ஆயுர்வேத மருத்துவர்களுக்கு அறுவை சிகிச்சை செய்வதற்கு உரிமை வழங்குவதை கண்டித்து, வேலைநிறுத்தம் நடைபெற்றது. தொடர்ந்து இந்திய மருத்துவ சங்கம் சார்பில் பட்டுக்கோட்டை சார் ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
இந்திய மருத்துவர் சங்கத்தின் பட்டுக்கோட்டை கிளைத் தலைவர் டாக்டர் ஏ.ஆர்.அன்பரசன் தலைமையில், டாக்டர்கள் அன்பழகன், பாலகிருஷ்ணன், சுப்பிரமணியன், கிளாடிஸ் காமராஜ், மகேஸ்வரி அன்பரசன், ஸ்ரீதர் பாபு, ராஜா ராமலிங்கம் ஆகியோர் பட்டுக்கோட்டை சார் ஆட்சியர் பாலச்சந்தரை வெள்ளிக்கிழமை அன்று நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.
அம்மனுவில், "அறிவு சார்ந்த நவீன அறிவியல் மருத்துவத்தை உலகநாடுகள் பிரதானமாக ஏற்றுக்கொண்டு, நடைமுறையில் மிகச்சிறப்பாக மக்களின் சுகாதாரத்தை தொடர்ந்து பேணிக்காத்து வருகின்றனர். அறிவுசார் நவீன அறிவியல் அறுவை சிகிச்சை மருத்துவ படிப்பு மற்றும் பயிற்சி இன்றி (அடிப்படை தகுதியின்றி) மற்ற துறையினரை எடுத்துக்காட்டாக ஆயுர்வேத மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்ய அனுமதிப்பது என்பது, பொது மக்களுக்கு கேடு விளைவிக்கும் செயலாகும் என்பதோடு மட்டுமல்லாமல், மருத்துவத் துறையின் அடிப்படை கட்டமைப்பை சிதைக்கும் செயலாகும். எனவே மக்கள் நலனுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் இதனை அரசு அனுமதிக்கக் கூடாது" இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்திய மருத்துவ சங்கத்தின் அறைகூவலை ஏற்று, பட்டுக்கோட்டையில் மருத்துவர்கள் வெள்ளிக்கிழமை காலை 6 மணி முதல் சனிக்கிழமை காலை 6 மணி வரை வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். அவசர சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சை மட்டும் பொதுமக்கள் நலன் கருதி மேற்கொள்ளப்பட்டது.























































