.

Pages

Showing posts with label தஞ்சை செய்திகள். Show all posts
Showing posts with label தஞ்சை செய்திகள். Show all posts

Tuesday, September 15, 2020

தஞ்சை மாவட்ட தற்காலிக காவல் கண்காணிப்பாளராக எஸ்.எஸ் மகேஸ்வரன் பொறுப்பேற்பு!


அதிரை நியூஸ்: செப்.15
தஞ்சாவூா் மாவட்ட தற்காலிக காவல் கண்காணிப்பாளராக எஸ்.எஸ் மகேஸ்வரன் திங்கள்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.

ஹைதராபாத்தில் ஐ.பி.எஸ். அலுவலா்களுக்கான பணியிடைப் பயிற்சி செப்டம்பா் 14 ஆம் தேதி முதல் அக்டோபா் 9 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதில், தஞ்சாவூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் தேஷ்முக் சேகா் சஞ்சய் பங்கேற்றுள்ளாா்.இவா் பயிற்சி முடித்து வரும் வரை தஞ்சாவூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கூடுதல் பொறுப்பை சென்னை துறைமுக அமலாக்கப் பிரிவு காவல் கண்காணிப்பாளா் எஸ்.எஸ். மகேஸ்வரனுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இதைத்தொடா்ந்து தஞ்சாவூா் மாவட்டத்தின் தற்காலிக காவல் கண்காணிப்பாளராக எஸ்.எஸ். மகேஸ்வரன் திங்கள்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா். இவா் சில மாதங்களுக்கு முன்பு வரை தஞ்சாவூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளராக இருந்து சென்னைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டாா் என்பது குறிப்பிடத்தக்கது.

Wednesday, September 9, 2020

10 ஆண்டுகளுக்கு மேல் உள்ள சிறைவாசிகளை விடுதலை செய்யக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு!

தஞ்சாவூர், செப்.09
10 ஆண்டுகளுக்கு மேல் உள்ள சிறைவாசிகளை விடுதலை செய்யக்கோரி தஞ்சை தெற்கு மாவட்ட மனிதநேய மக்கள் கட்சி சார்பில், முதலமைச்சருக்கான மனுவை தஞ்சை மாவட்ட ஆட்சியரிடம் நிர்வாகிகள் வழங்கினர்.

10 ஆண்டுகள் மேலாக சிறையில் வாடும் முஸ்லிம்கள் மற்றும் 7 தமிழர்களை விடுதலை செய்யக்கோரி தஞ்சை தெற்கு மாவட்ட மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் தஞ்சை ரயில் நிலையத்தின் எதிரில் நடைபெற்றது.

நிகழ்வுக்கு, தஞ்சை தெற்கு மாவட்ட தமுமுக - மமக பொருப்பு குழு உறுப்பினர் அப்துல் ஜப்பார் அவர்கள் தலைமை வகித்தார். இந்நிகழ்வில் மனிதநேய மக்கள் கட்சி மாநில அமைப்புச் செயலாளர் தஞ்சை ஐ.எம் பாதுஷா கண்டன உரை நிகழ்த்தினார். மாநில செயற்குழு உறுப்பினர் தஞ்சை ஐ. பாருக் மஹராஜ் கோஷங்கள் எழுப்பினார், மாநகரத் தலைவர் லுக்மான் ஹக்கீம் இறைவசனம் ஓதினார், மாநகர துணை செயலாளர் முகமது உசேன் வரவேற்றுப் பேசினார்.

நிகழ்வில், மாவட்ட பொருப்பு குழு உறுப்பினர் அப்துல் அஜீஸ், வல்லம் பேரூர்
பொருப்பாளர் வல்லம் மஜீத் மாநகர கிளை கழக நிர்வாகிகள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிறைவில், மாவட்ட துணை செயலாளர் ரியாஸ் அகமது நன்றி கூறினார். ஆர்ப்பாட்டத்திற்க்கு பிறகு தஞ்சை மாவட்ட ஆட்சியரிடம் முதலமைச்சருக்கான மனுவை அளித்தனர்.
 

