.

Pages

Showing posts with label தமிழக அரசு செய்திகள். Show all posts
Showing posts with label தமிழக அரசு செய்திகள். Show all posts

Friday, December 16, 2016

+2 மற்றும் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு அட்டவணை வெளியீடு!

தமிழ்நாட்டில் +2 மாணவர்களுக்கான அரசு பொதுத் தேர்வுகள் மார்ச் 2-ல் தொடங்கும் என்று அரசு தேர்வுத்துறை இயக்ககம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு தேர்வுத்துறை இயக்ககம் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
தமிழ்நாட்டில் +2 மாணவர்களுக்கான அரசு பொதுத் தேர்வுகள் மார்ச் 2-ல் தொடங்கி மார்ச் 31-ஆம் தேதி வரை நடைபெறும். மேலும் 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான அரசு பொதுத் தேர்வுகள் மார்ச் 8-ஆம் தேதி தொடங்கி மார்ச் 30-ஆம் தேதி வரை நடைபெறும். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விரிவான தேர்வு அட்டவணை பின்வருமாறு:

+2 தேர்வுகள்:
02.03.17 - வியாழன் - தமிழ் முதல் தாள்
03.03.17 - வெள்ளி -  தமிழ் இரண்டாம் தாள்
06.03.17 - திங்கள் - ஆங்கிலம் முதல் தாள்
07.03.17 - செவ்வாய்  -  ஆங்கிலம் இரண்டாம் தாள்
10.03.17 - வெள்ளி - வணிகவியல் /  மனையியல் / புவியியல்
13.03.17 - திங்கள் - வேதியியல் / கனக்குப் பதிவியியல்
17.03.17 - வெள்ளி - தகவல் தொடர்பு ஆங்கிலம் (கம்யூனிகேட்டிவ் இங்கிலீஷ்) / இந்திய கலாச்சாரம் / கணிப்பொறி அறிவியல் / உயிர் வேதியியல் / மேம்படுத்தப்பட்ட மொழிப்பாடம் (அட்வான்ஸ்ட் லாங்க்வேஜ்க் தமிழ்)
21.03.17 - செவ்வாய் - இயற்பியல் / பொருளியல்
24.03.17 - வெள்ளி - தொழில் கல்வி தியரி / அரசியல் அறிவியல் /  செவிலியர் கல்வி (பொது) / புள்ளியியல்
27.03.17 - திங்கள் - கணிதம் / விலங்கியல் /  நுண்ணுயிரியியல் / ஊட்டச்சத்து மற்றும் உணவியல்
31.03.17 - வெள்ளி - உயிரியால் / வரலாறு / தாவரவியல் / வணிக கணிதம்

எஸ்.எஸ்.எல் சி:
08.03.17 - புதன் - தமிழ் முதல் தாள்
09.03.17 - வியாழன் - தமிழ் இரண்டாம் தாள்
14.03.17 - செவ்வாய் - ஆங்கிலம் முதல் தாள்
16.03.17 - வியாழன் - ஆங்கிலம் இரண்டாம் தாள்
20.03.17- திங்கள் - கணிதம்
23.03.17 - வியாழன் - அறிவியல்
28.03.17 - செவ்வாய் - சமூக அறிவியல்
30.03.17 - வியாழன் - மொழி (விருப்பத் தேர்வு) 

Wednesday, November 2, 2016

இல்லந்தோறும் இணையம் திட்டம்: விண்ணப்பங்கள் வரவேற்பு !

"இல்லந்தோறும் இணையம்' திட்டத்தில், தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்துடன் இணைந்து பணியாற்ற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதன் விவரம்:
தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் ஏற்கனவே பெற்றுள்ள இணைய சேவை உரிமத்தை பயன்படுத்தி, "இல்லந்தோறும் இணையம்" என்ற கொள்கையின் அடிப்படையில், அதிவேக அகண்ட இண்டர்நெட் சேவைகளை மாவட்ட தலைநகரங்களில் வழங்கி வருகிறது. குறைந்த கட்டணம் -சிறப்பான சேவையின் காரணமாக இந்தத் திட்டம் மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இதையடுத்து இரண்டாம் கட்டமாக, தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து நகராட்சி பகுதிகளிலும் இந்தத் திட்டம் விரிவுபடுத்தப்பட உள்ளது. தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்துடன் இணைந்து, அதிவேக அகண்ட அலைவரிசை இண்டர்நெட் சேவைகளை வருவாய் பங்கீட்டு முறையில் வழங்குவதற்கு விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

இதற்கான விருப்பம் கோரும் விண்ணப்பத்தை நிறுவனத்தின் இணையதளத்தில் (www.tactv.in)   இலவசமாக பதிவிறக்கம் செய்யலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் நவம்பர் 15, மாலை 3 மணி.

