.

Pages

Monday, July 2, 2018

எஸ்.டி.பி.ஐ கட்சியின் புதிய நிர்வாகிகளுக்கு வாழ்த்து (படங்கள்)

எஸ்.டி.பி.ஐ கட்சியின் புதிய நிர்வாகிகள் மற்றும் முன்னாள் நிர்வாகிகளுக்கு அக்கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவர் இசட். முகமது இலியாஸ் மற்றும் நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர்.

எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில பொதுக்குழு கூட்டம் திருச்சியில் நடந்தது. மாநில பிரதிநிதிகள் சபை கூட்டத்திற்கு மாநில தலைவர் தெகலான் பாகவி தலைமை தாங்கினார். இதனை தொடர்ந்து தமிழகத்தில் அடுத்த மூன்றாண்டுகளுக்கான புதிய நிர்வாகிகள் தேர்தல் நடைபெற்றது. கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் இலியாஸ் தும்பே தேர்தலை நடத்தினார்.

கட்சியின் தமிழ் மாநில புதிய தலைவராக முகமது முபாரக், துணை தலைவர்களாக தெகலான் பாகவி, அம்ஜத் பாஷா, பொதுச்செயலாளர்கள் நிஜாம் முகைதீன், அப்துல் அமீது, உமர் பாரூக், பொருளாளராக அபுதாகீர் செயலாளர்களாக எஸ்.அமீர் ஹம்ஸா, டி.ரத்தினம், எஸ்.அஹமது நவவி, எ.அபுபக்கர் சித்திக், வழக்கறிஞர் என்.சஃபியா ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மேலும், எஸ்.எம்.ரஃபீக் அஹமது, ஜி.அப்துல் சத்தார், எம்.முகம்மது பாரூக், ஏ.கே.கரீம், ஜி.எஸ்.இக்பால், ஐ.சபியுல்லா, எ.சுல்ஃபிகர் அலி, அ.காசிநாத துரை, எஸ்.நஜ்மா பேகம் ஆகியோர் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். புதிய நிர்வாகிகள் தேர்வினை கட்சியின் தேசிய தலைவர் சயீத் அறிவித்தார்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:
தமிழகத்தில் தற்போது கல்வி, வேலை வாய்ப்பில் முஸ்லிம்களுக்கு 3.5 சதவீத உள் ஒதுக்கீடு உள்ளது. 2011 சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தின்போது மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீட்டை உயர்த்தி வழங்க பரிசீலிக்கப்படும் என்றார். அவரது வாக்குறுதி படி தற்போது 3.5 சதவீதமாக உள்ள இட ஒதுக்கீட்டை 7 சதவீதமாக உயர்த்தி வழங்கவேண்டும் என கேட்டுக்கொள்வது.

ஆயுள் சிறைக்கைதிகள் விடுதலையில் தமிழக அரசு பரிந்துரைத்த அனைவரும் பாகுபாடு இன்றி விடுதலை செய்யப்படவேண்டும், பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுதலை செய்ய வேண்டும், சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சகம் அமைக்கப்படவேண்டும், கல்வி, விவசாயம், மற்றும் தொழில் தொடங்க வட்டி இல்லா கடன் வழங்கும் வங்கிகள் திறக்கப்பட வேண்டும், உருது மொழி அகாடமியை மேம்படுத்த வேண்டும். உலமாக்கள் நல வாரியத்தை செயல்படுத்த வேண்டும் என்பன உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
 
 
 

சவுதியில் ஹஜ் யாத்ரீகர்களுக்கு ஹஜ் அமைச்சகத்தின் கேட்டரிங் திட்டம் மூலம் உணவு வழங்க முயற்சி!

அதிரை நியூஸ்: ஜூலை 02
சவுதியில் ஹஜ் யாத்ரீகர்களுக்கு ஹஜ் அமைச்சகத்தின் கேட்டரிங் திட்டம் மூலம் உணவு வழங்கும் முயற்சிகள் ஆரம்பம்.

