.

Pages

Showing posts with label சந்திப்பு. Show all posts
Showing posts with label சந்திப்பு. Show all posts

Monday, August 19, 2019

தஞ்சையில் ஓர் 50 ரூபாய் டாக்டர் (படங்கள்)

தஞ்சாவூர், ஆக.19
உண்மையில் இப்பதிவிற்கு தஞ்சையில் ஓர் மனிதநேய டாக்டர் என்றிருப்பதே சரியான தலைப்பாக இருக்க முடியும் என்றாலும் நம் கண்முன்னே 5 ரூபாய் டாக்டர், 10 ரூபாய் டாக்டர், இலவச டாக்டர் என பல மனிதநேய செல்வங்கள் (சிலர் மறைந்தும்) வாழ்ந்து கொண்டுள்ளதால் அவர்களோடு இணைத்து சிலாகிக்க வேண்டுமென நாடியதாலேயே தலைப்பு தவிர்க்க முடியாததாகிவிட்டது.

தஞ்சை புதிய பேருந்து நிலையத்திற்கு செல்லும் சாலையில் MR மருத்துவமனைக்கு அடுத்து அமைந்துள்ளது டாக்டர் ஆர். முரளி  MS M.ch அவர்களின் முரளி கேஸ்ட்ரோ கிளினிக் எனும் மருத்துவமனை. இவர் குடல் நோய் மற்றும் மஞ்சள் காமாலைக்கான சிறப்பு மருத்துவர்.

தஞ்சை போன்ற பெருநகரங்களில் நாம் அறியாத நல்ல மருத்துவர்கள் பலர் இருக்கலாம் ஆனால் 50 ரூபாயை மட்டும் மருத்துவ ஆலோசனை கட்டணமாக பெற்றுக் கொண்டு வைத்தியம் பார்க்கக்கூடிய ஒரு ஸ்பெஷலிஸ்ட் டாக்டர் இன்னொருவர் இருக்க வாய்ப்பில்லை, பொதுவாக தஞ்சையில் பல டாக்டர்களின் கன்சல்டிங் பீஸ் 300 ரூபாயில் இருந்து தான் துவங்கும், விதிவிலக்காக சிலர் குறைவாக வாங்கினாலும் நிச்சயம் 50 ரூபாய் வாங்க வாய்ப்பில்லை என்பதோடு பல நேரங்களில் நோயாளிகளின் சூழல் அறிந்து அதையும் தவிர்த்து விடுகின்றார். எண்டோஸ்கோபி போன்ற சிறப்பு சிகிச்சை கட்டணங்கள் குறித்து இங்கு பேசவில்லை.

குறைவான கன்சல்டிங் பீஸ் பெறுவது ஏன் என வினவிய போது 2 காரணங்களை தெரிவிக்கின்றார். ஒன்று, பல நோயாளிகள் தங்களது பொருளாதார சூழலின் காரணமாக டாக்டர் எழுதித்தரும் மருந்துகளை குறைவாகவே வாங்கிச் செல்வதை அவதானித்ததன் விளைவாக தன்னுடைய பீஸை குறைத்துக் கொண்டால் அந்த பணத்தில் இன்னும் கொஞ்சம் கூடுதலாக வாங்கிச் செல்வார்களே என்ற நல்லெண்ணம், மருந்துகளைக் கூட அதிகமாக எழுதுவதில்லை என்பது இன்னொரு சிறப்பு. இரண்டாவதாக, பட்டுக்கோட்டை ரத்தினம்பிள்ளை டாக்டருடன் இணைந்து பிராக்டீஸ் செய்தபோது அவரும் குறைவான கட்டணத்தை பெறுவதை கண்டு, அவர் நன்றாக இருக்கும் போது நாம் நன்றாக இருக்க மாட்டோமா? என்ற திருப்தியான எண்ணம் ஏற்பட்டதையும் நினைவுகூறுகின்றார்.

தன்னுடைய மருத்துவமனையை சுற்றி நல்ல பல அற வாசகங்களை எழுதி வைத்துள்ள டாக்டர் இந்து மதத்தில் பற்றுள்ள ஆன்மீகவாதி என்றாலும் பிற மதத்தினரையும் மதங்களையும் நேசிக்கக்கூடியவர், ஒரு உண்மையான ஆன்மீகவாதியின் மெய் குணம் இதுவாகவே இருக்க முடியும்.

