.

Pages

Showing posts with label அதிரை பேரூராட்சி. Show all posts
Showing posts with label அதிரை பேரூராட்சி. Show all posts

Monday, November 9, 2020

அதிராம்பட்டினம் பேரூராட்சி புதிய செயல் அலுவலர் பொறுப்பேற்பு!

அதிராம்பட்டினம், நவ.09 
அதிராம்பட்டினம் பேரூராட்சி புதிய செயல் அலுவலராக ந.செ பரமேஸ்வரி சனிக்கிழமை பொறுப்பேற்றார். 

புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் பேரூராட்சி செயல் அலுவலராகப் பணிபுரிந்து வந்த இவர், பணியிட மாறுதல் பெற்று இங்கு வந்துள்ளார். இவருக்கு அலுவலக ஊழியர்கள் வாழ்த்துத் தெரிவித்தனர். முன்னதாக, அதிராம்பட்டினம் பேரூராட்சி செயல் அலுவலராக இருந்த பி.பழனிவேலு பணியிட மாறுதல் பெற்றார்.

Monday, August 17, 2020

அதிராம்பட்டினத்தில் கரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்ட பேரூராட்சி அலுவலர்கள், முன்களப் பணியாளர்களுக்கு மாவட்ட ஆட்சியர் பாராட்டு!

அதிராம்பட்டினம், ஆக.17
அதிராம்பட்டினம் பேரூராட்சி பகுதியில் கரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்ட அதிராம்பட்டினம் பேரூராட்சி அலுவலர்கள், ஊழியர்கள், முன்களப் பணியாளர்கள் ஆகியோருக்கு மாவட்ட ஆட்சியரின் பாராட்டு சான்றிதழ் வழங்கி கெளரவிக்கப்பட்டது.

இந்தியாவின் 74 வது சுதந்திர தின கொடி ஏற்றும் நிகழ்வு, அதிராம்பட்டினம் பேரூராட்சி அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்வுக்கு, அதிராம்பட்டினம் பேரூராட்சி செயல் அலுவலர் பி.பழனிவேலு தலைமை வகித்து, இந்திய தேசியக் கொடியை ஏற்றி வைத்து சுதந்திர தின உரை நிகழ்த்தினார். இதைத்தொடர்ந்து, அதிராம்பட்டினம் பேரூராட்சி பகுதியில் கரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்ட அதிராம்பட்டினம் பேரூராட்சி துப்புரவு ஆய்வாளர் கே.அன்பரசன், துப்புரவு மேற்பார்வையாளர் சந்தான செல்வம், பிளம்பர் பாலுசாமி, ஓட்டுநர் ஆ.மாணிக்கம் மற்றும் பேரூராட்சி முன்களப் பணியாளர்களுக்கு மாவட்ட ஆட்சியரின் பாராட்டு சான்றிதழ் வழங்கி கெளரவிக்கப்பட்டது.
 
 
 
 
 
 

Friday, June 12, 2020

அதிராம்பட்டினம் பேரூராட்சியில் வாடகை செலுத்தாத 24 கடைகள் 'சீல்' வைப்பு (படங்கள்)

அதிராம்பட்டினம், ஜூன் 12
அதிராம்பட்டினம் பேரூராட்சியில் கடந்த 4 ஆண்டுகளாக வாடகை செலுத்தாத கடைகளை இன்று வெள்ளிக்கிழமை பேரூராட்சி அலுவலர்கள் பூட்டி 'சீல்' வைத்தனர்.

அதிராம்பட்டினம் பேரூந்து நிலையத்தில், கட்டி முடிக்கப்பட்ட 24 வர்த்தக கடைகளுக்கான பொது ஏலம் பேரூராட்சி நிர்வாகம் சார்பில், கடந்த 2016 ஆம் ஆண்டு நடத்தப்பட்டன. இதில், மொத்தம் 109 பேர், ரூ.1 லட்சத்திற்கான டிடி முன்வைப்பு தொகையை செலுத்தி ஏலத்தில் கலந்துகொண்டனர். குறைந்தபட்ச மாத வாடகை தொகையாக ரூ 500 லிருந்து ஆராம்பமாகியது. அதிகபட்சமாக ரூ 26,900 க்கும், குறைந்த பட்சமாக ரூ 8,100 க்கும் கடைகள் ஏலம் போனது.

