.

Pages

Showing posts with label கரையூர் தெரு செய்திகள். Show all posts
Showing posts with label கரையூர் தெரு செய்திகள். Show all posts

Tuesday, May 5, 2020

அதிராம்பட்டினம் மீனவர்களை மீன்பிடிக்க அனுமதிக்குமாறு சப் கலெக்டர், டிஆர்ஓ விடம் வலியுறுத்தல்!

அதிராம்பட்டினம், மே.05
அதிராம்பட்டினம் நாட்டுப்படகு மீனவர்களை கடலில் மீன் பிடிக்க அனுமதிக்குமாறு, பட்டுக்கோட்டை சார் ஆட்சியர் ஏ.ஆர் கிளாஸ்டன் புஷ்பராஜ், மாவட்ட வருவாய் அலுவலர் (பொ) ர.சக்திவேல் ஆகியோரிடம் கரையூர்தெரு கிராம பஞ்சாயத்தார்கள் வலியுறுத்தினர்.

கரோனா அச்சுறுத்தல் காரணமாக, அரசின் ஊரடங்கு உத்தரவை அடுத்து,  அதிராம்பட்டினம் பகுதியில் கரையூர் தெரு, காந்தி நகர் மற்றும் ஆறுமுக கிட்டங்கி தெரு ஆகிய மீனவ கிராமங்களின் நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல தடை விதிக்கப்பட்டது. இதனால், மீனவ குடும்பங்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டன.

இந்நிலையில், அதிராம்பட்டினம் பகுதியில் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்ட பட்டுக்கோட்டை சார் ஆட்சியர் ஏ.ஆர் கிளாஸ்டன் புஷ்பராஜ், மாவட்ட வருவாய் அலுவலர் (பொ) ர.சக்திவேல் ஆகியோரை கரையூர்தெரு கிராம பஞ்சாயத்தார்கள் சந்தித்து, அதிராம்பட்டினம் நாட்டுப்படகு மீனவர்களை கடலில் சென்று மீன் பிடிக்க அனுமதிக்குமாறும், கட்டுப்படுத்தப்பட்ட பகுதியில் இருந்து வெகு தொலைவில் துறைமுகம் அமைந்திருப்பதாகவும் வலியுறுத்தினர். இதையடுத்து, துறைமுகப் பகுதியை நேரில் சென்று பார்வையிட்டு, இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் கவனத்துக்கு கொண்டு செல்வதாக அவர்களிடம் தெரிவித்தனர்.

அப்போது, பட்டுக்கோட்டை வட்டாட்சியர் சா.அருள் பிரகாசம், அதிராம்பட்டினம் பேரூராட்சி செயல் அலுவலர் பி.பழனிவேலு, அதிராம்பட்டினம் வருவாய் ஆய்வாளர்கள் உமர், சரவணன், கிராம நிர்வாக அலுவலர்கள் அசாருதீன், ராஜசேகர், கிராம உதவியாளர்கள் பத்மநாபன், பாலா மற்றும் கரையூர்தெரு கிராம நிர்வாகத் தலைவர் அய்யாவு, துணைத்தலைவர் வீரையன் மற்றும்  கோடி.நாகராஜ் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Friday, May 1, 2020

அதிராம்பட்டினத்தில் மீனவ குடும்பங்களுக்கு தலா 10 கிலோ அரிசி வழங்கல் (படங்கள்)

அதிராம்பட்டினம், மே.01
கரோனா அச்சுறுத்தல் காரணமாக, அரசின் ஊரடங்கு உத்தரவை அடுத்து,  அதிராம்பட்டினம் பகுதியில் கரையூர் தெரு, காந்தி நகர் மற்றும் ஆறுமுக கிட்டங்கி தெரு ஆகிய மீனவ கிராமங்களின் நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல தடை விதிக்கப்பட்டது. இதனால், மீனவ குடும்பங்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டன.

இந்நிலையில், பாதிக்கப்பட்ட மீனவ குடும்பங்களின் சார்பில், மாவட்ட ஆட்சியரிடம் வைத்து கோரிக்கையின் அடிப்படையில், முதல்கட்டமாக, அதிராம்பட்டினம் கரையூர் தெரு மீனவ குடும்பங்களுக்கு தலா 10 கிலோ வீதம் அரிசி இன்று வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது. மீனவ பொதுமக்கள் சமூக இடைவெளியை பின்பற்றி அரிசியை வங்கிச்சென்றனர். இதைத்தொடர்ந்து, காந்தி நகர் மற்றும் ஆறுமுக கிட்டங்கி தெரு ஆகிய பகுதிகளின் மீனவ குடும்பங்களுக்கு வழங்கப்பட உள்ளது.

