.

Pages

Thursday, December 29, 2016

அமீரகத்தில் கடும் பனிப்பொழிவு !

அதிரை நியூஸ்: துபாய், டிச-29
அமீரக தேசிய வானிலை மைய அறிவித்தலின்படி, அமீரகத்தில் நிலவும் கடும் பனிப்படலாம் மேலும் 5 நாட்களுக்கு நீடிக்கும் என அறிவித்துள்ளதை தொடர்ந்து போக்குவரத்து காவல்துறையினர் பல்வேறு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வருவதுடன் டிரைவர்கள் அதிக கவனத்துடன் இயங்குமாறும், கண்ணாடிகளை சுத்தமாவும், விளக்குகளை எரியவிட்டவாறு செல்லுமாறும் அறிவுறுத்தியுள்ளனர்.

அமீரகத்தில் காலை வேளைகளில் நிலவும் கடும் பனிமூட்டத்தால் சாலை போக்குவரத்தும் விமான போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக அமீரகத்தின் அனைத்து விமான நிலைய தகவல்களும் தெரிவிக்கின்றன. ஒரு சில விமானங்கள் பிற விமான நிலையங்களுக்கும் தற்காலிகமாக திருப்பிவிடப்பட்டன.

பல விமானிகளுக்கு இதுபோன்ற கடும் பனிப்படல காலத்தில் விமானத்தை தரையிறக்கும் அனுபவமும் அதற்கான சிறப்பு லைசென்ஸ் இல்லாதவர்களும் திருப்பிவிடப்பட்டனர். சில எமிரேட்ஸ் விமானங்கள் பெட்ரோல் நிரப்புவதற்காக துபை வேல்டு சென்ட்ரல் விமான நிலையத்திற்கு திருப்பிவிடப்பட்டு மீண்டும் துபை சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்க அனுமதிக்கப்பட்டன.

துபையில் மட்டும் நேற்று அதிகாலை 4 மணிமுதல் 9 மணிமுதல் வரை 119 சிறு வாகன விபத்துக்கள் நடந்துள்ளன. மேலும் 1,892 பேர் தொலைபேசி வழியாக புகாரும் தெரிவித்துள்ளதாக துபை போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

அஜ்மான் தனியார் மருத்துவமனையில் தீ !

அதிரை நியூஸ்: அஜ்மான், டிச-29
நேற்றிரவு சுமார் 10.30 மணியளவில் அஜ்மான் தம்பே மருத்துவமனையின் (Thumbay Hospital) (முன்னாள் GMC மருத்துவமனை) அவசரகால பிரிவில் திடீரென தீப்பற்றியதை தொடர்ந்து மருத்துவ குழுவினர், நோயாளிகள் உட்பட அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.

அஜ்மான் தீயணைப்பு வீரர்களால் தீ மேலும் பரவாமல் கட்டுப்படுத்தப்பட்டது. தீயால் பாதிக்கப்படாத மருத்துவமனையின் மற்றொரு பகுதி அவசரகால பிரிவாக மாற்று ஏற்பாடு செய்யப்பட்டது.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

மரண அறிவிப்பு ( சுலைஹா அம்மாள் அவர்கள் )

அதிராம்பட்டினம், மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் சேக்தாவூது அவர்களின் மகளும், மர்ஹூம் முகைதீன் அப்துல் காதர் அவர்களின் மனைவியும், மர்ஹூம் அப்துல் மஜீது அவர்களின் சகோதரியும்,  ஜமால் முகம்மது அவர்களின் மாமியாரும், முஹம்மது புஹாரி, சாகுல் ஹமீது, ரபி அகமது, சகாபுதீன், பைசல் அகமது ஆகியோரின் உம்மம்மாவுமாகிய ( பெரியம்மா ) சுலைஹா அம்மாள் அவர்கள் இன்று அதிகாலை வஃபாத்தாகிவிட்டார்கள்.

"இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஹூன்"

அன்னாரின் ஜனாஸா இன்று காலை 10 மணியளவில் பெரிய ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

Wednesday, December 28, 2016

11 லிட்டர் இரத்த தானம் செய்து அதிராம்பட்டினம் இளைஞர் சாதனை !

அதிராம்பட்டினம், டிச-28
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் நடுத்தெரு பகுதியைச் சேர்ந்தவர் அஜ்மீர் ஸ்டோர் ஏ. சாகுல் ஹமீது. சமூக ஆர்வலரான இவர் 'மணிச்சுடர்' இதழின் அதிராம்பட்டினம் பகுதி நிருபராகவும், 'அதிரை நியூஸ்' இணையதளம் நேர்காணல் நடத்துனராகவும் இருந்து வருகிறார்.