விண்ணப்பங்கள் ஆய்வு செய்யப்பட்டு, தகுதிவாய்ந்த விண்ணப்பங்கள் தேர்வு செய்யப்படும். தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்கள் விருப்பப்பட்டால் அவர்கள் தொழில் தொடங்க ஏதுவாக, தேசிய வங்கியிலிருந்து கடன் பெறவும் உதவி செய்யப்படும் அரசு கேபிள் டிவி நிறுவனம் தெரிவித்துள்ளது.

Wednesday, October 26, 2016

ரேஷன் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க காலக்கெடு நிர்ணயிக்கவில்லை: உணவுத் துறை விளக்கம்!

ரேஷன் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க காலக்கெடு எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை என்று தமிழக உணவுத் துறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

ரேஷன் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு நவம்பர் 1ம் தேதி வரை காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டிருப்பதாகவும், ரேஷன் கார்டில் ஆதார் எண்ணை இணைக்காவிட்டால் உணவு பொருட்கள் வழங்கப்படாது என்றும் தகவல்கள் வெளியாகின. இதனால் பொதுமக்கள் இடையே குழப்பம் ஏற்பட்டது.

இதனால், ஆதார் எண்ணை ரேஷன் கார்டுடன் இணைக்கும் விவகாரம் குறித்து தமிழக உணவுத் துறை சார்பில் இன்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில், ஆதார் எண்ணை ரேஷன் கார்டுடன் கண்டிப்பாக இணைக்க வேண்டும். ஆனால், இதற்காக காலக்கெடு எதுவும் இதுவரை நிர்ணயிக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்மார்ட் அட்டை வடிவிலான ரேஷன் கார்டுக்கு ஆதார் எண் அவசியம் என்பதால், பொதுமக்கள், தாங்கள் ரேஷன் கார்டுடன் ஆதார் எண்ணை கண்டிப்பாக இணைத்துக் கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நன்றி:தினமணி

Sunday, June 19, 2016

500 டாஸ்மாக் கடைகளுக்கு மூடுவிழா: மாவட்ட வாரியாக மூடப்படும் கடைகள் விபரம் !

அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கூறியபடி, தமிழகத்தில் படிப்படியாக மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளரும், முதல்-அமைச்சருமான ஜெயலலிதா அறிவித்தார். முதற்கட்டமாக 500 டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்றும் அறிவித்திருந்தார். அதன்படி 500 டாஸ்மாக் கடைகள் தேர்வு செய்யப்பட்டு அந்த கடைகள் நாளை முதல் மூடப்பட உள்ளன. இதற்கான அரசாணையை டாஸ்மாக் நிர்வாக இயக்குனர் ஆர்.கிர்லோஷ் குமார் வெளியிட்டுள்ளார்.

அதன்படி சென்னை மண்டலத்தில் 58 கடைகள் மூடப்பட உள்ளன. கோவையில் 60 கடைகளும், மதுரையில் 201 கடைகளும், திருச்சியில் 133 கடைகளும், சேலத்தில் 48 கடைகளும் மூடப்பட உள்ளன.

