.

Pages

Showing posts with label வளைகுடா செய்திகள். Show all posts
Showing posts with label வளைகுடா செய்திகள். Show all posts

Saturday, May 9, 2020

அமீரகத்தில் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த அதிராம்பட்டினம் மாணவர்கள்!

கின்னஸ் சாதனையாளர்கள் முகமது சைப், அலிஸ்ஸா
அதிரை நியூஸ்: மே.09
அமீரகத்தில் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த அதிராம்பட்டினம் மாணவர்களுக்கு ஆசிரியர்கள், பெற்றோர் பாராட்டு தெரிவித்தனர்.

அதிராம்பட்டினத்தை சேர்ந்தவர் ஜெஹபர் சாதிக் என்கிற அதிரை முஜீப். அமீரகம் ஷார்ஜாவில் உள்ள கட்டுமான நிறுவனமொன்றில் அலுவலராகப் பணியாற்றி வரும் இவர் குடும்பத்துடன் அங்கு வசித்து வருகிறார்.

இவரது மகன் முகமது சைப், மகள் அலிஸ்ஸா. இவர்கள் இருவரும் ஷார்ஜாவில் உள்ள கல்ப் ஆசியன் ஆங்கிலப் பள்ளியில் 9 ஆம் வகுப்பு மற்றும் 2 ஆம் வகுப்பில் கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில், கடந்த 2019 ஆம் ஆண்டு நவம்பர் 28ந் தேதி ஷார்ஜாவில் நடைபெற்ற ராக்கெட் வடிவில் நின்று உலக கின்னஸ் சாதனை நிகழ்த்தும் முயற்சியில், இவர்கள் இருவரோடு, 21 நாடுகளைச் சேர்ந்த 11 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்று பிரமாண்டமான மைதானத்தில் ராக்கெட் வடிவில் நின்று, புதிய கின்னஸ் உலக சாதனை படைத்தனர்.

இந்தச் சாதனையைப் பாராட்டி கின்னஸ் நிறுவனம் முகமது சைப், அலிஸ்ஸா ஆகியோருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கியுள்ளது. இதையடுத்து, கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த மாணவர்கள் இருவரையும் பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர், நண்பர்கள் வாழ்த்து தெரிவித்து பாராட்டினர்.

மேலும், சிறுமி அலிஸ்ஸா, ஷார்ஜாவில் மலபார் கோல்ட் ஜுவல்லரி நிறுவனம் நடத்திய ஓவியப்போட்டியில் பங்கேற்று சிறப்பிடம் பெற்று பாராட்டு சான்றிதழ் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
 

Monday, April 27, 2020

அபுதாபியில் நோன்பு இருந்து வரும் இந்து சமய பெண்!

அபுதாபி : ஏப்.27
அபுதாபியில் இந்து சமயத்தை சேர்ந்த ஸ்ரீதேவி சிவானந்தம் நோன்பினை நோற்று வருகிறார்.

அமீரகத்தில் தற்போது ரமலான் மாதம் தொடங்கியுள்ளது. இந்த மாதத்தில் இஸ்லாமியர்கள் நோன்பினை நோற்று வருகிறார்.

இந்த நிலையில் அபுதாபியில் வசித்து வரும் இந்து சமயத்தை சேர்ந்த ஸ்ரீதேவி சிவானந்தம் நோன்பு நோற்று சமய நல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாக திகழ்ந்து வருகிறார்.

ரமலான் மாத நோன்பு என் நம்பிக்கையின் அடையாளம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மத மாச்சர்யங்களும், சண்டை சச்சரவுகளும் பெருகி, ஒரு பக்கம் மனித இனத்தின் நிம்மதியைக் கெடுத்து வந்தாலும், இஸ்லாமிய நோன்பு மாதமான ரமலானில் பயபக்தியுடன் நோன்பு நோற்கும் ஸ்ரீதேவி சிவானந்தம், சமயங்கள் கடந்த மனித நேயத்திற்கான ஒரு தலை சிறந்த உதாரணமாகத் திகழ்கிறார்.

அதிகாலை நேரமான சஹர் நேரத்தில் அவரிடம் பேசினோம்.

இதோ நோன்பு மாதமான ரமலான் குறித்த அவரது நம்பிக்கை:
"இறைவன் மதங்களையெல்லாம்  கடந்தவன். அதனால் தான், தமிழர்களாகிய நாம் அவனை கடவுள் என்கிறோம். நிச்சயமாக மனித குலம் முழுவதையும் படைத்தது ஒரே இறைவன்தான்.