கடந்த 9 ஆண்டுகளாக ஆர்வத்துடன் தானாக முன்வந்து இரத்த தானம் செய்து வருகிறார். இதுவரையில் 30 தடவை இரத்தம் வழங்கி மொத்தம் 10 லிட்டர் 500 மில்லி கிராம் இரத்தம் வழங்கி உள்ளார். இந்நிலையில் இன்று புதன்கிழமை அதிரையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கிளை-2 நடத்திய இரத்த தான முகாமில் கலந்துகொண்டு 31 வது முறையாக இரத்தம் வழங்கினார். இதுவரையில் 10.850 லிட்டர் இரத்தம் வழங்கி சாதனை புரிந்துள்ளார்.

தொடர்ந்து செய்து வரும் இவரது இரத்த தான சேவையைப் பாராட்டி கடந்த ஜூன் மாதம் அதிரை சமூக நல அறக்கட்டளை சார்பில் 'சேவை விருது' வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது. தஞ்சையில் கடந்த ஆண்டு நடைபெற்ற இரத்ததான ஒருங்கிணைப்பாளர் முகாமில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் என்.சுப்பையன் அவர்கள் பாராட்டு சான்றிதழ் வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

மேலும் இவருடைய குருதிக்கொடை சேவையை பாராட்டி கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு தஞ்சை மாவட்ட ஆட்சியராக இருந்த திரு. பாஸ்கரன் அவர்கள், தஞ்சை அரசு மருத்துவமனையில் நடைபெற்ற தேசிய தன்னார்வ இரத்ததான விழாவில் சான்றிதழ் வழங்கி பாராட்டினார். மேலும் முன்னாள் மத்திய இணை அமைச்சர் இ. அஹமது எம்பி, பாராளுமன்ற முன்னாள் உறுப்பினர் அப்துல் ரஹ்மான் எம்பி, பட்டுக்கோட்டை சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் திரு. என்.ஆர். ரெங்கராஜன் எம்எல்ஏ ஆகியோரிடம் பாராட்டுதலை பெற்றுள்ளார். மேலும் அதிரை லயன்ஸ் சங்கம் வழங்கிய குருதிக்கொடையாளர் உட்பட பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார்.

அமீரகத்தில் 2017 ஜனவரி மாத பெட்ரோல் சில்லறை விலையில் ஏற்றம்!

அதிரை நியூஸ்: துபாய், டிச-28
கடந்த இரு வருடங்களாக சர்வதேச சந்தையில் கடும் வீழ்ச்சியடைந்த வந்த கச்சா எண்ணெய் விலையை மீண்டும் உயர்த்தும் நோக்கில் பெட்ரோலிய உற்பத்தி நாடுகளின் கூட்டமைப்பு 2017 ஜனவரி 1 ஆம் தேதி முதல் நாளொன்றுக்கு மொத்த உற்பத்தியிலிருந்து 1.8 மில்லியன் பேரல் அளவுக்கு உற்பத்தியை குறைக்க முடிவு செய்ததை தொடர்ந்து மீண்டும் கச்சா எண்ணெய் விலையில் சற்றே ஏற்றம் காண துவங்கியுள்ளது.

அமீரகத்தில் மாதாமாதம் பெட்ரோல் சில்லறை விலை சர்வதேச சந்தை நிலவரத்திற்கு ஏற்ப மாற்றம் செய்யப்பட்டு வருகின்றன. அதனடிப்படையில் 2017 ஜனவரி மாத்திற்கான விலை அறிவிக்கப்பட்டுள்ளது. பெட்ரோல் லிட்டர் ஒன்றுக்கு 11 காசுகளும், டீசல் 13 காசுகளும் ஏற்றப்பட்டுள்ளன.

குறிப்பு: ஒப்பீட்டுக்காக அடைப்புக்குறிக்குள் 2016 டிசம்பர் மாத விலை குறிப்பிடப்பட்டுள்ளது.

சூப்பர் 98 – 1.91 திர்ஹம் (1.80)
ஸ்பெஷல் 95 – 1.80 திர்ஹம் (1.69)
ஈ பிளஸ் - 1.73 திர்ஹம் (1.62)
டீசல் - 1.94 திர்ஹம் (1.81)

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

பணிப்பெண் வீட்டுக்கு சென்ற பஹ்ரைன் வெளியுறவு அமைச்சர்: குவியும் பாராட்டுக்கள்

அதிரை நியூஸ்: பஹ்ரைன், டிச-28
பஹ்ரைன் வெளியுறவு அமைச்சராக 2005 ஆம் ஆண்டு முதல் பணியாற்றிவரும் ஷேக். காலித் பின் அஹ்மது அல் கலீபா அவர்கள் தன்னுடைய வீட்டில் சுமார் 21 ஆண்டுகள் குடும்ப உறுப்பினர்களில் ஒருவர் போன்று ஈடுபாட்டுடன் பணியாற்றிய முன்னாள் வீட்டுப்பணிப்பெண் 'லைலா' என்ற கேரள பெண்ணின் கொல்லத்தில் உள்ள வீட்டிற்கு சென்று அளவளாவி மகிழ்ந்தார்.

