.

Pages

Showing posts with label பிலால் நகர். Show all posts
Showing posts with label பிலால் நகர். Show all posts

Monday, September 14, 2020

பிலால் நகரின் அருமை பெருமைகள்: ஒரு வரலாற்று பார்வை!

பிலால் நகர் மஸ்ஜித்தின் எழில்மிகு தோற்றம்

அதிரை நியூஸ்: செப்.14
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம், ஏரிப்புறக்கரையில் அமைந்துள்ள பிலால் நகர் புதிதாக உருவாகியதோர் இளமையான, வளரும் குடியிருப்பு பகுதியாகும். 

இரண்டு வெவ்வேறு நாடுகளில் குடியுரிமை பெற்றவர்களை இரட்டை குடியுரிமையாளர்கள் என்போம் அல்லவா அதேபோல் பிலால் நகர் அரசு நிர்வாக ரீதியாக ஏரிப்புறக்கரை ஊராட்சி பகுதிக்குள்ளும், இதர தேவைகளும் கலாச்சார தொடர்புகளும் அதிராம்பட்டினம் பகுதிக்குள்ளும் அமைந்துள்ளதால் பிலால் நகர்வாசிகளும் ஒரு வகையில் "மினி இரட்டை குடியுரிமை" பெற்றவர் போன்ற சிறப்புக்குரியவர்களே!

பிலால் நகர் எனும் பெயர் சூட்டப்படுமுன் இந்த பகுதியின் பெயர் நண்டுவெட்டி வெப்பல் சுருக்கமாக வெப்பல் என அழைப்பார்கள். 

ஹஜ்ரத் பிலால் ரலி. நகர் என பெயர் சூட்டியது, இங்கு ஆரம்பத்தில் குடியேறியவர்களில் ஒருவரும், இங்கு பால் பண்ணை நடத்தியவருமான மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் அம்பு அஹமது ஜலாலுதீன் அவர்கள் ஆவர். இவர்களுக்கு அன்றைய இளைஞர்கள் துணை நின்றனர். மேலும் தனிநபர் ஒருவரின் பெயரை சூட்டும் முயற்சியையும் முறியடித்தனர்.

பிலால் நகர் என பெயரிட்ட போது அன்றைய ஆரம்ப குடியிருப்புகளாக இருந்த அம்பு அஹமது ஜலாலுதீன் அவர்கள் தான் வசித்த பகுதிக்கு 'வள்ளல் காதிர் முகைதீன் லேன் - 1' என்றும், இன்றைய ஜமாத் தலைவர் முகைதீன் காக்கா, ஜமாத் பொருளாளர் சேக்கனா நிஜாம் ஆகியோர் வசிக்கும் பகுதிக்கு 'வள்ளல் காதிர் முகைதீன் லேன் - 2' எனவும் துணை பெயர் சூட்டி அதிரையின் கல்வித்தந்தை காதிர் முகைதீன் அப்பா அவர்களை நன்றியுடன் நினைவுகூர்ந்தார். எனினும் இப்பெயர்கள் கால ஓட்டத்தில் நிலைபெறாமல் போயிற்று.

குடியேற்றங்கள் பெருகி வந்த நிலையில் தேவையை உணர்ந்து இடுப்புக்கட்டி வகையறாவை சேர்ந்த மர்ஹூம் முஹமது அபூபக்கர் தலைமையில், எம்.பீர் முகமது, சேக்தாவூது உள்ளிட்ட அப்பகுதி குடியிருப்பு இளைஞர்கள் பலர் அயராது பாடுபட்டு ஓலைக்குடிசையால் அமைந்த அல்லாஹ்வின் மஸ்ஜித் ஒன்றை கட்டியெழுப்பினர். மஸ்ஜித் உருவான அன்றைய வருடமே புனிதமிகு ரமலான் மாதத்தில் தான் உருவாக்கிய பள்ளியிலேயே மர்ஹூம் முஹமது அபூபக்கர் உயிர் நீத்தார்கள், அல்லாஹ் அன்னாரின் நல்லமல்களை ஏற்று அவர்களின் பிழை பொருத்து ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸிற்குரிய நல்லடியாராக உயர்த்துவானாக.

