.

Pages

Showing posts with label ஹஜ் செய்திகள். Show all posts
Showing posts with label ஹஜ் செய்திகள். Show all posts

Saturday, August 17, 2019

அரபா தினத்தில் நடக்க இயலா முதியவரை சுமந்து உதவிய சவுதி பாதுகாப்பு வீரர் - வைரலான செய்தி!

அதிரை நியூஸ்: ஆக.17
மாஜித் அலி அல் ஹகமி என்பவர் சவுதி பாதுகாப்புத் துறையைச் சேர்ந்த வீரர், இவரும் சக வீரர்களைப் போல் புனித ஹஜ் பாதுகாப்பு மற்றும் உதவி நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தார்.

அரபா தினத்தில் இவர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது சற்று தூரத்தில் ஒரு முதிய ஹஜ் யாத்ரீகர் நடக்க முடியாமல் உட்காருவதும் எழுந்து நிற்பதுமாக தவித்துக் கொண்டிருப்பதை கண்டார். அவரருகே சென்று குடிக்க நீர் வழங்கியும், தலையின் மீது குளிர்ந்த நீரை ஊற்றியும் ஆசுவாசப்படுத்தினார். அவருடைய பிரச்சினை குறித்து விசாரித்தார் ஆனால் முதிய ஹஜ் பயணியால் உருது மொழியில் மட்டுமே பதிலளிக்க முடிந்தது.

உருது மொழி அறியாத சவுதி வீரர் அவருடைய சூழ்நிலையை புரிந்து கொண்டு சைகை மொழியில் அவருடன் உரையாடி, உங்களுக்கு உதவ நானிருக்கின்றேன் என்ற நம்பிக்கையை ஊட்டி அவருடன் சிறிது தூரம் கையை பிடித்துக் கொண்டு நடந்தார் ஆனாலும் முதிய ஹஜ் பயணி நடக்க சிரமப்படுவதை அறிந்து அவரை தன் கைகளில் தூக்கியவராக நடக்கத் துவங்கினார்.

அரபாவிலிருந்து மெட்ரோ ரயில் நிலையம் வரை அவரை சுமந்து சென்றார், செல்லும் போது ஹஜ் யாத்ரீகர்களின் கண்களிலிருந்து கண்ணீர் வழிய அந்த வீரருக்காக துஆ செய்தவராக வந்ததை பாதுகாப்பு வீரர் உணர்ந்து கொண்டு இத்தருணத்தை ஏற்படுத்திதந்த எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் இதற்கான நற்கூலியை வேண்டியவராக மெட்ரோ ரயிலிலும் அவர் அருகில் அமர்ந்தவராக முஜ்தலீபா வரை பயணம் செய்தார்.

முஜ்தலீபாவில் முதிய ஹஜ் பயணி அன்றைய இரவை கழிக்கவும், தொடர்ந்து பாதுகாப்புடன் எஞ்சிய ஹஜ் கிரிகைகளை நிறைவேற்றவும் மாற்று ஏற்பாடுகளை செய்துவிட்டுமே அங்கிருந்து சென்றார் சவுதி வீரர்.

அரபாவில் முதிய ஹஜ் யாத்ரீகருக்கு உதவிய நிகழ்வுகளை யாரோ ஒருவர் பதிவு செய்து போட்டோவாகவும், வீடியோவாகவும் சமூக வலைத்தளங்களில் பதிவேற்ற சவுதி வீரருக்கு பாராட்டுக்களும், துஆக்களும், வாழ்த்துக்களும் குவிய சவுதி பாதுகாப்பு படை வீரரோ "இப்புனிதமான நாளில் இச்சேவையை செய்ய பல்லாயிரக்கணக்கான வீரர்களிலிருந்து அல்லாஹ் என்னை தேர்வு செய்துள்ளது மிகவும் பாக்கியம் பொருந்திய ஒன்று, என்னுடைய இடத்தில் வேறு எந்த சவுதி பாதுகாப்பு வீரர் இருந்திருந்தாலும் இதையே தான் செய்திருப்பார்கள் என தன்னடக்கத்துடன் தெரிவித்துள்ளார் மாஜித் அலி அல் ஹகமி.

Source: Saudi Gazette
தமிழில்: நம்ம ஊரான்

Friday, August 16, 2019

2 லட்சம் இந்தியர்கள் ஹஜ் கடமையை நிறைவு செய்தனர் (முழு விபரம்)

அதிரை நியூஸ்: ஆக.16
இந்த வருடம் 2 லட்சம் இந்தியர்கள் ஹஜ் கடமைகளை நிறைவேற்றியதாக இந்திய தூதர் டாக்டர். அவுசீப் சயீத், துணைத்தூதர் முஹமது நூர் ரஹ்மான் ஷேக் ஆகியோர் பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்தனர். அப்போது இந்தியாவிலிருந்து ஹஜ் நல்லெண்ண பிரதானிகள் குழுவின் தலைவர் ஆற்காடு இளவரசர் நவாப் முஹமது அப்துல் அலி, துணைத்தலைவர் சையத் கைருல் ஹசன் ரிஜ்வி (சேர்மன், தேசிய சிறுபான்மை கமிஷன்), ஹஜ்ஜுக்கான சிறப்பு கான்சுலர் ஒய். சபீர் ஆகியோர் உடனிருந்தனர்.

