.

Pages

Showing posts with label நீர் நிலை பாதுகாப்பு அறக்கட்டளை. Show all posts
Showing posts with label நீர் நிலை பாதுகாப்பு அறக்கட்டளை. Show all posts

Sunday, September 29, 2019

'நீர் வளம் காப்போம்', 'மழை நீர் சேகரிப்பு' விழிப்புணர்வு பேச்சுப் போட்டி (படங்கள்)

அதிராம்பட்டினம், செப்.29
நீர்நிலை பாதுகாப்பு அறக்கட்டளை சார்பில், நீர் வளம் காப்போம், மழை நீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேச்சுப் போட்டி, ஆய்ஷா மகளிர் அரங்கில் (செப். 28) சனிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, தலைமை ஆசிரியர் (ஓய்வு) எஸ்.கே.எம் ஹாஜா முகைதீன். தலைமை வகித்து, போட்டியை தொடங்கி வைத்துப் பேசினார். நீர்நிலை பாதுகாப்பு அறக்கட்டளை தலைவர் எஸ்.எச் அஸ்லம் வரவேற்றுப் பேசினார்.

இதில், பள்ளி மாணவ, மாணவிகளுக்கு 'நீர் வளம் காப்போம்', 'மழை நீர் சேகரிப்பு', 'நீராதாரம், உயிராதாரம்' ஆகிய தலைப்புகளின் கீழ், கீழோர் பிரிவில் 6,7,8,9 ஆகிய வகுப்புகளுக்கும், மேலோர் பிரிவில் 10,11,12 ஆகிய வகுப்புகளுக்கு பேச்சுப்போட்டி நடத்தப்பட்டன.

இதில், இமாம் ஷாஃபி மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி, கரையூர் தெரு அரசு மகளிர் உயர் நிலைப்பள்ளி, ஈ.பி.எம்.எஸ் பள்ளி, காதிர் முகைதீன் மேல்நிலைப்பள்ளிகள், ஆக்ஸ்போர்டு மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி, பிரிலியண்ட் சிபிஎஸ்இ மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளைச் சேர்ந்த மொத்தம் 26 மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.

போட்டி நடுவர்களாக, கல்வியாளர் எஸ்.எம் நூர்முகமது, முதுகலை
ஆசிரியர்கள் ஆர். உஷா, ஏ.அஜுமுதீன் ஆகியோர் பொறுப்பேற்று நடத்தினர்.

போட்டி முடிவில், கீழோர் பிரிவில், மாணவர்கள் கே.விஷாலினி (ஆக்ஸ்போர்டு பள்ளி), ஏ. தஸ்பீஹா (ஈ.பி.எம்.எஸ் பள்ளி), ஆர்.நித்யஸ்ரீ (ஆக்ஸ்போர்டு பள்ளி) ஆகியோரும், மேலோர் பிரிவில், எச்.நஹீதா (ஈ.பி.எம்.எஸ் பள்ளி), ஏ.அருள்தேவி (ஆக்ஸ்போர்டு பள்ளி), எஸ்.சரிகா ( ஆக்ஸ்போர்டு பள்ளி) ஆகியோரும் முதல் மூன்று இடங்களைப் பெற்றனர். இவர்களுக்கு நினைவுப்பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது. மேலும், போட்டியில் பங்குபெற்ற அனைத்து மாணவ, மாணவிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள், நினைவுப்பரிசுகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியினை, அவ்வமைப்பின் ஆலோசகர் மு.காதர் முகைதீன் தொகுத்தளித்தார். முடிவில், அவ்வமைப்பின் பொருளாளர் ஏ.எஸ் அகமது ஜலீல் நன்றி கூறினார். நிகழ்ச்சியில், அவ்வமைப்பின் நிர்வாகிகள், உறுப்பினர்கள், நீர் நிலை ஆர்வலர்கள், பள்ளி ஆசிரியர்கள் பெற்றோர்கள், மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.
 


 



 


Tuesday, September 17, 2019

ஆற்று நீர் வழித்தட வாய்க்கால் தூர் வாரும் பணி தீவிரம் (படங்கள்)

அதிராம்பட்டினம், செப்.17
அதிராம்பட்டினம் கடைமடைப் பகுதிக்கு தண்ணீர் செல்லும் சி.எம்.பி வாய்க்கால் தூர் வாரும் பணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

நீர் நிலை பாதுகாப்பு அறக்கட்டளை சார்பில், அதிராம்பட்டினம் கடைமடைப் பகுதிக்கு தண்ணீர் செல்லும் சி.எம்.பி வாய்க்கால் தூர் வாரும் பணி ஜேசிபி இயந்திரத்தின் உதவியோடு நடைபெற்றது. கடந்தாண்டு வீசிய கஜா புயலின் போது வாய்க்காலில் முறிந்த கிடந்த பனை மரங்கள், முறிந்த மின்கம்பங்கள் போன்றவை அகற்றப்பட்டன. மிலாரிக்காடு தொடங்கி சி.எம்.பி லேன் வரையிலான வாய்க்கால் அடைப்புகள் சீர்செய்யப்பட்டன. பணிகளை அவ்வமைப்பின், நிறுவனத்தலைவர் எஸ்.எச் அஸ்லம் மற்றும் நிர்வாகிகள் நேரில் பார்வையிட்டனர்.
 

