.

Pages

Showing posts with label AAMF. Show all posts
Showing posts with label AAMF. Show all posts

Tuesday, April 28, 2020

பாதிக்கப்பட்ட அதிராம்பட்டினம் தென்னை விவசாயிகள் பட்டியல் வருவாய் ஆய்வாளரிடம் ஒப்படைப்பு!

அதிராம்பட்டினம், ஏப்.28
பாதிக்கப்பட்ட தென்னை விவசாயிகளின் பட்டியல் வருவாய் ஆய்வாளரிடம் அதிரை அனைத்து மஹல்லா கூட்டமைப்பு நிர்வாகிகள் இன்று (ஏப்.28) செவ்வாய்க்கிழமை ஒப்படைத்தனர்.

அதிராம்பட்டினம் சுற்றுப்புற கிராமங்களின் இணைப்பு சாலைகளில் ஆங்காங்கே தடுப்பு வைத்து அடைத்திருப்பதால், ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலப்பரப்பில் சாகுப்படி செய்திருக்கும் தென்னை விவசாயப்பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அதிராம்பட்டினம் பகுதி விவசாயிகள் தங்களது சொந்த நிலங்களுக்கு சென்று அன்றாட விவசாயப்பணிகளைத் தொடர்வதில் தொய்வு ஏற்பட்டுள்ளது. எனவே, இதுகுறித்து கிராம மக்களிடையே போதிய விழிப்புணர்வை ஏற்படுத்தி, விவசாயிகள் தங்களது விவசாய நிலங்களில் அன்றாடப் பணிகளைத் தொடர்வதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென அதிரை அனைத்து மஹல்லா கூட்டமைப்பு சார்பில், கடந்த (ஏப்.16) அன்று பட்டுக்கோட்டை சார் ஆட்சியர் ஏ.ஆா். கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் அவர்களை நேரில் சந்தித்து மனு அளித்து இருந்தனர்.

இதையடுத்து, விவசாயிகள் தங்களது சொந்த நிலங்களுக்கு செல்ல அனுமதிக்க மறுக்கும் நபரின் பெயர், கிராமப் பகுதியின் பெயர், பாதிக்கப்பட்ட விவசாயி பெயர் ஆகிய விவரங்களை தெரிவித்தால், அங்கு, வட்டார வளர்ச்சி அலுவலரை அனுப்பி விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக சார் ஆட்சியர் தெரிவித்து இருந்தார். அதன் அடிப்படையில், அதிரை அனைது மஹல்லா கூட்டமைப்பு தலைவர் எம்.எஸ்.எம் முகமது அபூபக்கர், துணைத்தலைவர் பி.எம்.கே தாஜுதீன், செயலாளர் எம்.நெய்னா முகமது ஆகியோர் பாதிக்கப்பட்ட தென்னை விவசாயிகள் பட்டியலை அதிராம்பட்டினம் வருவாய் ஆய்வாளர்கள் உமர், சரவணன் ஆகியோரிடம் இன்று செவ்வாய்க்கிழமை மாலை வழங்கினர்.  அப்போது, அதிராம்பட்டினம் கிராம நிர்வாக அலுவலர் முகமது அசாருதீன், கிராம நிர்வாக உதவியாளர்கள் பத்மநாபன், பாலா உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Thursday, April 16, 2020

அதிரை அனைத்து மஹல்லா கூட்டமைப்பு நிர்வாகிகள் சப்-கலெக்டருடன் சந்திப்பு!

அதிராம்பட்டினம், ஏப்.16
அதிராம்பட்டினம் பகுதிக்கு அத்தியாவசிய உணவுப்பொருட்கள் தடையின்றி முழுமையாக கிடைக்கவும், அதிராம்பட்டினம் பகுதி தென்னை விவசாயிகள் தங்களது விவசாய நிலங்களுக்கு சென்று அன்றாட விவசாயப்பணிகளை தொடர அனுமதிக்கவும், இஸ்லாமியர்கள் 'கரோனா வைரசை' பரப்புகிறார்கள் என அவதூறு பரப்புவோர் மீது நடவடிக்கை எடுப்பது ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி அதிரை அனைத்து மஹல்லா கூட்டமைப்பு சார்பில், அவ்வைமைப்பின் துணைத்தலைவர் பி.எம்.கே தாஜுதீன், செயலாளர் எம்.நெய்னா முகமது, ஆலோசகர் எம்.நிஜாமுதீன் ஆகியோர் பட்டுக்கோட்டை சார் ஆட்சியர் ஏ.ஆா். கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் அவர்களை இன்று (ஏப்.16) வியாழக்கிழமை பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் சந்தித்து மனு அளித்தனர்.

