.

Pages

Showing posts with label KMGHSS. Show all posts
Showing posts with label KMGHSS. Show all posts

Monday, September 7, 2020

தமிழக அரசின் 'நல்லாசிரியர்' விருது பெற்ற காதிர் முகைதீன் பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியை!

அதிரை நியூஸ்: செப்.07
அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியை கே.அனுராதாவுக்கு தமிழக அரசின் 'நல்லாசிரியர்' விருது வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (07.09.2020) ஆசிரியர் தின விழா- 2020 யொட்டி டாக்டர் இராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருதுகளை ஆசிரியர்களுக்கு வேளாண்மைத்துறை அமைச்சர் இரா.துரைக்கண்ணு, மாநிலங்களவை உறுப்பினர் ஆர்.வைத்திலிங்கம் மாவட்ட ஆட்சியர் ம.கோவிந்தராவ் ஆகியோர் வழங்கி பாராட்டுத் தெரிவித்தனர்.

தமிழக அரசின் சார்பில் 11 ஆசிரியர்களுக்கு டாக்டர் இராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருதுக்கான பதக்கமும், நற்சான்றிதழும், ரூ.10 ஆயிரத்திற்கான காசோலையும், மாநில அளவில் தரமான பாடப் புத்தகங்களுக்கான மின்னணு வளங்களை வழங்கியதில் தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த இரண்டு ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை சார்பில் பாராட்டு சான்றிதழும், கொரோனா வைரஸ் தடுப்பு பணிகளில் ஒன்றாக ஏழை, எளிய சாதாரண குடும்பங்களை சேர்ந்த மாணவ, மாணவிகளின் குடும்பங்களுக்கு ரு.1 லட்சத்திற்கும் மேல் நிவாரண பொருட்கள் வழங்கியமைக்காக 14 பள்ளிகளுக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பாராட்டு சான்றிதழும் வழங்கப்பட்டது.

மேலும் கொரோனா தடுப்பு பணியில் பணிபுரிந்த தன்னார்வலர்கள், ஜூனியர் ரெட்கிராஸ் அமைப்பை சேர்ந்த 4 ஆசிரியர்களுக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் அரவிந்தன், மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவர் மோகன், முன்னாள் மாநகராட்சி மேயர் சாவித்திரி கோபால், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் இராமகிருஷ்ணன், மொத்த கூட்டுறவு பண்டகசாலை துணைத் தலைவர் ரமேஷ், தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Thursday, July 16, 2020

+2 தேர்வில் அதிராம்பட்டினம் கல்வி நிறுவனங்களின் தேர்ச்சி நிலவரம்!

கோப்புபடம்
அதிராம்பட்டினம், ஜூலை 16
தமிழகமெங்கும் பிளஸ் 2 தேர்வின் முடிவு இன்று வியாழக்கிழமை காலை வெளியானது. இதில், அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் மொத்தம் 82 பேர் தேர்வு எழுதினர். இதில், 81 பேர் தேர்ச்சி பெற்று, பள்ளி 99 சதவீத தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் மொத்தம் 81 பேர் தேர்வு எழுதினர். இதில் 80பேர் தேர்ச்சி பெற்று, பள்ளி 99 சதவீத தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது.

அதேபோல் அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் மொத்தம் 148 பேர் தேர்வு எழுதினார்கள். இதில்,141 பேர் தேர்ச்சி பெற்று, பள்ளி 95  சதவீத தேர்ச்சி பெற்று பள்ளி சாதனை படைத்துள்ளது.

Sunday, January 5, 2020

காதிர் முகைதீன் பெண்கள் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு விழா ~ ஆண்டு விழா (படங்கள்)

அதிராம்பட்டினம், ஜன.05
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் பெண்கள் மேல்நிலைப்பள்ளி 38-வது விளையாட்டு விழா மற்றும் ஆண்டு விழா நிகழ்ச்சி காதிர் முகைதீன் கல்லூரி அரங்கில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றது.

விழாவிற்கு, பள்ளித்தாளாளர் எஸ்.ஜெ அபுல் ஹசன் தலைமை வகித்து உரை நிகழ்த்தினார்.