இந்த சந்திப்பை நெகிழ்ச்சியுடனும் நன்றியுடனும் அமைச்சர் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டதை தொடர்ந்து பலரும் அமைச்சரின் மனிதநேய பண்பை பாராட்டி வருகின்றனர். அமைச்சர் ஷேக். காலித் அவர்களின் டிவிட்டர் பக்கத்தை சுமார் 244,000 பின் தொடரும் நிலையில் இதுவரை 13,500 பேருக்கு மேல் வாழ்த்தி டிவீட் செய்துள்ளனர், அது இன்னும் கூடிக்கொண்டே செல்கின்றது.

அமைச்சர் ஷேக். காலித் அவர்கள் 2015 ஆம் ஆண்டுக்கான 'சிறந்த அரேபிய அரசியல்வாதி' என சமூக வலைத்தளவாசிகளால் தேர்வு செய்யப்பட்டு துபையில் நடைபெற்ற விழாவில் கவுரவிக்கப்பட்டார். மேலும், 2013 மற்றும் 2013 ஆம் ஆண்டுகளில் தொடர்ந்து இருமுறை சமூக வலைதளம் மற்றும் சிறந்த ஊடக ஆளுமையாளர் என்ற விருதையும் வென்றுள்ளார்.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

மீண்டும் ஒரு விமான விபத்து ( படங்கள் )

அதிரை நியூஸ்: டிச-28
நேற்று டெல்லியில் தவிர்க்கப்பட்ட விமான விபத்து குறித்த செய்தியை பதிவிட்டிருந்தோம். அந்த செய்தியின் தகவல் தொடர்ச்சியாக, உலகின் முதலாவது பெரிய விமான விபத்து என வர்ணிக்கப்படும் டெனரீப் (Tenerife North Airport) விமான நிலைய விபத்து பற்றி குறிப்பிட்டிருந்தோம்.

இன்று அதே டெனரீப் விமான நிலையத்திலிருந்து மொரோக்கோ நோக்கி புறப்பட்ட குட்டி விமானம் ஒன்று தொழில்நுட்ப கோளாரால் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே டெனரீப் கடற்கரையில் விழுந்து நொறுங்கியது. எனினும், 3 பயணிகளுள் ஒருவர் மட்டும் பலத்த காயத்துடனும் விமானியும் பிறரும் சிறு காயங்களுடன் தப்பினர். மேலும், கடற்கரையில் குழுமியிருந்த மக்களும் சிதறி ஓடியதால் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.

மேலும் தொடர்ந்து விமான விபத்து குறித்த செய்திகளை எழுதாமலிருக்க இறைவனை வேண்டுகிறோம்.

Source: Mirror / Msn
தமிழில்: நம்ம ஊரான்
 
 
 

அதிரையில் நடந்த இரத்ததான முகாம்:100 க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு!

அதிராம்பட்டினம், டிச-28
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அதிரை கிளை-2 மற்றும் தஞ்சை மீனாட்சி மருத்துவமனை ஆகியோர் இணைந்து நடத்திய இரத்த தானம் முகாம் இன்று [ 28-12-2016 ] புதன்கிழமை நடுத்தெரு ஆய்ஷா மகளிர் அரங்கில் நடைபெற்றது.

முகாமிற்கு கிளைத்லைவர் பஜால் முகைதீன் தலைமை வகித்தார். அவ்வமைபின் மருத்துவ அணி பொறுப்பாளர்கள் வல்லம் ஜாபர், முஹம்மது அவூன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முகாமில் 100 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இதில் இரத்த கொடையாளர்களிடமிருந்து 63 யூனிட் இரத்தம் தானம் பெறப்பட்டது.

முன்னதாக தஞ்சை மீனாட்சி மருத்துமனை மருத்துவக்குழுவினர் இரத்தம் தானம் செய்ய முன்வந்தவர்களுக்கு இரத்த அழுத்தம், ரத்தத்தில் சர்க்கரை அளவு, ஹீமோகுளோபின் அளவு, உடல் எடை ஆகியவை பரிசோதித்தனர்.

இம்முகாமில் தமிழக தவ்ஹீத் ஜமாத் அதிரை கிளை-1, கிளை-2 நிர்வாகிகள் - உறுப்பினர்கள், கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட ஏராளமான குருதி கொடையாளர்கள் ஆர்வத்துடன் பங்கேற்று இரத்த தானம் செய்தனர். இரத்தக் கொடையாளர்கள் அனைவருக்கும் ஜூஸ், பிஸ்கட், பேரிட்சை பழங்கள் வழங்கப்பட்டன. முகாம் காலை 10 மணிக்கு தொடங்கி மதியம் 2 மணி வரை நடந்தது. முகாம் ஏற்பாட்டினை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அதிரை கிளை-2 செய்தது.