.

Pages

Showing posts with label அதிரை ரயில் நிலையம். Show all posts
Showing posts with label அதிரை ரயில் நிலையம். Show all posts

Monday, December 7, 2020

அதிராம்பட்டினம் வழியாக சென்னைக்கு விரைவு ரயில் இயக்க ஆஸ்திரேலியா வாழ் அதிரையர் கோரிக்கை!

அதிரை நியூஸ்: டிச.07
திருவாரூர் ~ பட்டுக்கோட்டை ~ காரைக்குடி மார்க்கத்தில் சென்னைக்கு தினசரி விரைவு ரயில் சேவை தொடங்க வேண்டுமென ஆஸ்திரேலியா வாழ் சிஸ்மா (SISMA) அமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து அவ்வமைப்பின் சார்பில், அதன் நிர்வாகிகள் எம்.ஏ ஹாலித், முகமது சாலிகு, அஜ்வா எம்.நெய்னா முகமது ஆகியோர் மத்திய ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் அவர்களுக்கு அனுப்பி இருக்கும் கோரிக்கை மனுவில் கூறியிருப்பது;
சென்னை ~ காரைக்குடி இடையே மீட்டர் கேஜ் பாதையில் இயங்கி வந்த கம்பன் ரயில் சேவையை மீண்டும் தொடரும் வகையில், திருவாரூர் ~ பட்டுக்கோட்டை ~ காரைக்குடி மார்க்கத்தில் சென்னைக்கு தினசரி விரைவு ரயில் சேவையை தொடங்க வேண்டும்.

காரைக்குடி ~ பட்டுக்கோட்டை~ திருவாரூர் ~ மயிலாடுதுறை வரை மீட்டர் கேஜ் பாதையில் இயங்கியதுபோல தினசரி, பயணிகள் இரயில்களை இயக்க வேண்டும்.

காரைக்குடி ~ பட்டுக்கோட்டை ~ திருவாரூர் வழியாக வாரத்தில் 3 நாட்கள் மட்டும் செங்கோட்டை ~ சென்னை தாம்பரம் இடையே முன் மொழியப்பட்ட விரைவு ரயில் சேவையை உடனடியாக தொடங்க வேண்டும்.

காரைக்குடி- பட்டுக்கோட்டை- திருவாரூர் வழியாக எர்ணாகுளம் ~ வேளாங்கண்ணி இடையே முன் மொழியப்பட்ட விரைவு ரயில் சேவையை உடனடியாக தொடங்க வேண்டும்.

கிழக்கு கடற்கரைச்சாலை, டெல்டா பகுதி விவசாயிகள் மீனவர்கள், வரத்தகர்கள் உள்ளிட்டோர் பயன்பெறும் வகையில், ஏற்றுமதி, இறக்குதி உள்ளிட்ட தொழில்வளம் மேம்படும் வகையில், இந்த வழித்தடத்தில் உள்ள பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம், அறந்தாங்கி, திருத்துறைப்பூண்டி ஆகிய இடங்களில் சரக்கு முனையம் ஏற்படுத்த வேண்டும். என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் அதில் கூறப்பட்டுள்ளது. 

இதன் நகல், மத்திய ரயில்வே துறை சேர்மன், தமிழக முதல்வர் (தனிப்பிரிவு), தெற்கு ரயில்வே திருச்சி கோட்ட வரத்தக மேலாளர், தெற்கு ரயில்வே சென்னை மண்டல துணை பொது மேலாளர் ஆகியோருக்கு தனித்தனியே அனுப்பி வைத்துள்ளனர்.




Friday, June 19, 2020

விரைவில் திருவாரூர் காரைக்குடி வழியாக செங்கோட்டைக்கு அதிவிரைவு ரயில்!

அதிராம்பட்டினம் ரயில் நிலையம்
அதிராம்பட்டினம், ஜூன் 18
சென்னை தாம்பரத்திலிருந்து திருவாரூர் காரைக்குடி வழியாக செங்கோட்டைக்கு பாசஞ்சர் ரயில் சேவை விரைவில் தொடங்கப்படும் என ரயில்வே வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

திருவாரூர்-காரைக்குடி ரயில் சேவை தொடங்கப்பட்ட பிறகு, கேட் கீப்பர்கள் நியமிக்கப்படாததால், குறித்த நேரத்துக்கு பயணம் செய்ய முடியதில்லை. அத்துடன், வேறு கூடுதல் ரயில்களும் இயக்கப்படாததாலும், பயணிகள் பெரிதும் சிரமத்துக்குள்ளாகினர்.

எனவே, ரயிலின் பயண நேரம் குறித்தும், சென்னையிலிருந்து திருவாரூர்- பட்டுக்கோட்டை- வழியாக போதுமான ரயில் சேவைகள் இல்லாதது குறித்தும் ரயில்வே துறைக்கு கோரிக்கைகள் அனுப்பப்பட்டு வந்தன. அத்துடன், மக்களவை உறுப்பினர்கள், பொதுநல அமைப்புகள் வாயிலாகவும் வலியுறுத்தப்பட்டு வந்தன.

இந்த கோரிக்கைகளை ஏற்ற தெற்கு ரயில்வே, ரயில்வே வாரியத்துக்கு தாம்பரத்திலிருந்து மயிலாடுதுறை, திருவாரூர், பட்டுக்கோட்டை வழியாக செங்கோட்டைக்கு ரயில் இயக்க கருத்துரு அனுப்பியிருந்தது.

இதைத்தொடர்ந்து வாரத்துக்கு மூன்று நாட்களாக இயக்குவதற்கு அனுமதி தந்துள்ளது. இதன்படி, ஞாயிறு, செவ்வாய், வியாழக்கிழமைகளில் மாலை 6 மணிக்கு புறப்பட்டு செங்கோட்டைக்கும் மறு மார்க்கத்தில் திங்கள், புதன், வெள்ளிக்கிழமைகளில் செங்கோட்டையிலிருந்து 7.35 மணிக்கும் புறப்படும். அதிவிரைவு ரயிலாக தாம்பரத்திலிருந்து இயக்கப்படும் இந்த ரயில் விழுப்புரம், மயிலாடுதுறை, திருவாரூர், திருத்துறைப்பூண்டி, பட்டுக்கோட்டை, காரைக்குடி, விருதுநகர், திருநெல்வேலி,தென்காசி ஆகிய ஊர்களில் நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் எர்ணாகுளத்திலிருந்து வேளாங்கண்ணிக்கு வாரம் இருமுறை ரயில் இயக்கவும் வாரியம் அனுமதி அளித்துள்ளது. சனி, திங்கள்கிழமைகளில் எர்ணாகுளத்தில் 10.15 க்கு புறப்பட்டு காரைக்குடி, பட்டுக்கோட்டை, திருவாரூர், நாகப்பட்டினம் வழியாக வேளாங்கண்ணிக்கும் ஞாயிறு, செவ்வாய்க்கிழமைகளில் வேளாங்கண்ணியில் காலை 4 மணிக்கு புறப்பட்டு எர்ணாகுளத்துக்கு விரைவு ரயிலாக இயங்க உள்ளது.

