.

Pages

Showing posts with label BSNL. Show all posts
Showing posts with label BSNL. Show all posts

Thursday, February 21, 2019

அதிராம்பட்டினத்தில் BSNL சேவை பாதிப்பு!

அதிராம்பட்டினம், பிப்.21
BSNL 4ஜி அலைக்கற்றை சேவையை உடனடியாக ஒதுக்கீடு செய்திட வேண்டும், 1.1.2017 முதல் ஓய்வூதியதாரர்களுக்கு பென்சன் மாற்றத்தை அமல்படுத்திட வேண்டும், 2-வது ஊதிய மாற்றுக்குழுவின் விடுபட்ட பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பி.எஸ்.என்.எல். அதிகாரிகள், ஊழியர்கள் சங்க கூட்டமைப்பினர் நேற்று முன்தினம் முதல் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டதின் காரணமாக சுமார் 30 மணி நேரத்திற்கும் மேலாக அதிராம்பட்டினம் பகுதியில், பிஎஸ்என்எல் நெட்ஒர்க் சேவையில் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் தொலைபேசி மற்றும் இணையதள வசதியைக் கொண்டுள்ள பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள் அவதியுற்றனர்.

இந்நிலையில்,  அதிராம்பட்டினம் பகுதியில் நேற்று இரவில் மீண்டும் பி.எஸ்.என்.எல் சேவை வழங்கப்பட்டது. 

Monday, March 27, 2017

அதிரையில் BSNL சார்பில் இலவச சிம்கார்டு வழங்கும் முகாம் !

அதிராம்பட்டினம், மார்ச்-27
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் பி.எஸ்.என்.எல் நிறுவனம் சார்பில் இலவச சிம்கார்டு வழங்கும் முகாம் அதிராம்பட்டினம் பேருந்து நிலையம் அருகில் திங்கள்கிழமை நடைபெற்றது.

முகாமிற்கு என்.எப்.டி.இ - பிஎஸ்என்எல் மாவட்ட செயலாளர் கே. கிள்ளிவளவன் தலைமையில் சி.நாடிமுத்து, கிருஷ்ணமூர்த்தி, சுந்தர்ராஜ், செல்வகுமார், தீபன், பாலு, வேம்பு உள்ளிட்ட அதிராம்பட்டினம் பிஎஸ்என்எல் நிறுவன ஒப்பந்த ஊழியர்கள் புதிய வாடிக்கையாளர்களுக்கு சிம் கார்டுகளை வழங்கினர்.

முகாமில் குடும்ப அட்டை அல்லது வாக்காளர் அடையாள அட்டை மற்றும் புகைப்படம் ஆகியவற்றை வழங்கி சிம்கார்டுகளை வாடிக்கையாளர்கள் பெற்றனர். முகாம் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடந்தது. முகாமில் 200 வாடிக்கையாளர்கள் பிஎஸ்என்எல் சேவையில் புதிதாக இணைந்தனர்.
 

Sunday, December 18, 2016

BSNL-ல் புதிய திட்டங்கள் அறிமுகம்!

பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் மொபைல் வாடிக்கையாளர்களுக்குப் புதிய திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் தஞ்சாவூர் பொது மேலாளர் ச.வி. வினோத் தெரிவித்திருப்பது:
பி.எஸ்.என்.எல். அரசுப் பொது நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கும், பொதுமக்களுக்கும் புதிய திட்டங்களை ஞாயிற்றுக்கிழமை (டிச.18) முதல் வருகிற 2017 ஆம் ஆண்டு மார்ச் 17-ம் தேதி வரை 90 நாள்களுக்கு அறிமுகப்படுத்துகிறது.

இதில், கோம்போ - 339 என்ற திட்டத்தின் மூலம் ரூ. 339 செலுத்தி 28 நாள்களுக்கு அகில இந்திய அளவில் அனைத்து மொபைல் எண்களுக்கும் அளவில்லா அழைப்புகள் பேசலாம். மேலும், இத்துடன் ஒரு ஜி.பி. டேட்டா இலவசமாக வழங்கப்படுகிறது.

