.

Pages

Showing posts with label பேராவூரணி செய்திகள். Show all posts
Showing posts with label பேராவூரணி செய்திகள். Show all posts

Saturday, September 19, 2020

பேராவூரணி அருகே துணை மின் நிலையம் திறப்பு!

பேராவூரணி, செப்.19-
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே திருவத்தேவன் பகுதியில், 33/11 கி.வா துணை மின் நிலையத்தை, காணொளிக் காட்சி மூலம் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சனிக்கிழமை திறந்து வைத்தார். 

இதையொட்டி திருவத்தேவன் துணை மின் நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் மா.கோவிந்தராசு தலைமை வகித்தார். 

நிகழ்ச்சியில், மின்வாரிய செயற்பொறியாளர் வி.மாறன், உதவி செயற்பொறியாளர் கமலக்கண்ணன், உதவி மின் பொறியாளர் ஸ்ரீராம், சேதுபாவாசத்திரம் ஒன்றியப் பெருந்தலைவர் மு.கி.முத்து மாணிக்கம், அதிமுக ஒன்றியச் செயலாளர்கள் சேதுபாவாசத்திரம் வடக்கு நாடியம் சிவ.மதிவாணன், தெற்கு அருணாச்சலம், பேராவூரணி தெற்கு கோவி.இளங்கோ, சேதுபாவாசத்திரம் தெற்கு ஒன்றிய இணைச் செயலாளர் விஜயா காந்தி, ஊராட்சி மன்றத் தலைவர்கள் திருவத்தேவன் முரளி, அடைக்கத்தேவன் ஆறுமுகம், குப்பத்தேவன் பாலமுருகன், செந்தலை ரகுமத்துல்லா, ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர்கள் சுதாகர், சையது முகமது, பாமா செந்தில்நாதன், சாகுல், முன்னாள் ஒன்றியக்குழு உறுப்பினர் அம்மணிசத்திரம் பாலு, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் முருகன், கணேசன், அருள்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர். 

இத்துணை மின்நிலையம் 16 எம்.வி.ஏ திறனுடன் டிடியூஜிஜேஒய் திட்டத்தில் அமைக்கப்பட்டு, செயல்படத் தொடங்கியதன் மூலம், திருவத்தேவன் பகுதியைச் சுற்றி உள்ள 15 க்கும் மேற்பட்ட கிராமங்களில் தடையில்லா சீரான மின் விநியோகம் கிடைக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர். 

Saturday, September 12, 2020

நீட் தேர்வு மையத்தில், முன்னேற்பாடு பணிகள் குறித்து சார் ஆட்சியர் ஆய்வு (படங்கள்)


பேராவூரணி செப்.13-
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே உள்ள, வீரியங்கோட்டை அட்லாண்டிக் பன்னாட்டுப் பள்ளியில், நீட் தேர்வு முன்னேற்பாடு பணிகள் குறித்து பட்டுக்கோட்டை சார் ஆட்சியர் பாலசந்தர் சனிக்கிழமை மாலை ஆய்வு நடத்தினார். 

பேராவூரணி பகுதியில் முதன்முறையாக நீட் தேர்வு எழுதும் மையமாக, வீரியங்கோட்டை அட்லாண்டிக் பள்ளிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இப்பள்ளியில் 300 மாணவ, மாணவிகள் (செப்.13) ஞாயிற்றுக்கிழமை, தேர்வு எழுத உள்ளனர். 

மதியம் 2 மணி முதல் 5 மணி வரை தேர்வு நடைபெறுகிறது. தேர்வு மையத்தில் காலை 11 மணி முதல் மதியம் 1.30 வரை தேர்வர்கள் அனுமதிக்கப்படுவர். மாலை 5 மணிக்கு தேர்வு முடிந்து, 5.30 க்கு தேர்வர்கள் வெளியே வருமாறு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

இந்நிலையில், சனிக்கிழமை மாலை, பட்டுக்கோட்டை சார் ஆட்சியர் பாலசந்தர், தேர்வு மையத்தில் ஆய்வு செய்தார். அப்போது, அங்கிருந்து அலுவலர்களிடம், தேர்வு மையத்தில் கிருமிநாசினி, கை கழுவும் வசதி ஏற்படுத்த வேண்டும். தேர்வர்களின் உடல் வெப்பநிலையை பரிசோதனை செய்தும், முகக்கவசம் அணிந்தும் தேர்வெழுத அனுமதிக்க வேண்டும். தேர்வர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து தரவேண்டும்" என அறிவுறுத்தினார். 

