.

Pages

Showing posts with label BEACH ASSOCIATION. Show all posts
Showing posts with label BEACH ASSOCIATION. Show all posts

Monday, September 7, 2020

கடற்கரைத்தெரு ஹஜரத் ஹாஜா செய்கு அலாவுதீன் தர்ஹா கந்தூரி விழாவில் மாற்றம்!

அதிராம்பட்டினம், செப்.07
தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினம் கடற்கரைத்தெரு ஹஜரத் ஹாஜா செய்கு அலாவுதீன் வலியுல்லாஹ் தர்ஹா நிர்வாகக் கமிட்டி ஆலோசனைக் கூட்டம் தர்ஹா வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில், தர்ஹா நிர்வாகத் தலைவர் எம். செய்யது சலாஹுதீன் வழிகாட்டுதல் பேரில், கரோனா வைரஸ் தாக்கத்தை கருத்தில் கொண்டு, நடைபெற இருந்த, ஹஜரத் ஹாஜா செய்கு அலாவுதீன் வலியுல்லாஹ் தர்ஹா 581 ஆம் ஆண்டு கந்தூரி விழாவில் மாற்றம் கொண்டு வருவது எனவும், அதன்படி, கந்தூரி நகர் ஊர்வலம் மற்றும் மக்கள் கூடும் நிகழ்வுகள் ஆகியவற்றை ரத்து செய்வது எனவும், கந்தூரி விழாவையொட்டி அமைக்கப்படும் தற்காலிக கடைகளுக்கு அனுமதி அளிப்பதில்லை எனவும், கடற்கரைத்தெரு குடியிருப்பு பகுதிகளில் நிதி வசூல் கிடையாது எனவும், கந்தூரி விழா தொடங்கிய முதலாவது நாளிலிருந்து 11 நாட்கள் வரை குர்ஆன், ஹத்தம் பாத்திஹா ஓதி பிரார்த்தனை செய்வது என தீர்மானிக்கப்பட்டன.

இதைதொடர்ந்து, கடற்கரைத்தெரு ஜமாத் நிர்வாகிகள் மற்றும் தமிழ்நாடு தர்ஹாக்கள் முன்னேற்றப் பேரவை தலைவர் முத்துப்பேட்டை எஸ்.எஸ் பாக்கர் அலி சாகிப் ஆகியோரை தனித்தனியே சந்தித்து தீர்மானங்கள் குறித்து எடுத்துரைத்தனர். பின்னர், அவர்களிடம் ஒத்துழைப்பு கோரினர். இந்நிகழ்வில், தர்ஹா நிர்வாகிகள் ஹாஃபிழ் சகாபுதீன், எம். பக்கீர் முகைதீன், ஸ்மார்ட் எம்.சாகுல், ஏ.எச் அப்துல் மாலிக், மவ்லவி ஹைதர் அலி மற்றும் நிர்வாகிகள்  கலந்துகொண்டனர்.

Saturday, August 15, 2020

கடற்கரைத்தெரு ஜமாத்தார்கள் சார்பில் சுதந்திர தின விழாக் கொண்டாடட்டம் (படங்கள்)

அதிராம்பட்டினம், ஆக. 15
இந்தியா 74-வது சுதந்திர தினவிழா நாடெங்கிலும் இன்று உற்சாகமாகக் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, அதிராம்பட்டினம் கடற்கரைத்தெரு ஜூம்ஆ பள்ளிவாசல் நிர்வாகம், தீனுல் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றம் மற்றும் கடற்கரை தெருவாசி மஹல்லாவாசிகள் சார்பில், சுதந்திர தின கொடி ஏற்றும் நிகழ்வு சனிக்கிழமை காலை நடைபெற்றது.

நிகழ்வுக்கு, ஜமாத் தலைவர் வி.எம்.ஏ அகமது ஹாஜா தலைமை வகித்து இந்திய தேசியக்கொடியை ஏற்றி வைத்து, சாதி மத இன பாகுபாடு இல்லாத சுதந்திர இந்தியா வேண்டும் என்று அனைவரும் இணைந்து உறுதி ஏற்றுக் கொள்வோம் என்றார்.

கடற்கரைத்தெரு ஜும்ஆ பள்ளிவாசல் தலைமை இமாம் எம்.ஜி சஃபியுல்லா அன்வாரி, இந்திய சுதந்திரத்திற்காக நம் முன்னோர்கள் அரும்பாடுபட்ட வரலாற்றை நினைவுகூர்ந்து பேசினார்.

இந்நிகழ்வில், கடற்கரைத்தெரு ஜமாஅத் நிர்வாகிகள், தீனுல் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்ற நிர்வாகிகள், மஹல்லவாசிகள் கலந்துகொண்டனர். அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.
 
