.

Pages

Showing posts with label அதிரை மாற்றுத்திறனாளிகள். Show all posts
Showing posts with label அதிரை மாற்றுத்திறனாளிகள். Show all posts

Thursday, December 3, 2020

அதிராம்பட்டினத்தில் உலக மாற்றுத்திறனாளி தின விழா (படங்கள்)

அதிராம்பட்டினம், டிச.03
அதிராம்பட்டின ரோட்டரி சங்கம் சார்பில்,  உலக மாற்றுத்திறனாளிகள் தின விழா அதிராம்பட்டினத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில், தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்க உறுப்பினர்களுக்கு சால்வை அணிவித்து நினைவுப் பரிசுகள் வழங்கி வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. நிகழ்வில், சங்க மாவட்டத் தலைவர் ஏ.பஹாத் முகமது, அதிராம்பட்டினம் பேரூர் தலைவர் ஜம்ஜம் அகமது அஷ்ரப், அதிராம்பட்டினம் ரோட்டரி சங்கத் தலைவர் எஸ்.சாகுல் ஹமீது,  முன்னாள் தலைவர் டி.முகமது நவாஸ்கான், முன்னாள் செயலர் இசட். அகமது மன்சூர் மற்றும் நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர்.


Tuesday, November 17, 2020

உதவித்தொகையை உயர்த்தி வழங்க வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்!

பட்டுக்கோட்டை, நவ.17
மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகையை உயர்த்தி வழங்க வலியுறுத்தி, தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில், பட்டுக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

சங்கத்தின் பட்டுக்கோட்டை ஒன்றியத் தலைவர் ஏ.ஆனந்த கிருஷ்ணன் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் ஏ.பஹாத் முகமது, சேதுபாவாசத்திரம் ஒன்றியச்செயலாளர் எச்.ஜலீல் முகைதீன் ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர்.

தெலங்கானா, பாண்டிச்சேரி மாநிலங்களைப் போல் மாற்றுத் திறனாளிகளுக்கு மாத உதவித் தொகையாக குறைந்தபட்சம் ரூ.3 ஆயிரமும், கடும் ஊனமுற்றவர்களுக்கு மாதம் ரூ.5 ஆயிரமும் வழங்க வேண்டும், தனியார் துறை வேலைகளில் இட ஒதுக்கீடு வழங்க தமிழக அரசு சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும், அரசு துறைகளில் பின்னடைவு காலிப் பணியிடங்களை கண்டறிந்து, 2013 உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி 3 மாதங்களில் வெளிப்படையாக அறிவித்து உடனடியாக நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கண்களில் கருப்புத் துணி கட்டி கோஷங்கள் எழுப்பினர்.

இந்த ஆர்பாட்டத்தில், பட்டுக்கோட்டை ஒன்றியச் செயலாளர் கே. கிருஷ்ணமூர்த்தி, ஒன்றிய துணைத்தலைவர் என்.ஜெயபாலன்  ஒன்றிய துணைச் செயலாளர் டி. கோபி செல்வம், ஒன்றிய பொருளாளர் கே. கோட்டை துரை, அதிராம்பட்டினம் பேரூர் தலைவர் ஜம்ஜம் அகமது அஷ்ரப், கொண்டிக்குளம் ராமமூர்த்தி உள்ளிட்ட மாற்றுத்திறனாளிகள் பலர் கலந்துகொண்டனர். நிறைவில், கோரிக்கைகள் அடங்கிய மனுவினை வாட்டாட்சியர் அலுவலரிடம் வழங்கினர்.


Tuesday, November 10, 2020

மாவட்ட ஆட்சியருடன் மாற்றுத் திறனாளிகள் சங்க நிர்வாகிகள் சந்திப்பு (படங்கள்)

தஞ்சாவூர் நவ.10
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியர் ம.கோவிந்தராவை, தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்க மாவட்டத் தலைவர் ஏ.பஹாத் முகமது தலைமையில் நேரில் சந்தித்து, மாற்றுத் திறனாளிகளின் நலன் சார்ந்த கோரிக்கைகள் முன்வைத்தனர். 

அப்போது, மாற்றுத்திறனாளிகள் மாதாந்திர உதவித்தொகை குறைந்த பட்சம் ரூ. 3 ஆயிரமும் கடும் ஊனமுற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ 5 ஆயிரமும் வழங்க வேண்டும், தனியார்துறை வேலைவாய்ப்புகளில் 5 சதவித வேலைவாய்ப்பு இடங்களை வழங்க சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும், அரசுத்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் நவ.17 ந் தேதி நடைபெற இருக்கும் மாநிலம் தழுவிய ஆர்பாட்டம் குறித்தும், அடையாள அட்டை பெறாத மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பு முகாம் நடத்தி அடையாள அட்டை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், காரோனா ஊரடங்கில்,  மாற்றுத்திறனாளிகளிடமிருந்து லைப் சான்றிதழ் கோருவதை தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும், மாற்றுத்திறனாளிகளுக்கு சமூகத்தில் ஏற்படும் அச்சுறுத்தல், இடையூறுகள், பாதிப்புகள் பற்றி புகார் அளித்தால் அதற்குரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்தனர்.

