.

Pages

Showing posts with label சுற்றுலா. Show all posts
Showing posts with label சுற்றுலா. Show all posts

Monday, March 19, 2018

சுற்றுலா பயணிகளை கவர்ந்திழுக்கும் அரியமான் பீச் (படங்கள்)

அதிராம்பட்டினம், மார்ச் 19
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தில் இருந்து ஈஸ்ட் கோஸ்ட் சாலை வழியாக 175 கிலோ மீட்டர் தொலைவில் இராமேஸ்வரம் செல்லும் பிராதன சாலையில் பாம்பனிலிருந்து 11 கிலோ மீட்டர் முன்பாக இடது பக்கமாக பிரியும் குறுக்கு சாலையை கடந்து சென்றால் அங்கிருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்தில் அரியமான் கடற்கரை பகுதி அமைத்துள்ளது. பாக் நீரிணைப்பின் ஒரு பகுதியில் 150 மீட்டர் அகலமும், 2 கிலோ மீட்டர் நீளமும் உடைய இந்த கடற்கரைக்கு வார இறுதி நாட்களை கழித்திட பெருவாரியான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர்.

அமைதியானச் சூழல், மென்மையாக தவழ்ந்துவரும் குளிர்காற்று, மைதாமாவு போன்று மணற்பரப்பை கொண்ட பரந்து விரிந்து கடற்பகுதி, தவழ்ந்து வரும் மிதமான அலை, கண்ணாடி போன்று பளபளக்கும் கடல்நீர் ஆகிய அனைத்தும் அமையப்பெற்றதுதான் அரியமான் கடற்கரை. இங்கு கூட்டம் கூட்டமாக வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியுடன் உற்சாகக் குளியல் போடுகின்றனர்.  இதில், தமிழகத்தின் இராமநாதபுரம், இராமேஸ்வரம், புதுக்கோட்டை, தஞ்சை, நாகப்பட்டினம், திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான சுற்றுலாப் பயணிகள் விடுமுறை தினங்களில் அடிக்கடி வந்து செல்கின்றனர். இவர்களுக்கு நாங்களும் சளைத்தவர்கள் இல்லை என்பதுபோல், அதிராம்பட்டினம் பிரமுகர்கள் இந்த கடற்கரைக்கு படையெடுத்து வருகின்றனர். ஒருமுறை அங்கு சென்று திரும்பியவர்கள் மீண்டும் மறுமுறை செல்லத் தவறியதில்லை.

தொலை தூரத்திலிருந்து இங்கு வருகை தரும் பெரும்பாலானோர் தாங்கள் எடுத்துவரும் உணவை குளித்து முடித்தவுடன் ஒன்றாக அமர்ந்து சாப்பிடுகின்றனர். அதேபோல், இந்த கடற்கரைக்கு வருகை தரும் சிலர் சமைப்பதற்கு தேவையான சாமான்களை எடுத்து வந்து சொந்தமாக சமைத்தும் சாப்பிடுகின்றனர். சமைப்பதற்கு ஏற்ற பரந்த இடம் இங்கு காணப்படுவதால் உணவு பிரியர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்துகின்றன.

சமையலுக்கு தேவையான அனைத்து சாமான்களையும் மறக்காமல் எடுத்து செல்வது நமக்கு ஏற்படும் வீண் அலைச்சலோடு மன உளைச்சலையும் தவிர்க்க உதவும். இங்கு சுற்றுலா வருவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிப்பதாக அங்கு கழிவறை - குளியலறையை பராமரிக்கும் நண்பர் தெரிவித்தார். மண்டபம் ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்தின் கீழ் இந்த கழிவறை - குளியலறை கட்டப்பட்டிருந்தாலும் சிறுநீர் கழிக்க ரூ. 5/- ம், குளிக்க ரூ.10/- ம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. கடலில் குளித்துவிட்டு அருகில் உள்ள மற்றுமொரு தனியார் நீச்சல் குளத்தில் ('குஷி பீச்' என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது) மீண்டும் ஒருமுறை குளித்து மகிழ்கின்றனர். இங்கு,  சிறுவர்களுக்கு ரூ. 30/-ம், பெரியவர்களுக்கு ரூ.60 ம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இங்கு, நீச்சல் குளம், செயற்கை அருவி நீருற்று, குழாய் நீருற்று ஆகியவை அமைந்துள்ளது.

