.

Pages

Showing posts with label ADIRAI FM 904. Show all posts
Showing posts with label ADIRAI FM 904. Show all posts

Thursday, July 23, 2020

அதிரை FM சார்பில் கபசூரக் குடிநீர் விநியோகம் (படங்கள்)

அதிராம்பட்டினம், ஜூலை 23
கரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில், அதிரை FM 90.4 சமூகப் பண்பலை வானொலி சார்பில், பொதுமக்களுக்கு கப சுரக் குடிநீர் இன்று வியாழக்கிழமை வழங்கப்பட்டது.

நிகழ்வுக்கு, அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி நிர்வாகப் பொருளாளர் ஹாஜி முகமது இப்ராஹீம் தலைமை வகித்தார். நிகழ்வை, பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனை சித்தா மருத்துவப்பிரிவு மருத்துவர் டாக்டர் இ.அருண்குமார் தொடங்கி வைத்து, கப சூரக் குடிநீரின் அவசியம் மற்றும் அதன் பயன்பாடு பற்றி பொதுமக்களிடம் எடுத்துரைத்தார். மேலும், கரோனா வைரஸ் தடுப்பு விழிப்புணர்வு பரப்புரை வழங்கினர்.

இந்நிகழ்வில், அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனை மருந்தாளுநர் (சித்தா மருத்துவப்பிரிவு) நிவேதா, அதிரை FM சமூகப் பண்பலை வானொலி நிகழ்ச்சி தயாரிப்புக் குழுவினர் சேக்கனா எம்.நிஜாமுதீன், மணிச்சுடர் ஏ.சாகுல் ஹமீது, நிலைய ஒருங்கினைப்பாளர் கண்ணன், சவுண்ட் இன்ஜினியர் உமர் ஆகியோர் கலந்துகொண்டு, அதிராம்பட்டினம் சேர்மன் வாடி, பெரிய கடைத்தெரு ஆகிய பகுதிகளில் பொதுமக்களுக்கு கப சூரக் குடிநீரை நேரில் சென்று வழங்கினர். நிகழ்ச்சி ஏற்பாட்டினை, அதிரை FM 90.4 சமூகப் பண்பலை வானொலி செய்திருந்தது.
  
 
 
 
 
 
 
 
 
 

Sunday, December 29, 2019

அதிரை FM, 4-வது ஆண்டு தொடக்க விழா ~ நேயர்கள் சந்திப்பில் B.H அப்துல் ஹமீது பங்கேற்பு (படங்கள்)

அதிராம்பட்டினம், டிச.29
'நமது சமூகம், 'நமது நலன்', என்பதை குறிக்கோளாகக் கொண்டு, பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம், முத்துப்பேட்டை, மதுக்கூர், மல்லிபட்டினம் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமப்புற பகுதிகளின் சமூக மேம்பாடு, கல்வித் தரம், ஆரோக்கியம், மருத்துவம், விவசாயம், தொழில், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, வேலை வாய்ப்பு ஆகியவற்றில் மேம்பாட்டிற்காக, அதிராம்பட்டினம் தொழில் அதிபர் ஹாஜி எம்.எஸ். தாஜுதீன் அவர்களால் சமூக பண்பலை வானொலி நிலையம் அதிராம்பட்டினத்தில் நிறுவப்பட்டது. இந்நிலையத்தை, கடந்த 18-12-2016 அன்று தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர்  ஆ.அண்ணாதுரை தொடங்கி வைத்தார்.

இந்நிலையில், சமூக பண்பலை வானொலியின் 4-வது ஆண்டு தொடக்க விழா ~ நேயர்கள் சந்திப்பு நிகழ்ச்சி, அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, அதிரை FM ~ 90.4 நிறுவனர் ஹாஜி எம்.எஸ் தாஜுதீன் தலைமை வகித்தார்.

