.

Pages

Thursday, January 24, 2013

அதிரையில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கின் மாவட்ட பொதுக்குழு கூட்டம் !


 அதிரையில் கடந்த [ 15-01-2013 ] அன்று காலை 10 மணியளவில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கின் மாவட்ட பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் மாநில மற்றும் தஞ்சை மாவட்ட நிர்வாகிகளோடு அதிரை நகர நிர்வாகிகளும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

அன்று மாலை 4.30 மணியளவில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கின் கொள்கை பொதுக்கூட்டம் தக்வா பள்ளி அருகே நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாநில கொள்கை பரப்புச் செயலாளர் காயல் மஹபூப் அவர்கள் சிறப்புரை நிகழ்த்தினார்
நிகழ்ச்சிகுரிய அனைத்து ஏற்பாடுகளையும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் அதிரை கிளையின் சார்பாக அதன் நிர்வாகிகள் சிறப்பாக செய்து இருந்தனர்.

திமுக நகர செயலாளர் மகளின் திருமணத்தில் அதிரையர்கள் பங்கேற்பு !

கடந்த [ 17-01-2013 ] அன்று மன்னார்குடியில் நடைபெற்ற திமுக நகர செயலாளர் குணசேகரன் மகளின் திருமண நிகழ்ச்சிக்கு அதிரையர்கள் பலர் பெரும்திரளாக கலந்துகொண்டனர். காலை உணவு ஏற்பாட்டோடு அனைவரையும் செக்கடி மேடுலிருந்து மூன்று தனியார் ஆம்னி பஸ்கள் மூலம் அழைத்துச்சென்றனர்.
திமுக கழகம் அதிரை கிளையின் சார்பாக அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

அதிரையில் இருதரப்பினரிடையே எற்பட்ட கோஷ்டி மோதல் !


முன்விரோதம் காரணமாக கடந்த [ 14-01-2013 ] அன்று இரண்டு தரப்பினருக்கும் இடையே தரகர் தெருவில் மோதல் ஏற்பட்டது. இதில் இரண்டு கோஷ்டியை சேர்ந்தவர்களுக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது. இதனால் ஆத்திரமடைந்த சிலர் மற்றொரு தரப்பை சேர்ந்த வீட்டு மாடியில் போடப்பட்டிருந்த கொட்டகைக்கு தீவைத்தனர்.
இதில் வீடும் சூறையாடப்பட்டன
பட்டுக்கோட்டை தீயணைப்பு வீரர்கள் சென்று தீயை அணைத்தனர். தகவலறிந்த ஆர்டிஓ ரஹ்மதுல்லாகான், டிஎஸ்பி வெங்கடேசன், இன்ஸ்பெக்டர்கள் செங்கமலக்கண்ணன், கணேசமூர்த்தி உள்ளிட்டோர் அங்கு வந்து விசாரணை நடத்தினர். இதுகுறித்து அதிரை போலீசார் இரு தரப்பினரின் சார்பாகக் கொடுத்த தனித்தனி புகாரின் பேரில் பெண்கள் உள்பட இரு தரப்பைச் சார்ந்த 82 பேர்கள் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர்.

காயமடைந்தவர்கள் தஞ்சை, பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

அதிரையில் வீட்டு மனைகள் கண்காட்சி !


அதிரை சுரைக்காகொல்லையில் புதிதாக உருவாக்கப்பட்ட ஹாஜி முஹம்மது அலி ஆலிம் நகரில் வீட்டு மனைகள் கண்காட்சி நடைபெற்றது.
V3 புரோமோட்டர்ஸ் நிறுவனத்தினர் கண்காட்சியில் கலந்துகொண்ட ஏராளமான அதிரையர்களிடம் சுவைமிக்க குடிநீர் வசதி, இதயம் தொடும் தென்றல் காற்று, அனைத்து பாதைகளும் 20 அடி தார்சாலை, தொழுகைக்கான பள்ளி ஆகிய சிறப்பம்சங்களை சுட்டிக்காட்டுகின்றனர்.
இந்த நிறுவனத்தின் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்ட கண்காட்சியில் ஏரளாமான அதிரையர்கள் கலந்துகொண்டு மனைகளை முன்பதிவு செய்துவருகின்றனர்.

அதிரை லியோ கிளப்பின் அசர வைக்கும் சேவைகள் !