இந்த கடற்கரைக்கு சுற்றுலா வருவோர், இங்கிருந்து அடுத்தடுத்து அமைந்துள்ள சீனியப்பா கடற்கரை, பாம்பன் பாலம், பாம்பன் படகு சவாரி, முன்னாள் ஜனாதிபதி ஏ.பி.ஜெ அப்துல் கலாம் மணி மண்டபம், அவரது இல்லம், அங்கு அமைந்துள்ள அவரது நினைவுப் பொருட்கள்,  இராமேஸ்வரம், தனுஸ்கோடி, அரிய வகை நீர்வாழ் உயிரினங்களை உள்ளடக்கிய அழகிய தீவுகள் மற்றும் மாங்குரோவ் காடுகள் அமைந்துள்ள மன்னார் வளைகுடா தேசிய பூங்கா ஆகிய பகுதிகளை காணச்செல்ல தவறியதில்லை.

வீட்டிலிருந்து காலையில் புறப்பட்டு, இரவில் பாதுகாப்பாக வீடு திரும்ப நினைப்போர், குறைந்த செலவில் பகல்நேர பட்ஜெட் சுற்றலாவாக செல்ல விரும்பும் பயணிகளுக்கு ஏற்ற வகையில் அமைந்துள்ளது அரியமான் கடற்கரை மற்றும் அதனைச் சுற்றி அமைந்துள்ள சுற்றுலாப் பகுதிகள்.

- முகமது அஜீம் (மாணவச் செய்தியாளர்)
 

Sunday, October 22, 2017

அதிரையில் வாழும் பேச இயலாத - காது கேளாதோரின் ஒரு நாள் சுற்றுலா (படங்கள்)

அதிராம்பட்டினம், அக். 22
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தில் வாழும் மாற்றுத்திறனாளிகள் பேச இயலாத - காது கேளாதோர் நல சங்கத்தினர் ஒரு நாள் சுற்றுலாவாக இராமேஸ்வரம் பேக்கரும்பில் அமைந்துள்ள மறைந்த முன்னாள் ஜனாதிபதி ஏ.பி.ஜெ அப்துல் கலாம் மணி மண்டபத்திற்கு சென்றனர்.

சங்கத் தலைவர் ஹாஜா ஷெரீப், துணைத் தலைவர் சிராஜுதீன், பொதுச்செயலாளர் நூருல் அமீன், இணைச்செயலாளர் உமர் தம்பி, பொருளாளர் மன்சூர் அகமது, முன்னாள் நிர்வாகி ஜெஹபர் சாதிக் உள்ளிட்டோர் அடங்கிய 16 பேர், இன்று ஞாயிற்றுக்கிழமை காலை அதிராம்பட்டினத்திலிருந்து வேனில் புறப்பட்டு இராமேஸ்வரம் சென்றனர். அங்குள்ள முன்னாள் ஜனாதிபதி ஏ.பி.ஜெ அப்துல் கலாம் மணி மண்டபம், அரியமான் கடற்கரை (குஷி பீச்) பாம்பன் பாலம், பாம்பன் படகு சவாரி, இராமேஸ்வரம், தனுஸ்கோடி, அரிய வகை நீர்வாழ் உயிரினங்களை உள்ளடக்கிய அழகிய தீவுகள் மற்றும் மாங்குரோவ் காடுகள் அமைந்துள்ள மன்னார் வளைகுடா தேசிய பூங்கா ஆகிய பகுதிகளை கண்டு ரசித்தனர்.
 

Friday, December 23, 2016

ரோமில் ரோமனாக இருங்கள், சுற்றுலா பயணிகளுக்கு அறிவுரை !

ம் நண்பர், உறவினர், ஏன் நாமும் வெளி நாடுகளுக்குச் செல்லும்போது அங்குள்ள பண்பாடுகளை தெரியாமல் சங்கடங்கள் சந்திக்க நேரிடுகிறது. ஒரு பழமொழி சொல்லுவார்கள், 'ரோமில் இருக்கும்போது ரோமனாக மாற வேண்டுமென்று'. ஆகவே செல்லும் நாடுகளின் பழக்க வழக்கங்களை தெரிந்து கொண்டால் சங்கடங்கள் தவிர்க்கலாம்.