இந்நிகழ்வில், சேதுபாவா சத்திரம் ஒன்றியச்செயலாளர் ஜலீல் முகைதீன், பேராவூரணி ஒன்றியத் தலைவர் வின்சென்ட் ஜெயராஜ், ஒன்றியச் செயலாளர் சுதாகர், திருவோணம் ஒன்றியத் தலைவர் செந்தில், ஒன்றியச்செயலாளர் திருமேனி, மதுக்கூர் ஒன்றியச் செயலாளர் சந்திர பிரகாஷ், ஒரத்தநாடு ஒன்றியத் தலைவர் பிரபாகரன், அதிராம்பட்டினம் பேரூர் தலைவர் ஜம்ஜம் அகமது அஷ்ரப் உள்ளிட்ட மாற்றுத்திறனாளிகள் உடனிருந்தனர்.

Thursday, September 17, 2020

மாவட்ட அலுவலருடன் மாற்றுத் திறனாளிகள் சங்க நிர்வாகிகள் சந்திப்பு (படங்கள்)

தஞ்சாவூர் செப்.17
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரகத்தில் மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் சுவாமிநாதனை, தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்க மாவட்டத் தலைவர் ஏ.பஹாத் முகமது தலைமையில் நேரில் சந்தித்து, பொன்னாடை அணிவித்து,  மாற்றுத் திறனாளிகளின் கோரிக்கை குறித்த மனுக்களை வழங்கினர். 

அம்மனுவில், "குடிசை மாற்று வாரியம் மூலம் கட்டிக் கொடுக்கப்படும் அடுக்குமாடி குடியிருப்பில், சொந்த வீடு, இடம் இல்லாமல் இருக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கு முன்னுரிமை கொடுத்து வீடுகள் வழங்கப்பட வேண்டும். தகுதியான மாற்றுத் திறனாளிகளுக்கு மூன்று சக்கர மோட்டார் வாகனம் வழங்கப்பட வேண்டும். 

மாதாந்திர உதவித் தொகைக்காக மனு கொடுத்து விட்டு காத்திருக்கும், மாற்றுத் திறனாளிகளுக்கு உடனடியாக உதவித்தொகை வழங்கிட வேண்டும்.  அடையாள அட்டை இல்லாமல் இருக்கும், மாற்றுத் திறனாளிகளை கண்டறிந்து அவர்களுக்கு உடனே அடையாள அட்டை வழங்கிட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனக் கூறப்பட்டிருந்தது. 

இந்நிகழ்வில், மாவட்டச் செயலாளர் பி.எம்.இளங்கோவன், பட்டுக்கோட்டை ஒன்றியத் தலைவர் ஆனந்த கிருஷ்ணன், பேராவூரணி ஒன்றியத் தலைவர் வின்சென்ட் ஜெயராஜ், ஒன்றியச் செயலாளர் சுதாகர், திருவோணம் ஒன்றியத் தலைவர் திருமேனி, சேதுபாவா சத்திரம் ஒன்றியச்செயலாளர் ஜலீல் முகைதீன், அதிராம்பட்டினம் பேரூர் தலைவர் ஜம் ஜம் அகமது அஸ்ரப் ஆகியோர் உடனிருந்தனர்.


Monday, September 14, 2020

அதிராம்பட்டினம் மாற்றுத்திறனாளிகள் நலச்சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு (படங்கள்)


அதிராம்பட்டினம், செப்.14
தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான நலச்சங்க அதிராம்பட்டினம் பேரூர் புதிய நிர்வாகிகள் தேர்வுக்கூட்டம் அதிராம்பட்டினம் ஆய்ஷா மகளிர் அரங்கில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்திற்கு, சங்கத்தின் தஞ்சை மாவட்டத் தலைவர் பஹாத் முகமது தலைமை வகித்தார். பட்டுக்கோட்டை ஒன்றியத் தலைவர் ஆனந்த கிருஷ்ணன், ஒன்றிய துணைத்தலைவர் பாலு, ஒன்றிய துணைச் செயலாளர் கோபி, பொருளாளர் கோட்டை துரை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில், தலைவராக அகமது அஸ்ரப், துணைத் தலைவராக ஹாஜா ஷரீப், செயலாளராக ஜமால் முகமது, துணைச் செயலாளராக பெரமையன், பொருளாளராக குலாம் காதர் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

கூட்டத்தில், மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை பெற்றுக் கொடுப்பது, கொடையாளர்கள் மூலம் நலிவடைந்த உறுப்பினர் ஒருவருக்கு வாழ்வாதார உதவியாக ஆட்டோ வாகனம் வாங்குவதற்கு ஏறபாடு செய்வது, ரயில், அரசுப் பேருந்துகளில் பயணம் மேற்கொள்ள பாஸ் வாங்கிக் கொடுப்பது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேறப்பட்டன.