கோம்போ - 139 என்ற திட்டத்தின் மூலம் ரூ. 139 செலுத்தி 28 நாள்களுக்கு அகில இந்திய அளவில் பி.எஸ்.என்.எல். எண்களுக்குள் மட்டும் அளவில்லா அழைப்புகள் பேசலாம். மேலும், இத்துடன் 300 எம்.பி. டேட்டா இலவசமாக வழங்கப்படும்.

இந்தச் சிறப்புக் கட்டணச் சேவையைத் தாங்களாகவே சி - டாப்அப் மூலமாகவும், வாடிக்கையாளர் சேவை மையம், பி.எஸ்.என்.எல். வெப் போர்டல் மூலமாகவும் பெறலாம்.

Thursday, October 20, 2016

அதிரையில் தொலைத்தொடர்பு கேபிள் துண்டிப்பால் பொதுமக்கள் அவதி!

அதிராம்பட்டினம், அக்-20
தஞ்சை மாவட்டம் பேராவூரணி, பெருமகளூர், அதிரை ஆகிய பேரூராட்சிகள், பட்டுக்கோட்டை சேதுபாவா சத்திரம், பேராவூரணி, மதுக்கூர், பாபநாசம், திருவையாறு ஆகிய 9 ஊராட்சி ஒன்றியங்களை சேர்ந்த 1,153 குடியிருப்புகளுக்கு கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் வழங்க இருப்பதையொட்டி, கூட்டு குடிநீர் திட்டத்தின் இறுதி கட்ட பணிகள் அதிராம்பட்டினம் பேரூராட்சி பகுதியில் கடந்த ஒரு வார காலமாக தீவிரமாக நடந்து வருகிறது.

இந்தப்பணிக்காக ஜேசிபி இயந்திரம் மூலம் பள்ளம் தோண்டும் போது பிஎஸ்என்எல் தொலைதொடர்பு கேபிள்கள் 7 இடங்களில் துண்டிக்கப்பட்டன. இதனால் இந்த கேபிள் வழியே செல்லும் 100 க்கும் அதிகமான பிஎஸ்என்எல் தொலைத்தொடர்பு இணைப்புகள் கடந்த சனிக்கிழமை முதல் இயங்கவில்லை. இதனால் பொதுமக்கள் அவதியுற்றனர். இதையடுத்து இப்பகுதியினர் அளித்த புகாரை அடுத்து பிஎஸ்என்எல் நிறுவன ஊழியர்கள் துண்டித்த கேபிள்களை கண்டறிந்து இணைக்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். ஓரிரு தினங்களில் இணைப்பு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Thursday, September 15, 2016

அதிரையில் பி.எஸ்.என்.எல்., சார்பில் இலவச சிம்கார்டு வழங்கும் முகாம் !

அதிராம்பட்டினம், செப். 15
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் பி.எஸ்.என்.எல் நிறுவனம் சார்பில் இலவச சிம்கார்டு வழங்கும் முகாம் அதிராம்பட்டினம் பேருந்து நிலையம் அருகில் இன்று [15-09-2016 ] வியாழக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற்று வருகிறது.

முகாமிற்கு பிஎஸ்என்எல் இளநிலை பொறியியாளர் ராஜேந்திரன் தலைமையில் தீபன், பாலு, முத்துபாண்டி, வேம்பு உள்ளிட்ட பிஎஸ்என்எல் நிறுவன ஊழியர்கள் புதிய வாடிக்கையாளர்களுக்கு சிம் கார்டுகளை வழங்கி வருகின்றனர். முகாமில் குடும்ப அட்டை அல்லது வாக்காளர் அடையாள அட்டை மற்றும் புகைப்படம் ஆகியவற்றை வழங்கி சிம்கார்டுகளை வாடிக்கையாளர்கள் பெற்று வருகின்றனர். முகாமில் 200 வாடிக்கையாளர்கள் பிஎஸ்என்எல் சேவையில் புதிதாக இணைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

Thursday, September 8, 2016

ஒரு ரூபாய்க்கு ஒரு ஜிபி: BSNL புதிய திட்டம் அறிமுகம்!