பின்னாளில் இக்குடிசை பள்ளிக்கு மாற்றாக அன்னாரின் மருமகனாரும் முத்தவல்லியுமான அஹமது கபீர் அவர்களின் தலைமையின் கீழ் அண்ணாவியார் குடும்பத்தை சேர்ந்த ஜாஃபர் சாதிக், தமீம் அன்சாரி சகோதரர்கள், சிராஜுதீன், சகாபுதீன் உள்ளிட்ட பலரின் ஒத்துழைப்பின் கீழ் கட்டிட பள்ளியாக உருவெடுத்தது அல்ஹம்துலில்லாஹ். (பிலால் பள்ளி பற்றிய முழு விபரங்கள் விரைவில் தனிப்பதிவாக வரும் இன்ஷா அல்லாஹ்)

முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர் அவர்கள் தோராயமாக 45 ஆண்டுகளுக்கு முன் பிலால் நகரில் தான் தனது தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் (நள்ளிரவில்) உரையாற்றினார். அதிரையில் அதிமுக என்ற (புதிய) கட்சியின் பெயரில் நடைபெற்ற எம்.ஜி.ஆரின் முதல் கூட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.

சுமார் 35 ஆண்டுகளுக்கு முன் காதிர் முகைதீன் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் 3 நாட்கள் நடைபெற்ற பிரமாண்டமான தப்லீக் இஜ்திமாவின் போது பிலால் நகர் பகுதிகளும் பயன்படுத்திக் கொள்ளப்பட்டன.

இஜ்திமாவின் தண்ணீர் தேவை மற்றும் ஒழுச் செய்வதற்கு காலேஜ் பிரதான நுழைவாயில் முதல் பிலால் நகர் வரை அருகேயுள்ள வாய்க்காலின் இருபுறமும் சென்ட்ரிங் பலகைகள்

அடிக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டன. அப்போது இந்த வாய்க்காலும் அதன் தண்ணீரும் மிகவும் சுத்தமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

பெரிய ஏரி, சின்ன ஏரி ஆகியவற்றிலிருந்து வெளியாகி இந்த வாய்க்காலில் ஓடிய சுத்தமான நீரில் நமதூர் மக்கள் விரும்பி குளித்து வந்தனர் மேலும் இதன் கரை ஓரங்களில் தாழை மரங்கள் பெருமளவில் வளர்ந்திருந்தன.

தாழைமர இலைகள் கறி வாங்க பயன்படும் ஒமல்/உமல் செய்யவும், தாழம்பூ பெண்களின் தலை அலங்காரத்திற்கும், தாழங்காய் குழைகள் திருமண வீட்டு பந்தல் அலங்காரத்திற்கும் பயன்பட்டுவந்தன, இன்று தாழை மரங்கள் நமது ஊரிலேயே இல்லாமல் அழிந்துவிட்டது. தாழம்பூவிற்குள் "பூ நாகம்* என்கிற அரியவகை சிறுபாம்பு இருக்கும் என பெண்கள் சொல்ல கேள்விப்பட்டிருக்கின்றோம்.

கா.மு. கல்லூரி விடுதி மாணவர்கள் மற்றும் என்.சி.சி பயிற்சி படையினரின் தேவைக்காக ஓர் பெரிய கிணறும் பிலால் நகரில் செடியன்குளம் அஞ்சாங்கரை (ஐந்தாம் கரை)யிலிருந்து சுமார் 50 மீட்டர் தூரத்தில் தோண்டப்பட்டு பயன்பாட்டில் இருந்தது.

என்.சி.சி. மாணவர்களின் துப்பாக்கி சுடும் பயிற்சிக்காக செடியன்குளம் காடு அருகே குறிபார்த்து சுடும் ஒரு பிரமாண்டமான சுவர் கட்டப்பட்டு பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. இப்போதும் அச்சுவற்றின் சிதிலங்கள் எஞ்சியுள்ளன.