ஹஜ் யாத்திரைக்கு வரும் பன்னாட்டு யாத்ரீகர்கள் சந்திக்கும் பிரச்சனைகளிலேயே பிரதானமானது 'உணவு'. இந்த உணவை முன்கூட்டியே தயாரித்து அந்தந்த அந்நாட்டு மக்களின் தேவை மற்றும் சுவைக்கு ஏற்ப வழங்கும் கேட்டரிங் திட்டத்தை சோதனை முயற்சியாக மீண்டும் கையில் எடுத்துள்ளது ஹஜ் மற்றும் உம்ராவுக்கான அமைச்சகம். இந்த முயற்சி ஹிஜ்ரி 1424 ஆம் ஆண்டிலேயே முயற்சிக்கப்பட்டு கைவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஹஜ் அமைச்சகம், மக்கா மாநகராட்சி, சவுதி உணவு மற்றும் மருந்துகளுக்கான ஆணையம் மற்றும் தவாபா ஆர்கனிஷேசன்ஸ் Tawafa Organisations (ஹஜ் யாத்ரீகர்களுக்கு பல்வேறு வசதிகளை செய்து தரும் குழுக்கள்) ஆகியவை இணைந்து இம்முயற்சியில் ஈடுபட்டுள்ளன. இது தொடர்பாக மக்காவின் உம்மல் குரா பல்கலைகழகத்தின் ஹஜ் ஆராய்ச்சி துறையினரால் தவாபா ஆர்கனைஷேசனின் சுமார் 600 ஊழியர்கள், உள்நாட்டு தனியார் ஹஜ் சேவை நிறுவனங்களின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்ட பயிலரங்கம் நடத்தப்பட்டது.

எதிர்வரும் ஹஜ் சீஸனின் போது சுமார் 15 சதவிகித பன்னாட்டு ஹஜ் யாத்ரீகர்களுக்கு முன்கூட்டியே தயாரிக்கப்பட்டு பார்சல் செய்யப்பட்ட உணவுகளை வழங்க திட்டமிடப்பட்டுள்ளதுடன் இவை படிப்படியாக அதிகரிக்கப்பட்டு 2020 ஆம் ஆண்டு ஹஜ் சீசனின் போது 45 சதவிகித பன்னாட்டு யாத்ரீகர்களுக்கு உணவு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. குளறுபடி, குறைகள் இன்றி தொடர்ந்து உணவு வழங்குவதற்கான ஆராய்ச்சிகளும் திட்டமிடல்களும் உணவு வழங்களை செம்மைபடுத்தப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த கேட்டரிங் திட்ட முயற்சிகள் வெற்றிபெற்றால்,
1. ஹஜ் யாத்ரீகர்களுக்கு சுவையான, தரமான உணவு கிடைக்கும்.

2. பலரும் உணவு தயாரிக்கத் தேவைப்படும் மொத்த நீரில் 75 சதவிகிதத்தை மிச்சப்படுத்தலாம்.

3. உணவு பொருட்களை சேமிப்பதற்காக பயன்படும் சுமார் 18,000 சதுரடி இடம் புனித பள்ளியை சுற்றி மிச்சமாகும்.

4. புனித ஹஜ்ஜின் போது உணவு சமைத்தல் மற்றும் அது தொடாபுடைய பணிகளுக்காக தரப்படும் வேலைவாய்ப்பு விசாக்களின் தேவை 80 சதவிகிதம் வரை குறையும்.

5. யாத்திரையின் உச்ச நாட்களின் போது புனித இடங்களை சுற்றி உணவுப் பொருட்களை ஏற்றிவரும் டிரக் வாகன போக்குவரத்தில் சுமார் 4,500 டிரிப்புகள் குறையும்.

6. புனித இடங்களை சுற்றி குவியும் உணவு குப்பைகளில் சுமார் 20 சதவிகிதம் வரை குறையும் என எதிர்பார்ப்பதாக ஹஜ் மற்றும் உம்ராவுக்கான அமைச்சகம் அறிவித்துள்ளது.

Source: Saudi Gazette
தமிழில்: நம்ம ஊரான்

சவுதியில் விபத்தால் முடமாகிய வாலிபர் உயர்நிலை படிப்பில் வெற்றி பெற்று சாதனை!

அதிரை நியூஸ்: ஜூலை 02
சவுதியில் விபத்தால் முடமாகிய வாலிபர் உயர்நிலை பள்ளிப்படிப்பில் வெற்றிபெற்று சாதனை

சவுதி அரேபியாவில் கடந்த 7 வருடங்களுக்கு முன் நடைபெற்ற வாகன விபத்து ஒன்றில் சிக்கி நிரந்தர முடமாகி படுத்த படுக்கையான 22 வயது வாலிபர் ஒருவர் உயர்நிலை டிப்ளமோ படிப்பில் வெற்றிகரமாக தேறியுள்ளார்.