ஆய்வின் போது வட்டாட்சியர் க.ஜெயலெட்சுமி, சேதுபாவாசத்திரம் ஊராட்சி ஒன்றிய ஆணையர் கிருஷ்ணமூர்த்தி, குருவிக்கரம்பை சரக வருவாய் ஆய்வாளர் சுபத்ரா, முதுநிலை வருவாய் ஆய்வாளர் சுப்பிரமணியன், கிராம நிர்வாக அலுவலர்கள் ராஜசேகரன், கணேசன், சுகாதார ஆய்வாளர் முருகானந்தம் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர். 


Thursday, September 10, 2020

பேராவூரணியில் ஆசிரியர்களை பாராட்டி லயன்ஸ் சங்கம் விருது!


தஞ்சாவூர் செப்.10-

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணியில் ஆசிரியர் தின விழாவையொட்டி, லயன்ஸ் சங்கம் சார்பில், ஆசிரியர்கள் விருது வழங்கி பாராட்டப்பட்டனர். 

பேராவூரணி உதயம் விழா அரங்கில், பேராவூரணி கோகனட்சிட்டி இன்ஸ்பயர் லயன்ஸ் சங்கம் சார்பில் ஆசிரியர் தினவிழா புதன்கிழமை மாலை நடைபெற்றது. 

இவ்விழாவிற்கு, லயன்ஸ் சங்கத் தலைவர் பொறியாளர் க.இளங்கோ தலைமை வகித்தார். மண்டலத் தலைவர் எம்.கனகராஜ், வட்டாரத் தலைவர்கள் ஆர்.திருவள்ளுவன், இ.வீ.காந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

ஏனாதிகரம்பை அரசு உயர்நிலைப்பள்ளி ஆசிரியர் தாயகம் அ.தமிழரசனுக்கு கல்விச் சுடர் விருது, வீரியங்கோட்டை - உடையநாடு ராஜராஜன் கல்வி நிறுவனத் தாளாளர் மனோன்மணி ஜெய்சங்கருக்கு சேவைச் செம்மல் விருது, பாராட்டு சான்றிதழ், கேடயம் வழங்கப்பட்டது. 

மேலும், ஆசிரியர்கள் எம்.நீலகண்டன், வி.ஜெய்சங்கர், டி.சோமு, என்.ரவி, ஏ.வி.சந்திரசேகர் ஆகியோர் பொன்னாடை அணிவித்து கௌரவிக்கப்பட்டனர். சிறப்பு விருந்தினராக, லயன்ஸ் ஓரியன்டேஷன் மாவட்டத் தலைவர், பேரா. சையது அகமது கபீர் கலந்து கொண்டு விருது பெற்றவர்களை வாழ்த்திப் பேசினார். 

விழாவில், பெருமகளூர் பகுதியைச் சேர்ந்த 10 ஆம் வகுப்பு மாணவி, புவனேஸ்வரிக்கு ஆன்லைன் படிப்புக்கு உதவும் வகையில் ரூ 11 ஆயிரம் மதிப்பிலான ஆன்ட்ராய்ட் மொபைல் போன் வழங்கப்பட்டது. 

விழாவில், முன்னாள் பேரூராட்சி உறுப்பினர் டாக்டர் மு.சீனிவாசன், டாக்டர் ஆர்.சந்திரசேகர், பாண்டியராஜன், பெஸ்ட் குமார், கே.ஆர்.வி.நீலகண்டன், வ.பாலசுப்பிரமணியன், அப்துல் கபூர், தெட்சிணாமூர்த்தி, மைதீன், தஸ்தகீர் மற்றும் பலர் கலந்து கொண்டனர். 

முன்னதாக பொருளாளர் பன்னீர் செல்வம் வரவேற்றார். செயலாளர் குமார் என்ற பழனிவேல் நன்றி கூறினார். 

படம் விளக்கம்: 

மனோன்மணி ஜெய்சங்கருக்கு சேவைச் செம்மல் விருது வழங்கும் போது எடுத்த படம் ஏனாதிகரம்பை அரசு உயர்நிலைப்பள்ளி ஆசிரியர் தாயகம் அ.தமிழரசனுக்கு கல்விச் சுடர் விருது, 

பெருமகளூர் பகுதியைச் சேர்ந்த 10 ஆம் வகுப்பு மாணவி, புவனேஸ்வரிக்கு ஆன்லைன் படிப்புக்கு உதவும் வகையில் ரூ 11 ஆயிரம் மதிப்பிலான ஆன்ட்ராய்ட் மொபைல் போன் வழங்கப்பட்டது. 



Saturday, September 5, 2020

அனுமதி இன்றி மணல் ஏற்றி வந்த 10 மாட்டு வண்டிகள் பறிமுதல் - தாசில்தார் அதிரடி!