ஐரோப்பிய நாடுகளில் ஆதிக்கம் செலுத்திய இங்கிலாந்து மக்கள் பஸ், ரயில், வணிக வளாகம் ஆகியவற்றில் வரிசைப் படி நிர்ப்பதினை காணலாம். ஒரு பஸ் நிறுத்தத்தில் ஒருவர் தான் நன்றிருந்தாலும் அடுத்தவர் முந்தி சென்று ஏறமாட்டார். வரிசையில் நிற்கும் பொது ஒட்டி, இடித்துக் கொண்டு நிற்கவும் மாட்டார்கள். ஆனால் இங்கு ரூபாய் நோட்டினை மாற்றுவதற்கு வயதான மூதாட்டியார், பெரியவர் என்றும் பாராது  இடித்து தள்ளிக் கொண்டு சென்றதினை தொலைக் காட்சி படம் பிடித்துக் காட்டியது நவம்பர் மாதத்தில்.

பின்லாந்து நாட்டில் பெரும்பாலான வீடுகள் மரத்தினால் அமைக்கப் பட்டிருக்கும். வீட்டினை சுற்றி நீர் நிலை ஓடிக் கொண்டிருக்கும். அங்கு ஒரு ரம்மியமான சூழ்நிலை காணலாம். அவர்கள் அதிர்ந்து பேசுவதினை விரும்பமாட்டார்கள். காலணி அணிந்து கொண்டு வீட்டுக்குள் வருவதினையோ, விருந்தாளிகள் புகை பிடிப்பதினையோ விரும்பவும் மாட்டார்கள்.

பிரான்ஸ் நாட்டில் மிகுந்த மரியாதையுடன் ஐயா(ஸார்), மேடம் என்று அழைப்பார்கள். விருந்தாளிகளை உபசரிக்கும் போது சம்பிரதாயத்திற்கு முத்தமிடுவார்கள்.

ஜெர்மன் நாட்டினர் சுறுசுறுப்புடன், ஒழுக்கத்துடனும், கட்டுப் பாடுகளுடனும் நடந்து கொள்வார்கள். போக்குவரத்து விதிகளை கடுமையாக அனுசரிப்பார்கள். நேரந்தவராமை அவர்களுக்கு முக்கியம். ஒரு இடத்தில் மீட்டிங் என்றால் 10 நிமிடங்கள் முன்பாகவே வந்து விடுவார்கள்.

இத்தாலி நாட்டில் பிட்ஸா, பாஸ்டா, ஆண்டிபாஸ்டி போன்ற உணவு வகைகள் எந்த மூளை முடுக்குகள் உள்ள கடைகளிலும் கிடைத்தும். சாப்பிட்டவுடன் சர்வர் குபில்லுக் கொடுக்கும் பில்லுக்கு ஒவ்வொரு உணவிற்கும் தனித்தனியே பட்டியல் போட்டு கொண்டு வரச்சொல்லலாதீர்கள், மாறாக சாப்பிட்டவர் எண்ணிக்கையினை மொத்த பில்லிலிருந்து வகுத்தால் தெரிந்து விடும் ஒவ்வொரு உணவிற்கான சார்ஜ்.

போலந்து நாட்டில் பெண்களுக்கு மிகுந்த மரியாதை கொடுப்பார்கள். காரில் வரும் விருந்தாளிகளுக்கு அவர்கள் கீழே இறங்க வசதியாக கார் கதவினை திறந்து விடுவார்கள், அவர்கள் கோட்டினை கழட்டுவதிற்கு உதவி செய்வார்கள். பெண்கள் ஆண்களிடம் பயமில்லாமல் பழகலாம். பெரும்பாலும் முறைகேடாக நடக்க மாட்டார்கள்.

ஸ்பெயின் நாட்டினருக்கு சப்தம் சக்கரைப் பொங்கல் போன்றது. மோட்டார் சைக்கிள், கார் சப்தமாக செல்வதும், தொலைக்காட்சிப் பெட்டிகள் அலறலும் நாம் கேட்கலாம். ஹோட்டலில் தங்குபவர்களுக்கு நடு இரவில் வேலைக் காரர்கள் குப்பைப் பெட்டியினை இழுத்துச் செல்லும் சப்தம் கேட்கலாம். அங்கு ஒருவருக்கொருவர் சப்தமாக பேசுவதை காணலாம்.

