பந்தமான குற்றச் சாட்டில் மரபிற்கு நேர்மாறாக கைது நடவடிக்கையில் ஈடுபட்டதால் யு.பி.ஏ  அரசின் கடைசி காலத்தில் அமெரிக்காவினுடனான உறவு பாதிக்க ஆரம்பித்தது. அதன் பின்பு பி.ஜே.பி அரசு வந்ததும் பிரதமர் நரேந்திரா மோடி மீது அமெரிக்கா விதித்திருந்த விசா தடை நீக்கப்பட்டு 'மோடிசன் ஸ்கயிர்' என்ற சதுக்கத்தில் இந்திய மக்களால் கொடுக்கப்பட்ட பிரமிக்க வைத்த வரவேற்புனைக் கண்ட அமெரிக்க மக்களின் பிரதிநிதியாக ஒபாமா வந்து இந்திய மக்களையும், பத்திரிக்கையாளர்களையும், தொழில் அதிபர்களையும் கவர்ந்து விட்டார்.

பாரக் ஒபாமா வருகையினால் ஏற்பட்ட பலன்கள் மற்றும் பாதகங்கள்:
1) இந்தியாவின் வளர்ச்சியினைக் கண்டு மேலைய நாடுகளின் கவனம் இந்தியாவின் பக்கம் திரும்பியுள்ளது.

2) அமெரிக்காவின் தொழில் அதிபர்கள் இந்தியாவின் திட்டங்களான, 'மேக் இன் இந்தியா' (இந்தியாவில் தொழில் முனைவோம்), 'ஸ்மார்ட் சிட்டிஸ்'(சுறுசுறுப்பான நகரங்கள்), 'ஸ்வாச் பாரத்' (சுத்தமான பாரதம்), மாற்று மின் உற்பத்தி  போன்றவற்றில் பங்காற்ற வேண்டும் என்ற வேண்டுகோள் இடப்பட்டுள்ளது. அப்போது தொழில் அதிபர்கள் தாங்கள் தயார் ஆனால் அரசின் கட்டுப்பாடு இல்லா உதவி உடன் கிடைக்க வழிவகை வேண்டும் என்ற வேண்டுகோளும் இடப்பட்டுள்ளது.

3) அவுட் சோர்சிங் என்ற இந்திய கம்ப்யூட்டர் கம்பெனிகளுக்கு விதிக்கப்பட்டு இருக்கும் கடுமையான கட்டுப்பாடுகளை அமெரிக்கா தளர்த்த வேண்டும் என்று வேண்டுகோளும் இடப்பட்டது.

ஆனால் உண்மையில் அமெரிக்காவில் பணிபுரியும் இந்திய கம்ப்யூட்டர் கம்பனி பொறியாளர்களால் அமெரிக்காவிற்குத் தான் ஒருவகையில் லாபம். ஏனென்றால் அவர்களுடைய வருமானம் மாதமொன்றுக்கு ஐந்துக் குறைவாக இல்லாவிட்டாலும்  அவர்கள் 'சோசியல் செக்குரிட்டி' என்ற சமூக பாதுகாப்பிற்கான வரி மட்டும் வருமானத்தில் நாற்பது சதவீதமாகும் என்றால் பாருங்களேன். அவை அத்தனையும் அமெரிக்க மக்குளுக்குத் தான் போய் சேருகின்றது.

பாதகமான நடவடிக்கை என்று எடுத்துக் கொண்டால்:
1) இந்தியாவின் அமெரிக்க விசுவாசத்தினைக் காட்ட முதல் தடவையாக பாரதப் பிரதமரே புது டெல்லி விமான நிலையத்தில் ஒபாமாவை வரவேற்று உள்ளார். அது ப்ரோடோகாலை விட்டு சற்று விலகி இருப்பதாக கருதப் படுகிறது.

2) நட்பு நாடான ரஷ்யா, அண்டை நாடான சீனா ஆகியவை கறுப்புக் கண்ணாடிப் பார்வையில் இந்தியாவினைப் பார்க்கத் தொடங்கி உள்ளன.

3) அணு ஆயுத உடன்படிக்கை வெளிவராத நிலையில் எங்கே இந்தியா அணு ஆலை சிதைவினால் இந்திய மக்களுக்கு'லயாபிலிடி' என்ற இழப்பு நஷ்ட ஈடு கிடைக்க வழிவகை செய்யவில்லையோ என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. ஆகவே தான் எதிர்க் கட்சிகள் உடன்படிக்கை இரகசியத்தினை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என குரல் எழுப்பி உள்ளன.

4) ஒபாமாவின் தரிசனம் கிடைக்க ரட்டன் டாட்டா, முகேஷ் மற்றும் அணில் அம்பானி, பிர்லா போன்ற பிரபல தொழில் அதிபர்கள் க்யூவில் திருமண தம்பதிகளை வாழ்த்த வருசையில் நின்றது போல நின்ற காட்சி ள்ளது  பத்திரிக்கைக் காட்சி வெளிவந்ததினைப் பார்த்த பெரும்பாலான இந்திய மக்களை முகம்  சுளிக்கச் செய்துள்ளது என்றால் மறுப்பதிற்கில்லை.

எப்படி இருந்தாலும் பாரக் ஒபாமாவின் இந்தியப் பயணம் இந்திய மக்களைப் பற்றிய நல்லெண்ணம் இன்றுபோல் என்றும் இருந்தால் நலம்தானே!

டாக்டர் ஏ.பீ. முகமது அலி, பிஎச்,டி, ஐ.பீ.எஸ்(ஓ)
ஓய்வுபெற்ற மூத்த காவல்துறை அதிகாரி / எழுத்தாளர் / சமூக ஆர்வலர்

Friday, January 23, 2015

குடியரசு தின சிந்தனைகள்:'எழுத்தாளர்' இப்ராஹீம் அன்சாரி

வரும் ஜனவரி 26 ஆம் தேதி வழக்கம் போல இந்தியா தனது 65 ஆவது குடியரசு நாளைக் கொண்டாட இருக்கிறது. இந்த வருடக் கொண்டாட்டத்தின் சிறப்பு என்ன வென்றால் இந்தக் கொண்டாட்டத்தின் சிறப்பு விருந்தினரே இந்த வருடக் கொண்டாட்டத்தின் சிறப்பு ஆகும்.  ஆமாம்! அமெரிக்க அதிபர் ஒபாமா அவர்கள்  இந்த வருடம் குடியரசு விழாவில் கலந்து கொண்டு சிறப்பு சேர்க்க சிறப்பு விருந்தினராக வர இருக்கிறார்.

குடியசு தினவிழாவின் உண்மையான நிரந்தரமான சிறப்பு என்ன என்று நாம் சிந்தித்தால் இந்தியாவில் நீடித்து வந்த ஆங்கில ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில், தேசிய அளவிலும், மாநில அளவிலும், பல புரட்சிகளையும் போராட்டங்களையும் , அகிம்சை வழியில் பலப் போராட்டங்களையும் நிகழ்த்தி தன்னுடைய உடல் பொருள் ஆவி ஆகியவற்றை இன மத சாதி பேதமின்றி  நாட்டுக்காகவும் நாட்டின் விடுதலைக்காகவும்   அர்ப்பணித்த தேசத் தலைவர்களையும், வீரர்களையும், புரட்சியாளர்களையும் நினைவு கூறி நன்றி  செலுத்தும் நாள் , ‘குடியரசு தினம்’ ஆகும்.

அதே நேரம் இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றை நினைத்துப் பார்ப்பவர்களால் ஒரு விஷயத்தை ஜீரணிக்க இயலவில்லை என்பதையும் இங்கே கூறித்தான் ஆகவேண்டும்.

அண்மைக்காலமாக, இந்திய சுதந்திரப் போராட்டத்துக்கு எதிராக இருந்தவர்கள் ஆங்கில ஏகாதிபத்தியத்துக்கு துணை நின்றவர்கள் போராட்டங்களில் ஈடுபட்டுப் பின்னர் மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்துவிட்டு வெளிவந்தவர்கள் அதாவது இந்திய சுதந்திரத்துக்கு எதிராக இருந்தவர்கள் தேசத்தந்தைக்கு எதிராக துப்பாக்கி எடுத்தவர்களெல்லாம்  அரசியல் காரணங்களுக்காக முன்னிலைப் படுத்தப்படுவதும்  உண்மையான தியாகிகள் உடைய வரலாறு  திட்டமிட்டு மறைக்கப்படுவதும் இப்போது கண்கூடாக காணப்படுகிறது.

சில வரலாற்றுச் செய்திகளை நாம் நினைவுபடுத்திக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.

நாடு சுதந்திரம் பெற ஓராண்டுக்கு முன்பே அதாவது 1946 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 9 ஆம் நாள் காங்கிரஸ் கட்சியால் இந்திய அரசியல் நிர்ணய சபை கூட்டப்பட்டு, அதன் தற்காலிகத் தலைவராக சச்சிதானந்த சின்கா என்பவரை நியமித்தது.

ஆகஸ்ட் 15 1947 இந்திய விடுதலைக்குப் பிறகு,  இந்திய அரசியல் நிர்ணய சபைத் தலைவராக டாக்டர் ராஜேந்திரப் பிரசாத் நியமிக்கப்பட்டார். அவரே விடுதலை இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவராகவும் பொறுப்பேற்றார்.
அதன் பிறகு, இந்திய அரசியலமைப்பு வரைவுக்குழு அமைக்கப்பட்டு, டாக்டர் பி. ஆர். அம்பேத்கர் தலைமையில் இந்திய அரசியல் அமைப்பு சாசனம் எழுதப்பட்டது. முகவுரை, விதிகள், அட்டவணைகள், பிற்சேர்க்கை, திருத்த மசோதாக்கள் போன்ற சிறப்பு அம்சங்களைக் கொண்டு நீண்ட ஆவணமாக எழுதப்பட்ட இந்த சாசனம், இந்திய அரசியல் நிர்ணய சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்டு, மக்களாட்சியைக் குறிக்கோளாகக் கொண்டு நிறைவேற்றப்பட்டதால், 1950 ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு வருடமும் ஜனவரி 26 ஆம் நாளை இந்திய தேசிய குடியரசு தினமாக நடைமுறைப்படுத்தப்பட்டது.

இந்த அரசியல் சட்டம் நாட்டின் அனைத்து மக்களுக்கும் சமமான அடிப்படை உரிமைகளை வழங்கி இருக்கிறது. இந்த சட்டத்தின் முன் அனைவரும் சமம்; அனைவருக்கும் சொத்துரிமை – வாக்குரிமை- நாடெங்கும் தடை இல்லாமல் சென்றுவரும் உரிமை- பேச்சுரிமை- எழுத்துரிமை- தாங்கள் விரும்பும்  மதங்களைப் பின்பற்றும் உரிமை- கல்வி கற்கும் உரிமை ஆகியவற்றை தனது குடிமக்களுக்கு இந்த அரசியலமைப்பு சட்டம் வழங்கி இருக்கிறது. இந்த அரசியல் சட்டத்தின் அடிப்படையில்தான் ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல்கள் நடத்தப்படுகின்றன; இந்த அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படையில்தான் அரசுகள் அமைகின்றன; இந்த அரசியலமைப்பு சட்டத்தின் பெயரால்தான் நாட்டை ஆள்வதற்கு பதவி ஏற்போர் பதவிப் பிரமாணம் ஏற்கிறார்கள்.  சுருக்கமாக சொல்லபோனால் நாட்டின் நிர்வாகத்தை இயக்கும் அச்சாணி இந்த அரசியல் அமைப்பு சட்டம்தான். இந்த அரசியல் அமைப்புச் சட்டம் அமுலுக்கு வந்த நாள்தான் குடியரசு நாள்.
கடந்த 2014 ஆம் ஆண்டும் ஜனவரி  26 ஆம் நாள் குடியரசு தினவிழா வழக்கமான உற்சாகத்துடன் கோலாகலாமாகக் கொண்டாடப்பட்டது. இந்த வருடமும் இதோ அமெரிக்க அதிபருடன் கொண்டாடப்படப் போகிறது. ஆனால் கடந்த வருடத்துக்கும் இந்த வருடத்துக்கும் இடையில் நாட்டில் பல மாற்றங்கள் ஏற்பட்டுவிட்டன.

முதலாவதாக நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு விட்டது. நாட்டை இத்தனை ஆண்டுகாலங்களாக ஆண்டு கொண்டிருந்த காங்கிரஸ் கட்சியிடமிருந்து தேர்தல் மூலமாக வாக்களித்து,  மக்கள் ஆட்சியைப் பிடுங்கி பாரதீய ஜனதா கட்சியிடம் கொடுத்து இருக்கிறார்கள்.

மக்கள் விரும்பியதேன்னவோ மாற்றம் வேண்டுமென்பதுதான். வளர்ச்சியடையாத பொருளாதாரம் வளரும்; விலைவாசிகள் குறையும்; இலங்கைத் தமிழர் பிரச்னைகள் தீர்க்கப்படும்; சமுதாய மக்களிடையே உறவுகள் மேம்படுத்தப்படும்; உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும்; அனைவருக்கும் ஏற்றமான இனிமையான வாழ்வு கிடைக்குமென்றுதான் ஜனநாயக முறையில் மக்கள் ஆட்சி மாற்றத்தை செய்தார்கள்.
ஆனால் கடந்த ஏழுமாதங்களாக நடைபெற்று வரும் புதிய ஆட்சியில் முந்தைய ஆட்சியில் அரைத்த மாவுதான் மீண்டும் அரைக்கப்படுகிறதே தவிர புதிதாக வளர்ச்சியின் அடையாளம்  ஒன்றுமே தென்படவில்லை.
வளர்ச்சிக்கு மாறாக , அரசியல் சட்ட விதிகளின் பெயரால் உறுதி மொழி எடுத்துப் பதவிக்கு வந்தவர்கள் மக்களைப் பிரித்து  பேதங்களை வளர்க்கும் செயல்களை முன்னெடுத்தும் முன்னுரிமை கொடுத்தும் வருகிறார்கள்.  எந்த அமைப்புகள் இந்த நாட்டின் சுதந்திரத்துக்கு எதிரான் நடவடிக்கைகளில் ஈடுபட்டனவோ- நாட்டின் சுதந்திரத் திருநாளின்போது சுதந்திரத்துக்காக தோளோடு தோள் நின்று போராடிய சிறுபான்மையினரையும் – தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களையும் அடக்கி ஒடுக்கும் அளவுக்கு  அந்த  அமைப்புக்கள் கொடுக்கும் சாவிக்கு ஆட்டம் போடும் பொம்மையாக இன்றைய புதிய ஆட்சி  இருந்து வருகிறது.

ஆட்சிக்கு வந்த அடுத்த வாரமே, நாட்டின் மிகக் குறைந்த சதவீதத்தினர் மட்டுமே பயன்படுத்தும் வார்த்தை வழக்கிலும் நடைமுறையிலும் இல்லாத சமஸ்கிருத மொழிக்கு   முக்கியத்துவம் தரும் வகையில் சம்ஸ்கிருத வாரம் கொண்டாடப் படவேண்டுமென்று அரசு அறிவித்து தனது உயர்சாதியை பேணும் தன்மைக்கு சுழி போட்டது. முதல் கோணல் முற்றிலும் கோணலானது.

அடுத்து, மத்திய அரசின் அனைத்து துறைகளும் இந்தி மொழியைத்தான் தங்களுக்குள் பரிமாற்ற பாஷையாகப் பயன்படுத்தவேண்டுமென்று உத்தரவிட்டது.

எந்த அன்னிய முதலீட்டை காங்கிரஸ் ஆட்சியில் எதிர்த்து பாராளுமன்றத்தை முடக்கியதோ அதே அந்நிய முதலீட்டைக் கொண்டுவர அவசரச்  சட்டம் கொண்டு வந்தது.

விலைவாசியைக் குறைப்போம் என்று முழங்கி ஆட்சியை பிடித்த அரசு வந்த உடன் செய்த முதல் வேலை வரலாறு காணாத வகையில் இரயில் மற்றும் சரக்குக் கட்டணங்களை உயர்த்தி மக்களின் தலைகளில் இடிகளை இறக்கியது.

அரசு தரும்  மான்யத்தை நேரடியாக பயனாளிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தவும் அதற்காக ஆதார் கார்டு திட்டத்தையும் மன்மோகன் சிங் அரசு கொண்டு வரும்போது எதிர்த்து பேயாட்டம் ஆடிவிட்டு அதே திட்டங்களை இன்னும் தீவிரமாக அமுல்படுத்தத் தொடங்கியது.

பெட்ரோல் முதலிய எரிபொருள் விலைகளை சர்வதேச சந்தையின் விலைக்கு ஏற்றபடி நிர்ணயம் செய்துகொள்ளும் உரிமையை எண்ணெய் நிறுவனங்களுக்கு முந்தைய அரசால் வழங்கப்பட்டதை தொடர்ந்து எதிர்த்து வந்த பாரதீய ஜனதாக் கட்சி தான் பதவி ஏற்ற பிறகும் கூட அதே முறைகளைத்தான் தொடர்ந்து வருகிறது.

அது மட்டுமல்லாமல் உலகெங்கும் எதிர்பாராத நிலையாக கச்சா எண்ணெயின் விலை வீழ்ச்சி அடைந்து அதன் காரணமாக இந்திய அரசுக்கு 3.10 இலட்சம் கோடி ரூபாய் இலாபம் கிடைத்தாலும் கண்துடைப்பாக மட்டுமே பெட்ரோலியப் பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டன. இதில் இன்னொரு அதிசயமாக உற்பத்தி வரி என்று புதிய வரியும் அறிமுகபடுத்தப்பட்டு நியாயமாக பயனாளிகளுக்குக் கிடைக்க வேண்டிய விலைவீழ்ச்சியின் பயன் அரசின் கஜானாவுக்குப் போகிறது.

நூறு நாள் வேலைத்திட்டம் என்பது ஏழை  எளிய மக்களுக்கான பசி போக்கும் வேலைவாய்ப்புத் திட்டம். இந்தத் திட்டத்துக்கு புதிய அரசு ஏழே மாதங்களில் மூடுவிழா நடத்திவிட்டது.