இதுகுறித்து திருவாரூர் ரயில் உபயோகிப்பாளர் சங்க செயலாளர் ப. பாஸ்கரன் தெரிவித்ததாவது: 
தாம்பரத்திலிருந்து திருவாரூர்-பட்டுக்கோட்டை-காரைக்குடி வழியாக செங்கோட்டைக்கு ரயில் இயக்கப்பட உள்ளது. பொதுமக்கள் நலன் கருதி செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், மற்றும் அறந்தாங்கி ஊர்களிலும் இந்த ரயில்களை நிறுத்தம் செய்ய தெற்கு ரயில்வே முன்வர வேண்டும். கரோனா நோய்த்தொற்று முடிந்து திருவாரூர் காரைக்குடி மார்க்கத்தில் உள்ள கேட்டுகளுக்கு பணியாளர்கள் முழுமையாக பணியமர்த்தப்பட்ட பிறகும் இந்த ரயில்கள் இயக்கப்படும் எனத் தெரிகிறது.

இந்த செயல்பாட்டுக்கு காரணமான மத்திய அரசு, ரயில்வே வாரியம், தெற்கு ரயில்வே அதிகாரிகள், திருச்சி கோட்ட ரயில்வே அதிகாரிகள், மக்களவை உறுப்பினர்கள், பொது நல அமைப்புகளுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம் என்றார்.

Sunday, June 14, 2020

திருவாரூா் ~ பட்டுக்கோட்டை ~ காரைக்குடி இடையே தொடா்ந்து ரயில்களை இயக்க வலியுறுத்தல்!

அதிராம்பட்டினம் ரயில் நிலையம்
அதிரை நியூஸ்: ஜூன் 14
கடந்தாண்டு அகல ரயில் பாதையாக மாற்றப்பட்ட திருவாரூா் - பட்டுக்கோட்டை - காரைக்குடி வழித்தடத்தில், தொடா்ந்து ரயில்களை இயக்க வேண்டும் என தஞ்சை மாவட்ட ரயில் உபயோகிப்பாளா்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து திருச்சி கோட்ட ரயில்வே மேலாளருக்கு சங்கத் தலைவா் பி.கே.டி. சண்முகம் அனுப்பியுள்ள கடிதத்தில் அவா் கூறியிருப்பது:
தஞ்சாவூா் மாவட்டம், அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை, பேராவூரணி வழியாக திருவாரூா் - காரைக்குடி இடையே செல்லும் ரயில் பாதை கடந்த 2019 -ஆம் ஆண்டு மாா்ச் இறுதியில் முழுவதும் அகல ரயில் பாதையாக மாற்றப்பட்டது. அதைத் தொடா்ந்து ஜூன் மாதம் முதல் இத்தடத்தில் டெமு பயணிகள் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இப்பாதையிலுள்ள ரயில்வே கேட்களை மூடி திறக்க ஆள்களை நியமிக்காததால் ரயிலிலேயே பயணிக்கும் நடமாடும் கேட் கீப்பா்கள் மூலம் அவை இயக்கப்பட்டு வந்தது. கடந்த ஓராண்டில், பல முறை இந்த ரயில் ரத்து செய்யப்பட்டும், கால அட்டவணை மாற்றம் செய்யப்பட்டும் இயங்கி வந்தது.

இந்நிலையில் கரோனா பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் மாா்ச் 25-ஆம் தேதி முதல் அனைத்து ரயில்களும் ரத்து செய்யப்பட்டது. பட்டுக்கோட்டை வழியாக இயக்கப்பட்ட டெமு பாசஞ்சா் ரயில், கேட் கீப்பா் பிரச்னையால் அதிகமான பயண நேரத்துடன் கால அட்டவணையில் இயக்கப்பட்டதால் பயணிகளிடம் போதிய வரவேற்பு இல்லை. இதைக் கருத்தில் கொண்டு அந்த ரயில் ரத்து செய்யப்படுமோ என்ற அச்சம் ரயில் பயணிகளிடம் ஏற்பட்டுள்ளது.

எனவே, பட்டுக்கோட்டை, பேராவூரணி வழியாக இயக்கப்படும் டெமு பயணிகள் ரயிலை எக்காரணம் கொண்டும் ரத்து செய்யாமல், கரோனா இடா்பாடுகள் முடிவுற்று இயல்வு நிலை திரும்புவதற்குள் அந்த வழித்தடத்தில் போதிய கேட் கீப்பா்களை நியமித்து, அந்த ரயிலின் வேகத்தை அதிகரித்து தொடா்ந்து இயக்கவும், அந்தத் தடத்தில் பல புதிய ரயில்களை அறிமுகம் செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Saturday, March 21, 2020

அதிராம்பட்டினம் வழியாக தாம்பரம் ~ செங்கோட்டை இடையே அதிவிரைவு ரயில் இயக்க முன்மொழிவு!