சிறப்பு விருந்தினராக பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குநர் வி.குமார் கலந்துகொண்டு பேசிய உரையில்;
இறைவன் அனைவருக்கும் சம எடையுள்ள மூளையை வழங்கி இருக்கிறான். அதேபோல் அனைவருக்கும் ஒரு நாளைக்கு 24 மணி நேரம் வழங்கி இருக்கிறான். நமக்கு கொடுத்த மூளையையும், கிடைத்த நேரத்தையும் எவன் ஒருவன் சரியாகப் பயன்படுத்திக்கொள்கிறானோ அவன் வாழ்கையில் வெற்றி பெற்றவனாக இருக்கிறான். இவற்றை எவன் ஒருவன் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லையோ அவன் வாழ்கையில் தோல்வி அடைந்து முடங்கிப் போய்விடுகிறான். நம்மிடம் உள்ள ஆற்றலை வெளிக்கொணரக் கூடியதற்கான மிகப்பெரும் உந்துசக்தி நம்மிடம் மட்டுமே உள்ளது. அதை பயன்படுத்திக் கொள்ளுவதற்கான பட்டறைதான் இந்த பள்ளிக்கூடங்கள். இந்த பட்டறையில் இருக்கக்கூடிய வார்ப்பாளர்கள்தான் ஆசிரியர்கள். இங்கு கல்வியை பயிற்றுவிக்கும் எந்தவொரு ஆசிரியரும் தன்னுடைய அறிவை கொடுத்து தன்னுடைய மாணவன் புத்திசாலியாக வேண்டுமென நினைக்கக்கூடிய ஒரு ஒப்பற்ற ஜீவன் உலகத்தில் ஆசிரியர் ஒருவர் மட்டும்தான்.

வளர்ந்து இருக்கக்கூடிய அறிவியல் தொழில்நுட்பம் வளர்ச்சி என்பது ஆசிரியர்களையும், அதிகாரிகளையும் மிஞ்சி, குழந்தைகளிடம் அதிகமாக ஊடுருவி வேறு திசைகளில் மாற்றிக்கொண்டிருக்கிறதோ என்ற அச்சம் எங்களிடம் பீடித்திருக்கிறது. எனவே, உங்களது அறிவு என்பது தற்போது வளர்ந்திருக்கக்கூடிய அறிவியல் தொழில்நுட்பம் சிதைந்துவிடுவதற்கான சக்தியாக இருந்துவிடக்கூடாது. இன்றைக்கு செல்போன், தொலைக்காட்சி உள்ளிட்ட திசை திருப்பக்கூடிய  சக்திகள் அதிகமாக இருப்பதால், புறசக்திகள் நம்மை வீட அதிகமாக கவர்வதால், நீங்கள் அவற்றிலிருந்து விடுபட்டு உங்களிடமிருக்கும் மிகச்சிறந்த ஆற்றல் சிதைவடையாமல், மனச்சிதறல் இல்லாமல், கவனச்சிதறல் இல்லாமல், திசை மாற்றமில்லாமல், எந்தவிதமான தடுமாற்றமில்லாமல் நீங்கள் நேர்கொண்ட பார்வையை உங்களது வாழ்க்கையை வெற்றிநடை போடுவதற்கு தீர்மானித்துவிட்டீர்கள் என்றால் உங்களை அசைப்பதற்கு எந்தவொரு சக்தியும் இல்லை. எனவே, நல்ல கல்வியும், நல்லொழுக்கமும் இருந்தால் மட்டுமே நாடு நம்மை பார்க்கும். நீங்கள் எண்ணிய எண்ணங்களை அடைவதற்கு உங்களுடைய இடைவிடாத முயற்சி, உழைப்பு, தன்னம்பிக்கை ஆகியவை இருந்தால் வாழ்வில் வெற்றி பெறலாம்' என்றார்.

சிறப்பு விருந்தினராக, தஞ்சாவூர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் எம்.இராமகிருட்டிணன், கல்வியில், விளையாட்டில் சிறப்பிடம் பெற்ற மாணவிகளுக்கு கேடயப்பரிசுகள் வழங்கிப் பாராட்டிப் பேசினார். மேலும், பட்டுக்கோட்டை கல்வி மாவட்ட அலுவலர் ஆர்.ஜெயபால், காதிர் முகைதீன் கல்லூரி முதல்வர் ஏ.முகமது முகைதீன் ஆகியோர் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினர்.

முன்னதாக, பள்ளித் தலைமை ஆசிரியை எம்.சுராஜ் பள்ளி நிகழ்த்திய சாதனைகளை பட்டியலிட்டு ஆண்டறிக்கையாக வாசித்தார். பள்ளி உடற்கல்வி ஆசிரியை ஜி.அகிலா விளையாட்டு ஆண்டறிக்கை வாசித்தார். பள்ளி ஆசிரியை கே.அனுராதா வரவேற்றுப் பேசினார். நிறைவில், பள்ளி ஆசிரியை எஸ்.அமுதா நன்றி கூறினார்.

இவ்விழாவில், பள்ளி மாணவிகளின் பல்சுவை கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழாவில், பள்ளி ஆசிரியைகள், பெற்றோர்கள், மாணவிகள் பங்கேற்றனர்.
 
 

Tuesday, September 24, 2019

காதிர் முகைதீன் மேல்நிலைப் பள்ளியில் நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாம் தொடக்கம்!

அதிராம்பட்டினம், செப்.24
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாம் தொடக்க விழா இன்று (செப்.24) செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

பட்டுக்கோட்டை மாவட்ட கல்வி அலுவலர் ஆர்.ஜெயபால் முகாமிற்கு தலைமை வகித்து உரை நிகழ்த்தினார். முகாமில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட தஞ்சாவூர் மாவட்ட பசுமை படை ஒருங்கிணைப்பாளர் பா.ராம் மனோகர் முகாமை தொடங்கி வைத்து வாழ்த்துரை வழங்கினார்.