ஒவ்வொரு மண்டலத்திலும் மாவட்ட வாரியாக மூடப்படும் டாஸ்மாக் கடைகள் விவரம் வருமாறு:-

சென்னை மண்டலம்:
சென்னை வடக்கு - 2
சென்னை மத்தி - 3
சென்னை தெற்கு - 2
காஞ்சிபுரம் வடக்கு - 13
காஞ்சிபுரம் தெற்கு - 3
திருவள்ளூர் கிழக்கு - 16
திருவள்ளூர் மேற்கு - 19

கோவை மண்டலம்:
கோவை வடக்கு - 1
கோவை தெற்கு - 4
திருப்பூர் - 8
ஈரோடு - 16
நீலகிரி - 31

மதுரை மண்டலம்:
மதுரை தெற்கு - 21
மதுரை வடக்கு - 16
திண்டுக்கல் - 10
ராமநாதபுரம் - 36
விருதுநகர் - 27
சிவகங்கை - 43
திருநெல்வேலி - 9
தூத்துக்குடி - 30
கன்னியாகுமரி - 6
தேனி - 3

திருச்சி மண்டலம்:
திருச்சி - 14
நாகப்பட்டினம் - 16
தஞ்சாவூர் - 16
புதுக்கோட்டை - 14
கடலூர் - 15
கரூர் - 14
திருவாரூர் - 8
விழுப்புரம் - 29
பெரம்பலூர் - 7

சேலம் மண்டலம்:
தர்மபுரி - 1
கிருஷ்ணகிரி - 6
நாமக்கல் - 11
வேலூர் - 8
திருவண்ணாமலை - 18
அரக்கோணம் - 4.

Friday, June 17, 2016

பட்டுக்கோட்டை சப் கலெக்டர் டி.எஸ் ராஜசேகர் மாநில தேர்தல் ஆணையச் செயலாளராக பணி நியமனம் !

தமிழகத்தில் 26 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தமிழக தலைமைச் செயலர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. இதில் மாநில தேர்தல் ஆணையச் செயலாளராக டி.எஸ். ராஜேசேகர் நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக
பட்டுக்கோட்டை சப் கலெக்டராக பதவி வகித்தவர் டி.எஸ் ராஜசேகர் என்பது குறிப்பிடத்தக்கது.


Saturday, April 16, 2016

மே 1 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை !

தமிழகத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளுக்கும் மே 1-ம் தேதி முதல் கோடை விடுமுறை அளிக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.

பள்ளிகளில் ஆண்டு தேர்வுகள் முடிவடைந்த நிலையில், மே 1 முதல் மாணவர்களுக்குக் கோடை விடுமுறை அறிவித்துள்ளது.

மீண்டும், ஜூன் 1-ம் தேதியன்று அனைத்துப் பள்ளிகளும் திறக்கப்படும் என்று தமிழக பள்ளிக் கல்வித்துறை இயக்குனரகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

Tuesday, March 1, 2016

'இல்லந்தோறும் இணையம்' திட்டம் துவக்கம் !

தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் மூலம் 'இல்லந்தோறும் இணையம்' திட்டத்தை முதலமைச்சர் ஜெயலலிதா இன்று தொடங்கி வைத்தார்.

"அரசு கேபிள் ஆபரேட்டர்கள் வாயிலாக மாநிலம் முழுவதும் அதிவேக அகண்ட அலைவரிசை சேவைகள் (Broadband Services) மற்றும் இதர இணைய சேவைகள் (Internet Services) குறைந்த கட்டணத்தில் அரசு கேபிள் டிவி நிறுவனம் மூலம் பொது மக்களுக்கு வழங்கப்படும்" என்று முதலமைச்சர் ஜெயலலிதா சட்டமன்றப் பேரவையில் அறிவித்தார்.

அந்த அறிவிப்பினை செயல்படுத்திடும் வகையில், தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் மூலம் "இல்லந்தோறும் இணையம்" திட்டம் தமிழக அரசின் தொலைநோக்கு திட்ட அறிக்கை 2023ல் குறிப்பிட்டபடி, மாநிலத்தில் உள்ள தகவல் தொழில்நுட்பவியல் சிறப்புப் பொருளாதார மண்டலங்களில் அமைந்துள்ள மனித ஆற்றலை பயன்படுத்தி புதிய முயற்சிகளை ஊக்குவித்திடும் வகையில் சென்னை – தரமணி, டைடல் பார்க் வளாகத்தில் 3 கோடியே 53 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள தொழில்முனைவோர் மையம் (Startup Warehouse); மாணாக்கர்கள் மற்றும் இளம் தொழில் முனைவோர்களுக்காக மேகக்கணினி சார்ந்த சேவைகள்  மற்றும் இணையப் பதிவேற்ற சேவைகள் ஆகியவற்றை  குறைந்த கட்டணத்தில் வழங்கும் திட்டம்;

