.

Pages

Showing posts with label திருச்சி செய்திகள். Show all posts
Showing posts with label திருச்சி செய்திகள். Show all posts

Wednesday, January 29, 2020

காரைக்குடி~திருவாரூர் இடையே கேட் கீப்பர்கள் நியமிக்க கோரி: எம்.பி.,க்கள் தலைமையில் ரயில் சங்க பிரதிநிதிகள் உயர் அதிகாரியை சந்தித்து வலியுறுத்தல்!

காரைக்குடி ~ திருவாரூர் இடையிலான கேட்களுக்கு பணியாளர்களை விரைந்து நியமிக்க வேண்டும் என திருச்சி ரயில்வே கோட்ட மேலாளா் அஜய்குமாரிடம் மக்களவை உறுப்பினா்கள் சு. திருநாவுக்கரசா் (திருச்சி),  எம். செல்வராஜ் (நாகை) ஆகியோர் செவ்வாய்க்கிழமை நேரில் சந்தித்து வலியுறுத்தினர்.

திருச்சி மக்களவை உறுப்பினா் சு. திருநாவுக்கரசா்,  நாகை மக்களவை உறுப்பினா் எம். செல்வராஜ் ஆகியோா் தலைமையில், அறந்தாங்கி, பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம், முத்துப்பேட்டை, திருவாரூா் ஆகிய பகுதிகளின் ரயில் உபயோகிப்போா் சங்கப் பிரதிநிதிகள் திருச்சி ரயில்வே கோட்ட மேலாளா் அஜய்குமாருடன் சந்திப்புக் கூட்டம் நடைபெற்றது.

அப்போது எம்.பிக்கள் கூறியது;
காரைக்குடி ~ திருவாரூர் ரயில் வழித்தடத்தில் உள்ள அனைத்து ரயில் கேட்களுக்கும் உடனடியாகப் பணியாளர்களை நியமிக்க வேண்டும். இல்லையெனில் பொதுமக்களைத் திரட்டிப் போராடுவோம். மக்கள் பாதிப்புள்ளாக்கும் ரயில்வே பிரச்சனைகளுக்கு அதிகாரிகள் விரைந்து தீர்வு காண முன்வர வேண்டும். மக்களவை கூட்டத்தொடர் ஓரிரு நாட்களில் தொடங்கப்படவுள்ளது. இந்நிலையில், ரயில்வே நிதி அமைச்சர்களிடம் பேசி ஆவன செய்ய மேலும் வலியுறுத்துவோம். எனத் தெரிவித்தனர்.

இதற்கு பதிலளித்து கோட்ட மேலாளர் கூறுகையில்;
கேட் கீப்பர்கள் பிரச்சனைக்கு விரைவில் தீர்வு காணப்படும் என்றார்.

கூட்டத்தில், திருச்சி கோட்ட மேலாளா் (இயக்கம்) பூபதி ராஜா, மேலாளா் (இயக்கம்) நரேன், அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை, முத்துப்பேட்டை, திருவாரூர், அறந்தாங்கி ஆகிய பகுதிகளின் ரயில் உபயோகிப்போா் சங்கப் பிரதிநிதிகள் ஹாஜி எம்.எஸ் ஷிகாபுதீன், ஹாஜி ஏ. அப்துல் ரெஜாக், ஹாஜி மு.செ.மு ராபியா, ஹாஜி பத்ருத்தீன், வ.விவேகானந்தன், கலிய பெருமாள், ஹாஜி சுல்தான் இப்ராஹீம், ப.பாஸ்கரன், பாரதி, ஜெர்மன் அலி, ராஜ்குமார் ஆகியோா் உடனிருந்தனா்.
 

Saturday, December 21, 2019

வெள்ளி விழா ஆண்டை நோக்கி திருச்சி ~ சாா்ஜா விமானச் சேவை!

திருச்சி ~ சாா்ஜா விமானச் சேவை வெள்ளி விழா ஆண்டில் அடியெடுத்து வைக்கவுள்ள நிலையில் கூடுதல் விமானங்கள் இயக்கப்பட வேண்டும் என்ற எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது.

திருச்சியில் இருந்து வளைகுடா (கல்ப்) நாடுகளுக்கான முதல் விமானச் சேவை திருச்சி-சாா்ஜா இடையே கடந்த 1996 டிச. 3 -இல் தொடங்கியது. அப்போது இயங்கி வந்த இந்தியன் ஏா்லைன்ஸ் நிறுவனம்தான் இந்தச் சேவையைத் தொடங்கியது. வாரம் இரு நாள்கள் மட்டுமே இந்தப் போக்குவரத்து நடந்த நிலையில், இந்தியன் ஏா்லைன்ஸ் மற்றும் ஏா் இந்தியா நிறுவனங்கள் இணைப்புக் காரணமாக, கடந்த 2009 செப். 23 ஆம் தேதியுடன் அந்தச் சேவை ரத்து செய்யப்பட்டது.

அதைத் தொடா்ந்து வளைகுடா நாடுகளில் இயங்கி வரும் தமிழ்ச்சங்கங்கள் குவைத்தில் இயங்கி வரும் தமிழ் இஸ்லாமிய சங்கங்கள், அபுதாபி அய்மன் சங்கம், துபையில் இயங்கி வரும் ஈமான் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள், அரசியல் பிரமுகா்களின் ஒத்துழைப்பாலும், திருச்சி - சாா்ஜா விமானச் சேவையை மீண்டும் தொடங்க அப்போதைய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த அசோக் கஜபதிராஜூ நடவடிக்கை எடுத்தாா். அதன் மூலம் 2015 செப். 14 ஆம் தேதி மீண்டும் திருச்சி -சாா்ஜா விமானப் போக்குவரத்து, ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனத்தால் தொடங்கப்பட்டது.

அந்த வகையில் திருச்சி - சாா்ஜா விமானப் போக்கு வரத்துத் தொடங்கி (2021ல்) வெள்ளி விழா ஆண்டில் அடியெடுத்து வைக்க ஓராண்டே உள்ள நிலையில், வாரம் இருமுறை இருந்த சேவை தற்போது தினசரி சேவையாக மேம்பட்டுள்ளது. அதேபோல, துபைக்கும் பிரத்யேக விமானச் சேவை தொடங்கப்பட்டு அதுவும் வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது.

மேலும் திருச்சி - சாா்ஜா மற்றும் துபை விமானங்களில் எப்போதுமே பெரும்பாலான இருக்கைகளும் (90 சதவிகிதம்) நிரம்பிவருவது குறிப்பிடத்தக்கது. 180 இருக்கைகள் உள்ள விமானங்கள் சாா்ஜா, துபை நாடுகளுக்கு இயக்கப்படும் நிலையில், தினசரி சுமாா் 700 போ் திருச்சி-அரபு நாடுகளிடையே பயணித்து வருகின்றனா்.

இந்த விமானங்களில் இருக்கைகள் கிடைக்காத நிலையில், இலங்கை மற்றும் சென்னை விமான நிலையங்கள் வழியாகப் பயணித்து வருகின்றனா். சென்னை வழியாக பயணிப்போருக்கு அங்கிருந்து ஊருக்கு வந்து செல்ல சாலைப் போக்குவரத்து அல்லது ரயில் போக்குவரத்தை நம்பியிருப்பதால் மேலும் கூடுதல் பொருட்செலவு மற்றும் கால விரயம் ஏற்படுகிறது.

எனவே, திருச்சிக்கு மேலும் இரு விமானங்கள் இயக்கினாலும் அவற்றிலும் பயணிகள் செல்வா் என்பதால் கூடுதல் விமானங்கள் இயக்கப்பட வேண்டும் என்ற எதிா்பாா்ப்பும் எழுந்துள்ளது.

அரபு நாட்டு விமானங்களும் வந்து செல்ல ஓடுதள நீட்டிப்பு தேவை:
திருச்சியில் விமான ஓடுதளம் 10 ஆயிரம் அடியை எட்டவில்லை என்பதால், சாா்ஜா, துபை மற்றும் சிங்கப்பூா், மலேசியா நாடுகளைச் சோ்ந்த விமான நிறுவனங்களும் புதிய விமான போக்குவரத்துகளைத் தொடங்க தயக்கம் காட்டி வருகின்றன. ஓடுதள நீட்டிப்புக்குப் பின்னா் திருச்சி-அரபு நாடுகளிடையே, அரபு நாட்டு நிறுவனங்கள் மட்டுமின்றி பிற நாடுகளின் விமான நிறுவனங்களும் போக்குவரத்து தொடங்கும் என்பதில் ஐயமில்லை.

திருவாரூா் ~ பட்டுக்கோட்டை~ காரைக்குடி இடையே ரயில்வே கேட் கீப்பா் நியமிக்கக் கோரி மனு!

திருவாரூா் ~ பட்டுக்கோட்டை ~ காரைக்குடி இடையே ரயில் போக்குவரத்தை மேம்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, ரயில் பயணிகள் சேவைக் குழு தலைவரிடம் வியாழக்கிழமை மனு அளிக்கப்பட்டுள்ளது.

திருச்சி ரயில்வே கோட்டப் பகுதிகளில் நடைபெறும் மேம்பாட்டு பணிகளை தெற்கு ரயில்வே பொது மேலாளா் டிச.20 (வெள்ளிக்கிழமை) ஆய்வு மேற்கொள்கிறாா். முன்னதாக ரயில் பயணிகள் சேவைக் குழுத் தலைவா் ரமேஷ் சந்திர ரட்டன் வியாழக்கிழமை திருச்சி,ஸ்ரீரங்கம், லால்குடி உள்ளிட்ட ரயில் நிலையங்களில் ஆய்வு மேற்கொண்டாா்.