காதிர் முகைதீன் கல்லூரி முதல்வர் ஏ. முகமது முகைதீன், மாவட்ட நாட்டு நலப்பணி திட்ட தொடர்பு அலுவலர் க.இராஜசேகரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்.

விழாவையொட்டி, பள்ளி மாணவர்கள் பள்ளி வளாகத்தில் தூய்மை படுத்தும் பணியில் ஈடுபட்டனர். பள்ளி வளாகத்தில் மரக்கன்று நடப்பட்டன. இந்த முகாமில் நாட்டு நலப்பணி திட்ட மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.

முன்னதாக, காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஏ.எல் அசரப் அலி வரவேற்றார். முடிவில், காதிர் முகைதீன் பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை எம்.சுராஜ் நன்றி கூறினார். விழா ஏற்பாட்டினை, நாட்டு நலப்பணி திட்ட அலுவலர்கள் எஸ். நாகராஜன், கே.அனுராதா ஆகியோர் செய்திருந்தனர். முகாம் இன்று செப்.24 ல் தொடங்கி, வரும் செப்.30 ந் தேதி வரை நடைபெற உள்ளது.
 

Monday, September 23, 2019

இறகுப்பந்து போட்டியில் காதிர் முகைதீன் பெண்கள் பள்ளி மாணவி சிறப்பிடம்!

அதிராம்பட்டினம், செப்.23
முத்தமிழ் ஸ்போர்ட்ஸ் சார்பில், மாவட்ட அளவிலான இறகுப்பந்துப் போட்டி தஞ்சாவூர் கமலா சுப்பிரமணியம் மேல்நிலைப்பள்ளி உள்விளையாட்டு அரங்கில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில், தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி அ. அஸ்மிதா கலந்து கொண்டு, 15 வயதிற்குட்பட்ட பெண்கள் இரட்டையர் பிரிவில் இரண்டாமிடம் பிடித்து சாதனை நிகழ்த்தி உள்ளார்.

முன்னதாக இவர், மாவட்ட, மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்று சிறப்பிடம் பெற்றுள்ளார். மேலும், கடந்த மே மாதம் பஞ்சாப் மாநிலத்தில் நடந்த அகில இந்திய அளவிலான இறகுப்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில்  வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்திருப்பது குறிப்பிடத்தக்கது. இவர், அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி முதுகலை ஆசிரியர் ஆ.அஜுமுதீன் மகள் ஆவார்.

Tuesday, May 28, 2019

இறகுப்பந்து போட்டியில் காதிர் முகைதீன் பெண்கள் பள்ளி மாணவி தொடர் சாதனை!

தொடர் சாதனை நிகழ்த்திய பள்ளி மாணவி அஸ்மிதா
அதிராம்பட்டினம், மே.28
மன்னார்குடி சாய்னா இறகுப் பந்து கழகத்தின் சார்பில், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்கள் அடங்கிய மண்டல அளவிலான இறகுப்பந்துப் போட்டி மன்னார்குடியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில், தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி அ. அஸ்மிதா கலந்து கொண்டு, 15 வயதிற்குட்பட்ட பெண்கள் ஒற்றையர் பிரிவில் முதலிடமும், 19 வயதிற்குட்பட்ட பெண்கள் ஒற்றையர் பிரிவில் முதலிடமும், 17 வயதிற்குட்பட்ட பெண்கள் ஒற்றையர் பிரிவில் மூன்றாமிடம் பெற்று பள்ளிக்கும், அதிராம்பட்டினத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்.

ஏற்கனவே இவர் மாவட்ட, மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்று சிறப்பிடம் பெற்றுள்ளார். மேலும், கடந்த மே.10, 11, 12 ஆகிய தேதிகளில் அகில இந்திய அளவிலான இறகுப்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் மாணவி அஸ்மிதா வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்திருப்பது குறிப்பிடத்தக்கது. இவர், அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி முதுகலை ஆசிரியர் ஆ.அஜுமுதீன் மகள் ஆவார்.

தொடர் சாதனை படைத்த மாணவி அஸ்மிதா, பயிற்சியளித்த உடற்கல்வி ஆசிரியர் ஆகியோரை, பள்ளித் தாளாளர் எஸ்.ஜெ அபுல் ஹசன், காதிர் முகைதீன் கல்லூரி முதல்வர் ஏ.முகமது முகைதீன், பள்ளித்தலைமை ஆசிரியை எம்.சுராஜ் மற்றும் ஆசிரியர்கள், அலுவலக, ஆய்வகப் பணியாளர்கள், பெற்றோர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

Sunday, May 19, 2019

தேசிய இறகுப்பந்து போட்டி: காதிர் முகைதீன் பெண்கள் பள்ளி மாணவி சாதனை!