அதிராம்பட்டினம், மார்ச் 21
அதிராம்பட்டினம் வழியாக தாம்பரம் ~ செங்கோட்டை இடையே இரு மார்க்கத்திலும் வாரத்தில் 3 நாட்கள் அதிவிரைவு ரயில் சேவையை இயக்குவதற்கு தென்னக ரயில்வே முன்மொழிந்துள்ளதால் இதன் கால அட்டவணை விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பெங்களூரில் பிப், 26, 27, 28 ஆகிய தேதிகளில் நடந்த ரயில்வே நேர அட்டவணை ஒருங்கிணைப்பு (ஐஆர்டிடிசி) கூட்டத்தில் தென்னக ரயில்வே தலைமை இயந்திர பொறியாளர் ஆர். செந்தில் குமார் அளித்துள்ள முன்மொழிவில் கூறியிருப்பது;
தாம்பரம் ~ செங்கோட்டை இடையே இரு மார்க்கத்திலும், மணிக்கு 55.24 கிலோ மீட்டர் வேகத்தில், சுமார் 750.29 கிலோ மீட்டர் தூரத்தில், அதிவிரைவு இரவு நேர ரயில் சேவை இயக்குவது என்பதாகவும், வாரதொரும் ஞாயிற்றுக்கிழமை, செவ்வாய்க்கிழமை, வியாழக்கிழமை ஆகிய 3 தினங்கள் தாம்பரம் ரயில் நிலையத்திலிருந்து மாலை 6 மணிக்கு புறப்பட்டு, விழுப்புரம், திருப்பாதிரிப்புலியூர், மாயாவரம், திருவாரூர், திருத்துறைப்பூண்டி, பட்டுக்கோட்டை, காரைக்குடி, மானாமதுரை, அருப்புக்கோட்டை, விருதுநகர், திருநெல்வேலி, சேரன்மாதேவி, அம்பாசமுத்திரம், பாவூர்சத்திரம், தென்காசி வழியாக செங்கோட்டை ரயில் நிலையத்திற்கு மறுநாள் காலை 9.35 மணிக்கு சென்றடையும், மறுமார்க்கத்தில், வாரந்தோறும் திங்கட்கிழமை, புதன்கிழமை, சனிக்கிழமை ஆகிய 3 தினங்கள் செங்கோட்டை ரயில் நிலையத்திலிருந்து இரவு 8 மணிக்கு புறப்பட்டு, தாம்பரம் ரயில் நிலையத்திற்கு காலை 7.35 மணிக்கு வந்தடையும் என்றும், இந்த ரயிலில், GSLR (General Sitting Cum Luggage Rake) -1, GSLRD (General Sitting Cum Luggage Rake cum Disabled Coach) - 1, WGFACCW (Self Gen. 1st AC + 2-tier AC) -1, WGACCN (Self Generating AC 3 Tier coach) -3, WGSCN (Slef Generating 3 Tier Sleeper coach) - 9, GS (General Seat II Class Coach) - 2 மற்றும் 17 Bogies ஆகியவை இடம்பெறும் என இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. எனவே, இதன் கால அட்டவணை தென்னக ரயில்வே சார்பில் விரைவில் வெளியிடப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

திருவாரூர் ~ காரைக்குடி இடையே உள்ள தில்லைவிளாகம், அதிராம்பட்டினம், பேராவூரணி, அறந்தாங்கி ஆகிய ரயில் நிலையங்கள் 'B' கிரேடு தரத்தை பெற்றிருப்பதாலும், ரயில்வே துறைக்கு அதிக வருவாய் ஈட்டுத்தரக்கூடிய பகுதிகள் என்பதாலும், இந்த வழித்தடத்தில் தாம்பரம் ~ செங்கோட்டை வரை செல்லும் அதிவிரைவு ரயில் இந்த ரயில் நிலையங்களில் நின்று செல்ல வேண்டும் என்பதே பெரும்பாலான ரயில் பயணிகள், மாணவர்கள், வர்த்தகர்கள், விவசாயிகள், மீனவர்கள் உள்ளிட்ட பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Wednesday, February 26, 2020

39 ஊழியா்கள் நியமனம்: காரைக்குடி~ திருவாரூா் தடத்தில் விரைவில் முழுமையான ரயில் சேவை!

அதிராம்பட்டினம், பிப்.26
காரைக்குடி ~ திருவாரூா் ரயில்வே வழித்தடத்திலுள்ள பல்வேறு ஊா்களில் 39 ஊழியா்களை பணியமா்த்தி தெற்கு ரயில்வே உத்தரவிட்டுள்ளது. இதனால் மிக விரைவில் காரைக்குடி-திருவாரூா் தடத்தில் முழுமையான ரயில் சேவை தொடங்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

2019, ஜூன் 1-ஆம் தேதி முதல் காரைக்குடி-திருவாரூா் தடத்தில் , மொபைல் கேட் கீப்பா்களைக் கொண்டு டெமு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இத்தடத்தில் உள்ள 72 ரயில்வே கேட்டுகளுக்கு நிரந்தர ஊழியா்கள் நியமிக்கப்படாததால், 150 கி.மீ. தொலைவைக் கடக்க இந்த ரயில் ஆறரை மணி நேரம் எடுத்துக் கொள்கிறது. மேலும், இத்தடத்தில் இதுவரை முழுமையான ரயில் சேவையும் தொடங்கப்படவில்லை. சரக்குப் போக்குவரத்தும் நடைபெறவில்லை. இதனால், இப்பகுதி மக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனா்.

இச்சூழலில், காரைக்குடி-திருவாரூா் தடத்திலுள்ள பல்வேறு ஊா்களில் இயங்கும் ரயில் பயணிகள் நலச் சங்கத்தினா் காரைக்குடி-திருவாரூா் தடத்தில் நிரந்தர கேட் கீப்பா்களை நியமித்து, முழுமையான ரயில் சேவையைத் தொடங்க வலியுறுத்தி கடந்த பல மாதங்களாக பல்வேறு போராட்டங்களை நடத்தினா்.

இதையடுத்து, காரைக்குடி-திருவாரூா் வழித்தடத்தில் தேவைப்படும் ஊழியா்களை நியமிக்க ரயில்வே நிா்வாகம் முடிவு செய்துள்ளது.

முதல்கட்டமாக, 2013 ஆம் ஆண்டுக்கு முன்னா் இவ்வழித் தடத்தில் பணியாற்றி, தற்போது பல்வேறு ஊா்களில் பணியாற்றும் பல்வேறு நிலையிலான 39 ஊழியா்களை மீண்டும் இவ்வழித்தடத்தில் பணியமா்த்தி தெற்கு ரயில்வே திருச்சி கோட்ட பா்சனல் அதிகாரி எஸ். வெங்கட்ராமன் திங்கள்கிழமை (பிப். 24) உத்தரவிட்டுள்ளாா். இதனால், விரைவில் காரைக்குடி-திருவாரூா் தடத்தில் முழுமையான ரயில் சேவை தொடங்கும் என தெரிகிறது.

இதுகுறித்து, பட்டுக்கோட்டை ரயில் பயணிகள் நலச் சங்க நிா்வாகிகள் கூறியது: 
39 ஊழியா்களை பணியமா்த்தி தெற்கு ரயில்வே அதிகாரி எஸ்.வெங்கட்ராமன் உத்தரவிட்டுள்ளதற்காக நன்றி தெரிவித்து கொள்கிறோம். அடுத்து, காரைக்குடி-திருவாரூா் தடத்தில் தேவைப்படும் இதர அலுவலா்கள் மற்றும் பணியாளா்களையும் உடனடியாக நியமனம் செய்து, காரைக்குடி- சென்னை, ராமேசுவரம்- சென்னை மற்றும் அந்தியோதயா, கொல்லம்- வேளாங்கண்ணி விரைவு ரயில்களையும், மயிலாடுதுறையிலிருந்து திருவாரூா், பட்டுக்கோட்டை, காரைக்குடி வழியாக மதுரைக்கு பயணிகள் ரயில்களையும் இயக்க தெற்கு ரயில்வே நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

Wednesday, January 29, 2020

காரைக்குடி~திருவாரூர் இடையே கேட் கீப்பர்கள் நியமிக்க கோரி: எம்.பி.,க்கள் தலைமையில் ரயில் சங்க பிரதிநிதிகள் உயர் அதிகாரியை சந்தித்து வலியுறுத்தல்!