அதிரையில் தன்னார்வா தொண்டு நிறுவனங்களில் ஒன்று லியோ கிளப். இந்த தொண்டு நிறுவனத்தின் சார்பாக கடந்த [ 19-01-2013  ] அன்று மாலை 3 மணியளவில் லாவண்யா திருமண மண்டபத்தில் மண்டல சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு முன்பாக நமதூரில் அடிக்கடி நிகழும் வாகன விபத்தை தடுக்கும் நோக்கில் லியோ கிளப் சார்பாக சேது பெருவழிச்சாலையில் உள்ள அபாயகரமான சந்திப்பில் அமைக்கப்பட்டுள்ள எச்சரிக்கை பலகை திறந்து வைக்கப்பட்டது.

அவிசோ சார்பாக நமதூரில் செயல்பட்டுக்கொண்டிருக்கும் மனநலம் குன்றியோருக்கான காப்பகத்தில் உள்ள குழந்தைகளுக்கு தேவையான ஆடைகள் மற்றும் நிதிஉதவி ஆகியன வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியின் நிரலாக வரவேற்புரை பேராசிரியர் K. சையது அகமது கபீர் அவர்களாலும், தலைமையுரை லியோ மண்டல தலைவர் நியாஸ் அகமது அவர்களாலும் நிகழ்த்தப்பட்டன.
இந்நிகழ்ச்சியில் பல்வேரு விருதுகள் வழங்கப்பட்டாலும் சேவைச்செம்மல் விருது காவல்துறை ஆய்வாளார் V. செங்கமலக்கண்ணன் அவர்களுக்கும், குருதிக்குடை விருது A. சாகுல் ஹமீது மற்றும் N. சிகபத்துல்லா ஆகியோருக்கு வழங்கி கெளரவிக்கப்பட்டது இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவரையும் நெகிழ வைத்தது.

இந்த நிகழ்ச்சியில் லியோ மற்றும் லயன் கிளப் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டு சிறப்பித்தனர். இறுதியில் நன்றியுரையை லியோ கிளப் தலைவர் ஹாஜா முகைதீன் அவர்களால் நிகழ்த்தப்பட்டு இனிதே நிகழ்ச்சிகள் அனைத்தும் நிறைவுற்றது.

அதிரையில் பரபரப்பான விற்பனையில் கம்பங்கூழ் ! கேப்பைக்கூழ் !!


கம்பங்கூழ், கேப்பைக்கூழ் விற்பனை செய்து வருபவர் சகோ. முஹம்மது யூசுப். ஏழ்மை முதியவரான இவர் இராமநாதபுர மாவட்டம் S. தரக்குடி என்ற ஊரைச்சேர்ந்தவர். கடந்த சில மாதங்களாக தக்வா பள்ளி அருகே தட்டுவண்டியில் வைத்து இவற்றை வியாபாரம் செய்து வருகின்றார்.

ஒரு சொம்பு முழுவதுமாக கம்பங்கூழ், கேப்பைக்கூழை நிரப்பி ரூபாய் 10/-க்கு விற்பனை செய்கிறார். உடல் நலத்திற்கு ஏற்ற இவற்றை ஏராளமான வாடிக்கையாளர்கள் தினமும் வாங்கி மகிழ்ச்சியுடன் பருகின்றனர்.

மாணவிகளின் தொழுகைக்காக புதிய அரங்கு !


மாணவிகளின் தொழுகைக்காக அதிரை காதீர் முகைதீன் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் இன்று [ 24-01-2013 ] புதிய அரங்கு திறக்கப்பட்டது. இச்சிறிய நிகழ்ச்சியில் எம்.கே.என் ட்ரஸ்ட் உறுப்பினர்கள் மற்றும் காதீர் முகைதீன் கல்லூரி முதல்வர், துணை முதல்வர், இப்பள்ளியின் தலைமை ஆசிரியை மற்றும் ஆசிரியைகள் மாணவிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

இப்புதிய அரங்கு காதீர் முகைதீன் கல்வி நிறுவனங்களின் தாலாளர் ஹாஜி K.S. சரஃபுதீன் அவர்களின் முயற்சியின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Wednesday, January 23, 2013

அதிரை அனைத்து மஹல்லா கூட்டமைப்பின் பத்தாவதுக் கூட்டம் !




