.

Pages

Showing posts with label அதிரைசெய்திகள். Show all posts
Showing posts with label அதிரைசெய்திகள். Show all posts

Saturday, December 5, 2015

அதிரையில் தொடர் மழையால் பழைய போஸ்ட் ஆபீஸ் சாலை வர்த்தக கட்டிட மேல்தளம் இடிந்து விழுந்தது !

அதிரை பழைய போஸ்ட் ஆபீஸ் சாலையில் உள்ள தனியாருக்கு சொந்தமான பழமையான கட்டிடத்தில் மேற்தளம் ஓட்டு கூரையால் மூடப்பட்டு இருந்து. கீழ்தளத்தில் 3 வர்த்தக கடைகள் உள்ளன. இந்த கட்டிடம் சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்பாக கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. அதிரை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தற்போது பெய்து வரும் தொடர் மழையினால் கட்டிடத்தின் மேற்பகுதியில் உள்ள ஓட்டு கூரை முழுவதும் இடிந்து விழுந்தது.

கட்டிடத்தின் கீழ்தளம் எந்நேரமும் இடிந்து கீழே விழும் நிலையில் உள்ளதால் கீழ்தளத்தில் உள்ள வர்த்தக கடைகள் உடனடியாக மூடப்பட்டன. கட்டிடத்தின் உரிமையாளர் சம்பவ இடத்தில முகாமிட்டு வர்த்தகர்களுக்கும், பொதுமக்களுக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் தீவிரமாக இறங்கியுள்ளார். இந்த சாலை வழியே செல்லும் வாகனங்கள் மற்றும் பொதுமக்களை எச்சரிக்கை விடுக்கும் வகையில் சாலையின் குறுக்கே கயிற்றில் சிகப்பு துணி கற்றப்பட்டுள்ளது.

இந்த கட்டிடத்திற்கு செல்லும் மின்இணைப்பு மின்சார வாரிய ஊழியர்களால் துண்டிப்பு செய்யப்பட்டுள்ளது. தகவலறிந்த அதிரை கிராம நிர்வாக அலுவலர் இடிந்த கட்டிட பகுதிகளை ஆய்வு செய்தார். அதிரையில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் கட்டிட இடிபாடுகளை அகற்றுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

Wednesday, December 2, 2015

இடிந்து விழுந்த கடைத்தெரு கடைகளை கிராம நிர்வாக அலுவலர் நேரில் ஆய்வு !

அதிரை தக்வா பள்ளி நிர்வாகத்திற்கு உட்பட்ட கடைத்தெரு சாலையில் அமைந்துள்ள இரண்டு கடைகள் தொடர் மழையால் இடிந்து விழுந்தது.

கடைத்தெரு மீன் மார்க்கெட் உள்ளே செல்லும் நுழைவாயில் பகுதியை ஒட்டி எஸ்.எம் பாருக் மற்றும் கமாலுதீன் ஆகியோரின் கடைகள் உள்ளது. இவை பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டவை ஆகும். அதிரை மற்றும் சுற்று வட்டார பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்தது. இதனால் கடைகளின் சுவர்களில் மழை நீர் கசிந்து ஈரமாக காணப்பட்டது. இந்த நிலையில் நேற்று இரவு பெய்த கனமழையால் இரண்டு கடைகளும் இடிந்து விழுந்தது. அப்பொழுது கடைகளின் உள்ளே யாரும் இல்லாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.

தகவலறிந்த அதிரை கிராம நிர்வாக அலுவலர் உதவியாளர்களுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார். அதிரை மின்சார வாரிய உதவி செயற்பொறியாளரை தொடர்பு கொண்டு கடைகளின் மின் இணைப்புகளை உடனடியாக துண்டிப்பு செய்ய அறிவுறுத்தினார். மேலும் இடியும் நிலையில் அருகில் உள்ள கடைகளில் புழங்கும் நபர்களை எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தினார்.