 
 
 
 
 
 
 

Wednesday, July 15, 2020

கடற்கரைத்தெரு BEACH UPDATE குழுமம் நடத்தும் குர்ஆன் அறிவுத்திறன் ஆன்லைன் போட்டி!

அதிராம்பட்டினம், ஜூலை 15
கரோனா ஊரடங்கில்,வீட்டில் முடங்கிக் கிடக்கும் பள்ளிக்குழந்தைகள் பயனுள்ள வகையில் பொழுதை கழிக்க வேண்டும் என்பதை அடிப்படையாகக்கொண்டு, அதிராம்பட்டினம், கடற்கரைத்தெரு பீச் அப்டேட் குழுமம் சார்பில், 'KIDS COMPETITION ~ 2020' என்ற பெயரில், பேச்சுப்போட்டி, குர்ஆன் சூராக்கள் பார்த்தும் ஓதுதல், கிராத் உள்ளிட்ட இஸ்லாமிய மார்க்க அறிவுத்திறன் போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டு, அதற்கான அறிவிப்பை இன்று புதன்கிழமை வெளியிட்டுப்பட்டுள்ளது.

இதில், போட்டி பற்றிய விதிமுறைகள், தலைப்பு, நாள், போட்டியாளர்கள் வயது உச்சவரம்பு, போட்டி நடத்துனர்கள் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் இடம்பெற்றுள்ளன. எனவே, இதில், ஆர்வமுள்ள கடற்கரைத்தெரு மஹல்லாவாசி குழந்தைகள் முன்பதிவு செய்து, போட்டிகளில் பங்கேற்குமாறு அவ்வமைப்பின் சார்பில் வேண்டுகோள் விடப்பட்டுள்ளது.
 

Monday, June 22, 2020

கடற்கரைத்தெரு ஜமாஅத் புதிய நிர்வாகிகள் தேர்வு!

அதிராம்பட்டினம், ஜூன் 22
அதிராம்பட்டினம் கடற்கரைத்தெரு ஜமாஅத் நிர்வாகிகளுக்கான இரண்டு ஆண்டுகள் பதவிக்காலம் நிறைவடைந்ததை அடுத்து, புதிய நிர்வாகிகளுக்கான தேர்வுக்கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்திற்கு, கடற்கரைத்தெரு ஜமாஅத் முன்னாள் தலைவர் எம்.அப்துல் ரெஜாக் தலைமை வகித்தார். மஹல்லாவாசிகள் முன்னிலை வகித்தனர். இதில், தலைவராக வி.எம்.ஏ அகமது ஹாஜா, இணைத் தலைவராக பி.எஸ் செய்யது புஹாரி,  துணைத்தலைவராக எச்.ஜபருல்லாகான், செயலாளராக பி.எம்.எஸ் முகமது அமீன், இணைச்செயலாளராக ஏ.ஹாஜா நஜ்முதீன், துணைச்செயலாளர்களாக எச்.மீரா முகைதீன், எம்.பி  அகமது கபீர், எம். அஸ்ரப், எம். அஸ்ரப் அலி, எச்.அகமது, பொருளாளராக எஸ்.அன்வர் உசேன், இணைப்பொருளாளராக எஸ்.ஜெஹபர் அலி, துணைப்பொருளாளராக எம்.பக்கீர் முகைதீன், கெளரவ ஆலோசகர்களாக மவ்லவி எம்.தாஜுதீன், எம்.எஸ் முகமது பசீர், எம். அப்துல் ரெஜாக், எம். ஹாஜா நசுருதீன், எம்.லியாகத் அலிகான், என். ஹாஜா நஜ்முதீன் (சிராஜுதீன்|), எம்.முகமது இக்பால், எஸ்.எம்.என் முகமது மீரா ஆகியோர் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டனர். இவர்களின் பதவிக்காலம் எதிர்வரும்  (01-07-2020) அன்று தொடங்கி அடுத்து இரண்டு ஆண்டுகள் வரை ஆகும்.

Saturday, February 15, 2020

CAA, NPR, NRC க்கு எதிராக அதிராம்பட்டினத்தில் நடந்த பிரமாண்ட எழுச்சி மாநாட்டில் 10 ஆயிரம் பேர் பங்கேற்பு (படங்கள்)

அதிராம்பட்டினம், பிப்.14
மத்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ), தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆா்சி), தேசிய மக்கள் தொகை பதிவேடு (என்பிஆர்) ஆகியவற்றை திரும்பப் பெறக் கோரி கண்டனப் பொதுக்கூட்டம் அதிராம்பட்டினம் கடற்கரைத்தெரு விளையாட்டு மைதானத்தில் (14-02-2020) வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி செய்தி தொடர்பாளர் திருச்சி வேலுச்சாமி கலந்துகொண்டு பேசிய கண்டன உரையில்;
இந்த 11 பேர் மட்டும் இந்த சட்டத்திற்கு ஆதரவாக வாக்களிக்காமல் இருந்திருந்தால் இந்த சட்டத்திருத்தமே வந்திருக்காது. முதன் முதலாக குடியுரிமை சட்டம் வருகிறபோது அதற்கான விவாதத்தை நாடு முழுவதும் இருக்கக்கூடிய மாநில சட்டமன்றங்களில் விவாதத்திற்கு கொண்டு வரப்பட்டது. அதற்கு பின்னர் தான் இந்த சட்டத்திருத்தமே வருகிறது.