அதிரை அனைத்து மஹல்லா கூட்டமைப்பு நிர்வாகிகள் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பது;
1. அதிராம்பட்டினம் சுற்றுப்புற கிராமங்களின் இணைப்பு சாலைகளில் ஆங்காங்கே தடுப்பு வைத்து அடைத்திருப்பதால், ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலப்பரப்பில் சாகுப்படி செய்திருக்கும் தென்னை விவசாயப்பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அதிராம்பட்டினம் பகுதி விவசாயிகள் தங்களது சொந்த நிலங்களுக்கு சென்று அன்றாட விவசாயப்பணிகளைத் தொடர்வதில் தொய்வு ஏற்பட்டுள்ளது. எனவே, இதுகுறித்து கிராம மக்களிடையே போதிய விழிப்புணர்வை ஏற்படுத்தி, விவசாயிகள் தங்களது விவசாய நிலங்களில் அன்றாடப் பணிகளைத் தொடர்வதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

2. கரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அரசின் ஊரடங்கு உத்தரவை அடுத்து, தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் சுற்றுப்புறத்தில் உள்ள மாளியக்காடு, ராஜாமடம் ஈசிஆர், மழவேனிற்காடு, வள்ளிக்கொல்லைகாடு ஈசிஆர் ஆகிய 4 பிரதான சாலைகள் வழியாக வரும் வாகனங்களை போலீசார் தணிக்கை செய்வதால், அதிராம்பட்டினம் பகுதிக்கு அத்தியாவசிய உணவுப்பொருட்கள் முழுமையாக கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. எனவே, எங்கள் பகுதி பொதுமக்களுக்கு அத்தியாவசிய உணவுப்பொருட்கள் முழுமையாக கிடைப்பதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

3. இஸ்லாமியர்கள் 'கரோனா வைரசை' பரப்புகிறார்கள் என்று அதிராம்பட்டினம் சுற்றுப்புற கிராமங்களில் அவதூறு பரப்பப்படுவதால், அதிராம்பட்டினம் பகுதி இஸ்லாமியர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர். எனவே, இஸ்லாமியர்களுக்கு எதிராக அவதூறு பரப்புவோர் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். என இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மனுவை பெற்றுக்கொண்டு சார் ஆட்சியர் ஏ.ஆா். கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் மனு மீது உரிய நடவடிக்கை மேற்கொள்வதாகத் தெரிவித்தார்.
 

Wednesday, April 8, 2020

அதிரை அனைத்து மஹல்லா கூட்டமைப்பின் முக்கிய அறிவிப்பு!

அதிராம்பட்டினம், ஏப்.08
அதிராம்பட்டினம் பகுதி பொதுமக்களுக்கு அத்தியாவசியப் உணவுப் பொருட்கள் கிடைப்பதில் ஏதேனும் தட்டுப்பாடு ஏற்பட்டால், அதிரை அனைத்து மஹல்லா கூட்டமைப்பின் நிர்வாகிகளை தொடர்பு கொண்டு உதவிகளைப் பெறலாம் என அவ்வமைப்பின் நிர்வாகிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து இன்று (ஏப்.08) வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பது;
தற்போது அரசின் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், அதிராம்பட்டினம் பகுதிகளுக்கு பால், காய்கறிகள், மளிகை சாமான்கள், உள்ளிட்ட அத்தியாவசியப் உணவுப் பொருட்களை ஏற்றிக்கொண்டு வரும் வாகனங்களுக்கு ஏதேனும் திடீர் இடையூறு ஏற்பட்டாலோ அல்லது பொதுமக்களுக்கு அத்தியாவசியப் உணவுப் பொருட்கள் கிடைப்பதில் ஏதேனும் தட்டுப்பாடு ஏற்பட்டாலோ கீழ்காணும் அதிராம்பட்டினம் அனைத்து ஜமாத் நிர்வாகிகளை உடனடியாக தொடர்பு கொண்டு உதவியைப் பெறலாம்.

