.

Pages

Showing posts with label தம்பிக்கோட்டை செய்திகள். Show all posts
Showing posts with label தம்பிக்கோட்டை செய்திகள். Show all posts

Friday, June 29, 2018

ரயில்வே நிர்வாகத்தை கண்டித்து தம்பிக்கோட்டையில் 3 ந் தேதி சாலை மறியல்!

அதிராம்பட்டினம், ஜூன் 29
தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்ட கடற்கரை பகுதி ரயில் நுகர்வோர் குழு நிறுவனர் தம்பிக்கோட்டை ராஜாராமலிங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பது;

அகல ரயில் பாதை அமைக்கும் பணிக்காக நிறுத்தப்பட்ட திருவாரூர் ~ காரைக்குடி மற்றும் திருத்துறைப்பூண்டி ~ அகஸ்தியம்பள்ளிக்கு இடையில் ரயில் போக்குவரத்து இல்லாததால், தஞ்சை, திருவாரூர், நாகை ஆகிய 3 மாவட்ட கடற்கரைப் பகுதி மக்கள் பெரும் அவதிப்படுகின்றனர். அகல ரயில் பாதை அமைக்கும் பணிக்காக தம்பிக்கோட்டை வருவாய் சரக ரயில் பாதையிலிருந்து தம்பிக்கோட்டை, சுந்தரம், மறவாக்காடு ஆகிய 3 ரயில் நிலையங்களை அகற்றுவதுடன், 7 ரயில்வே கேட்டுகளை அகற்ற இருப்பதாக தெரிகிறது.

தஞ்சாவூர் ~ திருவாரூர் மாவட்டங்களை சேர்ந்த 63 கிராம மக்கள் ரயில் போக்குவரத்துக்கு பயன்படுத்தி வந்த முத்துப்பேட்டை ரயில் நிலையத்தை மக்கள் தொகை அடிப்படையில் தரம் உயர்த்தாமல் தகுதி குறைந்த தில்லைவிளாகம் ரயில் நிலையத்தை தரம் உயர்த்தி 63 கிராம மக்களை  அலைகழிப்பதை ஏற்க முடியாது.

மேற்கண்ட கோரிக்கையை ரயில்வே நிர்வாகத்திற்கும், மத்திய அரசுக்கும் அனுப்பியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, ரயில்வே நிர்வாகத்தை கண்டித்து வருகிற 3 ந் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணியளவில் தம்பிக்கோட்டை முக்கூட்டுச்சாலையில் மறியல் போராட்டம் நடைபெற உள்ளது. போராட்டத்திற்கு முன்னாள் எம்.எல்.ஏ என்.ஆர் ரெங்கராஜன் தலைமை தாங்குகிறார். இதில், 3 மாவட்டங்களை சேர்ந்த அனைத்து கட்சியினர், கிராம மக்கள் கலந்துகொள்கின்றனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Thursday, March 15, 2018

அதிராம்பட்டினம் அருகே காரில் வந்து நகைப்பறிப்பு !

அதிராம்பட்டினம், மார்ச் 15
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் அருகே தம்பிக்கோட்டை வடகாடு கிராமத்தைச் சேர்ந்த சுப்பிரமணியத் தேவர் மனைவி வீரமணி அம்மாள் (62). இவர் செவ்வாய்க்கிழமை மாலை தனது வீட்டுக்கு அருகிலுள்ள தன்னுடைய தங்கை வீட்டுக்கு நடந்து சென்றுள்ளார்.

அப்போது அவ்வழியே வந்த சிமென்ட் நிற காரில் 30 வயது மதிக்கத்தக்க 2 இளைஞர்கள் இருந்துள்ளனர். வீரமணி அம்மாள் அருகே வந்ததும் கார் நிறுத்தப்பட்டதாம். அப்போது காரில் அமர்ந்திருந்த நபர் காரை விட்டு கீழே இறங்கிச் சென்று சாலையில் நடந்து சென்ற வீரமணி அம்மாளை பலமாக தாக்கியுள்ளார்.  இதில் நிலைகுலைந்து வீரமணி அம்மாள் கீழே  விழுந்தவுடன் அவர் கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் சங்கிலியை அந்த நபர் பறித்துக் கொண்டு தயாராக நின்ற காரில் ஏறி தப்பினராம். தகவலறிந்த போலீஸார் தீவிர வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர். புகாரின்பேரில் அதிராம்பட்டினம் காவல் ஆய்வாளர் தியாகராஜன் வழக்குப் பதிந்து விசாரிக்கிறார்

Sunday, June 18, 2017

அதிரை அட்ஜயா பல் மருத்துவமனை சார்பில் இலவச பல் மருத்துவ முகாம் ( படங்கள் )