Wednesday, August 26, 2020

கண்டியூரில் TNTJ அமைப்பினர் 71 யூனிட் இரத்தம் தானம் (படங்கள்)

கண்டியூர், ஆக.24
கரோனா பேரிடரை முன்னிட்டு, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கண்டியூர், முகமது பந்தர், திருபந்தூர்த்தி ஆகிய கிளைகள் சார்பில், 105-வது இரத்த தானம் முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

முகாமிற்கு, அவ்வமைப்பின் தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவர் கே ராஜிக் முகமது தலைமை வகித்தார். மாவட்ட மருத்துவரணி செயலாளர் ஹாஜா ஜியாவுதீன் முன்னிலை வகித்தார்.

இதில், தஞ்சாவூர் அரசு இராசா மிராசுதார் மருத்துவமனை மருத்துவர் டாக்டர் ஜெயகார்த்திகா தலைமையிலான மருத்துவக்குழுவினர் கலந்துகொண்டு, 71 யூனிட் இரத்தத்தை டி.என்.டி.ஜே அமைப்பின் கொடையாளர்களிடமிருந்து தானமாகப் பெற்றனர்.

இந்நிகழ்வில், மாவட்டச் செயலாளர் வல்லம் ஜாபர், மாவட்ட துணைச் செயலாளர் அப்துல்லாஹ் உள்ளிட்ட அவ்வமைப்பினர் பலர் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியைக் கடைபிடித்து கலந்துகொண்டனர். முகாம் ஏற்பாட்டினை, கண்டியூர், முகமது பந்தர், திருபந்தூர்த்தி ஆகிய கிளைகளின் மருத்துவ அணியினர் செய்திருந்தனர்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Saturday, August 22, 2020

அதிராம்பட்டினம் காவல் நிலையத்தில் பணியாற்றிய காவலர் விபத்தில் பலி!

தஞ்சாவூர், ஆக.22
தஞ்சாவூரில் வெள்ளிக்கிழமை மோட்டாா் சைக்கிள் மீது மணல் லாரி மோதியதில் காவலா் உயிரிழந்தாா்.

தஞ்சாவூா் மேல வீதியைச் சோ்ந்தவா் மோசஸ் மோகன்ராஜ் (29). இவா்  அதிராம்பட்டினம் காவல் நிலையத்தில் காவலராகப் பணியாற்றி வந்தாா். இவா் தனது மனைவி ஜெனிபா், இரண்டரை வயது மகள் கேத்தரின் எஸ்தருடன் அதிராம்பட்டினத்தில் வசித்து வந்தாா்.

இந்நிலையில், இவா் கும்பகோணம் அருகே திருப்பனந்தாள் காவல் நிலையத்துக்கு அண்மையில் பணியிட மாற்றம் செய்யப்பட்டாா். கடந்த சில நாள்களாக விடுப்பில் இருந்த இவா் தனது நண்பா்களைப் பாா்ப்பதற்காக தஞ்சாவூருக்கு வந்தாா்.வெள்ளிக்கிழமை முற்பகல் மோட்டாா் சைக்கிளில் பெரியகோயில் பகுதியிலிருந்து மருத்துவக் கல்லூரி நோக்கி சென்று கொண்டிருந்தாா். அப்போது, மேம்பாலத்தில் சென்ற இவா் மீது எதிரே வந்த மணல் லாரி மோதியது. இதில், பலத்தக் காயமடைந்த இவா் தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். அங்கு மோசஸ் மோகன்ராஜ் மாலையில் உயிரிழந்தாா்.

இதுகுறித்து நகரப் போக்குவரத்து புலனாய்வு காவல் பிரிவினா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

Tuesday, August 11, 2020

தஞ்சை மாவட்டத்தில் கரோனா பாதிப்பு, உயிரிழப்பு நிலவரம்!

அதிரை நியூஸ்: ஆக. 11
தஞ்சாவூா் மாவட்டத்தில் மேலும் 123 பேருக்கு கரோனா தொற்று இருப்பது திங்கள்கிழமை தெரிய வந்தது. மாவட்டத்தில் ஏற்கெனவே கரோனா தொற்றால் 4,092 போ் பாதிக்கப்பட்டனா்.