நியூ சினிமா என்கிற பெயரில் ஒரு டூரிங் டாக்கீஸ் சினிமா கொட்டகை (தியேட்டர்) ஒன்றும் கடும் எதிர்ப்புகளுக்கு இடையே ஆரம்பிக்கப்பட்டு 5 வருடங்கள் இயங்கியது. இங்கு ஒருமுறை ரசிகர்களுக்கு இடையே பெரிய கைகலப்பு, அடிதடி சம்பவமும் நிகழ்ந்து அடங்கியது.

சலவை தொழில் செய்வோர் இங்கு ஆண்டு முழுவதும் வற்றாமல் ஓடி தேங்கிய சதுப்புநில நீர்வழி பாதைகளின் ஓரங்களில் இருந்து ஓர்மண் எனப்படும் ஒருவகை பட்டு மண்ணை எடுத்து துணிகளை சுத்தம் செய்ய பயன்படுத்தி வந்தனர்.

அதிரையில் செத்துவிழும் ஆடு மாடுகள் பெரும்பாலும் இங்கு தான் அடக்கம் செய்யப்பட்டு வந்தன. அடக்கம் செய்பவர்கள் அதன் தோல்களை மேளங்கள் செய்வதற்கு உரித்து எடுத்து செல்வார்கள் எனக் கேள்வி.

பிலால் நகர் குடியேற்றப் பகுதியாகும் முன் ரயில்வே கேட்டை ஒட்டிய மூலைப் பகுதியில் நெல் விவசாயம் நடைபெற்று வந்தது. இன்னொரு பகுதி சதுப்பு நிலமாகவும் கருவங்காடாகவும் இருந்தது. இங்கு சிறார்கள் கண்ணி வைத்து கொக்கு பிடித்து விளையாடி மகிழ்ந்ததும் ஒரு காலம்.

விவசாயம் நடைபெற்று வந்த பகுதியை ஒட்டியே முஸ்லீம்கள் தானமாக வழங்கிய நிலங்களில் ஆதி திராவிட மக்கள் சிலர் வாழ்ந்து வந்தனர், அவர்களின் வழிதோன்றல்கள் இன்னும் வாழ்ந்து வருகின்றனர்.

ஆதி திராவிட சமுதாய மக்கள் விவசாயப் பணிகள் போக சலவை தொழிலிலும் ஈடுபட்டு வந்தனர், வருகின்றனர். மேலும் அதிரை மக்களையே பெரிதும் சார்ந்து வாழ்ந்தனர். இவர்கள் கைபடாத திருமண சமையலே இல்லை என்ற ஒருநிலையும் இருந்தது.

அதேபோல் செடியன்குளம் ஐந்தாம் கரையிலிருந்து பெண்கள் கரை பகுதி வரை அதன் இறக்கத்தில் அடர்த்தியான காடும் இருந்தது. இதில் விளாம் பழம், சீத்தா, அழிஞ்சி, கருவை, மஞ்சள் நோனா, அத்தி, தாழை, பனை உள்ளிட்ட ஏராளமான மரங்களும் செடி கொடிகளும், பல்லின பறவைகள், அணில் உள்ளிட்ட சிற்றுயிர்களும் சூழ்ந்து வாழ்ந்து வந்தன.

தொகுப்பு:
அதிரை அமீன் 
S. அப்துல் காதர்

Wednesday, February 26, 2020

CAA,NRC,NPR க்கு எதிராக அதிராம்பட்டினத்தில் பிரமாண்ட பேரணி (படங்கள்)

அதிராம்பட்டினம், பிப்.26
குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து, பிலால் நகர், ஹாஜா நகர், சுரைக்கா கொல்லை ஆகிய பகுதி பொதுமக்கள் சார்பில், பிரமாண்ட பேரணி, அதிராம்பட்டினத்தில் புதன்கிழமை மாலை நடைபெற்றது.

குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து, அதிராம்பட்டினம் ஜாவியா சாலையில் பிப்.19 ஆம் தேதி தொடங்கிய போராட்டம் 8-வது நாளாக புதன்கிழமையும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இதில், சமுதாய அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசியல் கட்சிகளின் நிா்வாகிகள், சமூக செயற்பாட்டாளர்கள், கல்வியாளர்கள், ஜமாத் மற்றும் கிராம பஞ்சாயத் நிர்வாகிகள் பங்கேற்று மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்துப் பேசி வருகின்றனர்.

இந்தப் போராட்டத்துக்கு ஆதரவாக, அதிராம்பட்டினம் பிலால் நகர் ஜமாத் சார்பில், பெண்கள், குழந்தைகள் உட்பட 500 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு, குடியுரிமை சட்டத்துக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகள் மற்றும் இந்திய தேசியக்கொடிகளை கையில் ஏந்தியவாறு,  குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ), தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆா்சி), தேசிய மக்கள் தொகை பதிவேடு (என்பிஆா்) ஆகியவற்றை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். தமிழக சட்டப்பேரவையில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு (சிஏஏ) எதிராக தீா்மானம் நிறைவேற்றி, தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆா்சி), தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு (என்பிஆா்) ஆகிய பணிகள் நடைபெறாது என தமிழக அரசு அறிவிக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டபடி சென்றனர்.

இந்தப் பேரணியில், நண்டுவெட்டி வெப்பல் கிராம பஞ்சாயத் தலைவர் பெரிய சாமி தலைமையில், திரளான பெண்கள் பங்கேற்றனர்.

பிலால் நகரில் தொடங்கிய பேரணி, கிழக்கு கடற்கரைச்சாலை, பேருந்து நிலையம், பழைய அஞ்சலக சாலை, கடைத்தெரு வழியாக அதிராம்பட்டினம் ஜாவியா சாலையில் நடைபெறும் தொடர் போராட்டக் களத்தில் நிறைவடைந்தது.

அதேபோல், ஹாஜா நகர் இஸ்லாமிய இளைஞர்கள் நற்பணி மன்றம் சார்பில் ஏற்பாடு செய்திருந்த பேரணி, ஹாஜா நகரில் தொடங்கி, கிழக்கு கடற்கரைச்சாலை, பேருந்து நிலையம், பழைய அஞ்சலக சாலை, கடைத்தெரு வழியாக அதிராம்பட்டினம் ஜாவியா சாலையில் நடைபெறும் தொடர் போராட்டக் களத்தில் நிறைவடைந்தது. இதில், பெண்கள், குழந்தைகள் உட்பட 500 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு குடியுரிமை சட்டத்திற்கு எதிராக முழக்கமிட்டனர். இளைஞர்கள் 'நோ சிஏஏ', 'நோ என்ஆர்சி', 'நோ என்ஆர்பி' ஆகிய வாசகங்கள் அடங்கிய கருப்பு கலர் டீ-சர்ட் அணிந்து எதிர்ப்பு தெரிவித்தனர்.
 
 

Sunday, February 23, 2020

பிலால் நகரில் புதிய தார்சாலை அமைக்கும் பணியை சி.வி சேகர் எம்.எல்.ஏ தொடங்கி வைத்தார்!

அதிராம்பட்டினம், பிப்.23
அதிராம்பட்டினம், பிலால் நகரில் ரூ.17.11 லட்சத்தில், புதிய தார்சாலை அமைக்கும் பணியை பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் சி.வி சேகர்  சனிக்கிழமை காலை தொடங்கி வைத்தார்.