பேராவூரணி செப்.05-
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி பகுதியில் அனுமதி இன்றி ஆற்று மணல் ஏற்றிச் சென்ற 10 மாட்டு வண்டிகளை பேராவூரணி தாசில்தார் திடீர் சோதனை நடத்தி பறிமுதல் செய்தார்.

பேராவூரணி பகுதியில் மணல் கடத்தல் அதிகளவில் நடைபெறுவதாக, பட்டுக்கோட்டை சார் ஆட்சியராக புதிதாகப் பொறுப்பேற்றுக் கொண்ட, ஐஏஎஸ் அலுவலர் பாலசந்தருக்கு தொடர்ந்து புகார் வரப்பெற்றது.

இதையடுத்து, அவரது உத்தரவின் பேரில், பேராவூரணி தாசில்தார் ஜெயலெட்சுமி தலைமையில், பேராவூரணி ஆர்.ஐ., கிள்ளிவளவன், முதுநிலை ஆர்.ஐ., சுப்பிரமணியன், நாட்டாணிக்கோட்டை விஏஒ சக்திவேல், கைவனவயல் விஏஒ கணேசன், டிரைவர் சிவகுமார், கிராம உதவியாளர்கள் கண்ணன், சக்திவேல், சுரேஷ், ராமஜெயம், திருமலை ஆகியோர் அடங்கிய, ரோந்துப்படை சனிக்கிழமை அதிகாலை 3 மணி முதல் ஆய்வு நடத்தினர்.

நாட்டாணிக்கோட்டை, செங்கமங்கலம், கழனிவாசல், கொரட்டூர், ஆதனூர், கருப்பமனை, ஊமத்தநாடு, பின்னவாசல், பெரியகத்திக்கோட்டை, பேராவூரணி நகர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இந்த திடீர் சோதனை காலை 9 மணி வரை நடைபெற்றது.

தாசில்தார் அதிரடி நடவடிக்கையில், அனுமதி இல்லாமல் மணல் ஏற்றி வந்ததாக, நாட்டாணிக்கோட்டையில் 4, பெரியகத்திக்கோட்டையில் 6 மாட்டு வண்டிகள் பறிமுதல் செய்யப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட மாட்டு வண்டிகள் பேராவூரணி போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைக்கப்பட்டது. அனுமதி இன்றி மணல் திருடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வருவாய்த்துறையினர் தெரிவித்துள்ளனர்.
 
 

Monday, August 31, 2020

பேராவூரணியில் TNTJ அமைப்பினர் 26 யூனிட் இரத்தம் தானம் (படங்கள்)

பேராவூரணி, ஆக.31
கரோனா பேரிடரை முன்னிட்டு, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் பேராவூரணி கிளை சார்பில், 123-வது இரத்த தானம் முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.

முகாமிற்கு, அவ்வமைப்பின் தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவர் கே ராஜிக் முகமது தலைமை வகித்தார். மாவட்ட மருத்துவரணி செயலாளர் ஹாஜா ஜியாவுதீன் முன்னிலை வகித்தார்.

முகாமை, பேராவூரணி காவல் உதவி ஆய்வாளர் ரவிச்சந்திரன் தொடங்கி வைத்தார். இதில், தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை குருதி பரிமாற்ற அலுவலர் மருத்துவர் வேல்முருகன், இரத்த வங்கி ஆலோசகர் கண்ணன் உள்ளிட்டோர் அடங்கிய மருத்துவக்குழுவினர் கலந்துகொண்டு, 26 யூனிட் இரத்தத்தை டி.என்.டி.ஜே அமைப்பின் கொடையாளர்களிடமிருந்து தானமாகப் பெற்றனர்.

இந்நிகழ்வில், மாவட்டப் பொருளாளர் அஸ்ரப், மாவட்ட துணைச் செயலாளர் பாவா உள்ளிட்ட அவ்வமைப்பினர் பலர் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியைக் கடைபிடித்து கலந்துகொண்டனர். முகாம் ஏற்பாட்டினை, பேராவூரணி கிளைத் தலைவர் முகமது கனி, செயலாளர் இலியாஸ், பொருளாளர் அல்லாபிச்சை, துணை தலைவர் ஷேக் அப்துல்லா, துணைச் செயலாளர் நசீர் மற்றும் கிளை மருத்துவ அணியினர் செய்திருந்தனர்.
 
 
 
 
 

Friday, June 26, 2020

சாத்தான்குளம் வியாபாரிகள் படுகொலையைக் கண்டித்து சிபிஎம் ஆர்ப்பாட்டம்!