ஸ்ரீரங்கம் ரயில் நிலையத்தில் அவா் ஆய்வு மேற்கொண்டபோது, திருவாரூா்- பட்டுக்கோட்டை- காரைக்குடி அகல ரயில் பாதை உபயோகிப்போா் சங்கங்களின் கூட்டமைப்பின் சாா்பில், அதன் தலைவா் என். ஜெயராமன், செயலா் வ. விவேகானந்தம், திருவாரூா் மாவட்ட ரயில் உபயோகிப்போா் சங்கச் செயலா் ப. பாஸ்கரன், உறுப்பினா் மு. பாரதிதாசன், முத்துப்பேட்டை ரயில் உபயோகிப்போா் சங்க அமைப்பாளா் சுல்தான் இப்ராஹிம் ஆகியோா் ரமேஷ் சந்திர ரட்டன் மற்றும் உறுப்பினா்கள் எம்.என். சுந்தா், வெங்கட்ரமணி ஆகியோரைச் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனா்.

அந்த மனுவில், திருவாரூா் ~ பட்டுக்கோட்டை ~ காரைக்குடி மாா்க்கத்தில் உடனடியாக போதுமான அளவுக்கு கேட்கீப்பா்கள் மற்றும் பணியாளா்களை நியமிக்க வேண்டும். திருவாரூரிலிருந்து பட்டுக்கோட்டை வழியாக காரைக்குடிக்குச் செல்லும் டெமு ரயிலின் பயண நேரத்தை ஆறரை மணியிலிருந்து மூன்று மணி நேரமாகக் குறைக்க வேண்டும் . காரைக்குடியிலிருந்து பட்டுக்கோட்டை ~  திருவாரூா் வழியாக சென்னைக்கு இரவு மற்றும் பகல் நேர விரைவு ரயில்களை இயக்க வேண்டும். ராமேஸ்வரத்திலிருந்து, பட்டுக்கோட்டை ~ திருவாரூா் வழியாக வட மாநிலங்களுக்கு வாராந்திர ரயில்கள் இயக்க வேண்டும். மீட்டா்கேஜ் காலத்தில் இயங்கிய அனைத்து பயணிகள் ரயில்களையும் மீண்டும் இயக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்திருந்தனா்.
 

Monday, October 8, 2018

திருச்சி மமக பிரமாண்ட மாநாட்டில் 25 தீர்மானங்கள் நிறைவேற்றம் (முழு விவரம்)

திருச்சியில் மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச் ஜவாஹிருல்லா தலைமையில், அரசமைப்புச் சட்ட பாதுகாப்பு மாநில மாநாடு நடைபெற்றது.

இந்த மாநாட்டில், திராவிட கழகத் தலைவர் கி.வீரமணி, பாண்டிச்சேரி முதல்வர் வி.நாராயணசாமி, திமுக துணைப் பொதுச்செயலாளர் வி.பி துரைசாமி, காங்கிரஸ் கட்சி தலைவர் எஸ்.திருநாவுக்கரசர், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, இந்திய கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் இரா.முத்துரசன், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தேசியத் தலைவர் கே.எம் காதர் முகைதீன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் பங்கேற்று உரையாற்றினர்.

தமுமுக பொதுச்செயலாளர் எஸ்.ஹைதர் அலி, மமக பொதுச்செயலாளர் ப.அப்துல் சமது ஆகியோர் சிறப்புரை வழங்கினர்.

முன்னதாக, சமூகநீதி மாணவர் இயக்கம் நிர்வாகி எஸ். நூர்தீன் தலைமையில் 'மாணவச் சமூகம் எழுகவே' எனும் தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில், சிறப்பு  அழைப்பாளர்களாக தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் நிர்வாகி பேராசிரியர் அருணன், சென்னை உயர்நீதிமன்ற வழக்குரைஞர் ஹென்றி டிபேன், பேராசிரியர் ஹாஜா கனி ஆகியோர் சிறப்புரை வழங்கினர்.

மாநாட்டில், சமுதாய அரங்கம் நிகழ்ச்சி, வீர வரலாற்று கலை நிகழ்ச்சி, புதுவை பூபாலனின் கலை நிகழ்ச்சிகள், முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞருக்கு நன்றி செலுத்தும் விதமாக 'சமூக நீதி' குறுந்தகடு வெளியிடப்பட்டது.

இந்த மாநாட்டில், காவிரி படுகையை வேளாண் பாதுகாப்பு மண்டலமாக அறிவிப்பது, தேர்தலில் மீண்டும் வாக்குச்சீட்டு முறையை கொண்டுவருவது, நீட் தேர்வில் தமிழக மாணவர்களுக்கு விலக்கு, பெட்ரோல் - டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு உள்ளிட்ட 25 தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.

1) அரசமைப்புச் சட்டத்தைப் பாதுகாக்க ஓரணியில் நிற்க வேண்டும், இந்தியாவின் அரசமைப்புச் சட்டத்தையும் அதன் ஆன்மாவாய்த் திகழும் சமத்துவம், சகோதரத்துவம், சமயச் சார்பின்மை ஆகிய கொள்கைகளையும் மறைமுகமாய்ச் சிதைத்து வரும் சங்பரிவாரத்தின் அரசியல் கிளையான பாஜக மத்தியில் ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு இந்திய அரசமைப்புச் சட்டம் மாபெரும் அபாயங்களைச் சந்தித்து வருகிறது.

அமைச்சரவையையோ, நாடாளுமன்றத்தையோ ஆலோசிக்காமல் நாட்டில் புழக்கத்தில் இருந்த 90 சதவிகித ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிப்புச் செய்து மக்களை துன்புறுத்தியது, மணிப்பூர் மற்றும் கோவாவில் தேர்தலில் தோல்வி அடைந்த பிறகும் அங்கு பாஜக அரசை அமைத்த்து, ஆதார் தொடர்பான சட்டமுன்வடிவை ஒரு பொருளாதார மசோதவாக கொண்டு வந்து அதன் மூலம் விவாதமில்லமல் மாநிலங்களவையில் நிறைவேற்றியது, பாஜக ஆளும் ராஜஸ்தான் மற்றும் அரியானவில் உள்ளாட்சி தேர்தல்களில் போட்டியிடுவதற்கு கல்வி தகுதி அவசியம் என்று சட்டமியற்றி, பெண்கள், தலித்கள் மற்றும் பழங்குடியினர் உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்ந்தெடுக்கப்படுவதை தடுத்த்து, தமிழக சட்டமன்றம் நீட் வேண்டாம் என்று இரண்டு தீர்மானங்கள் நிறைவேற்றிய பிறகும் நீட் தேர்வை தமிழகத்தின் மீது திணித்தது போன்ற பல்வேறு நிகழ்வுகள் அரசமைப்புச் சட்டத்தை நீர்த்து போக மோடி அரசு செய்து வரும் நடவடிக்கைகளை அம்பலப்படுத்துகின்றன.

ஆதிக்கசாதியினரின் நம்பிக்கைக்காக பெரும்பான்மையான மக்களின் உணவு உரிமை, பண்பாட்டு உரிமை, வழிபாட்டு உரிமைகள் மோடி ஆட்சியில் மோசமாகப் பறிக்கப்பட்டு வருகின்றன. அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமாக மாநில அரசுகளின் உரிமைகளும் பறிக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் விடுதலைப் போராட்ட வீரர்களின் கனவாகவும், தேசத்தந்தை காந்தியடிகளின் உணர்வாகவும் திகழும் இந்தியாவின் அரசமைப்புச் சட்டத்தைப் பாதுகாக்க அனைவரும் ஒன்று திரண்டு ஓரணியில் நிற்க வேண்டும் எனவும், பாசிச பாஜக அரசை வீட்டுக்கு அனுப்பி வீரியப் பணிகளை ஜனநாயக வழியில் மேற்கொள்ள வேண்டுமெனவும் இம்மாநாடு வலியுறுத்துகிறது.

2.  வாக்குச்சீட்டு முறை தேர்தலுக்கு மாற வேண்டும்
மின்னணு  வாக்குப்பதிவு  முறை  குறித்து பல்வேறு குற்ற சாட்டுகளும் முறைகேடுகளும்  கூறப்பட்டு வருகின்றன  குறிப்பாக பாஜக மத்தியில்  ஆட்சிக்கு  வந்தபின் மின்னணு வாக்குப்பதிவு  இயந்திர முறையில் தில்லுமுல்லுகள் சரமாரியாக நடத்தப்பட்டு வருகின்றன. வாக்குச் சீட்டு முறைக்கு வளர்ந்த நாடுகளே திரும்பியுள்ளதைக் கருத்தில் கொண்டு, மக்கள்  தீர்ப்பை  உண்மைப்படுத்த உறுதி  படுத்த  மக்களாட்சியை  வலுப்படுத்த   மக்களாட்சி  கட்டுமானத்தை கட்டிக்காக்க  வாக்களிக்கும்  முறையை    வாக்கு  சீட்டு  முறைக்கு மாற்றவேண்டும்  என தேர்தல்  ஆணையத்தை இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.