சென்னை, பெருங்குடியில் அமைந்துள்ள தமிழ்நாடு மாநில தரவு மையத்தின் தகவல் தொழில்நுட்ப மற்றும் கணினி உள்கட்டமைப்பினை சிறப்புற பயன்படுத்தி பல்வேறு துறைகளின் கணினி பயன்பாடுகளை ஏற்றம் செய்யும் பொருட்டு 10 கோடியே 41 லட்சம் ரூபாய்  செலவில் தமிழ்நாடு மாநில தரவு மையத்தில் அமைக்கப்பட்டுள்ள மேகக்கணினிய  அமைப்பு என மொத்தம் 13 கோடியே 94 லட்சம் ரூபாய் செலவிலான தகவல் தொழில்நுட்பவியல் துறை சார்ந்த திட்டங்களை முதலமைச்சர் ஜெயலலிதா இன்று துவக்கி வைத்தார்.

Wednesday, January 20, 2016

மக்களின் குறைகளைக் களைய 24 மணிநேரமும் செயல்படும் 'அம்மா அழைப்பு மையம்' !

பொதுமக்களின் குறைகளைக் களைய "அம்மா அழைப்பு மையம்' என்ற புதிய திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா செவ்வாய்க்கிழமை தொடக்கி வைத்தார். இந்தத் திட்டத்தின்படி, கட்டணமில்லாத தொலைபேசி எண்ணை (1100) தொடர்பு கொண்டு பொதுமக்கள் புகார்களைத் தெரிவிக்கலாம்.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு:
ஏழை எளிய மக்களும், சாமானியர்களும் அரசுக்கு தங்களது குறைகளைத் தெரிவித்து உரிய தீர்வு பெறும் நோக்கத்துடன் முதலமைச்சரின் தனிப்பிரிவு இயங்கி வருகிறது. இந்தப் பிரிவின் மூலம் நேரடியாகவும், அஞ்சல் வழியாகவும், முதலமைச்சரின் தனிப் பிரிவின் இணையதளம் மூலமாகவும் மக்களிடமிருந்து பெறப்படும் மனுக்கள் அந்தந்தத் துறைகளுக்கு அனுப்பப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு மனுதாரருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

"அம்மா அழைப்பு மையம்':
பொதுமக்களின் குறைகளை விரைந்து பெற்று, அவற்றைக் களைந்திடும் நோக்கில், கணினிவழி தொலைபேசி அழைப்பு ஒருங்கிணைத்தல், குரல் பதிவு மற்றும் பிரித்தறிதல் போன்ற புதிய தகவல் தொழில்நுட்ப வசதிகளுடன், 24 மணிநேரமும் செயல்படும், கட்டணமில்லா தொலைபேசி சேவை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, கட்டணமில்லாத தொலைபேசி எண்ணான 1100 மூலம் எங்கிருந்தும், எப்போதும் பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம். இந்தப் புதிய திட்டத்துக்கு "அம்மா அழைப்பு மையம்' எனப் பெயரிடப்பட்டுள்ளது.
 நாளொன்றுக்கு 15,000: புதிய திட்டத்தின் முதல்கட்டமாக, நாளொன்றுக்கு 15 ஆயிரம் அழைப்புகளை ஏற்கும் வகையில், 138 அழைப்பு ஏற்பாளர்களுடன் இந்த மையம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், தேவைக்கேற்ப அழைப்பு ஏற்பாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்.

முதல்வர் ஜெயலலிதா இந்தப் புதிய மையத்தை தலைமைச் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை தொடக்கி வைத்தார். இந்த மையத்தின் மூலம், பொதுமக்களிடமிருந்து அழைப்பு பெறப்பட்டு, அழைப்பவர் விவரம், குறைகள் ஆகியன கணினியில் பதிவு செய்யப்பட்டு, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிக்கு மின்னஞ்சல், தொலைபேசி மற்றும் குறுஞ்செய்தி வாயிலாக அனுப்பி வைக்கப்படும். அதுமட்டுமின்றி, எந்தத் துறையின், எந்த அதிகாரிக்கு அவரது குறைகள் குறித்த விவரம் அனுப்பப்பட்டுள்ளது என்ற விவரம் அழைத்தவருக்கு செல்லிடப்பேசியில் குறுஞ்செய்தி மூலம் அனுப்பப்படும்.