செய்தியாளர் சந்திப்பின் முக்கிய அம்சங்கள் வருமாறு:
இந்திய ஹஜ் கமிட்டி மூலம் 140,000 + இந்திய தனியார் ஹஜ் ஆபரேட்டர்கள் மூலம் 60,000 என மொத்தம் 2 லட்சம் பேர் ஹஜ் செய்துள்ளனர்.

101 வயது அத்தர் பீபி உட்பட 45 பேர் 90 வயதுக்கு மேற்பட்ட முதிய ஹஜ் பயணிகளாவர்.

மினா, முஜ்தலீபா, அரபா ஆகிய புனிதத் தலங்களில் 11 இந்தியர்கள் மரணமடைந்துள்ளனர், இதுவே கடந்த வருட மரணம் 12 ஆக இருந்தது.

மொத்தம் இந்தியர்களின் மரண எண்ணிக்கை ஆகஸ்ட் 12 வரை 52 பேர், ஹஜ் கமிட்டி மூலம் வந்தவர்கள் 44 + தனியார் மூலம் வந்தவர்கள் 8 பேர், இதுவே கடந்த ஆண்டு 73 ஆக இருந்தது.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர்கள் 1,258. இந்தியன் ஹஜ் மிஷன் மருத்துவமனைகளில் 893 பேரும் சவுதி மருத்துவமனைகளில் 365 பேரும் சிகிச்சை பெற்றனர்.

கடந்த வருடம் 10 குழந்தை பிறப்புக்கள் பதிவாகியுள்ள நிலையில் இந்த வருடம் 2 குழந்தைகள் மட்டுமே பிறந்தன. (ஹஜ் கமிட்டி மூலம் வந்தவர்கள் மட்டும்).

55 நோயாளிகள், உடல் தளர்ந்த முதியவர்கள் ஆம்புலன்ஸ் சேவை மூலம் அரபா அழைத்துச் செல்லப்பட்டனர். அரபா. மினாவில் பெய்த மழைகள் ஹாஜிகளுக்கு இதமான தருணமாக அமைந்தது.

துல்ஹஜ் 10 ஆம் நாளான பெருநாள் அன்று பகல் 2 மணிக்குள் முன்பதிவு செய்யப்பட்ட 71,846 உழுஹிய்யா பிராணிகளும் அறுக்கப்பட்டதாக ஊர்ஜிதம் செய்யப்பட்டது.

இந்திய சிறுபான்மையினர் நல அமைச்சகம் சார்பாக 37 பெண் மருத்துவர்கள் உள்ளிட்ட 160 மருத்துவர்களும், 35 சிறப்பு மருத்துவர்களும், 181 மருத்துவ ஊழியர்களும் சேவை வழங்கியதுடன் ரூபாய் 3.5 கோடி (சுமார் 90,560 டாலர்) மதிப்புள்ள சிறப்பு மருத்துவ உபகரணங்களையும் கொண்டு வந்திருந்தனர்.

நோயாளிகள், தள்ளாத வயதினர்களின் சிறிய உடல்நல குறைவுகளுக்கு நடமாடும் மருத்துவக் குழுவினர் அவர்கள் தங்கியிருந்த இருப்பிடங்களுக்கு சென்று சிகிச்சை அளித்தனர்.

மக்கா, மதினா ஆகிய நகரங்களில் 2 தலைமை அலுவலகங்கள் அமைக்கப்பட்டு அதன் கீழ் 620 பேர் நிர்வாகம் மற்றும் மருத்துவ அதிகாரிகளாக பணியாற்றினர்.

இந்தியாவின் 21 விமான நிலையங்களில் இருந்து 507 விமான சேவைகள் மூலம் மதினா மற்றும் ஜித்தா விமான நிலையங்களுக்கு ஹஜ் பயணிகள் வந்தடந்தனர். இந்த சேவைகளை சவுதி ஏர்லைன்ஸ், ஏர் இந்தியா, ஸ்பைஸ் ஜெட் ஆகியவை மேற்கொண்டன. தனியார் சேவைகளில் வந்தவர்கள் பெரும்பாலும் ஜித்தா விமான நிலையத்திற்கு பொதுவான பயணிகள் விமானம் மூலம் வந்திறங்கினர்.

Source: Saudi Gazette
தமிழில்: நம்ம ஊரான்

Wednesday, August 14, 2019

உள்நாட்டு போரில் 8 மகன்களை இழந்த தாய் ஹஜ்ஜை நிறைவேற்றி ஆறுதலடைந்தார்!

அதிரை நியூஸ்: ஆக.14
உள்நாட்டு போரில் 8 மகன்களை இழந்த தாய் ஹஜ்ஜை நிறைவேற்றி ஆறுதலடைந்தார்

ஏமன் நாட்டில் ஹவ்தி எனப்படும் ஈரான் ஆதரவுபெற்ற ஷியா தீவிரவாதிகளுக்கும் ஏமன் அரசுக்கு ஆதரவான சவுதி கூட்டுப்படைகளுக்கும் இடையே பல ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடைபெற்று வருகின்றது. இதில் தனது 8 மகன்களையும் ஒவ்வொருவராக இழந்து நிற்கதியானார் 60 வயது தாயான ஆலியா ஜெய்னுல்லாஹ்.