பிரேசில் நாட்டினர் மாசற்ற பழக்க வழக்கங்களை கொண்டிருப்பர். ஒருவரை பார்க்கும்போது, அவர் குளித்து,  தலைவாரி, நேர்த்தியான ஆடை உடுத்தி, வாசனை திரவியம் தடவி காணப் படுவார். அவர்கள் போன்று நீங்களும் இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பார். கடற்கரை பீச்சில் குளிப்பதற்கும், சூரிய ஒளியில் பீச்சில் ரசிப்பதற்கும் விரும்புவர். ஆனால் கோவா பீச்சில் இருப்பது போல பிக்கினி மாதுகளை பார்க்க முடியாது. எல்லா நகரங்களிலும் உள்ளது போன்ற குற்ற செயல்களை காணலாம். சமீபத்தில் ரியோ ஒலிம்பிக் போட்டியினை காண வந்த ரசிகர்களிடமிருந்து விலையுயர்ந்த ரோலக்ஸ் கைக்கெடியாரம், செல் போன், கைப்பை போன்றவைகளை பறித்துச் செல்லும் இளைஞர்களைக் காணலாம்.

மெக்ஸிகோவில் ஆங்கிலம் பேச மாட்டார்கள். ஸ்பேனிஷ் மொழியில் தான் பேசுவார்கள். அமெரிக்காவில் கூட கலிபோர்னியா மாநிலத்தில் பலர் ஸ்பானிஷ் மொழி பேசுவதினைக் காணலாம். எந்த வேலையையும் உடனுக்குடன் செய்ய மாட்டார்கள். 'மன்னா' என்ற வார்த்தை வருவதினை காணலாம். மன்னா என்றால் நாளை என்று அர்த்தமாகும். அதாவது 'இன்று போய் நாளை வா' என்று எடுத்துக் கொள்ளலாம். பகல் சாப்பாட்டிற்கு மதியம் ஒரு மணிக்கு வாருங்கள் என்றால் நாம் தாராளமாக மாலை 2 மணியளவில் செல்லாம்.

அமெரிக்காவினைப் பொறுத்த மாட்டில் நீங்கள் விட்டு விட்டுப் பேசுவதினை எதிர் பார்ப்பார்கள், ஏனென்றால் இடையிடையே அவர்களும் பேசுவதினை விரும்புவார்கள். உங்கள் உரையாடலோடு சில பழமொழிகளைச் சொன்னால் அதனை ஞாபகப் படுத்தி நண்பர்கள் கூட்டத்தில் சொல்லுவார்கள். நீங்கள் லிப்ட்டில் செல்லும் போது அவர்கள் பேசிலாலொழிய நாம் பேசக் கூடாது. அவர்கள் முகம் நோக்கிப் பார்க்கக் கூடாது. சிறுவர், சிறுமிகளுடன் பெற்றோர் அனுமதியில்லாமல் உரையாடல் செய்யவோ, தொடவோ கூடாது. காவலர்கள் உங்களை எச்சரித்தால் உடனே கைகளை  மேலே தூக்க வேண்டும். இல்லையென்றால் சுடப்படுவீர் என்பதினை தொலைக்காட்சியில் பார்த்திருப்பீர்கள்.

ஆஸ்திரேலியா மக்கள் நட்புடனும், திறந்த மனத்துடனும் பழகுவார்கள். ஆகவே தான் அகதிகளை வரவேற்று அவர்களுக்கென்று ஒரு தனி புகலிடம் கொடுத்து பராமரிக்கின்றார்கள். இன்று அங்கு இருக்கும் ஆசிய, அராபிய மற்றும் ஆப்பிரிக்கா மக்கள் அவ்வாறு குடி பெயர்ந்தவர்கள் தான். இந்திய, இலங்கை உணவுகளை விரும்பி சாப்பிடுவார்கள். அவர்களுக்கு திறந்த வெளியில் சாப்பிடுவது(பார்பிக்கு) மிகவும் பிடிக்கும். அப்படிப் பட்ட விருந்திற்கு உங்களை அழைத்து 'நீங்கள் ஒரு பிளேட்' கொண்டு வாருங்கள் என்றால் வெறும் தட்டுடன் சென்று விடாதீர்கள். நீங்களும் ஒரு உணவு வகையினை கொண்டு வரவேண்டும் என்று அர்த்தமாகும். சட்டம், நீதிக்கு மிகுந்த மதிப்பளிப்பார்கள்.