சிறப்பு விருந்தினராக இலங்கை சர்வதேச வானொலி அறிவிப்பாளர் பி.எச் அப்துல் ஹமீது கலந்துகொண்டு பேசியது;
'அந்தக்காலத்தில் சமூக வானொலியின் முக்கியத்துவம் உணரப்படவில்லை. ஆனால், இப்போது அதன் அவசியம் உணரப்பட்டுள்ளது. வானொலி என்பது அன்றும், இன்றும், இனி என்றும் மிக சக்தியுள்ள ஒரு சாதனம். அதனை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதை பலர் மறந்திருக்கும் நிலையில்,  சமூக வானொலிகளால் மட்டும்தான் அந்த பெரும்பணியை முன்னெடுத்துச் செல்ல முடியும். காரணம், சமூக வானொலியில் அரசியல், சமயம் போன்றவை ஒலிபரப்ப அனுமதியில்லை. சமூக மேம்பாடு, விவசாயம், கல்வி, வேலை வாய்ப்பு, தொழில்வளம், மீனவர் நலன், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மருத்துவம் போன்ற மக்கள் நலன் சார்ந்த நிகழ்ச்சிகள் ஒலிப்பரப்படுகிறது. வெறும் பொழுதுபோக்கை மையமாகக்கொண்டு இயங்கும் வானொலிகள் மத்தியில், மக்களின் கவனத்தை சமூக வானொலிகள் திருப்பி விடுகின்றன. மக்களுக்கு முதலில் தேவை கல்வி, அதையடுத்து தகவல், அதனை அடுத்துதான் பொழுதுபோக்கு. எனவே, சமூக வானொலிகள் மிக மிக முக்கியத்துவம் வாய்ந்தவை. மேலை நாடுகளில் இந்த சமூக வானொலிகள் பெரும் பணியை ஆற்றிருக்கின்றன. நேயர்கள் வட்டம் சிறிதாக இருந்தாலும் கூட தன்னைத்தானே மேம்படுத்திகொள்ள வேண்டும். தன்னுடைய வாழ்வியலை மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என்று நினைக்கும் ஒவ்வொரு மனிதனும் தன்னுடைய வாழ்க்கை பொழுதுகளை வீணாக்காமல் நினைக்கும் ஒவ்வொருவரும் இந்த சமூக வானொலியின்பால் செவிகளை திருப்புவார்கள்' என்றார்.

மேலும், சமூக வானொலியில் ஒலிப்பரப்பாகும் நிகழ்ச்சி பற்றிய கருத்து, சமூக மேம்பாட்டிற்கு வானொலியின் பங்கு, வானொலியில் பணியாற்றிய தனது அனுபவங்கள் உள்ளிட்ட நேயர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு பி.எச் அப்துல் ஹமீது பதிலளித்துப் பேசினார். 

முன்னதாக, பேராசிரியர் எம்.ஏ முகமது அப்துல் காதர் வரவேற்றுப்பேசினார். பேராசிரியர் கே.செய்யது அகமது கபீர் விருந்தினர் அறிமுக உரை நிகழ்த்தினார். என்.இசட். அகமது முனாவர் வாழ்த்துரை வழங்கினார். மு.செ.மு ராஃபியா, நிலைய அறிவிப்பாளர் கண்ணன் ஆகியோர் நிகழ்ச்சிகளை தொகுத்தளித்தனர். நிறைவில், இப்ராஹிம் நன்றி கூறினார்.

இந்நிகழ்ச்சியில், அதிரை FM ~ 90.4 நிகழ்ச்சி தயாரிப்புக்குழுவினர், நிலைய அறிவிப்பாளர்கள், வானொலி நேயர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Thursday, December 28, 2017

அதிராம்பட்டினம் செக்கடிமேடு நடைமேடை பயிற்சிகத்தில் விழிப்புணர்வு கருத்தரங்கம் ~ பங்கேற்க அழைப்பு !

அதிராம்பட்டினம் பகுதி மக்களின் உடல் நலன் கருதி அதிராம்பட்டினம் செக்கடி பள்ளிவாசல் அருகில் நடைப்பாதை இரண்டு வருடங்களுக்கு முன்பு துவங்கப்பட்டது . அழகான குளம், அமைதியான இடம் குளக்கரையில் நிழல் தரும் பசுமையான மரங்கள், பூச்செடிகள், நடைப்பயிற்சி செய்ய ஃபேவர் பிளாக் சிமெண்ட் தளங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சிறுவர்களுக்கான விளையாட்டு சாதனங்கள், பெரியவர்களுக்கான எளிய உடற்பயிற்சி செய்யும் சாதனங்கள் ஆகியவனவும் அமைக்கப்பட்டுள்ளன.

காலையில் 4.30 மணிமுதல் 7.00 மணி முடிய பெண்களுக்காவும் காலை 7.00மணி முதல் 9.00மணிமுதல் ஆண்களுக்காகவும் மீண்டும் மாலையில் 4.00மணி முதல் 6.30மணி முடிய ஆண்களுக்காகவும் நடைபயிற்சி செய்ய நேரம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் தொடர்ந்து நடைப்பயிற்சி செய்துவருகிறனர்.