இதில், பட்டுக்கோட்டை வட்டாட்சியர் சா.அருள் பிரகாசம், மீன்வளத் துறை ஆய்வாளர் கங்கை ஈஸ்வரி, கிராம நிர்வாக அலுவலர்கள் முகமது அசாருதீன், ஆனந்த ஜோதி, ஆறுமுகம், கெளரி சங்கர், கிராம நிர்வாக உதவியாளர் பத்மநாபன், அதிராம்பட்டினம் மீனவர் கூட்டறவு சங்கத் தலைவர் நாகராஜ், கரையூர்தெரு கிராம நிர்வாகத் தலைவர் அய்யாவு, துணைத்தலைவர் வீரையன், பொருளாளர் அய்யப்பன் மற்றும் பஞ்சாயத்தார்கள் கலந்துகொண்டனர்.

Wednesday, April 29, 2020

அதிராம்பட்டினம் கரையூர் தெரு கிராமத்தில் கப சூரக் குடிநீர் வழங்கல் (படங்கள்)

அதிராம்பட்டினம், ஏப்.29
கரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில், அதிராம்பட்டினம் கரையூர் தெரு கிராம பஞ்சாயத் சார்பில், மாரியம்மன் கோவில் எதிரில் பொதுமக்களுக்கு கப சுரக் குடிநீர் இன்று புதன்கிழமை காலை வழங்கப்பட்டது.

அதிராம்பட்டினம், கரையூர் தெரு கிராம பொதுமக்கள் சமூக இடைவெளியை பின்பற்றி கப சூரக் குடிநீரை வாங்கி அருந்தினர். ஏற்பாட்டினை, கரையூர்தெரு கிராம நிர்வாகத் தலைவர் அய்யாவு, துணைத்தலைவர் வீரையன், பொருளாளர் அய்யப்பன் மற்றும் பஞ்சாயத்தார்கள் செய்திருந்தனர்.
 

Thursday, April 23, 2020

அதிராம்பட்டினம் நாட்டுப்படகு மீனவர்கள் கடலில் மீன்பிடிக்க தடை: 3500 மீனவ குடும்பங்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறி!

அதிராம்பட்டினம், ஏப்.23
நாட்டுப்படகு மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல அனுமதிக்கப்பட்ட நிலையில் அதிராம்பட்டினம் பகுதி  நாட்டுப்படகு மீனவர்களுக்கு மட்டும்  தடை விதிக்கப்பட்டதால் 3500 மீனவ குடும்பங்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது.

தஞ்சை மாவட்டம், கடற்கரைப் பகுதி தம்பிக்கோட்டை முதல் கட்டுமாவடி வரையில் உள்ளன. இந்த பகுதியில் 37 மீன்பிடி தளங்களில் 1200 க்கும் மேற்பட்ட நாட்டு படகுகள் மற்றும் 200க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் மூலம் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள்  மீன்பிடித் தொழிலை மட்டுமே  இவர்களது வாழ்வாதாரமாக உள்ளது.

இந்நிலையில், கடந்த 15ம் தேதி முதல் மீன்பிடி தடை காலம் துவங்கிய நிலையில் விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல தடை விதிக்கப்பட்டு நாட்டுப்படகு மீனவர்கள் மட்டும் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல அனுமதிக்கப்பட்டது. இதையடுத்து, தஞ்சை மாவட்டத்தில் உள்ள நாட்டுப்படகு மீனவர்கள் கடந்த ஏப்ரல் 15 முதல் மீன்பிடிக்கச் சென்று வருகின்றனர்.

அதிராம்பட்டினம் பகுதியில் கரையூர் தெரு, காந்தி நகர் மற்றும் ஆறுமுக கிட்டங்கி தெரு ஆகிய மீனவ கிராமங்களில் கிட்டத்தட்ட இருநூறுக்கும் மேற்பட்ட நாட்டுப் படகுகள் மூலம் மீன் பிடித்து வரும் நிலையில் 3500 குடும்பங்கள் இந்த மீன்பிடி தொழிலை நம்பி உள்ளனர்.