நாடு முழுவதும் சுமார் ஒரு ரூபாய்க்கு ஒரு ஜிபி தகவல்களைப் பெறும் புதிய திட்டம் (இன்டர்நெட் டேட்டா) பிஎஸ்என்எல் வெள்ளிக்கிழமை (செப்.9) முதல் அறிமுகப்படுத்த உள்ளது.

இதுகுறித்த விவரம்: வாடிக்கையாளர்கள் பயன்பெறும் வகையிலான புதிய திட்டங்களை பிஎஸ்என்எல் அறிமுகப்படுத்தி வருகிறது. அவ்வகையில், நகரங்கள், கிராமங்கள் ஆகிய பகுதிகளில் உள்ள வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில், "அன்லிமிடெட் வயர்லைன் பிபி 249' எனும் புதிய அகண்ட அலைவரிசை திட்டத்தை செப்டம்பர் 9 ஆம் தேதி முதல் அறிமுகப்படுத்தபட உள்ளது. அதன்படி, பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள் வரையில்லாத (அன்லிமிடெட்) ஒரு ஜிபிக்கும் அதிகமான தகவல்களை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். அதோடு, இந்தத் திட்டம் 2 எம்பிபிஎஸ் வேகத்தில் தகவல்களை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

6 மாதத்துக்கு..: இந்தத் திட்டத்தைப் பயன்படுத்த தொடங்கியதிலிருந்து மாதத்துக்கு 300 ஜிபி தகவல்களை ரூ.249-க்கு வாடிக்கையாளர்கள் பெற்றுக்கொள்ளலாம். அதன்படி, ஒரு ஜிபி-க்கான பதிவிறக்க கட்டண செலவு ரூ.1-க்கும் குறைவாகவே பிஎஸ்என்எல் வழங்க உள்ளது. ஆறு மாதத்துக்கு பிறகு, வாடிக்கையாளர்கள் ஏதேனும் ஒரு அகண்ட அலைவரிசை திட்டத்துக்கு மாறிக்கொள்ளலாம்.

மேலும், இதுதொடர்பாக பிஎஸ்என்எல் நிர்வாக இயக்குநரும், தலைவருமான அனுபம் ஸ்ரீவஸ்தவா கூறியதாவது: பிஎஸ்என்எல் தொலைத்தொடர்பு நிறுவனம் மட்டுமே மிகவும் குறைந்த கட்டணத்தில் ஒரு ரூபாய்க்குள் ஒரு ஜிபி தகவல் அளிக்கும் சேவையை அளிக்க உள்ளது. மேலும், இந்த புதிய திட்டம் வாடிக்கையாளர்களை கவரும் வகையிலும், அதிகரிக்கவும் வழிவகை செய்யும் என்றார் அவர்.

புதிய வாடிக்கையாளர்கள் இந்த பிபி-249 திட்டத்தை பிஎஸ்என்எல் விற்பனை மையங்களில் பெற்றுக்கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு, 18003451500 என்ற கட்டணமில்லா இலவச எண்ணிலும் www.bsnl.co.in  என்ற இணையதள முகவரியிலும் தெரிந்துகொள்ளலாம் என பிஎஸ்என்எல் தமிழ்நாடு தொலைப்பேசி வட்ட அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

Sunday, August 14, 2016

சுதந்திர தினம் முதல் வாடிக்கையாளர்களுக்கு பி.எஸ்.என்.எல். அதிரடி !

சுதந்திர தினமான ஆகஸ்ட் 15 ம் தேதி முதல், தனது வாடிக்கையாளர்கள் லேண்ட் லைன் வாயிலாக இனி ஞாயிற்றுக்கிழமைகளில் செய்யும் அனைத்து உள்நாட்டு அழைப்புகளும் இலவசம் என்று பி.எஸ்.என்.எல். அதிரடியாக அறிவித்துள்ளது.