3. சட்டமியற்றும் அவைகளில் முஸ்லிம்களின் பிரதிநிதித்துவம் அதிகரிக்க நடவடிக்கை தேவை
செழிந்தோங்கும் ஒரு ஜனநாயக நாட்டின் முக்கிய பண்பு அதிகாரத்தில் தங்களுக்கும் பங்கு உண்டு என்பதை அனைத்து மக்களும் உளமார உணர்ந்திருப்பது தான். ஆனால் . தொடர்ச்சியாக நாடாளுமன்றத்திலும் சட்டமன்றத்திலும் முஸ்லிம்களின் பிரதிநிதித்துவம் நசிந்து வருவதை இம்மாநாடு கவலையோடு சுட்டிக் காட்டுகிறது.  தொகுதி மறுவரையறை என்ற பெயரில் சிறுபான்மை முஸ்லிம்கள் திரளாக இருக்கும் பகுதிகள் பிரிக்கப்பட்டு இதன் காரணமாகவும் சிறுபான்மை மக்களின் பிரதிநிதித்துவம் குறையும் நிலையும் ஏற்பட்டுள்ளது. நீதியரசர் சச்சார் குழுவின் அறிக்கையும் முஸ்லிம்களின் பிரதிநிதித்துவம் அதிகரிக்க சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது. சிறுபான்மை மக்களின் பிரதிநிதித்துவம் உள்ளாட்சி மன்றம், சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றத்தில் அதிகாரிக்கும் வகையில் அரசியல் கட்சிகள் முஸ்லிம்களுக்கு கூடுதல் பிரதிநிதித்துவம் அளிக்கும் வகையில் உரிய நடவடிக்கை எ\டுக்க வேண்டுமென இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.

4. மாநிலங்களின் உரிமைகள் பாதுகாக்கப்படவேண்டும் 
ஆளும் பாஜகவின் தாய் அமைப்பான ஆர்எஸ்எஸ் சின் தலைவராக இருந்த எம் எஸ் கோல்வால்கர் இந்தியாவில் மத்திய அரசு மட்டுமே இருக்க வேண்டும் என்ற நிலையை வலியுறுத்தி இந்தியா ஒரு கூட்டாட்சி என்ற அரசியலமைப்புச் சட்டத்தின் நெறிமுறையை எதிர்த்து வந்தவர். கோல்வால்கரின் வழி வந்த இன்றைய  மோடி தலைமையிலான மத்திய  அரசு.மாநிலங்களின் உரிமைகளை பறித்து அதிகார குவிப்பில்  இறங்கி வருகிறது . ஆளுநர்கள்  மத்திய ஆளுங்கட்சியின் முகவர்களாகவே   எதிர்க்கட்சிகள்  ஆளும் மாநிலங்களில் செயல்படுகின்றனர். குறிப்பாக டெல்லி , புதுவை உள்ளிட்ட மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகள் நிர்வாக கடமைகளை   ஆளுமைத்திறனுடன் நடத்துவதற்கு   இடையூறு  விளைவித்து வருகின்றளர்.  முன்னேறிய மாநிலங்களான   தமிழ்நாடு கேரளா கர்நாடகா , தெலங்கானா , ஆந்திர பிரதேசம் உள்ளிட்ட  மாநிலங்களின் நிதி உரிமைகளை முடக்கும் வண்ணம் மேற்கண்ட மாநிலங்களுக்கு மத்திய  நிதியில்  பாரபட்சம் காட்டப்பட்டு   அநீதி இழைக்கப்பட்டுள்ளது தமிழக சட்டமன்றம் நீட் தொடர்பாக இரண்டு தீர்மானங்கள் நிறைவேற்றிய நிலையில் அதனை மத்திய அரசு உதாசீனப்படுத்தியுள்ளது. மாநில அரசுகளின் உரிமைகளை நிலைநாட்டி அரசியலமைப்புச் சட்டம் வழியுறுத்தும் கூட்டாட்சி தத்துவத்தை நிலைநாட்டி மாநிலங்களின் உரிமைகளை காக்க  அனைவரும் பாஜகவிற்கு எதிராக ஓரணியில் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்பதை இந்த மாநாடு மீண்டும் வலியுறுத்துகிறது.

5. சமூக நீதி
தேச விடுதலைக்கு மாபெரும் தியாகங்களைச் செய்ததில் முதன்மையான இடத்தில் உள்ள முஸ்லிம் சமுதாயம், விடுதலைப் பெற்ற இந்தியாவில் பாசிச சதிகளால் அனைத்துத் துறைகளிலும் பெரும் புறக்கணிப்புக்கு ஆளாகி இருப்பதை நீதியரசர் ராஜிந்தர் சச்சார் குழுவின் அறிக்கைத் துல்லியமாக நிரூபித்தது. நீதியரசர் ரங்கநாத் மிஸ்ரா ஆணையம், பரிந்துரைத்த தேசிய அளவில் முஸ்லிம்களுக்கான 10 சதவீத இடஒதுக்கீடு உள்ளிட்டவை சமூகத்தின் உரிமைகளே அன்றி சலுகைகள் அல்ல. முறையான ஆய்வுகளுக்குப் பிறகு முஸ்லிம் சமூகத்திற்கு வழங்கப்பட்ட சமூகநீதிப் பரிந்துரைகளை மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என இம்மாநாடு வலியுறுத்துகிறது. சாதிவாரியாக கணக்கீடு நடத்தப்பட்டு அனைவருக்கும் அவர்களது விகிதாச்சாரத்தின் அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டுமென இம்மாநாடு கோருகின்றது.


6. காஷ்மீர்  மக்களின் சுயாட்சி  உரிமைக்கு  அரசியல் சாசன  பாதுகாப்பு வழங்கும்  35ஏ  370  பிரிவுகளை  நீக்கக்கூடாது 
இந்தியாவோடு  இணைந்து வாழும் ஜம்மு  காஷ்மீர் மக்களின்  மாநில சுயாட்சி   உரிமைக்கு  எதிராக 35ஏ  370  ஆகிய பிரிவுகளை  நீக்கவேண்டும்  என்ற விஷமப்   பரப்புரையை   மதவெறி சக்திகள் முன்னெடுத்து வருகின்றன. பாஜகவின்   அஷ்வின்   உபாத்யாயா  என்பவர்  மேற்கண்ட  பிரிவுகளை  நீக்கவேண்டும்  என  நீதிமன்றத்தில்  வழக்கு தொடர்வதும்  அரசியலமைப்பு உரிமையை  கேள்வி  எழுப்புவதும்  காஷ்மீர்  மக்களின் உரிமைக்கு  ஊறு  விளைவிப்பதாகும்.  இன்றைய  மத்திய  ஆட்சியில்     ஒவ்வொரு  மாநிலமும்  தம்  தனித்தன்மையை  உரிமைகளை  இழந்து    தவித்து  வரும் நிலையில்,  ஜம்மு  காஷ்மீர்  மக்களின்  சுயாட்சி  உரிமைக்கு  கேடு  விளைவிக்கும் வகையிலான நடவடிக்கைகளை   மத்திய அரசு  மேற்கொள்ளக்கூடாது  என  இம்மாநாடு  கேட்டுக்கொள்கிறது

7. முத்தலாக் அவசர சட்டத்தை  திரும்ப பெறுக 
முஸ்லிம்களின் உரிமைகளை நசுக்குவதையே முழுமுதல் கடமையாக கொண்டுள்ள மோடி தலைமையிலான  மத்திய அரசு கொண்டு வந்துள்ள முத்தலாக்  அவசர சட்டத்திற்கு  இம்மாநாடு  தனது வன்மையான கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறது. நாடாளுமன்றத்தில் முத்தலாக் குறித்த சட்ட முன்வரைவு நிலுவையில் இருக்கும் நிலையில் அரசமைப்புச் சட்டத்தின்  மாண்பையும் பெருமிதத்தையும் குலைக்கும் நோக்குடன் முத்தலாக் குறித்து அவசர சட்டத்தை மோடி அரசு பிரகடனப்படுத்தியுள்ளது. இது  அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 25க்கு முரணானது. முஸ்லிம் மகளிரின் மேல் எவ்வித அக்கறையும் அற்ற , இந்த அரசு முஸ்லிம் மகளிரின் வாழ்வை  கேள்விக்குறியாக்கி முஸ்லிம் இளைஞர்களை நிரந்தர குற்றப்பிரிவினராக   மாற்றும்  சதித்திட்டத்துடன் இந்த அவசர சட்டத்தை கொண்டுவந்துள்ளது. கோடிக்கணக்கணக்கான  மக்களின்  அதிருப்தி  தீயை அணைக்க  உடனடியாக இந்த அவசர சட்டத்தைத்  திரும்ப பெறவேண்டும்  என  இம்மாநாடு கோருகிறது

8. விகிதாச்சார தேர்தல் முறை வேண்டும் 
தற்போதுள்ள  தேர்தல் முறை மக்களின் முழுமையான பிரநிதித்துவத்தை  செயல்படுத்துவதாக  உள்ளதா என்ற கேள்விக்குறி  அனைத்து  ஜனநாயக சக்திகளிடமும் எழுந்துள்ளது.

எடுத்துக்காட்டாக  2 014ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் நாடு முழுவதும் பா.ஜ.க. பெற்ற வாக்குகள் 17 கோடியே, 16 இலட்சத்து, 37 ஆயிரத்து, 684. இது பதிவான மொத்த வாக்குகளில் 31 சதவிகிதம். ஆனால், அக் கட்சிக்கு 282 எம்.பி.க்கள் உள்ளனர். இது மொத்தமுள்ள எம்.பி.க்களின் எண்ணிக்கையில் 51.9 சதவிகிதம்.