அப்துல் ரஹ்மான் மகாவி என்ற அந்த வாலிபரின் கல்வி ஆர்வத்தையும் மனோதிடத்தையும் பாராட்டும் வகையில் கல்வி அமைச்சர் அஹமது அல் ஈஸா அவர்களே நேரில் வருகை தந்து வெற்றிபெற்றதற்கான சான்றிதழை வழங்கி வாழ்த்தினார்.

வெற்றியாளர் அப்துல் ரஹ்மான் மகாவி கூறியதாவது, தொடர்ந்து கம்ப்யூட்டர் எஞ்சினியரிங் படிக்க விரும்புகிறேன். முடமாகி செயற்கை சுவாசத்தில் வாழும் என்னாலேயே படிக்க முடியும் போது உங்களால் ஏன் முடியாது என பிறருக்கு தன்னம்பிக்கை உத்வேகம் அளிப்பதற்காகவே நான் படிப்பை தொடர விரும்புகின்றேன் என தெரிவித்தார்.

Source: Saudi Gazette
தமிழில்: நம்ம ஊரான்
 

Sunday, July 1, 2018

துபையில் வாகன பார்க்கிங் டிக்கெட்டை இனி டேஷ்போர்டில் வைக்கத் தேவையில்லை!

அதிரை நியூஸ்: ஜூலை 01
துபையில் ஈ-பார்க்கிங் டிக்கெட் சோதனைகள் துவங்கியது, டேஷ்போர்டில் பார்க்கிங் டிக்கட் வைக்கத் தேவையில்லை

துபையில் பார்க்கிங் டிக்கெட்டுகளை டிக்கெட் பரிசோதனையாளர்களின் பார்வையில் படும்படி டேஷ்போர்டு முன்புறம் வைக்க வேண்டும் என்ற நிலை படிப்படியாக மாற்றப்படவுள்ளது. தற்போது ஈ-டிக்கெட் முறை ஆரம்பமாக அல் ஜாபிலிய்யா இமிக்கிரேசன் அலுவலகம் அருகே துவக்கப்பட்டுள்ளது.

புதிய முறைப்படி பார்க்கிங் மீட்டர்களில் பொருத்தப்பட்டுள்ள தொடுதிரைகளில் உங்களுடைய வாகனத்தின் எண் மற்றும் பார்க்கிங் செய்ய விரும்புகின்ற கால அளவை தேர்வு செய்துவிட்டு காசுகளாகவோ அல்லது ப்ரீபெய்டு கார்டுகள், நோல் கார்டுகள், எம்பார்க்கிங், ஸ்மார்ட் பார்க்கிங் சிஸ்டம் வழியாகவோ கட்டணம் செலுத்தியவுடன் ரசீது வரும், அது உங்களுக்கு கட்டணம் செலுத்தியதற்கான சான்றுச்சீட்டாக மட்டுமே பயன்படும். இதை முன்புபோல் டேஷ்போர்டுகளில் வைக்கத் தேவையில்லை.

அதேபோல் பார்க்கிங் டிக்கெட் பரிசோதகரும் தன்னுடைய வாகனத்தில் இருந்தவாறே பார்க்கிங் பகுதிகளுக்குள் சுற்றி வருவார். அவருடைய வாகனத்தில் பொருத்தப்பட்டிருக்கும் தானியங்கி கருவி யாருடைய வாகனத்திற்கு பார்க்கிங் டிக்கெட் கட்டணம் செலுத்தப்படவில்லை, யாருடைய பார்க்கிங் டிக்கெட் புதுப்பிக்கப்படவில்லை என்பதை அதுவே சரிபார்த்துக் கொள்ளும். இந்த பார்க்கிங் கட்டணத்தை வேறு வாகனத்துடன் பகிர்ந்து கொள்ள இயலாது.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்
 

எமிரேட்ஸ் விமானங்களில் கேபின் பேக்கேஜ்களுக்கு புதிய கட்டுப்பாடு!