சீன நாட்டிற்கு சென்றால் சீனர் உணவிற்கு என்ன கிடைக்கின்றதோ அதனை உண்பர். சீனாவில் 2015 ஆம் ஆண்டு உணவிற்காக 40 லட்சம் பூனைகளை கொண்டிருக்கின்றார்கள் என்றால் பாருங்களேன். ஆகவே விருந்தாளிகளாக செல்லும்போது அவர்கள் உணவினை நாதவிர்ப்பது நாசுக்காக தவிர்ப்பது நல்லது. அவர்கள் பரிசுப் பொருட்களை மிகவும் விரும்பி பெறுவதுடன், உங்கள் முன்னாள் அதனைப் பிரித்துப் பார்க்க மாட்டார்கள். ஆனால் நிச்சயமாக நீங்கள் சென்றதும் பார்ப்பார்கள்.

ஜப்பான் நாட்டு மக்கள் எதிலும் மாசற்ற சடங்குகளை எதிர்பார்ப்பார்கள். சுத்தம், சுகாதாரத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள். உங்கள் காலனியை வெளியே விட்டு விட்டு, வீட்டுக்குள் அணிந்து செல்லும் காலணியினை போட்டுக் கொண்டு செல்ல வேண்டும். கழிப்பறைக்கு செல்லும்போது அதற்கான பிரத்தியோக காலணிகளை அணிந்து கொள்ள வேண்டும். மறந்தும் அதனை வீட்டுக்குள் உபயோகிக்க வேண்டாம். அவைளை வீட்டினை விட்டு வரும்போது அந்த அந்த இடத்தில் விட்டு விட்டு வரவேண்டும்.
         
தாய்லாந்து மக்கள் உங்கள் உணர்வுகளை கட்டுக் கோப்புடன் வைத்துக் கொள்ள விரும்புவார்கள். உங்கள் கோபத்தினை எதிர்பார்க்க மாட்டார்கள். அங்குள்ள புன்னைகைக்கும் புத்தர் சிலையினைப் பார்த்து, பார்த்து அவர்களுக்கு அமைதியுடனான வாழ்வு பழக்கப் பட்டுப் போய் விட்டது.

நான் மேலே கூறிய அறிவுரைகள் சிறு துளிகளே, நீங்கள் அறிந்து கொள்ள வேண்டியது கடலளவே.

டாக்டர் ஏ.பீ. முகமது அலி, பிஎச்,டி, ஐ.பீ.எஸ்(ஓ)
ஓய்வுபெற்ற மூத்த காவல்துறை அதிகாரி 
எழுத்தாளர்  
சமூக ஆர்வலர்

Tuesday, August 30, 2016

பெருநாள் விடுமுறையில் கண்ணுக்கும், மனதுக்கும் இதமளிக்கும் ஓமனின் 'சலாலா' படங்கள்

அதிரை நியூஸ்: ஆகஸ்ட் 30
பசுமை போர்த்திய கேரளா மாநிலத்தை 'கடவுளின் தேசம்' (God's Own Country) என மலையாளிகள் தற்பெருமை பேசுவதை பார்த்திருப்போம், இதையே செயற்கையாய் விளைத்திட துபை உட்பட பல அரபு நாடுகள் பில்லியன் கணக்கில் செலவிட்டு வருவதையும் நிதர்சனமாய் பார்த்து வருகிறோம் ஆனால் இப்படி எத்ததைய முயற்சியுமின்றி, செலவுமின்றி கேரளாவின் சிறுபகுதியை பெயர்த்தெடுத்து பொருத்தியது போல் அதே இயற்கை பசுமை சுகத்தை தன்னகத்தே சுமந்துள்ளதென்றால் நம்ப முடிகிறதா?

ஆம், ஓமனின் 'சலாலா' (Salalah) எனும் இயற்கை மலைப் பிரதேசமே அது. நல்ல கன்டிஷனில் சொந்த வாகனம் வைத்திருப்போர் அல்லது விமானத்தில் சென்று வர வசதியுடையோர் எதிர்வரும் ஹஜ் பெருநாள் விடுமுறையில் சென்று வர அற்புதமானதொரு சுற்றுலாத்தலம்.

என்ன நண்பர்களே! குடும்பத்துடன் அல்லது நண்பர்களுடன் செல்ல ரெடியா? மறக்காமல் உங்கள் பாஸ்போர்ட்டை எடுத்துச் செல்லுங்கள், எல்லையில் விசா கட்டணம் செலுத்த வேண்டும் என்பதையும் நினைவில் கொள்க!