8 மகன்கள் மட்டுமல்ல தனது பேரக்குழந்தைகள் சிலரையும் போரில் இழந்துள்ள ஆலியா அவர்களுக்கு ஹஜ் செய்ய வேண்டும் என்பது இளம் வயது முதலே கனவு ஆனால் குடும்பத்தின் வறுமைச்சூழலால் அவரது கணவரால் நிறைவேற்ற இயலவில்லை பின்பு மகன்கள் ஹஜ்ஜிற்கு அழைத்து செல்வதாக உறுதியளித்திருந்தனர் ஆனால் அவர்களின் வாக்குறுதி நிறைவேறுமுன் மரணத்தை தழுவினர், இதனால் அவருடைய ஹஜ் கனவும் நொறுங்கியது ஆனால் அறியா புரத்திலிருந்து உதவி செய்யக்கூடியவன் எல்லாம் வல்ல ரஹ்மான் அல்லவா, அல்ஹம்துலில்லாஹ்.

தனது 8 மகன்களையும் இழந்து புத்திர சோகத்துடனிருந்த தாய் ஆலியா அவர்களுக்கு சவுதியில் மன்னரின் விருந்தினர்கள் என்ற திட்டத்தின் கீழ் ஹஜ் செய்திட வாய்ப்புத் தேடிவர மன திருப்தியோடு ஹஜ் கடமைகளை நிறைவேற்றி மன ஆறுதலடைந்தார், அல்லாஹ் அவருடைய ஹஜ்ஜை ஏற்றுக் கொள்வானாக மேலும் அவரது இழப்புகளுக்குரிய நற்கூலிகளை இம்மையிலும் மறுமையிலும் வழங்குவானாக.

Source: Saudi Gazette
தமிழில்: நம்ம ஊரான்

1 மணிநேரத்தில் 3 லட்சம் ஹஜ் யாத்ரீகர்கள் கல்லெறியும் வசதியுடன் ஜம்ரத்

அதிரை நியூஸ்: ஆக.14
ஹாஜிகள் அடையாள நிமித்தமாக ஷைத்தானுக்கு கல்லெறியும் வளாகத்தின் பெயரே ஜம்ரத் எனப்படும். இந்த ஜம்ரத் வளாகத்தில் 1 மணிநேரத்தில் சுமார் 3 லட்சம் பேர் ஷைத்தானுக்கு கல்லெறிய முடியும்.

தற்போது 4.2 பில்லியன் ரியால்கள் செலவில் கட்டப்பட்டுள்ள ஜம்ரத் வளாகம் 5 அடுக்குமாடிகளுடன் உள்ள இந்த வளாகம் 950 மீட்டர் நீளமும் 80 மீட்டர் அகலமும் 3 சுரங்கவழிப் பாதைகளும் 11 நுழைவுவாயில்கள் 4 திசைகளையும் சென்றடையும் வகையில் 12 வெளியேறும் வழிகளும் உள்ளன.

அவசரகால தேவைக்கு 6 டவர்கள், தரைதளம், சுரங்கவழி பாதைகள், விமானத்தளம் ஆகியவற்றுடன் ஜம்ரத் வளாகம் இணைக்கப்பட்டுள்ளதுடன் எதிர்காலத்தில் சுமார் 5 மில்லியன் ஹாஜிகள் அனுமதிக்கப்படவுள்ள நிலையில் இந்த ஜம்ரத் வளாகம் 12 அடுக்குமாடிகளாக உயர்த்தபடவுள்ளது.

Source: Saudi Gazette
தமிழில்: நம்ம ஊரான்

மக்காவில் 45 மணிநேரத்தில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட பயணிகளை சுமந்த மெட்ரோ ரயில்!

அதிரை நியூஸ்: ஆக.14
மக்காவில் 45 மணிநேரத்தில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட பயணிகளை சுமந்த மெட்ரோ ரயில்

மக்காவின் புனிதத் தலங்களுக்கு இடையே அல் மஷாயிர் அல் முகத்தஸா என்ற மெட்ரோ ரயில் சேவை இயக்கப்படுகின்றன.

மொத்தம் 9 ரயில் நிறுத்தங்களுடன் இயங்கி வரும் இந்த மெட்ரோ ரயில் சேவையில் 45 மணிநேரத்தில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட ஹஜ் பயணிகள் பயணம் செய்துள்ளனர் மெட்ரோ போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.

Source: Saudi Gazette
தமிழில்: நம்ம ஊரான்

நியூஸிலாந்து போலீஸ் பெண் அதிகாரி ஹஜ் கடமையை நிறைவு செய்தார்!

அதிரை நியூஸ்: ஆக. 14
நியூஸிலாந்து போலீஸ் துறை பெண் தலைவர் ஹஜ் கடமையை நிறைவு செய்தார்

தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட நியூஸிலாந்து நாட்டு சம்பவம் தீவிரவாதம் எந்த ஒரு மதத்தின் தனியுடமையல்ல என்பதை முழுவுலகிற்கும் எடுத்துச் சொல்லியது.

இந்த வருட ஹஜ்ஜிற்கு மன்னரின் விருந்தினர்கள் என்ற திட்டத்தின் கீழ் தீவிரவாத்தால் சொந்தங்களை இழந்த நியூஸிலாந்து முஸ்லீம்கள் அழைக்கப்பட்டிருந்தனர். இவர்களுடன் சிறப்பு அழைப்பாளராக நியூசிலாந்தின் ஆக்லாந்து பகுதியின் போலீஸ் துறை இயக்குனர் (Director of Auckland Police) நைலா ஹஸன் என்ற பெண்மணியும் ஹஜ் செய்ய வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தார்.