ஏரிப்புறக்கரை ஊராட்சி, பிலால் நகரில் சாலைகள் மற்றும் வடிகால் வசதி அமைத்து தரக்கோரி, அப்பகுதி ஜமாத்தார்கள் மற்றும் பொதுமக்கள் சார்பில், பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் சி.வி சேகரிடம் மனு அளித்து இருந்தனர். இந்நிலையில், பிலால் நகரில் 2 தார் சாலைகள், முறையே ரூ.8.87, ரூ.8.24 லட்சங்களில், 350, 325 மீட்டர் நீளங்களில் அமைத்திட, எஸ்.சி.பி.ஏ.ஆர் திட்டத்தின் கீழ் நிர்வாக அனுமதி பெறப்பட்டது.

இந்நிலையில், பிலால் நகரில் இதன் பணியை பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் சி.சி சேகர் சனிக்கிழமை காலை தொடங்கி வைத்தார்.

அப்போது, சி.வி சேகர் எம்.எல்.ஏ., க்கு பிலால் நகர் ஜமாத் நிர்வாகிகள் நன்றி தெரிவித்துக்கொண்டனர். மேலும், பிலால் நகரில் புதிதாக ரேஷன் கடை அமைப்பதற்கும், மழை காலங்களில் வெள்ளத்தில் மிதக்கும் பிலால் நகரில், செடியன் குளம் தென்கரை முதல் ஈஸ்ட்கோஸ்ட் சாலை வரை புதிதாக மழைநீர்-கழிவு நீர் வடிகால் வாய்க்கால் அமைப்பதற்கு, எம்.ஜி.என்.ஆர்.இ.ஜி.எஸ் திட்டத்தில், ரூ.26 லட்சம் மதிப்பிலான பணியினை தாமதமின்றி தொடங்குவதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அவரிடம் கோரிக்கை வைத்தனர்.

மனுவை பெற்றுக்கொண்ட சி.வி சேகர் எம்.எல்.ஏ, கோரிக்கை மீது உரிய நடவடிக்கை மேற்கொள்வதாகக் கூறினார். மேலும், பிலால் நகர், எம்.எஸ்.எம் நகர் பகுதி மக்கள் ரேஷன் பொருட்கள் பெறுவதற்கு படும் சிரமத்தை கருத்தில் கொண்டு, இப்பகுதிகளிலேயே ரேஷன் பொருட்கள் பெறுகின்ற வகையில், மொபைல் ஷாப் தொடங்குவதற்கு தமிழக அரசிடம் கோரிக்கை வைத்திருக்கிறேன். விரைவில், இக்கோரிக்கை  நிறைவேறும்' என்றார்.

அப்போது, பட்டுக்கோட்டை கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் சுப.ராஜேந்திரன், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத் தலைவர் பி.சுப்பிரமணியன், தஞ்சை மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பாலு, பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் நா.சுரேஷ், ஏரிப்புறக்கரை ஊராட்சித் தலைவர் எஸ்.சக்திவேல், மீனவ சங்கத் தலைவர்  வி.முருகேசன், பிலால் நகர் வார்டு கவுன்சிலர் எம்.ஆர் கமாலுதீன் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.
 

Tuesday, January 21, 2020

டெண்டர் கோரப்பட்ட பிலால் நகர் தார்சாலைப் பணிகளை துரிதப்படுத்த ஜமாத்தார்கள் கோரிக்கை!

பட்டுக்கோட்டை, ஜன.21
டெண்டர் கோரப்பட்ட பிலால் நகர் தார்சாலைப்பணிகளை துரிதமாக மேற்கொள்ள வலியுறுத்தி ஜமாஅத் நிர்வாகத்தினர், பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் இ.ரவிச்சந்திரனை நேரில் சந்தித்து இன்று செவ்வாய்க்கிழமை காலை கோரிக்கை மனு அளித்தனர்.