மாநில சட்டமன்றங்களில், பொதுவெளியில் இதற்கான விவாதங்கள் இல்லையென்றால் இது ஜனநாயக நாடா? எப்படி இந்த சட்டத்தை கொண்டு வரமுடியும், சட்டத்திற்கு முரணாக இல்லையா? டெல்லியில் இருக்கிற இந்தியா கேட்டில், இந்தியாவின் சுதந்திரத்திற்காக தங்களை அழித்துக்கொண்ட தியாகிகள் 95 ஆயிரம் பேரின் பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளது அதில், 61 ஆயிரம் பேர் முஸ்லீம்கள்.

தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆா்சி) சட்டம் வந்த பிறகு 19 லட்சம் பேர் குடியுரிமையை இழந்து அசாம் மாநிலத்தில் உள்ளனர். இதில், 6 லட்சம் பேர் மட்டும்தான் முஸ்லீம்கள், எஞ்சிய 13 லட்சம் பேர் இந்துக்கள். எனவே, இந்த
சட்டத்தால் பாதிக்கப்படுவது முஸ்லீம்கள் மட்டுமல்ல இந்துக்களும் தான்' என்றார்.

முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பழ.கருப்பையா கலந்துகொண்டு பேசிய கண்டன உரையில்;
'தமிழ்நாட்டில் இந்துக்களும், முஸ்லீம்களுக்கும் பிரித்து பார்க்கின்ற பேதம் இந்த மண்ணிற்கு கிடையாது. ஒரு சமூகத்தோடு மற்றொரு சமூகத்தவர் மாமன், மச்சான் என்று உறவு கொண்டாடுவது, சித்தப்பு என்று சொல்வது, மாமு என்று அழைத்துக்கொள்வது இந்த நாட்டினரின் இயல்பான பழக்கம். மனிதனை உருவாக்குவதில் மதத்திற்கான பங்கு மிகப்பெரியளவில் உள்ளது. எப்படி பெற்றோர் ஒரு பங்கு, கல்வி ஒரு பங்கோ. அதுபோல் மதம் ஒரு பங்கு. என்னுடைய மதம் சிறந்தது. உன்னுடைய மதம் மோசமானது என்கின்ற போக்கு ஏற்பட்ட பிறகுதான் மோதல் ஏற்பட்டது' என்றார்.

தமுமுக மாநில துணைத்தலைவர் கோவை செய்யது கலந்துகொண்டு பேசிய கண்டன உரையில்;
இந்திய சேதத்தினுடைய முஸ்லீம்களை சன்னம், சன்னமாக அப்புறப்படுத்துவதற்கான சதிக்கூட்டத்தின் ஒரு பகுதி தான் இந்த குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ). அதன் அடுத்தப் பகுதி தேசிய மக்கள் தொகை பதிவேடு (என்பிஆர்), அடுத்தது. தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆா்சி) அவர்கள் அமல்படுத்த துடிப்பது அதுதான். இந்திய தேசத்தின் விடுதலைக்கு வித்திட்டவர்கள் முஸ்லீம்கள். என்றார்.

வழக்குரைஞர் தமிழன் பிரசன்னா கலந்துகொண்டு பேசிய கண்டன உரையில்;
குடியுரிமை சட்டம் 1955 ல் இயற்றப்பட்டது. இந்த சட்டம் ஆறு முறை திருத்தப்பட்டது. 5 முறை கொண்டு வரப்பட்ட இந்த சட்டத்தை எதிர்த்து போராடாதவர்கள் இப்போது தெருவில் வந்துநின்று போராடுவதன் நோக்கம் இஸ்லாமிய மதத்தை சார்ந்தவன் இந்த சட்டத்தின் மூலம் இந்தியாவுக்குள் வரக்கூடாது என்று குறிப்பிட்டுள்ளதால் தான் இந்த சட்டம் எதிர்க்கப்படுகிறது.