இதுகுறித்து, இந்திய அரசுக்கு சொந்தமான டெல்லியில் உள்ள பாரத் சன்சார் நிகாம் நிறுவனம் ( பி.எஸ்.என்.எல் ) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், " ஏற்கனவே, லேண்ட் லைன் வாயிலாக இதர தொலைத்தொடர்பு இணைப்புகளுக்கு இரவு 9 மணியில் இருந்து மறுநாள் காலை 7 மணிவரை செய்யும் அனைத்து அழைப்புகளையும் இலவச அழைப்புகளாக பி.எஸ்.என்.எல். கணக்கிட்டு வருகிறது.

இந்நிலையில் வாடிக்கையாளர்கள் நலன்கருதி, சுதந்திர தினமான வருகின்ற 15-ம் தேதியில் இருந்து, பி.எஸ்.என்.எல். லேண்ட் லைன் இணைப்பு வாயிலாக நாட்டில் உள்ள அனைத்து தொலைத்தொடர்பு இணைப்புகளுக்கும், இனி ஞாயிற்றுக்கிழமைகளில் செய்யும் உள்நாட்டு அழைப்புகள் யாவும் இலவச அழைப்புகளாக கருதப்படும்.

மேலும் சுதந்திரதின சிறப்பு சலுகையாக, ஆகஸ்ட் 15-ம் தேதியில் இருந்து நவம்பர் 14-ம் தேதி வரை புதிய லேண்ட் லைன் இணைப்புகளை பெறும் வாடிக்கையாளர்களிடம் நிர்மாணக் கட்டணம் (இன்ஸ்ட்டலேஷன்) கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது.

குறைந்தபட்சமாக வெறும் 49 ரூபாய் மாத கட்டணத்தில் இதர வாடிக்கையாளர்களை போல் இரவு 9 மணியில் இருந்து மறுநாள் காலை 7 மணிவரை இலவச அழைப்பு சலுகையை இவர்களும் பெற முடியும்" என கூறப்பட்டு உள்ளது.

நன்றி: விகடன்

Tuesday, August 9, 2016

அதிரையில் நாளை பி.எஸ்.என்.எல்., சார்பில் இலவச சிம்கார்டு வழங்கும் முகாம் !

அதிராம்பட்டினம், ஆகஸ்ட் 09
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் பி.எஸ்.என்.எல் நிறுவனம் சார்பில் இலவச சிம்கார்டு வழங்கும் முகாம் அதிராம்பட்டினம் பேருந்து நிலையம் அருகில் நாளை [10-08-2016 ] புதன் கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது.

சிம்கார்டு பெற விரும்பும் வாடிக்கையாளர்கள் குடும்ப அட்டை அல்லது வாக்காளர் அடையாள அட்டை மற்றும் புகைப்படத்துடன் வர வேண்டும் என அதிராம்பட்டினம் பிஎஸ்என்எல் நிறுவனம் சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Monday, October 5, 2015

அதிவேகத்தில் BSNL ப்ராட்பாண்ட் சேவை !

பி.எஸ்.என்.எல். பிராட்பேண்டின் குறைந்தபட்ச வேகம் வினாடிக்கு 2 எம்பிக்கும் அதிகம் என்றார் அந்த நிறுவனத்தின் கும்பகோணம் காவிரி நதிநீர் படுகை தொலைத்தொடர்பு மாவட்டப் பொது மேலாளர் லீலாசங்கரி.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
அக்டோபர் 1 முதல் 7-ம் தேதி வரை பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளர்களின் வாரம் கொண்டாடப்படுகிறது. வாடிக்கையாளர்களை உற்சாகப்படுத்தும் விதமாக பி.எஸ்.என்.எல். நிறுவனம் பல புதிய சலுகைகளை அறிவித்துள்ளது. சந்தாதாரர்கள் சலுகைகளை எளிதில் பெறும்விதமாக அனைத்து தொலைபேசி நிலையங்களிலும் சிறப்பு விற்பனை முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

துண்டிக்கப்பட்டுள்ள இணைப்புகளை மறு இணைப்புக் கட்டணம் இல்லாமல், மீண்டும் மறு இணைப்பு செய்துகொள்ளும் வசதியும் இந்த சிறப்பு முகாமில் வழங்கப்பட்டுள்ளது.