தஞ்சாவூர் ஜூன்.27-
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் பகுதியைச் சேர்ந்த வியாபாரிகளான தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸ் ஆகியோர் படுகொலைக்கு காரணமான காவல்துறை, உடந்தையாக இருந்த மருத்துவர்கள், சிறைத் துறை அதிகாரிகள், நீதித்துறை நடுவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அவர்களை பணிநீக்கம் செய்து, கொலை வழக்குப் பதிவு செய்து, உடனடியாக கைது செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். அரசு வேலை வழங்க வேண்டும். காவல்துறையினருக்கு மனித உரிமைகள் குறித்த பயிற்சி வழங்க வேண்டும். காவல்நிலைய படுகொலைகளுக்கு முடிவு கட்ட வேண்டும்.

படுகொலை செய்த காவல்துறைக்கு மாவட்ட நிர்வாகம், தமிழக அரசு துணை போகக்கூடாது. பேராவூரணி காவல்துறையினர் விவசாயிகள் சங்கத் தலைவர் கொரட்டூர் நீலகண்டன் மீது பொய் வழக்குப் போடும் முயற்சியைக் கைவிட வேண்டும்" என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், பேராவூரணி அண்ணாசிலை அருகில் நேற்று வெள்ளிக்கிழமை காலை மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்துக்கு, ஒன்றியச் செயலாளர்கள் பேராவூரணி ஏ.வி.குமாரசாமி, சேதுபாவாசத்திரம் ஆர்.எஸ்.வேலுச்சாமி ஆகியோர் தலைமை வகித்தனர். மாவட்டக்குழு உறுப்பினர் வீ.கருப்பையா முன்னிலை வகித்தார். மாவட்டக்குழு உறுப்பினர் ஆர்.வாசு கண்டன உரையாற்றினார்.

ஆர்ப்பாட்டத்தில், கட்சி நகரச் செயலாளர் வே.ரெங்கசாமி, ஒன்றியக்குழு உறுப்பினர்கள் ஆர்.மாணிக்கம், இந்துமதி, ராமலிங்கம், ராஜா முகமது, கிளைச் செயலாளர் தயார் சுல்தான் மற்றும் 25 க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
 
 
 
 
 

Monday, May 11, 2020

கரோனா பாதித்த பகுதிகளில் திமுக சார்பில் ரூ 2 லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருட்கள் வழங்கல்!

தஞ்சாவூர் மே.11
பேராவூரணி அருகே, கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட பகுதியில் வசிக்கும், வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, திமுகவைச் சேர்ந்த பேராவூரணி பேரூராட்சி முன்னாள் பெருந்தலைவர் என்.அசோக்குமார் சார்பில் ரூ 2 லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது.

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள முடச்சிக்காடு ஊராட்சி கலைஞர் நகர் சமத்துவபுரம் பகுதியில் வசிக்கும் பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதையடுத்து அப்பகுதி சீல் வைக்கப்பட்டது.

இதனால் அப்பகுதி மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இது குறித்து அறிந்த பேராவூரணி பேரூராட்சி முன்னாள் பெருந்தலைவர் என்.அசோக்குமார், அப்பகுதியில் வசிக்கும் 210 குடும்பங்களுக்கு, தனது சொந்தப் பணத்தில் இருந்து ரூ 2 லட்சம் மதிப்பிலான அரிசி, பருப்பு, காய்கறி உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை திமுக சார்பில் திங்கள்கிழமை வழங்கினார்.

இதற்கான நிகழ்ச்சி திமுக மாவட்டச் செயலாளர் துரை.சந்திரசேகரன் எம்.எல்.ஏ., தலைமையில் நடைபெற்றது. தி.மு.க மாவட்ட பொருளாளர் எல்.ஜி.அண்ணா, பொதுக்குழு உறுப்பினர் முரசு,  சேதுபாவாசத்திரம் ஒன்றியப் பெருந்தலைவரும், வடக்கு ஒன்றியச் செயலாளருமான மு.கி.முத்து மாணிக்கம், சேதுபாவாசத்திரம் தெற்கு ஒன்றியச் செயலாளர் வை.ரவிச்சந்திரன், பேராவூரணி ஒன்றியச் செயலாளர் க.அன்பழகன், முன்னாள் மாவட்ட துணைச் செயலாளர் என்.செல்வராஜ், தலைமைக் கழக பேச்சாளர் அப்துல் மஜீத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முன்னதாக ஊராட்சி மன்றத் தலைவர் சக்கரவர்த்தி வரவேற்றார். ஊராட்சி மன்ற துணைத் தலைவர் நீலகண்டன் நன்றி கூறினார். கிராம மக்கள் சமூக இடைவெளியை கடைப்பிடித்து, முகக்கவசம் அணிந்து நிவாரணப் பொருட்களை பெற்றுச் சென்றனர்.

