அஸ்ஸலாமு அலைக்கும்,
அன்பிற்கினிய சகோதரர்களே,
நம் நாட்டில் கல்வி மற்றும் அரசுத்துறை வேலைவாய்ப்புகளில் இஸ்லாமியர்களின் நிலை நாட்டின் மொத்த மக்கள் தொகை விகிதாச்சாரப்படி மிகவும் பின் தங்கியுள்ளது என்பது அனைவரும் அறிந்த உண்மை. தமிழகத்திலிருந்து கடந்த 18 ஆண்டுகளில் இது வரை ஒரு முஸ்லிம் கூட இந்திய அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படுகின்ற தேர்வுகளில் வெற்றிப்பெற்று ஆட்சிப்பணிக்கு தேர்ந்தெடுக்கப்படவில்லை என்பது மிகவும் வேதனைக்குரிய விடயம். அந்த அளவுக்கு மத்திய அரசுப்பணியாளர் தேர்வாணைய (UPSC) வேலைவாய்ப்புகளில் நமது சமுதாயம் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளது.
மத்திய அரசு நியமித்த குழுக்களின் பரிந்துரையின் அடிப்படையில் இட ஒதுக்கீடு முறை பின்பற்றப்பட்டாலும் நம் சமுதாய மாணவர்களுக்கு விழிப்புணர்வும் போட்டியிடும் தன்மையும் குறைவாகவே உள்ளது என்றால் அது மிகையல்ல. மேலும் சில மாநிலங்களில் இட ஒதுக்கீடு முறை பின்பற்றப்படுகின்றபோதிலும் நம் சமுதாய மாணவர்களின் சேர்க்கை விகிதம் விகிதாச்சாரப்படி ஒதுக்கப்பட்ட இடங்களை கூட நிரப்ப முடியாத நிலையில்தான் உள்ளது.
இந்த சூழ்நிலையில், ஒட்டுமொத்த இந்தியாவின் கணக்கெடுப்பின் அடிப்படையில் பார்த்தால் அதிரையில் நிலை இன்னும் மோசம் என்ற நிலையிலேயே உள்ளது. உதாரணத்திற்கு சுதந்திர இந்தியாவில் இதுவரை நமதூரை சார்ந்த நம் சமுதாயத்தவர் ஒருவர் கூட இந்திய அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படுகின்ற ( UPSC Exam ) தேர்வுகளில் வெற்றிபெற்றதாகவோ அல்லது பங்கேற்றதாகவோ அறியப்பட்டதில்லை.
நம் நாட்டில் நாம் விரும்புகின்ற நேர்மையான ஆட்சி நிலைநாட்டப்படவேண்டுமென்றால் நம் சமுதாயத்தினர் உயர் அரசுப்பதவிகளில் செயலாற்றவேண்டும், அப்படி செயல்படுபவர்கள் பெயரளவில் மட்டும் முஸ்லிமாக இல்லாமல் நல்ல உள்ளச்சமுடையவர்களாகவும், சமுதாயத்தின்பால் அக்கறையுள்ளவராகவும், இஸ்லாம் கற்றுத்தந்த நெறிமுறைகளை பின்பற்றுபவராக இருந்தால் மட்டுமே நமது அந்த உயரிய நோக்கம் சாத்தியப்படும்.
இதனடிப்படையில், சென்னை மக்கா மஸ்ஜிதில் இயங்கி வரும் அழகிய கடன் அறக்கட்டளை சார்பில் செயல்பட்டுவரும் ஐ.ஏ.எஸ் அகாடெமி மேற்கண்ட நமது நோக்கத்தின் அடிப்படையில் இயங்கி வருகிறது என்பது அனைவரும் அறிந்ததே.
சில மாதங்களாகவே, மௌலவி சம்சுதீன் காஷிமி அவர்களை அதிரையை சார்ந்த சில தன்னார்வ சகோதரர்கள் சந்தித்து அதிரை இஸ்லாமியர்களின் கல்வி மற்றும் அரசுத்துறை சார்ந்த போட்டித்தேர்வுகளில் பங்கு பெற வைப்பதற்கான திட்டங்கள் பற்றி கலந்தாலோசித்து வருகின்றனர்.
அதன் தொடர்ச்சியாக, கடந்த 22.06.2014 ஞாயிற்றுக்கிழமை கீழக்கரையில் நடைபெற்ற ILMIயின் புதிய திட்ட துவக்க விழா மற்றும் கலந்தாய்வுக்கூட்டத்தில் நமதூரைசார்ந்த சில சகோதரர்கள் கலந்துகொண்டு ஆலோசனைகளையும் அறிவுரைகளையும் பெற்றுக்கொண்டனர்.
மேலும் அழகிய கடன் அறக்கட்டளை ஐ.ஏ.எஸ். அகாடெமியில் பயின்று முதல் முயற்ச்சியிலேயே மத்திய அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் (UPSC) மூலம் நடைபெற்ற தேர்வில் வெற்றி பெற்று கடந்த 20 ஆண்டுகால நம் சமுதாயத்தின் ஏக்கத்தை போக்கி அவர்களது அகாடெமியின் முதலாவது மாணவராக வெற்றி பெற்ற சகோ. அஷ்ரப் அவர்களையும் அவர்களின் தந்தையையும் சந்தித்து ஆலோசிக்கப்பட்டது.
சந்திப்பின் முடிவில் இருவரும் நம் சமுதாய மாணவர்களுக்கும் பெற்றோருக்கும் வழங்கிய ஆலோசனைகளையும் அறிவுரைகளையும் கீழே காணவும்.
குறிப்பு:
சகோ. அஷ்ரப் அவர்களோடு இறுதித்தேர்வில் பங்கு பெற்ற மூன்று நபர்களில் அதிரையை சார்ந்த சகோ. மீரா சாஹிபும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. இன்ஷா அல்லாஹ் அவரும் வருகிற தேர்வில் கலந்துகொண்டு வெற்றி பெற்று அதிரையின் முதல் ஐ.ஏ.எஸ் அதிகாரியாக இறைவனிடம் பிரார்த்திப்போம்.
- ஆஷிக் அஹமது
அதிரை பொறுப்பாளர் - ILMI

உங்களின் முயற்சி வெற்றிபெற வாழ்த்துக்கள்..
ReplyDeleteஉங்களின் முயற்சி வெற்றிபெற வாழ்த்துக்கள்
ReplyDelete