ஹாஜி எம்.எஸ்.எம் அபூபக்கர் (9790629382)
பி.எம்.கே தாஜுதீன் (9750044349)
ஹாஜி எம்.நெய்னா முகமது (9442223190)
ஏ.தாஜுதீன் (9789329723)
என்.முகமது ஜபருல்லா (9688996034)
பி.எம்.எஸ் அகமது அமீன்  (6385399934)
டி.அகமது அனஸ் (9994247111)
சேக்கனா எம்.நிஜாமுதீன் (9442038961)
இ.வாப்பு மரைக்காயர் (9944588689)

மேலும், பால் தட்டுப்பாட்டை போக்கும் விதத்தில், அதிரை அனைத்து மஹல்லா கூட்டமைப்பின் சார்பில், பால் மொத்த விற்பனை நிலையம் மூலம் கொள்முதல் செய்து, அந்தந்த மஹல்லா ஜமாத்தார் மூலம் பொதுமக்களுக்கு நேரடியாக பால் விநியோகிக்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

எனவே, பால் தேவையுடையோர் 9750044349, 9442223190 ஆகிய அலைப்பேசி எண்களில் அதிரை அனைத்து மஹல்லா கூட்டமைப்பு நிர்வாகிகளை தொடர்பு கொள்ளலாம். என இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Wednesday, March 25, 2020

அதிராம்பட்டினத்தில் ஜமாத்தார்கள் அவரவர் வீடுகளில் தொழுதுகொள்ள அதிரை ஜமாஅத்துல் உலமா சபை அறிவுறுத்தல்!

அதிராம்பட்டினம், மார்ச் 25
அதிராம்பட்டினத்தின் அனைத்து ஜமாத்தார்கள் அவரவர் வீடுகளில் 5 வேளை ஜமாத் தொழுகையை தொழுதுகொள்ள அதிரை ஜமாஅத்துல் உலமா சபை இன்று (25-03-2020) புதன்கிழமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து இன்று (25-03-2020) வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பது;
உலகில் தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரண சூழலை நாம் அறிவோம். நோயின் வீரியம் அதிகமாகி வருவதைக் கருத்தில் கொண்டு, நம்மால் இயன்றளவு நம்மை நாம் தற்காத்துக்கொள்ள மார்க்கம் நமக்கு வழிகாட்டி இருப்பதன் அடிப்படையில், மறு அறிவிப்பு வரும் வரை பின்வரும் விசயங்களில் பேணவேண்டும்.

1] 5-வேளை தொழுகைகளுக்கும் பள்ளிவாசல்களில் பாங்கு சொல்லப்படும். ஜமாத்தார்கள் அனைவரும் அவரவர் வீடுகளில் தொழுது கொள்ள வேண்டும்.

2]  வெள்ளிக்கிழமை அன்றும் ஜமாத்தார்கள் அனைவரும் தங்களது இல்லங்களில் லுஹர் தொழுகையை தொழுதுகொள்ள வேண்டும்.

3] அவசிய தேவையின்றி வீடுகளிலிருந்து வெளியே வராமல் இருக்கும் படியும், இந்த சூழ்நிலை வெகுவிரைவில் மாறுவதற்கு அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு தேடுவதுடன் மற்ற நல் அமல்களில் ஈடுபடுமாறு ஜமாத்தார்கள் அனைவரையும் கேட்டுக்கொள்ளப்படுகிறது. என இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

முன்னதாக, அதிரை அனைத்து மஹல்லா கூட்டமைப்பு மற்றும் அதிரை அனைத்து ஜும்மா பள்ளிவாசல் நிர்வாகிகள் சிறப்பு ஆலோசனைக்கூட்டம் தக்வா பள்ளிவாசல் வளாகத்தில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு, அதிராம்பட்டினம் பெரிய ஜும்மா பள்ளிவாசல் நிர்வாகக் கமிட்டித் தலைவர் ஹாஜி எம்.எம்.எஸ் தாஜுதீன் தலைமை வகித்தார். புதுமனைத்தெரு முகைதீன் ஜும்மா பள்ளிவாசல் நிர்வாகக் கமிட்டித் தலைவர் ஹாஜி எம்.எஸ் ஷிகாபுதீன் மற்றும் அதிரை அனைத்து மஹல்லா கூட்டமைப்பு நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில், கரோனா வைரஸ் நோய் தொற்று தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் மாா்ச் 24 ஆம் தேதி முதல் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், அதிராம்பட்டினத்தின் அனைத்து ஜும்மா பள்ளிவாசல்களில் வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகை மற்றும் அனைத்து பள்ளிவாசல்களில் 5 வேளை ஜமாத் தொழுகை நடத்துவது தொடர்பாக விவாதிக்கப்பட்டது. நிறைவில், அதிரை உலமாக்கள் சபையை அணுகி அவர்கள் தீர்மானித்து அறிவிக்கும் முடிவை ஏற்றுக்கொண்டு அனைத்து பள்ளிவாசல்களிலும் அறிவிப்பது என முடிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
 
 
 

Sunday, March 22, 2020

அதிரை அனைத்து மஹல்லா கூட்டமைப்பின் அறிவிப்பு!

