அதிரை மேலத்தெரு சானாவயல் பகுதியை சேர்ந்தவர் முஹம்மது இப்ராஹீம். இன்று காலை சமைப்பதற்காக மார்க்கெட்டிற்கு சென்று காய்கறிகள் வாங்கியுள்ளார். இவற்றை வீட்டிற்கு கொண்டு வந்து நறுக்கும் போது, கத்தரிக்காயில் அரபி எழுத்துகள் பொறிக்கப்பட்டுள்ளதை கண்டு ஆச்சரியமடைந்தார்.
தகவலறிந்த அக்கம் பக்கத்தினர் அரபி எழுத்துகளுடன் காணப்படும் கத்தரிக்காயை ஆச்சரியத்துடன் பார்வையிட்டு சென்றனர். இதனால் இந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.
இதுகுறித்து 'முஹம்மது இப்ராஹீம்' நம்மிடம் கூறுகையில்...
'கத்தரிக்காயில் அரபி எழுத்துகள் பொறிக்கப்பட்டுள்ளதை கண்டு வியந்த நான் உடனே உள்ளூர் இஸ்லாமிய மார்க்க அறிஞர்களிடம் இரண்டு துண்டாக நறுக்கிய கத்திரிக்காயை எடுத்துச் சென்று காட்டினேன். பார்வையிட்ட அவர்கள் இவை அரபி எழுத்துதான் என்று கூறினார்கள்' என்றார்.
இதுகுறித்து மார்க்க அறிஞர்கள் கூறும் போது...
'சிலர் கத்தரிக்காயில் அல்லாஹ் பெயர், மாங்காயில் அல்லாஹ்வின் பெயர்,
தேங்காயில் அல்லாஹ்வின் பெயர், உடலில் அல்லாஹ் அல்லது நபி பெயர், மேகத்தில் அல்லாஹ் அல்லது நபி பெயர் என இது போன்ற செய்திகளை எல்லாம் இஸ்லாத்தின் அதிசயம் என்று கருதுகின்றனர். இது முற்றிலும் தவறானதாகும். இறைவன் குர்ஆனில் எதை சொல்லியிருக்கிறானோ, இறைவனின் ரசூல் (ஸல்) அவர்கள் எதை நமக்கு நடைமுறைப் படுத்தியிருக்கிறார்களோ அதை மட்டும் பின்பற்றுங்கள்' என்கின்றனர்.