அதேபோல் காங்கிரஸ் கட்சிக்கு 10 கோடியே 69 இலட்சத்து, 35 ஆயிரத்து, 311 வாக்கு கிடைத்தன. இது 19.3 சதவிகிதம். ஆனால், காங்கிரஸ் எம்.பி.க்களின் எண்ணிக்கை 44 மட்டுமே. இது எம்.பி.க்களின் எண்ணிக்கையில் 8.1 சதவிகிதம் தான்      நாட்டில்  இரண்டாவதாக வாக்குகளை  அதிகம் பெற்ற  ஒரு பெரிய கட்சிக்கே சரியான விகிதாச்சாரமான முறையில் பிரதிநிதித்துவம் வழங்கமுடியா நிலையில், நாட்டின் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக பாடுபடும் பல்வேறு கட்சிகளுக்கு வாக்களிக்கும் மக்களின் வாக்குகள் உரிய பிரதிநிதித்துவத்தை பிரதிபலிக்க முடியுமா என்ற வினா எழுகிறது. அந்தந்த  கட்சிகள்  பெறும்  வாக்குகளின் அடிப்படையில  மக்களின் பிரதிநித்துவம் இருந்தால் மட்டுமே  அது முழுமையான மக்களாட்சி தத்துவத்தை செயல்படுத்துவதாக அமைய முடியும்  என்பதால்  விகிதாச்சார   தேர்தல் முறையை நாடு முழுவதும்  நடைமுறைப் படுத்தவேண்டும். இந்த விகிதாச்சார முறை 89 நாடுகளில் நடைமுறையில் உள்ளன. உள்ளன. மக்களின் வாக்கு மதிப்பை வீணாக்காத விகிதாச்சாரத் தேர்தல் முறையை நமது நாட்டில் நடைமுறைப்படுத்த வேண்டும் என இம்மாநாடு கோருகின்றது.

9. ஸ்டெர்லைட்
தமிழகத்தின் சுற்றுச்சூழலையும், வாழ்வாதாரத்தையும் சிதைத்து வந்த தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க நடக்கும் முயற்சிகளை இம்மாநாடு வன்மையாகக் கண்டிக்கிறது. மக்களின் நன்மைக்காக, ஸ்டெர்லைட்டை எதிர்த்துப் போராடி, மாநில அரசின் காட்டுமிராண்டித்தனமான துப்பாக்கிச் சூட்டில் 13க்கும் மேற்பட்டோர் பலியானதை இம்மாநாடு துயரத்தோடு நினைவு கூர்கிறது.
இத்தனை உயிர்பலிகளுக்குப் பின் எக்காரணத்தை முன்னிட்டும் நாசகர ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்படக்கூடாது என இம்மாநாடு வலியுறுத்துகிறது.

10. ஹைட்ரோ கார்பன்
கார்ப்பரேட் நிறுவனங்களின் கைக்கூலி போல மத்திய அரசு செயல்பட்டு வருவதை இம்மாநாடு வன்மையாகக் கண்டிக்கிறது. தமிழகத்தின் நெற்களஞ்சியமான காவிரிப் படுகையில் மூன்று இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க ஓ.என்.ஜி.சி.க்கும் வேதாந்தா நிறுவனத்திற்கும் மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இந்த ஒப்பந்தம் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் முன்னிலையில் கையெழுத்தாகி உள்ளது. ஹைட்ரோ கார்பன் எடுப்பதால் பிரச்சினை ஒன்றுமில்லை என்று மத்திய அமைச்சரும் அடாவடியாகக் கூறியுள்ளார்.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2,40,000 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் உள்ள நிலம் மற்றும் கடல் பகுதியில் முதல் கட்டமாக 24 கிணறுகள் அமைத்து ஹைட்ரோ கார்பன் எடுக்க , ‘ஹெல்ப்’ (HELP- Hydrocarbon Exploration and Licensing Policy) எனப்படும் ஒற்றை உரிமம் திட்டத்தில் மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதையும் இம்மாநாடு வன்மையாக கண்டிக்கிறது.

தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு அனுமதிக்க மாட்டோம் என்று தமிழக அரசு எடுத்துள்ள முடிவை புறக்கணித்து தமிழகத்தின் நிலம், நீர், காற்று மற்றும் சுற்றுச்சூழலை நாசமாக்கி, சோலைவனத்தை சுடுகாடாக்கப் பார்க்கும் மதவாத மத்திய அரசின் இம்முடிவை இந்த மாநாடு மிக வலிமையாக கண்டிப்பதோடு, இத்திட்டங்களுக்குத் தடை விதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கிறது.
 
11 காவிரி படுகை பகுதியை வேளாண் பாதுகாப்பு மண்டலமாக அறிவிக்க வேண்டும்
தமிழகத்தின் நெற்களஞ்சியமான காவிரி படுகைப் பகுதியை வேளாண் பாதுகாப்பு மண்டலமாக உடனடியாக அறிவித்து அங்கு மீத்தேன், ஷேல், ஹைட்ரோ கார்பன் உள்ளிட்டவற்றை எடுப்பது உட்பட எவ்வித வேளாண்மைக்கு விரோதமானத் திட்டங்களுக்கும் அனுமதி அளிக்க கூடாது என்று இம்மாநாடு வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

12. சாகர்மாலா திட்டத்தை கைவிட வேண்டும்
நாட்டின் கடல் வளத்தையும் நீர் நிலைகளையும் தனியாருக்குத் தாரை வார்க்கும் சாகர்மாலா திட்டத்தை உடனே கைவிடுமாறு இம்மாநாடு கோருகின்றது. சாகர்மாலா திட்டம் இந்திய குடிமக்களுக்கு அரசமைப்புச் சட்டம் அளித்துள்ள வாழ்வாதார உரிமையைப் பறிக்கும் செயல் என இம்மாநாடு கருதுகிறது. மீனவர்களுக்கும் கடற்கரை மற்றும் உள்நாட்டு நீர் நிலைகளுக்கும் மீள முடியாத பேரழிவு ஏற்படுத்தும் சாகர்மாலா திட்டத்தை மக்கள் நலன் நாடும் அனைத்து அரசியல் கட்சிகளும் கடுமையாக எதிர்க்க வேண்டுமென இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.

13. யு  ஏ  பி  ஏ  சட்டத்தை  திரும்ப பெறுக 
யு ஏ  பி ஏ  என்னும் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தைப் பயன்படுத்தி இந்திய அளவில் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் மீது பொய் வழக்கு  தொடுத்துத் துன்புறுத்தும்  போக்கை  கைவிட வேண்டும்  என இம்மாநாடு வலியுறுத்துகிறது . தமிழகத்திலும் இது போன்ற செயல்கள்  தொடர்வது வேதனை அளிக்கிறது   நாட்டில் வெறுப்புணர்வைத் தூண்டும் பரப்புரையை மேற்கொள்ளும் பல்வேறு சங்கபரிவார் நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்காத மத்திய மாநில அரசுகள் சமூகச் செயற்பாட்டாளர்களைக் குறிவைத்து  யு  ஏ பி ஏ  போன்ற சட்டங்களை  வைத்து  ஒடுக்கிட நினைப்பது  நியாயமற்றது   கண்டனத்துக்குரியது  அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள தனி நபர் உரிமைகளுக்கு ஊறு விளைவிக்கக் கூடியது. சமூக செயற்பாட்டாளர்கள்  மீதான யு ஏ பி ஏ  சட்டத்தை திரும்ப பெறுவதோடு அந்த சட்டத்தையும் ரத்துச் செய்ய வேண்டுமென இம்மாநாடு கோருகின்றது.

14.  முஸ்லிம் சிறைவாசிகளை விடுதலைச் செய்க
10 ஆண்டுகளுக்கு மேலாகச் சிறைகளில்  வாடும்  முஸ்லிம் வாழ்நாள் சிறைவாசிகளை  உடனடியாக விடுதலை செய்யவேண்டும்  என இந்த மாநாடு வேண்டுகோள் விடுக்கிறது. மனித உரிமை தளங்களில்
 பரவலாக  கவன ஈர்ப்பையும் கண்டனத்தையும் பெற்றுள்ள  இந்த விவகாரத்தில் தமிழக அரசின் பாரபட்சமான போக்கு தொடர்வது  ஜனநாயக அரசுக்கு உகந்தது அல்ல.  பன்னெடுங்காலம் காராக்கிருகம் என்ற தனிமை சிறையில் அடைபட்டு உடல்நிலை மோசமடைந்து துன்பத்தில் உழலும்
சிறைவாசிகளை காலதாமதமின்றி விடுதலை  செய்யவேண்டும்  என  இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது. தமிழக அரசு முஸ்லிம் வாழ்நாள் சிறைவாசிகள் விடுதலையில் தொடர்ந்து பாரபட்ச போக்கை கடைபிடித்தால் மாநில தழுவிய போராட்டத்தை நடத்த நேரிடும் என இம்மாநாடு எச்சரிக்கின்றது.