காரைக்குடி ~ திருவாரூர் இடையிலான கேட்களுக்கு பணியாளர்களை விரைந்து நியமிக்க வேண்டும் என திருச்சி ரயில்வே கோட்ட மேலாளா் அஜய்குமாரிடம் மக்களவை உறுப்பினா்கள் சு. திருநாவுக்கரசா் (திருச்சி),  எம். செல்வராஜ் (நாகை) ஆகியோர் செவ்வாய்க்கிழமை நேரில் சந்தித்து வலியுறுத்தினர்.

திருச்சி மக்களவை உறுப்பினா் சு. திருநாவுக்கரசா்,  நாகை மக்களவை உறுப்பினா் எம். செல்வராஜ் ஆகியோா் தலைமையில், அறந்தாங்கி, பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம், முத்துப்பேட்டை, திருவாரூா் ஆகிய பகுதிகளின் ரயில் உபயோகிப்போா் சங்கப் பிரதிநிதிகள் திருச்சி ரயில்வே கோட்ட மேலாளா் அஜய்குமாருடன் சந்திப்புக் கூட்டம் நடைபெற்றது.

அப்போது எம்.பிக்கள் கூறியது;
காரைக்குடி ~ திருவாரூர் ரயில் வழித்தடத்தில் உள்ள அனைத்து ரயில் கேட்களுக்கும் உடனடியாகப் பணியாளர்களை நியமிக்க வேண்டும். இல்லையெனில் பொதுமக்களைத் திரட்டிப் போராடுவோம். மக்கள் பாதிப்புள்ளாக்கும் ரயில்வே பிரச்சனைகளுக்கு அதிகாரிகள் விரைந்து தீர்வு காண முன்வர வேண்டும். மக்களவை கூட்டத்தொடர் ஓரிரு நாட்களில் தொடங்கப்படவுள்ளது. இந்நிலையில், ரயில்வே நிதி அமைச்சர்களிடம் பேசி ஆவன செய்ய மேலும் வலியுறுத்துவோம். எனத் தெரிவித்தனர்.

இதற்கு பதிலளித்து கோட்ட மேலாளர் கூறுகையில்;
கேட் கீப்பர்கள் பிரச்சனைக்கு விரைவில் தீர்வு காணப்படும் என்றார்.

கூட்டத்தில், திருச்சி கோட்ட மேலாளா் (இயக்கம்) பூபதி ராஜா, மேலாளா் (இயக்கம்) நரேன், அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை, முத்துப்பேட்டை, திருவாரூர், அறந்தாங்கி ஆகிய பகுதிகளின் ரயில் உபயோகிப்போா் சங்கப் பிரதிநிதிகள் ஹாஜி எம்.எஸ் ஷிகாபுதீன், ஹாஜி ஏ. அப்துல் ரெஜாக், ஹாஜி மு.செ.மு ராபியா, ஹாஜி பத்ருத்தீன், வ.விவேகானந்தன், கலிய பெருமாள், ஹாஜி சுல்தான் இப்ராஹீம், ப.பாஸ்கரன், பாரதி, ஜெர்மன் அலி, ராஜ்குமார் ஆகியோா் உடனிருந்தனா்.
 

Monday, January 20, 2020

அதிராம்பட்டினம் ரிச்வே கார்டனில் ரயில் உபயோகிப்பாளர்கள் ஆலோசனைக்கூட்டம்!

அதிராம்பட்டினம், ஜன. 20
ரயில் உபயோகிப்பாளர்கள் ஆலோசனைக்கூட்டம் அதிராம்பட்டினம் ரிச்வே கார்டனில் 19-01-2020 ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, பட்டுக்கோட்டை ரயில் உபயோகிப்பாளர்கள் நலச்சங்கத் தலைவர் என்.ஜெயராமன் தலைமை வகித்தார். சங்க ஆலோசகர் ஹாஜி ஏ. அப்துல் ரெஜாக், சங்க ஒருங்கிணைப்பாளர் ஹாஜி எம்.எஸ்.எம் ராஃபியா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளராக, தென்னக ரயில்வே சேலம் கோட்ட வர்த்தக உதவி மேலாளர் (ஓய்வு) எம்.ஷாஜஹான் கலந்துகொண்டு ஆலோசனைகள் வழங்கினார்.

கூட்டத்தில், எதிர்வரும் ஜன.28ந் தேதி பாராளுமன்ற உறுப்பினர்கள் எஸ்.எஸ். பழனி மாணிக்கம் (தஞ்சை), கே.நவாஸ்கனி (இராமநாதபுரம்). எம். செல்வராஜ் (நாகை), எஸ்.திருநாவுக்கரசர் (திருச்சி) ஆகியோர் தலைமையில், தென்னக ரயில்வே திருச்சி கோட்ட வர்த்தக மேலாளரை சந்திப்பது எனவும், காரைக்குடி ~ திருவாரூர் வழித்தடத்தில் அதிராம்பட்டினம் வழியாக சென்னைக்கு உடனடியாக விரைவு ரயில் இயக்குதல், திருவாரூா் ~ பட்டுக்கோட்டை ~ காரைக்குடி வழித்தடத்தில் காலியாக உள்ள இடங்களுக்கு கேட்கீப்பா்கள், பணியாளா்கள் நிரப்ப வேண்டும். அவர்களுக்கு உடனடியாக பணி நியமன ஆணை வழங்கவேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை அவர்களிடம் முன்வைப்பது என முடிவு செய்யப்பட்டது.

இக்கூட்டத்தில், அதிராம்பட்டினம் நஜ்முதீன், எஸ்.ஜெ அப்துல் ஜலீல், முத்துப்பேட்டை சுல்தான் இப்ராஹிம் (சுனா இனா), பட்டுக்கோட்டை எம்.கலியபெருமாள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். நிறைவில், சங்க செயலாளர் வ.விவேகானந்தன் நன்றி கூறினார்.
 

Friday, January 17, 2020

திருவாரூர் ~ காரைக்குடி மார்க்கத்தில் விரைவு ரயில் சேவையை உடனடியாக தொடங்க கூட்டமைப்பு கோரிக்கை!