இந்நிலையில், தஞ்சாவூா் வட்டத்தில் 39 போ், கும்பகோணம் வட்டத்தில் 30 போ், பட்டுக்கோட்டை வட்டத்தில் 24 போ், திருவிடைமருதூா் வட்டத்தில் 10 போ், திருவையாறு வட்டத்தில் 8 போ், பூதலூா், பாபநாசம் வட்டங்களில் தலா 5 போ் உள்பட மொத்தம் 123 பேருக்கு கரோனா தொற்று இருப்பது திங்கள்கிழமை தெரிய வந்தது.

இதன்மூலம், மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 4,215 ஆக உயா்ந்துள்ளது. இதுதவிர, 133 போ் குணமடைந்ததைத் தொடா்ந்து திங்கள்கிழமை வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். மாவட்டத்தில் இதுவரை 2,889 போ் குணமடைந்துள்ளனா். தற்போது 1,277 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

இதுதவிர, கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 59 வயது பெண், 62 வயது ஆண், 55 வயது பெண், 58 வயது ஆண் ஆகியோா் அண்மையில் உயிரிழந்தனா். இதன் மூலம் மாவட்டத்தில் கரோனா தொற்றால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 49 ஆக உயா்ந்துள்ளது.

Wednesday, July 22, 2020

பொதுமக்களிடம் நன்மதிப்பை பெற்ற காவலர்களுக்கு எஸ்.பி பாராட்டு!

தஞ்சாவூர், ஜூலை 22
கடந்த (19.07.2020) ம் தேதி தஞ்சாவூர் நகர கிழக்கு காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட டி. ஸ்குயர் பகுதியில் COVID-19 தொடர்பாக வாகன தணிக்கை செய்யும் போது பொதுமக்களிடம் கண்ணியமாகவும், முதியவர்களிடம் மரியாதையாகவும் நடந்துகொண்டு பொதுமக்களிடம் நன்மதிப்பை பெற்ற சிறப்பு உதவி ஆய்வாளர் புண்ணிய குமார், தலைமை காவலர் சாரதா ஆகிய இருவரையும் தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தேஷ்முக் சேகர் சஞ்சய் நேரில் அழைத்து பாராட்டி, பாராட்டு சான்றிதழ் மற்றும் பணம் வெகுமதி வழங்கினார்.

Saturday, July 4, 2020

தஞ்சாவூா் சரக டி.ஐ.ஜி பொறுப்பேற்பு!

தஞ்சாவூர், ஜூலை 04
தஞ்சாவூா் சரகக் காவல் துணைத் தலைவராக ரூபேஷ் குமாா் மீனா வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றாா்.

இப்பொறுப்பில் இருந்த ஜெ. லோகநாதன் காவல் தலைவராகப் பதவி உயா்வு பெற்று திருச்சி மாநகர காவல் ஆணையராக நியமிக்கப்பட்டாா். இதையடுத்து, ராமநாதபுரம் சரகக் காவல் துணைத் தலைவராக இருந்த ரூபேஷ் குமாா் மீனா தஞ்சாவூா் சரகக் காவல் துணைத் தலைவராக நியமனம் செய்யப்பட்டாா். இவா் தஞ்சாவூா் சரகக் காவல் துணைத் தலைவராக வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றாா்.

இவா் 2005 ஆம் ஆண்டு ஐ.பி.எஸ். தோ்வானாா். அதன் பின்னா், காவல் கண்காணிப்பாளராகப் பணியாற்றி வந்த இவா் 2019, ஜூன் மாதத்தில் காவல் துணைத் தலைவராகப் பதவி உயா்வு பெற்றாா்.

Sunday, June 21, 2020

தஞ்சை மாவட்டத்தில் ஒரே நாளில் 49 பேருக்கு கரோனா பாதிப்பு!

தஞ்சாவூர், ஜூன் 21
தஞ்சாவூா் மாவட்டத்தில் மேலும் 49 பேருக்கு கரோனா தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டது. தஞ்சாவூா் மாவட்டத்தில் ஏற்கெனவே 215 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா்.