தனது ஹஜ் கடமைகளை இனிதே நிறைவு செய்த நைலா ஹஸன் அவர்கள் சவுதியின் இஸ்லாமிய விவகாரங்கள், அழைப்பு மற்றும் வழிகாட்டலுக்கான அமைச்சர் அப்துல் லத்தீப் அல் ஷேக் அவர்களை மினா அல் கைப் மஸ்ஜித் வளாகத்தில் அமைந்துள்ள தனது அலுவலகத்தில் சந்தித்து பேசினார். இந்த அமைச்சகமே மன்னரின் விருந்தினர்கள் என்ற திட்டத்தை மன்னரின் சார்பாக நிறைவேற்றியது குறிப்பிடத்தக்கது.

Source: Saudi Gazette
தமிழில்: நம்ம ஊரான்

ஹஜ் யாத்ரீகர்கள் ஊர் திரும்பத் துவங்கினர்!

அதிரை நியூஸ்: ஆக.14
அல்ஹம்துலில்லாஹ். ஹஜ் யாத்திரை வெற்றிகரமாக நிறைவடைந்ததை தொடர்ந்து இன்று உள்நாட்டு விமான சேவைகள் மூலம் ஹஜ் செய்ய வந்தவர்கள் மீண்டும் விமானங்கள் மூலம் வீடு திரும்பத் துவங்கினர்.

நாளை புதன் முதல் வளைகுடா நாடுகளின் ஹஜ் யாத்ரீகர்கள் விமானங்கள் மூலம் திரும்பவுள்ள நிலையில் அனைத்து நாடுகளுக்குமான விமான சேவைகள் வியாழன் (ஆக.15) முதல் துவங்கி செப்.15 வரை நடைபெறும்.

இந்த வருட ஹஜ்ஜிற்கு 25 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வந்துள்ள நிலையில் அவர்களில் 3ல் ஒரு பங்கினர் 70 வயதுக்கு மேற்பட்டவர்கள் எனவும் அவர்களில் சரிபாதியினர் பெண்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று 3 ஷைத்தான் அடையாளங்களுக்கும் கல்லெறிந்து வரும் ஹாஜிகள் இன்று சூரிய மறைவிற்குள் அந்த கிரிகையை முடிக்காவிட்டால் அவர்கள் இன்றிரவை மினாவில் தங்கி கழிக்க வேண்டும். 3 ஜம்ரத்துகளில் கல்லெறிந்தவர்கள் புனித மக்காவுக்கு திரும்பி தங்களின் இபாதாஹ் மற்றும் விடைபெறும் தவாபுகளை நிறைவேற்றுவர்.

இந்நிலையில், புனித மக்கா மற்றும் புனிதத் தலங்களில் பலத்த மழை பெய்து வருகின்றது. இம்மழையின் தாக்கத்திலிருந்து யாத்ரீகர்களை காப்பதற்கும், மினா குடில்களில் தங்கியிருப்போருக்கும் போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. புனித ஹரம் ஷரீஃபில் தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்ற 16 மழைநீர் அகற்றும் இயந்திரங்களுடன் 200 தொழிலாளர்கள் ஒவ்வொரு ஷிப்ட்டிலும் தொடர்ந்து உழைத்து வருகின்றனர். இதனால் தவாப் உள்ளிட்ட வணக்க வழிபாடுகள் தங்குதடையின்றி நடந்து வருகின்றன.

ஜித்தா விமான நிலையம் வழியாக புனித மக்கா வந்தவர்களை மஸ்ஜிதுன் நபவி மற்றும் ரசூல் ஸல் அவர்களின் அடக்கத்தலத்தை தரிசிப்பதற்காக அல் ஹரமைன் அதிவிரைவு ரயில் சேவைகளும் நடைபெற்று வருகின்றன.

Source: Saudi Gazette
தமிழில்: நம்ம ஊரான்

Sunday, August 11, 2019

அரபாவில் பெய்த திடீர் மழையால் குளிர்ந்த ஹாஜிகள் (படங்கள்)

அதிரை நியூஸ்: ஆக.11
அரபா மலைக்கு ஜபல் அல் ரஹ்மா அதாவது கருணை மலை என்ற இன்னொரு பெயரும் உண்டு. தற்போது சவுதியில் கடும் கோடை நிலவி வருகின்றது.

இந்நிலையில் ஹாஜிகள் ஏகன் அல்லாஹ்விடம் பிரார்த்தனை புரிவதற்காக குழுமியிருந்த வேளையில் அல்லாஹ்வின் ரஹ்மத்தான மழை திடீரென பெய்து ஹாஜிகளின் மனங்களையும், புனிதத் தலங்களைச் சுற்றியுள்ள மண்ணையும் குளிரச் செய்தது.

Source: Arab News
தமிழில்: நம்ம ஊரான்
படங்கள்: அப்துல் காதிர் மன்பஈ மற்றும் அரப் நியூஸ்

அரபாவில் ஹாஜிகள் குழுமிய காட்சிகள் (படங்கள்)

அதிரை நியூஸ்: ஆக.11
நபி (ஸல்) அவர்களின் ஹதீஸின்படி, ஹஜ் என்பது அரபா மலையில் (ஜபல் அல் ரஹ்மா எனவும் அழைக்கப்படுகின்றது) குழுமுவது தான், யார் அரபாவில் நிற்பதை தவறவிடுகின்றாரோ அவருக்கு ஹஜ் இல்லை (ஹதீஸ் கருத்து) என்பதன் அடிப்படையில் நேற்று காலையிலிருந்து மாலை வரை அரபா பெருவெளியில் குழுமியிருந்தனர்.