திருவாரூர் ~ காரைக்குடி ரயில் மார்க்கம் பாரம்பரியமிக்க தொன்மை வாய்ந்தது. மீட்டர்கேஜ் காலத்தில் மயிலாடுதுறையிலிருந்து காரைக்குடி வரை பலதரப்பட்ட பயணிகளும் குறிப்பாக வணிகர்கள், அலுவலகம் செல்வோர், பள்ளி கல்லூரி மாணவர்கள், போன்றோர் அதிகம் பயன்படுத்தினர். அகலப்பாதை பணி களுக்காக 2006 ஆம் ஆண்டு சேவை நிறுத்தப்பட்டது. பல கட்ட போராட்டத்திற்கு பிறகு 2019 ஜூன் மாதம் முதல் தினமும் ஒரு டெமு ரயில் இயங்குகிறது. திருவாரூர், திருத்துறைப்பூண்டி,  முத்துப்பேட்டை, அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை, அறந்தாங்கி ஆகிய ஊர்களில் உள்ள இரயில் ஆர்வலர்கள் அகலப்பாதை கூட்டமைப்புத் ஒன்றினை துவங்கி அதன் வழியாக திருவாரூர்-காரைக்குடி மார்க்கத்தில் அதிகமான சேவைகளை துவக்க வேண்டும்; சரக்கு போக்குவரத்து சேவைகளை துவக்க வேண்டும் என பலகட்ட போராட்டங்களை நடத்திக் கொண்டிருக்கின்றனர். இரயில் இயக்கப்படாமைக்கு முக்கிய காரணம் தென்னக இரயில்வே இந்த தடத்தில் உள்ள இரயில்வே கேட்டுகளுக்கு பணியாளர்களை போதுமான அளவிற்கு நியமிக்காமைதான்.

இந்நிலையில் இன்று 17-1-2020 திருவாரூரில் நாகை நாடாளுமன்ற உறுப்பினர் எம். செல்வராஜ் அவர்களை திருவாரூர்- காரைக்குடி அகல இரயில் பாதை உபயோகிப்போர்  சங்க கூட்டமைப்பினர் அதன் தலைவர் என்.ஜெயராமன், செயலர் வ.விவேகானந்தம் திருவாரூர் தணிகாசலம், பேராசிரியர் ப. பாஸ்கரன், பாரதி, அக்பர் பாஷா, இலியாஸ் முத்துப்பேட்டை சாஜத், சுல்தான் இப்ராஹிம் (சுனா இனா) அதிராம்பட்டினம் ஏ.அப்துல்ரசாக், எஸ்.ஏ.அப்துல் ஜலில், நஜ்மூதீன், ஜித்தா.ரஃபியா, பட்டுக்கோட்டை எம்.கலியபெருமாள் கா.லட்சுமிகாந்தன் ஆகியோர் சந்தித்து இந்த மார்க்கத்தில் விரைவு ரயில் சேவை துவங்க உதவிடுமாறு கோரிக்கை விடுத்தனர்.

கோரிக்கைகளை ஏற்றுக் கொண்டு நாகை எம்பி திரு.எம்.செல்வராஜ் கூறுகையில் தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினர் திரு.எஸ்.எஸ். பழனிமாணிக்கம், ராமநாதபுரம் எம்பி, திரு. நவாஸ் கனி, சிவகங்கை எம்பி திரு. கார்த்தி சிதம்பரம் ஆகியோருடன் இணைந்து சென்று தென்னக இரயில்வே அதிகாரிகளை வரும் 28- 01- 2020 அன்று சந்தித்து ஆவண செய்வதாக உறுதியளித்துள்ளாரஏறக்குறைய ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்து சரக்கு ரயில்களும் பயணிகள் இரயில்களும் இயக்கப்படாமல் உள்ளது வேதனை அளிப்பதாக இருக்கிறது என்றார்.

 திருவாரூர் மாவட்ட இரயில் உபயோகிப்போர் சங்கத்தலைவர் தணிகாசலம், "தென்னக ரயில்வே இது விஷயத்தில் பொதுமக்கள், வர்த்தகர்கள், மாணாக்கர்கள், நலனை   பிரதானமாக கருதி உடனடியாக சேவை துவங்க வேண்டும்.  அப்படி சேவை துவங்கவில்லை எனில் இப்பகுதி மக்கள் கடுமையான போராட்டத்தை மேற்கொள்ள தயாராக உள்ளனர் "என்றார்.

Wednesday, January 15, 2020

அதிராம்பட்டினம் வழியாக சென்னைக்கு விரைவு ரயில் இயக்குவதில் தாமதம்: சென்னை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு!

அதிராம்பட்டினம், ஜன.15
அதிராம்பட்டினம் வர்த்தகர்கள், ரெயில் உபயோகிப்பாளர்கள், சமூக ஆர்வலர்கள் பங்கேற்ற கலந்தாலோசனைக்கூட்டம், அதிராம்பட்டினம் நடுத்தெருவில் இன்று (15-01-2020) புதன்கிழமை மாலை நடைபெற்றது.

கூட்டத்திற்கு, அதிராம்பட்டினம் நல்வாழ்வு பேரவை நிறுவனத் தலைவர் மு.க.செ அகமது அலி ஜாஃபர் தலைமை வகித்தார்.

கூட்டத்தில், மயிலாடுதுறை ~ காரைக்குடி இடையே அகல ரெயில்பாதை பணிக்காக, சென்னையிலிருந்து மயிலாடுதுறை, திருவாரூர், திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை, பேராவூரணி, அறந்தாங்கி வழியாக காரைக்குடி வரையில் மீட்டர் கேஜ் பாதையில் இயங்கி வந்த கம்பன் எக்ஸ்பிரஸ் ரெயில் கடந்த 2006 ஆம் ஆண்டு நிறுத்தப்பட்டது.

அகல ரெயில் பாதை பணியை விரைவாக முடிக்கவும், அதிராம்பட்டினம் வழியாக விரைவு ரயில் சேவையை மீண்டும் தொடங்க தெற்கு ரெயில்வேக்கு உத்தரவிடக்கோரி, தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தைச் சேர்ந்த மு.க.செ அகமது அலி ஜாஃபர் கடந்த 2012 ஆம் ஆண்டு, சென்னை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.

இதையடுத்து, அகல ரயில் பாதை பணிகள் நடந்து முடிந்து, பட்டுக்கோட்டை ~ காரைக்குடி இடையேயான பாதையில் கடந்த 2018 ஆம் ஆண்டும், அதேபோல், பட்டுக்கோட்டை ~ திருவாரூர் இடையேயான பாதையில் கடந்த 2019 ஆம் ஆண்டும் அதிவேக சோதனை ஓட்டம் நடத்தி முடிக்கப்பட்டு, கடந்த ஓர் ஆண்டாக இந்த வழித்தடத்தில் டெமு ரயில் இயக்கப்பட்டு வருகின்றன.