அதிரை நியூஸ்: ஜூலை 01
குறிப்பிட்ட சில நாடுகளுக்கு செல்லும் எமிரேட்ஸ் விமானங்களில் கேபின் பேக்கேஜ்களுக்கு புதிய கட்டுப்பாடு

அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்து ஆகிய நாடுகளிலிருந்து அல்லது அதன் வழியாக வரும் அல்லது போகும் எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ்களில் கேபின் பேக்கேஜ் எனப்படும் கை பைகளில் குறிப்பிட்ட சில பொருட்களை கொண்டு செல்ல புதிய கட்டுப்பாடுகள் பாதுகாப்பு காரணங்களை தொடர்ந்து பிறப்பிக்கப்பட்டுள்ளன.

எமிரேட்ஸ் விமானங்களில் அறிவிக்கப்பட்டுள்ள இந்த புதிய கட்டுப்பாடுகள் இதே தடத்தில் பறக்கும் பிற விமானச் சேவைகளுக்கும் பொருந்தும். இப்புதிய உத்தரவுகள் கடந்த ஜூன் 20 ஆம் தேதி முதல் அமெரிக்கா அரசு பிறப்பித்த உத்தரவை தொடர்ந்து இங்கும் அமுலுக்கு வந்துள்ளது.
தூள் வடிவ பொருட்கள்:

350 மில்லி லிட்டர் அல்லது மில்லி கிராமிற்கு மேற்பட்ட மாவு, காபித்தூள், நறுமணம் மற்றும் மசாலா பொருட்கள், காஸ்மெட்டிக் பொருட்கள் மற்றும் பாலுணவு பொருட்கள் போன்ற தூள் நிலையில் உள்ள பொருட்களை கேபின் பேக்கேஜில் வைத்து கொண்டு செல்ல தடைவிதிக்கப்படுகிறது. செக்கின் பேக்கேஜ் (Check-In) எனப்படும் பயணப் பொதியினுள் வைத்து கொண்டு செல்ல தடையில்லை.

துபை, மிலன் (இத்தாலி), ஏதென்ஸ் (கிரீஸ்) போன்ற சர்வதேச விமான நிலையங்களிலும் இப்பொருட்கள் கொண்டு வருவது கண்டுபிடிக்கப்பட்டால் பயணிகளிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டு குப்பையில் வீசப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குழந்தைகளின் பால் பவுடர், தூள் வடிவில் உள்ள மருந்துகள் மற்றும் மனித சாம்பல் (அஸ்தி) ஆகியவை இச்சட்டத்திலிருந்து விளக்களிக்கப்பட்டுள்ளது. டூட்டி ப்ரீ ஷாப்புகளில் வாங்கப்படும் தூள் வடிவிலான பொருட்கள் ஏதுமிருந்தால் அவை டூட்டி ப்ரீ கடைகளில் வாங்கப்பட்டதற்கான அத்தாட்சியுடன் மூடிமுத்திரையிடப்பட்ட பைகளில் மட்டுமே கொண்டு வர அனுமதிக்கப்படுவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2018 ஜனவரி முதற்கொண்டே 'ஸ்மார்ட் பேக்ஸ்' எனப்பாடும் பைகளை அமெரிக்க விமான நிலையங்களில் அனுமதிப்பதில்லை ஆனால் அவற்றிலுள்ள 'லித்தியம் பேட்டரிகளை' அகற்றினால் மட்டுமே கொண்டு செல்ல அனுமதியுண்டு. மிகச்சிறிய அளவிலுள்ள ஸ்மார்ட் பேக்குகளை பேட்டரிகள் அணைத்து வைக்கப்பட்ட நிலையில் கொண்டு செல்லலாம்.

இங்கிலாந்து அரசு குழந்தைகளுக்கான பால் பவுடர், பசும் பால், குழந்தைகளை சுத்தம் செய்யும் கிருமி நாசினி தண்ணீர், சோயா பால் மற்றும் குழந்தைகளின் இதர வகை உணவுகளையும் கொண்டு செல்ல அனுமதிக்கின்றது ஆனால் குழந்தையும் சேர்ந்து பயணிக்க வேண்டும் என்ற நிபந்தனை உண்டு.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

கத்தார் நாட்டு பிரஜைகள் ஹஜ் யாத்திரைக்கு முன்பதிவு செய்திட தனி இணையதளம்!