தேசிய சாதனை நிகழ்த்திய பள்ளி மாணவி அஸ்மிதா
அதிராம்பட்டினம், மே.19
அகில இந்திய அளவிலான இறகுப்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி அஸ்மிதா வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

அகில இந்திய அளவிலான இறகுப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி பஞ்சாப் மாநிலம், அமிர்தசரஸ் நகரில் உள்ள குருநானக்தேவ் பல்கலைக் கழகத்தில், மே.10, 11, 12 ஆகிய தேதிகளில், ஆல் இந்திய யூத் ஸ்போர்ட்ஸ் டெவலப்மெண்ட் ஆப் இந்தியா அமைப்பு சார்பில், தமிழக அணியின் சார்பில் மகளிருக்கான இறகுப்பந்து இரட்டையர் பிரிவில், தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி அஸ்மிதா கலந்து கொண்டு, மூன்றாமிடம் பிடித்து வெண்கலப்பதக்கம் வென்று பள்ளிக்கும், அதிராம்பட்டினத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்.

ஏற்கனவே இவர் மாவட்ட, மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்று சிறப்பிடம் பெற்று, தற்போது நடைபெற்ற தேசிய அளவிலானப் போட்டியில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

சாதனை படைத்த மாணவி அஸ்மிதா, பயிற்சியளித்த உடற்கல்வி ஆசிரியர் ஆகியோரை, பள்ளித் தாளாளர் எஸ்.ஜெ அபுல் ஹசன், காதிர் முகைதீன் கல்லூரி முதல்வர் ஏ.முகமது முகைதீன், பள்ளித்தலைமை ஆசிரியை எம்.சுராஜ் மற்றும் ஆசிரியர்கள், அலுவலக, ஆய்வகப் பணியாளர்கள், பெற்றோர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர். 

Wednesday, May 8, 2019

+1 தேர்வில், காதிர் முகைதீன் பெண்கள் பள்ளி 100% தேர்ச்சி (முழுவிவரம்)

அதிராம்பட்டினம், மே 08
தமிழகமெங்கும் +1 தேர்வின் முடிவு புதன்கிழமை காலை வெளியானது. இந்த தேர்வில் தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் மொத்தம் 91 மாணவிகள் தேர்வு எழுதியதில் அனைத்து மாணவிகளும் வெற்றி பெற்று, 100 சதவீத தேர்ச்சியுடன் பள்ளி சாதனை நிகழ்த்தியுள்ளது.

கடந்த ஆண்டுகளை விட நடப்பு கல்வியாண்டில் மாணவிகள் அதிக தேர்ச்சி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து, பள்ளிச் செயலர் எஸ்.ஜெ அபுல் ஹசன், கல்லூரி முதல்வர் எம். முகமது முகைதீன், பள்ளி தலைமை ஆசிரியை எம்.சுராஜ் மற்றும் பள்ளி ஆசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள் ஆகியோர் மாணவிகளை பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

பள்ளியளவில் முதல் 3 இடங்கள் மதிப்பெண்கள்:
முதல் இடம்: 496/600
இரண்டாம் இடம்: 464/600
மூன்றாம் இடம் :  412/600

Tuesday, April 30, 2019

SSLC தேர்வில், காதிர் முகைதீன் பெண்கள் பள்ளி 99% தேர்ச்சி (முழுவிவரம்)

அதிராம்பட்டினம், ஏப்.30
தமிழகமெங்கும் SSLC தேர்வின் முடிவு திங்கட்கிழமை காலை வெளியானது. இந்த தேர்வில் தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் மொத்தம் 145 மாணவிகள் தேர்வு எழுதியதில் 143 மாணவிகள் வெற்றி பெற்று, 99 சதவீத தேர்ச்சியுடன் பள்ளி சாதனை நிகழ்த்தியுள்ளது.

கடந்த ஆண்டுகளை விட நடப்பு கல்வியாண்டில் மாணவிகள் அதிக தேர்ச்சி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து, பள்ளிச் செயலர் எஸ்.ஜெ அபுல் ஹசன், கல்லூரி முதல்வர் எம். முகமது முகைதீன், பள்ளி தலைமை ஆசிரியை எம்.சுராஜ் மற்றும் பள்ளி ஆசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள் ஆகியோர் மாணவிகளை பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

பள்ளியளவில் முதல் 3 இடங்கள் மதிப்பெண்கள்:
முதல் இடம்: 456/500
இரண்டாம் இடம்: 445/500
மூன்றாம் இடம் : 432/500

Friday, April 19, 2019

+2 தேர்வில், காதிர் முகைதீன் பெண்கள் பள்ளி 100 % தேர்ச்சி (முழுவிவரம்)

அதிராம்பட்டினம், ஏப்.19
தமிழகமெங்கும் பிளஸ் 2 தேர்வின் முடிவு இன்று வெள்ளிக்கிழமை காலை வெளியானது. இந்த தேர்வில் தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் மொத்தம் 93 மாணவிகள் தேர்வு எழுதினார்கள். இதில் 93 மாணவிகள் வெற்றி பெற்று, 100 சதவீத தேர்ச்சியுடன் பள்ளி சாதனை நிகழ்த்தியுள்ளது.