இந்நிலையில் இந்த மூன்று கிராமங்களை சேர்ந்த மீனவர்களுக்கு மட்டும் மீன்பிடிக்க செல்ல அனுமதி மறுக்கப்பட்டு மற்ற கிராமங்களைச் சேர்ந்த அனைத்து நாட்டுப்படகு மீனவர்களும் மீன்பிடிக்க செல்ல மீன்வளத் துறையினர் அனுமதி அளித்துள்ளனர் என்ற குற்றச்சாட்டு இந்த கிராமத்து மீனவர்கள் இடையே இருந்துவருகிறது. இதற்கு அதிகாரிகள் கூறும் காரணம் அதிராம்பட்டினம் பேரூராட்சி பகுதியில் கரோனா நோய்த் தொற்று இருப்பதாக கண்டறியப் பட்ட நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இவர்களை மீன் பிடிக்கச் செல்ல அனுமதிக்கவில்லை என்று அதிகாரிகள் கூறுவதாக இப்பகுதி மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

இத்தொற்று இருக்கும் இடத்தில் இருந்து தங்களது கிராமம் அதிக தொலைவில் உள்ளது. அதேபோல நோய் தொற்று இருக்கும் பகுதியில் இருந்து மிக அருகில் உள்ளகிராமங்களுக்கு மீன்பிடிக்கச் செல்ல அனுமதிக்கப்பட்டு எங்களை அதிகாரிகள் வேண்டுமென்றே பழிவாங்குவதாக இப்பகுதி மீனவர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக மீன்பிடிக்க செல்லாமல் இருந்து வரும் நிலையில் தங்களது குடும்பங்கள் வறுமையில் வாடி வருவதாகவும் பட்டினியில் தவிப்பதாகவும் மிக வேதனையுடன் தெரிவிக்கின்றனர். நாங்கள் கடற்கரையோரம் வசித்து வருகிறோம் கடலில் அரசு விதிகளின்படி குறிப்பிட்ட நபர்கள் மட்டும் தான் மீன்பிடிக்க செல்கின்றோம். அப்படியே மீன்பிடிக்கச் சென்றாலும் மீன்பிடித்து விட்டு வரும் பொழுது துறை முகத்திலேயே அந்த மீன்களை விற்பனை செய்து விட்டு நாங்கள் வந்து விடுவோம். இதனால் எந்தவிதமான பாதிப்பும் இருக்கப்போவதில்லை எனவே உடனடியாக அரசு தலையிட்டு எங்களது மூன்று கிராம மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல அனுமதிக்க வேண்டும் என்கின்றனர்.
 

Thursday, April 9, 2020

கரையூர்தெரு கிராமத்தில் மஞ்சள்,வேப்பிலை கலந்த நீர் தெளிப்பு (படங்கள்)

அதிராம்பட்டினம், ஏப்.09
கரோனா தொற்று தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அதிராம்பட்டினம் கரையூர்தெரு கிராமத்தில் மஞ்சள், வேப்பிலை கலந்த நீர் இன்று வியாழக்கிழமை காலை தெளிக்கப்பட்டது.

அதிராம்பட்டினம் கரையூர்தெரு கிராம பஞ்சயாத் சார்பில், மாரியம்மன் கோவிலில் நடந்த வழிபாட்டில், அதிராம்பட்டினம் பேரூராட்சி செயல் அலுவலர் பி.பழனிவேலு கலந்துகொண்டு, கோவில் வாளகத்தில் மஞ்சள், வேப்பிலை கலந்த நீரை தெளித்து தொடங்கி வைத்தார். பின்னர், கரையூர்தெரு கிராம நிர்வாக இளைஞர்கள் 10 பேருக்கு கரோனா தன்னர்வலர்களுக்கான அடையாள அட்டை வழங்கினார்.

இதையடுத்து, 3 டேங்கர் வண்டிகளில் நிரப்பப்பட்ட மஞ்சள், வேப்பிலை கலந்து நீரை கரையூர்தெரு கிராமம் முழுவதும் தன்னார்வல இளைஞர்கள் தெளித்தனர். ஏற்பாட்டினை, கரையூர்தெரு கிராம நிர்வாகத் தலைவர் மற்றும் பஞ்சாயத்தார்கள் செய்திருந்தனர்.
 

Thursday, August 9, 2018

கரையூர் தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்வு!

கரையூர் தெரு ஊராட்சி ஒன்றிய பள்ளி மாணவர்கள் || கோப்புப்படம்
அதிராம்பட்டினம், ஆக.09
தமிழகம் முழுவதும் 95 அரசு நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன. இதற்கான அரசாணை (ஆக.07) செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டுள்ளது.

இதில், தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் கரையூர் தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டதை அடுத்து, நீண்டநாள் கோரிக்கை நிறைவேறியதில் இப்பகுதியினர் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். பரிந்துரை செய்த பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் சி.வி சேகர் எம்.எல்.ஏ மற்றும் பள்ளி கல்வித்துறை ஆகியோருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.