விவசாயிகளுக்கான யூரியா உர மானியத்தை புதிய அரசு இரத்து செய்துவிட்டதால் தமிழ்நாட்டில் மட்டும் இரண்டு உரத் தொழிற்சாலைகள் மூடப்பட்டுவிட்டன. ஆறுகளில் நீர்! ஆனால் விவசாயிகளின் கண்களிலோ கண்ணீர்! காரணம் விவசாயப்பணிகளை மேற்கொள்ள உரம் கிடைக்கவில்லை. அரசோ சமஸ்கிருதத்தில் சங்கீதம் பாடிக் கொண்டிருந்தது.
பண்டித ஜவர்ஹர்லால் உடைய காலத்தில் இருந்து இந்த நாட்டின் பல்வேறு திட்டங்களை மேற்கொள்ளக் காரணமாக இருந்த திட்ட கமிஷன் கலைக்கப்பட்டது. பக்ரா நங்கல் அணைத்திட்டம் போன்ற மாபெரும் திட்டங்களை மேற்கொள்ள மாநில அரசுகளுக்கு நிதி ஆதாரங்களை ஒதுக்கித் தந்த  திட்டக் கமிஷன் ஒரே இரவில் தூக்கி எறியப்பட்டு பிரதமர் மோடி அதன் தலைவராக பொறுப்பேற்று அதிகாரக் குவிப்பு மையமாக ஆக்கிக் கொண்டதுடன்  தங்களது கட்சிக்காரர்களை தன்னுடன் சாய்ந்து அமர்ந்து கொள்வதற்கு திண்டுத் தலையணை கொடுத்து வைத்துக் கொண்டு திட்டக் கமிஷனை கேலிக்கூத்தாக்கி இருக்கிறது இந்த அரசு.  

இப்படிப்பட்ட நிர்வாகக் குளறுபடிகள் ஒரு புறமிருக்க , ஆட்சியில் இருக்கும் கட்சியை ஆட்டிவைக்கும் அமைப்புகளும் ஆட்சியைத் தாங்கிப் பிடித்துக் கொண்டு இருக்கும் அமைச்சர்களும் , ஆட்சியின் அங்கமாக இருக்கிற பாராளுமன்ற உறுப்பினர்களும் அள்ளிவிட்ட அவதூறுகளும், பேதம் வளர்க்கும் பிரிவினைப் பேச்சுக்களும் , மத சார்பான தூண்டுதல்களும் அடை மழை போல பொழியத் தொடங்கின.

முதலாவதாக மத்திய அமைச்சரவையில்  வெளியுறவுத்துறை அமைச்சராக இருக்கும் சுஷ்மா சுவராஜ் அவர்கள் பகவத் கீதை என்கிற ஒரு குறிப்பிட்ட மதத்தின் ஒரு குறிப்பிட்ட தனிப்பிரிவின் புனித நூலை தேசிய நூலாக ஆக்கவேண்டுமென்று குறிப்பிட்டார். இது மதசார்பின்மைக் கோட்பாட்டின் மீதான ஒரு வெளிப்படையான போர்ப்பிரகடனம்  என்றுதான் நாட்டின் நடுநிலையாளர்கள் கருதுகிறார்கள்.

அடுத்து,  நிரஞ்சன் ஜோதி என்கிற ஒரு அமைச்சர் இந்த நாட்டில் அனைத்து மக்களும் இராமனுக்குப் பிறந்தவர்கள் என்பதை ஏற்கவேண்டுமென்றும் அவ்விதம் ஏற்காதவர்கள் தவறாகப் பிறந்தவர்கள் என்று தலைநகரில் பேசினார்.   நாடே கொந்தளித்த  பின் பிரதமர் பாராளுமன்றத்தில் வருத்தம் தெரிவித்தார். அமைச்சர் மன்னிப்புக் கோரினார். உதடுகள் பேசிய வார்த்தைகள்தான் இந்த வருத்தத்தையும் மன்னிப்பையும் கேட்டனவே தவிர அவர்களின் உள்ளங்கள் மன்னிப்புக் கோரவில்லை.

அதற்கும் அடுத்து இந்துக்களின் மக்கள் தொகை குறைந்து வருகிறது என்று சொல்லி ஒரு மதச் சாமியார்  ஒவ்வொரு இந்துத் தாயும் நான்கு குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளவேண்டுமென்று தனது ஆசையைத் தெரியப்படுத்தினார். இன்னொருவரோ அதுவும் போதாது பத்து குழந்தைகளைப் பெற்றெடுக்க வேண்டுமென்று பதட்டப்பட்டார். குழந்தைகள் ஏதோ வங்கிக் கணக்கில் வைத்துள்ள பணத்தை செக் எழுதிக் கொடுத்துவிட்டு எடுப்பது போன்றதா என்பதை இவர்கள் சிந்திக்கவில்லை. ஆனால் இத்தகைய வரம்பு மீறிய உளறல்களுக்கெல்லாம் பொறுப்பான பிரதமர் பதிலே அளிக்காமல் வாய் மூடி இருக்கிறார்.        

தமிழக மீனவர்களின் வாழ்வாதரமான மீன்பிடிப் படகுகள் இலங்கை அரசால் பிடித்துவைக்கப்பட்டன. அந்தப் படகுகளை நான்தான் பிடித்துவைக்கச் சொன்னேன் என்று தமிழ்நாட்டில் உலவிக் கொண்டு இருக்கும் ஒரு பிஜேபி யின் தலைவர்  வெளிப்படையாக தைரியமாகப் பேசினார். தங்களது வாழ்வாதரங்களை இழந்து கையறு நிலையில் நின்ற மீனவர்களுக்கு ஆறுதலாக பிரதமரோ, வெளியுறவுத்துறை அமைச்சரோ பேச வேண்டுமென்ற ஒரு அடிப்படை  நாகரிகம் கூட இந்த நாட்டை ஆளவந்தவர்களின் மனதில் படவில்லை.

குடியரசு தினத்தில் மிகவும் வேதனையாக நாம் குறிப்பிடவேண்டியது புதிய ஆட்சியின் ஆசீர்வாதம் பெற்ற ஒரு ஆளும்கட்சியின் உறுப்பினர் தேசத்தந்தை மகாத்மா காந்தியை சுட்டுக் கொன்ற  கோட்சேயை ஒரு தேசபக்தர் என்று அறிவித்தாரே அதை இந்த அரசு வேடிக்கை பார்த்ததே – அந்தப் பேச்சுக்கு அங்கீகாரம் அளித்ததே அப்படிப்பட்ட அரசின் பிரதி நிதிகளுக்கு காந்தி பெற்றுத்தந்த சுதந்திரத்தையும் அதன் பின்னால் ஏற்பட்ட குடியரசையும் அதற்கான நாளையும் கொடியேற்றிக் கொண்டாட அருகதை இருக்கிறதா என்ற கேள்வியைத்தான் நாம் கேட்கவிரும்புகிறோம். அடுத்த குடியரசு தினத்துக்குள் மகாத்மா காந்தியைக் கொன்ற  கோட்சேக்கு எத்தனை இடங்களில் சிலைகள் வைக்கப்படுமென்று அறிவித்துவிட்டு இந்தக் குடியரசு நாளைக் கொண்டாடும் துணிச்சல்  இந்த ஆட்சிக்கு இருக்கிறதா என்பதை கண்ணியத்துடன் சொல்லவேண்டுமென்று கேட்டுக் கொள்கிறோம்.

மொத்தத்தில் கடந்த குடியரசு தினக் கொண்டாட்டத்துக்கும் இந்த ஆண்டின் குடியரசு தினக் கொண்டாட்டத்துக்கும் இடையில் இப்படியெல்லாம் பல இழிவான நிகழ்வுகள் நாட்டில் அரங்கேறிக் கொண்டு இருக்கின்றன. வளர்ச்சி என்பதை முன்னெடுத்து வாக்குகளை வாங்கிக் குவித்து வென்ற பிறகு வாக்களித்த  மக்களை வஞ்சிக்கும் நிகழ்ச்சிகளும் பேச்சுக்களும்தான் புதிய அரசு மக்களுக்கு வழங்கிக் கொண்டு இருக்கும் குடியரசு தினத்தின் பரிசுகளாக இருக்கின்றன. எனவே இந்த நிலையில் இந்தியாவின் எதிர்காலம் இருட்டாகத் தென்படுகிறது. இவற்றுக்கு இடையே அடுத்த குடியரசு தினத்துக்குள்ளாவது மக்களுக்கு இந்திய அரசியல் சட்டம் தரும் மதசார்பற்ற ஜனநாயக   நம்பிக்கை வெளிச்சத்தை மீண்டும் நீடித்துத்  தரவேண்டியது அரசின் கடமை.
வெல்க இந்தியா! வெல்க ஜனநாயகம்! 

'எழுத்தாளர்' இப்ராஹீம் அன்சாரி M.Com.,

Friday, January 16, 2015

[ 5 ] தஞ்சையும் சஹாராப் பாலைவனம் ஆகுமா ? மீத்தேன் எரிவாயு திட்டம் குறித்து அதிரை பிரபலங்களின் ஆய்வின் நிறைவு பகுதி !

இது பாஸ்ட் புட் ( Fast Food ) காலம். அதே நேரம்,  இது புற்று நோயின் காலம் என்பதையும் சிறுநீரக் கோளாறுகளின் காலம் என்பதையும் மணித்துளிக்கொரு மாரடைப்பு மரணம் ஏற்படும் காலம் என்பதையும் மறுக்க இயலாது. மண்சட்டியில் உணவு சமைத்து உண்ட காலங்களில் மருத்துவ மனைகள் மாடமாளிகைகளாக உருவாகவில்லை; வளரவில்லை. குடிசைகளில் வைத்து மருத்துவம் பார்க்கப்பட்ட காலங்களில் இவ்வளவு பெயர் தெரியாத வியாதிகளும் உருவாகிவிடவில்லை. இதை ஒரு புறம் கவனத்தில் வைத்துக் கொள்ளுங்கள்.

நான் – ஸ்டிக் ( Non- Stick )  பாத்திரங்களின் காலத்தில்  நான்,  சிக் ( Sick )  என்று     கூறப்படுவதை மறுக்க இயலுமா? இயற்கைக்கு மாற்றாக வளர்ந்த இன்றைய அறிவியல் வளர்ச்சிகள் உருவத்தில் பெருத்து இருப்பவைதான் மறுக்கவில்லை. ஆனால்  அவற்றை நமது அறியாமையின் காரணமாக வளர்ச்சி என்று நினைத்து  மகிழ்ந்து கொண்டிருக்கிறோம். அது வளர்ச்சியல்ல, வீக்கம் என்பதை நாம் எப்போது உணர்வது? அறிவியல் வளர்ச்சிகளின் விகிதாச்சாரத்துக்கு அதிகமாகவே வியாதிகளும் வளர்கின்றன என்பதை  யார்தான் மறுக்க இயலும்?

காவிரிப்படுகையில் மீத்தேன் வாயுவை எடுத்து நாட்டின் தொழில் வளர்ச்சிக்குப் பயன்படுத்துவதை இயற்கை ஆர்வலர்கள் ஏன் எதிர்க்கிறார்கள்? நாடு முன்னேறுவதில் புதிய புதிய திட்டங்களைக் கொண்டுவருவதற்கு தடையாக நிற்கும் இவர்கள் பிற்போக்குவாதிகள் – நாடு முன்னேற்றம் காண்பதில் தடையாக இருப்பவர்கள் என்று நவீன விஞ்ஞானிகளும் அரசியல் வல்லுனர்களும் (வல்லூறுகள்?) ஆட்சியாளர்களும் குற்றம் சாட்டுகிறார்கள்.

சிரிக்கச்  சிரிக்க சொல்பவர்கள் சீரழிவுக்கு வித்திடுவார்கள்; அழ அழச் சொல்பவர்கள் அழகாக வாழச் சொல்வார்கள் என்பவை நமது கிராமத்து மண்ணுக்கு சொந்தமான வாசகங்கள். இன்று மீத்தேன் திட்டம் வந்து நம்மை ஈடேறப் போகிறது என்ற எண்ணத்தில் உலக வங்கி, உலகமயமாக்கல், அமெரிக்க ஏகாதிபத்தியம்  போன்ற சுயநலப் பொருளாதாரக் குவிப்பு அந்நிய நிறுவனங்களுக்குத் துணை போகத் துடிக்கும் நமது    அரசியல்வாதிகள், அன்னியரிடமிருந்து விடுதலை பெற்றுத் தந்த  மகாத்மா காந்தி சொன்ன வார்த்தைகளை ஏன் மறந்துவிட்டார்கள் என்பதுதான் தெரியவில்லை.
தேசத்தின் தந்தை, நமக்குத் தேவை   தற்சார்புப் பொருளாதாரமே என்று சொன்னார். நமது தேவைகளுக்கு நமது மூலவளங்களை மட்டுமே சார்ந்திருப்பது என்பதே இதன் பொருள். ஆனால் தாய் பிறன் கைபட சகிப்பவன்போல் நாயென வாழும் அரசியல் வித்தகர்களின் காட்டிக் கொடுக்கும் சேவைக்கு கட்டுக் கட்டாய் தரகுப் பணம் அந்நிய வங்கிகளில் அடைக்கலம் பெறுகிறது. இதில் மட்டும் கட்சிகளுக்கிடையே பாகுபாடுகள் இல்லை. பங்கு விகிதம்தான் பிரச்னை.

இன்றென்ன ?  நமக்கு மின்சாரம் வேண்டும் அவ்வளவுதானே! இந்த           மின்சாரத்தைப் பெறுவதற்கு நமது விவசாய நிலங்களைப் பலியிட்டுத்தான் ஆகவேண்டுமா? நம்மிடையே வேறு மாற்று வழிகள் இல்லையா? இதை ஏன் சிந்திக்க மறுக்கிறோம்? இப்படி சிந்திக்க மறுத்து சீரழிவுக்கு நாட்டின் கதவுகளைத் திறந்துவிடும் முன்னாள் மற்றும் இந்நாள் ஆட்சியாளர்களின் சிந்தனைக்கு அவர்களுக்கு நாட்டின் நலனில் இன்னமும் அக்கறை இருக்கிறது என்ற எண்ணத்தில் சிலவற்றை சமர்ப்பிக்கிறோம்.

ஆறுகள், ஏரிகள், கண்மாய்கள் போன்ற பாரம்பரிய நீர் நிலைகளைக் கொண்டு நாம் விவசாயம் செய்து கொண்டிருந்த காலத்தில்தான் ’  சோழவள நாடு சோறுடைத்து’ என்று உலகம் நமக்குப் புகழாரம் சூட்டிப்  புகழ்ந்தது. பசுமைப் புரட்சி என்று நமது நிலங்கள் ஒரு அறிமுகமில்லாத அயல்நாட்டு முறைகளுக்கு வாழ்க்கைப்பட்டபோதுதான் நிலத்தடி நீர் என்கிற நீர் ஆதாரத்துக்கு மாற வேண்டிய நிலைமைக்குத் தள்ளப்பட்டோம். இதன் விளைவாகவே நிலத்தின் கணக்கிட இயலாத ஆழத்தில்  இருந்து நீர் இறைக்க வேண்டி இருக்கிறது . நமது பாரம்பரிய நீர் ஆதாரங்கள் பராமரிக்கப்படாமல் மரணப் படுக்கையில்  போடப்படுவதால்தானே நீர் இறைக்க மின்சாரம் தேவைப் படுகிறது. பஸ் ஸ்டாண்ட் , கலெக்டர் ஆபீஸ் , நீதிமன்றங்கள், ஆகியவற்ரின் கட்டிடங்களைக்  கட்டுவதற்கு நீர் நிலைகளின் மீது கை வைக்கும் திட்டங்களுக்கு அரசே அடிக்கல் நாட்டும்  அவல நிலையை மாற்றுவோம்.

காவிரி, பாலாறு, முல்லைப் பெரியாறு, வைகை, போன்ற ஆறுகளின் மீது நமக்குள்ள உரிமைகளை நிலை நாட்டுவதும், மழை நீரை சேகரித்து நிலத்தடி நீரை உயரச் செய்வதும், குளங்களை நிரப்புவதும், கண்மாய்களையும் ஏரிகளையும் ஆற்று வாய்க்கால்களையும்  வருடந்தோறும் தூர்வாரி நீர் ஆதாரங்களை நிறைவுடன் செய்து கொள்வதும், நகரமயமாதல் காரணமாக ஆலைக் கழிவுநீர் ஆற்று நீருடன் கலந்து அசிங்கப் படுத்துவதை தடுப்பதும் நமது மாற்றுத் திட்டங்களின்  அடிப்படையும் முதன்மையானதுமாகும். இதனால் விவசாயத்துக்கான மின்சாரத் தேவை இல்லாமல் போகிறது.
தோழர் கோ.  திருநாவுக்கரசு என்பவர் அடிக்கடித் தொலைக் காட்சிகளில் தோன்றி இயற்கை வேளாண்மையின் மேன்மைகள் பற்றியும் மீத்தேன் திட்டத்துக்கு மாற்றுத் திட்டங்கள் பற்றியும் நமக்கு விளக்கி வருகிறார். இவர் மறைந்த இயற்கை விஞ்ஞானி திரு. நம்மாழ்வார் அவர்களின் பிரதான சீடர்கலீல் ஒருவர் ஆவார் . தோழர். கோ. திருநாவுக்கரசு அவர்கள் ஒரு மின் பொறியாளர்- அதற்கான பல பல்கலைக் கழகங்களின் பட்டங்களை வென்றவர். பல ஆண்டுகளாக, இயற்கை வேளாண்மை, நஞ்சற்ற உணவு, மரபு சாரா எரிபொருள், ஆகிய துறைகளின் அவசியத்தை வலியுறுத்தி தாளாண்மை உழவர் இயக்கத்தை தொடங்கி தஞ்சை, நாகை, திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்ட கிராமங்களில் நடந்து சென்றேனும் விழிப்புணர்வு பரப்புரை செய்து வருபவராவார்.

ஒரு பட்டம் பெற்ற - சமூக நலத்தை தனது இதயத்தில் தாங்கிய திரு. கோ. திருநாவுக்கரசு அவர்கள் மீத்தேன் திட்டத்துக்கு மாற்றாக பல கருத்துக்களை திட்டங்களாக எடுத்து வைத்து அவைகளை ஏன் மேற்கொள்ளக் கூடாது என்று வினா எழுப்புகிறார்.