கோப்புப்படம்
அதிராம்பட்டினம், மார்ச் 22
குரோனா வைரஸ் பரவுவதை தடுக்க இன்று (22-03-2020) ஞாயிற்றுக்கிழமை சுய ஊரடங்கை மக்கள் கடைபிடிக்க வேண்டும் என்று அரசு அறிவித்துள்ளதை கருத்தில் கொண்டு, அரசு மேற்கொண்டு வரும் குரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்கு, முழு ஒத்துழைப்பு வழங்கும் விதத்தில், அதிராம்பட்டினத்தில் இன்று காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை அனைத்து மஹல்லாவாசிகளும் சுய ஊரடங்கை கடைபிடிக்குமாறு அதிரை அனைத்து மஹல்லா கூட்டமைப்பின் சார்பில் அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இப்படிக்கு,
அதிரை அனைத்து மஹல்லா கூட்டமைப்பு,

Tuesday, February 18, 2020

அதிரை அனைத்து மஹல்லா கூட்டமைப்பு நிர்வாகிகளின் ஆலோசனைக்கூட்டம்!

அதிராம்பட்டினம், பிப்.18
அதிரை அனைத்து மஹல்லா கூட்டமைப்பின் நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம், அதிராம்பட்டினம் ஜாவியா வளாகத்தில் இன்று (18-02-2020) செவ்வாய்க்கிழமை காலை நடைபெற்றது.

கூட்டத்திற்கு, அவ்வமைப்பின் தலைவர் ஹாஜி எம்.எஸ்.எம் முகமது அபூபக்கர் தலைமை வகித்தார். அதிரை அனைத்து மஹல்லா கூட்டமைப்பு நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். கூட்டத்தை, ஹாஜி எஸ்.எம்.ஏ அகமது கபீர் கிராத் ஓதி தொடங்கி வைத்தார்.

இக்கூட்டத்தில், ஜமாஅத்துல் உலமா சபை, அனைத்து இஸ்லாமிய கூட்டமைப்புகள், கட்சிகள் சார்பில், தமிழக சட்டமன்றத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு (சிஏஏ) எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆா்சி), தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு (என்பிஆர்) நடைபெறாது என தமிழக அரசு அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை (19-02-2020) புதன்கிழமை காலை நடைபெற உள்ள மாவட்ட ஆட்சியரக முற்றுகை போராட்டத்தில், அதிராம்பட்டினம் அனைத்து மஹல்லா கூட்டமைப்பின் சார்பில், திரளானோர் பங்கேற்பது எனவும், போராட்டக் களத்திற்கு பயணிக்க முதல்கட்டமாக 10 வேன் வாகனங்களுக்கு ஏற்பாடு செய்வது எனவும் முடிவு செய்யப்பட்டது.

இக்கூட்டத்தில், சிறப்பு அழைப்பின் பேரில் ஜாவியா நிர்வாகக் கமிட்டித் தலைவர் எம்.பி அபூபக்கர், அதிரை அனைத்து மஹல்லா கூட்டமைப்பு நிர்வாகிகள் பி.எம்.கே தாஜுதீன், எஸ்.எம். முகமது முகைதீன், ஏ.தாஜுதீன், ஜபருல்லாஹ், ஏ.அப்துல் ரெஜாக், பி.எம்.எஸ் அமீன், டி.அகமது அனஸ், இ.வாப்பு மரைக்காயர், பி.ஜமாலுதீன், அகமது அனஸ், எம்.அப்துல் ஜலீல், எம்.நிஜாமுதீன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

 

Sunday, January 26, 2020

அதிரை அனைத்து மஹல்லா கூட்டமைப்பின் குடியரசு தின விழா பேரணி ~ கொடியேற்றம் (படங்கள்)

அதிராம்பட்டினம், ஜன.26
அதிரை அனைத்து மஹல்லா கூட்டமைப்பின் இந்திய 71-வது குடியரசு தின விழா பேரணி ~ கொடியேற்றும் நிகழ்ச்சி அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் இன்று (26-01-2020) ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, அவ்வமைப்பின் தலைவர் ஹாஜி எம்.எஸ்.எம் முகமது அபூபக்கர் தலைமை வகித்து, இந்திய தேசியக்கொடியை ஏற்றி வைத்தார். அவ்வமைப்பின் செயலாளர் ஹாஜி எம். நெய்னா முகமது அனைவரையும் வரவேற்று, குடியரசு தின உறுதிமொழியை வாசித்தார்.