தக்வா பள்ளி நிர்வாக கமிட்டி தலைவர் கே.எஸ் சுக்கூர் இடிந்த கடைகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதையடுத்து கடைகளில் இடிந்து கிடக்கும் பொருட்களை அப்புறப்படுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
 

Sunday, November 29, 2015

'எழுத்தாளர்' இப்ராஹீம் அன்சாரி அவர்களுடன் அதிரை சேர்மன் மரியாதை நிமித்த சந்திப்பு !

அதிரையை சேர்ந்தவர் இப்ராஹீம் அன்சாரி. முத்துப்பேட்டை அல் மஹா மகளிர் அரபிக் கல்லூரியின் முதல்வராக பணியாற்றி வருகிறார். இணையதள எழுத்தாளர். 'மனுநீதி மனித குலத்திற்கு நீதியா ?' என்ற புத்தகம் இவரது முதல் வெளியீடாக வெளியிடப்பட்டது, இவரது அடுத்த வெளியீடாக 'மதச்சாயம் பூசி மறைக்கப்பட்ட வரலாறு' என்ற நூல் பிரபல 'சாஜிதா புக் சென்டர்' சார்பில் அச்சில் தயாராகி வருகிறது. இன்னும் சில வாரங்களில் இந்த நூல் வெளியிடப்பட உள்ளது. இதற்கான வெளியீட்டில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்.

இந்த நிலையில் இப்ராஹீம் அன்சாரி அவர்களை அதிரை பேரூராட்சி தலைவர் எஸ்.ஹெச் அஸ்லம் அவர்கள் இன்று மாலை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார். சந்திப்பின் போது திமுக பட்டுக்கோட்டை ஒன்றிய பிரதிநிதி அப்துல் ஹலீம், இந்தியன் ரெட் கிராஸ் அதிரை சேர்மன் 'மரைக்கா' இத்ரீஸ் அஹமது, முத்துப்பேட்டை சமூக ஆர்வலர் மாஷா முஹம்மது மாலிக், 'நிருபர்' முகைதீன் பிச்சை, அதிரை அஸ்கர் ஆகியோர் உடன் இருந்தனர்.

சந்திப்பு குறித்து எழுத்தாளர் இப்ராஹீம் அன்சாரி அவர்கள் நம்மிடம் கூறுகையில்...
இது மரியாதை நிமித்தமான சந்திப்பு. அதிரை பேரூராட்சி தலைவர் தம்பி எஸ்.ஹெச் அஸ்லம் அவர்களை நானே சந்தித்து பேச வேண்டும் என நினைத்தேன். அவர் என்னை சந்தித்து பேசியதில் எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. சுமார் 1/2  மணி நேரம் நீடித்த எங்களது சந்திப்பில் ஊர் பொதுநலன் குறித்து கலந்தாலோசித்தோம். மிகவும் பயனுள்ள வகையில் அமைந்தது' என்றார்.
 
 
     

Saturday, November 28, 2015

கோரிக்கைகள் நிறைவேற்றி தரும் அரசு அலுவலர்களுக்கு போஸ்ட் கார்டில் நன்றி தெரிவிக்கும் அதிரை ஆர்வலர் !

அதிரையை சேர்ந்தவர் ஹாலிக். சமூக ஆர்வலரான இவர் அதிரையின் பிராதன பகுதிகளில் பழுதடைந்த மின்கம்பங்கள், தாழ்வான மின்கம்பிகள், குடியிருப்பு பகுதிகளில் எரியாத மின் விளக்குகள் தொடர்பாக சம்பந்தப்பட்ட மக்கள் பிரதிநிதிகள், அரசு அலுவலர்களின் கவனத்திற்கு எடுத்துச்செல்லும் விதமாக பிரபல நாளிதழ் பத்திரிகைகள் மற்றும் சம்பந்தப்பட்ட அரசு அலுவலர்கள் ஆகியோருக்கு போஸ்ட் கார்டில் கோரிக்கைகளை எழுதி அனுப்பி நடவடிக்கைகள் எடுக்க கேட்டுக்கொண்டு வருகிறார். இவரது கோரிக்கைகள் பத்திரிகைகளிலும் பிரசுரமாகி வருகிறது.