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் கடைகள் நடத்தி வருபவா்கள் கடந்த 4 ஆண்டுகளாக பேரூராட்சிக்கு வாடகை செலுத்தாமல் பாக்கி வைத்திருந்தனா். இதையடுத்து வாடகையை உடனே செலுத்த வேண்டும் என்று பேரூராட்சி அலுவலர்கள் அறிவிப்பு அனுப்பியிருந்தனா். இருப்பினும் அவா்கள் வாடகை செலுத்தவில்லை.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை அதிராம்பட்டினம் பேரூராட்சி செயல் அலுவலர் பி.பழனிவேலு, அதிராம்பட்டினம் காவல் ஆய்வாளர் ஜெயமோகன், உதவி ஆய்வாளர் ஜார்ஜ் ராஜா, துப்புரவு ஆய்வாளர் கே.அன்பரசன், வருவாய் ஆய்வாளர் சரவணன், கிராம நிர்வாக அலுவலர் அசாருதீன் ஆகியோா் முன்னிலையில், பேரூராட்சி பணியாளா்கள் போலீஸ் பாதுகாப்புடன் சென்று வாடகை செலுத்தாத 24 கடைகளையும் பூட்டி 'சீல்' வைத்துச் சென்றனா்.
 

Thursday, June 11, 2020

அதிராம்பட்டினத்தில் முகக்கவசம் அணியாமல் வந்தவர்களுக்கு ரூ.100 அபராதம் விதிப்பு (படங்கள்)

அதிராம்பட்டினம், ஜூன்.19
அதிராம்பட்டினத்தில் முகக்கவசம் அணியாமல் வந்தவர்களுக்கு ரூ.100 அபராதம் விதிக்கப்பட்டது.

அதிராம்பட்டினம் பேரூராட்சி செயல் அலுவலர் பி.பழனிவேலு தலைமையில், துப்புரவு ஆய்வாளர் கே.அன்பரசன் மற்றும் அலுவலர்கள், முகக்கவசம் அணியாமல் வந்த வாகன ஓட்டிகள், கர்சீப் கட்டி வந்தவர்கள், முகக் கவசம் அணியாமல் வீதிகளில் சென்றவர்கள் என பலருக்கும், 100 ரூபாய் அபராதம் விதித்தனர்.

இதுகுறித்து, பேரூராட்சி அலுவலக தரப்பில் தெரிவித்தது;
கரோனா தடுப்பு நடவடிக்கையாக, பல்வேறு நடவடிக்கைகளை பேரூராட்சி எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, முகக்கவசம் அணியாமல் வருபவர்களுக்கு, அபராதம் விதித்து அவர்களுக்கு முகக் கவசத்தை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். இன்று மட்டும், 36 நபர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு ரூ. 3600 வசூல் செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் வெளியே வரும்போது கண்டிப்பாக முகக்கவசம் அணிந்து வரவேண்டும். என இவ்வாறு தெரிவித்தனர்.
 

4 ஆண்டுகளாக வாடகை செலுத்தாத கடைகள் பூட்டி சீல் வைக்கப்படும்: அதிராம்பட்டினம் பேரூராட்சி நிர்வாகம் அதிரடி அறிவிப்பு!

அதிராம்பட்டினம், ஜூன் 11
4 ஆண்டுகளாக வாடகை செலுத்தாத அதிராம்பட்டினம் பேரூராட்சிக்கு உட்பட்ட பேருந்து நிலையக் கடைகள் பூட்டி சீல் வைக்கப்படும் என பேரூராட்சி நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அதிராம்பட்டினம் பேரூராட்சி நிர்வாகத்தின் அறிவிப்பில் கூறியியிருப்பது;
அதிராம்பட்டினம் பேரூராட்சிக்கு உட்பட்ட பேருந்து நிலையக் கடைகள்
கடந்த 2016-2017 முதல் 2019-2020 வரையில் 4 ஆண்டுகள் ஏலதாரர்கள் கடைகள் ஏலம் எடுத்தும், கடை வாடகை செலுத்துமாறு கடந்த 2019-2020 ல் 3 முறை அறிவிப்பு நோட்டீஸ் கொடுக்கப்பட்டும், வாடகை செலுத்த தவறியதன் காரணத்தினால், நாளை (12-06-2020) வெள்ளிக்கிழமை அதிராம்பட்டினம் காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் அதிராம்பட்டினம் பேரூராட்சி செயல் அலுவலர் ஆகியோர் முன்னிலையில் கடைகள் பூட்டி சீல் வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிராம்பட்டினத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பறிமுதல்: ரூ.4000 அபராதம் விதிப்பு!

அதிராம்பட்டினம், ஜூன்.11
தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தி பார்சல் கட்டப்பட்ட உணவுப் பொருட்களை பேரூராட்சி அதிகாரிகள் கைப்பற்றி அழித்தனர். மேலும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்திய, விற்பனை செய்த கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில், பேரூராட்சிகள் உதவி இயக்குநர் அறிவுறுத்தலின்படி, அதிராம்பட்டினம் பேரூராட்சி செயல் அலுவலர் பி. பழனிவேலு தலைமையில், துப்புரவு ஆய்வாளர் கே.அன்பரசன், மேற்பார்வையில், பேரூராட்சி துய்மைப் பணியாளர்கள், அதிராம்பட்டினம் பகுதிகளில் உள்ள சுமார் 100 க்கும் மேற்பட்ட கடைகள் மற்றும் உணவகங்களில் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டனர். இதில், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனைக்காக இருப்பு வைத்திருந்தது கண்டறியப்பட்டது.