நான் இஸ்லாமிய நோன்பு மாதமான ரமலானில் சில நேர்த்திக் கடன்களை மனதில் வைத்தே, கடந்த பல வருடங்களாக நோன்பு நோற்று வருகிறேன்.

அதிகாலை சஹரில் எழுந்து உணவருந்துகிறேன். மாலை பாங்கு சொன்னவுடன் நோன்பு திறக்கிறேன்.

எல்லாம் வல்ல இறைவன், நான் வேண்டிய  பலவற்றை, இந்த ரமலான் மாதத்தின் பொருட்டால் எனக்குத் தந்தருள்கிறான் என்று உறுதியாக நம்புகிறேன்.

என்னோடு பசித்திருந்து, விழித்திருந்து, ஏழை எளியவர்க்கு ஈகை தந்து, நோன்பு நோற்கும் உலக முஸ்லிம் சகோதர சகோதரிகள் அனைவருக்கும் என் மன மார்ந்த வாழ்த்துக்களும் பிரார்த்தனைகளும், ரமலான் முபாரக்"

 இவ்வாறு அவர் கூறினார்.

Friday, April 24, 2020

வளைகுடா நாடுகளில் ரமலான் நோன்பு இன்று தொடக்கம்!

அதிரை நியூஸ்: ஏப்.24
ஐக்கிய அரபு அமீரகத்தில் பிறை கமிட்டியிடமிருந்து நேற்று வியாழக்கிழமை ரமலான் மாத நோன்பின் பிறைக்கான அறிவிப்பு வெளியானதை அடுத்து இன்று (ஏப்.24) வெள்ளிக்கிழமை முதல் நோன்பு தொடங்கியது.

வளைகுடா நாடுகளில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சவூதி, குவைத், பஹ்ரைன், கத்தார், ஓமன் ஆகிய நாடுகளோடு ஏனைய இஸ்லாமிய நாடுகளிலும் முதல்நாள் நோன்பு இன்று முதல் கடை பிடிக்கப்படுகிறது. இதேபோல், மலேஷியா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, இந்தோனேஷியா, தென் கொரியா, ஜப்பான் ஆகிய நாடுகளிலும் ரமலான் நோன்பு  கடை பிடிக்கப்படுகிறது.

Tuesday, December 24, 2019

துபையில் நடந்த மாநாட்டில் அதிரை சிறுவன், சிறுமிக்கு பாராட்டு!

அதிரை நியூஸ்: டிச.24
துபையில் கடந்த டிச 2 , 3 ஆகிய தேதிகளில் அல் மனார் சென்டர் சார்பாக இஸ்லாமிய மாநாடு இல்ம் 2019 நடந்தது.

இதில், தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் மேலத்தெருவை சேர்ந்த அதிரை அப்துல் ஹாதி மகன் முஹம்மத் ஈசா இப்னு அப்துல் ஹாதி குர்ஆன்  போட்டியில் கலந்து கொண்டு பரிசை பெற்றார். இம்மாநாட்டில், அழகிய குரலில் சூரா கஹ்ப் ஓதினார். மேலும், இவருடைய சகோதரி சுமையா அப்துல் ஹாதி பேச்சுப் போட்டியில் முதல் பரிசை வென்றார். ஆங்கிலத்தில் அமைந்த இவருடைய உரையை சக போட்டியாளர்கள் மற்றும் நீதிபதிகள் வெகுவாக பாராட்டி வாழ்த்துகளை தெரிவித்தனர்.
 

Tuesday, December 3, 2019

துபையில் சம்சுல் இஸ்லாம் சங்க நூற்றாண்டு விழா கொண்டாட்டம் (படங்கள்)

அதிரை நியூஸ்: டிச.03
ஐக்கிய அரபு அமீரகத்தின் 48 - வது தேசிய தினத்தில், அதிராம்பட்டினம் ஷம்சுல் இஸ்லாம் சங்க நூற்றாண்டு விழாவை வெளிநாடுவாழ் மஹல்லாவாசிகள் சார்பில், முதல் நிகழ்ச்சியாகவும், அமீரக SHISWA அமைப்பின் 4-வது ஆண்டு ஒன்று கூடல் நிகழ்வாகவும் துபையில் கொண்டாடி மகிழ்ந்தனர்.