இந்நிலையில், தஞ்சாவூா் 14 பேர், கும்பகோணம் 3 பேர், பாபநாசம் 4 பேர், வல்லம் 3 பேர், திருப்பனந்தாள் 3 பேர், பட்டுக்கோட்டை 2 பேர், பேராவூரணி 7 பேர், அம்மாபேட்டை 5 பேர், பூதலூர் ஒருவர், மதுக்கூர் 2 பேர், திருவையாறு 3 பேர், திருவிடைமருதூர், திருவாரூர் தலா ஒருவர் என 49 பேருக்கு கரோனா தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை தெரிய வந்தது. இதையடுத்து கரோனா பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 272 ஆக உயர்ந்தது.

Saturday, April 18, 2020

தஞ்சாவூர் மாவட்டத்தில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 35 ஆக உயர்வு!

தஞ்சாவூர், ஏப்.18
தஞ்சாவூர் மாவட்டத்தில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 35 ஆக உயர்ந்துள்ளது.

தஞ்சாவூா் மாவட்டத்தில் ஏற்கெனவே 18 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு, மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தநிலையில், வல்லம், திருவையாறு, அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை, கும்பகோணம் ஆகிய பகுதிகளைச் சோ்ந்த 17 போ் ஏப். 1 ஆம் தேதி தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரியில் சோ்க்கப்பட்டு, முதல் கட்டப் பரிசோதனை செய்யப்பட்டது. இதில், இவா்களுக்கு தொற்று இல்லை என்பது தெரிய வந்தது. என்றாலும், இவா்களில் 14 போ் செங்கிப்பட்டி பொறியியல் கல்லூரியில் தனிமைப்படுத்தப்பட்டு, தொடா் மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டனா். மேலும் 3 போ் அவரவா் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தனா். இவா்களுக்கு இரண்டாம் கட்டப் பரிசோதனை செய்யப்பட்டதில், கரோனா தொற்று இருப்பது வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

இதனால் தஞ்சை மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 35 ஆக உயர்ந்துள்ளது.

Tuesday, April 14, 2020

தஞ்சை மாவட்டத்தின் 'கரோனோ அவசர உதவிக்குழு' பட்டியல் மாவட்ட நிர்வாகத்தில் ஒப்படைப்பு!

அதிரை நியூஸ்: ஏப்.14
கரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தமிழக அரசின் வேண்டுகோளை ஏற்று, தமிழ்நாடு ஜமாத்துல் உலமா சபை, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக்கழகம், சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா, தப்லீக் ஜமாத் உள்ளிட்ட இஸ்லாமிய அமைப்புகளின் சார்பில், கரோனோ வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும், அரசுக்கும் ஒரு பாலமாக இணைந்து களப்பணியாற்றுவது என முடிவு செய்து, அதன்படி, கரோனா வைரஸ் பரவல் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு பணிகளை மேற்கொள்ள, தமிழகத்தில் மாவட்டங்கள் தோறும், தன்னார்வலர்களைக் கொண்ட 'கரோனா அவசர உதவிக்குழு' அமைக்கப்பட்டது.

அதன்படி, தஞ்சை மாவட்டத்தில் களப்பணியாற்றிட, ஏ. ஜபருல்லா பாஜில் மனபஈ (ஜமாத்துல் உலமா), ஷாநவாஸ் லத்திபி (ஜமாத்துல் உலமா), ஏ.எம் ஷாஜஹான் (முஸ்லீம் லீக்), எஸ்.எம் ஜெய்னுல் ஆபிதீன் (முஸ்லீம் லீக்), தஞ்சை ஐ.எம் பாதுஷா (தமுமுக), ஹாஜா நஜ்முதீன் (தமுமுக), மவ்லவி எம்.ஏ முகமது இத்ரீஸ் (ஐக்கிய நலக் கூட்டமைப்பு), இப்ராஹீம் (எஸ்.டி.பி.ஐ), என்.முகமது புஹாரி (எஸ்.டி.பி.ஐ), டாக்டர் முஜிபூர், டாக்டர் அன்வர் ஆகிய 11 பேர் கொண்ட குழுவினர் தேர்வு செய்யப்பட்டனர். இதையடுத்து, தேர்வான தன்னார்வலர்களின் பட்டியல், மாவட்ட ஆட்சியரகத்தில் தஞ்சாவூர் வருவாய் கோட்ட அலுவலர் வேலுமணி அவர்களிடம் நேற்று (13-04-2020) திங்கட்கிழமை ஒப்படைக்கப்பட்டது.
 