முதலாவதாக வெண்மைப் புரட்சி மூலம் வீடுகளில் அல்லது பண்ணைகளில்  காளை மாடுகளை வளர்ப்பது   இயற்கையோடு இசைந்த ஒரு முறை. நமது மண்ணை மாசுபடுத்தாத காளை மாடுகளைக் கொண்டு செக்குகளை இயங்கச் செய்வதன் மூலமாக  மின்சாரத்தை   உற்பத்தி செய்து   சேமிக்க முடியுமென்று குறிப்பிடுகிறார். இதற்கான திட்ட அறிக்கையும்  சமர்ப்பிக்கப்பட்டு இருக்கிறது. கோயில்களில் பாலாபிஷேகம் செய்து கொண்டிருக்கும் அரசுத்துறை அமைச்சர்களும் அதிகாரிகளும்  அந்தத்திட்ட ஆவணத்தைப் பார்வை இட,  சற்று நேரம் ஒதுக்கினாலே போதும்.

அடுத்து,  அரசுக்கு சொந்தமான மற்றும் புறம்போக்கு நிலங்களில் மண்டிக் கிடக்கும் காட்டுக் கருவைகளை அழித்து ஒழித்து அந்த நிலங்களில் டீசல் தயாரிக்கப் பயன்படும் புங்கை மரம் புன்னை மரம் ஆகிய மரங்களை  வளர்த்து அவற்றின் காய்களின் உள்ளிருக்கும் விதைகளைப் பயன்படுத்தி எரிபொருள் தயாரித்து இயந்திரங்களுக்கும் வாகனங்களுக்கும் பயன்படுத்த இயலும். இதனால் பெருமளவு அந்நியச் செலாவணியும் மிச்சப்படும்.

தமிழகத்தில் உள்ள தரிசு நிலங்கள் மொத்தம் 2276848 ஹெக்டேர்களாகும். நாம் மேலே குறிப்பிட்ட புன்னை மற்றும் புங்கன் மரங்களை ஹெக்டேருக்கு ஆயிரம் மரம் வீதம் நட்டால் ஹெக்டேருக்கு சுமார் 2.5 டன் எண்ணெய் கிடைக்கும். மேலும் இதே தரிசு நிலங்களிலிருந்து தாவரங்கள் விளைவிக்கப் பட்டால் 5.7  மில்லியன் டன் தாவர எண்ணெயைப் பெற முடியும். இந்த உற்பத்தியைப் பெருக்க இன்னும் பல வழிமுறைகளும் உள்ளன. இந்த எண்ணெயை சுத்திகரித்து டீசலுக்கு மாற்றாகப் பயன்படுத்த இயலும். ஜெனரேட்டர்களில் செலுத்தி மின்சாரம் தயாரித்துக் கொள்ளவும் முடியும். இந்தியத் திருநாட்டின் மொத்த டீசல் தேவையே ஆண்டுக்கு 38 மில்லியன் டன்தான்.

அன்னியப்படை நமது நிலத்தை ஆக்கிரமித்து இருப்பது போல் நமது வட்டாரங்களின் நிலங்களை ஆக்கிரமித்துள்ள காட்டுக் கருவை,  நமது மண்ணுக்கும் சுற்றுச் சூழலுக்கும் எத்தகைய ஆபத்தான தாவரம் என்பது பற்றிய விழிப்புணர்வுக் கட்டுரை இந்த வலைதளத்தில் 'காட்டுக் கருவேலமரங்களை ஒழிப்போம் ! நம் மண்ணின் மாண்பை காப்போம்!!' பதியப்பட்டு விழிப்புணர்வூட்டபட்டு இருக்கிறது. கட்டுரையைப் படித்துவிட்டுப் பாராட்டி நான்கு வரிகள் எழுதினால் மட்டும் போதுமென்று நினைக்கிறார்களே தவிர, அவற்றை செயல் படுத்த வேண்டுமென்று செயல்படுவது ஒரு சதவிகிதம் கூட இல்லை என்பது வேதனை தரும் விஷயம்.  இந்தக் காட்டுக் கருவையை போர்க்கால நடவடிக்கை எடுத்து அழித்து அந்த நிலங்களில் எண்ணெய் தரும் தாவரங்களைப் பயிரிடுவது மாற்றத்தையும் ஏற்றத்தையும் தரும் செயலாகும்.

மேலும் தமிழகத்தில் வீசும் காற்று 127428மெகாவாட்  மின்சாரத்தைத் தரவல்லது. சீனா முதலிய நாடுகளில் வீசும் காற்றால் 60007 மெகாவாட் மின்சாரத்தை மட்டுமே உற்பத்தி செய்ய இயலும். காற்றாலை மின்சாரத்தை பயன்படுத்தும் வகைகளில் போதுமான மின் கடத்திகள் மற்றும் மின் மாற்றிகளை ( Transformers and Distribution Boards) அமைக்க ஆவன செய்ய வேண்டும்.

காற்று அதிகமாக வீசும் மே முதல் அக்டோபர் மாதங்களில் உபரியாக காற்றாலை மின்சாரத்தை உற்பத்தி செய்து ( Pumped Storage Facility ) என்ற அமைப்புகள் மூலம் நீரை சேமிக்கலாம். பின்னர் தேவைப்படும்போதெல்லாம்  ( Hydro electricity ) மூலம் நீரைத் திறந்து மின்சாரம் தயாரிக்கலாம்.
அடுத்து நாம் குறிப்பிட வேண்டியதில் முக்கியமானது மனித மற்றும் கால்நடைக் கழிவுகளின் மேலாண்மையாகும். ஒவ்வொரு கிராமம் முதல் நகரங்கள் வரை அன்றாடம் சேரும் மனித மற்றும் கால்நடைகளின் கழிவுகளில் இருந்தும் மின்சாரம் மற்றும் எரிசக்தியை தயாரிக்க இயலும். ஒரு கிராமத்துக்குத் தேவையான மின்சாரத்தை அந்த கிராமத்தில் சேரும் இத்தகைய கழிவுகளைக் கொண்டே தயாரித்துக் கொள்ளும் அமைப்புகளையும் அதேபோல் மாநகராட்சி முதல் நகராட்சி அளவுள்ள நகரங்களுக்கும் கூட அதே அமைப்பில் தேவையான எரி சக்தி மற்றும் மின்சாரத்தைத் தயாரித்துக் கொள்ளும் அமைப்பை நிறுவிடப் பொறியாளர்களிடம் செயல்திட்டங்கள் உள்ளன. அவற்றை அரசுப் பயன்படுத்திக் கொள்ள   முயலவேண்டும். இத்தகைய திட்டங்களின் மேலாண்மை மற்றும் அமைப்புகளின் மூலம் உள்ளூர்த் தேவைகளை நிறைவேற்ற வழி ஏற்படுவதுடன் வாகனங்களையும் கூட இயக்க இயலுமென்று வல்லுனர்கள் கூறுகிறார்கள்.

இப்படிப் பட்ட மனித மற்றும் கால்நடைக் கழிவுகளின் மூலமாக மின்சாரம் மற்றும் எரி சக்தி யூனிட் இப்போது எங்காவது அமைக்கப்பட்டு இயங்கி வருகிறதா என்ற கேள்வி உடனே நமது மனதில் எழும். ஆம்! தஞ்சை பெரியார் மணியம்மை பொறியியல் பல்கலைக் கழகம், சாஸ்திரா பல்கலைக் கழகம் ஆகிய பல்கலைக் கழகங்களின் மின்சாரத் தேவைகள் இந்த வகையில்தான் பூர்த்தியாகின்றன.

அடிப்படையில் திராவிடக் கழகத்தால் நடத்தப்படும் பெரியார் பலகலைக் கழகத்துக்கும்  காஞ்சி சங்கர மடத்தால் நடத்தப்படும் சாஸ்திரா பல்கலைக் கழகத்துக்கும் பல கொள்கை மாறுபாடுகள் இருந்தாலும் இந்த மாற்று மின்சார அமைப்பு முறைகளை கையாள்வதில் இருவரும் ஒத்துப் போவது நமக்கு நல்லதொரு உதாரணமாகும்.

அதே அடிப்படையில் தனி நபர் வீடுகளின் உணவுக் கழிவுகள் மற்றும் கழிப்பறை மற்றும் கால்நடைக் கழிவுகளைத் திரட்டி அவரவர் வீடுகளுக்கு வேண்டிய மின்சாரத்தை அவரவர் தயாரித்துக் கொள்ள இயலும்.
புது டில்லி மாநகராட்சி நிர்வாகம், சாக்கடைக் கழிவுகளின் சுத்திகரிப்பு நிலையத்தின் கீழே படியும் அழுக்குகளின் அடுக்குகளை உயிரி செரிகலன்களில் இட்டு கிடைக்கும் எரிசக்தியை தூய்மை செய்து மீத்தேன் சக்தியாக அதை உருவாக்கி தலைநகரில் ஓடும் அனைத்து பேருந்துகளையும் இயக்கம் முக்கிய சக்தியாக மாற்றத் திட்டமிட்டு அதற்கானப் பணிகளைத் துவங்கிவிட்டார்கள் என்கிற செய்தி நமக்கு ஊக்கம் தருவதாக இருக்கிறது.
 இத்தகைய முறைகள் மூலமும் இதுபற்றிய தொடர்ந்த ஆராய்ச்சிகள் மூலமும் ஒரு புதிய மரபு சாராத சக்திக் கருவூலத்தை நாம் கண்டு வளர்க்க இயலும் என்று தோழர். கோ. திருநாவுக்கரசு அவர்கள் கூறுகிறார்கள் .

இவைமட்டுமல்ல. இன்னும் சொல்லலாம்... 
கரும்புச் சாற்றைப் பிழிந்த பின் எஞ்சும் சக்கையைக் கொண்டு கொதிகலன்களை சூடேற்றிக் கிடைக்கும் நீராவியைக் கொண்டு ஏறக் குறைய 12 to 18 மெகாவாட் அளவிலான மின்ஆக்கிகளை ( HD Generators) இயக்குகிறார்கள். சர்க்கரை ஆலைகளின் மொலாசஸ் ( Molasses) என்ற நுரைத்த  கழிவு இன்று சுற்றுச் சூழலுக்கு கேடுவிளைவிக்கிறது. அத்துடன் அவற்றிலிருந்து குடி கெடுக்கும் எரி சாராயத்தையும் தயாரிக்கிறார்கள். ஆனால் உருப்படியான காரியமொன்று இதனைக் கொண்டு செய்ய இயலுமென்றால் மொலாசசைப் பயன்படுத்தி எத்தனால் என்கிற எரிபொருளை தயாரிக்க இயலும். இந்த முறை இன்றும் உலகில் பிரேசில் நாட்டில் உள்ளது. அந்த நாட்டின் அனைத்து வாகனங்களும் கரும்புச் சக்கையின் எத்தனால் சக்தியால்தான் இயக்கப்படுகின்றன. எத்தர்கள் நிறைந்துள்ள இந்த நாட்டிலும் இந்த எத்தனால் எரிவாயும் சாத்தியமே.

பனை மரம் போல வளர்ந்து இருக்கிறாய் பல எதுவுமில்லை என்று வீண் பொழுது கழிப்பவர்களை சொல்வதுண்டு. ஆனால் உண்மையில் பனைமரம் பயனற்றதா? இல்லை. பனைமரத்தின் பயனைப் பயன் படுத்தாத நாம்தான் பயனற்றவர்கள்.

ஒரு பனைமரம்  ஆண்டுக்கு சுமார் 120 கிலோ பனங்கல்கண்டைத் தரணிக்குத் தரவல்லது. தமிழகத்தின் தென் மாவட்டங்களில் பறந்து விரிந்து கேட்க நாதியற்றுக் கிடக்கும் பனைமரங்களைப் பராமரித்தால் அவை தமிழகத்தின் சர்க்கரைத் தேவைகளைப் பூர்த்தி செய்யும்.  பனை வெல்லம்,  இன்று பரவலாகக் காணப்படும் சர்க்கரை வியாதியைத் தூண்டாது என்பது மட்டுமல்லாமல் பல்வேறு தாதுச் சத்துக்களையும் தன்னகத்தே கொண்டதாகும். இந்தத் தொழிலின்  வளர்ச்சி,  ஒரு குறிப்பிட்ட அடித்தட்டு சமுதாயத்தின் முன்னேற்றத்துக்குக் காரணமாக அமைவதுமாகும். இன்று நாம் பயன்படுத்தும் வெள்ளைச் சீனி வெள்ளைக்காரன் தந்த விஷமாகும். நமது உடலில் இருக்கும் சத்துக்களை உறிஞ்சும் தன்மை உடையது இது என்பதுதான் மருத்துவ உண்மையாகும். இந்த வெள்ளைச்சீனியை நமது வீடுகளில் இருந்து விடை கொடுத்து அனுப்பிவிட்டு அந்த இடத்தை பனங்கருப்பட்டிக்கும் பனஞ்சீனிக்கும்   தருவது பலவகைகளில் பயனளிக்கும்.
அப்படி என்றால் விளையும் கரும்பை என்ன செய்வது?

கரும்பை விளைவித்து அவற்றை சர்க்கரை ஆலைகளுக்கு அனுப்பி அவை பிழியும் கரும்புச் சாற்றை வெள்ளைச் சீனி தயாரிக்கப் பயன்படுத்தாமல் எத்தனால் தயாரிக்கப் பயன்படுத்தலாம். இதனால் அந்நிய செலவாணியை அளவின்றி விழுங்கும் பெட்ரோல்,  டீசல் போன்றவற்றின் பயனை பெரிதும் குறைக்கலாம்.  நமது மண்ணை மாசு படுத்தும் மீத்தேன் என்ற பிசாசைத் தேடிப்  போகாமல் இருக்கலாம். சுற்றுச் சூழலில் கார்பன்- டை- ஆக்சைடு, மாசுத்துகள்கள், புகை, எரிசாராய வாடை ஆகியன குறையும். புவி வெப்பமாதல் தடுக்கப்படும் . சர்க்கரை ஆலைகளைச் சுற்றி வசிப்போர் சுவாசிக்கும் காற்று சுத்தப்படும்.  

மீத்தேன் வாயுவை காவிரிப் படுகையிலிருந்து எடுக்கும் திட்டத்தின் ஆபத்தான விளைவுகளை கடந்த பல வாரங்களாக விவரித்தோம். தீ என்று தெரிந்தும் – இந்தத் திட்டம்   நம்மை வாழ்விக்க வந்தத் திட்டமென்று இதை நடைமுறைப் படுத்தி நாட்டை நாசப்படுகுழியில் தள்ள - அறிவியலார் சொல்லும் அனைத்து ஆலோசனைகளையும்  புறந்தள்ளிவிட்டு  - அரசியலார் ஆர்வமுடன் வரும் நோக்கமென்ன? இன்றளவும் இந்தத் திட்டத்துக்காக குஜராத் நிறுவனத்துடன் போடப்பட்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம் இரத்து செய்யப்படவில்லை என்றால் தமிழ் இனத்தையே அழிக்கும் நோக்கில் இந்த அரசுகள் செயல்பட்டு வருகின்றன என்றுதான் நாம் குற்றம் சாட்ட முடியும். இதையே தோழர் மணியரசன் அவர்களும் கருத்தரங்கில் குறிப்பிட்டார். ஒரு புறம் தமிழக மீனவர்கள் தாங்கள் பாரம்பரியமாக செய்துவரும் தொழிலைச் செய்ய இயலவில்லை; மறுபுறம் விவசாய நிலங்கள் பாலைவனமாக்க திட்டங்கள் தீட்டப் படுகின்றன; இன்னொரு புறம் குடிநீர் ஆதாரங்கள் அந்நிய நிறுவனங்களுக்குத் தாரை வார்க்கப் படுகின்றன .   இவ்வளவுக்குப் பிறகும்  மத்திய அமைச்சர் அண்மையில் சொல்லி இருக்கும் அந்நிய நாடுகளுக்கு அடிவருடும் கருத்துக்களையும் தனிச் செய்தியாக காண்க.

கண்ணிரண்டும் விற்று சித்திரம் வாங்கும் அரசுகளின் செயல்களை என்றும் எதிர்ப்போம் நாம்!  வாழ்வுரிமையைப் பறிக்கும் வஞ்சகத் திட்டங்களை வாழ்வு உள்ளவரை எதிர்ப்போம் நாம்! கவின் மிகு காவிரிப் படுகையில் கசடுமனம் படைத்தோரைக் கைவைக்க விடோம் நாம்!

நன்றி! வஸ்ஸலாம்.

கலந்தாய்வு: பேராசிரியர் அப்துல் காதர் M.A. M. Phill
எழுத்தாக்கம்: இப்ராஹீம் அன்சாரி M.Com,

குறிப்பு 2 : பேராசிரியர் அப்துல் காதர் அவர்களின் ஆலோசனைப்படி இந்தத் தொடர் பதிவு அதிரை நியூஸ் வலைதளத்தில் வெளியிடப்படுகிறது. பிரச்சனையின் முக்கியத்துவம் கருதி பிற சகோதர வலைதளங்களும் வெளியிடுவதை வரவேற்கிறோம். 

பகுதி I வாசிக்க:
'[ 1 ] தஞ்சையும் சஹாராப் பாலைவனம் ஆகுமா ? மீத்தேன் எரிவாயு திட்டம் குறித்து அதிரையின் பிரபலங்கள் எழுதும் ஆய்வுத்தொடர் !
பகுதி II வாசிக்க:
'[ 2 ] தஞ்சையும் சஹாராப் பாலைவனம் ஆகுமா ? மீத்தேன் எரிவாயு திட்டம் குறித்து அதிரையின் பிரபலங்கள் எழுதும் ஆய்வுத்தொடர் !
பகுதி III வாசிக்க:
'[ 3 ] தஞ்சையும் சஹாராப் பாலைவனம் ஆகுமா ? மீத்தேன் எரிவாயு திட்டம் குறித்து அதிரையின் பிரபலங்கள் எழுதும் ஆய்வுத்தொடர் !
பகுதி IV வாசிக்க:
'[ 4 ] தஞ்சையும் சஹாராப் பாலைவனம் ஆகுமா ? மீத்தேன் எரிவாயு திட்டம் குறித்து அதிரையின் பிரபலங்கள் எழுதும் ஆய்வுத்தொடர் !