ரசூல் ஸல் அவர்கள் தங்களின் இறுதி ஹஜ்ஜின் இறுதிப்பேருரையை இங்கு தான் நிகழ்த்தினார்கள். 110,000 சதுர அடியில் பள்ளியுடனும் 80,000 சதுர அடி வராண்டாவுடனும் அமைந்துள்ள நமீரா மஸ்ஜிதில் (Namirah Masjid) நேற்று சனிக்கிழமை அரபாவில் கூடியிருந்த ஹாஜிகளுக்கு மத்தியில் இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கை, இஸ்லாம் கூறும் பொறுமை, சகிப்புத்தன்மை, சகோதரத்துவம் போன்றவற்றை கடைபிடிப்பதன் அவசியம் குறித்து எடுத்துக் கூறப்பட்டது.

நாள் முழுவதும் அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு தேடுவதில் ஈடுபட்டிருந்த ஹாஜிகள் சூரிய அஸ்தமனத்திற்கு பின் முஜ்தலீபாவை நோக்கி நடந்தனர். அங்கு மஃரிப் மற்றும் இஷா தொழுகைகளை சேர்த்தும் சுருக்கியும் நிறைவேற்றிய ஹாஜிகள் நள்ளிரவுக்குப் பின் மினாவில் உள்ள ஜமாரத் எனப்படும் ஷைத்தானுக்கு கல்லெறியும் அடையாள நிகழ்த்திய பின் ஹரம் ஷரீஃபில் தவாபை நிறைவேற்றச் சென்றனர்.

Source: Saudi Gazette
தமிழில்: நம்ம ஊரான்
 

Saturday, August 10, 2019

துல்ஹஜ் பிறை 8 ஆம் நாள் ஹஜ் கிரிகைகள் தொடக்கம்!

அதிரை நியூஸ்: ஆக.10
உலகெங்கும் இருந்தும் வந்துள்ள அல்லாஹ்வின் விருந்தினர்களான ஹஜ் யாத்ரீகர்கள் மக்காவிலிருந்து 5 கி.மீ தொலைவிலுள்ள city of tents என அழைக்கப்படும் மினா குடில்களில் தங்கி தங்களது 'லப்பைக் லப்பைக் அல்லாஹும்ம லப்பைக்' என்ற தல்பியா முழக்கத்துடன்... நடந்தும், பஸ், மெட்ரோ ரயில்களில் பயணித்தும் சென்றடைய துவங்கினர். இந்த நாளின் பெயர் "யவ்ம் அல் தர்வியா" அதாவது தண்ணீர் நாள் என்பதாகும். ஹாஜிகள் தங்களுக்கு தேவையான நீரை அருந்தியும், குளித்து சுத்தமாகியும், உடைகளை நீர் கொண்டு சுத்தம் செய்தும் கொள்வர், முன்பு தங்களின் போக்குவரத்து வாகனமான ஒட்டகத்திற்கும் நீர் புகட்டி அவற்றை நீர் ஊற்றி சுத்தம் செய்யும் நடைமுறை இருந்தது.

இன்று இரவை மினா குடிசையில் தங்கி கழிக்கும் ஹாஜிகள் நாளை அங்கிருந்து 9 கி.மீ தொலைவிலுள்ள அரபா பெருவெளியில் தங்கி வணக்க வழிபாடுகளில் ஈடுபடுவதுடன் அங்கு நிகழ்த்தப்படும் குத்பா பேருரையை செவியுறுவர். மேலும் லுஹர் மற்றும் அஸர் தொழுகைகளை சேர்த்து நிறைவேற்றுவார்கள்.

நாளை மாலை அரபாவிலிருந்து புறப்படும் ஹாஜிகள் முஜ்தலீபாவை அடைந்து அங்கு மஃரிப் மற்றும் இஷா தொழுகைகளை சேர்த்து நிறைவேற்றுவார்கள். பின்பு நள்ளிரவு அல்லது அதிகாலை வேளையில் புறப்படும் ஹாஜிகள் மினா பகுதியில் உள்ள ஜமாரத் எனப்படும் ஷைத்தனுக்கு கல்லெறியும் அடையாள நிகழ்வையும் நிறைவேற்றுவர்...

Source: Saudi Gazette
தமிழில்: நம்ம ஊரான்

உலகம் முழுவதிலிருந்து 2.5 மில்லியன் ஹாஜிகள் குவிந்தனர்!

அதிரை நியூஸ்: ஆக.10
இவ்வருட ஹஜ் கடமையை நிறைவேற்றுவற்காக உலகெங்கிலும் இருந்து 2.5 மில்லியனுக்கு மேற்பட்ட ஹஜ் யாத்ரீகர்கள் புனித மக்காவில் குவிந்துள்ளனர்.

ஹாஜிகள் அனைவரும் மினாவில் உள்ள கூடாரங்களில் தங்குவதற்காக கால் நடையாகவும், பேருந்துகள் மூலமும் சென்ற வண்ணமுள்ளனர். மினாவில் ஹாஜிகளுக்காக சுமார் 3.5 லட்சத்திற்கும் மேற்பட்ட ஏசி வசதி செய்யப்பட்ட குடில்கள் அமைக்கப்பட்டுள்ளன.