பிலால் நகர் ஜமாத்தார்கள் அளித்த மனுவில் கூறியிருப்பது;
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் அடுத்துள்ள ஏரிப்புறக்கரை ஊராட்சி பிலால் நகர் பகுதியில், சுமார் 500 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் முறையான மழைநீர்/கழிவு நீர் வடிகால் வசதி அறவே இல்லாததால், ஆண்டு தோறும் பெய்யும் மழையால் சாலைகளில் ஆங்காங்கே மழைநீர் தேங்கி சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டு, பிரதான சாலைகள் முற்றிலும் சேதமடைந்து, சேரும் சகதியுமாகக் காட்சியளிக்கும். இதனால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள், வாகன ஓட்டிகள் மிகவும் அவதிக்குள்ளாவர். மேலும், மழைநீர் குடியிருப்புகளில் புகுந்து விடுவதால் பொதுமக்கள் பெரிதும் பாதிப்படைவர்.

இதுதொடர்பாக இப்பகுதி ஜமாஅத் நிர்வாகிகள், பொதுமக்கள் சார்பில், இப்பகுதியையொட்டி அமைந்துள்ள செடியன் குளம் தென்கரை முதல் ஈஸ்ட்கோஸ்ட் சாலை வரை புதிதாக மழைநீர் கழிவு நீர் வடிகால் வசதி, பழுதடைந்த  சாலைகளை சீரமைத்து புதிதாக தார்சாலை வசதி, பிலால் நகர் இணைப்பில் உள்ள ஈஸ்ட் கோஸ்ட் சாலையை, இப்பகுதி பொதுமக்கள் கடந்துசெல்ல புதிதாக நடைபாலம் ஆகியவற்றை நிறைவேற்றித் தர வலியுறுத்தி வந்தனர்.

இந்தநிலையில், SCPAR திட்டத்தின் கீழ், பிலால் நகரில், ரூ.8.87 லட்சத்தில், 350 மீட்டர் நீளத்தில் தார்சாலையும், அதே பகுதியில் ரூ.8.24 லட்சத்தில், 325 மீட்டர் நீளத்தில் மற்றொரு தார்சாலை அமைப்பதற்கு டெண்டர் கோரப்பபட்டதாகவும், மேலும், மழை காலங்களில் வெள்ளத்தில் மிதக்கும் பிலால் நகரில் ரூ.26 லட்சத்தில், வடிகால் அமைப்பதற்கு திட்ட வரைவு தயாரித்து இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. எனவே, இப்பணிகளை எவ்வித தாமதமின்றி உடனடியாக தொடங்குவதற்கு
உரிய  நடவடிக்கை எடுக்கவேண்டும். என இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதில், பிலால் நகர் ஜமாஅத் நிர்வாகம் சார்பில், பள்ளி முத்தவல்லி ஹாஜி எம்.எம்.ஏ அகமது கபீர், பிலால் நகர் ஜமாஅத் தலைவர் எஸ்.முகமது முகைதீன், பொருளாளர் எம்.நிஜாமுதீன், சமூக ஆர்வலர் அதிரை அமீன், பிலால் நகர் கவுன்சிலர் எம்.ஆர் கமாலுதீன், இஜாஸ் அகமது, முகமது உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 

Wednesday, January 8, 2020

பிலால் நகரில் இலவச மருத்துவ முகாம் (படங்கள்)

அதிராம்பட்டினம், ஜன.08
மாவட்ட பொதுசுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை சார்பில், இலவச காய்ச்சல் தடுப்பு மருத்துவ முகாம், பிலால் நகர் பள்ளிவாசல் வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ஆர். அண்ணாதுரை மேற்பார்வையில், தாமரங்கோட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் டாக்டர் எஸ்.ராஜு தலைமையிலான மருத்துவக்குழுவினா் எஸ்.செல்வராணி, டி.இந்திராகாந்தி உள்ளிட்டோர் முகாமில் பங்கேற்ற பிலால் நகர் பகுதி பொதுமக்கள் 50 க்கும் மேற்பட்டோருக்கு காய்ச்சல் மற்றும் ரத்த அழுத்தம் மருத்துவப் பரிசோதனை செய்து மருந்து, மாத்திரை இலவசமாக வழங்கினர். முகாமில், பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டன. முகாம் ஏற்பாட்டினை, பிலால் நகர் ஜமாத்தார்கள் செய்திருந்தனர்.