15. பேரறிவாளவன் உள்ளிட்டோர் விடுதலையை தாமதப்ப|டுத்துவது சரி அல்ல
கால் நூற்றாண்டுக்கும் மேலாக சிறையில்  வாடி வரும் பேரறிவாளன் உள்ளிட்ட எழுவரையும் உச்சநீதிமன்றத்தின்  அறிவிப்புக்கு பிறகும் அரசமைப்புச் சட்டத்தின் 161ம் பிரிவின் கீழ் தமிழக அமைச்சரவை விடுதலைக்கு பரிந்துரைச் செய்த பிறகும் அவர்களை விடுதலை செய்வதை வேண்டுமென்றே தாமதப்படுத்தும் மாநில ஆளுநரின் மனப்பான்மையை   இம்மாநாடு கண்டிக்கிறது . .உடனடியாக ஏழு தமிழர்களையும் விடுதலை செய்ய வேண்டுமென இம்மாநாடு  கேட்டுக்கொள்கிறது

16. பசுக்குண்டர்கள் மீது  நடவடிக்கை எடுக்காதது கண்டிக்கத்தக்கது 
அரசமைப்புச் சட்டம் தந்துள்ள தனி நபர் உரிமைகளைத் துச்சமாக மதித்து தாத்ரியில்  முதியவர்  அஹ்லாக் தொடங்கி  பால் வியாபாரி  பெஹ்லு  கான் தொடர்ந்து   டெல்லி தொடர் வண்டியில்  பாலகன் ஜுனைத் வரை   பசுக்குண்டர்களால் இரக்கமற்ற முறையில்  படுகொலை செய்த செயல்  கண்டு  நாடே  கொந்தளித்த போதும் பாஜகவால் ஆளப்படும் மத்திய  அரசு    மற்றும் மாநில அரசுகளான  உ பி   ஹரியானா, ராஜஸ்தான், ஜார்கண்ட்    ம பி , குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் பசு  குண்டர்களால் அப்பாவி சிறுபான்மை  மற்றும்  தலித்  மக்கள்  வேட்டையாடப்படுகின்றனர் .  கொடூரங்களும்  கொலை வெறியாட்டங்களும்  தொடர்கிறதே ஒழிய  குற்றவாளிகள்  சட்டத்தின் படி தண்டனை பெறுவார்களா என்ற நம்பிக்கையை மேற்கண்ட அரசுகள் சிதைத்து  வருகின்றன. விரைவான நீதி நடவடிக்கைகளின் வாயிலாக அத்தகைய மனித குல    விரோதிகளுக்கு  சட்டப்பூர்வமான தண்டனைகளை  வழங்கிட வேண்டும்  என இம்மாநாடு கோருகிறது

17. கருத்துரிமைக்கு விரோதமான மத்திய மாநில அரசின் நடவடிக்கைகள்
அரசமைப்பச் சட்டத்தின் விதி 19 அளித்துள்ள கருத்துரிமைக்கு விரோதமாக மோடி   ஆட்சியில் ஜனநாயக செயற்பாட்டாளர்களும், எதிர்ப்புக் குரல் எழுப்புபவர்களும் படுகொலை செய்யப்படுகிறார்கள்; சோதனைக்கு உட்படுத்தப்பட்டு, கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார்கள்.  அறிவிக்கப்படாத  அவசர நிலை பிரகடனமாகவே மக்கள் அஞ்சும் நிலை உருவாகியுள்ளது.  பாசிச கொள்கைகளை  செயற்படுத்தும் நோக்கில் மனித உரிமைகளை ஜனநாயக மாண்புகளை  குழி தோண்டி புதைக்கும் மத்திய அரசின்  செயல்களுக்கு  இம்மாநாடு   கண்டனம் தெரிவிக்கிறது   மத்தியில் ஆளும் பாஜக அரசின் கண்ணசைவில்   அடிமை சேவகம்  செய்வதில் இன்பம்  காணும்  தமிழக அரசும் மக்களுக்காக   குரல் எழுப்பும் தமிழகத்தின் திருமுருகன் காந்தி, முகிலன், வளர்மதி உள்ளிட்ட  சமூக  செயற்பாட்டாளர்களை கைது செய்தும் அச்சுறுத்தியும்  மனித உரிமைக்கு உலை வைக்கின்ற போக்கையும் இம்மாநாடு வலிமையாகக் கண்டிக்கிறது. 

18 அரபி, உருது, சிறுபான்மை மொழிகள்
தாய்மொழி வழி கல்வியே தேசப்பிதா காந்தியடிகளின் கொள்கையாகும். தமிழகத்தில் உள்ள மொழிச் சிறுபான்மையினரின் தாய்மொழி வழிக் கல்வி உரிமை மெல்ல மெல்ல பறிக்கப்படுவது வேதனைக்குரியது. தமிழை அவர்கள் கட்டாயப் பாடமாகப் படிக்க முன்வந்தும் கூட உருது மொழி உள்ளிட்ட சிறுபான்மை மொழியினரின் கல்வி உரிமை பறிக்கப்பட்டு வருகிறது.

பள்ளி, கல்லூரிகளில் உருது, அரபி மொழிக்கான ஆசிரியப் பணியிடங்கள் நிரப்பப்படுவதில்லை. சென்னை நந்தனம் அரசுக் கல்லூரி உள்ளிட்ட சில கல்லூரிகளில் அரபி மொழித் துறையே மூடப்பட்டுள்ளது. பரவலாக உருது மொழி பள்ளிக்கூடங்களும் மூடப்படுகின்றன. இந்த போக்கை இம்மாநாடு வன்மையாகக் கண்டிக்கிறது. மொழிச் சிறுபான்மையினரின் கல்விக் கோரிக்கைகள் முழுமையாக நிறைவேற்றப்பட வேண்டும் என இம்மாநாடு கோருகிறது.

19. கல்வி மாநிலப் பட்டியலுக்கு மாற்றப்பட வேண்டும்
விடுதலையின் போது மாநிலப் பட்டியலில் இருந்த கல்வி, அவசர நிலைக் காலத்தில் இசைவுப் பட்டியலுக்குக் கொண்டு செல்லப்பட்டது., தமிழகத்தின் கல்விச் சீர்குலைவுகளுக்கும், தமிழக மாணவர்களின் கல்விக் கனவுகள் சிதைவதற்கும் இதுவே முதன்மைக் காரணமாக உள்ளது. எனவே, இசைவுப் பட்டியலில் இருக்கும் கல்வியை உடனடியாக மாநிலப் பட்டியலுக்கு மாற்றிட வேண்டும் என மத்திய அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது.
 
20 நீட் தேர்வு
மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட தொழிற்படிப்புகளுக்கு மத்திய அரசு கட்டமாயமாக்கிய நீட் (NEET) தேர்வு, 1200க்கு 1175 எடுத்த அரியலூர் மாணவி அனிதா உள்ளிட்டோரின் உயிரையே பறித்து விட்டது. இந்தக் கொடுமையான அநீதித் தேர்விலிருந்து விலக்களிக்க வேண்டி, தமிழக சட்டமன்றம் நிறைவேற்றிய தீர்மானங்களை மத்திய அரசு குப்பையில் வீசியுள்ளது. தமிழகத்தில் உள்ள பெரும்பான்மையான மருத்துவ இடங்களைத் தமிழரல்லாதோர் பறிப்பதற்கும், தமிழக மாணவர்களை சிதைப்பதற்கும், தமிழகத்தை ஒடுக்குவதற்கும் உதவுகிற கருவியான நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு நிரந்தர விலக்கு அளித்தே தீரவேண்டுமென இம்மாநாடு வலியுறுத்துகிறது.

21 பாதிக்கப்பட்ட நிலத்தை ஒப்படைக்க வேண்டும்
சிறுபான்மை மற்றும் ஒடுக்கப்பட்ட சமுதாய மக்களின் கல்வி வளர்ச்சிக்காக காயிதே மில்லத் கல்வி மற்றும் சமூக அறக்கட்டளைக்கு 40 ஏக்கர் நிலத்தை கலைஞர் தலைமையிலான தமிழக அரசு 1975ஆம் ஆண்டு வழங்கியது. இதற்கான கிரயத்தையும் அறக்கட்டளை அரசுக்கு செலுத்தியுள்ளது. அரசின் நிர்வாகத் தாமதங்கள் காரணமாக அந்நிலத்திற்கு பட்டா மாற்றம் செய்து தரப்படவில்லை. ஏழை, எளிய மற்றும் சிறுபான்மை முஸ்லிம் மாணவ, மாணவியர் அதிகமாகப் பயின்று வரும் சென்னை மேடவாக்கம் காயிதே மில்லத் கல்லூரிக்குச் சொந்தமான 40 ஏக்கர் நிலத்தில் சுமார் 30 ஏக்கர் வரை வனத்துறை பறித்திருப்பதையும், அங்கிருக்கும் பள்ளிவாசலை இடிக்கப் போவதாக மிரட்டுவதையும் இம்மாநாடு வன்மையாகக் கண்டிக்கிறது. மீண்டும் அந்நிலம் முழுமையும் கல்லூரி நிர்வாகத்திடம் ஒப்படைக்க மாநில அரசு ஆவன செய்ய வேண்டும் என இம்மாநாடு வலியுறுத்துகிறது.

22. அய்யா வழி சமயம்:  
கர்நாடகா மாநிலத்தில் லிங்காயத்துகளை தனி சமயமாக அறிவித்ததைப்போல தமிழகத்தில் பரவலாக பின்பற்றப்படும் (குறிப்பாக தென் மாவட்டங்களில்) தமிழ் வழி வழிபாட்டு முறையான அய்யா வழி வழிபாடு சமூகத்தை தமிழக அரசு தனி சமயமாக அறிவிப்பதோடு அவர்களை மதவழி சிறுபாமையினராக அறிவிக்க வேண்டும் என இந்த மாநாடு வலியுறுத்துகிறது.

23. உள்ளாட்சித் தேர்தல் 
ஜனநாயகத்தின் ஆணிவேறாக இருக்கும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக பல்வேறு காரணங்களை குறிப்பிட்டு தேர்தல் நடத்தாது ஜனநாபக விரோத செயலாகும். இதன் காரணமாக மத்திய அரசிடமிருந்து உள்ளாட்சிகளுக்கு வரவேண்டிய நிதி முழுமையாக கிடைக்க பெறாத நிலை ஏற்பட்டுள்ளது. மக்கள் பிரதிநிதிகள் இல்லாத நிலையில் அதிகாரிகளின் ஆளுகையில் வரிகளும் தாறுமாறாக ஏற்றப்பட்டுள்ளன. உடனடியாக உள்ளாட்சி தேர்தலை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென இம்மாநாடு கோருகின்றது.