மேலும், அவரது குறை குறித்து சம்பந்தப்பட்ட துறை மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்த விவரமும் குறுஞ்செய்தி மூலம் தெரிவிக்கப்படும்.

இந்த நிகழ்ச்சியில், தலைமைச் செயலாளர் கு. ஞானதேசிகன், அரசு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன், பொதுத் துறை முதன்மைச் செயலாளர் யத்தீந்திர நாத் ஸ்வேன், தகவல் தொழில் நுட்பவியல் துறை முதன்மைச் செயலாளர் தா.கி. ராமச்சந்திரன், முதலமைச்சரின் தனிப் பிரிவின் சிறப்பு பணி அலுவலர் சந்தோஷ் பாபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

சென்னையில் தலைமை அழைப்பு மையம் அம்மா அழைப்பு மையத்தின் தலைமை அலுவலகம், சென்னை தியாகராய நகரில் செயல்பட்டு வருகிறது. பாண்டி பஜாரில் செயல்படும் இந்த அலுவலகத்தில் அம்மா அழைப்பு மையத்துக்கான அனைத்துக் கருவிகளும் அமைக்கப்பட்டுள்ளன.

இங்கு 150 பேர் வரை பணியாற்றி வருகின்றனர். 24 மணி நேரமும் செயல்படும் என்பதால், ஒவ்வொரு பணியாளருக்கும் முறைப்பணி என்ற அடிப்படையில் பணி கொடுக்கப்பட்டுள்ளது. புதிய திட்டம் தொடங்கப்பட்ட செவ்வாய்க்கிழமையன்று, அம்மா அழைப்பு மையத்துக்கு ஏராளமான அழைப்புகள் வந்ததாக அதில் பணியாற்றுவோர் தெரிவித்தனர்.

தொடர்ந்து "பிஸி': அம்மா அழைப்பு மையத்தைத் தொடர்பு கொண்ட பலரும் உடனடியாகத் தொடர்பு கொள்ள முடியவில்லை என்று கருத்துத் தெரிவித்தனர். இதனால், ஒவ்வொருவரும் தொடர்ந்து அந்த எண்ணைத் தொடர்பு கொண்டே இருக்க வேண்டியிருந்ததாகத் தெரிவித்தனர்.

இந்தத் திட்டத்துக்குக் கிடைக்கும் வரவேற்பைப் பொருத்து அழைப்பாளர்கள் மற்றும் கணினியின் எண்ணிக்கைகள் அதிகரிக்கப்படும். அப்போது பொதுமக்கள் இன்னும் எளிதாகத் தொடர்பு கொள்ள வழி ஏற்படும் என அரசுத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Sunday, May 19, 2013

சிறுபான்மையினர் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்க அரசு அழைப்பு !

அரசு, அரசு உதவி பெறும், அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் முதலாம் வகுப்பு முதல் எஸ்.எஸ் .எல்.ஸி., வகுப்பு வரை பயிலும் இஸ்லாமியர், கிறிஸ்துவர், புத்த மதத்தினர், சீக்கியர் , பார்சி வகுப்பை சார்ந்த சிறுபான்மையின மாணவ, மாணவிகளுக்கு பள்ளிப்படிப்பு கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் 2013-14 ம் ஆண்டுக்கான கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

இது குறித்து விரிவான விவரங்கள் அடங்கிய தகவல்கள் தமிழக அரசால் இன்றைய நாளிதழில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.
[ Click on Image to enlarge ]


Wednesday, March 6, 2013

தமிழக வக்ஃப் வாரியத்திற்கு 'வக்ஃப் நிறுவன மேம்பாட்டு நிதி' உதவிக்கேட்டு வேண்டுகோள் !