Sunday, May 10, 2020

அரசு மருத்துவமனையில் கர்ப்பிணிகளுக்கு சளிப் பரிசோதனை (படங்கள்)

பேராவூரணி மே.10-
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அரசு மருத்துவமனையில் கர்ப்பிணி பெண்களுக்கு சளிப்பரிசோதனை நடைபெற்று வருவதை வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் வி.சௌந்தர்ராஜன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அண்மையில், தஞ்சையில் மாவட்ட ஆட்சியர் ம.கோவிந்தராவ் முன்னிலையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், கொரோனா தடுப்பு மண்டல அலுவலரும், மூத்த ஐஏஎஸ் அதிகாரியுமான எம்.எஸ்.சண்முகம், கொரோனா நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, கர்ப்பிணி பெண்களுக்கு சளிப்பரிசோதனை நடத்தி கொரோனா உள்ளதா எனக் கண்டறிய உத்தரவிட்டார்.

அதன் முடிவுகளின் அடிப்படையில் நோய்த்தொற்று உள்ள கர்ப்பிணிகளை தனிமைப்படுத்தி, தஞ்சையிலும், பாதிப்பில்லாதவர்களை அந்தந்தப் பகுதி அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் பிரசவத்திற்காக அனுமதிக்க வேண்டும் என ஆலோசனை வழங்கினார்.

அதனடிப்படையில், பேராவூரணி, சேதுபாவாசத்திரம் வட்டாரத்திற்குட்பட்ட செருவாவிடுதி, குறிச்சி, காலகம், பின்னவாசல், அழகியநாயகிபுரம், பெருமகளூர், ஊமத்தநாடு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் பேராவூரணி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த, ஒரு வார காலத்திற்குள் பிரசவிக்க உள்ள 24 தாய்மார்களுக்கு, முதல்கட்டமாக பேராவூரணி அரசு மருத்துவமனையில் சளி மாதிரி எடுக்கப்பட்டு, பரிசோதனைக்காக தஞ்சாவூர் அனுப்பி வைக்கப்பட்டது.

பேராவூரணி வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் வி.சௌந்தர்ராஜன், சளி மாதிரி எடுக்கப்பட்டு வருவதை, ஞாயிற்றுக்கிழமை காலை நேரில் ஆய்வு செய்தார். மேலும் விபரங்களை மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். எலும்பு முறிவு சிகிச்சை டாக்டர் துரை.நீலகண்டன் நன்கொடையாக வழங்கிய தண்ணீர் பாட்டில்கள், பிஸ்கட் ஆகியவற்றையும் கர்ப்பிணிகளுக்கு வழங்கினார்.

அரசு மருத்துவமனை டாக்டர் ஹம்சவாணி தலைமையில், ஆய்வக நுட்பநர்கள் கார்த்திகா, குமரேசன், பாண்டியன் ஆகியோர் சளி மாதிரியை ஆய்வுக்காக எடுத்தனர். அப்போது சுகாதார ஆய்வாளர் ராஜேந்திரன், மஸ்தூர் மீனாட்சி மற்றும் மருத்துவப் பணியாளர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.
 
 
 
 

Friday, May 1, 2020

தொடக்கப்பள்ளி ஆசிரியரின் மனிதநேய செயலுக்கு பாராட்டு!

பேராவூரணி மே.01-
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி வடகிழக்கு ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியில் உதவி ஆசிரியராகப் பணியாற்றி வருபவர் அ.ஹாஜா முகைதீன். இவர், தனது பள்ளியில் பயிலும் ஏழை மாணவர்கள் 10 பேரின் குடும்பங்களுக்கு, ஜீனி, பருப்பு, எண்ணெய், டெட்டால், சோப், ரவை, தேயிலை உள்ளிட்ட 8 பொருட்கள் அடங்கிய தலா ரூ 500 மதிப்பிலான நிவாரணப் பொருட்களை வீடு தேடிச் சென்று வழங்கினார்.

நிவாரணப் பொருட்களை பெற்றுக் கொண்ட பெற்றோர்கள் ஆசிரியரின் மனிதநேய செயலைப் பாராட்டி நன்றி தெரிவித்தனர்.

Sunday, April 26, 2020

தீ விபத்தில் வீடு இழந்த நபருக்கு வீடு கட்டித் தந்த அரசு மருத்துவருக்கு பாராட்டு!

தஞ்சாவூர் ஏப். 26-
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணியை அடுத்த செங்கமங்கலம் மேலத்தெருவைச் சேர்ந்தவர் சத்யா, ராஜேஸ்வரி தம்பதிகள். கூலித் தொழிலாளியான இவர்களுக்கு மாற்றுத்திறனாளி குழந்தை உள்ளிட்ட மூன்று குழந்தைகள் உள்ளன.

கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு தம்பதிகள் இருவரும் அருகில் உள்ள வயலில் வேலை செய்து கொண்டிருந்தபோது, வீடு திடீரென தீப்பிடித்து எரிந்தது. அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து தீயை அணைத்தனர். வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த மூன்று குழந்தைகளும் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர்.

இதில் வீட்டில் இருந்த அனைத்து பொருள்களும் நாசம் அடைந்தது. மேலும், குடிசை வீடு முற்றிலுமாக எரிந்து சாம்பலானது. இதையடுத்து வட்டாட்சியர் க.ஜெயலெட்சுமி அரசின் சார்பில் நிவாரணப் பொருட்களை வழங்கினார். செங்கமங்கலம் ஊராட்சி மன்றத் தலைவர் செல்வம், அதிமுக ஒன்றியச் செயலாளர் துரை. மாணிக்கம் ஆகியோரும் நிவாரண உதவிகளை வழங்கினர்.

இந்நிலையில், தீ விபத்து குறித்து அறிந்த, செருவாவிடுதி அரசு ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் வி.சௌந்தரராஜன் நேரில் சென்று ஆறுதல் கூறியதோடு, உதவிகளை வழங்கினார். மேலும், பாதிக்கப்பட்ட தம்பதிகளுக்கு வீடு கட்டிக் கொடுக்கவும் முன்வந்தார்.

இதையடுத்து உடனடியாக குடிசை வீடு புதிதாக கட்டிமுடிக்கப்பட்டது. மேலும் அந்த குடும்பத்தினருக்கு தேவையான உடைகள், வீட்டு உபயோக பொருட்கள், சமையலுக்கு தேவையான பாத்திரங்கள், பழங்கள், பிஸ்கட், பால் ஆகியவற்றை ஞாயிற்றுக்கிழமை அன்று டாக்டர் வி. சௌந்தரராஜன் நேரடியாகச் சென்று அந்தக் குடும்பத்தினருக்கு வழங்கினார்.

சுமார் 25 ஆயிரம் ரூபாய் மதிப்பில் வீடு, வீட்டு உபயோக பொருட்கள் ஆகியவற்றை பெற்றுக் கொண்ட தம்பதிகள் கண்ணீர் மல்க டாக்டர் சௌந்தரராஜனுக்கு நன்றி தெரிவித்தனர். உடனடியாக பால் காய்ச்சி வீட்டில் குடி புகுந்தனர்.

இதையடுத்து ஊராட்சிமன்றத் தலைவர் செல்வம் வீடு கட்டி தந்தமைக்காக டாக்டருக்கு பொன்னாடை அணிவித்து நன்றி தெரிவித்தார். அப்போது சமூக ஆர்வலர் கே.கான் முகம்மது, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் எஸ்.சந்திரசேகரன், ஊரணி கல்வி மற்றும் சுகாதார அறக்கட்டளை பொருளாளர் ராஜூ, சுகாதார செவிலியர் லில்லி மேரி மற்றும் கிராமத்தினர் உடனிருந்தனர்.
 

Sunday, April 19, 2020

முழு ஊரடங்கில் 15 பேர் மட்டும் பங்கேற்ற திருமணம் (படங்கள்)

தஞ்சாவூர், ஏப்.19-
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியில் சமூக இடைவெளியுடன் ஞாயிற்றுக்கிழமை காலை 15 பேர் மட்டுமே கலந்து கொண்ட திருமணம் நடைபெற்றது.

பேராவூரணியை சேர்ந்தவர் முஜிபுர் ரகுமான் பிரபல பழக்கமிஷன் மண்டி உரிமையாளர். இவரது மகள் ஆஷிபாவிற்கு திருமணம் செய்வதற்காக கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பே பிரமாண்டமாக 5 ஆயிரம் அழைப்பிதழ் அச்சடித்து வெளியூரைச்சேர்ந்த உறவினர்கள், நண்பர்களுக்கு அழைப்பிதழ் கொடுத்துக் கொண்டிருந்தார். 

இந்நிலையில் கொரோனா நோய்த் தொற்று காரணமாக கடந்த மாதம் 24 ஆம் தேதி ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால் முன்பதிவு செய்திருந்த மண்டபத்தில் நடத்த முடியாத நிலையில், அதனை ரத்து செய்தார். ஆனால், திருமணத்தை தள்ளி வைக்காமல் மண்டபத்தை ரத்து செய்துவிட்டு வீட்டில் நடத்த திட்டமிட்டிருந்தார்.