பள்ளி வரலாற்றில் கடந்த 1995 ஆம் ஆண்டுக்கு பின்பு 100 சதவீத தேர்ச்சி பெற்று சாதனை நிகழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து, பள்ளிச் செயலர் எஸ்.ஜெ அபுல் ஹசன், கல்லூரி முதல்வர் எம். முகமது முகைதீன், பள்ளித் தலைமை ஆசிரியர் எம்.சுராஜ் மற்றும் பள்ளி ஆசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள் ஆகியோர் மாணவிகளை பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

பள்ளியளவில் முதல் 3 இடங்கள் மதிப்பெண்கள்:
முதல் இடம்: 547/600
இரண்டாம் இடம்: 519/600
மூன்றாம் இடம் : 507/600

Saturday, September 1, 2018

இறகுப்பந்து போட்டியில் காதிர் முகைதீன் பெண்கள் பள்ளி மாணவிகள் சாதனை!

அதிராம்பட்டினம், செப்.01
அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் இறகுப்பந்து இரட்டையர், ஒற்றையர் பிரிவில் மாவட்ட அளவில் முதலிடம் பிடித்து சாதனை நிகழ்த்தி உள்ளனர்.

தஞ்சாவூர் பள்ளிக்கல்வித்துறை சார்பில், பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு, பேராவூரணி ஆகிய கல்வி மாவட்டங்களை உள்ளடக்கிய மாவட்ட அளவிலான குடியரசு தின விளையாட்டுப் போட்டி பட்டுக்கோட்டை பேட்மிட்டன் கிளப்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதில், அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் ஏ.அஸ்மிதா, ஏ. ஆமீனா மரியம் ஆகியோர் இறகுப்பந்து இரட்டையர், ஒற்றையர் பிரிவில் கலந்துகொண்டு, மாவட்ட அளவில் முதலிடம் பிடித்து மண்டல போட்டியில் விளையாட தகுதி பெற்றனர்.

இதையடுத்து, சாதனை மாணவிகளை காதிர் முகைதீன் கல்வி நிறுவனங்கள் செயலர் எஸ்.ஜெ அபுல் ஹசன், பள்ளி தலைமை ஆசிரியை எம்.சுராஜ், உடற்கல்வி ஆசிரியை ஜி.அகிலா, ஆசிரியைகள், அலுவலகப் பணியாளர்கள், மாணவிகள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

Wednesday, June 20, 2018

அதிரை லயன்ஸ் சங்கம் சார்பில், பெண்கள் பள்ளிக்கு நாப்கின் எரியூட்டும் இயந்திரம் வழங்கல்!

அதிராம்பட்டினம், ஜூன் 20
அதிராம்பட்டினம் லயன்ஸ் சங்கம் சார்பில், காதிர் முகைதீன் பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு, நாப்கின் எரிக்கும் இயந்திரம் வழங்கப்பட்டது.

தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், 900 க்கும் மேற்பட்ட மாணவியர் கல்வி பயில்கின்றனர். மாணவியர் அதிகம் பேர், கிராமங்களில் இருந்து வருகின்றனர். எனவே, பள்ளியில் மாணவியர் பயன்படுத்தும் வகையில், நாப்கின்களை சுகாதாரமான முறையில் எரிக்க பயன்படும், ரூ. 30 ஆயிரம் மதிப்பிலான நாப்கின் இயந்திரம், அதிராம்பட்டினம் லயன்ஸ் சங்கம் சார்பில், பள்ளித் தாளாளர் ஹாஜி எஸ்.ஜெ அபுல் ஹசன் முன்னிலையில், பள்ளித் தலைமை ஆசிரியை சுராஜிடம் இன்று புதன்கிழமை காலை வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில், லயன்ஸ் சங்க மாவட்ட நிதி ஆலோசகர் பேராசிரியர் எம்.ஏ முகமது அப்துல் காதர், அதிராம்பட்டினம் லயன்ஸ் சங்கத் தலைவர் எஸ்.எம் முகமது முகைதீன், செயலாளர் எம்.அப்துல் ரஹ்மான், பொருளாளர் எஸ்.ஏ அப்துல் ஹமீது, மாவட்டத் தலைவர்கள் சாரா எம். அகமது, எம்.சாகுல் ஹமீது, எம்.நிஜாமுதீன், என். ஆறுமுகச்சாமி, ஆர். செல்வராஜ், எம்.ஏ அப்துல் ஜலீல் மற்றும் பள்ளி ஆசிரியைகள் பங்கேற்றனர்.

Friday, May 19, 2017

SSLC தேர்வில், அதிரையில் 93.59 சதவீதம் பேர் தேர்ச்சி !