தொடர்ந்து நடைப்பயிற்சி செய்பவர்கள் மூட்டுவலி, சர்க்கரைவியாதி, இரத்தகொதிப்பு(BP), முதுகுவலி போன்ற நோய்கள் குறைந்து ஆரோக்கியத்துடன் இருப்பதாக அனுபவங்களை கூறிவருகின்றார்கள்.

நடைப்பயிற்சியை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக வருகிற 29.12.2017 வெள்ளிக்கிழமை மாலை 4.00 மணியிலிருந்து 6.00 மணி முடிய நலம் தரும் நடைப்பயிற்சி என்ற தலைப்பில் விழிப்புணர்வு கருத்தரங்கம் அதிராம்பட்டினம் செக்கடி பள்ளிவாசல் அருகில் உள்ள நடைப்பாதையின் தென்பகுதியில் நடைபெறவுள்ளது.

கருத்தரங்கில் டாக்டர். A.அப்துல் ஹக்கீம் M.B.B.S.,DA.அவர்களும், அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரி தமிழ்துறை பேராசிரியர் கா.செய்யது அகமது கபீர் MA.,M.Phil.அவர்களும், பட்டுக்கோட்டை நடைபயிற்சியாளர்கள் மன்ற இணைச்செயலாளர் மற்றும் உடற்கல்வி இயக்குநர் திரு.D.ரவிச்சந்தர் MA.,MP.Ed.,PG Dip ( in yoga) மற்றும் இயன்முறை மருத்துவர் D. செல்வசிதம்பரம் BPT M.Sc., (UK) ஆகியோர்கள் கலந்துகொண்டு இருதயநோய், சர்க்கரைநோய், உடற்பருமன், இரத்த கொதிப்பு மூட்டுவலி போன்ற நோய்களுக்கான தடுப்பு முறைகளையும் , நடைப்பயிற்சி செய்யும் முறை , நடைப்பயிற்சியினால் ஏற்படும் நன்மைகள் பற்றியும் சிறப்பான தகவல்களை வழங்கவுள்ளனர்.

கருத்தரங்கில் கலந்துகொள்ள பெண்களுக்காக ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தில் தனி இடம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கருத்தரங்கில் கலந்துகொண்டு பயன்பெற அனைவரையும் அதிரை எஃப்.எம் 90.4 மற்றும் ஷம்சுல் இஸ்லாம் சங்க இளைஞர் அமைப்பினர் சார்பாக கேட்டுக்கொள்கிறார்கள்.

தகவல்: வ.விவேகானந்தம்
தலைவர், சுற்றுச்சூழல் மன்றம், அதிராம்பட்டினம்

Sunday, December 17, 2017

அதிராம்பட்டினம் பள்ளிக்கூடங்களில் சுற்றுச்சூழல் கல்வி வழங்க அனுமதிக்க கோரிக்கை !

அதிராம்பட்டினம், டிச.17
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் பேரூராட்சி பகுதி பள்ளிகளில் சுற்றுச்சூழல் கல்வி வழங்க அனுமதி கேட்டு மாவட்ட ஆட்சியருக்கு அதிராம்பட்டினம் சுற்றுச்சூழல் மன்றம் சார்ப்பில் கோரிக்கை மனு அனுப்பியது.

அவ்வமைப்பின் தலைவர் வ. விவேகானந்தம் அனுப்பிய மனுவில் கூறியிருப்பது; 
‘தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம், அதிராம்பட்டினம் பேரூராட்சி மற்றும் இப்பகுதியை சுற்றியுள்ள பள்ளிகளில் பயிலும் தேசிய மாணவர்படை, தேசிய பசுமைப்படை, நாட்டு நலப்பணித்திட்டம், ஜுனியர் ரெட் கிராஸ், சாரணர் படை போன்ற அமைப்புகளில் உள்ள மாணவ தொண்டர்களுக்கும் மற்றும் இதர மாணவ, மாணவியர்களுக்கும் அதிராம்பட்டினம் சுற்றுச்சூழல் மன்றம் சார்பில் சுற்றுச்சூழல் கல்வி, திடக்கழிவு மேலாண்மை பயிற்சி, வீட்டு காய்கறித் தோட்டம் அமைத்தல், பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு போன்றவற்றில் பயிற்சி அளித்து அதன் மூலம் மேற்கண்ட பகுதிகளை தூய்மையான பசுமையான பகுதிகளாக வைத்திட விரும்புகிறோம்.