இந்நிலையில், தஞ்சாவூர் மாவட்டத்தில் ஏப்ரல் 16 முதல் இரண்டாவது கட்டமாக ஊரடங்கு கடுமையாக்கப்பட்டு, வாரத்தில் இரண்டு நாட்கள் மட்டுமே அடையாள அட்டை அடிப்படையில் பொதுமக்கள் வெளியில் வரவேண்டும் எனவும், ஞாயிற்றுக் கிழமை முழு ஊரடங்கு என்பதால் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளும் திறக்கப்படாது,   எனவே பொதுமக்கள் யாரும் ஞாயிற்றுக்கிழமை வெளியில் வரக்கூடாது என அரசு அறிவித்தது.

இதனால் திருமணத்தை தள்ளி வைக்காமல் எளிமையாக நடத்த முடிவு செய்து, சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள பள்ளத்தூரில் இருந்து மாப்பிள்ளை வீட்டார் அரசு அனுமதி பெற்று 5
பேர் மணமகனுடன் அதிகாலையில் பேராவூரணி வந்துவிட்டனர்.

பெண் வீட்டு தரப்பில் 10 பேர்கள் மட்டும் இருந்து காலை 7 மணியளவில் எளிய முறையில் திருமணம் நடைபெற்றது. இது குறித்து மணமக்கள் வீட்டார் கூறியது, மிகச் சிறப்பாக திருமணத்தை நடத்த வேண்டுமென திட்டமிட்டிருந்தோம், கொரோனாவால் அரசு உத்தரவை மதித்து எளிய முறையில் திருமணத்தை நடத்தினோம்" என்றனர்.

Wednesday, April 15, 2020

திமுக சார்பில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கிருமிநாசினி வழங்கல்!

தஞ்சாவூர் ஏப்.15-
தஞ்சை மாவட்டம், பேராவூரணி அருகே உள்ள செருவாவிடுதி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு, திமுக ஒன்றியக் கழகம், திமுக மருத்துவ அணி சார்பில் கை கழுவும் லிக்விட் சோப், சானிடைசர், கிருமி நாசினி, முகக்கவசம் ஆகியவை வழங்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு திமுக ஒன்றியச் செயலாளர் க. அன்பழகன் தலைமை வகித்தார். டாக்டர் பண்ணவயல் எஸ்.ஆர்.சந்திரசேகர் முன்னிலை வகித்தார்.

இதில் 500 பேர் பயன்படுத்தும் வகையில் கை கழுவும் சோப், சானிடைசர், கிருமி நாசினி, முகக்கவசம் ஆகியவற்றை வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் வி.சௌந்தர்ராஜனிடம் வழங்கப்பட்டது.

அப்போது வட்டார சுகாதார மேற்பார்வையாளர் எஸ்.சந்திரசேகரன், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் ஆரோ.அருள், ஒன்றியக்குழு உறுப்பினர் மாலா போத்தியப்பன், செருவாவிடுதி குமார், ஊராட்சி மன்றத் தலைவர்கள் செருவாவிடுதி வடக்கு விஜயராமன், தெற்கு ராமஜெயம், திமுக ஊராட்சிக் கழக செயலாளர்கள் சக்திவேல், ஞானவேல், ஒப்பந்ததாரர் பன்னீர்செல்வம் மற்றும் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Friday, April 10, 2020

பேராவூரணி ஊராட்சி ஒன்றியத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள்: பொதுமக்கள் பாராட்டு!

தஞ்சாவூர் ஏப்.10-
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி ஊராட்சி ஒன்றியத்திற்குட்ட  பகுதிகளில் கொரோனா தடுப்பு நடவடிக்கை பணிகள் மிகச் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருவதற்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

கொரோனா தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக பெரியநாயகிபுரம் ஊராட்சி, ஆவணம் குக்கிராமப் பகுதியில் சோதனைச்சாவடி அமைக்கப்பட்டு காவல்துறை, மருத்துவத்துறை, வருவாய்த் துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்களால் வாகனச் சோதனை மற்றும் கண்காணிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

அனைத்து ஊராட்சிகளிலும் காலை, மாலை இரு வேளைகளிலும் கிருமி நாசினி தெளித்தல், பிளீச்சிங் பவுடர் தூவுதல் போன்ற பணிகள் தினசரி நடைபெற்று வருகிறது. இப்பணிகளில் தூய்மைக் காவலர்கள் 157 பேரும்,
கிருமி நாசினி தெளிப்பதற்கு ஆப்பரேட்டர்கள் 310 பேரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இப்பணிக்கு பிளீச்சிங் பவுடர், சுண்ணாம்பு மற்றும் லைசால் ஆகியவை பயன்படுத்தப்படுகிறது.