அதிராம்பட்டினம், மே 19
தமிழகமெங்கும் SSLC தேர்வின் முடிவு இன்று வெள்ளிக்கிழமை காலை வெளியானது. அதிராம்பட்டினத்தில் உள்ள அரசுப்பள்ளி, அரசு உதவிபெரும் பள்ளிகள், சுயநிதி தனியார் மெட்ரிக். பள்ளி என மொத்தம் 4 பள்ளிகளை சேர்ந்த 549 மாணவ, மாணவிகள் பத்தாம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வு எழுதினர். இதில் 507 பேர் தேர்ச்சி பெற்றனர். அதிரை அளவில் மொத்தம் 93.59 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

அதிராம்பட்டினம் அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளியில் மொத்தம் 106 மாணவிகள் தேர்வு எழுதினார்கள். இதில் 106 பேர் தேர்ச்சி பெற்று, பள்ளி 100 சதவிகிதம் பெற்றுள்ளது.

அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மொத்தம் 154 மாணவிகள் தேர்வு எழுதினார்கள். 149 பேர் தேர்ச்சி பெற்றனர். பள்ளி 96.75 சதவிகிதம் பெற்றுள்ளது.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மொத்தம் 99 பேர்கள் ( ஆண்கள் 65 பேர், பெண்கள் 34 பேர் ) தேர்வு எழுதினார்கள். இதில் 93 பேர் ( ஆண்கள் 61 பேர், பெண்கள் 32 பேர் ) தேர்ச்சி பெற்று, பள்ளி 93.94 சதவீகிதம் தேர்ச்சி பெற்றுள்ளது.

அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மொத்தம் 190 மாணவர்கள் தேர்வு எழுதினார்கள். இதில் 159 பேர் தேர்ச்சி பெற்று, பள்ளி 83.68 சதவீகிதம் தேர்ச்சி பெற்றுள்ளது.

SSLC தேர்வில், காதிர் முகைதீன் பெண்கள் மேல்நிலைப்பள்ளி தேர்ச்சி: முழுவிவரம் !

அதிராம்பட்டினம், மே-19
தமிழகமெங்கும் SSLC தேர்வின் முடிவு இன்று காலை வெளியானது. இந்த தேர்வில் தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் மொத்தம் 154 மாணவிகள் தேர்வு எழுதினார்கள். இதில் 97 சதவீத தேர்ச்சியுடன் பள்ளி சாதனை நிகழ்த்தியுள்ளது.

பள்ளியளவில் முதல் 3 இடங்கள் மதிப்பெண்கள்:
முதல் இடம்: 485 / 500
இடண்டாம் இடம்: 483 / 500
மூன்றாம் இடம் :  471 / 500

Friday, May 12, 2017

+2 தேர்வில், காதிர் முகைதீன் பெண்கள் மேல்நிலைப்பள்ளி தேர்ச்சி: முழுவிவரம் !

அதிராம்பட்டினம், மே-12
தமிழகமெங்கும் பிளஸ் 2 தேர்வின் முடிவு இன்று காலை வெளியானது. இந்த தேர்வில் தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் மொத்தம் 173 மாணவிகள் தேர்வு எழுதினார்கள். இதில் 160 மாணவிகள் வெற்றி பெற்று, 92 சதவீத தேர்ச்சியுடன் பள்ளி சாதனை நிகழ்த்தியுள்ளது.

இதில் இயற்பியல், வேதியியல், கணிதம், உயிரியியல், கம்ப்யூட்டர் சயின்ஸ், ஆங்கிலம் ஆகிய 6 பாடப்பிரிவுகளில் 100 சதவீத தேர்ச்சி பெற்று பள்ளி சாதனை நிகழ்த்தியுள்ளது.

பள்ளியளவில் முதல் 3 இடங்கள் மதிப்பெண்கள்:
முதல் இடம்: 1102/1200
இடண்டாம் இடம்:1092/1200
மூன்றாம் இடம் ( இரு மாணவிகள்): 1037/1200

Friday, April 7, 2017

காதிர் முகைதீன் கல்லூரியில் 10,12-ஆம் வகுப்பு தேர்வெழுதிய மாணவர்களுக்கு கல்வி வழிகாட்டி கருத்தரங்கம் !

அதிராம்பட்டினம், ஏப்-07
பத்து மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவ, மாணவியருக்கு பள்ளி கல்வித்துறை சார்பாக மேற்படிப்பு மற்றும் வேலை வாய்ப்பு தொடர்பாக ஆலோசனை கருத்தரங்க நிகழ்ச்சி அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கல்லூரி முதல்வர் ஏ.எம் உதுமான் முகையதீன் தலைமை வகித்து கருத்தரங்கை தொடங்கிவைத்து பேசுகையில்;
அரசுப்பொதுத் தேர்வு எழுதிய மாணவ, மாணவிகள் ஆசிரியர், பெற்றோர்கள் வழிகாட்டுதலில் மேற்படிப்பை தொடர வேண்டும். வேலை வாய்ப்பு அதிகம் உள்ள படிப்புகள் எவை என்பது குறித்தும், பாடப்பிரிவைத் தேர்வு செய்யும் முறை குறித்தும் அறிந்துகொள்ள வேண்டும். மத்திய, மாநில அரசுகள், பல்வேறு உதவித் தொகைகளை வழங்குகின்றன' என்றார்.