24. மத நம்பிக்கைகளை புண்படுத்தும் தீர்ப்புகள்:   
சமீப காலமாக உச்சநீதிமன்றம் வழங்கி வரும் தீர்ப்புகள் மதஉரிமைகளில் தலையிடும் வகையில் அமைந்துள்ளன. அரசமைப்புச் சட்டம் பிரிவு 25 அளித்துள்ள உரிமைகளில் தலையிடும் வகையில் நாட்டின் உயர் நீதி பரிபாலன சபை தீர்ப்புகள் வழங்குவதை இம்மாநாடு கவலையுடன் பதிவுச் செய்கிறது. ஒழுக்க மாண்புகளை சீர்குலைக்கும் வகையில் தீர்ப்புகள் வழங்கப்படுவது ஆரோக்கியமானது அல்ல என்’றும் இம்மாநாடு கருதுகின்றது.

வாக்குரிமைப் பாதுகாப்பு
24.வாக்காளர் பட்டியலிலிருந்து பெருமளவிலான வாக்காளர்கள் சூழ்ச்சியான முறையில் நீக்கப்பட்டிருப்பதை CRDDP என்ற அமைப்பு வெளிக்கொண்டு வந்தது. இதில் அதிகமாக முஸ்லிம் வாக்காளர்கள் நீக்கப்பட்டிருப்பது அதிர்ச்சிகரமானதாகும். மாநாட்டிற்கு வந்திருப்பவர்கள், வாக்குரிமை குறித்த விழிப்புணர்வை சமுதாயத்தில் பரப்புவதோடு, வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர் இருப்பதை உறுதி செய்திட வேண்டும். வாக்காளர் அடையாள அட்டை இருப்பதை வைத்து தமக்கு வாக்குரிமை இருப்பதாக அலட்சியமாகக் கருதிவிடக்கூடாது என்றும் வாக்காளர் பதிவு சிறப்பு முகாமில் பங்குக் கொண்டு வாக்காளர் பட்டியலில் பெயர் இருப்பதை உறுதி செய்துக் கொள்ள வேண்டுமெனவும் இம்மாநாடு வலியுறுத்துகிறது. திட்டமிட்டு நீக்கப்பட்ட வாக்காளர்களைத் திரும்பவும் பட்டியலில் சேர்த்திட தேர்தல் ஆணையம் முழுவீச்சில் பணியாற்றிட வேண்டும் எனவும்
இம்மாநாடு கோருகிறது.

25. பெட்ரோல் டிசல் விலை உயர்வு:   
மத்திய அரசின் மக்களை வஞ்சிக்கும் தவறான பொருளாதார கொள்கையின் காரணமாகவே பெட்ரோல் டீசல் விலை நாளுக்கு நாள் அதிகரித்துச் கொண்டே செல்கிறது. அன்றாடம் பெட்ரோல் டிசலுக்காக மக்களிடமிருந்து கூடுதல் தொகையை பறிக்கும் மத்திய அரசு இந்த விலை உயர்வின் காரணமாக வரிகள் வாயிலாக தனது வருமானத்தை மட்டும் கனிசமாக பெருக்கிக் கொண்டுள்ளது. பெட்ரோல் டிசல் விலையை நிர்ணயிக்கும் உரிமையை பெட்ரோலிய நிறுவனங்களுக்கு வழங்கியதை ரத்துச் செய்ய வேண்டுமெனவும் பெட்ரோல் டிசல் ஆகியவற்றை சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வரம்பிற்குள் கொண்டு வரவேண்டுமென்றும் இம்மாநாடு கோருகின்றது.
 
 
 
 
 
 
 
 
 
 
 

Saturday, September 22, 2018

திருச்சி விமான நிலைய புதிய முனைய வடிவமைப்பு சர்வதேச விருது போட்டிக்கு தேர்வு!

திருச்சி விமான நிலையத்தின் புதிய முனைய வடிவமைப்பு சர்வதேச விருது போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது.

திருச்சிராப்பள்ளி பன்னாட்டு விமானநிலையத்தின் வரவிருக்கும் புதிய பயணிகள் முனையத்தின் வடிவமைப்பானது, உலகப்புகழ் பெற்ற, லண்டனைச் சேர்ந்த "பாஸ்கல் வாட்சன்" என்ற நிறுவனத்தின் வடிவமைப்பாகும்.

இந்த வடிவமைப்பானது, ஒவ்வொரு வருடமும் லண்டனில் நடக்கும் இந்த வருடத்திற்கான "உலக கட்டிடக்கலை செய்தி விருதுகள் 2018 போக்குவரத்து - எதிர்கால திட்டங்கள்" (World Architecture News (WAN) Awards 2018 Transport - Future Project) வரிசையில் போட்டியிட, பாஸ்கல் வாட்சன் நிறுவனம் தேர்ந்தெடுத்துள்ளது. இதன் இறுதி முடிவுகள் வரும் நவம்பரில் வெளியிடப்படும்.

Sunday, June 24, 2018

திருச்சி விமான நிலையத்தில் ரூ.622 கோடியில் புதிய முனையம் ~ டெண்டர் வெளியீடு!

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் புதிய முனையம் அமைப்பதற்கான முதல் கட்டப் பணிகள் ரூ.622 கோடியில் விரைவில் துவங்கப்பட உள்ளது. இதற்கான சர்வதேச அளவில் டெண்டர் வெளியிடப்பட்டுள்ளது.

திருச்சி சர்வதேச விமான நிலையத்திலிருந்து துபை, மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளுக்கு வெளிநாட்டு விமான சேவையும், சென்னைக்கு உள்நாட்டு விமான சேவையும் அளிக்கப்பட்டு வருகிறது. நாட்டிலேயே அதிவேகமான வளர்ச்சியைப் பெரும் விமான நிலையங்களில் திருச்சி முக்கிய இடத்தை பிடித்துள்ளதால், இங்கிருந்து பிற நாடுகளுக்கு விமானங்களை இயக்க பல்வேறு நிறுவனங்கள் ஆர்வம் காட்டி வருகின்றன. எனவே, திருச்சி விமான நிலையத்தை விரிவு படுத்த இந்திய விமான நிலைய ஆணையம் முடிவு செய்துள்ளது.

இதன்படி, ஆண்டுக்கு 3.52 மில்லியன் பயணிகளை கையாளும் வகையில், ரூ. 920 கோடியில் புதிய பயணிகள் முனையம், வான் போக்குவரத்து கட்டுப்பாடு அறை உள்ளிட்டவற்றை கொண்ட புதிய ஒருங்கிணைந்த முனையம் கட்டம் திட்டமிடப்பட்டது. இதற்கு மத்திய, மாநில அரசுகளின் சுற்றுச்சூழல் துறைகளிடமிருந்து தடையில்லா சான்றுகள் கிடைத்துவிட்ட நிலையில், உட்கட்டமைப்பு பணிகள் தொடர்பான விரிவான திட்ட அறிக்கையை  பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த இஜிஐஎஸ் நிறுவனம் தயாரித்து அளித்தது. இதற்கு கடந்தாண்டு அக்டோபர் மாதமே இந்திய விமான நிலைய ஆணையக்குழுமத்தின் ஒப்புதல் கிடைத்துவிட்டது. எனினும் கட்டுமானப் பணிகள் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.

இந்நிலையில், விமான நிலையத்தின் புதிய முனைய பணிகளை முதல் கட்டமாக ரூ. 621.98 கோடியில் மேற்கொள்ள இந்திய விமான நிலைய ஆணையக்குழுமம் முடிவு செய்துள்ளது. கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளும் நிறுவனத்தை தேர்வு செய்வதற்கான சர்வதேச அளவிலான டெண்டர் அறிவிப்பு கடந்த 21 ந் தேதி வெளியிடப்பட்டது. இதன் மூலம் திருச்சி  விமான நிலைய பிரமாண்ட புதிய முனையம் அமைக்கும் பணி விரைவில் துவங்க உள்ளது.

இதுகுறித்து விமான நிலைய அதிகாரிகள் கூறுகையில்; 
புதிய முனையம் அமைக்கும் பணி பல்வேறு கட்டங்களாக பிரித்து மேற்கொள்ளப்பட உள்ளது. முதல் கட்டமாக கட்டிடங்கள், சாலை, தகவல் தொழில்நுட்பம், எலக்ட்ரிகல் உள்ளிட்ட பணிகள் ரூ.621.98 கோடியில் துவங்க உள்ளது. ஒப்பந்ததாரரை தேர்வு செய்யும் பணி ஆகஸ்ட் மாதத்திற்குள் முடிவடையும். அதன்பின்னர் கட்டுமானப் பணிகள் துவங்கப்பட்டு, ஆண்டுக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அடுத்தடுத்த பணிகளுக்கான ஒப்பந்த அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்' என்றனர்.
 

Saturday, December 16, 2017

திருச்சி விமான நிலையத்தில் கண்கவரும் வடிவில் புதிய முனையம் (படம்)

2018 ஆம் ஆண்டின் கட்டுமானப் பணிகள் தொடங்க உள்ள திருச்சி விமான நிலையைப் புதிய முனையத்தின் வடிவமைப்பு, அதிலுள்ள வசதிகள் குறித்து விமான நிலைய அதிகாரிகளுக்கு நேற்று விளக்கமளிக்கப்பட்டது.

நாட்டிலேயே அதிவேகமான வளர்ச்சியைப் பெரும் விமான நிலையங்களில் திருச்சி முக்கிய இடத்தை பிடித்துள்ளதால், இங்கிருந்து பிற நாடுகளுக்கு விமானங்களை இயக்க பல்வேறு நிறுவனங்கள் ஆர்வம் காட்டி வருகின்றன. எனவே, திருச்சி விமான நிலையத்தை விரிவு படுத்த இந்திய விமான நிலைய ஆணையம் முடிவு செய்துள்ளது.