பி.எஸ்.என்.எல். தரைவழி தொலைபேசியிலிருந்து இரவு 9 மணி முதல் காலை 7 மணி வரை இந்தியாவுக்குள் பேசப்படும் எல்லா அழைப்புகளும் இலவசம். இந்த சலுகைகளால் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

மொபைல் சந்தாதாரர்களுக்கு இலவச ரோமிங் வசதி மற்றும் ரோமிங்கில் வரும் அழைப்புகளுக்கு கட்டணம் இல்லை. பிராட்பேண்டின் குறைந்தபட்ச வேகம் இனி வினாடிக்கு 2 எம்பிக்கு அதிகம். பிரிபெய்டு மொபைலில் புது வசந்தம், நேசம் கோல்டு என்பது போன்ற திட்டங்கள் வாடிக்கையாளர்கள் பயன்பெறும் வண்ணம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

புதுவசந்தம் திட்டத்தில் அனைத்து பி.எஸ்.என்.எல். அழைப்புகளுக்கும் இரவு 9 மணி முதல் காலை 7 மணி வரை நிமிடத்துக்கு 20 பைசா மட்டுமே. மேலும், புதுவசந்தம் திட்டத்தின் கால அவகாசம் வரும் 2020 வரை பயன்படுத்தும் விதத்தில் அமைந்துள்ளதால், இந்த வாய்ப்பை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றார் அவர்.

Wednesday, May 6, 2015

பிஎஸ்என்எல் வழங்கும் புதிய சலுகை !

சாதாரண தொலைபேசி சேவையை ஊக்குவிக்கும் வகையில் சாதாரண தொலைபேசி வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகையை பிஎஸ்என்எல் அறிவித்துள்ளது.

பிஎஸ்என்எல்  சாதாரண தொலைபேசிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், வாடிக்கையாளர்களை ஊக்குவிக்கவும் பிஎஸ்என்எல் தொலைபேசியில் இருந்து எந்த  நிறுவனத்தின் செல்போன் அல்லது சாதாரண தொலைபேசிக்கும் இரவு  9 மணியில் இருந்து காலை 7 மணி வரை இலவசமாக அளவின்றி பேசலாம்.  இந்தப் புதிய சலுகை மே 1ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. அதற்கு ஏற்ப மாதந்திர கட்டணமும் உயர்த்தப்படுகிறது. இந்த மாற்றங்கள் கடந்த மே 1 ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது.

Friday, May 1, 2015

அதிரை பிஎஸ்என்எல் தொழிற்சங்க ஊழியர்கள் கொண்டாடிய மே தின விழா !

அதிரை பிஎஸ்என்எல் தொழிற்சங்க ஊழியர்கள் மே தின விழாவை உற்சாகமாக கொண்டாடினார்கள்.

இன்று காலை ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் என் எஃப் டி ஈ தொழிற்சங்கத்தின் அதிரை நகர தலைவர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். அதிரை பிஎஸ்என்எல் அலுவலத்தில் பணிபுரியும் அலுவலர்கள் - ஊழியர்கள் முன்னிலை வகித்தனர். இதில் என் எஃப் டி ஈ அதிரை நகர உதவித்தலைவர் பாலு தொழிற்சங்க கொடியை ஏற்றிவைத்து உறுதிமொழி வாசித்தார்.

விழா முடிவில் என் எஃப் டி ஈ தொழிற்சங்க அதிரை நகர செயலாளர் தீபன் சக்கரவர்த்தி நன்றி கூறினார்.

இந்நிகழ்ச்சியில் அதிரை பிஎஸ்என்எல் அலுவலர்கள் - ஊழியர்கள் - என் எஃப் டி ஈ தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.
 