தன்னுடைய மருத்துவமனையின் வரவேற்பரையில் டாக்டருக்காக காத்திருப்போர் வாசிப்பதற்காக இந்து மத ஆன்மீக புத்தகங்களுடன் புனித குர்ஆனின் தமிழாக்கங்கள், பைபிள், வரலாற்று புத்தகங்கள், சமூக அரசியல் புரட்சியாளர்கள் பற்றிய புத்தகங்கள், பொதுவான தலைப்பிலானவை என பாரபட்சமற்ற நூலகத்தையும் பராமரித்து வருகின்றார்.

தனது மேசையின் மீது புத்தர் சிலையை வைத்திருக்கும் டாக்டர் முரளி அவர்கள் முஸ்லீம் நோயாளிகள், உறவினர்கள் சென்றால் தொழுகை மற்றும் கடவுள் நம்பிக்கையை வலியுறுத்துவதையும் காணலாம்.

தன்னுடைய கனிவான அணுகுமுறை, கம்மியான கட்டணம் அனைத்திற்கும் எல்லாம் அவன் செயல் என இறைவனைப் போற்றும் தன்னடக்கத்தையும் இவரிடம் காணலாம். இந்தியாவின் இன்றைய மதவெறி தூண்டிவிடப்பட்டுள்ள சூழலில் டாக்டர் முரளி போன்ற நல்லிணக்க ஆன்மீகவாதிகள் அதிகம் தேவை.

சந்திப்பு: அதிரை அமீன்
 

 

Sunday, May 14, 2017

முன்னாள் அதிரை சேர்மனுக்கு ஜப்பானில் வரவேற்பு ( படங்கள் )

2011-2016 ஆம் ஆண்டு அதிராம்பட்டினம் பேரூராட்சி பெருந்தலைவராக பொறுப்பில் இருந்தவர் எஸ்.எச் அஸ்லம். இவர் தொழில் நிமித்தமாக கடந்த சில வாரங்களில் இரண்டாவது முறையாக ஜப்பான் நாட்டுக்கு பயணமானார். இந்நிலையில், ஜப்பானில் வசிக்கும் அதிராம்பட்டினம் பகுதியினர் எஸ்.எச் அஸ்லம் அவர்களை நேரில் சந்தித்து வரவேற்று மகிழ்ந்தனர். மேலும் அதிரை பேரூராட்சி தலைவர் பணியின் போது ஆற்றிய சேவைகளுக்கு பாராட்டு தெரிவித்தனர்.

சந்திப்பு குறித்து முன்னாள் சேர்மன் எஸ்.எச் அஸ்லம் கூறியது: 
தொழில் நிமித்தமாக ஜப்பான் வந்துள்ளேன். இங்குள்ள அதிரை சகோதரர்களை சந்தித்து கலந்துரையாடல் செய்தேன், என் மீது அன்பு பாராட்டியது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. சிறப்பான வரவேற்பு அளித்தனர். அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இவர்கள் அனைவரின் உடல் ஆரோக்கியம், பர்கத் ஆகியவற்றிற்கு எல்லாம் வல்ல இறைவனிடம் நான் பிரார்த்தனை செய்தேன்' என்றார்.
 

Saturday, December 27, 2014

'தமிழ் அறிஞர்' அதிரை அஹமது அவர்களோடு ஒரு அழகிய சந்திப்பு ! [ காணொளி இணைப்பு ]

ஜனநாயகத்தின் நான்காவது தூணாக !? வர்ணிக்கப்படும்  ஊடகத்துறையை இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம். ஒன்று அச்சு ஊடகத்துறை, மற்றொன்று மின்னணு ஊடகத்துறை.

ஊடகத்துறை என்பது சமூகத்தில் நடைபெறும் நிறை, குறைகளை உலக மக்களின் கவனத்திற்குக் கொண்டு செல்வதோடு மட்டுமல்லாமல் சம்பந்தப்பட்டவர்களின் பார்வைக்கும் சென்றடைந்து அதற்குரிய தீர்வும் எட்டுகிறது. இதனால் ஒரு நாட்டின் வளர்ச்சிக்கும், சமுதாயத்தின் வளர்ச்சிக்கும் வித்திட முடிகிறது.