அதன்படி, ஆண்டுக்கு 3.52 மில்லியன் பயணிகளை கையாளும் வகையில், சுமார் ரூ.920 கோடி செலவில் புதிய பயணிகள் முனையம், வான் போக்குவரத்து கட்டுப்பாடு அறை உள்ளிட்டவற்றை கொண்ட புதிய ஒருங்கிணைந்த முனையம் கட்டம் திட்டமிடப்பட்டது. இதற்கான, உட்கட்டமைப்பு மற்றும் வடிவமைப்பு பணிகள் தொடர்பான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணிகளை பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த இஜிஐஎஸ் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.

இப்பணிகள் ஏறக்குறைய முடிவுற்ற நிலையில், அது தொடர்பான விளக்கக்கூட்டம் திருச்சி விமான நிலைய வளாகத்தில் நேற்று நடைபெற்றது. இதில், விமான நிலைய இயக்குநர் கே. குணசேகரன், புதிய முனைய திட்ட பொது மேலாளர் ஸ்ரீகிருஷ்ணா மற்றும் இஜிஐஎஸ் நிறுவன அதிகாரிகள் பங்கேற்றனர். இதுதவிர, வான் போக்குவரத்து கட்டுப்பாட்டுப் பிரிவு, தொழில்நுட்பம், இமிக்ரேஷன், பொறியியல் உட்பட விமான நிலையத்தின் அனைத்துப் பிரிவு உயர் அலுவளர்கள், ஏர்லைன்ஸ் நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

அவர்களுக்கு புதிய விமான நிலையத்தின் வடிவம், அதன் உட்பகுதியிலுள்ள வசதிகள் (ப்ளு பிரிண்ட்), குறித்து டி தொழில் நுட்பம் மற்றும் கிராபிக்ஸ் காட்சிகளுடன் விரிவாக விளக்கம் அளிக்கப்பட்டது. அப்போது மேற்கொண்டு செய்ய வேண்டிய மாற்றங்கள், திருத்தங்கள் குறித்தும் அனைவரிடமும் கருத்து கேட்கப்பட்டது.

இதுகுறித்து விமான நிலைய அதிகாரிகள் கூறும்போது, "விமான நிலைய புதிய முனையை வடிவமைப்பு பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டன. புதிய முனையம் கண் கவரும் வகையில் வடிவமைக்கப்பட உள்ளது. இதிலுள்ள வசதிகள், வடிவமைப்பு முறைகள் குரிது அதிகாரிகளுக்கு விளக்கமளிக்கப்பட்டுள்ளது. இதில், சில திருத்தங்கள் செய்ய வேண்டும் என்ற கருத்துகள் முன்வைக்கப்பட்டுள்ளன. மண் வளம், சுற்றுச்சூழல் உட்பட அனைத்து வகையான் ஆய்வுகளும் முடிவடைந்த பிறகு, விரைவில் ( 2018 ஆம் ஆண்டில் ) புதிய முனையத்துக்கான பணிகள் தொடங்கும்" என்றனர்.

Thursday, October 12, 2017

ரூ.920 கோடியில் உலக தரத்தில் திருச்சி விமான நிலையம் (படம்)

திருச்சி சர்வதேச விமான நிலையத்துக்கு ரூ.920 கோடியில் கட்டுப்படும் புதிய முனையத்துக்கான வரைபடத்துக்கு இந்திய விமான நிலைய ஆணையக்குழுமம் கொள்கை ரீதியிலான ஒப்புதலை அளித்துள்ளது.

திருச்சி சர்வதேச விமான நிலையத்திலிருந்து துபை, மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளுக்கு வெளிநாட்டு விமான சேவையும், சென்னைக்கு உள்நாட்டு விமான சேவையும் அளிக்கப்பட்டு வருகிறது. இதன்மூலம், கடந்த 2016-2017 ஆம் ஆண்டில் 13, 59,447 பேர் திருச்சி வழியாக விமானங்களில் பயணித்துள்ளனர்.

நாட்டிலேயே அதிவேகமான வளர்ச்சியைப் பெரும் விமான நிலையங்களில் திருச்சி முக்கிய இடத்தை பிடித்துள்ளதால், இங்கிருந்து பிற நாடுகளுக்கு விமானங்களை இயக்க பல்வேறு நிறுவனங்கள் ஆர்வம் காட்டி வருகின்றன. எனவே, திருச்சி விமான நிலையத்தை விரிவு படுத்த இந்திய விமான நிலைய ஆணையம் முடிவு செய்துள்ளது.

இதன்படி, ஆண்டுக்கு 3.52 மில்லியன் பயணிகளை கையாளும் வகையில், புதிய பயணிகள் முனையம், வான் போக்குவரத்து கட்டுப்பாடு அறை உள்ளிட்டவற்றை கொண்ட புதிய ஒருங்கிணைந்த முனையம் கட்டம் திட்டமிடப்பட்டது. இதற்கு மத்திய, மாநில அரசுகளின் சுற்றுச்சூழல் துறைகளிடமிருந்து தடையில்லா சான்றுகள் கிடைத்துவிட்ட நிலையில், உட்கட்டமைப்பு பணிகள் தொடர்பான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணிகளை பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த இஜிஐஎஸ் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.

இந்நிறுவனம், புதிய முனையத்துக்கான கட்டிட வரைபடம் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளுக்கான திட்ட விரிவான அறிக்கையின் முதல் பகுதியை அண்மையில் சமர்ப்பித்தது. இதற்கு இந்திய விமான நிலைய ஆணையக்குழுமத்தினர் கொள்கை ரீதியிலான ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. இதையொட்டி, புதிய முனையம் கட்ட தேர்வு செய்யப்பட்ட இடங்களில் மண் பரிசோதனை செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதுகுறித்து திருச்சி விமான நிலைய இயக்குநர் கி.குணசேகரனிடம் கேட்டபோது; 'திருச்சி சர்வதேச விமான நிலையத்தின் புதிய முனையத்துக்கான வரை படத்துக்கு இந்திய விமான நிலைய ஆணையக்குழுமம் கொள்கை ரீதியிலான ஒப்புதல் அளித்துள்ளது. இங்கிலாந்தில் உள்ள விமான நிலையங்களைப் போல, திருச்சி சர்வதேச விமான நிலையத்தின் முகப்பு பகுதி வடிவமைக்கப்பட்டுள்ளது. மண் பரிசோதனை, விரிவான திட்ட அறிக்கை உள்ளிட்ட பணிகள் முடிவடைந்த பின், ரூ.920 கோடியில் ஒருங்கிணைந்த புதிய முனையத்துக்கான கட்டுமானப் பணிகள் 2018 ஆம் ஆண்டில் தொடங்கும்' என்றார்.

Saturday, April 8, 2017

திருச்சி விமான நிலையத்தில் பயணிகளின் வருகை அதிகரிப்பு !

கோப்புப்படம்
திருச்சி விமான நிலையத்தை பயன்படுத்தும் பயணிகளின் எண்ணிக்கை கடந்தாண்டைவிட அதிகரித்துள்ளது.

திருச்சி சர்வதேச விமான நிலையத்திலிருந்து இலங்கை, சார்ஜா, துபை, சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகளுக்கு நேரடிப் போக்குவரத்தும், மேலும் பிற நாடுகளுக்கு மாற்று விமானப் போக்குவரத்தும் நடைபெற்று வருகிறது.
திருச்சியில் விமான ஓடுதளம் நீட்டிப்பு செய்யப்படாத காரணத்தால், பல வெளிநாட்டு விமான நிறுவனங்கள் திருச்சியில் போக்குவரத்தை தொடங்க முடியாத நிலையில் உள்ளன. ஆனாலும், பயணிகள் போக்குவரத்திலும், சரக்குகள் கையாள்வதிலும் திருச்சி விமான நிலையம் தொடர்ந்து முன்னேறி வருகிறது.

தினசரி சுமார் 4,500 வெளிநாட்டுப் பயணிகள் திருச்சிக்கு வருகின்றனர். இதன்படி, 2015-16 நிதியாண்டில் திருச்சி விமான நிலையத்தை பயன்படுத்திய வெளிநாட்டு பயணிகளின் எண்ணிக்கை 11,49,775. உள்நாட்டுப் பயணிகள் எண்ணிக்கை 1,47,437.

2016-17-ம் ஆண்டில் வெளிநாட்டு பயணிகள் 11,90,577 பேரும், உள்நாட்டுப் பயணிகள் 1,69,097 பேரும் பயன்படுத்தியுள்ளனர். அதாவது, வெளிநாட்டு பயணிகள் 40,802 பேரும், உள்நாட்டுப் பயணிகள் 21,660 பேரும் கூடுதலாக பயன்படுத்தியுள்ளனர் என இந்திய விமான நிலைய ஆணையக் குழும புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

சார்ஜா விமானம் மீண்டும் அறிமுகம், ஏர்கார்னிவெல் உள்நாட்டு விமானப் போக்குவரத்து, ஜெட் ஏர்வேஸின் கூடுதல் போக்குவரத்து உள்ளிட்டவையே பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்புக்கு முக்கிய காரணமாக சுட்டிக் காட்டப்படுகிறது.

நிலையத்தில் விமான ஓடுதளம் நீட்டிக்கப்பட்டால், பயணிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விமானப் போக்குவரத்து குறித்து ஆய்வு மாணவர் உபதுல்லா கூறியது: நீண்ட நாட்களாக கிடப்பில் போடப்பட்டுள்ள ஓடுதள நீட்டிப்பு தடை காரணமாக, ஏர் அரேபியன், சில்க் ஏர்வேஸ் உள்ளிட்ட பல்வேறு வெளிநாட்டு விமான நிறுவனங்களால் திருச்சியில் கால் பதிக்க இயலவில்லை. ஓடுதளம் நீட்டிக்கப்பட்டால், திருச்சி விமான நிலையத்தில் பயணிகள் வளர்ச்சி மிக மிக அதிகளவில் இருக்கும். அதுபோலவே சரக்குப் போக்குவரத்திலும் பிரத்யேக விமானங்கள் இல்லாத நிலையிலும் பயணிகள் விமானங்கள் மூலமே மாதம் 4,500 டன்களுக்கும் அதிமாக சரக்குகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன என்றார்.