முன்னதாக காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஏ.மகபூப் அலி வரவேற்றுப்பேசினார். கருத்தரங்கு முடிவில் காதிர் முகைதீன் பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை எம். சுராஜ் நன்றி கூறினார்.

இக்கருத்தரங்கில், சிறப்பு விருந்தினர்களாக காதிர் முகைதீன் கல்லூரி பொருளியல் துறைத் தலைவர் பேராசிரியர்கள் மேஜர் எஸ்.பி கணபதி, ஓ. சாதிக், ராஜாமடம் அண்ணா பல்கலைகழக உறுப்பு பொறியியல் கல்லூரி பேராசிரியர் என்.கவிதா, பட்டுக்கோட்டை பாலிடெக்னிக் கல்லூரி துணை முதல்வர் மதியழகன், வழக்குரைஞர் ஆர். பிரகாசம், வல்லம் பெரியார் மணியம்மை கல்லூரி பேராசிரியர் ஆர்.கே முத்துராமன், மனோரா பாலிடெக்னிக் கல்லூரி பேராசிரியர் எஸ். சிலம்புசெல்வம் ஆகியோர் கலந்துகொண்டு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மேற்படிப்பு மற்றும் வேலைவாய்ப்பு சார்ந்த ஆலோசனைகளை வழங்கினார்கள்.

இக்கருத்தரங்கில் மாணவ, மாணவியர்கள் விரும்பும் படிப்புகளை வழங்கும் கல்வி நிறுவனங்கள் எங்கு அமைந்துள்ளன என்பது குறித்த விரிவான தகவல்கள் அடங்கிய வழிகாட்டும் கையேடு இலவசமாக வழங்கப்பட்டது. இக்கையேட்டில் மாணவர்களுக்கு தமிழக அரசு வழங்கி வரும் கல்வி உதவித்தொகை குறித்த விவரங்கள், வேலை வாய்ப்பு, திறன் மேம்பாட்டுப் பயிற்சி உள்ளிட்ட விவரங்களை அறிந்து கொள்ள முடியும்.

இக்கருத்தரங்கில், அதிராம்பட்டினம், ராஜாமடம், பள்ளத்தூர், பட்டுக்கோட்டை நாடியம், புதுக்கோட்டை உள்ளூர் ஆகியப்பகுதிகளின் அரசு மற்றும் அரசு உதவிப்பெரும் பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் 500 பேர் கலந்துகொண்டு பயனடைந்தனர்.
 

Saturday, February 25, 2017

காதிர் முகைதீன் பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆண்டு விழா நிகழ்ச்சி !

அதிராம்பட்டினம், பிப்-25
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் 35 ஆம் ஆண்டு விழா நிகழ்ச்சி இன்று சனிக்கிழமை பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு தலைமை வகித்த காதிர் முகைதீன் கல்லூரி முதல்வர் முனைவர் ஏ. ஜலால் இந்திய தேசியக் கொடியை ஏற்றி வைத்து ஆண்டுவிழா உரை நிகழ்த்தினார். இதில் மாணவிகள் தான் கற்கும் கல்வியோடு இறையச்சம், ஒழுக்கம் ஆகியவற்றில் கூடுதல் கவனம் செலுத்துவது குறித்து எடுத்துரைத்தார். பள்ளி மாணவிகள் அரசுப் பொதுத்தேர்வில் தமிழக அளவில் மீண்டும் சாதனை நிகழ்த்த கனவு காணும் பள்ளி தலைமை ஆசிரியை சுராஜ் ஆசை நிறைவேற தாம் வாழ்த்துவதாக தெரிவித்தார். 

சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்ட காதிர் முகைதீன் கல்லூரி முன்னாள் முதல்வர் பேராசிரியர் முஹம்மது அப்துல் காதர், காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி முன்னாள் தலைமை ஆசிரியர் எஸ்.கே.எம் ஹாஜா முகைதீன், பள்ளி முன்னாள் முதுகலை ஆசிரியர் வி. விஜயலட்சுமி, பெற்றோர் ஆசிரியர் கழகப்பொறுப்பாளர் முஹம்மது இப்ராஹிம் ஆகியோர் கலந்துகொண்டு மாணவிகள் மற்றும் ஆசிரியைகளுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டு தெரிவித்தனர். இதில் 10 மற்றும் +2  அரசு பொதுத்தேர்வில் சாதனை நிகழ்த்திய மாணவிகளுக்கு கேடயப் பரிசுகள் வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

முன்னதாக பள்ளித் தலைமை ஆசிரியை திருமதி எம். சுராஜ் ஆண்டறிக்கை வாசித்தார். இதில் பள்ளி சார்பில் கல்வியில் மாணவிகள் - ஆசிரியைகள் நிகழ்த்திய பல்வேறு சாதனைகளை பட்டியலிட்டார். மேலும் பள்ளி சார்பில் நடத்தப்பட்ட சமூக விழிப்புணர்வு பணிகளையும் குறிப்பிட்டு பேசினார். 