பள்ளிவாசல்கள், தர்காக்கள், மத்ரசாக்கள் போன்ற வக்ஃப் நிறுவனங்களின் பழுதுபார்ப்பு மற்றும் சீரமைப்பு மற்றும் மறு கட்டுமானப் பணிகள் மேற்கொள்வதற்காக மாண்புமிகு தமிழக முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் தலைமையிலான அரசு, 'வக்ஃப் நிறுவன மேம்பாட்டு நிதி' ஏற்படுத்தி 2012-2013ஆம் ஆண்டுக்கு நலிந்த வக்ஃப் நிறுவனங்களுக்கு வழங்குவதற்காக மூன்று கோடி ரூபாய் ஒப்பளிப்பு ஒதுக்கீடு செய்துள்ளது.

இதற்காக 5.3.2013 அன்று நடைபெற்ற வக்ஃப் வாரிய கூட்டத்தில் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழ்நாடு வக்ஃப் வாரியத் தலைவர் திரு.அ.தமிழ்மகன் உசேன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் வாரிய உறுப்பினர்கள் ஜனாப். S. அப்துல் ரஹீம்,  MLA. ஜனாப். SA. பாரூக், ஜனாப். M.K. .கான், ஜனாபா.AS. பீ பீ ஜான், ஜனாப்.சலாவுதீன் முஹம்மது அயூப் மற்றும் ஜனாப். குலாம் முஹம்மது மெஹ்தி கான் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் இந்நிதி குறித்து வாரியத் தலைவர் கீழ்க்கண்டவாறு தெரிவித்துள்ளார். 

வக்ஃப் நிறுவன மேம்பாட்டு நிதிக்கு பொதுமக்கள் மற்றும் கொடையாளர்கள் அளிக்கும் நிதியுடன் இத்திட்டத்தை தமிழ்நாடு வக்ஃப் வாரியம் மூலமாக அரசு செயல்படுத்த உள்ளது. பொதுமக்கள் மற்றும் கொடையாளர்கள் அளிக்கும் நிதியைப் பெற்றுக் கொள்ள தமிழ் நாடு வக்ஃப் வாரிய முதன்மைச் செயல் அலுவலருக்கு (அரசாணை எண்.2 பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை நாள் 07.01.2013 மூலம்) அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கான இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, தலைமைச் செயலக கிளையில் தனியாக ஒரு சேமிப்புக் கணக்கு துவக்கப்பட்டுள்ளது. கொடையளிக்க விரும்பும் பொதுமக்கள் மற்றும் கொடையாளர்கள் 'TAMIL NADU WAKF INSTITUTIONS DEVELOPMENT FUND' என்ற பெயரில் கொடை தொகைக்கு சென்னை மாற்றத்தக்க வங்கி வரைவோலை எடுத்து 

'முதன்மை செயல் அலுவலர், 
தமிழ்நாடு வக்ஃப் வாரியம், 
எண்.1. ஜாபர் சிராங் தெரு, 
வள்ளல் சீதக்காதி நகர், 
சென்னை-600 001.' 

என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். உரிய பரிசீலனை மேற்கொள்ளப்பட்ட 
பின்னர் கொடை தொகை, நிதி தேவையுள்ள வக்ஃப் நிறுவனங்களுக்கு வழங்கப்படும். மேலும் பெரும் பழுதுபார்ப்பு மற்றும் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ள நிதித் தேவையுள்ள வக்ஃப் நிறுவனங்கள் உரிய திட்ட மதிப்பீடு, வரைபடம், புகைப்படம் போன்ற விபரங்களுடன் மேற்கண்ட முகவரிக்கு விண்ணப்பிக்குமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

வக்ஃப் நிறுவனங்களுக்கு பயனளிக்கும் இத்திட்டத்திற்கு தாராளமாக நிதி வழங்கிட இஸ்லாமிய செல்வந்தர்கள், பொதுமக்கள் மற்றும் கொடையாளர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 

மேற்கண்ட செய்தியை தமிழ்நாடு வக்ஃப் வாரிய தலைவர் மாண்புமிகு அ.தமிழ்மகன் உசேன் தெரிவித்துள்ளார். 

தலைவர், 
தமிழ்நாடு வக்ஃப் வாரியம், 
சென்னை-1