அதிரை நியூஸ்: ஜூலை 01
கத்தார் நாட்டிற்கும் சவுதி உள்ளிட்ட சில வளைகுடா நாடுகளுக்கும் இடையில் ராஜிய உறவுகள் கடந்த வருட ரமலான் மாத மத்தியிலிருந்து துண்டிக்கப்பட்டுள்ளன. இந்த வேண்டத்தகாத சச்சரவுகளால் கடந்த வருட ஹஜ் யாத்திரையை கத்தார் நாட்டு முஸ்லீம்கள் நிறைவேற்ற இயலாமல் போனாது.

இந்த வருடம் ஹஜ்ஜை நிறைவேற்ற விரும்பும் கத்தார் நாட்டு மக்களுக்காக சவுதி அரசின் ஹஜ் மற்றும் உம்ராவுக்கான அமைச்சகம் கத்தார் நாட்டு மக்கள் ஆன்லைன் வழியாக முன்பதிவு செய்திட ஏற்ற வகையில் இணையதளம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளதுடன் இது எதிர்வரும் துல் காயிதா மாதம் முதல் இயங்கும் எனவும் அறிவித்துள்ளது.

இந்த இணைய தளம் வழியாகவே கத்தார் நாட்டு பிரஜைகள் மக்கா, மதினா மற்றும் பிற புனித இடங்களில் தங்குமிடம், வாகன உள்ளிட்ட பிற உதவிகளையும் தேர்வு செய்து கொள்ளலாம். கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் கத்தார் நாட்டு பிரஜைகள் கத்தார் ஏர்லைன்ஸ் தவிர்த்து வேறு எந்த விமானச் சேவைகளின் வழியாகவும் ஜித்தா விமான நிலையத்தில் மட்டும் வந்திறங்கலாம் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளனர்.

Source: Saudi Gazette
தமிழில்: நம்ம ஊரான்

அமீரகத்தில் அந்நியர்களை அனுமதியில்லாமல் வீடியோ, புகைப்படம் எடுத்தால் 5 லட்சம் திர்ஹம் அபராதம்!

அதிரை நியூஸ்: ஜூலை 01
அமீரக பெடரல் சைபர் கிரைம் சட்டம் எண். 5 / 2012 இல் குறிப்பிட்டுள்ளபடி, அமீரகத்தில் வாழ்பவர்கள் (ரெஸிடென்ட்ஸ்) எவராவாது அடுத்தவர்களின் அந்தரங்க உரிமைகள் பாதிக்கும் வகையில் நடந்து கொண்டால் குறைந்தது 150,000 முதல் 500,000 திர்ஹம் வரை அபராதம் கட்ட நேரிடுவதுடன் 1 வருடம் சிறை தண்டனையையும் அனுபவிக்க நேரிடும் எனக் கூறுகிறது.

மேற்காணும் சட்டப்படி கடந்த வெள்ளிக்கிழமை அன்று ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக துபை போலீஸ் அறிவித்துள்ளது, ஏன் இந்த கைது? அவர் செய்த குற்றமென்ன?

துபை போக்குவரத்து துறையின் (RTA) தலைமை வாடிக்கையாளர் மையத்திற்கு (Customer happiness center head quarters) வருகை தந்த ஒருவர் அங்கு அழுது கொண்டிருந்த ஒருவரை வீடியோ எடுத்து சோஷியல் மீடியாக்களில் பகிர்ந்தார். அவர் நினைத்தது போலவே லைக்ஸ் & ஷேர்களை அள்ளினார் ஆனால் தவறான தகவலை பரப்பியதற்காக போலீஸார் அவரை அள்ளிக் கொண்டு சென்றனர்.

Cars Taxi எனப்படும் தனியார் டேக்ஸி நிறுவனத்தில் டிரைவராக பணியாற்றும் ஒருவருக்கு 20,000 திர்ஹம் அபராதம் வந்துள்ளது. இந்த அபராதம் ஏன்? எதற்காக? எப்படி? என விசாரிக்க அந்த டிரைவரின் உறவினர் துபை போக்குவரத்து துறையின் தலைமை வாடிக்கையாளர் மையத்திற்கு வந்துள்ளார். வந்தவர் கார்ஸ் டேக்ஸியின் ஊழியர் அல்ல ஆனால் வீடியோ எடுத்தவர் கார்ஸ் டேக்ஸியின் டிரைவர் தன் மீது விதிக்கப்பட்ட அபராதத்திற்காக அழுகிறார் என பதிவு போட்டுள்ளார். 20,000 திர்ஹம் அந்த டிரைவரின் மீது எப்படி வந்தது என்பது குறித்த விசாரணையை தற்போது நிழுவையில் உள்ளதாக துபை போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.