கடந்த [ 11-01-2013 ] வெள்ளிக்கிழமை அன்று மாலை 4.30 மணியளவில் மேலத்தெரு தாஜூல் இஸ்லாம் சங்கத்தில் நடைபெற்ற அதிரை அனைத்து மஹல்லா கூட்டமைப்பின் பத்தாவதுக் கூட்டத்திற்கு  AAMF’ன் தலைவர் M.M.S. சேக் நசுருதீன் அவர்களின் தலைமையிலும், பேராசிரியர் M.A. முஹம்மது அப்துல் காதர் அவர்களோடு சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்ட காதிர் முகைதீன் ஆண்கள் மேல் நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியர் A. மஹபூப் அலி, பெரிய ஜும்ஆ பள்ளியின் நிர்வாகக் கமிட்டியின் நிர்வாகிகள் MMS. தாஜுதீன், VM. அப்துல் மஜீது, KSM. பகுருதீன், PMK. தாஜுதீன் ஆகியருடன் முன்னாள் சம்சுல் இஸ்லாம் சங்க செயலாளர் M.B. அபூ பக்கர்,  ஜமீல் M. ஸாலிஹ், மூத்த சகோ. இப்ராகிம் அன்சாரி, அக்பர் ஹாஜியார் மற்றும் KSA. அப்துல் ரஹ்மான் ஆகியோர் பங்களிப்புடன் இனிதே துவங்கியது.


நிகழ்ச்சியின் துளிகள் : 

1. கிராஅத் : A. முஹம்மது யூசுப் ஆலிம் அவர்கள்

2. வரவேற்புரை மற்றும் தலைமையுரை : MMS. சேக் நசுருதீன் அவர்கள்

3. அதிரை அனைத்து மஹல்லா கூட்டமைப்பு ஓராண்டு சிறப்பாக நிறைவுற்றதை அடுத்து AAMF’ன் 2012 ஆம் ஆண்டின் ஆண்டறிக்கை இக்கூட்டத்தில் பேராசிரியர் M.A. முஹம்மது அப்துல் காதர் அவர்களால் வாசிக்கப்பட்டன.



ஆண்டறிக்கையின் சிறப்பு அம்சங்கள் :
[ a ] 18 பக்கங்களைக் கொண்ட AAMF’ன் ஆண்டறிக்கையை வாசித்து முடிப்பதற்கு சுமார் ஒரு மணி நேரம் பிடித்ததோடு மட்டுமல்லாமல் சிறப்பு விருந்தினர்களாக கூட்டத்தில் கலந்துகொண்ட பலரை அதில் இடம்பெற்றுள்ள தகவல்கள் அனைத்தும் மகிழ்ச்சிக்குள்ளாக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

[ b ] AAMF’ன் சார்பாக இதுவரையில் நடத்தப்பட்ட மாதாந்திரக் கூட்டங்கள், சிறப்புக் கூட்டங்கள், அவசரக் கூட்டங்கள் போன்றவற்றில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் மற்றும் அதில் செயல்படுத்தப்பட்டவை மற்றும் செயல்படுத்தப்படக் கூடியவை ஆகியன தொடர்பாக உள்ள தகவல்கள் இடம்பெற்றன.

[ c ] மேலும் AAMF’ன் சார்பாக வழங்கப்பட்ட வாழ்வாதார உதவிகள், நிதி உதவிகள் ஆகியன தொடர்பான தகவல்களும் இடம்பெற்றன.



4. இந்தக் கூட்டத்தில் முதன் முறையாக சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் A. மஹபூப் அலி அவர்கள் தனது சிறப்புரையில் “மாணவ மாணவிகளின் கல்வி வளர்ச்சியில் ஊர் பொதுமக்களின் பங்களிப்புகள் என்ன ? என்பது பற்றியும் மேலும் கல்வி நிறுவனம் மற்றும் ஆசிரிய ஆசிரியைகளுடன் அவர்களின் ஒத்துழைப்புகள் எவ்வாறு இருக்க வேண்டும் ?” என்பது குறித்தும் பேசினார்.