 
 

Sunday, March 1, 2015

நீங்கள் BSNL வாடிக்கையாளர்களா ?

நமதூருக்கு பி.எஸ்.என்.எல். பிராண்ட் பேண்ட் இன்டர்நெட் சேவை 2006-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 08-தேதி முதல் தொடங்கப்பட்டது.

2004-ம் ஆண்டு முதல் 2006-ம் அண்டு வரை அன்று என்னுடைய தனிப்பட்ட கடும் முயற்சிக்குப்பின் இந்த சேவை அதிரையில் தொடங்கி வைக்கப்பட்டது.

தஞ்சாவூர், கும்பகோணம், அதிரை வழித்தடங்களில் ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, மதுக்கூர் ஆகிய ஊர்கள் இருந்த படியினால், அதிரைக்கு கிடைத்த அன்றே இந்த ஊர்களுக்கும் பிராண்ட் பேண்ட் இன்டர்நெட் சேவை கிடைத்தது.

அதிரையில் முதன் முதலாக பி.எஸ்.என்.எல் பிராண்ட் பேண்ட் இன்டர்நெட் சேவை இணைப்பு எனக்குத்தான் வழக்கப்பட்டது.

பி.எஸ்.என்.எல். பிரண்ட் பேண்ட் இன்டர்நெட் சேவை அதிரையில் தொடங்கி 2015-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தோடு ஒன்பது ஆண்டுகள் நிறைவு பெறும்.

இந்த ஒன்பது ஆண்டுகளில் இந்த ஆண்டு 2015, பிப்ரவரி 06-ம் தேதியில் தான்  முதன் முதலாக ஒரு வாரத்திற்கும் மேலாக இந்த சேவை அதிரையில் முக்கால் வாசி பேர்களுக்கு கிடைக்காமல் துண்டிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.  

காரணம், பொதுப்பணித் துறை மற்றும் நமதூர் பெரூராட்சியால் சாலை, வாய்க்கால் வடிகால், குடிநீர் வழித்தடம் மற்றும் தார்ரோடு சாலை மேம்பாட்டு பராமரிப்புகளுக்காக சேர்மன் வாடி பஸ் நிறுத்தம் அருகில் வெள்ளிக்கிழமை அதிகாலை-06/02/2015-நள்ளிரவு 12.00மணி முதல் கனரக இயந்திரங்களைக் கொண்டு வேலை துவங்கப்பட்டதினால் அப்பகுதியிலிருந்து பிரிந்து அதிரையின் பல பகுதிகளுக்கு பல கேபிள்களில் செல்லும் தொலைபேசி மற்றும் இன்டர்நெட் இணைப்பு கேபிள்கள் துண்டிக்கப்பட்டு அதிரையில் பல பகுதிகளுக்கு தொலைபேசி மற்றும் இன்டர்நெட் சேவை முற்றிலும் நின்று விட்டது.

இதன் காரணத்தால், அதிரை நகரிலும் சுற்றியுள்ள பகுதிகளிலும், ஆணை விழுந்தான் குளம் பகுதி, ஆஸ்பத்திரி தெரு, செட்டித்தெரு, தச்சத்தேறு, செக்கடித்தெரு, நடுத்தெரு, காலியார் தெரு,  நேசவுகாரத் தெரு, கீழத்தெருவில் சிலர், மேலத்தெருவில் சிலர், புதுமனைத்தெரு, சிம்பி லைன், வள்ளியம்மை நகர், மரியம் பள்ளி நகர், மிலாரிக்காடு, கல்லுக்கொல்லை, அம்பேத் கார் நகர், வண்டிப்பேட்டை, ஆலடித் தெரு, புது ஆலடித்தெரு, புதுக்கோட்டை உள்ளூர், மாளியக்காடு, நடுவிக்காடு, மகிழங்கோட்டை, ஷிபா மருத்துவமனை பகுதி, மின்வாரியம், மழவேனிற் காடு, பழஞ்சூர், மதுக்கூர் ரோடு ஆகிய இடங்களுக்கு இந்த சேவை முற்றிலுமாக துண்டிக்கப்பட்டது.