வருகிற 02.12.2018 முதல் இப்பயிற்சிகளை மாணவ, மாணவிகளின் வழக்கமான பாடவேளைகள் பாதிக்காதவாறு நடத்தப்படவுள்ளது. இப்பயிற்சிகளை அதிராம்பட்டினம் பேரூராட்சி அலுவலர்கள், பட்டுக்கோட்டை ஜுனியர் சேம்பர் இண்டர்நேஷனல் அமைப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிபுணர்களை கொண்டு நடத்தப்படும் என தெரிவித்துக் கொள்கிறோம்.

எனவே, அதிராம்பட்டினம் பேரூராட்சி மற்றும் அதனை சுற்றியுள்ள அரசு மற்றும் தனியார் மேல்நிலைப்பள்ளிகள், மெட்ரிகுலேஷன் பள்ளிகள், உயர்நிலைப்பள்ளிகள், நடுநிலைப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு பயிற்சி முகாம்களை நடத்திக் கொள்ள அனுமதியளிக்க வேண்டுமென கோரிக்கை மனுவில் கூறப்பட்டுள்ளது.

Saturday, December 16, 2017

துப்புரவுப் பணியாளர்களுக்கு மருத்துவ முகாம் நடத்த கோரிக்கை !

கோப்புப்படம்
அதிராம்பட்டினம், டிச.16
துப்புரவு தொழிலாளர்களுக்கு மருத்துவ முகாமினை வருடத்திற்கு நான்கு தடவை நடத்த வேண்டும் என தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியருக்கு அதிரை சுற்றுச்சூழல் மன்றம் கோரிக்கை வைத்துள்ளது.

இதுகுறித்து அவ்வமைப்பின் தலைவர் வ.விவேகானந்தம் 
கோரிக்கை மனுவில் கூறியிருப்பது, 
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள், சிற்றூராட்சிகள், மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், தனியார் நிறுவனங்கள் போன்ற அமைப்புகளில் துப்புரவு தொழிலாளர்கள் பணிபுரிகிறார்கள்.

இவர்கள் கழிவுநீர் சாக்கடைகளில் உள்ள அடைப்பை நீக்குதல், குப்பைகள் ஆகியவற்றை அப்புறப்படுத்துதல் போன்ற பணிகளை தினந்தோறும் செய்து வருகிறார்கள். இதனால் இவர்களுக்கு தோல்நோய்கள், சுவாசக் கோளாறுகள், கண்நோய்கள், டெட்டனஸ், எலிக்காய்ச்சல் போன்ற தொற்றுநோய்கள் வரவாய்ப்புள்ளன.

எனவே, துப்புரவு தொழிலாளர்களுக்கு சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் கையுறை, முகஉறை போன்ற பாதுகாப்பு சாதனங்களை வழங்கவேண்டும். மேலும் தேசிய மனித உரிமை ஆணையத்தின் பரிந்துரையின் படி மருத்துவ துறை மற்றும் பொது சுகாதாரத்துறை மூலம் வருடந்தோறும் துப்புரவு தொழிலாளர்களுக்கு சனவரி, ஏப்ரல், ஜுலை, அக்டோபர் ஆகிய நான்கு மாதங்களில் இலவசமாக முழு அளவிலான மருத்துவ பரிசோதனைகள், தேவையான தடுப்பூசிகள் மற்றும் சிகிச்சைகளை தொடர்ந்து வழங்க ஆவண செய்ய வேண்டுகிறோம்” என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Sunday, November 12, 2017

அதிரையில் 'பறவை ஆராய்ச்சியாளர்' டாக்டர் சலீம் அலி பிறந்தநாள் விழா (படங்கள்)

ஓவியப் போட்டியில் வெற்றிபெற்ற மாணவி இஸ்ரா பரிசு வழங்கி பாராட்டு
அதிராம்பட்டினம், நவ.12
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் சுற்றுச்சூழல் மன்றம் சார்பில். பறவை ஆராய்ச்சியாளர் டாக்டர் சலீம் அலி பிறந்த நாள் விழா அதிரை இமாம் ஷாஃபி மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

விழாவிற்கு, அதிராம்பட்டினம் சுற்றுச்சூழல் மன்றத் தலைவர் வ.விவேகானந்தம் தலைமை வகித்தார். முன்னிலை வகித்த வழக்குரைஞர் ஏ. அப்துல் முனாப் வாழ்த்துரை வழங்கினார்.