இத்தகைய ஊடகத்தை சமூகத்தினர் பயன்படுத்தி சமுதாயம் எதிர்கொண்டிருக்கும் பிரச்சனைகள், சமுதாய வளர்ச்சி, சமூக விழிப்புணர்வு போன்ற நல்ல நோக்கங்களுக்காக சரித்திரம் படைக்க இளம் தலைமுறையினர் சவால் நிறைந்த ஊடகங்களில் அடியெடுத்து வைத்து சாதிப்பதற்கு தயாராக வேண்டும் !

இதற்கு எடுத்துக்காட்டாக நமதூரைச் சேர்ந்த பிரபல பதிவர்கள் மின்னணு துறையாகிய இணையதளத்தைப் பயன்படுத்தி சமூகம், கல்வி, அரசியல் போன்றவற்றை சார்ந்த விழிப்புணர்வு ஆக்கங்கள், மார்க்க விளக்கங்கள், முக்கிய நிகழ்வுகள், சிந்தணையத் தூண்டும் செய்திகள், உடல் நல குறிப்புகள், விளையாட்டு செய்திகள், அறிவிப்புகள், வரலாற்று ஆய்வுகள், அழகிய கவிதைகள், புகைப்படங்கள், காணொளிகள், கடிதங்கள் ஆகியவற்றை அவரவர்களின் தனித்தன்மையுடன் பிறர் விழிப்புணர்வு பெறவேண்டும் என்ற நோக்கில் இணையதளங்கள் மற்றும் வலைதளங்களில் பதிந்து வருகின்றனர். இவற்றை வாசிக்கும் பலர் நன்மையும் அடைகின்றனர்.

சரி விசயத்திற்கு வருவோம்...
1. ஊடகத்துறையைப் பற்றி...
2. ஊடகத்துறையில் சமுதாயத்தினரின் பங்கு...
3. இளம் பதிவர்களுக்கு கூறும் அறிவுரைகள்...
4. நமதூர் பதிவர்களின் தனிச்சிறப்பு...

ஆகிய கேள்விகளை முன்வைத்து நமதூரின் பிரபல எழுத்தாளார், 'பன்னூல் ஆசிரியர்' அதிரை அஹ்மது அவர்களை கடந்த [ 26-08-2012 ] அன்று அவர்களின் இல்லத்தில் சந்தித்து கருத்துகளை பெற்று காணொளியில் பதிந்தோம்.

காணொளியை காண்பதற்கு முன்னதாக...

இவர்களைப் பற்றிய சிறு குறிப்பு :
“தமிழ் அறிஞர்” என்று இணையத்தோடு தொடர்புடைய நண்பர்களால் பாரட்டப்படுகிற மூத்த சகோதரர் அதிரை அஹ்மது அவர்கள் மார்க்கப்பணி, சமூகப்பணி, கல்விப்பணி, எழுத்துப்பணி ஆகியவற்றில் மூழ்கியிருப்பதோடு மட்டுமல்லாமல் நமதூருக்கு பெருமை சேர்க்கும் அளவு பல புத்தகங்களை எழுதிருப்பவர் குறிப்பாக இஸ்லாமிய இலக்கிய சிந்தனை, இஸ்லாம் ஓர் அறிமுகம், மழைப்பாட்டு உரை, ஒருமைப்பாட்டு, சிறுமிப்பாட்டு, பெண்மணி மாலை, அருமையான வாழ்வும் அமைதியான இறப்பும், ஏசுவை நேசித்தேன், நபி வரலாறு சிறுவருக்கு, பேறுபெற்ற பெண்மணிகள் – பாகம் ஓன்று, பேறுபெற்ற பெண்மணிகள் – பாகம் இரண்டு, வட்டியை ஒழிப்போம், இறைத்தூதர் முஹம்மது நபி (ஸல்), தமிழ்மொழிப் பெயர்ப்பு செய்யப்பட்ட ஆங்கில நூல்களாகிய Salma Al Farisi, Khabbab Bin Aratt, Abu Zar Ghifari, Abu Abdullaah Zubair Bin Al Awaam, Miqdad Bin ‘Amr Al Aswad’, தன்னால் எழுதப்பட்ட ஆங்கில நூலாகிய Wisdom in the Dawn மற்றும் அதன் தமிழாக்கம் இளமை பருவத்திலே போன்ற நூல்களும், அதிரை  வலைதளங்களில் ‘நல்ல தமிழ் எழுதுவோம்’ மற்றும் ‘கவிதை ஓர் இஸ்லாமியப் பார்வை’ ஆகிய நெடுந்தொடர்களும், பல கவிதைகளும் எழுதியுள்ளார். மேலும் பல நூல்களுக்கு முன்னுரை, கருத்துரை வழங்கியுள்ளார் என்பது இவரது கூடுதல் சிறப்பாக கருதப்படுகிறது.
இது ஒரு மீள் பதிவு ! 
சேக்கனா நிஜாம்