காரைக்குடி ~ திருவாரூர் இடையேயான அகல ரெயில்பாதை பணிகள் நிறைவுபெற்றும், இன்னும் விரைவு ரயில் சேவை தொடங்கவில்லை. இதனால், திருவாரூர், திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை, பேராவூரணி, அறந்தாங்கி ஆகிய பகுதி பொதுமக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக, இந்த வழித்தடத்தில் உள்ள ரயில் பயணிகள் நலச்சங்க நிர்வாகிகள் பலர் தொடர் கோரிக்கை வைத்தும் கவனத்தில் கொள்ளப்படவில்லை. எனவே, கடந்த 2012 ஆம் ஆண்டு, சென்னை ஐகோர்ட்டில் நிலுவையில் உள்ள பொதுநல வழக்கை துரிதப்படுத்துவது என இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

இக்கூட்டத்தில், அதிராம்பட்டினம் வர்த்தக சங்க நிர்வாகிகள் கே.கே ஹாஜா நஜ்முதீன், என்.ஏ முகமது யூசுப், மனிதநல உரிமை கழகத் தலைவர் ஓ.கே.எம் ஷிபஹத்துல்லா, சமூக ஆர்வலர்கள் எம். நிஜாமுதீன், ஏ.சாகுல் ஹமீது, மு.காதர் முகைதீன், குலாப்ஜாமூன் அகமது அன்சாரி, அகமது ஹாஜா, எம்.கே.எம் அபூபக்கர், எம்.ஆர் ஜமால் முகமது, என்.எம் செய்யது முகமது, ஜமால், ஹிசாம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
 

Saturday, December 21, 2019

திருவாரூா் ~ பட்டுக்கோட்டை~ காரைக்குடி இடையே ரயில்வே கேட் கீப்பா் நியமிக்கக் கோரி மனு!

திருவாரூா் ~ பட்டுக்கோட்டை ~ காரைக்குடி இடையே ரயில் போக்குவரத்தை மேம்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, ரயில் பயணிகள் சேவைக் குழு தலைவரிடம் வியாழக்கிழமை மனு அளிக்கப்பட்டுள்ளது.

திருச்சி ரயில்வே கோட்டப் பகுதிகளில் நடைபெறும் மேம்பாட்டு பணிகளை தெற்கு ரயில்வே பொது மேலாளா் டிச.20 (வெள்ளிக்கிழமை) ஆய்வு மேற்கொள்கிறாா். முன்னதாக ரயில் பயணிகள் சேவைக் குழுத் தலைவா் ரமேஷ் சந்திர ரட்டன் வியாழக்கிழமை திருச்சி,ஸ்ரீரங்கம், லால்குடி உள்ளிட்ட ரயில் நிலையங்களில் ஆய்வு மேற்கொண்டாா்.

ஸ்ரீரங்கம் ரயில் நிலையத்தில் அவா் ஆய்வு மேற்கொண்டபோது, திருவாரூா்- பட்டுக்கோட்டை- காரைக்குடி அகல ரயில் பாதை உபயோகிப்போா் சங்கங்களின் கூட்டமைப்பின் சாா்பில், அதன் தலைவா் என். ஜெயராமன், செயலா் வ. விவேகானந்தம், திருவாரூா் மாவட்ட ரயில் உபயோகிப்போா் சங்கச் செயலா் ப. பாஸ்கரன், உறுப்பினா் மு. பாரதிதாசன், முத்துப்பேட்டை ரயில் உபயோகிப்போா் சங்க அமைப்பாளா் சுல்தான் இப்ராஹிம் ஆகியோா் ரமேஷ் சந்திர ரட்டன் மற்றும் உறுப்பினா்கள் எம்.என். சுந்தா், வெங்கட்ரமணி ஆகியோரைச் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனா்.

அந்த மனுவில், திருவாரூா் ~ பட்டுக்கோட்டை ~ காரைக்குடி மாா்க்கத்தில் உடனடியாக போதுமான அளவுக்கு கேட்கீப்பா்கள் மற்றும் பணியாளா்களை நியமிக்க வேண்டும். திருவாரூரிலிருந்து பட்டுக்கோட்டை வழியாக காரைக்குடிக்குச் செல்லும் டெமு ரயிலின் பயண நேரத்தை ஆறரை மணியிலிருந்து மூன்று மணி நேரமாகக் குறைக்க வேண்டும் . காரைக்குடியிலிருந்து பட்டுக்கோட்டை ~  திருவாரூா் வழியாக சென்னைக்கு இரவு மற்றும் பகல் நேர விரைவு ரயில்களை இயக்க வேண்டும். ராமேஸ்வரத்திலிருந்து, பட்டுக்கோட்டை ~ திருவாரூா் வழியாக வட மாநிலங்களுக்கு வாராந்திர ரயில்கள் இயக்க வேண்டும். மீட்டா்கேஜ் காலத்தில் இயங்கிய அனைத்து பயணிகள் ரயில்களையும் மீண்டும் இயக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்திருந்தனா்.
 

Tuesday, November 26, 2019

மாா்ச் முதல் காரைக்குடி ~ திருவாரூா் வழியாக சென்னைக்கு விரைவு ரயில் சேவை!

அதிராம்பட்டினம், நவ.26
காரைக்குடி~ திருவாரூா் வழியாக சென்னைக்கு 2020, மாா்ச் மாதத்தில் பயணிகள் விரைவு ரயில் சேவை தொடங்கும் என தெற்கு ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.

காரைக்குடி, அறந்தாங்கி, பேராவூரணி, அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை, திருத்துறைப்பூண்டி, திருவாரூா் வரையிலான 149 கி.மீ. தொலைவுள்ள மீட்டா் கேஜ் பாதையை, அகல ரயில் பாதையாக மாற்றுவதற்காக 2012-ம் ஆண்டு மாா்ச் மாதம் இத்தடத்தில் ரயில் சேவை நிறுத்தப்பட்டது. 7 ஆண்டுகளாக அகலப் பாதை அமைக்கும் பணிகள் நிறைவடைந்து, 2019 ஜூன் 1-ம் தேதி முதல் காரைக்குடி ~ திருவாரூா் வழித்தடத்தில் மொபைல் கேட் கீப்பா்களைக் கொண்டு டெமு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. பயண நேரம் ஆறரை மணி நேரம் ஆகிறது. இதனால், ரயில் பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனா்.

இந்நிலையில், திருவாரூா் மாவட்ட ரயில் உபயோகிப்பாளா் சங்கத் தலைவா் பாஸ்கரன் மற்றும் பட்டுக்கோட்டை ரயில் பயணிகள் நலச்சங்கத்தினா் அண்மையில் திருச்சியில் தெற்கு ரயில்வே கோட்ட மேலாளா் அஜய்குமாரை நேரில் சந்தித்து மனு அளித்தனா். அதில், காரைக்குடி-திருவாரூா் தடத்தில் ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டா், கேட் கீப்பா் மற்றும் தேவைப்படும் பணியாளா்களை உடனடியாக நியமித்து, டெமு ரயிலுக்குப் பதிலாக பயணிகள் ரயிலை இயக்க வேண்டும். காரைக்குடி - திருவாரூா் பயண நேரத்தை 3 மணி நேரமாக குறைக்க வேண்டும். இத்தடத்தில் சென்னை, ராமேசுவரத்திற்கு விரைவு ரயில் இயக்க வேண்டும் என கோரியிருந்தனா்.