Friday, January 9, 2015

அதிரையில் அதிர்ச்சியை ஏற்படுத்திய ஒன்னு !?

நமதூரில் மீன் மார்க்கெட்டுக்கு செல்லாதவர்களே இருக்க மாட்டார்கள் காரணம் அங்கே ப்ரஷ்ஸாக கிடைக்கும் மீன்கள், இறால், நண்டு, கணவாய் போன்ற கடல் சார்ந்த உணவுப்பொருட்கள். இவைகள் உணவுப்பொருட்களாக மட்டும் நமக்கு பயன் தரவில்லை மாறாக ஒவ்வொரு மீனும் ஒவ்வொரு மருத்துவ குணமுடையவை உதாரணமாக பிரசவம் ஆன தாய்மார்களுக்கு கூடுதல் பால் சுரக்க கத்தாழை மீனை வழக்கமாகக் கொடுப்பதை நாம் அறிந்திருப்போம்.

வாரத்தில் இரண்டு மூன்று நாட்கள் மீன் ஆணம் சோத்தை சாப்பிடாத அதிரையர்கள் உண்டா ? என கேட்குமளவுக்கு மீனின் மீது பிரியம் கொண்டிருப்பார்கள். சும்மான்னாலும் தினமும் மீன் மார்கெட்டுக்கு சென்று வருவோர்களும் உண்டு. வித வித பெயரைக் கொண்ட ஒவ்வொரு மீனும் ஒவ்வொரு ருசியைக் கொண்டது. இதனாலே எனக்கு மீன் மார்க்கெட் சென்று மீன் வாங்கி வருவது பிரியம் என்றாலும் வாரத்தில் இரண்டு நாட்கள் மட்டும் செல்வதை வாடிக்கையாக வைத்துள்ளேன்.

இன்று காலை மீன் மார்கெட்டுக்கு சென்ற எனக்கு மீன் வரத்து சற்று அதிகமாக இருந்தததைக் கண்டு மகிழ்ச்சியாக இருந்தது. காரணம் எல்லா வகை மீன்களும் மார்க்கெட்டில் ஆங்காங்கே கொட்டி குமித்து வைத்து இருந்தனர்.

ஆஹா இன்னிக்கி விலை சல்லிசா கிடைக்கும் பாருங்கன்னு...
அருகில் நின்ற ஜபருல்லாக்காகிட்டே சொன்னேன். நீ ஒரு ஆளுப்பா, பாடு குறைவா இருந்தாலும் சரி...இல்லே கூடுதலா இருந்தாலும் சரி.... ‘விலையை மட்டும் குறைக்க மாட்டானுங்க இவனுகன்னு என் காதில் முணுமுணுக்க...

சரி நமக்கு பிடிச்ச மீன்களை தேர்வு செய்து என்னப்பா விலை ? ன்னு கேட்டா ஜபருல்லாக்கா கூறியது போல நமக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது வியாபாரி கூறிய விலை !

விலை உயரக் காரணமென்ன ?
தன் உயிரை பணயம் வைத்து இராப் பகலா கடலின் ஆழத்திற்கு சென்று மீன்களை பிடித்து கரைக்கு கொண்டுவந்து சேர்க்கும் வரை கஷ்டமாக இருந்தாலும், இந்த மீன்கள் இரண்டு மூன்று கைகள் மாறி சந்தைக்கு விற்பனைக்கு வருவதை இறுதியில் அதிக விலை கொடுத்து சுவைப்பது நாமாகவே உள்ளோம்.

மீன் வியாபாரிகளில் சிலரது அன்றாட வாழ்வாதாரங்கள் மிகவும் ஏழ்மையுடன் அவர்களின் பொழுதுகள் பெரும் சிரமத்துடனே ஒவ்வொரு நாளும் கழிகின்றன என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். அவர்களுடையே தீய பழக்கங்களாகிய ‘மது', ‘வட்டி’ ஆகியவற்றை நிறுத்திவிட்டால் அதிகரித்துவிட்ட மீன் விலையை மட்டுமல்ல அவர்களின் ஏழ்மை நிலையையும் தவிர்க்கலாம் என்பது பலரின் கருத்தாக இருக்கிறது.

சேக்கனா நிஜாம்

Friday, January 2, 2015

ஏன் இந்த மாற்றம் !? பழசை நாம் வெறுக்கின்றோமா !?

நேரத்தை அறிந்து கொள்வதற்காக நம் முன்னோர்கள பலர் இயற்கையையும், சில சாதனங்களையும் தங்களின் வாழ்வின் நடைமுறையில் பயன்படுத்தி வந்தனர். குறிப்பாக சூரியன் சந்திரன் போன்றவற்றின் சுழற்சி முறையிலிருந்து அன்றாட கால அளவை கணக்கிட்டும் வந்தனர். இப்படி படிப்படியாக நாகரிகம் வளர வளர புதுப்புது சாதனங்கள் பலவற்றை கண்டுபிடித்து அவற்றை நம் வாழ்வில் பயன்படுத்த தவறியதில்லை. அவ்வாறு கண்டுபிடிக்கப்பட்ட கருவிகளில் ஒன்றுதான் மின்சார சங்கு.

இவை ஆங்கிலேயர்களின் ஆட்சி காலத்தின் போது, ஆங்கிலேய அதிகாரிகளும், மக்களும் நேரத்தை தெரிந்து கொள்ள, ஊருக்கு பொதுவான இடத்தில் மின்சார சங்கு அமைக்கப்பட்டு, தினமும் அதிகாலை 5 மணி, காலை 8 மணி, மதியம் 1 மணி,  மாலை, 6 மணி மற்றும் இரவு 9 மணி போன்ற நேரங்களில் சங்கு ஒலிக்கப்படுகிறது. ஒரு நிமிட கால அளவைக் கணக்கில் கொண்டு ஒலிக்கப்படும் ஓசை ஏறக்குறைய 10 கிலோ மீட்டர் சுற்று வட்டார பகுதிகளில் வசிக்கக்கூடிய பொதுமக்களின் காதில் விழக்கூடியது.


முந்தைய காலக்கட்டத்தில் மின்சார சங்கின் மூலம் ஒலிப்பரப்படும் ஓசையினால் உறங்கிக்கொண்டு இருப்பவர்களை தட்டி எழுப்பவும், அன்றாட பணிகளில் மூழ்கி கிடப்போருக்கு நினைவூட்டவும் பயன்பட்டன. ஆனால் இன்றைய பொழுதில் அறிவியலின் அபரிதமான வளர்ச்சியால் இன்று நேரத்தை அறிந்து கொள்வது நமக்கு கடினமான வேலையில்லை என்றாலும் விஞ்ஞானத்தின் அபரித வளர்ச்சியால் உருவாக்கப்பட்ட கையடக்க கடிகாரங்கள், அலைபேசிகள், ஐபோன் போன்றவற்றால் கால நேரத்தை நாம் அறிந்துகொள்ள முடியும்.

பழைமையை மறக்காமல், மின்சார செலவினங்களையும் பொருட்படுத்தாமல் மின்சார சங்கின் மூலம் அன்றாடம் ஒலி எழுப்பும் பணிக்கென்று ஊழியர் ஒருவரை நியமனம் செய்து உள்ளாட்சி அமைப்புகள் சிறப்பாக தங்களின் சேவையை செய்துவந்தாலும், இவற்றின் மூலம் பெறப்படும் ஓசை நம்மின் காதைக்கிழிப்பது போல் உணர்வதும், பச்சிளம் குழந்தைகள் வீரிட்டு அழும் குரலை ஆங்காங்கே நாம் கேட்பதும் உண்டு. நோயாளிகள் அதிர்ச்சியடைந்து மன உளைச்சலுக்கு ஆளாகிவிடுவதும், இவற்றை வெறுத்து ஒதுக்குமளவுக்கு வணிகர்களிடத்தில் நிறைய மாற்றங்கள் காணப்படுவதும் உண்டு. இதனைச் சுற்றியுள்ள வழிபாட்டுத்தளங்களுக்கும் இடையுறாக இருக்கின்றன என்பதையும் நம்மால் மறுக்க முடியவில்லை.

ஏன் இந்த மாற்றம் !? பழசை நாம் வெறுக்கின்றோமா !?
இது ஒரு மீள்பதிவு
சேக்கனா நிஜாம்

Friday, December 26, 2014

கவனம்: தங்க நகைச்சேமிப்பு திட்டம் !

முதலீடுகள் பலவிதம் அதில் தங்கத்தில் முதலீடு செய்வது என்பது ஒரு விதம் உடனடியாக பணமாக மாறக்கூடிய அதன் தன்மையினால் தங்கத்தை லிக்விட் அசெட் ( Liquid Asset ) என்று அழைக்கக் கூடியவர்களும் சமூகத்தில் இருக்கின்றார்கள்.

சரி விசயத்துக்கு வருவோம்...
தங்க முதலீட்டில் பல பெயர்களில் திட்டங்கள் வந்தபிறகும், பெண்களுக்கு நகைச் சீட்டின் மீது இருக்கும் மோகம் கொஞ்சமும் குறைந்தபாடில்லை. யாரும் எளிதாகப் புரிந்துகொண்டு ஈஸியாக பணத்தைக் கட்ட முடியும் என்பதால் இதுபோன்ற தங்க நகைச் சீட்டுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கின்றனர்.

தங்க நகைச் சீட்டு கட்டாத ஒரு பெண்ணை தமிழ்நாட்டில் தேடிக் கண்டுபிடிப்பது என்பது கடினமான வேலை. மாதச் சம்பளம் 5,000 ரூபாயோ, 50,000 ரூபாயோ அக்கம்பக்கத்தில் இருக்கும் நகைக் கடையில் நகைச் சீட்டு போட்டு தங்கம் வாங்க நினைக்காத பெண்களே இல்லை.

நகைகள் வியாபாரம் செய்யும் நிறுவனங்களும் தன் பங்கிற்கு தங்களிடம் வருகை புரியும் வாடிக்கையாளர்கள் தங்களிடம் நகைகள் வாங்குகின்றார்களோ இல்லையோ !? முதலில் அவர்கள் வைக்கும் வேண்டுகோள் இதுபோன்ற தங்க நகைச் சீட்டுகளில் இணைந்து மாத தவணையாக பணத்தை எங்களிடம் செலுத்துங்கள் என்று மூளைச்சலவை செய்து, அவர்களின் கையில் விண்ணப்பங்களை திணிப்பதை வாடிக்கையாக வைத்துள்ளனர்.

தங்க நகைச் சீட்டு நடத்தும் நிறுவனங்கள் வைக்கும் நிபந்தனைகள் :
1. உங்களது மாத தவணையை 20 / 15 மாதங்கள் ஒவ்வொரு அங்கத்தினரும் சேலுத்த வேண்டும். பணம் செலுத்தும் போது அதற்குறிய ரசீதை பெற்றுக்கொள்ளவும்.

2. பிரதி ஆங்கில மாதம் 10-ம் தேதிக்குள் மாதத்தவணை தொகையை செலுத்தி கண்டிப்பாக பதிவேட்டை கொண்டு வந்து பதிவு செய்துகொள்ள வேண்டும்.

3. பிரதி ஆங்கில மாதம் 15-ம் தேதி மாலை 4.00 மணியளவில் எங்களது கடையில் தங்க நகை சிறுசேமிப்பு அதிர்ஷ்டசாலி தேர்வு நடைபெறும். பரிசு விழுந்தவர்கள் பரிசு தொகைக்கு உண்டான நகைகளை பெற்றுக்கொள்ளலாம். மேற்கொண்டு தவணைகள் கட்ட வேண்டிய தேவையில்லை.

4. மாதத்தவணை தவறாது 20 / 15 மாதங்கள் தொடர்ந்து செலுத்திவருபவர்கள், 20 / 15 மாதங்கள் முடிந்ததும் போனஸ் தொகையை சேர்த்து அன்றைய விலைக்கேற்ப தங்க நகைகள் பெற்றுக்கொள்ளவும்.

5. பரிசு விழாதவர்களுக்கு மட்டும் போனஸ் தொகை உண்டு, விற்பனை வரி கிடையாது. வரியை கம்பெனியே ஏற்றுக்கொள்ளும்.

6. மாதத்தவணை தவறி செலுத்துபவர்கள் தங்களின் போனஸ் தொகயை இழக்க நேரிடும்.

7. மாதத்தவணை தொடர்ந்து கட்டமுடியாமல் நடுவில் நிறுத்தி விடும் அங்கத்தினர்கள் 20 /15 மாதத்தவணை முடிந்த பின்பு அன்பளிப்பு சாமான் கிரயத்தை செலுத்திவிட்டு கட்டியுள்ள தொகைக்கு நகைகளை பெற்றுக்கொள்ளலாம்.

8. எக்காரணத்தை முன்னிட்டும் ரொக்கம் திருப்பி தரப்படமாட்டாது.

9. மாதத்தவணை தொடர்ந்து செலுத்தி வரும் அங்கத்தினர்களால் 20 / 15 மாதம் முடியும் முன்பு நகைகள் வாங்க விரும்பினால் செலுத்திய தொகை போக பாக்கி மாதங்களின் தவணை தொகையையும் அன்பளிப்பு சாமான் கிரயம் ரூ 500/- ஐயும் செலுத்திவிட்டு தங்க நகைகளை பெற்றுக் கொள்ளலாம்.

10. முத்திரை பவுன், தங்க கட்டிகள் மேற்படி சேமிப்பிற்கு தரப்பட மாட்டாது.

11. ஒவ்வொரு மாதமும் செலுத்தும் தவணைத் தொகை ரசீதுகளையும் இந்த பதிவு புத்தகத்தையும் தங்க நகைகள் வாங்கும் வரையில் பத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டும்.

12. இந்த பதிவு புத்தகத்தை தவறவிட்டு விட்டால் அதனால் ஏற்படும் நஷ்டத்திற்கு நிர்வாகம் பொறுப்பல்ல.

13. பிரதி மாதம் செலுத்தும் தொகைக்கு வெளியூர் செக்குகள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.

என இது போன்ற நிபந்தனைகளுடன்...

மாதம் 500 ரூபாய் வீதம் பணம் கட்டினால், பதினைந்தாவது மாதத்தில் நாம் 7,500  ரூபாய் கட்டியிருப்போம். இதற்கு போனஸாக ஐநூறு ரூபாய் சேர்த்து 8,000 ரூபாய்க்கு நகை வாங்கிக் கொள்ளலாம். கூடுதலாக 200 ரூபாய் மதிப்புள்ள கவர்ச்சிகரமான கிஃப்ட் பொருள் அல்லது அந்த தொகைக்கும் சேர்த்து நகையாக வாங்கிக் கொள்ளலாம். இது போன்ற திட்டத்தை தமிழகம் முழுக்க இருக்கும் சிறிய, பெரிய நகைக் கடைகள் நடத்தி வருகின்றன. இதன் மூலம் நம்மிடம் ஒவ்வொரு மாதமும் வசூல் செய்யப்படும் தொகையை பிற தொழில்களில் அவர்களால் முதலீடு செய்யபட்டு கொழுத்த இலாபம் சம்பாதிக்கப்படுகின்றனர் என்பது பலரின் கருத்துகளாக இருக்கின்றன.

சகோதரிகள் கவனத்தில் கொள்ள வேண்டியவை:
1. இது போன்ற தங்க நகைச் சேமிப்புத் திட்டத்தில் தாங்கள் இணைவதை தவிர்த்துக் கொள்ளுங்கள்.

2. "அதிக லாபம்" என ஆசை காட்டும் இடங்களில் எல்லாம் முதலீடு செய்யாதீர்கள்.

3. "உடனே முதலீடு செய்யுங்கள்...இன்றே கடைசி !" என்றெல்லாம் உங்களை அவசரப்படுத்தும் நிறுவனங்களின் அழைப்புகளை அலட்சியப்படுத்துங்கள்.

4. மற்றவர்கள் இணைகிறார்கள் என கண்மூடித்தனமாக நீங்களும் போய் மாட்டிக்கொள்ள வேண்டாம்.

5. கவர்ச்சிகரமான கிஃப்ட் பொருட்கள் கிடைக்கும் என்பதற்காகவெல்லாம் இதில் இணையாதிர்கள்.

6. பிரபல நடிகர், நடிகைகளைக் கொண்டு விளம்பரப்படுத்தும் இது போன்ற கவர்ச்சிகரமான திட்டங்களில் இணைவதை தவிர்த்து கொள்ளுங்கள்.

7. எங்கள் நிறுவனங்கள் சார்பாக திருமண மண்டபங்களில் நடைபெறும் "ஒரு செமினாருக்கு வாங்க", "சாப்பாடு ஃப்ரீ..." டிபன் ஃப்ரீ” என்றெல்லாம் அழைப்பு வந்தால் போகாதீர்கள்.

சேக்கனா நிஜாம்
இது ஒரு மீள்பதிவு
குறிப்பு : கடந்த காலங்களில் இது போன்ற நிறுவனங்களால் பணம் வசூல் செய்வதற்காக நியமிக்கப்படும் வெளிமாநில நபர்களால் எற்பட்ட பிரச்சனைகளை கவனத்தில் கொண்டு சமூகம் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்பதற்காகவே பதியப்பட்டுள்ளது.

Friday, December 19, 2014

[ 4 ] தஞ்சையும் சஹாராப் பாலைவனம் ஆகுமா ? மீத்தேன் எரிவாயு திட்டம் குறித்து அதிரை பிரபலங்களின் ஆய்வு தொடர்கிறது..!

கடந்த வாரம் நாம் எழுதிய  மீத்தேன் வாயுத் திட்டம் நடைமுறைக்கு வந்தால் ஏற்படும் பேரழிவுகளின் பட்டியலைப் படித்தவர்களுக்கு  அந்தத் திட்டம் ஒரு புதையல் அல்ல; புதைகுழி என்ற எண்ணம் ஏற்பட்டு இருக்கலாம்.
அழிவுப் பட்டியலில் இன்னும் இருக்கின்றன ஏராளம். அந்த ஏராளத்தில் அழிவுகளும் அமைதியின்மையும்தான் தாராளம் என்று குறிப்பிட்டு இருந்தோம். இதோ அவைகளின் மிச்சமும் சொச்சமும்.