இந்தியா ஒரு அரசியலமைப்பு சார்ந்த நாடு. இந்த நாட்டில் வடிவமைக்கக்கூடிய சட்டங்கள் இந்திய அரசியலமைப்புக்கு உட்பட்டு இருக்க வேண்டும். இப்படி ஒரு மதத்தை குறிப்பிட்டு அந்த மதத்தை சார்ந்தவர்கள் இந்தியாவிற்குள் வரக்கூடாது என்று இந்தியாவில் சட்டம் இயற்ற முடியாது.

அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக ஒரு சட்டத்தை கூட இந்தியாவில் இயற்ற முடியாது. இந்திய அரசியலமைப்பு சட்டம் சொல்கிறது. இந்த நாடு மதச்சார்பற்ற நாடு என்று. இந்த நாட்டில் இஸ்லாமியர்கள் வரக்கூடாது என்று இப்படி ஒரு  குடியுரிமை திருத்த சட்டத்தை இந்தியாவில் இயற்றினால் அது செல்லுமா? செல்லாதா? என்றார்.

முன்னதாக, கடற்கரைத்தெரு ஜும்மா பள்ளிவாசல் தலைமை இமாம் மவ்லவி. எம்.ஜி சபியுல்லா அன்வாரி தொடக்க உரை நிகழ்த்தினார்.
கூட்டத்திற்கு, கடற்கரைத்தெரு ஜும்மா பள்ளி நிர்வாகக் கமிட்டித் தலைவர் ஏ.அப்துல் ரெஜாக் தலைமை வகித்தார். அதிராம்பட்டினம் அனைத்து சமுதாய அமைப்புகளின் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியினை, ஏ.முகமது ஹஸனார் தொகுத்தளித்தார். நிறைவில், அண்ணா சிங்காரவேலு நன்றி கூறினார். கூட்ட ஏற்பாட்டினை கடற்கரைத்தெரு மஹல்லாவாசிகள் செய்திருந்தனர்.

கூட்டத்தில், சி.எப்.ஐ விதைகள் கலைக்குழுவினர், ஊர் பிரமுகர்கள், கிராம பஞ்சாயத்தார்கள், பெண்கள், குழந்தைகள் உட்பட 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மத்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ), தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆா்சி), தேசிய மக்கள் தொகை பதிவேடு (என்பிஆர்) ஆகியவற்றை அமல்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அவற்றை திரும்ப பெற வலியுறுத்தியும் தங்களது செல்லிடப்பேசியில் விளக்கு எரியவிட்டபடி முழக்கமிட்டனர்.
 

Thursday, August 15, 2019

துப்பாக்கி சுடும் வீரர்கள் வஜீர் அலி, தைஷீர் அலி ஆகியோருக்கு கடற்கரைத் தெரு ஜமாத்தார் பாராட்டு!

அதிராம்பட்டினம், ஆக.15
துப்பாக்கி சுடும் வீரர்கள் வஜீர் அலி, தைஷீர் அலி ஆகியோருக்கு கடற்கரைத் தெரு ஜமாத் நிர்வாகம் சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தை சேர்ந்தவர் சேக் முகமது. இவரது மகன் வஜீர் அலி (வயது 45). ரைபிள் கிளப் உறுப்பினரான இவர், மதுரை, கோவை, திருச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடந்து வரும் துப்பாக்கி சுடுதல் போட்டிகளில் ஆர்வமாகக் கலந்துகொண்டு வருகிறார்.

அண்மையில், கோவை மாநகரக் காவல் துறை மற்றும் ரைபிள் கிளப் இணைந்து, நடத்திய 45-வது மாநில அளவிலான துப்பாக்கிச் சுடும் போட்டியில் அதிராம்பட்டினம் வீரர் வஜீர் அலி (வயது 45) 10 மீட்டர் ஏர் பிஸ்டல், 25 மீட்டர் ஸ்டாண்டர்டு பிஸ்டல் ஆகிய பிரிவுகளிலும், அவரது சகோதரர் தைஷீர் அலி 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவிலும் கலந்துகொண்டு விளையாடி சாதனை நிகழ்த்தினர்.

இந்நிலையில், அதிராம்பட்டினம் கடற்கரைத் தெரு ஜமாத் நிர்வாகக் கமிட்டி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட சிறப்பு நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்ட சாதனை வீரர்கள் வஜீர் அலி, தைஷீர் அலி ஆகியோருக்கு ஜமாத் நிர்வாகிகள் சால்வை அணிவித்து பாராட்டுத் தெரிவித்தனர்.

கடற்கரைத் தெரு ஜமாத் தலைவர் அப்துல் ரெஜாக் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், கடற்கரைத் தெரு ஜமாத் நிர்வாகிகள், இளைஞர்கள் அமைப்பின் நிர்வாகிகள் உள்ளிட்ட மஹல்லாவாசிகள் பலர் கலந்துகொண்டனர்.