மனுவைப் பெற்றுக் கொண்ட தெற்கு ரயில்வே திருச்சி கோட்ட மேலாளா் அஜய்குமாா் கூறுகையில்;
திருவாரூா் ~ காரைக்குடி வழித்தடத்தில் உள்ள அனைத்து ரயில்வே கேட்டுகளுக்கும், பகல் நேர கேட் கீப்பா் நியமிக்கும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது. இவ்வழித்தடத்தில் உள்ள ரயில்வே ஸ்டேஷன்களுக்கு தேவையான இரவு நேர ஸ்டேஷன் மாஸ்டா் நியமிக்கும் பணி 2020 மாா்ச் மாதத்துக்குள் நிறைவடையும். அதன்பின்,இத்தடம் வழியாக சென்னைக்கு விரைவு ரயில் இயக்கப்படும். இதற்கிடையே நடப்பாண்டு (2019) டிசம்பா் முதல் வாரத்தில் டெமு ரயிலுக்கு பதிலாக பயணிகள் ரயில் இயக்கப்படும். பயண நேரமும் 3 மணி நேரமாக குறைக்கப்படும் என்று தெரிவித்துள்ளாா்.

Wednesday, September 11, 2019

அதிராம்பட்டினம் ~ சென்னை இடையே இரு மார்க்கத்திலும் ரயிலில் பயணிக்கும் வாய்ப்பு!

அதிராம்பட்டினம், செப்.11
திருவாரூர் ~ காரைக்குடி மார்க்கத்தில் டெமு ரயில் சேவை 2020 பிப்ரவரி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ரயில் புறப்படும் நேரம் மாற்றத்தால், அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுவட்டாரப் பயணிகளுக்கு சென்னை ~ அதிராம்பட்டினம் இடையே இரு மார்க்கத்திலும் ரயிலில் பயணிக்கும் வாய்ப்பு அமைந்துள்ளது.

இதுகுறித்து அதிராம்பட்டினம் ரயில் பயணிகள் நல சங்க நிர்வாகிகள் ஹாஜி எம்.எஸ் ஷிகாபுதீன், ஹாஜி ஏ.அப்துல் ரெஜாக் ஆகியோர் கூறியது;
'எதிர்வரும் செப்.16 முதல், 2020 பிப்.29 வரை திருவாரூர் ~ காரைக்குடி மார்க்கத்தில் டெமு ரயில் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும், ரயில் புறப்படும் நேரமும் மாற்றப்பட்டுள்ளது.

அதன்படி, திருவாரூரிலிருந்து காலை 6 மணிக்கு புறப்படும் ரயில், பகல் 12.30-க்கு காரைக்குடிக்கு செல்கிறது. பின்னர் அங்கிருந்து 2.30 மணிக்கு புறப்படும் ரயில், இரவு 9.30-க்கு திருவாரூருக்கு வரும் எனவும் தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

இதனால், சென்னையிலிருந்து புறப்படும் மன்னை எக்ஸ்பிரஸ் அதிகாலை 3.10 மணிக்கும், காரைக்கால் எக்ஸ்பிரஸ் அதிகாலை 4.25 மணிக்கும் திருவாரூர் ரயில் நிலையத்திற்கு வந்தடையும். இதில் பயணிக்கும் அதிராம்பட்டினம் பயணிகள் ரயிலிருந்து இறங்கி அங்கிருந்து காலை 6 மணிக்கு புறப்படும் டெமு ரயில் மூலம் அதிராம்பட்டினம் ரயில் நிலையத்திற்கு காலை 8.32 மணிக்கு  வந்தடையலாம்.

அதேபோல், அதிராம்பட்டினத்திலிருந்து மாலை 6.22 மணிக்கு புறப்படும் டெமு ரயில், இரவு 9.30-க்கு திருவாரூருக்கு வரும், அங்கிருந்து இறங்கி, இரவு 10.25 மணிக்கு புறப்படும் சென்னை எக்ஸ்பிரஸிலும், இரவு 11.05 மணிக்கு புறப்படும் மன்னை எக்ஸ்பிரஸிலும் பயணிக்கலாம்.

திருவாரூர் ~ காரைக்குடி மார்க்கத்தில் டெமு ரயில் சேவையை பொதுமக்கள் அதிகளவில் பயன்படுத்துவதன் மூலம் எதிர்காலத்தில் இந்த மார்க்கத்தில் அதிகமான ரயில் சேவையை பெற முடியும். மேலும், சென்னையிலிருந்து அதிராம்பட்டினம் வரை செல்ல குறைந்த கட்டணம் (அதாவது, சென்னை ~ திருவாரூர் வரை எக்ஸ்பிரஸ் ரயிலுக்கான கட்டணமும், திருவாரூர் ~ அதிராம்பட்டினம் வரை பாசஞ்சர் ரயிலுக்கான கட்டணமும்) செலுத்தி  முன்பதிவு கூடத்தில் ரயில் டிக்கெட் பெற முடியும்.

மேலும், திருவாரூர் ~ காரைக்குடி மார்க்கத்தில் காலியாக உள்ள கேட் கீப்பர் பணியிடங்கள் விரைவில் நிரப்புவதற்கு தென்னக ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இதனால், இந்த மார்க்கக்தில் செல்லும் டெமு ரயிலின் வேகம் அதிகரிக்கக்கூடும். பயண நேரமும் குறையும்' என்றனர்.

Thursday, July 11, 2019

திருவாரூர் ~ காரைக்குடி வழித்தடத்தின் ரயில் பயண நேரம் ஒரு மணி நேரம் குறைப்பு!

அதிராம்பட்டினம், ஜூலை 11
திருவாரூர் ~ காரைக்குடி வழித்தடத்தின் டெமு ரயில் பயண நேரம் ஒரு மணி நேரம் குறைக்கப்பட்டுள்ளது.

திருவாரூர் ~ காரைக்குடி மார்க்கத்தில் 6 பெட்டிகளுடன் இயங்கி வந்த
டெமு ரயில், கடந்த (ஜூன் 25) முதல் தினசரி 3 பெட்டிகளுடன் இயக்கப்பட்டு வருகிறது. இந்த வழித்தடத்தில் கேட் கீப்பர்கள் இல்லாததால், மொபைல் கேட் கீப்பர்கள் மூலம் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இதனால், திருவாரூரிலிருந்து காரைக்குடி செல்வதற்கு சுமார் 8 மணி நேரத்துக்கும் மேலாக எடுத்துக்கொள்வது ரயில் பயணிகள் மத்தியில் கடும் அதிருப்தி நிலவியது.