அதிராம்பட்டினம், ஜூன் 18
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் அட்ஜயா பல் மருத்துவமனை சார்பாக இலவச பல் மருத்துவ பரிசோதனை மற்றும் ஆலோசனை முகாம் தம்பிக்கோட்டை வடகாடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

முகாமை பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதி முன்னாள் உறுப்பினர் என்.ஆர் ரெங்கராஜன் தொடங்கி வைத்தார். அட்ஜயா பல் மருத்துவமனை பல் மருத்துவர் பா.பாரதி, பல் மருத்துவர் ஏ.நிரஞ்சனா தேவி ஆகியோர் கலந்துகொண்டு பல் மருத்துவ பரிசோதனை செய்தனர். இதில் 250 மேற்பட்ட பொதுமக்களுக்கு இலவசமாக பல் சம்பந்தபட்ட பரிசோதனை மற்றும் ஆலோசனைகள் வழங்கப்பட்டன. இதில் 50 பேருக்கு அதிராம்பட்டினம் அட்ஜயா பல் மருத்துவமனையில் மேற்கோள் சிகிச்சை அளிக்க பரிந்துரைக்கப்பட்டனர். முடிவில் பட்டுக்கோட்டை ஆதிராஜாராம் நன்றி கூறினார்.
 
 
 
 

Friday, March 10, 2017

தம்பிக்கோட்டையில் மீனவர்கள் ஆர்ப்பாட்டம் !

அதிராம்பட்டினம், மார்ச்-10
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் அருகே உள்ள தம்பிக்கோட்டை முக்கூட்டுச் சாலையில் கடல் மீனவர்கள் கூட்டுறவு சங்கத்தினர் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

அண்மையில் இந்திய எல்லைக்குள் மீன்பிடித்த தங்கச்சிமடம் மீனவர் பிரிட்ஜோவை இலங்கை கடற்படையினர் சுட்டுக் கொன்றதைக் கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்துக்கு கடல் மீனவர்கள் கூட்டுறவு சங்கத் தலைவர் முனியாண்டி தலைமை வகித்தார். தஞ்சை தெற்கு மாவட்ட தமாகா தலைவரும், முன்னாள் எம்எல்ஏவுமான என்.ஆர்.ரங்கராஜன் முன்னிலை வகித்தார். இதில் 50 பெண்கள் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்திய இலங்கை கடற்படையினரை கைது செய்ய மத்திய அரசை வலியுறுத்தி கோஷமிட்டனர்.

Friday, September 2, 2016

அதிராம்பட்டினம் அருகே இளம்பெண் தீக்குளித்து சாவு: கோட்டாட்சியர் விசாரணை !

அதிராம்பட்டினம் அருகே திருமணமாகி மூன்று மாதங்களில் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டது குறித்து திருச்சி வருவாய்க் கோட்டாட்சியர் விசாரணை நடத்தி வருகின்றார்.

அதிராம்பட்டினம் அருகே தம்பிக்கோட்டை வடகாடு கிராமத்தைச் சேர்ந்தவர் மகேந்திரன் (25). துபையில் பணியாற்றி வருகிறார். இவருக்கும், திருவாரூர் மாவட்டம், பெருகவாழ்ந்தான் அக்ரஹாரத்தைச் சேர்ந்த இளநாதன் மகள் அகிலாவுக்கும் (19) கடந்த 3 மாதங்களுக்கு முன் திருமணம் நடந்தது. திருமணம் முடிந்த 1 மாதத்தில் மகேந்திரன் துபைக்கு சென்று விட்டார். அதன்பின்னர் தம்பிக்கோட்டை வடகாட்டில் உள்ள மாமியார் வீட்டில் அகிலா வசித்து வந்தார்.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை (ஆக. 30) பிற்பகல் வீட்டில் இருந்த அகிலா தனது உடலில் மண்ணெண்ணையை ஊற்றி தீயிட்டுக் கொண்டாராம். இதில் பலத்த காயமடைந்த அவர் திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு புதன்கிழமை உயிரிழந்தார். இதுகுறித்து அகிலாவின் தாய் வாசுகி அளித்தப் புகாரின் பேரில் அதிராம்பட்டினம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர். திருமணமான 3 மாதத்தில் அகிலா இறந்துள்ளதால் திருச்சி வருவாய்க் கோட்டாட்சியர் விசாரணை நடத்தி வருகிறார்.

Thursday, June 4, 2015

அதிரை அருகே தூக்கில் தொங்கிய வாலிபர் ! கொலையா ? தற்கொலையா ? போலீசார் விசாரணை !