விழாவின் ஒரு பகுதியாக, சம்சுல் இஸ்லாம் சங்க நூறாண்டு சிறப்பு விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. இதில். 3 வயது முதல் 65 வயது வரையிலான குழந்தைகள், சிறார்கள், ஆண்கள், சிறுமிகள், பெண்கள் உள்ளிட்ட  மஹல்லாவாசிகளுக்கு தனித்தனியாக மொத்தம் 14  போட்டிகள் நடத்தப்பட்டு, இதில், சிறப்பிடம் பிடித்தவர்களுக்கு தலா 150, 100, 75 திர்ஹம் மதிப்புள்ள 40 பரிசுகளும், தலா 120 திர்ஹம் மதிப்பிலான மூன்று புடவைகளும் பரிசுகளாகப் பகிர்ந்து வழங்கப்பட்டன.

தேநீர் இடைவேளையில் சம்சுல் இஸ்லாம் சங்கச் செயலர் பேராசிரியர் எம்.ஏ அப்துல் காதர் அவர்களின் சிறப்பு வாழ்த்துச் செய்தியையும், சங்கம் 2020 திட்டங்கள் குறித்தும், அதற்கு மஹல்லாவாசிகள் அனைவரின் ஒத்துழைப்பின் அவசியத்தை வலியுறுத்திய பேச்சொல்லி ஒலி பெருக்கி மூலம் கேட்கச் செய்து வந்திருந்த அனைவரையும் சென்றடைந்தது.

நிகழ்ச்சிகள் காலை 10:30 மணிக்கு தொடங்கி இடையிடையே தொழுகைக்கான இடைவேளை விடப்பட்டு மீண்டும் தொடர்ந்து நடந்தன. பின்னர், நிகழ்ச்சிகள் அனைத்தும் சரியாக மாலை 5:00 மணிக்கு முடிவடைந்தது.

நிகழ்ச்சிக்காக அபுதாபி, ஷார்ஜா, அஜ்மான்,புஜைரா & ராசல் கைமா ஆகிய அமீரகங்களில் இருந்தும் குடும்பத்துடன் மஹல்லாவாசிகள் பலர் கலந்து கொண்டனர்.

நிறைவில், நிகழ்வில் பங்கேற்ற அனைவருக்கும் பிரியாணி உணவு பறிமாறப்பட்டன.  மேலும், Popular இட்லி/தோசை மாவு பாக்கெட் இலவசமாக வழங்கப்பட்டன.

மெகா பரிசுகளாக குலுக்கல் முறையில் 8 கிராம் தங்க நாணயம் (ஸீபோல் நிறுவனம் சார்பில் அகமது முகைதீன் (Zone -A), 6 கிராம் (மர்ஹூம் காண்ட்ராக்டர் ஷாகுல் ஹமீது நினைவாக அமெரிக்காவிலிருந்து அவரது மகன் K.S.நஜ்புதீன் - Zone-C), 4 கிராம் தங்க நாணயம்  அப்துல்லாஹ் ஹுசைன் டைப்பிங் செண்டர் ( Zone-B) சார்பிலும், 2 கிராம் தங்க நாணயம்  (அதிரை ECR சாலை நாசர் பெட்ரோல் பங்க்) மற்றும் ஆஸ்திரேலியா (மீராஷா) & அமெரிக்கா M.I. அஷ்ரப் மற்றும் சிலரும் சேர்ந்து மொத்தம் இரண்டரை பவுன் தங்கக் காசுகள் வழங்கப்பட்டன.

முதல் பரிசுகளுக்காக அமெரிக்கா, ஆஸ்திரேலியா நாடுகளில் வாழும் ஷம்சுல் இஸ்லாம் சங்க மஹல்லாவாசிகள் மட்டுமின்றி அபுதாபி, துபாயில் வர்த்தகம் செய்து வரும் அல்-நூர் தமிழ் ஹஜ், உம்ரா நிறுவனம், மொலினா டெக்ஸ்டைல்ஸ், Super Sonic Gifts மற்றும் அதிரையர்களின் அப்துல்லாஹ் ஹுசைன் டைப்பிங் செண்டர், ThreeYem Printing Services, Popular இட்லி, தோசை மாவு POS Media  LLC, Aysha Mohamed Dentel Clinic & Morcopo Forwarding ஆகிய நிறுவனங்களும் பரிசுகளுக்கு ஸ்பான்சர் செய்திருந்தனர். மாலை நேர தேநீர், சமோசா முழு செலவுகளையும் AIMAN ஷாகுல், அஸ்லம் மற்றும் அமீரகம் வாழ் உறவினர்கள் இணைந்து ஸ்பான்சர் செய்திருந்தனர்.