Saturday, September 14, 2019

நீர் நிலை மேம்பாடு பணிக்கு சிஷ்வா அமைப்பு ரூ.50 ஆயிரம் நிதி உதவி!

அதிராம்பட்டினம், செப்.14
அதிராம்பட்டினம் சம்சுல் இஸ்லாம் சங்கத்தின் ஓர் அங்கம் சிஷ்வா அமைப்பு. இந்த அமைப்பின் மூலம் பல்வேறு சமூகப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புற கிராமப் பகுதிகளின் நீர் நிலை பாதுகாப்பு, அதன் பராமரிப்பு, அவற்றை மேம்படுத்துதல் போன்ற பணிகளுக்காக தொடங்கிய அமைப்பு 'நீர் நிலை பாதுகாப்பு அறக்கட்டளை. இந்த அமைப்பு முன்னெடுத்து செல்லும் அடுத்தக்கட்ட மேம்பாடு பணிகளுக்காக சிஷ்வா அமீரக கிளை நிர்வாகிகள் மூலம் திரட்டப்பட்ட ரூ.50 ஆயிரம் நிதி உதவியை, சம்சுல் இஸ்லாம் சங்கத் தலைவர் ஹாஜி எம்.எஸ்.எம் முகமது அபூபக்கர் தலைமையில், சங்க செயலாளர் பேராசிரியர் ஹாஜி எம்.ஏ அப்துல் காதர், மற்றும் அதன் நிர்வாகிகள் அகமது மன்சூர், அப்துல் ரஹீம், அன்சாரி, சிஷ்வா அமைப்பின் பன்னாட்டுத் தலைவர் எம்.எஸ்.எம் சபீர் அகமது ஆகியோர் முன்னிலையில், நீர் நிலை பாதுகாப்பு அறக்கட்டளை நிறுவனத் தலைவர் எஸ்.எச் அஸ்லம், பொருளாளர் ஏ.எஸ் அகமது ஜலீல் ஆகியோரிடம் ஒப்படைத்தனர்.

Saturday, August 31, 2019

அதிராம்பட்டினம் ஆற்று நீர் வழித்தட பகுதிகளில் எஸ்.எஸ் பழனிமாணிக்கம் எம்.பி ஆய்வு (படங்கள்)

அதிராம்பட்டினம், ஆக. 30
அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புற ஆற்று நீர் வழித்தட வாய்க்கால் பகுதிகளில் தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எஸ் பழனிமாணிக்கம் எம்.பி., இன்று வெள்ளிக்கிழமை மாலை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அதிராம்பட்டினம் பேரூர் பகுதியின் குடிநீர் தேவைக்காக, அதிராம்பட்டினம் கடைமடைப் பகுதி குளங்களுக்கு தண்ணீர் திறந்து விடக்கோரி நீர்நிலை பாதுகாப்பு அறக்கட்டளை சார்பில், அவ்வமைப்பினர் மாவட்ட ஆட்சியர், பொதுப்பணித்துறை உள்ளிட்ட அதிகாரிகளிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், டெல்டா பாசனத்திற்காக, கல்லணையிலிருந்து கடந்த (17-08-2019) அன்று தண்ணீர் திறந்து விடப்பட்டதை அடுத்து நேற்று வியாழக்கிழமை முதல் இராஜமடம் கிளை வாய்க்காலில் தண்ணீர் மிதமாக வந்துகொண்டு இருக்கிறது.

இந்நிலையில், தொக்காலிகாடு கிராமத்தில் உள்ள இராஜமடம் கிளை
வாய்க்கால் 20/21 ல், தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எஸ் பழனிமாணிக்கம் எம்.பி., இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது நீர்நிலை பாதுகாப்பு அறக்கட்டளை அமைப்பின் தலைவர் எஸ்.எச் அஸ்லம் தலைமையில் அங்கு திரண்டிருந்த சுமார் 100 க்கும் மேற்பட்டோர் அதிராம்பட்டினம் கடைமடைப் பகுதி வரை தண்ணீர் வருவதற்கு உரிய நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு எஸ்.எஸ் பழனிமாணிக்கம் எம்.பி., யிடம் கேட்டுக்கொண்டனர்.

பின்னர், அதிராம்பட்டினம் கடைமடைப் பகுதிக்கு தண்ணீர் செல்லும் சி.எம்.பி வாய்க்கால் பகுதியை பார்வையிட்டார். சி.எம்.பி வாய்க்கால் இணைப்பில் இருந்து பெண்கள் குளத்திற்கு (மரைக்கா குளம்) தண்ணீர் செல்லும் 100 மீட்டர் தூரத்தில் வடிகால் அமைக்கும் திட்டம் குறித்து கேட்டறிந்தார்.

அப்போது, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கா. அண்ணாதுரை, திமுக பட்டுக்கோட்டை (மேற்கு) ஒன்றிய செயலாளர் பா.இராமநாதன், திமுக அதிராம்பட்டினம் பேரூர் செயலாளர் இராம.குணசேகரன், மாளியாக்காடு ஊராட்சி முன்னாள் தலைவர் ரமேஷ், மகிழங்கோட்டை ஊராட்சி முன்னாள் தலைவர் சுப்புமாறன், தொக்காலிகாடு கிராம நீர்நிலை ஆர்வலர்கள் சாமிநாதன், பாண்டியன் மற்றும் அதிராம்பட்டினம் நீர் நிலை பாதுகாப்பு அறக்கட்டளை அமைப்பினர் பலர் உடன் இருந்தனர்.