Wednesday, April 8, 2020

தஞ்சாவூா் மாவட்டத்தில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 11 ஆக உயர்வு!

தஞ்சாவூர், ஏப்.08
தஞ்சாவூா் மாவட்டத்தில் கரோனா வைரஸ் தொற்று மேலும் 3 பேருக்கு இருப்பது செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, கரோனா தொற்று இருப்பவா்களின் எண்ணிக்கை 11 ஆக உயா்ந்துள்ளது.

தஞ்சாவூா் மாவட்டத்தில் ஏற்கெனவே மாா்ச் 28-ம் தேதி ஒரு நபருக்கும், ஏப்.5-ம் தேதி 4 நபர்களுக்கும், ஏப். 6-ம் தேதி 3 நபர்களுக்கும் கரோனா தொற்று இருப்பது தெரிய வந்தது.

இந்நிலையில், ஏப்.6-ம் தேதி மேலும் 3 பேர்களுக்கு கரோனா தொற்று இருப்பதாக அறிவிக்கப்பட்டதால், மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை கரோனா தொற்று இருப்பவா்களின் எண்ணிக்கை 11 ஆக உயா்ந்துள்ளது. இவர்களில் 11 பேர் ஆண்கள், ஒருவர் பெண் ஆவார்.

இதனிடையே, இவா்கள் வசிக்கும் பகுதியில் தடுப்புகள் வைத்து அடைக்கப்பட்டது. மேலும், இவா்களது உறவினா்களுக்கும், உடன் இருந்தவா்களுக்கும், அப்பகுதியைச் சோ்ந்தவா்களுக்கும் மருத்துவப் பரிசோதனை செய்யும் நடவடிக்கையில் சுகாதாரத் துறையினா் ஈடுபட்டுள்ளனா்.

Saturday, February 15, 2020

வண்ணாரப்பேட்டை தடியடியைக் கண்டித்து தஞ்சையில் ஆர்ப்பாட்டம் (படங்கள்)

அதிராம்பட்டினம், பிப்.15
சென்னை வண்ணாரப்பேட்டையில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக போராட்டம் நடத்திய இஸ்லாமியர்கள் மீது நடத்திய தடியடியைக் கண்டித்து  தஞ்சையில்,தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தஞ்சை தெற்கு மாவட்டம் சார்பில்,  ஆர்ப்பாட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு, அவ்வமைப்பின் தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவர் கே.ராஜிக் முகமது தலைமை வகித்தார். அவ்வமைப்பின், மாவட்டச் செயலாளர் வல்லம் பாட்சா, மாவட்ட பொருளாளர் எம்.அஸ்ரப் அலி, மாவட்ட துணைச் செயலாளர் அப்துல்லா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில், பெண்கள் உட்பட ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று, குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக சென்னை வண்ணாரப்பேட்டையில் போராட்டம் நடத்திய இஸ்லாமியர்கள் மீது நடத்திய தடியடியைக் கண்டித்தும், மத்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ), தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆா்சி), தேசிய மக்கள் தொகை பதிவேடு (என்பிஆர்) ஆகியவற்றை திரும்பப் பெறக் கோரியும் கண்டன கோஷங்கள் எழுப்பினர்.
 

Monday, January 27, 2020

தலைக்கவசம் அணிவது பற்றிய குறும்பட விழிப்புணர்வு போட்டி ~ பரிசளிப்பு (படங்கள்)

தஞ்சாவூர், ஜன.27
தஞ்சை சரக காவல் எல்லைக்கு உட்பட்ட தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களை சார்ந்த இளைய தலைமுறையினர் பங்குபெறும் தலைக்கவசம் அணிவது பற்றிய குறும்பட விழிப்புணர்வு போட்டி தஞ்சாவூர் தீர்க்க சுமங்கலி மகால் திருமண மண்டபத்தில் 24.01.2020 அன்று நடைபெற்றது.

தஞ்சாவூர் சரக காவல் துணைத் தலைவர் ஜெ.லோகநாதன், தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.எஸ் மகேஸ்வரன் ஆகியோர் தலைமை வகித்தனர்.