இதுகுறித்து ஒன்றியப் பெருந்தலைவர் சசிகலா ரவிசங்கர் கூறுகையில், 
"தூய்மைப் பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்களுக்கு முகக் கவசம், கையுறைகள், காலணிகள் ஆகியவை ஊராட்சி மன்றத்தாலும், ஊராட்சி ஒன்றியத்தாலும் வழங்கப்பட்டுள்ளது. மேலும் தூய்மைப் பணியாளர்களுக்கு சுகாதாரத்துறை மூலம் மருத்துவ பரிசோதனைகளும் செய்யப்படுகிறது.

அனைத்து ஊராட்சிகளிலும் ஊராட்சி மன்ற தலைவர்களால் விழிப்புணர்வு துண்டுப்பிரசுரங்கள் அச்சிட்டு அவற்றை வீடு வீடாக வழங்குகின்றனர். மேலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து ஒன்றிய அலுவலகத்திற்கு அளிக்கப்பட்ட 41,000 எண்ணிக்கையிலான விழிப்புணர்வு துண்டு பிரசுரமும் வீடு வீடாக வழங்கப்பட்டு வருகிறது.

பொதுமக்கள் ஊரடங்கை பின்பற்றுவது பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த  52 பிரச்சார வாகனங்களின் மூலம், அனைத்து ஊராட்சிகளிலும் தொடர்ச்சியாக விளம்பரம் செய்யப்பட்டு வருகிறது. அனைத்து ஊராட்சிகளிலும் 260 தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டு அதன்படி பொதுவிநியோக கடைகளில் நிவாரணத் தொகை வழங்கப்பட்டு உணவு பொருட்கள் வழங்குதலில் தங்களை ஈடுபடுத்தி வருகின்றனர்.

தேவையில்லாமல் வீட்டை விட்டு வெளியே வருவோர், பொது இடங்களில் கூட்டமாக இருப்போர் மற்றும் தேவையின்றி வாகனங்களில் வருவோரை தடுத்திடும் பொருட்டு ஊராட்சி மன்றமும் காவல் துறையும் இணைந்து 55 தன்னார்வலர்களை நியமித்து அதன்படி ஊராட்சிகளை ஒழுங்குபடுத்தி வருகின்றனர். 20 ஊராட்சிகளில் பிரதான சாலை தவிர எஞ்சிய 58 சாலைகள் அடைக்கப்பட்டு அதன்படி போக்குவரத்து கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது.

நகர்ப்புறத்தை சாராத உள்ளடங்கிய ஊராட்சிகளுக்கு காய்கறிகள் வழங்குவதற்கு 8 வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு பொதுமக்களுக்கு தங்குதடையின்றி காய்கறிகள் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும், வெளிநாடு, வெளிமாநிலங்கள், வெளிமாவட்டங்களிலிருந்து இவ்வூராட்சி பகுதியில் வருகை புரிந்தவர்கள் பற்றிய கணக்கெடுப்பு முழுமையாக முடிக்கப்பட்டு வருவாய்துறை அலுவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்புப்படை தன்னார்வலர்கள் மூலமாக வீடு வீடாக கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் பல ஊராட்சிகளில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

திருவோணம் ஊராட்சி ஒன்றியம் ஊரணிபுரம் பகுதியில் கொரோனா தொற்று ஏற்பட்டதால் வாட்டாத்திக்கோட்டை ஊராட்சியில் 07.04.2020 அன்று காலை முதல் மாலை வரை வாகனத்தின் மூலம் ஒரு வாரத்திற்கு தேவையான உணவுப்பொருட்கள் காய்கறிகள் உட்பட வாங்கி இருப்பு வைத்துக்கொள்ள பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. அதன் அடிப்படையில் 14.04.2020 வரை அனைத்து கடைகளும் 100 சதவீதம் அடைக்க முடிவெடுத்து அதன்படி 08.04.2020 முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

கொரோனா தடுப்பு பணிகளில் ஊராட்சி ஒன்றிய அனைத்து நிலை அலுவலர்கள்,  அனைத்து ஊராட்சி மன்ற தலைவர்கள், அனைத்து ஒன்றியக்குழு வார்டு உறுப்பினர்கள், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் மற்றும் ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் அனைவரும் முழு அர்ப்பணிப்போடு செயல்பட்டு வருகிறார்கள்" இவ்வாறு ஒன்றியக்குழு தலைவர் சசிகலா ரவிசங்கர் தெரிவித்தார்.

இந்நிகழ்வின்போது வட்டார வளர்ச்சி அலுவலர் (வ.ஊ) சடையப்பன், வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) தவமணி ஆகியோர் உடனிருந்தனர்.