இந்த புதிய முயற்சியால் ஊருக்கு நல்ல பலன் கிடைத்து வருகிறது. இவரது கோரிக்கைகள் சில நிறைவேற்றப்பட்டதை அடுத்து சம்பந்தபட்ட அரசு அலுவலர்களுக்கு குறிப்பாக மாவட்ட ஆட்சியர், மின்சார வாரிய செயற் பொறியாளர் உள்ளிட்டவர்களுக்கு போஸ்ட் கார்டில் தனது கைப்பட நன்றி தெரிவித்து கடிதங்கள் எழுதி அனுப்பி வருகிறார். சுயநலமில்லாத இவரது பொதுநலத்தை அதிரையர் பலரும் பாராட்டி வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
 

சிஎம்பி லேன் பகுதியில் புதிதாக 2 மின்கம்பங்கள் அமைப்பு !

அதிரை பேரூராட்சி 21 வது வார்டுக்கு உட்பட்ட சிஎம்பி லேன் பிரதான சாலையோரத்தில் சுமார் 100 மீட்டர் நீளமுள்ள மின்கம்பிகள் தொங்கி காணப்பட்டது. இதனால் இந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வந்தது.

'3 பேஸ் இணைப்புகளை கொண்ட இந்த மின்கம்பிகள் பொதுமக்களின் தலையில் மீது எந்தநேரமும் விழக்கூடிய சூழலில் அபாயகரமாக தொங்கி காணப்பட்டது. பலத்த காற்று வீசினாலோ அல்லது மின்கம்பத்தில் வாகனங்கள் மோதினாலோ மின்கம்பிகள் அறுந்து பொதுமக்கள் மீது விழும் சூழல் இருந்தது. இந்த பகுதியில் அதிகமாக விளையாடி வரும் சிறுவர் சிறுமிகளுக்கு ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டு விடுமோ என இப்பகுதியினர் பெரும் அச்சப்பட்டனர்.

இந்த நிலையில் இந்த பகுதியின் வார்டு கவுன்சிலர் முஹம்மது இப்ராஹீம் சம்பந்தப்பட்ட செயற்பொறியாளர் மற்றும் உதவி செயற் பொறியாளர் ஆகியோரிடம் தொடர் கோரிக்கை வைத்தார். அதில் அதிக இடைவெளி கொண்ட மின்கம்பங்கள் இடையே புதிய மின்கம்பங்களை நடுவதற்கு உடனடி நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்ளப்பட்டது.

இந்த நிலையில் இன்று காலை சிஎம்பி லேன் பிராதான சாலையில் மின்கம்பிகள் தாழ்வாக தொங்கி காணப்பட்ட இரு இடங்களில் புதிய மின்கம்பங்கள் நடும் பணியில் அதிரை மின்சார வாரிய உதவி செயற்பொறியாளர் பிரகாஷ் மேற்பார்வையில் மின்சார வாரிய 14 ஊழியர்கள் தீவிர பணிகளில் ஈடுபட்டனர்.

அதிரை பேரூராட்சி 21 வது வார்டு உறுப்பினர் முஹம்மது இப்ராஹீம்
நடந்து வரும் பணியை நேரில் பார்வையிட்டு, தனது கோரிக்கை மனு மீது நடவடிக்கை எடுத்த மின்சார வாரிய அலுவலர் மற்றும் ஊழியர்களுக்கு நன்றியை தெரிவித்தார்.
 

அதிரை ஈசிஆர் சாலையில் பகலில் எரியும் சோடியம் மின் விளக்குகள் !