நாளைய தினம் ஹாஜிகள் அரபாத் பெருவெளியில் ஒன்று கூடுவார்கள். ஹாஜிகளுக்கு உதவுவதற்காக சவுதி அரசின் பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்களும் களத்தில் இறக்கிவிடப்பட்டு உதவி வருகின்றனர்.

மினாவில் ஹாஜிகள் தங்கிருக்கும் காட்சிகள்..
 
 


Source: Saudi Gazette
தமிழில்: நம்ம ஊரான்

Friday, August 9, 2019

ஹஜ் சேவையில் 3,000 தன்னார்வத் தொண்டர்கள் இணைப்பு!

அதிரை நியூஸ்: ஆக.09
சவுதி ஹஜ் அமைச்சகத்தின் "Be in Assistant" என்ற திட்டத்தின் கீழ் மேலும் 3,000 தன்னார்வ தொண்டர்கள் ஹஜ் சேவையில் இணைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் 747 பேர் மக்காவிற்கான பல்வேறு தரை மார்க்க நுழைவு மையங்களிலும், 500 பேர் புனித தலங்களிலும், 456 பேர் இரு புனிதப் பள்ளிகளிலும், 136 பேர் அல் ஜுஃபா மீக்காத் எல்லையிலும், எஞ்சியோர் சேவை தேவையுள்ள பல்வேறு பகுதிகளுக்கும் பிரித்தனுப்பப்பட்டு அல்லாஹ்வின் விருந்தினர்களுக்கு சேவையாற்றி வருகின்றனர்.

Source: Saudi Gazette
தமிழில்: நம்ம ஊரான்

சவுதியில் ஹஜ் கிரிகைகள் குறித்து செய்தி சேகரிக்க 1638 ஊடகங்களுக்கு உரிமம்!

அதிரை நியூஸ்: ஆக.09
சவுதி ஊடக அமைச்சகத்தின் (Ministry of Media) சார்பில் ஹஜ் கிரிகைகள் குறித்து செய்தி சேகரிக்க 1,638 ஊடகத்தினருக்கு உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளது.

923 சர்வதேச பத்திரிக்கையாளர்கள், 151 ரேடியோ மற்றும் டிவி நிலையங்கள், 36 சர்வதேச நியூஸ் ஏஜென்சிகள், 522 படப்பிடிப்பு தொடர்புடைய சாதனங்கள், 10 ஒளிபரப்பு வாகனங்கள் (Transmitting Cars) ஆகியவற்றிற்கும் லைசென்ஸ் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் 6 சர்வதேச சர்வதேச செய்தி நிறுவனங்கள் செயற்கைக்கோள் வழியாக 7 தரைத்தள நேரடி ஒளிபரப்பு நிலையங்களிலிருந்து 24 மணிநேரமும் ஹஜ் செய்திகளை ஒளிபரப்பு செய்யவும் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் 60 போட்டோகிராபர்கள், 20 டிவி இயக்குநர்கள், 25 கள ஆய்வுக்குழுவினர், 30 கள செய்தி தொகுப்பாளர்கள் உள்ளிட்ட பலரும் சர்வதேச சவுதி தூதரகங்கள் மூலம் சிறப்பு ஹஜ் விசா வழங்கப்பட்டும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Source: Saudi Gazette
தமிழில்: நம்ம ஊரான்

Wednesday, August 7, 2019

சவுதியில் புனித தலங்களில் குட்டி விமானங்கள் மூலம் 5G அலைகற்றைகள் வழங்க ஏற்பாடு!

அதிரை நியூஸ்: ஆக.07
புனித தலங்களில் குட்டி விமானங்கள் மூலம் 5G அலைகற்றைகள் வழங்க ஏற்பாடு

புனித மதினா, புனித மக்கா மற்றும் அதனை சுற்றியுள்ள புனிதத் தலங்களுக்கு குட்டி விமானங்கள் (Drones) மூலம் 5G அலைக்கற்றை சிக்னல்களை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மேலும் 5G சேவைக்கென பிரத்தியேகமாக 37 டவர்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இச்சிறப்பு வசதிகள் மூலம் கடந்த ஆண்டைக்காட்டிலும் சுமார் 80 சதவிகிதம் வேகம் அதிகரித்து காணப்படும் அதாவது தரவிறக்க வேகம் 44 Mbps ஆக இருக்கும்.

அதேபோல் புனிதத்தலங்களை சுற்றி 5,442 வைபை (Wi-Fi) மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன் வழமைபோல் 4G சேவைகளையும் இணைந்து வழங்க இவ்வருடம் கூடுதலாக 10% டவர்கள் அதிகரிக்கப்பட்டு சுமார் 13,000 செல் டவர்கள் செயல்பட்டு வருகின்றன.

Source: Saudi Gazette
தமிழில்: நம்ம ஊரான்

5,000 ஆண்டுகளாக வற்றாத நீர் கொண்ட ஜம்ஜம் கிணறு எனும் உலக மகா அதிசயம்!

அதிரை நியூஸ்: ஆக. 07
புனித மக்கா நகரில் அமைந்துள்ள கஃபத்துல்லாஹ் கட்டிடத்தில் இருந்து சுமார் 20 மீட்டர் தூரத்தில் அமைந்துள்ள ஜம்ஜம் எனும் உலக மகா அதிசயக் கிணறு கடந்த சுமார் 5,000 ஆண்டுகளாக நீரை வாரி வழங்கி வருகிறது.