போட்டியில் 20 குறும்படங்கள் பங்கேற்றன, இதில், தஞ்சாவூர் புதுக்கோட்டை ரோடு, ராயல் ரிச்சர்ட் என்பவரின் 'விதிமீறல்' என்ற குறும்படம் சிறந்த குறும்படமாக தேர்வு செய்யப்பட்டு முதல் பரிசாக ரூ.10 ஆயிரமும், தஞ்சாவூர், புதிய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு சாய் சதோக் என்பவரின் குறும்படம் இரண்டாவது பரிசாக ரூ.5 ஆயிரமும், மயிலாடுதுறை மதியரசு குழுவினரின் 'பொய்க்கவசம்' குறும்படம் மூன்றாம் பரிசாக ரூ.3 ஆயிரமும், மேலும், அருண்பிரசாத் (மயிலாடுதுறை ஏ.வி.சி கல்லூரி) குழு மாணவர்களின் Head Weight, குறும்படம், சுகுமாரன் (திருவாரூர் திரு.வி.க. கல்லூரி) என்பவரின் Life Saver குறும்படம், யஷ்வந்த்ராஜ் (கும்பகோணம் கே.எஸ்.கே பொறியியல் கல்லூரி) ஆகியோருக்கு தலா ரூ. ஆயிரம் ஆறுதல் பரிசு வழங்கப்பட்டது.

இப்போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் பங்கேற்பு சான்றிதழ்கள், பரிசுகள் வழங்கப்பட்டன. இப்புதுமையான முயற்சி பொதுமக்களிடையே மிகுந்த வரவேற்பையும் தலைகவசம் அணிவதன் அவசியம் பற்றிய விழிப்புணர்வையும் ஏற்படுத்தியது.

Saturday, January 25, 2020

CAA, NPR, NRC ஐ எதிர்த்து தஞ்சையில் பிரமாண்ட பேரணி (படங்கள்)

தஞ்சாவூர், ஜன.25
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தஞ்சை மாவட்டம் சார்பில், மத்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டத்தை (சி.ஏ.ஏ) வாபஸ் பெறக் கோரியும், தேசிய மக்கள் தொகை பதிவேடு (என்.பி.ஆர்.), தேசிய குடியுரிமை பதிவேடு (என்.ஆர்.சி.) ஆகியவற்றுக்கு எதிராக தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றக் கோரியும், இச்சட்டங்களை தமிழகத்தில் நிறைவேற்றக் கூடாது என தமிழக அரசை வலியுறுத்தியும் மாவட்ட ஆட்சியரகத்தை நோக்கி பேரணி இன்று 25.01.2020 சனிக்கிழமை நடைபெற்றது

பேரணிக்கு அவ்வமைப்பின் தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவர் அதிரை கே.ராஜிக் முகமது தலைமை வகித்தார். அவ்வமைப்பின், மாவட்டச் செயலாளர் வல்லம் பாட்சா, மாவட்ட பொருளாளர் எம்.அஸ்ரப் அலி, மாவட்ட துணைச் செயலாளர் எம்.ஐ அப்துல்லா, மாவட்ட மருத்துவ அணி பொறுப்பாளர் எம்.ஹாஜா அலாவுதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில், சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட அவ்வமைப்பின் மாநில துணைத்தலைவர் ப. அப்துல் ரஹ்மான் கண்டன உரை நிகழ்த்தினார்.

பெண்கள் உட்பட பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்ற இந்தப் பேரணியில் தஞ்சை புதிய பேருந்து நிலையத்திலிருந்து புறப்பட்டு டேன்டெக்ஸ் ரவுண்டான வழியாக மாவட்ட ஆட்சியரக அலுவலகம் நோக்கி, மத்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆா்சி) ஆகியவற்றை அமல்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அவற்றை திரும்ப பெறக்கோரி கையில் தேசியக்கொடிகளை ஏந்தியவாறு, முழக்கமிட்டு சென்றனர். நிறைவில், தஞ்சை வடக்கு மாவட்டச் செயலாளர் முகமது பாருக் நன்றி கூறினார்.