ஆய்வில், தடைசெய்யப்பட்ட சுமார் 6 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், தலா ரூ. 500 வீதம் 8 கடைகளுக்கு  ரூ.4000 அபராதம் விதிக்கப்பட்டது. உணவகங்களில் தடைசெய்யப்பட்ட பொருள்களைப் பயன்படுத்தி பார்சல் கட்டுவதும், தடை செய்யப்பட்ட 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்வதும் குற்றத்திற்குரிய செயல் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
 

Tuesday, November 19, 2019

அதிராம்பட்டினம் பேரூராட்சி புதிதாக வரையறுக்கப்பட்டுள்ள வார்டுகள் (முழு விவரம்)

அதிராம்பட்டினம், நவ.19
21 வார்டுகளை உள்ளடக்கிய அதிராம்பட்டினம் தேர்வு நிலை பேரூராட்சியில், 11 வார்டுகளில் பெண்களும் (அதில் ஒரு வார்டில் ஆதி திராவிடர்), 10 வார்டுகளில் ஆண்களும் போட்டியிடும் வகையில் ஒதுக்கீடு செய்து கடந்த ஜூன் மாதம் அரசாணை வெளியிடப்பட்டது.

தமிழகத்தில் ஓரிரு வாரங்களில் உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியிடப்பட உள்ளது. இந்நிலையில், தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் பேரூராட்சி சேர்மன், வார்டு கவுன்சிலர் ஆகிய பதவிகளுக்கு போட்டியிடும் பிரபல அரசியல் கட்சியினர், சுயேச்சை வேட்பாளர்கள் தீவிர முன்னேற்பாடு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதிராம்பட்டினம் பேரூராட்சியை பொறுத்தவரை பெண்களுக்கு 50 சதவிகிதத்திற்கும் மேலாக வார்டுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி வார்டுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெண்கள் போட்டியிடும் வார்டுகள் குறித்து விவரம் அரசாணையில் வெளியிடப்பட்டுள்ளது. இதில், அதிராம்பட்டினம் பேரூராட்சியில் மொத்தம் 21 வார்டுகளை உள்ளடக்கியது. பெண்கள் (பொது) போட்டியிடும் வார்டுகள் 2, 3, 5, 8, 9, 10, 11, 14, 15, 19 ஆகிய 10 வார்டுகளில் போட்டியிடலாம். அதேபோன்று எஸ்.சி.பிரிவு பெண்கள் போட்டியிடும் வார்டு 1 என அறிவிக்கப்பட்டுள்ளது. மற்ற 10 வார்டுகளில் ஆண்கள் போட்டியிட முடியும்.

பெண்கள் போட்டியிடும் 11 வார்டுகள் விவரங்கள்:
1-வது வார்டு - மிலாரிக்காடு, வள்ளியம்மை நகர், அம்பேத்கர் நகர் (எஸ்.சி-பெண்கள்)

2-வது வார்டு - அம்பேத்கர் நகர், அதிரை நியூஸ்

3-வது வார்டு - மதுக்கூர் ரோடு, மண்ணப்பன்குளம், சால்ட் லேன், பிள்ளையார் கோவில் தெரு, தோப்புக்காடு

5-வது வார்டு - புதுமனைத் தெரு, ஆலடித்தெரு

8-வது வார்டு - மேலத்தெரு (மேல தென்புற கீழ்பக்கம், மேல தென்புற மேல்பக்கம்)

9-வது வார்டு - நடுத்தெரு மேல்புறம், காலியார் தெரு, வெற்றிலைக்காரத்தெரு, கீழத்தெரு

10-வது வார்டு - நடுத்தெரு கீழ்புறம், நடுத்தெரு கடைசி சந்து, நேருஜி தெரு, நேதாஜி தெரு, வ.உ.சி தெரு, செக்கடித்தெரு, அதிரை நியூஸ்

11-வது வார்டு - புதுத்தெரு வடபுறம், ஆஸ்பத்திரி தெரு, ஆஸ்பத்திரி ரோடு, பெருமாள் கோவில் தெரு, செல்லியம்மன் கோவில் தெரு