இந்நிலையில், திருவாரூரிலிருந்து (வண்டி எண்: 06847) காலை 8.15 மணிக்கு ரயில் புறப்படும்போது, காரைக்குடியிலிருந்து (வண்டி எண்: 06848) 3 பெட்டிகளுடன் காலை 10.30 மணிக்கு ரயில் புறப்படும். இரண்டும், பேராவூரணியில் சந்தித்துக் கொண்டபின், தங்கள் நிலையங்களுக்குச் செல்லும். பின்னர் மறுநாள், இதேபோல் திருவாரூர் மற்றும் காரைக்குடியிலிருந்து ரயில் சேவை நடைபெறும். திங்கள், புதன், வெள்ளிக்கிழமைகளில் திருவாரூரிலிருந்து (வண்டி எண்: 06847) காரைக்குடிக்கு மாலை 15.15 மணிக்கு செல்லும் ரயிலானது, அங்கிருந்து செவ்வாய், வியாழன், சனிக்கிழமைகளில் காரைக்குடியிலிருந்து (வண்டி எண்: 06848) திருவாரூருக்கு மாலை 17.30 மணிக்கு சென்றடையும். இதன்மூலம் தினசரி ரயில் சேவையை, இரு மார்க்கத்திலும் பெற முடியும்.

இந்த மாற்றம் நாளை மறுதினம் (ஜூலை 13) முதல் நடைமுறைக்கு வர இருப்பதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. திருவாரூரிலிருந்து காரைக்குடி செல்வதற்கு சுமார் 7 மணி நேரம் எடுத்துக்கொள்ளும் என்பது குறிப்பிடத்தக்கது.

Friday, July 5, 2019

திருவாரூர் ~ காரைக்குடி தடத்தில் தினமும் 4 முறை ரயில் சேவை? தெற்கு ரயில்வே ஆலோசனை!

அதிராம்பட்டினம், ஜூலை 05
திருவாரூர் ~ காரைக்குடி வழித்தடத்தில் விரைவில் தினமும் 4 முறை 3 பெட்டிகளுடன் கூடிய டெமு ரயிலை இயக்க திருவாரூர் ~ காரைக்குடி வழித்தடத்தில் விரைவில் தினமும் 4 முறை 3 பெட்டிகளுடன் கூடிய டெமு ரயிலை இயக்க தெற்கு ரயில்வே நிர்வாகம் ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்த விவரம்:
தினமும் 3 பெட்டிகளுடன் திருவாரூரிலிருந்து (வண்டி எண்: 06847) காலை 7.30 மணிக்கு புறப்படும் ரயில் பிற்பகல் 12.30 மணிக்கு காரைக்குடி சென்றடையவும், அதேபோல, காரைக்குடியிலிருந்து (வண்டி எண்: 06848) 3 பெட்டிகளுடன் காலை 7.30 மணிக்கு புறப்படும் ரயில் பிற்பகல் 12.30 மணிக்கு திருவாரூர் சென்றடையவும்,  பின்னர் திருவாரூரில் இருந்து காரைக்குடிக்கும், மறுமுனையில் காரைக்குடியில் இருந்து திருவாரூருக்கும் பிற்பகல் 2 மணிக்குப் புறப்பட்டு இரவு 7 மணிக்கு சென்றடையவும், இதற்கான கால அட்டவணை தயாரிப்பது குறித்தும் ஆலோசித்து முடிவெடுக்க தெற்கு ரயில்வே நிர்வாகம் தீர்மானித்துள்ளது.

ரயில் பயணிகள் கோரிக்கையை ஏற்று, திருவாரூர் ~ காரைக்குடி வழித்தடத்தில் தேவையான கேட் கீப்பர்களை நியமித்து, தற்போதுள்ள 6 மணி நேர பயண நேரத்தை 5 மணி நேரமாக குறைத்து, தினசரி ரயில் சேவையை 4 முறையாக அதிகரிக்கச் செய்ய தெற்கு ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து ரயில்வே உயர் அதிகாரிகள் பலகட்ட ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி வருவதாகவும், விரைவில் திருவாரூர் ~ காரைக்குடி தடத்தில் தினமும் 4 முறை ரயில் சேவைக்கான அறிவிப்பு வெளியாகலாம் எனவும் தெரிகிறது."

Tuesday, June 25, 2019

திருவாரூர் ~ காரைக்குடி வழித்தடத்தில் தினசரி 3 பெட்டிகளுடன் டெமு ரயில் இயக்கம்!

அதிராம்பட்டினம், ஜூன் 25
திருவாரூர் ~ காரைக்குடி ரயில் வழித்தடத்தில் தினசரி 3 பெட்டிகளுடன் இயக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

திருவாரூர் ~ காரைக்குடி மார்க்கத்தில் 6 பெட்டிகளுடன் டெமு ரயில் இயங்கி வந்தது. இந்நிலையில், இந்த வழித்தடத்தில் இன்று (ஜூன் 25) செவ்வாய்க்கிழமை முதல் தினசரி 3 பெட்டிகளுடன் இயக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

அதன் படி, 3 பெட்டிகளுடன் திருவாரூரிலிருந்து (வண்டி எண்: 06847) காலை 8.15 மணிக்கு ரயில் புறப்படும்போது, காரைக்குடியிலிருந்து (வண்டி எண்: 06848) 3 பெட்டிகளுடன் காலை 09.45 மணிக்கு ரயில் புறப்படும். இரண்டும், பட்டுக்கோட்டையில் சந்தித்துக் கொண்டபின், தங்கள் நிலையங்களுக்குச் செல்லும். பின்னர் மறுநாள், இதேபோல் திருவாரூர் மற்றும் காரைக்குடியிலிருந்து ரயில் சேவை நடைபெறும். திங்கள், புதன், வெள்ளிக்கிழமைகளில் திருவாரூரிலிருந்து (வண்டி எண்: 06847) காரைக்குடிக்கு மாலை 16.15 மணிக்கு செல்லும் ரயிலானது, அங்கிருந்து செவ்வாய், வியாழன், சனிக்கிழமைகளில் காரைக்குடியிலிருந்து (வண்டி எண்: 06848) திருவாரூருக்கு மாலை 17.45 மணிக்கு சென்றடையும். இதன்மூலம் தினசரி ரயில் சேவையை, இரு மார்க்கத்திலும் பெற முடியும்.

இந்த வழித்தடத்தில் கேட் கீப்பர்கள் இல்லாததால், மொபைல் கேட் கீப்பர்கள் மூலம் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இதனால், திருவாரூரிலிருந்து காரைக்குடி செல்வதற்கு சுமார் 8 மணி நேரத்துக்கும் மேலாக எடுத்துக் கொள்வது குறிப்பிடத்தக்கது.