அதிரை ஈசிஆர் சாலையோரத்தில் காணப்படும் சோடியம் மின் விளக்குகள் பகலில் எரிந்து மின்சாரம் வீணடிக்கப்படுவது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

அதிரை ஈசிஆர் சாலை கல்லூரி முக்கத்திலிருந்து பேருந்து நிலையம் வரையிலான சாலையில் 10 க்கும் மேற்பட்ட மின்கம்பத்தில் சோடியம் மின் விளக்குள் பொருத்தப்பட்டுள்ளன. இந்தநிலையில் இன்று காலை அனைத்து மின் விளக்குகளும் எரிந்து மின்சாரம் வீணடிக்கப்படுவது பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. சம்பந்தப்பட்ட நிர்வாகம் இதனை முறையாக பராமரிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
 
 
 

மறைந்த திமுக அதிரை அவைத்தலைவர் குடும்பத்தினருக்கு என்.ஆர் ரெங்கராஜன் எம்எல்ஏ நேரில் சந்தித்து ஆறுதல் !

திமுக அதிரை அவைத்தலைவரும், அதிரை பேரூராட்சி 13 வது வார்டு உறுப்பினருமாகிய ஹெச். அப்துல் காதர் அவர்கள் கடந்த [ 24-11-2015 ] அன்று காலமானார். இவரது இறுதி சடங்கு மறுநாள் பகல் நடைபெற்றது.

இந்த நிலையில் பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினரும், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவருமாகிய என்.ஆர் ரெங்கராஜன் எம்.எல்.ஏ அவர்கள் மறைந்த ஹெச். அப்துல் காதர் அவர்களின் இல்லத்திற்கு இன்று காலை நேரிடையாக சென்று குடும்பத்தினரிடம் ஆறுதல் கூறினார்.

அப்போது தமாகா அதிரை நகர தலைவர் எம்.எம்.எஸ் அப்துல் கரீம், தமாகா தஞ்சை தெற்கு மாவட்ட பொதுச்செயலாளர் அதிரை மைதீன், தமாகா பட்டுக்கோட்டை மேற்கு ஒன்றிய தலைவர் வைத்திலிங்கம், மாநில செயற்குழு உறுப்பினர் நடராஜன், திமுக அதிரை வார்டு பொறுப்பாளர்கள் சமூக ஆர்வலர் இப்ராஹீம், சுஹைப்தீன் ஆகியோர் உடனிருந்தனர்.
 
 
 

அதிரை பேரூராட்சி 15 வது வார்டில் வடிகால் தூர்வாரும் பணி !

அதிரை பேரூராட்சிக்கு உட்பட்ட 15 வது வார்டு பகுதிகளில் வடிகால் வாய்க்கால் தூர் வாரும் பணி நடைபெற்றது.

பொதுமக்கள் மற்றும் மேலத்தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியை ஆகியோரின் கோரிக்கை அடிப்படையில் அதிரை பேரூராட்சி தலைவர் எஸ்.ஹெச் அஸ்லம், துணைத்தலைவர் பிச்சை செயல் அலுவலர் முனியசாமி ஆகியோரின் உத்தரவின் பேரில் மழை காலங்களில் தேங்கி நிற்கும் நீரை சீராக கொண்டுசெல்லும் வகையில் அதிரை பேரூராட்சிக்கு உட்பட்ட 15 வது வார்டு காட்டுப்பள்ளி தெரு பகுதி, மேலத்தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கிழக்கு பகுதியில்  உள்ள வடிகால் வாய்க்கால் ஆகியவற்றில் தூர் வாரும் பணி நடைபெற்றது. இந்த பணிக்காக ஜேசிபி வாகனம் பயன்படுத்தப்பட்டன. மேலும் இந்த பகுதியில் படர்ந்து காணப்பட்ட முட்புதர்கள் அகற்றும் நடவடிக்கைகளில் அதிரை பேரூராட்சி 15 வது வார்டு கவுன்சிலர் அப்துல் லத்திப் மற்றும் மேஸ்திரி நாடிமுத்து ஆகியோரின் மேற்பார்வையில் அதிரை பேரூராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர். பொதுமக்கள் நடந்து செல்லும் வகையில் பாதைகள் சரிசெய்யப்பட்டன.