நிலச் சரிவுகளும் நிலதடியுள் நிகழும் நிலக்கரி எரிப்புகளும்:-
நிலத்தடி நீரைத்  தொடர்ந்து இறைப்பதால் நிலத்தடி நீர் மட்டம் அளவற்ற அளவில் கீழிறங்குகிறது என்று பார்த்தோம். அப்படி நீர் கீழிறங்கி காலி செய்யும் இடத்தை,  நிலத்தின் மேல் கட்டப்பட்ட கட்டிடங்கள் ஆக்கிரமிக்கின்றன என்பதை நம்மால் கற்பனை கூட செய்து பார்க்க இயலவில்லை. காவிரிப் படுகை என்பது காட்டுக் கருவை வளர்ந்துள்ள கட்டாந்தரையல்ல.  தமிழகத்தின் கலாச்சார கேந்திரம். தஞ்சையின் பெரிய கோயில் முதல் கும்பகோணத்தின் கோணங்கள் தோறும் தோன்றும் கோபுரங்கள் வரை நாச்சியார் கோயில் என்றும் உப்பிலியப்பன் கோயிலென்றும் ஸ்ரீரங்கம் ராஜகோபுரமென்றும் வானுயர்ந்த கோபுரங்களைக் கொண்ட கோயில்களும் நாகூர் தர்கா, வேளாங்கண்ணி மாதா கோயில் உட்பட பலவேறு சமயங்களின் அடையாளங்களும் கலாச்சார சின்னங்களும் நீண்டகாலமாக நின்று நிலவும் நிலம். இவையாவும் புதையுண்டு போகிற வாய்ப்புகளை சுட்டிக் காட்டி அறிவியலார் அறிவுறுத்துகிறார்கள்.

அதோடு கூடவே, நிலத்தின்  அடியில் படுகையாகப் படுத்திருப்பது வாழைத்தண்டு அல்ல; நிலக்கரி. இந்த நிலக்கரி நிலத்தின் அடியிலேயே பற்றி எரியும் ஆபத்தும் இருக்கிறது.

தொழிற்சாலைகளுக்கும் வேலைவாய்ப்புகளுக்கும்  ஏற்படும் பாதிப்புகள் :-
புதிதாக ஆயிரக் கணக்கான மீத்தேன் கிணறுகள் தோண்டப்படுவதால் , அவ்வாறு தோண்டப்படும் இடங்களில் ஏற்கனவே இயங்கி வரும் தொழிற்சாலைகளும் அவற்றில் பணிபுரியும் ஏராளமான தொழிலாளர்களும் பெரும் பாதிப்புக்குள்ளாவார்கள். குறுகியகாலப் பேராசைக்காக பல்லாண்டுகளாக இயங்கிவரும் தொழிற்சாலைகளை மூடவேண்டியும் அதனால் பலர் வேலை இழக்கும் சூழல்களும் ஏற்படும். குறிப்பிட்ட வட்டாரத்தின் வளர்ச்சி,  தளர்ச்சியாகி பொருளாதாரப் பாதிப்புகளை ஏற்படுத்தும். வேலை இழந்து நிற்கும் குடும்பங்கள் மீத்தேன் வாயுவைக் குடித்து பசியைத் தீர்த்துக் கொள்ள இயலாது; வெளியேறும் நீரும், தாகம் தீர்க்காது.

கனரக வாகனங்களின் நடமாட்டத்தால் ஏற்படும் விளைவுகள் :-
ஆழ்துளைக் கிணறுகளிலிருந்து வெளியேற்றப்படும் எதிலும் சேராத சேறு, சக்தி இல்லாத  சகதி மற்றும் பிற கழிவுகளை அப்புறப்படுத்த கனரக வாகனங்கள் பல அந்தப் பகுதிகளில் அடிக்கடிப் பயணிக்கும். இவற்றைத் தவிர கட்டுமான இயந்திரங்களும் துளையிடும் கருவிகளும் வருவதும் போவதுமாக சாலைகளை வறுத்து எடுக்கும்.  மணல் லாரிகள் மற்றும்  உள்ளூராட்சிக் குப்பை அள்ளும் வண்டிகளின் போக்குவரத்தையே தாங்காமல் தடுமாறும் நமது கிராமப்புற சாலைகள் பெரும் சேதத்துக்குள்ளாகும். இதனால் நிலச் சரிவும் தொடர்ந்து நிலநடுக்கங்கள் கூட ஏற்பட வாய்ப்புண்டு.

நிலம் மற்றும் வீடுகளின் மதிப்பில் வீழ்ச்சி:- 
மீத்தேன் வாயு எடுக்கப்படும் வட்டாரங்களில் இருக்கும் விவசாய நிலங்கள் மற்றும் வீடுகளை விரும்பி வாங்குவோர் இல்லாமையால் அவற்றின் விலைகளில் பெரும் வீழ்ச்சி ஏற்படும். சிறிய சிறிய தொகைகளாக சிறுவாடு சேர்த்து வாங்கிப் போட்ட நிலங்களின் விலை  வீழ்ச்சியால்  நடுத்தர வர்க்கம் நடுத்தெரு வர்க்கமாகிவிட வாய்ப்பு ஏற்படும்.

புதுப்பிக்கப்படும் ஆற்றலின் மீது குறையும் முதலீடுகள்  :-
நிலக்கரிப் படுக்கை மீத்தேன் வாயு,  மற்ற எரிபொருள்களின் ஆற்றல் திறனைக் குறைக்கிறது. இதனால் புதுப்பிக்கத் தக்க ஆற்றலை உருவாக்கும் தொழில்களில் செய்யப்படும் முதலீடுகளின் மீது ஆர்வம் குன்றுகிறது.
                   ( Courtesy: Impacts of Coal bed Methane in UK from Google. )
2003 ஆம் ஆண்டு, மேற்கு வங்கத்தில் ராணிகஞ்ச், ஜார்கண்ட், சட்டீஸ்கர், மத்தியப் பிரதேசம் , மகாராஷ்டிரா, குஜராத், இராஜஸ்தான் , ஆந்திரா ஆகிய மாநிலங்களில் மொத்தம்  13600 சதுர கிலோ மீட்டரில் மீத்தேன் வாயு எடுப்பதற்கு மத்திய அரசும் தொடர்புடைய மாநில அரசுகளும் அனுமதி வழங்கின. மேலே குறிப்பிட்ட அந்த மாநிலங்களில் மீத்தேன் எடுக்க ஒதுக்கப்பட்ட இடங்கள் அனைத்தும் தஞ்சை காவிரிப் படுகை போல முப்போகம் விளையும் -  பொன் விளையும் பூமி அல்ல. அவை மலையோரங்களில்  வறண்ட பாறைகள் மிகுந்த பகுதிகளாகும். அடித்தால் ஏன் என்று கேட்க ஆள் இல்லாத அநாதைகளே இந்தப் பகுதிகள்.
ஆனாலும் இப்படி பயனற்ற பகுதிகளில்  மீத்தேன் எடுப்பதற்கே அந்தந்தப் பகுதி மக்கள் தங்களின் எதிர்ப்பைத் தெரிவித்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். வேறு எந்தத் தொழிலுக்கும் இலாயக்கு இல்லாத நிலங்களில் வசிப்போர்களே இந்தக் கொடிய திட்டத்தை எதிர்த்தார்கள் என்றால் நஞ்சையும் புஞ்சையும் கொஞ்சி விளையாடும் தஞ்சைத் தரணியின் மக்கள் செய்ய வேண்டியது என்ன ?

இந்தியாவில் நாம் மேலே குறிப்பிட்ட மாநிலங்களைத் தவிர்த்து,  உலக அளவிலும் பல பகுதிகளில் மீத்தேன் வாயு எடுக்கிறார்கள். அங்கெல்லாம் என்ன நிலைமை?

கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக, மீத்தேன் எரிவாயு எடுக்கும் திட்டம் இங்கிலாந்து, போலந்து, ஜெர்மனி, தெற்கு ஆப்ரிக்கா, கனடா, அமெரிக்கா ,  சீனா, ரஷ்யா, உக்ரைன் மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளிலும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இங்கிலாந்தில் பிரிட்டிஷ் கொலம்பியாவின் தெற்கு , மத்திய மற்றும் வடகிழக்குப் பகுதிகளிலும்    (Elk Valley in Vancouver Island) கனடாவில் , அல்பேர்டா, அமெரிக்கா ஐக்கிய நாடுகளில் கொலராடோ மாநிலத்திலும் ( Raton, Basin, Bon, Carbo, San Swan Basin,) மொன்டானா, வையோமிங்க், நியூ மெக்சிகோ, அலபாமா, பென்சில்வேனியா, மேற்கு வெர்ஜினியா, பிளாரிடா போன்ற மாநிலங்களிலும் (   Powder River Basin, Billings, Tallahassee, Bozeman, Black Warrier Basin) ஆஸ்திரேலியாவில்  Sidney Basin, Moreton Basin, Surat & Bower Basin , Galilee and  Gunnedah Basins  ஆகிய பகுதிகளிலும்  மீத்தேன் வாயுவை எடுத்து வருகிறார்கள்.  அந்தப் பகுதிகள் நாம் பட்டியலிட்ட விளைவுகளைக் கண்கூடாகப் பார்த்து அல்ல அனுபவித்து வருகின்றன.

ஆனால் இந்த நாடுகளிலும் பகுதிகளிலும் கூட, மீத்தேன் எடுக்கும் கிணறுகள் பெரும்பாலும் மக்கள் வசிக்காத - விவசாயம் பண்ணாத-  பாசன வயல்கள் இல்லாத - வறண்டுபோய் எதற்கும் பயனற்ற மலைப்பிரதேசம்  போன்ற இடங்களில்தான் அமைந்துள்ளன. அதனால் பெரிய அளவில் பாதிப்புகள் அங்கெல்லாம் உணரப் படவில்லை.

இருந்தாலும், இந்த நாடுகளில் இருக்கும் தன்னார்வத்தொண்டு நிறுவனங்களும் மக்கள் நல ஆர்வலர்களும் மீத்தேன் திட்டத்துக்கு எதிராக    “Lock the Gate”  என்று முழக்கமிட்டும் பதாகைகள் தாங்கியும் போராடி வருகிறார்கள். அந்தந்த  நாடுகளில் உள்ள  Clean Water Act, Safe Drinking Water Act, Water Quality Act, Environmental Policy Act, Federal Lands Policy and Management Act, National Historic Preservation Act போன்ற சட்டங்களின் அடிப்படையில் நீதிமன்றங்களில் நூற்றுக் கணக்கான வழக்குகளைப் போட்டு இந்தத் திட்டத்தின் விளைவுகளை அம்பலப் படுத்தி பல தடையாணைகளையும் இந்தத் தொழிலில் ஈடுபட்டுள்ள   நிறுவனங்களின் மீது பல கட்டுப் பாடுகளையும் பெற்றுள்ளனர்.

தமிழ்நாட்டின் தஞ்சையிலோ இந்தத் திட்டம் நடு வீட்டில் படுத்துக் கிடக்கும் நாகப் பாம்பு. கட்டிலில் படுத்துக் கிடக்கும் கண்ணாடி விரியன். வரவேற்பறையில் வாயைப் பிளந்துகொண்டு நிற்கும் ஓநாய். இந்தத் திட்டத்தை அடித்து ஒழித்து பால் ஊற்றிப் புதைக்க வேண்டும். இல்லையேல் நாமும் நமது வளமும் புதைந்து போகும்.

இப்போது நமக்கு ஒரே ஒரு ஆறுதல் என்னவென்றால் , காவிரிப் படுகையில் மீத்தேன் வாயு எடுப்பதற்கான சோதனைகளை நிறுத்த வேண்டுமென்று மறைந்த வேளாண் விஞ்ஞானி திரு. கோ. நம்மாழ்வார் தலைமையில் எழுந்த மக்கள் எழுச்சியாலும்,  தொடர்ந்த போராட்டங்களாலும் அன்றைய முதல்வர் செல்வி. ஜெயலலிதா தமிழ்நாட்டில் மீத்தேன் வாயு எடுக்கும் திட்டத்துக்கு தற்காலிகத்  தடை விதித்தார்.

அத்துடன் மீத்தேன் வாயு எடுக்கும் திட்டத்தின் சாதக பாதகங்களை ஆய்ந்து அறிக்கை தருமாறு டாக்டர் எம். எஸ். சுவாமிநாதன் தலைமையில் ஒரு வல்லுநர் குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது. இந்தக் குழுவில், அண்ணா பல்கலைக் கழகம், இந்திய தொழில் நுட்பக் கழகத்தின் சென்னைப் பிரிவு, தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகம், பொதுப் பணித்துறை, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் , தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம் ஆகியவற்றின் பிரதிநிகளும் இடம் பெற்று இருக்கிறார்கள். இன்று காவிரிப் படுகையின் தலைவிதி இந்தக் குழுவின் கரங்களில் இருக்கிறது. இன்று நாம் அமைதி காக்கலாம். காரணம் , இன்று இந்தப் பிரச்னை, இப்படி ஒரு குழுவை நியமித்ததன் மூலம்  ஆறப் போடப்பட்டு இருக்கிறது.  ஆனால் இந்தக் குழுவின் அறிக்கை மீத்தேன் வாயு எடுப்பதற்கு ஆதரவாக அமைந்துவிட்டால் தஞ்சையின் மக்களுக்குத் தெருவில் இறங்கிப் போராடுவதைத் தவிர வேறு வழியே இருக்காது. காரணம், “ சிரம் அறுத்தல் வேந்தருக்கு  பொழுது போக்கும் இனிய கதை ; ஆனால் நமக்கோ அதெல்லாம்  உயிரின் வாதை. “

மேலும் Great Eastern Energy Corporation Ltd.,  (GEECL)      நிறுவனத்துடன் அரசுகள் செய்துகொண்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம்          (MOM)  எதிர் வரும் 31/12/ 2014 ஆம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தை புதுப்பிக்காமல், இந்த வருடத்துடன் முடித்துவைத்து தஞ்சை மண்ணைக் காப்பாற்ற தமிழக அரசு முன்வரவேண்டுமென்றே மண்ணின் மக்கள் எதிர்பார்க்கிறார்கள். மக்களின் இந்த எதிர்பார்ப்புக்கு மாறாக, இன்றைய தமிழக அரசு ஒப்பந்தத்தைப் புதுப்பிக்குமானால் ,  பச்சைப்பசேலென்று படைக்கப்பட்ட நிலத்தை பாலைவனமாக்கும் பச்சை துரோகம் வேறு இருக்கவே இருக்காது.

இன்றைக்கு மின் பற்றாக்குறை நிலவுகிறதே !

மீத்தேன் வாயுத் திட்டத்தையும் எதிர்க்கிறீர்களே ! 

குறைந்த வெப்பத்திலேயே எரியும் சக்தி படைத்த மீத்தேனுக்கு இவ்வளவு எதிர்ப்புக் கிளம்புகிறதே !  

இதற்கு மாற்றுத் திட்டம் ஏதாவது வைத்திருக்கிறீர்களா ? என்று கேட்பது நமது காதுகளில் விழுகிறது. அதுபற்றி இன்ஷா அல்லாஹ் அடுத்த வாரம் பார்க்கலாம்.
ஆய்வு தொடரும்...  

கலந்தாய்வு: பேராசிரியர் அப்துல் காதர் M.A. M. Phill
எழுத்தாக்கம்: இப்ராஹீம் அன்சாரி M.Com,

குறிப்பு 1: அன்பான சகோதரர்களுக்கு, தங்களுக்கு நேரமிருந்தால், கீழ்கண்ட இணைப்பில் உள்ள கோரிக்கையை அதாவது 'தமிழக அரசு செய்துகொண்ட மீத்தேன் புரிந்துணர்வு ஒப்பந்தம்' எதிர்வரும் [ 04-01-2015 ] அன்றுடன் நிறைவு பெறுகிறது. இவற்றை புதுப்பிக்க வேண்டாம் என வலியுறுத்தி  மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு அனுப்பி வைக்க அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

https://docs.google.com/document/d/15ajykYtHr_wZOEZfJ42jzGomJ4ct8Nl04hyXzrslYOQ/edit
https://docs.google.com/document/d/1X_y-Gj3ky-XzIux-VtDACBMRd69dl30rYrhJcjszZ00/edit

குறிப்பு 2 : பேராசிரியர் அப்துல் காதர் அவர்களின் ஆலோசனைப்படி இந்தத் தொடர் பதிவு அதிரை நியூஸ் வலைதளத்தில் வெளியிடப்படுகிறது. பிரச்சனையின் முக்கியத்துவம் கருதி பிற சகோதர வலைதளங்களும் வெளியிடுவதை வரவேற்கிறோம். 

பகுதி I வாசிக்க:
'[ 1 ] தஞ்சையும் சஹாராப் பாலைவனம் ஆகுமா ? மீத்தேன் எரிவாயு திட்டம் குறித்து அதிரையின் பிரபலங்கள் எழுதும் ஆய்வுத்தொடர் !

Friday, December 12, 2014

[ 3 ] தஞ்சையும் சஹாராப் பாலைவனம் ஆகுமா ? மீத்தேன் எரிவாயு திட்டம் குறித்து அதிரை பிரபலங்களின் ஆய்வு தொடர்கிறது..!

கடந்த வாரம் வெளியான இந்தக் கட்டுரைத் தொடரில் கருத்துரை தந்த சாகுல் ஹமீது என்ற சகோதரர் அகிலம் முழுதும் அறிய வேண்டிய செய்திகளை அதிரைக்கு மட்டும் தெரிவிப்பது பற்றி தனது அதிருப்தியை வெளியிட்டு இருந்தார். அவரது அன்பான கருத்தை வரவேற்கிறோம். அதே நேரம் இந்தத்தொடர் ஒரு முதல் கல்லை எடுத்து வீசும் முயற்சிதான். எம்மால் இயன்றதைத்தான் நாம் செய்து இருக்கிறோம்.  இதன்பின் இதைத் தமிழில் கையேடாக வெளியிட்டு நம்மால் இயன்றவரை இதைப் பரப்ப முயற்சி செய்வோம் இன்ஷா அல்லாஹ். 