விளைவு, நிழுவையில் ஒரு விசாரணை குறித்து தவறான தகவல் பரப்பியதாக துபை போக்குவரத்து துறை துபை போலீஸாரிடம் புகார் தெரிவிக்க தவறான தகவலை பரப்பியது மற்றும் (அழுத) அந்நபரின் அனுமதியின்றி வீடியோ எடுத்தது ஆகிய குற்றங்களுக்காக சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் சம்பந்தப்பட்ட வீடியோ பதிவாளர்.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

அரசுப் பள்ளியில் புதிதாக சேர்ந்த மாணவர்களுக்கு தங்க நாணயம், ஊக்கத்தொகை பரிசு வழங்கும் விழா!

தஞ்சாவூர் ஜூலை.01-
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே  அரசுப்பள்ளியில் புதிதாக சேர்ந்த மாணவர்களுக்கு தங்கநாணயம் வழங்கும் விழாவில் 28 நபர்களுக்கு தங்க நாணயம் மற்றும் தலா ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட துலுக்கவிடுதி வடக்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடப்பு ஆண்டு அரசுப்பள்ளியில் சேர்ந்த மாணவ,  மாணவியர்களுக்கு தங்கநாணயம், ஊக்கத்தொகை, மற்றும் இலவச பள்ளிச்சீருடை வழங்கும் விழா சனிக்கிழமை மாலை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு வட்டார கல்வி அலுவலர் கோ.ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். அண்ணா பரமசிவம் வரவேற்றார். பட்டுக்கோட்டை கல்வி மாவட்ட அலுவலர் கே.பாண்டியன் முன்னிலை வகித்துப் பேசினார்.
இவ்விழாவில் பேராவூரணி எம்.எல்.ஏ மா.கோவிந்தராசு கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றி பள்ளி மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.

அரசுப்பள்ளியில் பள்ளி மாணவர்களை சேர்க்க பொதுமக்கள் முன்வர வேண்டும் என ஊக்கப்படுத்தும் வகையில் அப்பகுதியை சேர்ந்த துலுக்கவிடுதி வடக்கு பள்ளி வளர்ச்சிக்கரங்கள் மற்றும் நேரு நற்பணி மன்ற முன்னாள், இன்னாள் இளைஞர்கள் இணைந்து தங்கநாணயம் வழங்கினர். மொத்தம் 28 நபர்களுக்கு தலா ஒரு கிராம் தங்கநாணயம் மற்றும் முன்னாள் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் செந்தில்குமார் மூலம் தலா ஆயிரம் ரூபாயும்  வழங்கப்பட்டது. 57  நபர்களுக்கு பார்த்தசாரதி என்பவர் நன்கொடையாக தந்த  இலவச பள்ளிச்சீருடையும் வழங்கப்பட்டது.

இவ்விழாவில் பெற்றோர் ஆசிரியர் கழகத்தலைவர் பிரகலாதன், ராமையன், ராமநாதன், ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் வேலு, ஓய்வு பெற்ற ஆசிரியர் எஸ்.கணேசன், கோவி.இளங்கோ, கொன்றை கணேசன், கவிஞர் கே.கான்முகமது, பள்ளி மேலாண்மை குழு தலைவி ச.ஆனந்தி, பள்ளி வளர்ச்சி குழு தலைவர் எஸ்.செல்வராசு, துணைத்தலைவர் பி.மாரிமுத்து, பெ.ஆ.கழக துணைத்தலைவர் ரெ.துரைமாணிக்கம், அன்னையர் குழு தலைவி ஏ.மகேஸ்வரி மற்றும் பொதுமக்கள், கிராமத்தினர்  மாணவ, மாணவியர்கள் உள்ளிட்ட  பலர் கலந்து கொண்டனர். நிறைவாக பள்ளி தலைமையாசிரியை வாசுகி நன்றி கூறினார். 

கிராம மக்கள் சார்பில், 'பள்ளியை உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும். பள்ளிக்கு பாதுகாப்பாக சுற்றுச்சுவர் அமைத்து தரவேண்டும்' என வலியுறுத்தப்பட்டது.