விளையாட்டுப் போட்டிகளுக்கு ஆன்லைன் பதிவு கணிசமாக இருந்தது. எனினும், வந்திருந்தோரின் ஆர்வமிகுதியால் கூடுதல் எண்ணிக்கையில்  கலந்து கொண்டனர்.

இத்தகைய ஒன்று கூடல்கள் மூலம் சங்க மஹல்லாவாசிகளிடையே பிணைப்பும், நல்ல புரிந்துணர்வும் வலுப்பட்டு, தாய்ச்சங்க செயல்பாடுகளுக்கும், எதிர்காலத்திட்டங்களுக்கும் ஆதரவு அளிப்பதையும் வலியுறுத்துவதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

செய்தி மற்றும் படங்கள்:
என்.ஜமாலுதீன், துபை
 

Friday, November 29, 2019

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் திருச்சி ~ அபுதாபி நேரடி விமான சேவையை மீண்டும் இயக்க வலியுறுத்தி K.நவாஸ் கனி எம்.பி.,யிடம் மனு!

அதிரை நியூஸ்: நவ.29
ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் திருச்சி ~ அபுதாபி இரு வழி நேரடி விமானச் சேவையை மீண்டும் இயக்க வலியுறுத்தி கே.நவாஸ் கனி எம்.பி.,யிடம் அபுதாபி வாழ் தமிழரும், அங்குள்ள பெட்ரோலிய நிறுவனமொன்றில் மனிதவளம் மேம்பாட்டுத்துறை மேலாளராக பணியாற்றி வரும் அதிரை என். முகமது மாலிக் அபுதாபியில் நேரில் சந்தித்து மனு அளித்தார்.

திருச்சி ~ அபுதாபி இடையே ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் நேரடி விமானச் சேவையை கடந்த 2012 ஆம் ஆண்டு தொடங்கியது. எனினும், இந்த விமான சேவையானது கடந்த ஏழு வருடங்களுக்கு முன்னர் நிறுத்தப்பட்டது. இந்த வழித்தடத்தில் அதிகமான பயணிகள் பயணம் மேற்கொண்டு வந்தனர். எனினும், விமான சேவை திடீரென நிறுத்தப்பட்டது பயணிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில், இந்த வழித்தடத்தில் மீண்டும் இந்த விமான சேவையை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் தொடங்க வலியுறுத்தி, அபுதாபி அய்மான் சங்கத்தின் முப்பெரும் விழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்சிகளில் பங்கேற்பதற்காக அமீரகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நாடாளுமன்ற கொறடாவும், இராமநாதபுரம் பாராளுமன்ற உறுப்பினருமாகிய கே.நவாஸ் கனி எம்.பி யிடம், அபுதாபி வாழ் தமிழரும், அங்குள்ள பெட்ரோலிய நிறுவனமொன்றில் மனிதவளம் மேம்பாட்டுத்துறை மேலாளராக பணியாற்றி வரும் அதிரை என். முகமது மாலிக் நேரில் சந்திந்து கோரிக்கை மனு அளித்தார். கோரிக்கை மனுவை பெற்றுக்கொண்ட கே.நவாஸ் கனி, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிர்வாகத்தை சந்தித்து ஆவனம் செய்வதாகக் கூறினார்.

அதிரை என். முகமது மாலிக் அளித்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பது;
ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் அபுதாபி ~ திருச்சி ~ அபுதாபி வழித்தடத்தில் வாரத்தில் மூன்று நாட்கள் சேவையை வழங்கி வந்தது. பின்னர் வாரத்தில் இரண்டு நாட்களாக சேவையை சுருக்கியது. பின்னர், கடந்த 2007ஆம் ஆண்டு  முதல் அனைத்து சேவைகளையும் விலக்கிக்கொண்டது.

அபுதாபியை பொருத்தவரையில் திருச்சிராப்பள்ளி பன்னாட்டு விமான நிலையத்தைச் சார்ந்துள்ள சுமார் 6 லட்சம் பயணிகள் இங்கு வேலை செய்து வருகின்றனர். இந்த பயணிகள் தங்கள் பயணத்திற்கு மாற்று வழி ஏதுமின்றி ஏர் லங்கா விமானத்தை மட்டுமே சார்ந்துள்ள சூழல் அல்லது அருகில் உள்ள சென்னை, பெங்களூர், கொச்சி, மதுரை மற்றும் திருவனந்தபுரத்திற்கு செல்ல வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

அபுதாபி பயணிகள் யாவரும் அவசர தேவைகளுக்கு ஊருக்கு செல்ல வேண்டுமென்றால் கூடுதல் தொகையை கொடுத்து பல மணி நேரம்  பயணிக்க வேண்டி வருகிறது,

திருச்சிராப்பள்ளி பன்னாட்டு விமானநிலையத்தைச் சார்ந்துள்ள அபுதாபி பயணிகளுக்கு மட்டும் தொடர்ந்து சேவைகள் மறுக்கப்படுவதன் காரணம் புரியவில்லை.