அதே நேரம் , எந்த ஒரு முயற்சியின் பின்னணியிலும் பொருளாதாரக் காரணங்கள் இருப்பது இயல்பு.  அதேபோல் சமூக அக்கறை எழுதும் எங்களுக்கு மட்டும் உரிய தனிச்சொத்தல்ல.  இந்தக் கட்டுரைத் தொடரை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து அச்சிட்டு விநியோகிக்க  அல்லாஹ் நமக்கு அறிவை மட்டுமே தந்துள்ளான். ஆனால் அச்சிட்டு வெளியிட மற்றும் தேவைகளுக்கு வாய்ப்புள்ளோர் பங்கும் பொறுப்பும் ஏற்றுக் கொண்டால் இந்த செய்திகள் பலரிடமும் சென்று சேரும். இதற்காக சகோதரர்கள் தாமாக முன்வரவேண்டும். அவ்விதம் இம்முயற்சியில் பங்கேற்க  நினைப்பவர்கள் அதிரை நியூஸ் வலைத்தளத்தின் நிர்வாகியைத் தொடர்பு கொள்ளலாம். 

இப்போது தொடருக்குள் செல்லலாம்... 
காவிரிப் படுகையிலிருந்து மீத்தேன் எரிவாயு எடுத்து நாட்டின் மின்சாரம் தொழில் வளர்ச்சி முதலிய தேவைகளுக்குப் பயன்படுத்துவதில்  குற்றமென்ன கண்டீர் என்று இந்தத் திட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து கருத்திடுவோர் எடுத்து வைக்கும் சில வாதங்களை கடந்த வாரம் கண்டோம்.

அவர்கள் சொல்லும் அனைத்துமே உண்மைகள்தான். மீத்தேன் வாயு என்பது பயன் தரும் ஓர் படைப்புத்தான். ஆனால் அந்தப் பயனைப் பெற  இன்றைக்கு எண்ணற்ற பேருக்கு காலங்காலமாக  வாழ்வு  அளித்துக் கொண்டிருக்கும் காவிரிப் படுகை எனும் பொன் முட்டையிடும் வாத்தை அறுத்துப் பலியிட்டால்தான் அது நடக்கும். ஒரே ஒருநாள் உலகம் கொள்ளும் பேராசைக்காக இந்த காவிரிப் படுக்கை எனும் பொன்வாத்தைப் பலியிடத்தான் வேண்டுமா? என்பதே அவர்களின் வாதத்திற்கான நமது சுருக்கமான பதில்.

மீத்தேன் வாயு எடுப்பதனால் ஏற்படும் நன்மைகளுக்கான பதிலை சுருக்கமாக ஒரு உதாரணத்தால் சுட்டிக் காட்டிய நாம்,  அதனால் ஏற்படும் பாதிப்புகளை கீழ்க்கண்டபடி விளக்கமான அறிவியல் ரீதியான விபரங்கள்  அடங்கிய பட்டியலின்றித் தர இயலாது. கீழ்க்கண்ட காரணங்களைப்  படிக்கும் எல்லோரும் சற்று நேரம் உங்களின் மனங்களைத் திடப்படுத்திக் கொள்ளுங்கள். அதே நேரம்  சற்று நேரம் உங்கள் கவனங்களை கடனாகக் கொடுங்கள்.

பேரழிவுகளின் பட்டியல்... 
1. இறைக்கப்படும் நீரின் உயிர் கொல்லித்தனம் :-
நிலக்கரிப் படுகையிலிருந்து தொடர்ந்து நிலத்தடி நீரை இறைத்து வெளியேற்ற வேண்டும். இப்படி வெளியேற்றப்படும் நீர் ஏர்வாடிப் பகுதி பதநீர் போல இனிமையாக இருக்காது. அந்த நீரில் வேதிப் பொருள்களும் கனமான உலோகத்துளிகளும் ( Carcinogenic Hydro Carbons such as Benzene, Toluene, Ethyl, Arsenic, Cadmium, Lead and Mercury ) கலக்கின்றன.    மீத்தேன் வாயு , நிலத்தடி நீரியக்க உடைப்பு ( Hydraulic Fracturing)  மூலம் எடுக்கப்படுவதால் நாம் பயன்படுத்தும் தண்ணீரில் ஊர்ந்து,  கலந்து,  பரவி,  விரவி உடல்நல- உயிர்நலக் கேடுகளை விளைவிக்கிறது.

2.  கழிவு நீர்  அகற்றலினால் ஏற்படும் சுற்றுச் சூழல் பாதிப்பு :-
ஒவ்வொரு ஆழ்துளை மீத்தேன் வாயு எடுக்கும் குழாயிலிருந்து ஏராளமான நிலத்தடிக் கழிவு நீரை வெளியேற்ற வேண்டி இருக்கிறது. இவ்விதம் வெளியேற்றப்படும் நீர், நீண்ட நெடுங்காலம் நிலத்துக்குள் ஆழமாக அடைபட்டுக் கிடப்பதால் அந்த நீரில்   நஞ்சு கலந்து இருக்கிறது. இவ்விதம் வெளிப்படும் நச்சு நீர் அருகிலிருக்கும் நீர் நிலைகளிலும் , கால்வாய்களிலும், கடலோர முகத்துவாரங்களிலும், கடல்களிலும் சுத்திகரிக்கபடாமலேயே விடப்படுகிறது. இதனால் ஊற்று நீரும்,  ஆற்று நீரும்,  கடல் நீரும் மாசு படுகின்றன. இந்த நீரின் மீது காற்று ஜலக்கிரீடை நடத்தும்போது நாம் சுவாசிக்கும் காற்றும் மாசு படுகிறது.

3. நிலத்தடி நீரின் கீழிறக்கம் மற்றும் சரிவு :-
விடாது தொடர்ந்து இறைக்கப்பட்டு வெளியேற்றப்படும்  நிலத்தடி நீரின் கணக்கிட முடியாத அளவால் சுற்றியுள்ள பகுதிளில் நிலத்தடி நீர் அதலபாதாளத்துக்கும் பாசன மற்றும் குடிநீர் அளவின்  மட்டமும் பெரிதும் குறைகிறது. இவ்வளவு அதிகமான தண்ணீர் இறைக்கபடுவதால் நிலத்துக்குள் நீரோட்டம் தடைபடுகிறது. நீரின் கொள்ளளவை குறைக்கிறது. மேலும் நீர் வெளிஎர்ரபடும் பகுதி கடலுக்கு அருகில் இருந்தால் கடலின் உப்புநீர் காலியான இடத்தை ஆக்ரமிக்கும் வாய்ப்பும் உண்டு. ஆகவே, உப்புத்தின்றவன் தண்ணீர் குடிப்பான் என்கிற பழமொழி கூட பொய்யாகி நாம் குடிப்பதற்கே உப்புத் தண்ணீர்தான் கிடைக்கும்.

4. காற்று மாசடைதல் மற்றும் வெடித்து எரியும் தீயின் பாதிப்பகள் :-
மீத்தன் வாயு எடுக்கப்படும் கிணற்றுப் பகுதிகளிலிருந்து நீரியல் கரிமங்கள் (Hydro Carbons) மீத்தேன், நீரியல் கந்தகம் மற்றும் நைட்ரஜன் ஆக்சைடுகள் தொடர்ந்து வெளியேற்றப்படுகின்றன. இந்தாள் இந்தப் பகுதிகளில் ஓசை மாசுபடல் (Noise Pollution) மற்றும் சுற்றுப் புறக் காற்று மாசடைதல் ஆகியன நிகழ்கின்றன. ஆழ்துளைக் குழாய்க் கிணறுகளிலிருந்து வெளியிடப்படும் வேண்டாத நிலத்தடி எரிவாயுக்கள் வெடித்து எரிந்தால் ஒளி மாசுபடும் வாய்ப்பும் உள்ளது. இதனால் நச்சுக் காற்று வெளியேறி நாட்டில் படர்கின்றன; பரவுகின்றன; பதிப்புகளை ஏற்படுத்துகின்றன.

5. நிலத்தடி நீர் தாங்கிகளுக்குள் மீத்தேன் வாயு பிளந்து உட்புகுதல் :- 
நிலக்கரிப் படுகையிலிருந்து குழாய்கள் மூலம் எடுத்துவரப்படும் மீத்தேன் வாயுக் குழாய்களில் பிளவுகள் ஏற்பட்டு நிலத்தடி நீர் தாங்கிகள் ஓடைகள் மற்றும் குடிநீர் கிணறுகளையும் பெரிதும் பாதிப்படையச் செய்கின்றன. மீத்தேன் வாயு கரியமில வாயுவை ( Carbon dioxide)  விட நூறு மடங்கு பசுமை வாயுக்களை தீமையுடையதாக மாற்றுகின்றது. சூடான தேநீரைக் கூட ஊதிக் குடிக்கும்போது அது மாசடைந்துவிடுகிறது என்பது  அடிப்படை அறிவியல் . காரணம் நம்மிடமிருந்து வெளியேறும் கரியமில வாயு. அப்படி இருக்க  டன் கணக்கில் வெளியேறும் கரியமில வாயு என்னவெல்லாம் செய்யுமென்று கற்பனை செய்து பாருங்கள்.

6. மீத்தேன் கிணறுகளிலிருந்து  ஏற்படும் கசிவால் ஏற்படும்  பாதிப்புகள்:-
அறிவியல் அறிஞர்களின் கருத்துப்படி சராசரியாக 6% மீத்தேன் கிணறுகள் உடனடியாகவும் 50% மீத்தேன் கிணறுகள் 15 ஆண்டுகளுக்குள்ளும் வாயு கசிவு அல்லது ஒழுகலை ஏற்படுத்துகின்றன. பல ஆயிரக் கணக்கான ஆழ்துளைக் கிணறுகள் தோண்டப்படும்போது அவற்றின் சுத்திகரிக்கப்படாத  மீத்தேன் வாயுவின் கசிவு ஏற்படுத்தும் வேதியல் விளைவுகளை நினைத்துப் பார்க்கவே இயலவில்லை. இத்தகைய கிணறுகளை மூடவோ மாற்று வழியில் பயன்படுத்தவோ இயலாது. ஒரு குறிப்பிட்ட காலக் கெடுவுக்குள் இந்தக் கிணற்றின் ஸ்டீல் மற்றும் கான்கிரீட்  கட்டமைப்புகள் நிலத்துக்குள் புதைந்துவிடும். எனவே எல்லாக் கிணறுகளிலிருந்தும் கசியும் மீத்தேன் வாயு வெளிக்காற்றை மாசடையச் செய்யும்.

7. நிலப்பரப்பும் சுற்றியுள்ள கட்டமைப்புகளும் பாதிப்படைதல் :-
மீத்தேன் வாயுவை தொடர்ந்து எடுத்திட, நிலபரப்பு, மீத்தேனை அணுகும் பாதைகள், சாலைகள், அடித்தளங்கள் மற்றும் கட்டமைப்புகள் தேவைப்படுகின்றன. இத்தகைய கட்டமைப்புகளுக்கான முயற்சியும் அவற்றின் வளர்ச்சியும் பொதுவான நிலப் பரப்பையும் வயல் வெளிகளையும் அவற்றில் வளரும் நுண்ணுயிர்களையும்  பறிப்பதுடன் நமது இயல்பான போக்குவரத்துச்  சூழலையும் கெடுக்கின்றன; தடுக்கின்றன.

8.  வெளியேற்றும் குழாய்கள் ஏற்படுத்தும் மாற்றவியலாத அழிவுகள் :-
வயல்வெளிகளில் போடப்படும் கனத்த குழாய்கள்,  வயல்களில் நமது நடமாட்டத்துக்கு இடையூறாக மலைப் பாம்பாகப்  படுத்துக் கிடக்கிறது.  இவை இயற்கை எழிலையும் பல்லுயிர்ப் பெருக்கத்தையும் பாதிக்கின்றன. இவற்றிலும் கசிவுகள் ஏற்பட்டால் அடுத்துள்ள பயிர்கள் அப்போதே தற்கொலை செய்துகொள்ளும்.  கரும்பு விளையும் வயற்காட்டில் இரும்புதான் விளைந்து நிற்கும். நெல் விளையும் வயலில் கல்தான் விளையும் .

9. உயர்வழுத்த மின் நிலையங்களால் எந்திரமயமாகும் உள்ளூர் நிலப் பகுதிகள் :- 
ஆயிரக் கணக்கான ஆழ்துளைக் கிணறுகளை ஒன்றிணைத்து இயக்குவதற்கு பெரும் சப்தத்துடன் கூடிய மின் சாதனங்கள்  தேவை.  அத்துடன், மீத்தேன் வாயுவை வெளியில் எடுக்கும் பொது அதன் தோழிகளான தேவையற்ற வாயுக்களும் வெளிப்படும் . அவற்றை வெளியாகும் நிலையிலேயே எரிக்க வேண்டும். அதற்காகவும் நிறைய இயந்திரங்களும் தேவைப்படும். அவை இயங்கும்போது எழுப்பும் சப்தங்கள் சுற்றுச் சூழலைப் பாதிக்கும். ஒலி- ஒளி மாசுபடும். காற்று மண்டலத்தில் எரிக்கப்படும்  வாயுக்களின் சாம்பல் படர்ந்து விலை நிலங்கள் பசுமைத்தன்மை இழந்து சாம்பலாகிப் பின் பொட்டைக்காடாக மாறி அரிதாரம் பூசிக் கொள்ளும்.

10. வளரும் சமுதாயம் வதைக்கப்படும் :- 
வன விலங்குகளின் பாதைகள் திசை மாற்றப்படும். இன்று அன்றாடம் நாம் செய்திகளில் காணும் யானைக் கூட்டங்கள் வயல்களை அழித்தன; சிறுத்தை ஊருக்குள் புகுந்தது என்கிற செய்திகள் அன்றாட நிகழ்வுகளாகிப் போகும். சமுதாயத்துக்குள் அமைதி அஸ்தமனமாகும். பயிர் செய்யும் நிலங்களில் பெரும் பகுதி, மீத்தேன்  கிணறுகளை அமைக்கவே பயன்படுத்தப்படுவதால் விவசாய விலை பொருள் உற்பத்தி பாதிக்கப்படும். இதனால் விளையும் சொற்ப விளை பொருள்களுடைய  விலை ஏறும். ஏழை மற்றும் நடுத்தர வர்க்கங்கள் வாழ்க்கைச் செலவுகளுக்காக திணறும்; திண்டாடும்.

இவை மட்டும்தானா ? இன்னும் இருக்கின்றன ஏராளம். அந்த ஏராளத்தில் அழிவுகளும் அமைதியின்மையும்தான் தாராளம்.  

இன்ஷா அல்லாஹ் விவாதிக்கலாம்.

கலந்தாய்வு: பேராசிரியர் அப்துல் காதர் M.A. M. Phill
எழுத்தாக்கம்: இப்ராஹீம் அன்சாரி M.Com,
ஆய்வு தொடரும்...  
குறிப்பு: பேராசிரியர் அப்துல் காதர் அவர்களின் ஆலோசனைப்படி இந்தத் தொடர் பதிவு அதிரை நியூஸ் வலைதளத்தில் வெளியிடப்படுகிறது. பிரச்சனையின் முக்கியத்துவம் கருதி பிற சகோதர வலைதளங்களும் வெளியிடுவதை வரவேற்கிறோம். 

பகுதி I வாசிக்க:
'[ 1 ] தஞ்சையும் சஹாராப் பாலைவனம் ஆகுமா ? மீத்தேன் எரிவாயு திட்டம் குறித்து அதிரையின் பிரபலங்கள் எழுதும் ஆய்வுத்தொடர் !

Friday, December 5, 2014

[ 2 ] தஞ்சையும் சஹாராப் பாலைவனம் ஆகுமா ? மீத்தேன் எரிவாயு திட்டம் குறித்து அதிரை பிரபலங்களின் ஆய்வு தொடர்கிறது..!

பாலை வார்த்த நிலம் – இனி
பாலை நிலமாய் ஆகிடுமா ? என்ற கேள்வியுடன் கடந்த அத்தியாயத்தை நிறைவு செய்து இருந்தோம்.

மீத்தேன் எரிவாயு எடுப்பதற்கு காவிரிப் படுக்கை அனுமதிக்கப்படுமானால் உண்மையிலேயே இந்தக் காவிரிப் படுகை கற்பழிக்கப்படும் ; நாம் போற்றி வளர்த்த புண்ணிய இடங்கள் புதைந்து போகும்; பண்பாடும் கலையும் வளர்த்த நமது பாரம்பரியம் பட்டுபோகும் ; நமது முன்னோர்களின் கட்டடக் கலையை,  பொறியியல் அறிவைப் பறைசாற்றும் அடையாளங்கள் அழிந்து போகும் ; நாட்டுக்கே பசியின்றி  அன்னம் படைத்த சோழத் தரணி சுரண்டப்பட்டு மக்களின் வாழ்வு சுக்குநூறாகும் என்றெல்லாம் வேதியல் ஆதாரங்களின் அடிப்படையில் அறிவியல் மேதைகள்  அபாய சங்கு ஊதுகிறார்கள்.

இவ்வளவு விளைவுகளை ஏற்படுத்தும் இந்தத் திட்டத்தின் இயல்புதான்  என்ன? இந்தத் திட்டம் எப்படி நிறைவேற்றப்படும்? எங்கெல்லாம் நிறைவேற்றப்படும்? எவ்வாறான விளைவுகளை ஏற்படுத்தும்? என்றெல்லாம் எண்ணற்ற கேள்விகள் எழுகின்றன.

தேன் என்றால் என்ன என்று நமக்குத் தெரியும். மீத்தேன் என்றால் என்ன ?
மீத்தேன் என்பது வெட்டியெடுக்கப்படாத நிலக்கரி பாறையின் மடிப்புகளில் காணப்படும் ஒரு வகை இயற்கை எரிவாயு.  நாம் இப்போது பயன்படுத்தும் இயற்கை எரிவாயுவை விட  ஆற்றல் தரும் வாயுவே மீத்தேன். இந்த மீத்தேன் வாயு,   நீர்  அழுத்தத்தின் காரணமாக அதே இடத்தில் நிலைத்து,  நிலத்தின் ஆழத்தில் படிந்துள்ள நிலக்கரிப் படிமங்கள் மீது படர்ந்து பரவி இருக்கும் . இது   நிலக்கரிப் படுகை மீத்தேன் என்று அழைக்கப்படுகிறது.