கடும் பாலைவன பிரதேசத்தில் நீர் ஊருவதற்கான வழியே இல்லாத இடத்தில் அமைந்துள்ள இந்த ஜீவகிணறு சுமார் 30 அடி ஆழம் மட்டுமே உடையது.

ஒரு மணித்துளிக்கு (per second) அதிகபட்சம் 18.5 லிட்டர் நீரையும் குறைந்தபட்சமாக 11 லிட்டரையும் வாரி இறைத்து ஹஜ், உம்ரா யாத்ரீகர்களின் தாகத்தை நித்தமும் தனித்து வருகின்றது.

சுமார் 5,000 ஆண்டுகளுக்கு முன்னால் நபி இப்ராஹீம் (அலை) அவர்கள் தனது மனைவி ஹாஜரா (அலை) அவர்களையும் கைக்குழந்தையாக இருந்த நபி இஸ்மாயில் (,அலை) அவர்களையும் இறைவனின் உத்தரவிற்கு இணங்க பாலைவனத்தில் விட்டுச் சென்றபோது தாகத்தால் கதறிய குழந்தை இஸ்மாயில் (அலை) அவர்களின் பசி, தாகத்தை தீர்ப்பதற்கு இறைவனின் அனுமதி கொண்டு வானவர் ஜிப்ரீல் (அலை) அவர்கள் தனது சிறகால் அடித்து நீரை பீறிட செய்தார்கள்.

பின்பு அப்துல் முத்தலீப் அவர்களுடைய காலத்தில் ஹஜ் யாத்ரீகர்களின் தாகம் தீர்ப்பதற்காக புனரமைப்பு செய்யப்பட்டது.

Source: Saudi Gazette
தமிழில்: நம்ம ஊரான்

Tuesday, August 6, 2019

மக்காவில் அனுமதியின்றி நுழைய முயன்ற 329,000 பேர் தடுத்து நிறுத்தம்!

அதிரை நியூஸ்: ஆக.06
அனுமதியின்றி மக்காவிற்குள் நுழைய முயன்ற 329,000 பேர் தடுத்து நிறுத்தம்

புனித ஹஜ் சீசன் தொடங்கியது முதல் இதுவரை சுமார் 329,000க்கு மேற்பட்டோர் ஹஜ் பெர்மிட் இன்றி புனித மக்காவிற்குள் நுழைய முயன்றபோது தடுத்து திருப்பி அனுப்பப்பட்டனர். மேலும் 144,000 வாகனங்களும் திருப்பியனுப்பப்பட்டனர்.

ஹஜ் அனுமதி இல்லாமல் ஹஜ் செய்ய முயன்ற 15 கைது செய்யப்பட்டனர். சவுதி அரசின் பல்வேறு துறைகளை சேர்ந்த சுமார் 350,000 ஹஜ் சேவை பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Source: Saudi Gazette
தமிழில்: நம்ம ஊரான்

Monday, August 5, 2019

மக்காவின் புனித ஹரம் ஷரீஃப் பள்ளியிலிருந்து எழுத்துப்பிழையுள்ள குர்ஆன் பிரதிகள் அகற்றம்!

அதிரை நியூஸ்: ஆக.05
மக்காவின் புனித ஹரம் ஷரீஃப் பள்ளியிலிருந்து எழுத்துப்பிழையுள்ள குர்ஆன் பிரதிகள் அகற்றம்

புனித மக்காவிலுள்ள புனிதப்பள்ளியான ஹரம் ஷரீஃபில் சுமார் 3,000 புத்தக அலமாரிகள் (Book Shelves) உள்ளன. இவற்றில் ஹஜ், உம்ரா யாத்ரீகர்கள் ஓதுவதற்காக குர்ஆன் பிரதிகள் வைக்கப்பட்டுள்ளன.

இந்த புத்தக அலமாரிகளை இரு புனிதப்பள்ளிகளின் நிர்வாகத் தலைமையின் கீழ் இயங்கும் புத்தகத்துறை நிர்வகித்து வருகின்றது. இத்துறையின் சார்பாக 70 ஊழியர்களும் 140 பணியாளர்களும் 24 மணிநேரமும் சுழற்சிமுறையில் பணியாற்றி வருகின்றனர்.

இந்த புத்தக அலமாரிகளை தினமும் சுத்தம் செய்வதுடன் எழுத்துப்பிழை, அச்சுப்பிழை, பக்கங்கள் கிழிந்த குர்ஆன் பிரதிகளை கண்டறிந்து அப்புறப்படுத்தி வருகின்றனர். இவ்வாறாக தினமும் சுமார் 9,000 பிரதிகள் அப்புறப்படுத்தபடுகின்றன. இக்குறைபாடுடையவைகள் பெரும்பாலும் சிரியாவில் அச்சிடப்பட்டு சிரியா நாட்டைச் சேர்ந்த யாத்ரீகர்களால் நன்மையை நாடி ஹரம் ஷரீஃபில் வைக்கப்படுபவை.

இவற்றிற்கு மாற்றாக புனித மதினா நகரில் உள்ள கிங் பஹத் குர்ஆன் அச்சகத்தில் அச்சிடப்பட்ட சுமார் 1 மில்லியன் குர்ஆன் பிரதிகள் தேவைக்கு ஏற்ப வைக்கப்படுகின்றன. இவற்றிற்கான அங்கீகார முத்திரைகளும் பதிக்கப்பட்டிருக்கும். இவைகளை வெளியே எடுத்துச்செல்ல அனுமதியில்லை.