இந்த நிகழ்வை உலகளாவிய அதிரையர்கள் இணையத்தின் மூலமாக அறிந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிரையில் பி.எஸ்.என்.எல். பிராண்ட் பேண்ட் இன்டர்நெட் சேவை துண்டிக்கப்பட்ட நாள், நேரம், காலம் அடங்கிய அட்டவணை பின்வருமாறு இருக்கும்.  

(0).   06/02/2005          from Fri Early Morning        12.00am = 0hrs
(1).   07/02/2015          to Sat Early Morning            12.00am = 24hrs
(2).   08/02/2015          to Sun Early Morning           12.00am = 48hrs
(3).   09/02/2015          to Mon Early Morning          12.00am = 72hrs
(4).   10/02/2015          to Tue Early Morning           12.00am = 96hrs
(5).   11/02/2015          to Wed Early Morning          12.00am = 120hrs
(6).   12/02/2015          to Thu Early Morning           12.00am = 144hrs
(7).   13/02/2015          to Fri Early Morning             12.00am = 168hrs
(8).   14/02/2015          to Sat Early Morning            12.00am = 192hrs
(9).   15/02/2015          to Sun Early Morning           12.00am = 216hrs
(10). 16/02/2016          to Mon Early Morning          12.00am = 240hrs
(11). 17/02/2015          to Tue Early Morning           12.00am = 264hrs
(12). 18/02/2015          to Wed Early Morning          12.00am = 288hrs

விடிந்தால் வெள்ளிக்கிழமை (06/02/2015) நள்ளிரவு 12.00-மணிக்கு துண்டிக்கப்பட்டதினால், அந்த நேரத்தையே முதல் நேரமாக கணக்கிடப்பட்டுள்ளது.

இதில் ஒரு சில பேர்களுக்கு திங்கட்கிழமை 09/02/2015-இந்த தினத்தில் இணைப்பு சரிசெய்யப்பட்டு கிடைத்துள்ளது.

எனக்கு புதன்கிழமை 11/02/2015-இந்த தினத்தில் பிற்பகல் 3.00pm-மணிக்கு இணைப்பு கிடைத்தது. எனக்கு துண்டிக்கப்பட்ட மொத்த நேரம்கள் 120+15=135மணி நேரம்கள்.

BSNL Broad Band Internet - SUMMARY OF CHARGES.
My Monthly Charges for Broad Band Unlimited                                Rs 825.00

Service Tax                12.00% (on monthly fixed charge 825.00)     Rs   99.00
Education CESS          2.00% (on 12% Service Tax 99.00)            Rs     1.98
Higher Edu. CESS      1.00% (on 12% Service Tax 99.00)             Rs     0.99
TOTAL CHARGES FOR 30 DAYS (720Hrs)                                    Rs 926.97

For One Hour  -           Rs: 926.97/ Hrs for 30 Days 720 = Rs 1.29
Non working Hrs and Deduction amount = 135Hrs X Rs 1.29 = Rs 174.15

பி.எஸ்.என்.எல் பிராட் பேண்ட் இன்டர்நெட் இணைப்பு கிடைக்காமல் துண்டிக்கப்பட்டவர்கள் மேலே கணக்கிடப்பட்டதுபோல் நீங்களும் கணக்கிட்டு பார்க்கலாம்.

எனக்கு 135 மணிநேரங்கள் துண்டிக்கப்பட்டது, ஆகவே ரூபாய் 174.15-ஐ என்னுடைய அடுத்த பில்லில் கழிக்கவேண்டும். இது குறித்து விண்ணப்பம் எழுதினால்தான் அவர்கள் கழிப்பார்கள். இதேபோல் பாதிக்கப்பட்டவர்களாகிய நீங்களும் விண்ணப்பம் மூலம் தெரிவித்தால் உங்களுக்கும் இந்த சலுகை கிடைக்கும்.