Saturday, February 8, 2014

புத்தகத் தாத்தாவோடு நெகிழ வைத்த சந்திப்பு !

நாம் கற்கும் கல்விக்கு அடிப்படையாக புத்தகங்கள் - பத்திரிக்கைகள் இருக்கின்றன. இவற்றைக்கொண்டு நம் அறிவுத்திறனை வளர்த்துக் கொள்வதோடு மட்டுமல்லாமல் அன்றாடம் நிகழக்கூடிய உலக விசயங்கள் பலவற்றை அறிந்து கொள்ளவும் உதவுகின்றன. அறிவுத்திறன் வளர்வதற்கு முதுகெலும்பாகத் திகழுவதோடு மட்டுமல்லாமல் நம்மிடேயே நட்புறவு, சகோதரத்துவம், தன்னம்பிக்கை ஆகியவற்றை ஏற்படுத்துவதிலும் முன்னிலை வகிக்கின்றன.

நமதூர் தரகர் தெருவை சேர்ந்தவர் M.P. சிக்கந்தர் [ வயது 60 ] தாத்தாவாகிவிட்ட இவர் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக பத்திரிக்கை தொழிலை ஆர்வத்துடன் நடத்தி வருகிறார். இவரிடம் தின நாளிதழ்கள், வாரப்பத்திரிக்கைகள், மருத்துவ இதழ்கள், மாத இதழ்கள் உள்ளிட்ட அனைத்து வித பத்திரிக்கைகளையும் விற்பனை செய்துவருகிகிறார். பேருந்து நிலையத்தின் அருகே அமைந்துள்ளது இவரின் சிறிய கடை. அதிக நட்பு வட்டத்தை கொண்டுள்ள இந்த தாத்தாவிடம் அதிகமானோர் இதழ்களையும், பத்திரிக்கைகளையும் வாங்கிச் செல்கின்றனர்.

சொற்ப லாபம் தரக்கூடிய இந்த தொழிலை நடத்திவரும் M.P. சிக்கந்தர் அவர்களிடம் பேசிய வகையில்....
இவற்றை தொழில் என்பதை வீட சேவை என்றே குறிப்பிட வேண்டும். காரணம் சிறுவயது முதல் பத்திரிக்கை துறையில் ஆர்வம் கொண்ட நான் இவற்றை விருப்பத்தின் பேரிலேயே தொடர்ந்து செய்து வருகிறேன். அதிகாலை 4 மணிக்கு எழுந்திருக்கும் நான் நேராக பேருந்தில் வரும் பத்திரிக்கைகளை எடுத்துக்கொண்டு அவற்றை முறையாக அடுக்கி ஒவ்வொன்றாக விற்பனை செய்வோம்.

அதிகாலையில் வாக்கிங் செல்வோரிலிருந்து, பள்ளி கல்லூரி செல்லும் மாணவர்கள், ஆசிரியர்கள், பயணிகள், வியாபாரிகள், தொழிலாளிகள் உள்ளிட்ட அனைவரும் வாசிக்கின்றனர் என்றும், அதிரையில் பத்திரிக்கைகள் விற்பனை செய்யும் கடைகள் ஏராளமாக இருந்தாலும் இவரிடமிருந்து நாள் ஒன்றுக்கு 400 க்கும் மேற்பட்ட தின பத்திரிக்கைகள் விற்பனையாகின்றன. வாசிப்போர் அதிகமாகி வருவது இவருக்கு பெருமையளிப்பதாகவும் நம்மிடம் கூறுகிறார்.