ஏற்கனவே நெய்வேலியில் பழுப்பு நிலக்கரி வெட்டி எடுக்கப்படுவதை நாம் அறிவோம். நெய்வேலியைத் தொடர்ந்து அதை அடுத்துள்ள காவிரி படுகையில் இத்தகைய மீத்தேன் நிலக்கரிப் படுகைகள் இருப்பதை புவி இயல் அமைப்பியல் வல்லுனர்கள் கண்டுபிடித்தார்கள்.

தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி மாநில கடலோரப்பகுதிகளில் பாண்டிச்சேரியின் பாகூர் தொடங்கி ஸ்ரீமுஷ்ணம், ஜெயங்கொண்டம் வழியாக மன்னார்குடிக்குத் தெற்குப் பகுதிவரை பழுப்பு நிலக்கரிப் படிவங்களும் அத்துடன் மீத்தேன் நிலக்கரிப் படிமங்களும் இருப்பதாகவும் இந்தப் படிமங்களிலிருந்து மிகுந்த ஆற்றல் தரும் மீத்தேன் எரிவாயுவைப் பிரித்து எடுக்க இயலுமென்றும் கருத்துப் பிரசவத்தை கல்வியாளர்கள் பெற்றேடுத்துத் தந்தார்கள். அவர்கள் பெற்றெடுத்துத் தந்த பிள்ளை பேர் சொல்லும் பிள்ளையா பிழைப்பில் மண்ணை அள்ளிப் போடும் தறுதலைப் பிள்ளையா ? மொத்தத்தில் இந்த மீத்தேன் பிள்ளையா ? தொல்லையா ?

இந்த ஆய்வுகளும் கருத்துக்களும் அறிவியல் வளர்ச்சியின் ஆபத்தான் விளைவுகளாகும்.  பள்ளிகளில் படிக்கும் போது அறிவியல் என்பது இருபக்கமும் கூர் உள்ள ஒரு கத்தி போன்றதென்றும் . இதனால் பழத்தையும் வெட்டலாம் கொலையும் செய்யலாம் என்றும்  நாம் படித்து இருக்கிறோம். அதை உண்மைப் படுத்துவது போல் அறிவியல் படித்த மேதைகள் சிலர் கண்டுபிடித்த அணுகுண்டு போல ஆபத்தான கருத்தே,  இந்த மீத்தேன் எரிவாயுவைத் தோண்டி எடுக்கமுடியும் என்ற ஆய்வும் அறிக்கையும். எதற்கும் உதவாத தரிசு நிலங்களைக் கூட  அல்ல -  செழிப்பான விவசாய நிலங்களைத் தன்னகத்தே கொண்டுள்ள காவிரிப்படுகையையும் தோண்டி, அந்த நிலங்களில் ஆழத்தில் படிந்துள்ள நிலக்கரியையும் அத்துடன் இருக்கும் மீத்தேன் எரிவாயுவையும் வெளியே  கொண்டு வரலாம் என்கிற ஆய்வுரை அறிவியல் வளர்ச்சி ஈன்றேடுத்த ஆபத்தான குழந்தையாகும்.

சும்மா கிடந்த நெலத்தக் கொத்தி
சோம்பலில்லாம ஏர் நடத்தி 
கண்மாய்க் கரையை ஒசத்திக் கட்டி 
கரும்புக் கொல்லையில்
வாய்க்கால் வெட்டி 
சம்பாப் பயிரை பறிச்சு நட்டு 
தகுந்த முறையில் தண்ணீர் விட்டு 
நெல்லு வெளஞ்சிருக்கு – வரப்போ 
உள்ளே மறைஞ்சிருக்கு    -

என்று பட்டுக் கோட்டை கல்யாண சுந்தரத்தின் பாடல்வரிகளை மகிழ்ச்சிப் பாட்டாகப்  பாடிக் கொண்டிருந்த மக்களின் மனதில் மண்ணடிக்க வந்தத்  திட்டம் இந்தத் திட்டம்.  அமெரிக்கப் பணமுதலைகள் , உலகவங்கியின் கழுகுகள், தாராளமயமாக்கல் எனும் குள்ள நரிகள், உலகமயமாக்கல் எனும் கருநாகங்கள் ஆகிய அனைத்தும் ஒன்று சேர்ந்து வட்டமேசை மாநாடு நடத்தி காவிரி விவசாயியின் வயிற்றில் வண்டல்மண்ணை அடிக்க வந்தத் திட்டம் இந்தத் திட்டம்.

இந்தத் திட்டத்தின்  ஆய்வின் விளைவாக, தமிழ்நாட்டில் தஞ்சை மாவட்டத்தில் ஒரத்தநாடு, திருவிடைமருதூர், கும்பகோணம், பாபநாசம் ஆகிய வட்டங்களிலும்  திருவாரூர் மாவட்டத்தில் மன்னார்குடி, குடவாசல், வலங்கைமான், நீடாமங்கலம் ஆகிய வட்டங்களிலும் மீத்தேன் நிலக்கரிப் படிமங்கள்  இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

மேலே குறிப்பிடப்பட்டுள்ள  வட்டங்களில் பயணம் செய்து பார்ப்போருக்குத் தெரியும் அந்தப் பகுதிகள்  எவ்வளவு வளமான,  பசுமையான நெல்வயல்களும் தென்னந்தோப்புகளும்  நிறைந்த வட்டங்கள் என்பது.  பேருந்துகளில் ஜேப்படி செய்பவர்களுக்குத்தான் பயணிப்பவர் பணத்தை எங்கே வைத்திருக்கிறார் என்று மோப்பம் பிடிக்கத்  தெரியும். அந்த வகையில்தான் எங்கே கை வைத்தால் இருப்பதைப் பிடுங்கலாம் என்று இந்த அறிவியல் கொள்ளைகாரர்களுக்குத் தெரியவந்து இருக்கிறது.

கிரேட் ஈஸ்டர்ன் எனர்ஜி கார்பரேஷன் லிமிடெட் ( Great Easter Energy Corporation Ltd. ) ( சுருக்கமாக, GEECL)  நிறுவனத்துக்கு நமது நிலங்களைத் தோண்டிப் பார்க்கும்   அங்கீகாரத்தை மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை அமைச்சகம் ஜூன்  மாதம் 2010- ல் ,  வழங்கியுள்ளது.

இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் 04/01/2011 அன்று , அன்றைய துணை முதல்வர் திரு. மு.க. ஸ்டாலின் முன்னிலையில் கைஎழுத்திடப்பட்டுள்ளது. இந்த அனுமதி மற்றும் அங்கீகாரத்தின் பின்னணியில் பல வல்லரசுகள் , அவற்றின் முதலீடுகள், ஆசைகள், இந்தியாவையும் குறிப்பாக தமிழ்நாட்டையும் வளரவிடக்கூடாது என்கிற கங்கணம் ஆகியவை இருக்கின்றன.

தற்போது மன்னார்குடி பகுதியில், இந்தியாவில் நிலக்கரி படுகை மீத்தேன் ஆய்வு மற்றும் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள முதல் தனியார் நிறுவனமான கிரேட் ஈஸ்டர்ன் எனர்ஜி கார்ப்பரேசன் லிமிடெட்  நிறுவனம் சோதனைக் குழாய்க் கிணறுகள் மூலம் மீத்தேன் வாயு தேடுதல் பணியைத் தொடங்கியது.
இங்கு ஒரு வரலாற்றுச் செய்தியை பதிவு செய்ய வேண்டும். இந்த ஈஸ்ட் என்கிற பெயரில் தொடங்கும் நிறுவனங்கள் இந்தியாவைச் சுரண்ட வரும் நிறுவனங்கள் என்பதை நாம் அனுபவபூர்வமாக அனுபவித்து இருக்கிறோம். இந்தியாவை அடிமைப் படுத்தி ஆண்ட ஆங்கில ஆட்சியின் தொடக்கம் ஈஸ்ட் இந்தியா கம்பெனி என்ற பெயரில்தான் உட்புகுந்தது. அதே போல் இந்த கிரேட் ஈஸ்டர்ன் எனர்ஜி கார்பரேஷன் லிமிடெட் என்கிற நிறுவனமும் ஒரு குஜராத்தியின் நிறுவனம். இந்த நிறுவனத்தின் தலைவரின் பெயர் மோடி. நண்பர்கள் தவறாக புரிந்து கொள்ள வேண்டாம் இந்த மோடி அந்த மோடி அல்ல!

மன்னார்குடி வட்டத்தில் 691 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் (66,700 ஹெக்டேரில்) முதற்கட்டமாக 667 சதுர கிலோ மீட்டர் ஆய்வுக்கு எடுத்துக் கொண்டு, மீதமுள்ள 24 சதுர கிலோ மீட்டர் எதிர்கால திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன. தஞ்சை மற்றும் திருவாரூர் ஆகிய இரு மாவட்டங்களிலும் 50 ஆழ்துளை கிணறுகள் மற்றும் இரு சோதனைக் கிணறுகள் அமைக்கப்படவுள்ளன. இதில் திருவாரூர் மாவட்டத்தில் 38 ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்படவுள்ளன. ஆழ்துளைக் கிணறுகள் ஒவ்வொன்றும்  600 மீட்டர் ஆழத்துக்கும் அதிகமாக தோண்டப்படுகின்றன.

திருவாரூர் மாவட்டத்தில், 
கர்ணாவூர், வடபாதி , சேரங்குளம், மன்னார்குடி, அரவத்தூர்,  களஞ்சிமேடு, சவளக்காரன், பூவனூர், பருத்திக்கோட்டை, மூவர்கோட்டை, பருத்திக் கோட்டை, களஞ்சிமேடு, கொரடாச்சேரி, முட்டூர், கதிராமங்கலம், சேங்காலிபுரம்,  ஆதனூர், சித்தாடி, குடவாசல், மேலப்பாளையம், மலுவச்சேரி, ஓகை, கீழப்பாளையூர், கமுகக்குடி, பத்தூர், கொரடாச்சேரி, ஆர்பார், மஞ்சக்குடி, வடவர், செல்லூர், சாரனத்தம், மாணிக்க மங்களம் , கொட்டையூர், அனுமந்தபுரம், கீலவடமல், ராஜேந்திரநல்லூர், நார்த்தாங்குடி, கண்டியூர் , தண்டலம், அரிச்சபுரம், அன்னவாசல், காளாச்சேரி, கோயில்வெண்ணி, ஆதனூர் ஆகிய கிராமங்களிலும்,

தஞ்சை மாவட்டத்தில்,
கொத்தங்குடி, பெரப்பட்டி, வண்டுவாஞ்சேரி, திருச்சேறை, துக்காச்சேரி, ஆமங்குடி, விட்டலூர், குமாரமங்கலம்,  நாச்சியார்கோயில் , மஞ்சமல்லி, நரசிங்கம்பேட்டை,  குலமங்கலம்  ஆகிய கிராமங்களிலும் மண்ணைத் தோண்டியெடுத்து மாதிரிகள் ஆய்வுக்கு அனுப்பப்பட்டு மீத்தேன் நிலக்கரிப் படிமங்கள் அங்கெல்லாம் பரவி விரவிக் கிடப்பது கண்டறியப்பட்டது.  தவிர, காற்று குறித்து 38 இடங்களில் ஆய்வும், தொடர்ந்து   ஆறுகள் மற்றும் , கால்வாய்கள்  இல்லாத பகுதி, நிலத்தடி நீரின் தரம், ஒலியின் அளவீடுகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மீத்தேன் வாயு எடுக்கப்படும் முறை என்ன ?
“அகழ்வாரைத் தாங்கும் நிலம் “ என்று வள்ளுவரால் குறிப்பிடப்படும் நிலம் ! இந்த நிலம்தான் இந்தக் கதைக்கு கரு. நாம் புறக்கண்ணால் காணும் நிலம் வேறு; அந்த நிலத்துக்குள்ளே ஊடுருவி இருக்கும்  உள்ளடக்கங்கள் வேறு வேறு.

நிலம், மண், நிலத்தடி, நிலத்தடி நீர் , நிலக்கரி என்று நமது காலடியில் படும் நிலத்தில் நமது கண்ணுக்குத் தெரியாத பகுதிகள் மறைந்து உள்ளன. மீத்தேன் வாயு என்பது ஏதாவது ஒரு குறிப்பிட்ட பகுதியில் மட்டும் செறிவாக குவிந்து இருப்பது அல்ல. நிலக்கரிப் படுகைகளின் – அதன் நுண்துளைகள் , வெடிப்புகளில் நிலக்கரிப் பாறைகளின் தளப்பரப்பில் ஒட்டி இருப்பதாகும்.

நமது கண்களுக்கு நிலமும் அதைத் தோண்டினால்  வரும் நீரும்தான் தென்படுகின்றன. நம்மாலும் அவ்வளவுதான் தோண்ட இயலும். ஆனால் தரைமட்டத்திற்கு கீழே 500 அடி முதல் 1650 அடிவரைத் தோண்டினால், நிலக்கரிப் படிமங்கள் தென்படும். இந்த நிலக்கரிப் படிமங்களின் மீது நிலத்தடி நீர் படுத்து,  நிலக்கரிப் படிமங்களைக் குப்புறப்போட்டு அழுத்திக் கொண்டு இருக்கிறது.  அதாவது நிலக்கரிப் படிமங்களின் மீது நிலத்தடி நீர் நிலைகொண்டு இருக்கிறது.

இப்படி நிலக்கரிப் படிமங்களின் மீது நிலத்தடி நீரின் அழுத்தம் இருப்பதால் மீத்தேன் வாயுவை நிலத்திலிருந்து நேரடியாக  வெளியேற்ற முடியவில்லை. மீத்தேன் வாயுவை அழுத்திக் கொண்டு இருக்கும் நீரை நிலத்திலிருந்து வெளியேற்றினால்தான் மீத்தேன் வாயுவை  வெளியே கொண்டுவர வரமுடியும். ஆகவே நிலத்தடி நீரை முதலில் வெளியேற்ற வேண்டும். நீரை வெளியேற்றிய  உடன் அங்கு வெற்றிடம் ஏற்பட்டு காற்று அவ்விடங்களில் குடிபுகும். ஆகவே நீரை அடுத்துக் காற்றையும்        வெளியேற்றியாக வேண்டும். இப்படி நீரையும் காற்றையும் உறிஞ்சி வெளியே எடுத்த பிறகுதான் ராஜாதி ராஜா மகள் நமது கதாநாயகியான  மீத்தேன் வெளியே வர முடியும்.

இப்போது நாம் இலகுவாகப் புரிந்துகொள்ள முடியும். நிலத்தின் மிக ஆழத்தில் உள்ள நிலக்கரி படிந்து இருக்கும் நிலைவரை நாம்  தேடி நாம் அனுப்பும் ஆழ்துளைக் குழாய்கள் முதலில் நிலத்தடியில் உள்ள நீரையும் பிறகு காற்றையும் வெளியே தள்ளிவிட்டு தான் தேடிவந்த ராஜகுமாரியான மீத்தேனை தொட்டுத் தூக்கி  வெளியே அனுப்புகிறது.  மீத்தேன் வாயு தன்னுடன் பொடி மண் , மிச்சமிருக்கும் நீர் மற்றும் விஷக்காற்று ஆகிய தோழிகள் புடை சூழ வெளியேறி  வாயு சுத்திகரிக்கப்படும் இடத்தில் தஞ்சம் அடைகிறது. அங்கு தஞ்சம் அடையும் மீத்தேன் வாயு சுத்திகரிக்கப்பட்டு பயன்படுத்தப்படுகிறது.  அவ்விதம் சுத்திகரிக்கப்படும்போது நீரும் பொடி மணலும் விஷக் காற்றும் பிரித்தெடுக்கப்பட்டு நமது விவசாய நிலங்களின் மீது ஓடச் செய்யப்படுகிறது.  இதனால் நமது விளைநிலங்களிலும் சுற்றுச் சூழலிலும் ஏற்படும் வேதியல் விளைவுகளை நாம் தொடர்ந்து காணலாம்.

அதற்குமுன் இந்தத் திட்டத்தை ஆதரிப்போரின் கேள்விகள் யாவை என்று பார்க்கலாம்.

மீத்தேன் வாயு என்பது, இப்போது நடைமுறையில் இருக்கும் இயற்கை எரி வாயுவை விட ஆற்றல் மிக்கது என்று சொல்கிறீர்களே!  அவ்வாறு ஆற்றல் உள்ள ஒரு சக்தியை வெளிக் கொணர்வதில் என்ன தவறு? அந்த ஆற்றல் மிக்க எரிவாய்வை பயன்படுத்தி  தொழிற்சாலைகளை இயங்கவைத்து  பலருக்கு வேலை வாய்ப்பளிக்களிக்கலாமே! தடை இல்லா மின்சாரம் சாத்தியப்படும் என்று சொல்கிறார்களே! மீத்தேன் மூலம் உபரி மின்சாரம் தயாரித்து விற்று அன்னியப் பணம் ஈட்ட  முடியுமென்றும் சொல்கிறார்களே! மற்ற மாநிலங்களுக்கு மின்சாரத்தை விற்கலாம் என்றும் சொல்கிறார்களே! மற்றும் மிகு அழுத்த  மின்சாரம் தயாரிப்பதற்குப் பயன்படுத்துவதிலும் குற்றம் என்ன காணமுடியும்? இயற்கையில் இருக்கும் ஒரு நிலத்தடி வளத்தை ஏன் பயன்படுத்திக் கொள்ளக் கூடாது ? விவசாயத்தை மட்டுமே நம்பி இருக்கும் நமக்கு இன்னொரு வருமானம் வந்தால் ஏன் ஏற்கக் கூடாது? என்பன போன்ற கேள்விகள் நமக்குள் எழுவது இயற்கை.

அனைத்துக்கும் அறிவியல் ரீதியான பதில்கள்  இருக்கின்றன.
அதற்கு முன்,  பொன் முட்டையிடும் வாத்தின் கதையை சிறுவயதில் படித்து இருப்பீர்களே ! அந்தக் கதையை நினைவு படுத்திக் கொள்ளுங்கள்.  இன்ஷா அல்லாஹ் அடுத்த வாரம் சந்திக்கலாம்.
ஆய்வு தொடரும்...  
கலந்தாய்வு: பேராசிரியர் அப்துல் காதர் M.A. M. Phill
எழுத்தாக்கம்: இப்ராஹீம் அன்சாரி M.Com,

குறிப்பு: பேராசிரியர் அப்துல் காதர் அவர்களின் ஆலோசனைப்படி இந்தத் தொடர் பதிவு அதிரை நியூஸ் வலைதளத்தில் வெளியிடப்படுகிறது. பிரச்சனையின் முக்கியத்துவம் கருதி பிற சகோதர வலைதளங்களும் வெளியிடுவதை வரவேற்கிறோம். 