சிறப்பு அழைப்பாளர்களாக மவ்லவி. எம்.எச் முகமது இப்ராஹீம், பட்டிமன்ற பேச்சாளர் அண்ணா சிங்காரவேலு, தங்க குமரவேல் ஆகியோர் கலந்துகொண்டு குடியரசு தின விழா உரை நிகழ்த்தினர். நிறைவில், பி.ஜமாலுதீன் நன்றி கூறினார். அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.

முன்னதாக, அதிரை அனைத்து மஹல்லா கூட்டமைப்பின் நிர்வாகிகள், சமுதாய அமைப்புகளின் பிரதிநிதிகள், கிராம பஞ்சாயத்தார்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள், ஊர் பிரமுகர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்ட பேரணி, அதிராம்பட்டினம் தக்வா பள்ளிவாசல் அருகில் இருந்து புறப்பட்டு கிழக்கு கடற்கரைச்சாலை வழியாக பேருந்து நிலையம் வந்தடைந்தது. இதில், அனைவரும் இந்திய தேசியக் கொடியை கையில் ஏந்தியும், சட்டையில் அணிந்துகொண்டும் அமைதியாகச் சென்றனர்.

 
 
 

Friday, January 17, 2020

அதிராம்பட்டினத்தில் மஹல்லா கூட்டமைப்பு ~ சமுதாய அமைப்புகளின் ஆலோசனைக்கூட்டம் (படங்கள்)

அதிராம்பட்டினம், ஜன.17
அதிராம்பட்டினம் அனைத்து ஜமாத் நிர்வாகிகள், சமுதாய அமைப்புகளின் நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனைக்கூட்டம், அதிரை ஜாவியா வளாகத்தில் (16-01-2020) வியாழக்கிழமை மாலை நடைபெற்றது.

கூட்டத்திற்கு, அதிரை அனைத்து மஹல்லா கூட்டமைப்பின் தலைவர் ஹாஜி எம்.எஸ்.எம் முகமது அபூபக்கர் தலைமை வகித்தார். கூட்டத்தை, ஹாஜி எஸ்.எம்.ஏ அகமது கபீர் கிராத் ஓதி தொடங்கி வைத்தார். மவ்லவி. ஏ.எஸ் அகமது இப்ராஹீம், மவ்லவி. எம்.முகமது மீரான், மவ்லவி. சபியுல்லா அன்வாரி மற்றும் அதிரை அனைத்து மஹல்லா கூட்டமைப்பின் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

அவ்வமைப்பின், செயலாளர் ஹாஜி எம்.நெய்னா முகமது அனைவரையும் வரவேற்றுப் பேசினார். பின்னர், அமைப்பின் நோக்கம் மற்றும் செயல்பாடுகள் பற்றி எடுத்துரைத்தார்.

கூட்டத்தில், அதிராம்பட்டினம் சம்சுல் இஸ்லாம் சங்கம், மேலத்தெரு தாஜுல் இஸ்லாம் சங்கம், கடற்கரைத்தெரு ஜும்மா பள்ளிவாசல் நிர்வாகக் கமிட்டி, தரகர் தெரு முகைதீன் ஜும்மா பள்ளிவாசல் நிர்வாகக் கமிட்டி, கீழத்தெரு அல் மதரஸத்துல் நூருல் முஹம்மதியா சங்கம், புதுத்தெரு மிஷ்கின் சாஹிப் பள்ளிவாசல் நிர்வாகக் கமிட்டி, நெசவுத்தெரு மஆதினுல் ஹஸனாத்தில் இஸ்லாமிய சங்கம், பிலால் நகர் ஜமாத், எம்.எஸ்.எம் நகர் மஸ்ஜிதுர் ரஹ்மான் நிர்வாகக் கமிட்டி, பெரிய தைக்கால் தெரு மக்கா மஸ்ஜித் நிர்வாகக் கமிட்டி ஆகிய மஹல்லா நிர்வாகிகள், அதிரை அனைத்து மஹல்லா இளைஞர்கள் சங்க நிர்வாகிகள், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகம், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், எஸ்.டி.பி.ஐ, பி.எப்.ஐ, மனிதநேய மக்கள் கட்சி, மனிதநேய ஜனநாயகக் கட்சி, என்.டி.எப் ஆகிய அமைப்புகளின் நிர்வாகிகள் கலந்துகொண்டு ஆலோசனைகள் வழங்கினர். நிறைவில், அவ்வமைப்பின் ஆலோசகர் எம்.நிஜாமுதீன் நன்றி கூறினார்.