Tuesday, July 7, 2020

அதிராம்பட்டினத்தில் மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம் (படங்கள்)

அதிராம்பட்டினம், ஜூலை 07
தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் அதிராம்பட்டினத்தில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கரோனா பாதுகாப்பு நிதியாக மாற்றுத்திறனாளிகளுக்கு மாதம் ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு 100 நாள் வேலைத் திட்டத்தை 200 நாட்களாக உயர்த்தி, 4 மணி நேரம் வேலையும், முழு கூலி ரூ. 256 வழங்க வேண்டும், தமிழக அரசின் ஆணைப்படி அடையாள அட்டை பெற்றுள்ள அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் தலா ரூ.1000 அவர்களின் வீட்டிற்கு சென்று வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

அதிராம்பட்டினம் வருவாய் ஆய்வாளர் அலுவலகம் முன்பு சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சங்க அதிராம்பட்டினம் பேரூர் தலைவர் அஸ்ரப் தலைமை வகித்தார். தஞ்சை மாவட்டத் தலைவர் பஹாத் முகமது முன்னிலை வகித்தார். இதில், அவ்வைப்பின் அதிராம்பட்டினம் பேரூர் செயலாளர் ஏ.எம்.எப் ஜெஹபர் சாதிக், பொருளாளர் என்.ஜமால் முகமது உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். நிறைவில், கோரிக்கைகள் அடங்கிய மனுவினை அதிராம்பட்டினம் வருவாய் ஆய்வாளர் சரவணனிடம் வழங்கினர்.
 
 

Wednesday, June 24, 2020

பட்டுக்கோட்டை சப் கலெக்டருக்கு நன்றி தெரிவிப்பு!

பட்டுக்கோட்டை, ஜூன் 24
தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான நலச் சங்கத்தின் சார்பாக, பட்டுக்கோட்டை சார் ஆட்சியர் ஏ.ஆர் கிளாஸ்டன் புஷ்பராஜ், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறை இணைச் செயலாளராக பணி மாற்றம் செய்யப்பட்டுள்ளதை அடுத்து, சங்கத்தின் சார்பில், தஞ்சை மாவட்டத் தலைவர் அ.பஹாத் முகமது, சேதுபாவாசத்திரம் ஒன்றியச் செயலாளர் ஜலீல் முகைதீன் மற்றும் மஞ்சு அறக்கட்டளை நிர்வாக இயக்குனர் கௌரி ஆகியோர் நேரில் சந்தித்து சால்வை அணிவித்து பூங்கொத்து வழங்கி வாழ்த்து தெரிவித்துனர்.

அப்போது, மாதந்தோறும் மாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடத்தி, மாற்றுத்திறனாளிகள் அளித்த கோரிக்கைகளுக்கு உடனடி தீர்வுகளைப் பெற்றுத்தந்தற்கு நன்றி தெரிவித்துக்கொண்டனர்.

Thursday, May 7, 2020

அதிராம்பட்டினம் பேரூராட்சி அலுவலகத்தில் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட முயன்ற மாற்றுத்திறனாளிகளுடன் செயல் அலுவலர் பேச்சுவார்த்தை!

அதிராம்பட்டினம், மே.07
மாற்றுத்திறனாளிகளுக்கு கரோனா சிறப்பு நிவாரணமாக ரூ.5 ஆயிரம் வழங்கிட வலியுறுத்தி தமிழகம் முழுவதும் அரசு அலுவலங்களில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் குடியேறும் போராட்டம் இன்று வியாழக்கிழமை நடத்த அறிவுறுத்தப்பட்டது.

அதன்படி, சங்கத்தின் தஞ்சை மாவட்டத் தலைவர் அ.பஹாத் முகமது தலைமையில், அதிராம்பட்டினம் பேரூராட்சி அலுவலகத்தில் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட முயன்ற சங்கத்தை சேர்ந்த 10 க்கும் மேற்பட்டோரிடம் அதிராம்பட்டினம் பேரூராட்சி செயல் அலுவலர் பி.பழனிவேலு, அதிராம்பட்டினம் வருவாய் ஆய்வாளர்கள் உமர், சரவணன், கிராம நிர்வாக அலுவலர் அசாருதீன் ஆகியோர் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போது, அரசின் ஊரடங்கால் மாற்றுத்திறனாளிகள் அனைவரும் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து தவிப்பதாகவும், அரசு சார்பில், மாற்றுத்திறனாளிகளுக்கு கரோனா சிறப்பு நிவாரணமாக ரூ.5 ஆயிரம்  உடனடியாக வழங்க வேண்டுமென கோரிக்கை வைத்தனர். பின்னர், இக்கோரிக்கையை மனுவாக பெற்றுக்கொண்டு, இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் கவனத்துக்கு கொண்டு செல்வதாக செயல் அலுவலர் பி.பழனிவேலு அவர்களிடம் தெரிவித்தையடுத்து, குடியேறும் போராட்டத்தில் ஈடுபட முயன்ற மாற்றுத்திறனாளிகள் அனைவரும் கலைந்து சென்றனர்.