குறிப்பு:-
2007-ம் வருடம் மே மாதம் இப்படித்தான் ஒரு சம்பவம் நடந்தது. அப்போதும் எனக்கு இதுமாதிரி கழிவு கிடைத்தது. மேலும் விபரங்களுக்கு இதில் இணைக்கப்பட்டுள்ள இணைப்பை பாருங்கள்.

My Complaint letter:
By Fax Mr.Rathinavelu, CAO TR. on 11/June/2007
Refax to GM on 18/July/2007

Letter from BSNL.

BSNL Bill. Dated 07/Aug/2007

Letter from Account Officer.

Order for to Pay Bill.

Total Bill Amount = Rs: 109+900+121+4=1134.00
Discount Amount = Rs: 180.00.
Paid Amount = Rs: 954.00 on 09/Aug/2007

இப்படிக்கு.
கோ.மு.அ. ஜமால் முஹம்மது.
த/பெ. (மர்ஹூம்) கோ.முஹம்மது அலியார்.
Human Rights and Consumer Rights Included.
Thanjavur District Organizer. Adirampattinam-614701.
kmajamalmohamed@gmail.com

Thursday, March 20, 2014

BSNL நிலுவைத்தொகையை செலுத்த அறிய வாய்ப்பு !

BSNL நிறுவனத்திற்கு கட்டணத்தை செலுத்த தவறியவர்களின் பட்டியல் புகைப்படங்களுடன் அதிரை BSNL தொலைத்தொடர்பு அலுவலகத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த சில வருடங்களுக்கு முன்பு ஏராளமானோர் BSNL இனைப்பு பெற்று தொழில் நடத்தி வந்தனர். இதில் செலுத்தவேண்டிய கட்டணத்தை செலுத்த தவறியதால் நிலுவையில் உள்ள தொகையை குறிப்பிட்டு அதிரை BSNL தொலைத்தொடர்பு அலுவலகத்தில் பேனர் வைக்கப்பட்டுள்ளது.

மேலும் நிலுவை தொகையை சிறப்பு தள்ளுபடியுடன் செலுத்த வேண்டி துண்டு பிரசுரம் மூலம் அறிவிப்பையும் இன்று வெளியிட்டுள்ளது. எதிர்வரும் 22-03-2014 ] அன்று பட்டுக்கோட்டை நீதிமன்ற வளாகத்தில் நடைபெற உள்ள மக்கள் நீதிமன்றத்தை நேரடியாக அணுகி கட்டணத்தை செலுத்த அறிவுறுத்தியுள்ளது.

Tuesday, December 24, 2013

அதிரையில் BSNL ன் அதிரடி சலுகை ! மக்கள் அமோக வரவேற்பு !!

விழாக்கால சலுகையாக BSNL நடத்திய இலவச சிம்கார்டு விற்பனை முகாம் இன்று காலை அதிரை பேருந்து நிலையம் அருகில் துவங்கியது. முதல் நாள் முகாமை கோட்ட பொறியாளர் V. பிரகலதன், உதவி கோட்ட பொறியாளர் N. வீரபாண்டியன் ஆகியோர் தலைமையேற்று துவக்கி வைத்தனர்.

மக்களின் அமோக வரவேற்பை பெற்றுவரும் இன்றைய முகாமில் ஏராளமானோர் புதிய சிம்கார்டு இணைப்புகளை இலவசமாக வாங்கிச்சென்றனர். வாடிக்கையாளர்களுக்கு BSNL அலுவலர்கள் உடனுக்குடன் இணைப்புகளை வழங்கி வருகின்றனர்.

இதுகுறித்து தொலைதொடர்பு அலுவலரிடம் விசாரித்த வகையில்...
இந்த சிறப்பு முகாம் இன்று [ 24-12-2013 ] முதல் தொடங்கி வருகின்ற [ 31-12-2013 ] வரை தினமும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தொடர்ந்து நடைபெறும் என்றும் அதிரை நகர மக்கள் இந்த அறிய வாய்ப்பை பயன்படுத்த முன்வர வேண்டும் எனக்கூறினார்.