5. ‘தமிழ் அறிஞர்’ அதிரை அஹமது அவர்களின் மேற்பார்வையுடன், சகோ. சேக்கனா M. நிஜாம் அவர்களின் பங்களிப்புடன், ‘கணினித் தமிழ் அறிஞர்’ ஜமீல் M. ஸாலிஹ் அவர்களால் தயாரிக்கப்பட்ட AAMF’ன் திருத்தத்திற்குரிய சட்ட வரைவு அனைத்து மஹல்லா நிர்வாகிகளிடமும் சமர்ப்பிக்கப்பட்டது. இதில் அழித்தல் / திருத்துதல் / சேர்த்தல் ஆகியன இருந்தால், அவற்றை ஒரு வார கால அவகாசத்திற்குள் தெரியப்படுத்த அனைவரிடத்திலும் கேட்டுக்கொள்ளப்பட்டன.



6. அதிரை அனைத்து மஹல்லா கூட்டமைப்பின் அமீரக கிளை சார்பாக ஏற்பாடு செய்யப்பட்ட AAMF’ன் 2013 ஆம் ஆண்டிற்கான காலண்டர்கள் இலவசமாக விநியோகிகப்பட்டது தொடர்பான தகவல்கள் பரிமாறப்பட்டன.

7. AAMF’ன் சார்பாக இனிவரும் கூட்டங்களை நமதூர் ஜாவியா பள்ளி வளாகத்தில் ஒவ்வொரு மஹல்லா சார்பாக நடத்தப்பட வேண்டும்’ என்று AAMF’ன் துணைச்செயலாளர் A. முஹம்மது முகைதீன் அவர்களால் வைக்கப்பட்ட வேண்டுகோளை எடுத்துக்கொண்டு விவாதம் செய்யப்பட்டன. இறுதியில் AAMF’ன் சார்பாக நடைபெற உள்ள சிறப்பு மற்றும் அவசரக்கூட்டங்களை ஜாவியா பள்ளி வளாகத்தில் நடத்தலாம் என்றும், இதற்காக AAMF’ன் சார்பாக ஜாவியா நிர்வாகத்தினரை முறையாக அணுகி அனுமதி கோருவது எனவும் முடிவு செய்யப்பட்டது.



8. AAMF’ன் வரவு-செலவு கணக்கு விவரங்கள் அனைத்தும் புதிதாக பொறுப்பேற்றுக் கொண்ட AAMF’ன் பொருளாளர் சகோ. மான் A. நெய்னா முஹம்மது அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

9. AAMF’க்கு செலுத்த வேண்டிய மஹல்லா ஆண்டுச் சந்தா ரூபாய் 1000/- மற்றும் உறுப்பினர்களின் ஆண்டுச்சந்தா ரூபாய் 100/- ஆகிய தொகைகளை AAMF’ன் பொருளாளர் சகோ. மான் A. நெய்னா முஹம்மது அவர்களிடம் செலுத்தும்படி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களிடம் இந்தக் கூட்டத்தில் கேட்டுக்கொள்ளப்பட்டது.



10. கூட்டத்தின் நிகழ்ச்சிகள் மஹரீப் தொழுகைக்கு பின்பும் தொடர்ந்து நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

11. நன்றியுரை : சகோ. B. ஜமாலுதீன் அவர்கள்.

12. AAMF’ன் முதல் ஆண்டு வெற்றிகரமாக முடிவுற்று, AAMF’ன் இரண்டாம் ஆண்டின் துவக்கக் கூட்டதை தாஜூல் இஸ்லாம் சங்கம் சார்பாக அதன் நிர்வாகிகள் மிகச்சிறப்பாக செய்துருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பு : 
‘கிராம பஞ்சாயத்தார்களோடு சந்திப்பது தொடர்பாக’ தேதி மற்றும் இடம் முடிவு செய்வது குறித்து போதிய கால அவகாசம் இல்லாததால் இக்கூட்டதில் அவற்றை எடுத்துக்கொண்டு பேச இயலவில்லை. இதற்காக வருகின்ற 18-01-2013 வெள்ளிக்கிழமை அன்று மாலை 4. 30 மணியளவில் நமதூர் சம்சுல் இஸ்லாம் சங்கத்தில் சிறப்புக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இறைவன் நாடினால் ! விரைவில் அனைத்து நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்களுக்கு அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்படும்.

இப்படிக்கு,
தகவல் தொடர்பாளர் 
AAMF - அதிரை