கடந்த 2007 ஆம் ஆண்டு முதல், இதே கோரிக்கையை நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் ஆகியோருக்கு பலமுறை அலைப்பேசி மற்றும் மின்னஞ்சல் மூலமாகவும் தெரிவித்து வருகிறேன். எனவே, தாங்கள் இந்த விசயத்தில் அதிக கவனம் செலுத்தி மீண்டும் இந்த சேவையை ஏற்படுத்தி தருமாறு  கேட்டுக்கொள்கிறேன் என மனுவில் கூறப்பட்டுள்ளது.
 
 
 

Monday, November 18, 2019

சவுதியில் தமிழக மாணவிக்கு இந்திய தூதர் பாராட்டு!

அதிரை நியூஸ்: நவ.18
திருச்சி பீமா நகரை சேர்ந்த பன்னாட்டு தொழிலதிபர் அப்துல் மஜீத் பதுருதீன். இவரது மகள் ஃபாத்திமா (வயது 13) சவுதி அரேபியா ஜூபைலில் இந்திய தூதரக சர்வதேச பள்ளியில் 7 ஆம் வகுப்பு படித்து வருகிறார். துப்பாக்கி சுடுதலில் ஆர்வம் கொண்டவரான இவர், தமிழகத்தில் பெரம்பலூர், கோயம்புத்தூர் ஆகிய பகுதிகளில் நடைபெற்ற மாவட்ட அளவிலான துப்பாக்கிச் சுடும் போட்டிகளில் பங்கேற்று சிறப்பிடம் பெற்றுள்ளார்.

இந்நிலையில், சவுதி ஜூபைல் இந்திய தூதரக சர்வதேச பள்ளியில் (நவ.17) ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பாராட்டு விழாவில், சிறப்பு விருந்தினராக சவுதி அரேபியாவுக்கான இந்தியத் தூதர் அவூசாப் சயீது (Ausaf Sayeed) கலந்துகொண்டு மாணவி ஃபாத்திமாவை பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.

பள்ளி விடுமுறையில் இந்தியா திரும்பும் மாணவி ஃபாத்திமா துப்பாக்கி சுடும் வீரர் அதிரை வஜீர் அலி வழிகாட்டுதலின் பேரில், கடந்த ஜூலை மாதம் 21, 22 ஆகிய தேதிகளில் பெரம்பலூர் மாவட்ட ரைபிள் கிளப்பில் நடைபெற்ற INTER DISTRICT OPEN MATCH AIR RIFLE / PISTOL 2019 போட்டியில் 10 M, AIR PISTOL SUB JUNIOR NR & ISSF ஆகிய பிரிவுகளில் பங்குபெற்று மூன்று வெள்ளி மற்றும் ஒரு வெண்கலப் பதக்கங்கள் வென்றார். மேலும், கடந்த ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் கோயம்புத்தூர் ரைபிள் கிளப்பில் நடைபெற்ற 45-வது மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில் 10 M, AIR PISTOL பிரிவில் கலந்துகொண்டு சிறப்பிடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
 

Monday, October 28, 2019

துபையில் விருது பெற்ற தமிழக மாணவர்!

துபையில் வளர்ந்து வரும் நட்சத்திர விருதை தமிழகத்தின் ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையைச் சேர்ந்த சிறப்பு மாணவர் பஹீம் பெற்றார். துபையில் நடந்த நிகழ்ச்சியில் 25.10.2019 வெள்ளிக்கிழமை இந்த விருது வழங்கி கவுரவிக்கப்பட்டார்.

பஹீம் ஐயாயிரம் வருடங்கள் வரை எந்த தேதியை கூறினாலும் அதன் கிழமையை தெரிவிப்பார். மேலும் உலக நாடுகளின் தலைநகர், தற்போதைய நேரம், பணம் உள்ளிட்ட விபரங்களை தெரிவிப்பார்.