மேலும், தினமும் 1,000 குர்ஆன் பிரதிகளும், தொழுகை விரிப்புகளும் ஹஜ் யாத்ரீகர்களுக்கு அன்பளிப்பாக இரு புனிதப் பள்ளிகளின் நிர்வாகத் தலைமையகம் சார்பில் வழங்கப்பட்டும் வருகின்றன.

Source: Saudi Gazette
தமிழில்: நம்ம ஊரான்

ஹஜ் செய்யும் நியூஸிலாந்து துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அன்பான வரவேற்பு!

அதிரை நியூஸ்: ஆக. 05
ஹஜ் செய்யும் நியூஸிலாந்து துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அன்பான வரவேற்பு

நியூஸிலாந்து நாட்டின் 2 மஸ்ஜிதுகளில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்டவர்களின் உறவினர்கள் மன்னரின் விருந்தினர்கள் என்ற திட்டத்தின் கீழ் இவ்வருடம் ஹஜ் செய்ய வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளனர்.

இவர்களின் முதலாவது குழு கடந்த வெள்ளியன்று ஜித்தா விமான நிலையத்தில் வந்திறங்கினர். இவர்களுக்கு பேரீத்தம் பழங்கள், ஜம்ஜம் நீர், ரோஜா மலர் மற்றும் இதர பரிசுப் பொருட்களை வழங்கி அன்போடு வரவேற்றார் ஜித்தா விமான நிலையத்தின் ஜாவாஜத் துறையின் டைரக்டர் கர்னல். சுலைமான் அல் யூசுப், அப்போது நியூஸிலாந்து நாட்டின் தூதர் ஜேம்ஸ் மன்றோ அவர்களும் உடனிருந்து வரவேற்றதுடன் மன்னரின் இத்திட்டத்திற்கு தனது நன்றியையும் தெரிவித்துக் கொண்டார்.

இந்த ஆண்டு மன்னரின் விருந்தினர்கள் என்ற திட்டத்தில் சுமார் 6,000 பேர் ஹஜ் செய்யவுள்ள நிலையில் கடந்தாண்டு வரை 53,747 பேர் ஹஜ் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Source: Saudi Gazette
தமிழில்: நம்ம ஊரான்
 

சவுதியில் இதுவரை 107 ஹஜ் யாத்ரீகர்களுக்கு இருதய அறுவை சிகிச்சை!

அதிரை நியூஸ்: ஆக. 05
ஹஜ் யாத்ரீகர்களுக்கு இதுவரை 107 இதய அறுவை சிகிச்சைகள் நடைபெற்றுள்ளது

சவுதி சுகாதார அமைச்சகத்தின் கீழ் மக்கா, மதினா ஆகிய நகரங்களில் உள்ள மருத்துவமனைகளில் துல்காயிதா பிறை 1 முதல் புதன்கிழமை (31.07.2019) வரை 107 ஓப்பன் ஹார்ட் அறுவை சிகிச்சைகள் நடைபெற்றுள்ளன. 683 கூழ்மப்பிரிப்பு சிகிச்சைகள் (Dialysis Procedures), 35 நுண்ணோக்கி சிகிச்சைகள் (Binocular Operations), 219 பொதுவான சிகிச்சைகள், 4 பிரசவங்கள், 16 வெப்பச் சோர்வு (Heat Exhaustion), 1,024 பொது சுகாதர பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.

இதற்கிடையில், மக்கா அருகிலுள்ள கிங் அப்துல்லா மெடிக்கல் சிட்டி மருத்துவ மனையில் ஹஜ் யாத்ரீகர்களுக்கு163 இதய நோய்களுக்கான (160 Cardiac Catheterization, 3 Open Heart Operations) ஆபரேஷன்கள் செய்யப்பட்டுள்ளன.

Source: Saudi Gazette
தமிழில்: நம்ம ஊரான்

ஹஜ் யாத்ரீகர்களின் வசதிக்காக 5G இணைய சேவை துவக்கம்!

அதிரை நியூஸ்: ஆக. 05
புனித மக்கா மற்றும் அதனை சுற்றியுள்ள புனித பகுதிகளில் அல்லாஹ்வின் விருந்தினர்களான ஹஜ் யாத்ரீகர்களின் வசதிக்காக 5G நெட்வொர்க் சேவையை துவக்கியுள்ளனர் சவுதி தொலைத்தொடர்பு துறையினர்.

இப்புதிய 5G நெட்வொர்க் சேவையை புதன்கிழமை அன்று புனித மக்கா நகரின் அமீரும், சவுதி மத்திய ஹஜ் கமிட்டியின் தலைவருமான இளவரசர் காலித் அல் பைசல் இப்புதிய சேவையை துவக்கி வைத்தார்.

சவுதி தொலைத்தொடர்பு துறையினர் ஏற்கனவே இப்பிரதேசத்தில் 4G நெட்வொர்க் வழங்கி வரும் நிலையில் மக்கா மற்றும் அதன் புனிதத் தலங்களைச் சுற்றி 37 இடங்களில் 5G நெட்வொர்க் ஸ்டேசன்களை அமைத்து வழங்கி வருகின்றனர். ஹஜ் யாத்ரீகர்கள் இப்புதிய உயரிய தொழில்நுட்பத்தின் மூலம் அதிவேக டிஜிட்டல் சேவைகளை பெற முடியும்.

Source: Saudi Gazette
தமிழில்: நம்ம ஊரான்