பகுதி I வாசிக்க:
'[ 1 ] தஞ்சையும் சஹாராப் பாலைவனம் ஆகுமா ? மீத்தேன் எரிவாயு திட்டம் குறித்து அதிரையின் பிரபலங்கள் எழுதும் ஆய்வுத்தொடர் !

Friday, November 28, 2014

[ 1 ] தஞ்சையும் சஹாராப் பாலைவனம் ஆகுமா ? மீத்தேன் எரிவாயு திட்டம் குறித்து அதிரையின் பிரபலங்கள் எழுதும் ஆய்வுத்தொடர் !

அண்மையில் தஞ்சாவூரில் தமிழ்நாடு பொதுப் பணித்துறை மூத்த பொறியாளர் சங்கத்தின் சார்பில் காவிரி டெல்டாப் பகுதிகளில் இருந்து மீத்தேன் வாயு எடுப்பதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் கருத்தரங்கமும் குறுந்தகடுக் காணொளி நிகழ்வும் நடைபெற்றது. தஞ்சை மாவட்டத்தின் வாழ்வாதாரத்தின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கும் ஒரு  நிகழ்வு பற்றிய இந்த முக்கியமான கருத்தரங்கில் பார்வையாளர்களாக  பங்கு பெரும் வாய்ப்பு எனக்கும் பேராசிரியர் அப்துல் காதர் அவர்களுக்கும் கிடைத்தது.

அந்தக் கருத்தரங்கில் கலந்துகொண்ட அறிஞர்  பெருமக்களால் பேசப்பட்ட கருத்துக்களின் தொகுப்பை இங்கு பகிர்வது அவசியம் என்று நினைக்கிறேன். ஒரு சம்பிரதாயத்துக்காகக் கூட  பகிர்வதில்  மிக்க மகிழ்ச்சியடைகிறேன் என்று கூட சொல்ல முடியாத சோகம் இந்தப் பேசுபொருளில் அடங்கி இருக்கிறது.   காரணம் இந்தத் தொடரில்  பகிரப்படும் செய்திகள்  நம்மால் சரியாக புரிந்து கொள்ளப்படும் பட்சத்தில் நமது மண்ணையும் அதன் மாண்பையும் காதலிக்கும் நாம் மகிழவே முடியாது.

முதலாவதாக,  இந்தக் கருத்தரங்கை நடத்தியவர்கள்- அங்கே கருத்து மழை பொழிந்தவர்கள் -  அரசுப் பணியில் இருந்து ஒய்வு பெற்ற மரியாதைக்குரிய மூத்த பொறியாளர்கள் ஆவார்கள். சுத்தமான கரங்களுடன் பல ஆண்டுகள் அரசுப்பணியில் – பொதுப்பணித்துறையில் -  பணியாற்றி ஒய்வு பெற்று அவர்களது ஆண்டாண்டுகால அனுபவங்களை அவர்கள் நம்முடன் பகிர்ந்து கொண்ட விதத்தைப் பாராட்டுவது ஒரு புறமிருந்தாலும்,   ஒய்வு ஊதியம் பெற்று வாழ்ந்து வரும் அவர்கள்,  தங்களின் சொந்தப் பணத்தைத் திரட்டி இப்படி ஒரு கருத்தரங்கை தஞ்சாவூரிலும் அதற்கு இரண்டு தினங்களுக்கு முன் திருவாரூரிலும் வெற்றிகரமாக விளக்கமாக நம்மை எதிர் நோக்கி இருக்கும் ஒரு அபாயத்தை பற்றி மக்களுக்கு விழிப்புணர்ச்சி ஏற்படுத்தும் விதத்தில் நடத்திய அவர்களின் சமூக அக்கறை மிகுந்த நல்ல எண்ணத்தை எவ்வளவு பாராட்டினாலும் தகும். ‘உண்டாலம்ம இவ்வுலகம் ‘ என்கிற புறநானூற்று வரிகளுக்கொப்ப இப்படிப்பட்ட நல்லவர்களால்தான் இந்த உலகம் இன்னும் வாழ்ந்துகொண்டிருக்கிறது என்று சொல்லலாம்.

இந்தக் கருத்தரங்கத்தின் நிகழ்ச்சிகள் யாவும் இயற்கை வேளாண் விஞ்ஞானி மறைந்த திரு. கோ. நம்மாழ்வார் அவர்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டிருந்தது.

இந்த விழிப்புணர்வுப் பணியில் தங்களை அர்ப்பணித்துக் கொண்டவர்களுள் பொறியியல் அறிஞர்களான திரு. அ. வீரப்பன், திரு.ந. கைலாசபதி, திரு. மு. மூர்த்தி ஆகியோர் இன்றியமையாதவர்களாவார்கள். இவர்களுடன் திரு. பரந்தாமன் அவர்களின் ( திரு. பரந்தாமன் அவர்கள் அதிரை செக்கடிக் குளத்தின் மேம்பாட்டுப் பணிகளுக்காக ஆலோசனை நல்கியவர்)   ஒத்துழைப்பையும் நாம் குறிப்பிட்டு பாராட்டியாக வேண்டும்.

குடுகுடுப்பைக்காரன்கூட குத்தாட்டம் போட்டு விளம்பரம் தேடும் இக்காலத்தில்,  வெளியே தெரியாமல் ஒரு நல்ல பணியில் தங்களுடைய முதிய வயதில் தங்கலை ஈடுபடுத்திக் கொண்டிருக்கும் இவர்களையும் இவர்களது அணியைச் சேர்ந்த அனைத்து தமிழ்நாடு பொதுப்பணித்துறை மூத்த பொறியாளர் சங்கத்தினரையும் நாம் கட்டாயம் பாராட்டியே ஆகவேண்டும்.

இந்த இடத்தில் இந்த சங்கத்தினர் பற்றி  ஒரு சில தகவல்களையும் குறிப்பிடுவது பொருத்தமாக இருக்குமென்று நினைக்கிறேன்.

இதே தமிழ்நாடு பொதுப் பணித்துறையின் மூத்த பொறியாளர் சங்கம் ஏற்கனவே முல்லைப் பெரியாறு தொடர்பான வழக்கு நீதி மன்றங்களில் நடை பெற்ற காலங்களில் எதிர்த்து வழக்காடிய கேரள அரசின் முகமூடியைக் கிழித்தவர்கள் என்பதையும் நாம் நினைவு படுத்திக் கொள்ள வேண்டும்.

முல்லைப் பெரியாறு அணை தொடர்பான பல தொழில் நுணுக்க விபரங்களை வெளியிட்டு நீதி மன்றங்களுக்கே வழிகாட்டிகளாகத் திகழும் வண்ணம் பல கருத்தரங்கங்களையும் குறுந்தகடுகளையும் வெளியிட்டு விழிப்புணர்வூட்டினர். மூத்தபொறியாளர்கள்  அவர்களுடைய பரப்புரைகளில் எடுத்துவைத்த கருத்துக்களைத் தாங்கித்தான் முல்லைப் பெரியாறு அணை தொடர்பான வழக்கின் தீர்ப்பு உச்ச நீதிமன்றத்தால் வழங்கப் பட்டு இன்று 142 அடிகள் தண்ணீர் தடையின்றி தேக்கப்பட்டு தமிழகத்தின் தேனி மற்றும் மதுரை மாவட்டங்கள் பட்டாசு வெடித்துக் கொண்டாடின.  கடந்த வெள்ளிக் கிழமை,  அந்த அணையைச் சுற்றி 142 பானைகளில் சர்க்கரைப் பொங்கல் பொங்கக் காரணமானவர்கள் இவர்கள்.

காவிரி நதிநீர்ப் பங்கீட்டுச் சிக்கல்- அதற்கான தீர்வுகள் பற்றிய ஆய்வினையும் ஒரு குறும்படத்தையும் இந்தக் குழுவினர் ஆய்ந்து அளித்தனர். வெறும் கோஷமும் வேஷமுமாகப் போன காவிரிப் பிரச்னையின் உள்ளார்ந்த உண்மைகளை தோல் உரித்துப் போட்டார்கள் இவர்கள்.

சேதுக்கால்வாய்த்திட்டத்தின் வாயில் அரசுகள் மண்ணை அள்ளிப் போட்டபோதும் அந்தத்திட்டம் அனைவருக்கும் பயனளிக்கும் திட்டமென்று ஆய்ந்து அறிக்கை தந்து அந்த அறிக்கையை கையேடாகவும்  வெளியிட்டது இந்த மூத்தோர் அமைப்பு.

தேசிய நீர்க் கொள்கையின் தீங்குகளைப் பட்டியலிட்டு அந்தக் கொள்கை எதிர்க்கப்படவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி துண்டறிக்கை முதலியவற்றை வெளியிட்டு தமிழ் மக்களிடையே தேவையான விழிப்புனர்வுகளைத் தொடர்ந்து ஏற்படுத்தி வருகிறது இந்த ‘கைம்மாறு வேண்டாத கடப்பாடு ‘ உடைய  அமைப்பு.

ஆகவே  அறிவார்ந்த ஆன்றோர் அங்கம் வகிக்கும் இந்த  அமைப்பு இத்தகைய அரும்பணிகளைத் தொடர்ந்து ஆற்றிக் கொண்டே இருக்கிறது என்பதை நாம் உணர வேண்டும்.

அதே வகையில்தான் காவிரி பாயும் கன்னித்தமிழ்நாட்டை – காவிரி பாயும் தஞ்சை வளர் மண்ணை பாலைவனமாக்கும் மீத்தேன் வாயு எடுக்கும் திட்டத்தை எதிர்த்து இந்த வயதானவர்கள் வரிந்து கட்டி இருக்கிறார்கள். அவர்கள் நம்முடன் பகிர்ந்து கொண்ட விழிப்புணர்வுக் கருத்துக்களை நாமும் அனைவருடனும் பகிர்வது நமது வாழ்வாதாரத்தை எதிர் நோக்கியுள்ள ஆபத்தை அறிந்து கொள்ள உதவும்.  இந்த ஆபத்தை இதன் மூலம் உணர்ந்து அதை  எதிர்த்து நாம் குரல் கொடுக்க வேண்டியதுடன் கூடிப் போராட வேண்டிய நிலைமைக்குத் தள்ளபட்டிருக்கிறோம் என்பதையும் தொடக்கமாக நாம் அறிந்து கொள்வது அவசியமாகும்.  

சோழவளநாடு என்ற பெயருடன் தமிழக மக்களுக்கு சோறும் சுகமும் விவசாயமும் வேலையும் அளித்து பேருதவி புரியும் காவிரியாறு ,

“ பூவார் சோலை மயிலாடப் புரிந்து குயில்களிசைபாட காமர் மாலையருகை நடந்தாய் வாழி காவிரி ! “ என்றும்

“ உழவர் ஓதை மதகு ஓதை உடைநீர் ஓதை தன்பதங்கொள் விழவர் ஓதை சிறந்து ஆர்ப்ப நடந்தாய் வாழி காவேரி ! “ என்றும் சிலப்பதிகாரத்தில் புகழப்படுகிறது. ( ஓதை = ஓசை என்பதன் மருவு )

‘சோழநாடு சோறுடைத்து’ என்கிற சொலவடைக்கு சொந்தமான நாட்டை சொர்க்கமாக ஆக்குவதற்கு காலம் காலமாக கட்டியம் கூறி நிற்பது காவிரி. தமிழர்களின் ஊணொடும் உயிரோடும் ஒன்றாய்க் கலந்த  ஒரு சுவையான சொல்லே காவிரி. இன்று அரசு அறிமுகபடுத்தப் போகும் மீத்தேன் எரிவாயு திட்டத்தால், ‘ சோழநாடு சேறுடைத்து ‘ என்று மாறிவிடுமோ என்ற அச்சமாக இருக்கிறது.

ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாய் மலைகளில் பிறந்து அலைகளில்  மறைந்து கலக்கும் காவேரி, அப்படிக் கலக்கும் முன்பு  தான் நடந்து வரும் பாதையைப் பண்படுத்தி பயிர் வளர்த்து,  உயிர் வளர்த்து , உலகையே  உயர்வுற வளர்க்கும் உயர் தன்மை படைத்தது.

இந்தக் காவிரி பாயும் டெல்டாபிரதேசத்தின் இயற்கையான அமைப்புகளை நாம் அறியும் போது நமது புருவங்கள் உயருகின்றன. இந்த அமைப்புகளை ஏற்படுத்தியவர்கள் எவரும் இன்றைக்கு இந்தப்  பகுதிகளை பாலவனமாக்கிப் பலியிடத் துடிக்கும் இன்றைய  அரசியல்வாதிகள் மற்றும் ஆள்வோரோ அல்லது ஏற்கனவே ஆண்டவர்களோ  அல்ல. வரலாற்று ரீதியாக , இத்தகைய அமைப்பை இயற்கையும் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சோழ மன்னர்களும் குறிப்பாக கல்லணையைக் கட்டிய கரிகால் சோழனும் வருங்காலத் தலைமுறைக்குத் தாயாக இருப்பாள் காவேரி என்ற தத்துவத்தில்  ஏற்படுத்தித் தந்தார்கள். ஒரு தலைமுறைக்கல்ல பல தலைமுறைகளுக்காக என்றோ ஆட்சிசெய்த மன்னாதிமன்னர்கள்   திட்டமிட்டு ஏற்படுத்திய அமைப்புகள் இன்றைய மண்ணாங்கட்டி அரசியல்வாதிகளால் சூறையாடப்பட சூத்திரம் வகுக்கப்பட்டு இருக்கிறது. பாட்டன் தேடிய சொத்துக்களை பேரன்மார்கள் காப்பாற்றாமல் காலி பண்ணத் துடிக்கிறார்கள்.

36 கிளை ஆறுகள்  2300 கிலோ மீட்டர் நீளமுள்ள கால்வாய் மற்றும் வாய்க்கால்கள் கொண்ட கட்டமைப்பு கொண்டது காவிரிப் படுகை. ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டம் இன்று தஞ்சை, நாகை, திருவாரூர் என்று பிரிக்கப்பட்டு இருந்தாலும் இம்மாவட்டங்களில் ஒரு இடத்தில் கூட மலைகளோ,  பாறைகளோ இல்லாத பரந்து விரிந்த சமவெளிப் பிரதேசம் என்பது இயற்கை கொடுத்த நன்கொடை. இந்த நன்கொடையைப் பறித்து தங்களின் கணக்கில் போட பல தீயவர்கள் திட்டம் தீட்டிவிட்டார்கள்.

எங்கோ கர்நாடகத்தில் உற்பத்தியாகி தனது பயணத்தைத் தொடங்கும்  காவிரி பல மைல் தூரங்களையும்  பல மாநிலங்களையும் பல மாவட்டங்களையும் கடந்து நாட்டின் தென்பகுதியில் உள்ள வங்காள விரிகுடாக் கடலில் தனது பயணத்தை முடித்துக் கொள்கிறது. தனது பயணப்பாதையை சொர்க்க பூமியாக ஆக்குகிறது காவிரி. இந்தக் காவிரியின் பாதையில்தான் கைவைக்கத் துணிந்துவிட்டார்கள் . காவிரி  என்றாலே சோலைவனங்கள் விரியும் என்றுதான்  பொருள்.  அதன் இயல்பை மாற்றி பாலைவனமாக ஆக்கப் பன்னாட்டு நிறுவனங்களுடன் கூட்டுச் சேர்ந்து கொள்ளையடிக்க அரசுகளே வழி திறந்து விட்டு இருக்கும் அவலம் எப்படி இருக்கிறது என்றால் நமது சொந்த வீட்டில் கொள்ளை அடிக்க ஒரு குஜராத்தியின் கம்பெனிக்கு கொல்லைப் புறக் கதவின் தாழ்ப்பாளைத் நடு இரவில் திறந்துவிடுவது போலத்தான் இருக்கிறது.

தமிழ்நாட்டுக்கு - தமிழ் இனத்துக்கு உயிரூட்டும் காவிரிப் பாசனப் பகுதிகளுக்கும் - அங்குவாழும் விவசாயப் பெருங்குடி மக்களுக்கும் மீத்தேன் எரிவாயு எடுக்கும் திட்டம் தீங்கானது; தீவிரமாக எதிர்க்கப்பட வேண்டியது என்பதை நாம் உணர வேண்டும்; எதிர்க்க வேண்டும்; போராட வேண்டும்; தடுத்து நிறுத்திட வேண்டும்.

பழம்பெரும் வரலாறும் பண்பாடும் கொண்ட நமக்கும் நமது பூமிக்கும்  இந்தத் திட்டத்தால் வரவிருக்கும் நிலவளத்துக்கான   தீங்குகள் யாவை? இந்தத்திட்டம் செயல் படும் முறைகள் யாவை? இந்தத்திட்டம் நிறைவேறினால் வரும் உடல்நலத்துக்கான   பாதிப்புகள் யாவை? போன்ற அனைத்து செய்திகளையும் அறிவியல் ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் தமிழ்நாடு மூத்த பொறியாளர் சங்கத்தின் பொறியாளர்கள் ஊதும் அபாய சங்கு பற்றி  இந்தக் குறுந்தொடரில் நாம் ஆராயலாம். இன்ஷா அல்லாஹ்.  

பாலை வார்த்த நிலம் – இனி
பாலை நிலமாய் ஆகிடுமா ?
ஆய்வு தொடரும்...  
கலந்தாய்வு: பேராசிரியர் அப்துல் காதர் M.A. M. Phill
எழுத்தாக்கம்: இப்ராஹீம் அன்சாரி M.Com,

குறிப்பு: பேராசிரியர் அப்துல் காதர் அவர்களின் ஆலோசனைப்படி இந்தத் தொடர் பதிவு அதிரை நியூஸ் வலைதளத்தில் வெளியிடப்படுகிறது. பிரச்சனையின் முக்கியத்துவம் கருதி பிற சகோதர வலைதளங்களும் வெளியிடுவதை வரவேற்கிறோம்.