14-வது வார்டு - புதுத்தெரு தென்புறம், முத்தம்மாள் தெரு, திலகர் தெரு

15-வது வார்டு - கீழத்தெரு, புதுக்கடைத்தெரு, மார்க்கெட், புதுநெயக்காரத்தெரு

19-வது வார்டு - தைக்கால் தெரு, ஆறுமுகக்கிட்டங்கித்தெரு, காந்தி  நகர், பாரதியார் தெரு

ஆண்கள் போட்டியிடும் 10 வார்டுகள் விவரங்கள்:
4-வது வார்டு - பிள்ளையார் கோவில் தெரு, ஹாஜியார் லேன், போலீஸ் லேன், சங்கத்துகொல்லை, வீரனார் கோவில் தெரு, அண்ணா தெரு, சுப்பிரமணியர் கோவில் தெரு, அதிரை நியூஸ்

6-வது வார்டு - மேல நெயக்காரத் தெரு, சின்ன நெயக்காரத் தெரு, புதுமனைத்தெரு

7-வது வார்டு - மேலத்தெரு (மேல வடபுறம், கீழ வடபுறம்), மிலாரிக்காடு

12-வது வார்டு - சுப்ரமணியர் கோவில் தெரு

13-வது வார்டு - சால்ட் லேன், சுப்ரமணியர் கோவில் தெரு, சேதுரோடு

16-வது வார்டு - ஹாஜா நகர்

17-வது வார்டு -  ஆசாத் நகர், கடற்கரைத் தெரு, ஹாஜா நகர்

18-வது வார்டு - சேக் உதுமான் தெரு, கடற்கரைத்தெரு, ரயில்வே ஸ்டேசன் ரோடு

20-வது வார்டு - மாரியம்மன் கோவில் தெரு, சிவன் கோவில் தெரு, பெரியார் தெரு, சேதுரோடு, அதிரை நியூஸ்

21-வது வார்டு - மாரியம்மன் கோவில் தெரு

தொகுப்பு: சேக்கனா நிஜாம்

Friday, October 11, 2019

அதிராம்பட்டினத்தில் தூய்மைப் பணியாளர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம்!

அதிராம்பட்டினம், அக்.11
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் பேரூராட்சியில் துப்புரவுப் பணியாளர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

அதிராம்பட்டினம் பேரூராட்சி செயல் அலுவலர் எல். ரமேஷ் உத்தரவின் பேரில், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ஆர். அண்ணாதுரை, அதிராம்பட்டினம் பேரூர் துப்புரவு ஆய்வாளர் கே.அன்பரசன், சுகாதார ஆய்வாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் மேற்பார்வையில், மருத்துவ அலுவலர் டாக்டர் சோம சுந்தரம் தலைமையில், மருத்துவக்குழுவினர் அதிராம்பட்டினம் பேரூராட்சி துப்புரவுப் பணியாளர்கள், சுய உதவிக்குழு பணியாளர்கள், அலுவலகப் பணியாளர்கள் உட்பட 100 க்கும் மேற்பட்டோருக்கு, மருத்துவப் பரிசோதனை மற்றும் ஆலோசனை வழங்கினர். இதில், காய்ச்சல் பாதிப்பு உள்ளனவா என்றும், கண், இரத்தம், இரத்த அழுத்தம், உடல் எடை ஆகிய பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, மருந்துகள் இலவசமாக வழங்கப்பட்டன. மேலும், பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோருக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டன.

Thursday, October 3, 2019

அதிராம்பட்டினத்தில் 3000 மரக்கன்றுகள் நடவு (படங்கள்)

அதிராம்பட்டினம், அக். 03
மகாத்மா காந்தியின் பிறந்த தினத்தை முன்னிட்டும், கஜா புயலில் இழந்த பசுமையை மீட்டெடுக்கும் விதமாகவும், அதிராம்பட்டினம் பேரூராட்சி நீர் மேலாண்மைத் திட்டத்தில், பேரூராட்சி 21 வார்டுகள், வீதிகள், பொது இடங்கள், குளங்கள், வழிபாட்டுத்தலங்கள், தனியார் வீடுகள் உளிட்ட இடங்களில் வேம்பு, புங்கை, மா, தேக்கு, பலா உள்ளிட்ட 3000 மரக்கன்றுகள் நடப்பட்டன.

நிகழ்ச்சிக்கு, அதிராம்பட்டினம் பேரூராட்சி செயல் அலுவலர் எல். ரமேஷ் தலைமை வகித்தார். துப்புரவு ஆய்வாளர் கே.அன்பரசன்  முன்னிலை வகித்தார். இதில், பேரூராட்சி அலுவலர்கள், துப்புரவு பணியாளர்கள பங்கேற்றனர். முன்னதாக, பேரூராட்சி அலுவலகத்தில் சுகாதார மற்றும் குடிநீர் சேமிப்பு விழிப்புணர்வு உறுதி மொழி ஏற்கப்பட்டது.