.

Pages

Showing posts with label விவசாயம். Show all posts
Showing posts with label விவசாயம். Show all posts

Thursday, November 30, 2017

பூச்சி கட்டுப்பாடு: அதிரை அருகே விவசாயிகளுக்கு கல்லூரி மாணவிகள் செயல் விளக்கம்

அதிராம்பட்டினம், நவ.30
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் அருகே உள்ள தாமரங்கோட்டையில், தஞ்சாவூர் ஆர்.வி.எஸ். வேளாண்மைக் கல்லூரியில் பயிலும் 4 ம் ஆண்டு மாணவிகள் 10 பேர் ராஜராஜேஸ்வரி தலைமையில் குழுவாக இணைந்து ஊரக வேளாண்மை அனுபவப் பயிற்சி திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்று வருகின்றனர். இவர்களுக்கு பட்டுக்கோட்டை வேளாண்மை உதவி  இயக்குநர் எஸ்.ஈஸ்வர் மேற்பார்வையில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

இம்மாணவிகள் பயிற்சியின் ஒரு பகுதியாக தாமரங்கோட்டை கிழக்கு கிராமத்தில் விதை வேலுமணி என்ற விவசாயி தென்னந்தோப்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற செயல் விளக்க நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

அப்போது, குரும்பை உதிர்வைத் தடுக்க தென்னை மரத்தின் பென்சில் தடிமனுள்ள வேரில் ஊட்டச்சத்து மருந்தை 1 மரத்துக்கு 10 மில்லி என்ற விகிதத்தில் ஆண்டுக்கு 2 முறை செலுத்த வேண்டும் எனவும், அம்மருந்தை பயன்படுத்துவது குறித்தும் செயல் விளக்கம் அளித்தனர்.

அடுத்து, ஒருங்கிணைந்த எலி ஒழிப்பு திட்டத்தின் கீழ் வயல்களில் பானை பொறி மூலம் எலிகளை அழித்தல், திருந்திய நெல் சாகுபடி தொழில் நுட்பங்கள், ரசாயன பூச்சிக் கொல்லிக்குப் பதிலாக சோலார் விளக்குப் பொறி மூலம் பூச்சிகளை கட்டுப்படுத்தும் வழி முறைகள் ஆகியன குறித்தும் செயல் விளக்கம் செய்து காட்டினர். மேலும், மானிய விலையில் சோலார் விளக்குப் பொறி கருவியை பெற விரும்புவோர் பட்டுக்கோட்டை வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தில் முன் பதிவு செய்யலாம் என தெரிவித்தனர்.