இதோ உங்களுக்காக சில படங்கள்...
  
 
 
 
 
 
 
 
குறிப்பு: 
இந்திய மன்னர்களில் இஸ்லாத்தை முதன்முதலில் தழுவிய, இந்தியாவில் முதல் மஸ்ஜிதை கட்ட உத்தரவிட்ட, நபி (ஸல்) அவர்களை நேரில் சந்தித்ததாக நம்பப்படும் மன்னர் சேரமான் பெருமாள், நபி (ஸல்) அவர்களை சந்தித்துவிட்டு மீண்டும் கேரளா திரும்பும் வழியில் உடல் சுகவீனமற்று மரணிக்க, இதே சலாலாவில் தான் அடக்கம் செய்யப்பட்டுள்ளார். (தகவல்: CMN சலீம் அவர்கள்)

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

Monday, August 15, 2016

அமீரக விடுமுறையில் 'ஜபல் அல் ஜைஷ்' மலையேற்றம் ! (படங்கள் )

மீண்டும் ஒரு பயணப்புராணம் மூலமாக உங்கள் அனைவரையும் 'உசுப்பேத்துவதில்' பேரானந்தம்.

புனித ரமலானிலேயே ஹஜ் பெருநாள் விடுமுறையில் ஊருக்குச் செல்ல பலரும் திட்டமிட்டு தயாராகி இருப்பீர்கள் என்றாலும் மலையளவு உயர்ந்துள்ள விமான கட்டணத்தால் ஊர் போகும் பயணத்தை தள்ளிப் போட்டுள்ளவர்களுக்காக ராஸ் அல் கைமாவின் 'ஜபல் அல் ஜைஷ்' மலைக்கு ஜாலி டிரிப் சென்றுவர சில டிப்ஸ்...

முன்னெச்சரிக்கை! ரசனையில்லாதவர்களை உடன் அழைத்துச் செல்லாதீர் ஏனென்றால் 'பூனையை மடியில் கட்டிக் கொண்டு போன நிலை' உங்களுக்கும் வரக்கூடாது என்ற அனுபவ நல்லெண்ணம் தான்.

பொதுவாக பெருநாள் விடுமுறை காலங்கள் மற்றும் அரிதாய் அமையும் அமீரக அரசு விடுமுறை காலங்களில்  சுற்றிப் பார்ப்பதற்கென்றே துபையிலும், அல் அய்னிலும், அபுதாபியிலும், ஃபுஜைராவிலும் அனேக இடங்கள் உள்ளன என்றாலும் இதுவரை செல்லாதவர்கள் மற்றும் மலைப்பாதையில் காரிலோ, பைக்கிலோ பயணம் செய்ய விரும்புபவர்களுக்கு ஏற்ற இடம் ராஸ் அல் கைமாவில் உள்ள 'படைகளின் மலை' எனப் பொருள்படும் 'ஜபல் அல் ஜைஷ்'.

கடந்த ஈகைத் திருநாள் விடுமுறையில் நமது தாயகத்தின் ஊர் பகுதிகளையும் கிராமங்களையும் நினைவூட்டும் ராஸ் அல் கைமாவின் 'ஜபல் அல் ஜைஷ்' மலைக்குச் செல்லலாம் என்று கிளம்பிய போது 'இந்த வயசுல இது தேவையா? என கமெண்ட் அடித்த இலங்கை சகோதரர் ஒருவரையும் வம்படியாக இழுத்துப் போட்டுக் கொண்டு பயணித்த காலமோ அமீரகத்தில் நிலவும் கடும் கோடைகாலம் என்றாலும் ஆசையே வென்றது.

பசுமையான மரங்கள் நிறைந்த மலையல்ல, வெறும் பாறைகள் மட்டுமே பாட்டுப்படிக்கும் இந்த மலைக்கும் ஓர் ஈர்ப்பு உண்டு. லைலா என்ற கருப்பான பெண் மஜ்னு என்பவனுக்கு பேரழகியாக தெரிந்தாள் அல்லவா அந்த அரேபிய கதையை போல் தான் இயற்கையையும் மலைப்பாதையில் வாகனம் ஒட்டுவதையும் ரசிப்பவர்களுக்கு ஏற்ற இடம் மருந்துக்கு கூட புல் பூண்டுகள் இல்லாது பாறாங்கற்களாலும் பள்ளத்தாக்குகளாலும் வித்தியாசமாக அமைந்துள்ள இந்த மலை. மண்முகடுகள் நிறைந்த மலையடிவாரத்தில் மட்டும் விதிவிலக்காக சில பாலைவனச் செடிகள்.