நன்றி: தினமணி

Thursday, September 22, 2016

திருச்சி விமான நிலையத்திலிருந்து தஞ்சைக்கு பேருந்து சேவை துவக்கம் !

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் திருச்சி விமான நிலையத்திலிருந்து மத்திய பேருந்து நிலையம், கரூர் மற்றும் தஞ்சாவூர் ஆகிய ஊர்களுக்கு நீட்டிக்கப்பட்ட பேருந்து வசதியை சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி என்.நடராஜன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் டாக்டர் கே.எஸ்.பழனிசாமி, திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் ப.குமார், மாநகராட்சி மேயர் அ.ஜெயா, விமான நிலைய இயக்குநர் குணசேகரன், மாநகராட்சி துணை மேயர் ஜெ.சீனிவாசன் ஆகியோர் உடன் இருந்தனர்.

பேருந்து வசதியை தொடங்கிவைத்து சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் பேசியதாவது;
தமிழக முதல்வர் போக்குவரத்துத்துறையில் மாபெரும் புரட்சியை ஏற்படுத்தி வருகிறார்கள். மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி ஒன்றிய குக்கிராமங்கள் என அனைத்து பகுதிகளுக்கும் பேருந்து வசதி ஏற்படுத்தி கொடுத்து வருகிறார்கள். அரசு அலுவலர்கள், தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள், கல்லூரி மற்றும் பள்ளி மாணவ, மாணவியர்கள், பொதுமக்கள் என அனைவரும் பயன்பெறும் வகையில் போக்குவரத்து வசதியை ஏற்படுத்தி கொடுத்துள்ளார்.

மேலும், திருச்சி விமான நிலையத்திற்கு வந்து செல்வோருக்கு ஏதுவாக விமான நிலையத்திலிருந்து மத்திய பேருந்து நிலையம் கரூர் மற்றும் தஞ்சாவூர் ஆகிய பகுதிகளுக்கு இன்று முதல் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் மூன்று பேருந்து வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டு இயக்கப்படுகின்றன.

திருச்சி விமான நிலையத்திற்கு நாள்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான பயணிகள் வந்து செல்கின்றனர். இங்கு வருகை புரிபவர்களை அழைத்து செல்லவும், வெளியில் செல்லும் நபர்களை அனுப்பி வைக்கவும் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வந்து செல்கின்றனர். விமான நிலையத்திலிருந்து அழைத்து செல்ல தங்கள் ஊருக்கு போக்குவரத்து வசதிகள் ஏற்படுத்தி தரும் வகையில் விமான நிலையத்தோடு சுற்றியுள்ள பகுதிகளுக்கும் அதனை சுற்றியுள்ள நகரங்களுக்கும் இணைக்கும் வகையில் மத்திய பேருந்து நிலையம் கரூர் மற்றும் தஞ்சாவூர் ஆகிய இடங்களுக்கு திருச்சி தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் அரசு பேருந்துகள் இன்று முதல் இயக்கப்படுகின்றன.

திருச்சி விமான நிலையத்திலிருந்து காலை 4 மணிக்கு மத்திய பேருந்து நிலையம், குளித்தலை வழியாக கரூருக்கு ஒரு பேருந்தும், திருச்சி விமான நிலையத்திலிருந்து காலை 4 மணிக்கு திருச்சி மத்திய பேருந்து நிலையம், திருவெறும்பூர் வழியாக தஞ்சாவூருக்கு ஒரு பேருந்தும், திருச்சி விமான நிலையத்திலிருந்து காலை 10 மணிக்கு டிவிஎஸ் டோல்கேட் வழியாக மத்திய பேருந்து நிலையத்திற்கும், விமான நிலையத்திலிருந்து மாலை 4 மணிக்கு மத்திய பேருந்து நிலையம், குளித்தலை வழியாக கரூருக்கு ஒரு பேருந்தும் என மொத்தம் மூன்று பேருந்துகள் நீட்டித்து இயக்கப்படுகிறது.

இதன் மூலம் கரூர், தஞ்சாவூர் ஆகிய ஊர்களுக்கு திருச்சி விமான நிலையத்திலிருந்து நேரடி பேருந்து வசதியினையும், திருச்சி மத்திய பேருந்து நிலையத்தை பயன்படுத்தி வெளியூர் செல்லும் அனைத்து விமான பயணிகளும் கூடுதல் பேருந்து வசதியினை பயன்படுத்திக் கொள்ளலாம்.
இவ்வாறு சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக பொது மேலாளர் மணி, துணை மேலாளர் ராஜ்மோகன், துணை மேலாளர் செல்வகுமார், கோட்ட மேலாளர் வேலுச்சாமி, மண்டலக் குழுத் தலைவர் மனோகரன், மாமன்ற உறுப்பினர் விஜி, அய்யப்பன், சகாதேவபாண்டியன், திருச்சி (கிழக்கு) வட்டாட்சியர் சத்தியமூர்த்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Thursday, January 21, 2016

அமீரகம் செல்லும் பயணியரின் கவனத்திற்கு!

அதிரையிலிருந்து துபாய் செல்வதற்காக வரும் (25-01-2016) திங்கள்கிழமை இரவு திருச்சி விமான நிலையத்திற்கு நமது ஊர் சகோதரர் செல்கிறார். அவருடன் இணைந்து செல்பவர்கள் கிழ்காணும் தொலைபேசியில் தொடர்பு கொள்ளலாம்.

சம்சுதீன் - 9042460365

அதேபோல் வரும் (27-01-2016) புதன்கிழமை இரவு மற்றுமொரு நமதூர் சகோதரர் செல்கிறார் அவருடன் இணைந்து திருச்சி விமானம் மூலம் துபாய் செல்பவர்கள் கீழ்காணும் தொலைபேசியில் தொடர்பு கொள்ளலாம்.

கமாலுதீன் - 9952130909


Wednesday, October 21, 2015

திருச்சியில் பயங்கர பஸ் விபத்து: 10 பேர் பலி ( படங்கள் )

திருச்சி, இருங்களூர் அருகே, திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில், உள்ள தனியார் கல்லூரி அருகே இரவு, 9.40 மணியளவில், சென்னையிலிருந்து நாகர்கோவில் சென்று கொண்டிருந்த, அரசு விரைவு பஸ், சாலையில் நின்று கொண்டிருந்த இரும்பு பிளேட் ஏற்றி வந்த லாரி மீது மோதியது.

இந்த விபத்தில், பஸ்சின் ஒரு பகுதி, முற்றிலும் சேதமடைந்தது. இதில், பயணம் செய்த பயணிகள், 10 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். 20க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்தனர். இந்த சம்பவத்தில் பஸ்சின் ஒரு பகுதி முற்றிலும் சேதமடைந்தது. போலீஸ் மற்றும் தீயணைப்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தில் 7 பேர் படுகாயமடைந்துள்ளதாக தெரிகிறது. பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. பலியானவர்களில் இருவரது உடல்அடையாளம் காணப்பட்டுள்ளது. சிறுவன் , 6 ஆண்கள், 2 பெண்கள் உடல் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

பஸ்சில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் போலீசாரும், தீயணைப்பு படையினரும் ஈடுபட்டனர். சம்பவ இடத்தில், மாவட்ட போலீஸ் எஸ்.பி., ஐ.ஜி., ஆகியோர் ஆய்வு செய்தனர்.

இதனிடையே, விபத்து நடந்த இடத்தில், மீட்பு பணிகள் விரைந்து நடந்து வருவதாக மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.  தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சிகிச்சை பெறுவோரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
 
 
செய்தி:நக்கீரன்
படங்கள்:நக்கீரன், நியூஸ் 7 தமிழ் 

Wednesday, July 8, 2015

திருச்சி எம்ஐஇடி கல்லூரி நிகழ்ச்சியில் பேராசிரியர் செய்யது அஹமது கபீர் பங்கேற்பு !

நடப்பு கல்வியாண்டில் திருச்சி எம்ஐஇடி கலை அறிவியல் கல்லூரியில் புதிதாக இணைந்த முதலாம் ஆண்டு மாணவ, மாணவிகளுக்கான துவக்க விழா நிகழ்ச்சி கல்லூரி அரங்கில் இன்று காலை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு கல்லூரி சேர்மன் இன்ஜினியர் ஏ முஹம்மது யூனுஸ் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட அதிரை காதிர் முகைதீன் கல்லூரி தமிழ்த்துறை பேராசிரியர் கே. செய்யது அஹமது கபீர் கலந்துகொண்டு துவக்கவிழா உரை நிகழ்த்தினார்.

கல்லூரி துணை சேர்மன் முனைவர் எம் ஒய். அப்துல் ஜலீல், எம்ஐஇடி பொறியியல் கல்லூரி முதல்வர் முனைவர் எஸ். குகராஜா,  எம்ஐஇடி பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் பேராசிரியர் எம். ராஜாகோபாலன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

விழாவில் எம்ஐஇடி கலை அறிவியல் கல்லூரி முதல்வர் பேராசிரியர் ஜே. அந்தோணிராஜ் முதல்வர் உரை ஆற்றினார்.

விழா முடிவில் வணிகவியல் துறைத்தலைவர் எம் அப்துல் கரீம் நன்றி கூறினார். இந்த விழாவில் கல்லூரி பேராசிரியர்கள், அலுவலக ஆய்வகப் பணியாளர்கள், மாணவ மாணவிகள், பெற்றோர்கள் கலந்துகொண்டனர்.