தின பத்திரிக்கைகளில் உள்ளூர் செய்திகள் தாங்கி வரும்போதும், தேர்தல் காலங்களிலும் விற்பனை அதிகமாக் இருப்பதையும், மழை, குளிர் காலங்களில் விற்பனை மந்தமாக இருப்பதையும் குறிப்பிடுகிறார். தினமும் ஏற்படும் 1 ரூபாய், 2 ரூபாய் சில்லறை தட்டுப்பாட்டை நம்மிடம் கவலையுடன் குறிப்பிட தவறியதில்லை.

சமூக சிந்தனையை கொண்ட இவர் அன்றாடம் அரசியல் நிலவரங்களை விரல் நுனியிலும், எதிர்கால அரசியல் நடவடிக்கைகளை துல்லியமாக கணித்து கூறக்கூடியவராகவும் இருக்கிறார் என்பதை அவரிடம் பேசிய வகையில் நாம் அறிந்துகொண்டோம்.

கடைசியாக நாம் விடைபெறுவதற்கு முன்பு கேட்க மறந்த கேள்வியை அவரிடம் கேட்டு வைத்தோம்... 'காக்கா உங்களுடைய தின வருமானம் சராசரியாக எம்பூட்டு ? ன்னோம்.. தம்பி 200 ரூபாய்ன்னார். கேட்டதும் அப்புடியே 'ஷாக்'காய்ட்டோம் - அதிர்ச்சியாக இருந்தது.


Tuesday, October 1, 2013

ஆஸ்திரேலியாவில் கவிக்கோ அப்துல் ரஹ்மானுடன் அதிரையர்கள் சந்திப்பு !

சமீபத்தில் ஆஸ்திரேலியா சென்ற கவிகோ அப்துல் ரஹ்மான் அவர்களை அங்கு அதிரையர்கள் இல்லத்தில் தங்க வைத்து உபசரிக்கப்பட்டார்.

பின்பு சிட்னி, மற்றும் மெல்போர்ன் நகரங்களுக்கு விஜயம் செய்து இஸ்லாத்தில் ஒற்றுமையின் அவசியத்தைப் பற்றி பல்வேறு கூட்டங்களில் பேசிய அவர்கள், தமிழ் நாட்டில் முஸ்லிம்களுக்காக ஒரு மருத்துவக் கல்லூரி துவங்குவதற்காக அவர்கள் வக்ப் வாரிய தலைவராக இருந்தபோது எடுத்த முயற்சிகளைப் பற்றியும், அது பல்வேறு காரணங்களினால் இயலாமல் போனதைப் பற்றியும், அந்த முயற்சியை மறுபடியும் துவங்கி இருப்பதைப் பற்றியும் எடுத்துக்கூறினார்கள்.

இந்த மருத்துவ கல்லூரி, சமுதாய சிந்தனையில் எந்த வித லாப நோக்கமும் இல்லாமல் தொடங்கப்பட இருக்கிறது. இதை துவங்க அவர்களுக்கு 50 ஏக்கர் நிலத்தை இலவசமாக  அளிக்க திருநெல்வேலியை சார்ந்த ஒரு சகோதரர் முன் வந்துள்ளார். இதைப்பற்றிய கவிக்கோவின் நேர்முக வர்ணனையை காண கீழ்க்கண்ட  You Tube Link ஐ சொடுக்கவும். 
இதில் நாமும் பங்கெடுத்துக்கொண்டு ஆரம்பத்தில் இருந்தே ஒரு ஈடுபாட்டுடன் செயல்பட்டால், இன்ஷா அல்லாஹ், நமதூருக்கு உள்ள டாக்டர்கள் பற்றாக்குறை நமது வம்சங்களுக்கு நீங்கும்.  

இன்ஷா அல்லாஹ், கவிக்கோ அவர்களை நமதூருக்கு வரவழைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

மேலும் இதைப்பற்றி ஏதேனும் விபரங்கள் தேவைப்பட்டால் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி மற்றும் மின் அஞ்சல் முகவரி .

email: msahib@gmail.com 
Phone: +61 433 077 660

தகவல் : மீரா சாஹிப்
ஆஸ்திரேலியா