முதன்முறையாக செல்பவர்களை ஏமாற்றும் அறிவிப்பு பலகை. அல் ஜைஷ் 17 கி.மீ என்ற அறிவிப்பு பலகை ராஸ் அல் கைமாவிலிருந்து இந்த மலைக்கு செல்லும் பாதையில் தென்படும்; ஆனால் அது மலையடிவாரம் வரை செல்வதற்கான அறிவிப்பு மட்டுமே.

அடிவாரத்திலிருந்து மலைக்கு மேல் செல்ல புதிய, அழகிய இருவழிப் பாதை ஆனால் கன்னித்தீவை நினைவூட்டும் முடிவில்லா தொடர்... சாலை. ஒருவழியாய் உச்சிக்கு சென்று திரும்பும் வரை கடைகள் ஏதும் கிடையாது அதனால் தேவையான தண்ணீருடனும், உணவுடனும் செல்வது நலம். பாகிஸ்தானியர், அரபியர்களைப் போல் உணவுப் பொருளை எடுத்துச் சென்றும் மலையடிவாரங்களில் சமைப்பது உங்கள் விருப்பத்திற்குட்பட்டது. ஆங்காங்கே சாலையோர வாகன நிறுத்துமிடங்களில் கழிவறை வசதிகள் செய்யப்பட்டுள்ள என்றாலும் அதை முறையாக பயன்படுத்தத் தெரியாதவர்களே அதிகம்.

பெருநாள் விடுமுறைகள் போன்ற பொது தொடர் விடுமுறை நாட்களில் போக்குவரத்து நெரிசல் நிச்சயம் அதனால் வாராந்திர விடுமுறை தினங்களில் சென்றுவர வாய்ப்புள்ளோர் பயன்படுத்திக் கொள்க.

தொடர் பொது விடுமுறை நாட்களில் ஏற்படும் வாகன நெரிசல் ராஸ் அல் கைமாவிலேயே தொடங்கி அடிவாரம் வரை 15 கி.மீ அளவுக்கு நீடிக்கும் என்பதால் காலையிலேயே மலையேறச் செல்வது தான் சிறந்தது.

வாராந்திர விடுமுறை நாட்களில் சுமார் மாலை 2 அல்லது 2.30 மணியளவில் ராஸ் அல் கைமாவிலிருந்து உங்கள் பயணத்தை துவங்கினால் மலையடிவாரத்தில் உள்ள பள்ளிகளில் அஸர் தொழலாம் மேலும் மஃரிப் தொழுது விட்டு மலையிலிருந்து இறங்கினால் பயணம் சிறப்பாக அமையும் ஏனெனில் இதுவரை மலைப்பாதையில் ஒரு குச்சி பல்பு கூட போடப்படவில்லை என்பதையும் கருத்தில் கொள்க.

மலையேறும் போதும் இறங்கும் போதும் அழகிய இயற்கை காட்சிகளை ரசித்துக் கொண்டும் கேமராவில் பதிந்து கொண்டும் செல்லலாம். மேலும் மலைப்பாதையில் ஆங்காங்கே உள்ள ஓய்வெடுக்கும் பகுதிகளில் குழந்தைகள் ஒடி விளையாடலாம். ஜபல் அல் ஜைஷ் மலையில் ஏறி இறங்க உவப்பான காலம் வரும் ஹஜ் பெருநாள் விடுமுறை தொடங்கி மார்ச் மாதம் முடிய, அப்புறம் சூடு தான்.

தொடர்கதையாய் செல்லும் தார்ச்சாலை ஒரு குறிப்பிட்ட உயரத்திற்கு மேல் இன்னும் முறையாக செப்பனிடப்படாத கரடுமுரடான சாலையாக நீளும், இவற்றில் 4வீல் டிரைவ் வாகனங்களில் மட்டுமே செல்வது உசிதம் என்பதை விட உங்கள் பயணத்தை அத்துடன் நிறுத்திக் கொள்வதே புத்திசாலித்தனம்.

வழமைபோல் அப்துல் காதர் மற்றும் அஷ்ரப் உதவியுடன்
அதிரை அமீன்