விழாவில், சிறப்பு விருந்தினராக தஞ்சை தமிழ் பல்கலைக் கழக சுற்றுச்சூழல் மற்றும் மூலிகை அறிவியல் துறைத் தலைவர் ச.சிவசுப்பிரமணியன் கலந்துகொண்டு பேசியது;
'பறவைகள் வாழ்வு, இயற்கைப் பாதுகாப்புக்காக வாழ்நாளின் பெரும் பகுதியை செலவிட்ட ஆராய்ச்சியாளர் டாக்டர் சலீம் மொய்சுதீன் அப்துல் அலி. நோய்வாய்ப்பட்ட தனது இறுதி நாளில் தனது மாணவக் குழுவினரை சந்தித்தபோது, தான் விட்டுச்செல்லும் ஆராய்ச்சி பணிகளில் சிலவற்றை  எனது டைரியில் உள்ளது. அவற்றை நீங்கள் முன்னெடுத்துச் செல்ல வேண்டும். திடீரென எனது இறப்பு செய்தி கேட்டு, டெல்லிக்கோ, மும்பைக்கோ யாரும் வந்து என்னை பார்க்க வர வேண்டாம். இதற்கு பதிலாக, உங்களுக்கு அருகில் உள்ள பள்ளிக்கூடங்களுக்கு சென்று அங்கு கல்வி பயிலும் மாணவர்களை வயல்களுக்கு அழைத்துச் சென்று ஒரு மாணவருக்கு குறைந்தபட்சம் 10 பறவைகள் குறித்து கற்றுக்கொடுங்கள். இதுதான் எனக்காக நீங்கள் செய்யக்கூடிய சிறந்த பிரார்த்தனை என எங்களிடம் அறிவுரை வழங்கினார். இவரைப்போன்று ஒவ்வொரு மாணவர்களும் இயற்கை பாதுகாப்பில் தனிக்கவனம் செலுத்த வேண்டும்.
சுற்றுச்சூழல் மாசு ஏற்படாமல் பாதுகாக்க வேண்டும். நாம் வசிக்கும் பகுதியை தூய்மை மிகுந்த பகுதியாக மாற்ற வேண்டும்' என்றார்.

விழாவையொட்டி, பள்ளி மாணவர்களுக்கு 'பறவைகள்' என்ற தலைப்பில் ஓவியப்போட்டிகள் நடத்தப்பட்டன. இதில், அதிரை இமாம் ஷாஃபி மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி, காதிர் முகைதீன் ஆண்கள் / பெண்கள் மேல்நிலைப்பள்ளிகள், அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, நடுத்தெரு, மேலத்தெரு, கரையூர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிகள், ஏ.எல் மெட்ரிக். பள்ளி ஆகிய 8 பள்ளிகளைச் சேர்ந்த 329 மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர். போட்டியில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ், புத்தகங்கள் பரிசாக வழங்கப்பட்டன. விழாவில், சிறப்பு அழைப்பாளராக மாவட்ட வன அலுவலர் (ஓய்வு) மு. அன்பழகன் கலந்துகொண்டு பரிசுகளை வழங்கி பாராட்டுத் தெரிவித்தார்.

முன்னதாக, அவ்வமைப்பின் செயலர் எம்.எஃப் முகமது சலீம் வரவேற்றார்.  அவ்வமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் செய்யது அகமது கபீர் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி, விழா முடிவில் நன்றி கூறினார்.

இவ்விழாவில், மேல்மருவத்தூர் ஆதிபரா சக்தி மன்ற மாவட்டச் செயலர்  வை.முத்துவேல், ஜேசிஐ அமைப்பின் மண்டல பயிற்றுநர் ஸ்ரீநாத், ஈஸ்ட் கோஸ்ட் அகெதெமி சிபிஎஸ்இ பள்ளி இயக்குநர் டி.வி ரேவதி, இமாம் ஷாஃபி மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி இயக்குநர் சாகுல் ஹமீது, முதல்வர் மீனா குமாரி, லயன்ஸ் சங்க மாவடத் தலைவர் சாரா அகமது, ரோட்டரி சங்கத் தலைவர் ஆறுமுகம், அதிரை சுற்றுச்சூழல் மன்ற நிர்வாகிகள், உறுப்பினர்கள், பள்ளி ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.