அதிரை அடுத்துள்ள தம்பிக்கோட்டை கீழக்காடு கிராமத்தில் வாலிபர் ஒருவர் சுடுகாட்டில் தூக்கில் தொங்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அதிரை ஏரிப்புறக்கரை கிராமத்தைச் சேர்ந்தவர் பெரியசாமி மகன் பிராபாகரன். இவருக்கும் முத்துப்பேட்டை அடுத்த தம்பிக்கோட்டை கீழக்காடு மலையாகணபதி நகர் பகுதியைச் சேர்ந்த கணபதி மகள் மாரியாயி என்பவருக்கும் கடந்த ஏழு வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இதில் 6 வயதில் சுதாகர், சுரேஷ் ஆகிய இரட்டை குழந்தைகள் உள்ளனர். அன்றைய முதல் பிரபாகரன் மாமனார் வீட்டிலேயே தங்கி வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டுக்கு திரும்பாத பிராபாகரன், நேற்று காலை அதே பகுதியில் உள்ள சுடுக்காட்டில் தூக்கில் தொங்கினார். இதனைக்கண்ட அப்பகுதி மக்கள் முத்துப்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு முத்துப்பேட்டை டி.எஸ்.பி.அருண், சப்-இன்ஸ்பெக்டர் நதியா அ10கியோர் சென்று தூக்கில் தொங்கிய பிரபாகரன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் பிராபகரன் கடந்த சில தினங்களுக்கு முன்பு மனைவியுடன் தகராறு ஏற்பட்டுள்ளது. அதனால் மனம் உடைந்து தற்கொலை செய்துக் கொண்டாரா ? அல்லது யாரேனும் கொலை செய்து தூக்கில் தொங்கவிட்டார்களா ? என்ற கோணத்தில் முத்துப்பேட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இச்சம்பவம் பரபரப்பை ஏற்பட்டுத்தி உள்ளது.

செய்தி மற்றும் படம்:
நிருபர் மொய்தீன் பிச்சை
முத்துப்பேட்டை

Friday, December 12, 2014

அதிரை அருகே அனுமதி இல்லாமல் மணல் அள்ளிய டிராக்டர்கள் பறிமுதல் ! இருவர் கைது !!

அதிரை அடுத்த தம்பிக்கோட்டை கீழக்காடு பகுதியில் அனுமதி இல்லாமல் அப்பகுதி தனியார் தோப்புகளிலும், பாமினி ஆற்றிலும் மணல் எடுத்து வருவதாக முத்துப்பேட்டை போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதனையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் சாமிநாதன் தலைமையில் போலீசார் கீழக்காடு பகுதியில் நேற்று நள்ளிரவு அதிரடி சோதனை நடத்தினர். அப்பொழுது பாமினி ஆற்றிலிருந்து இரண்டு டிராக்டர்கள் அனுமதி இல்லாமல் மணல் எடுத்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடன் போலீசார் மணல் கடத்தி வந்த இரண்டு டிராக்டர்களையும் கைப்பற்றி அதன் டிரைவர்கள் கீழநம்மங்குறிச்சியை சேர்ந்த பாலு, செருகளத்தூரை சேர்ந்த தண்டயுதபாணி ஆகியோரை கைது செய்தனர்.

செய்தி மற்றும் படம்:
'நிருபர்' மொய்தீன் பிச்சை
முத்துப்பேட்டை

Thursday, November 6, 2014

அதிரை அருகே மீனவர்கள் ஆர்ப்பாட்டம் !

ராமேஸ்வரம், தங்கச்சிமடத்தைச் சேர்ந்த 5 மீனவர்கள் கடந்த 2011ம் ஆண்டு, இலங்கை கடற்பகுதியில் மீன் பிடித்தபோது, அந்நாட்டு கடற்படையிடம் பிடிபட்டனர். அப்போது கைது செய்யப்பட்ட அவர்களிடம் போதைப்பொருள் இருந்ததாக கூறி வழக்கு தொடரப்பட்டது. விசாரணை முடிவில் அவர்களுக்கு சமீபத்தில் துாக்கு தண்டனை விதிக்கப்பட்டது. அவர்களை விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்படுவதை கண்டித்தும் தம்பிக்கோட்டை வடகாடு - மரவக்காடு பகுதி மீனவர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்திற்கு மீனவர் சங்க தலைவர் முனியாண்டி தலைமை வகித்தார். மீனவ சங்கத்தின் பொறுப்பாளர்கள் சேகர், ராமையன், ஞானசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக அதிமுக கட்சியின் மாவட்ட எம்ஜிஆர் மன்ற இளைஞரணி செயலாளர் ஜெயப்பிரகாஷ் நாராயணன் கலந்துகொண்டார்.

ஆர்ப்பாட்டத்தில் இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பட்டது. இதில் முன்னூறுக்கும் மேற்பட்ட மீனவர்கள் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தை முன்னிட்டு மீனவர்கள் யாரும் இன்று கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.

களத்திலிருந்து நூவன்னா