பள்ளி உடற்கல்வி ஆசிரியை ஜி. அகிலா பள்ளி மாணவிகள் விளையாட்டு போட்டிகளில் நிகழ்த்திய சாதனைகளை பட்டியலிட்டு ஆண்டரிக்கையாக தொகுத்து வழங்கினார்.

முன்னதாக பள்ளியின் உதவி தலைமை ஆசிரியை ஹசினா நசீரின் வரவேற்று பேசினார். நிகழ்ச்சிகள் அனைத்தையும் பள்ளி இலக்கிய மன்ற பொறுப்பாளர் ந.விஜயா தொகுத்து வழங்கினார். விழா முடிவில் பள்ளி ஆசிரியை தையல்நாயகி நன்றி கூறினார்.

இவ்விழாவில் ஓ.கே.எம் சிபஹத்துல்லா, கே.கே. ஹாஜா நஜ்முதீன், என்.கே.எஸ் முஹம்மது சரீப், நூருல் அமீன், அப்துல் லத்திப் உள்ளிட்ட  பள்ளி ஆசிரியைகள், பெற்றோர்கள், பள்ளி அலுவலகப் பணியாளர்கள் - மாணவிகள் கலந்துகொண்டனர்.

Tuesday, December 27, 2016

பேட்மிண்டன் போட்டியில் காதிர் முகைதீன் மேல்நிலைப்பள்ளி மாணவி சாதனை !

அதிராம்பட்டினம், டிச-27
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி பேட்மிண்டன் போட்டியில் மூன்றாம் இடம் பிடித்து சாதனை நிகழ்த்தி உள்ளார்.

அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் முதுகலை ஆசிரியராக பணியாற்றி வருபவர் அஜுமுதீன். இவரது மகள் அஸ்மிதா (11)  காதிர் முகைதீன் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 7 ம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்நிலையில் திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் சாய்னா பேட்மிண்டன் கிளப் டோர்னமென்ட் சார்பில் நடந்த 13 வயதிற்கு உட்பட்டவர்களுக்கான   பேட்மிண்டன் சிங்கிள்ஸ் போட்டியில் கலந்துகொண்டு விளையாடினார். இப்போட்டியில் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் மொத்தம் 15 பேர் விளையாடினார். இதில் முதல் போட்டியில் 30:8,  2 வது போட்டியில் 30:22 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று மூன்றாவது இடத்தைப் பிடித்தார். இவருக்கு பரிசு வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

Monday, October 31, 2016

காதிர் முகைதீன் மேல்நிலைப்பள்ளியில் அறிவியல் கண்காட்சி ( படங்கள் )

அதிராம்பட்டினம், அக்-31
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் அறிவியல் கண்காட்சி இன்று திங்கட்கிழமை நடைபெற்றது.

அறிவியல் கண்காட்சியை பள்ளித் தலைமை ஆசிரியை எஸ்.சுராஜ் தொடங்கி வைத்தார். பள்ளி பட்டதாரி ஆசிரியை எஸ். மேகலா, உடற்கல்வி ஆசிரியை ஜி அகிலா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கண்காட்சியில் 'சுற்றுச்சூழல் பாதுகாப்பு' என்ற தலைப்பின் கீழ் பள்ளி மாணவிகளின் படைப்புகள் இடம்பெற்றன. இதில் 6 ம் வகுப்பு முதல் 12 ம் வகுப்பு வரையிலான 80 மாணவிகள் கலந்துகொண்டு தங்களது படைப்புகளின் செயல்விளக்கத்தை பார்வையாளர்களுக்கு செய்து காண்பித்தனர்.

கண்காட்சிக்கு பள்ளி ஆசிரியைகள் எஸ். தையல்நாயகி, கே. அனுராதா, எம். ஹசினா நஸ்ரின் ஆகியோர் நடுவர்களாக இருந்து மாணவிகளின் சிறந்த படைப்புகளை தேர்வு செய்தனர்.

கண்காட்சியில் இடம் பெற்று இருந்த அக்னி ஏவுகணைகள், பேரிடர் குறைப்பு, வாகன விபத்து தடுப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு உள்ளிட்ட படைப்புகள் பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்தன.

இக்கண்காட்சியில் பள்ளி ஆசிரியைகள் ஏ. வஜீரா பானு, எம். சரண்யா, டி. ஆரோக்கிய தமிழ் மலர், ஜெய்னம்பு நாச்சியா, புவனேஸ்வரி, இலக்கியா உட்பட பள்ளி ஆசிரியைகள், அலுவலக பணியாளர்கள், பெற்றோர்கள், மாணவிகள் கலந்துகொண்டனர்.