.

Pages

Monday, January 2, 2017

பட்டுக்கோட்டையில் 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம் !

பட்டுக்கோட்டை, ஜன-02
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டையில் டெல்டா விவசாயிகளை வஞ்சிக்கும் தமிழக அரசை கண்டித்து பட்டுக்கோட்டை தலைமை தபால் நிலையம் முன்பு திமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர்.

ஆர்ப்பட்டத்திற்கு திமுக தஞ்சை தெற்கு மாவட்ட துணைச்செயலாளர் கா. அண்ணாதுரை தலைமை வகித்தார்.

ஆர்ப்பாட்டத்தில் மத்திய, மாநில விவசாய கடன்களை தள்ளுபடி செய்யவும், பயிர் பாதிப்பால் மரணமடைந்த விவசாயிகளுக்கு ரூ 10 லட்சம் இழப்பீடு தொகை வழங்குவது, கரும்பு டன்னுக்கு ரூ 4 ஆயிரம் வழங்குவது, ஏரி, குளங்கள், ஆறுகளை தூர் வாறுவது, மணல் திருட்டை தடுப்பது உள்ளிட்ட 17 அம்ச கோரிக்கைகளை வலியிறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பட்டுக்கோட்டை கோட்டத்திற்கு உட்பட்ட பேராவூரணி, அதிராம்பட்டினம், மதுக்கூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த திமுக நிர்வாகிகள், உறுப்பினர்கள் 500 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

அதிராம்பட்டினதிலிருந்து திமுக அதிரை பேரூர் செயலாளர் இராம.குணசேகரன், முன்னாள் அதிரை சேர்மன் எஸ்.எச் அஸ்லம், ஒன்றிய பிரதிநிதிகள் அப்துல் ஹலீம், முல்லை மதி, இன்ப நாதன், பொருளாளர் கோடி முதலி, வார்டு பொறுப்பாளர்கள் நிஜாமுதீன், சைஃபுதீன், முத்து, நாகராஜ் மற்றும் திமுக ஆதரவாளர்கள் அமீன், ஜாகிர், அசரப், தாரிக், உமர், அனஸ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
 

புஜைராவில் மலையேற்ற வீரர் ஹெலிகாப்டர் மூலம் மீட்பு !

அதிரை நியூஸ்: புஜைரா, ஜன-02
நேற்று (ஞாயிறு) மாலை 3.30 மணியளவில் அமீரகத்தை சேர்ந்த சுமார் 30 வயதுடைய மலையேற்ற வீரர் ஒருவர் காணாமல் போனதாக வந்த தகவலை அடுத்து தேடத்துவங்கிய புஜைரா போலீஸார் மலையுச்சிக்கு ஏறமுடியாத நிலையில் சிக்கிக் கொண்டிருந்தவரை ஹெலிகாப்டர் உதவியுடன் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.

இதுபோன்ற அசம்பாவிதங்களை தவிர்ப்பதற்காக 'அமீரக  தேசிய தேடுதல் மற்றும் மீட்பு மையம்' 5 ஆலோசனைகள் வழங்கியுள்ளது.

1. முதலில் பாறைகளில் ஏறுவதற்கான அடிப்படை பயிற்சிகளை எடுத்துக் கொள்ளுங்கள், உள்விளையாட்டு அரங்கங்களிலுள்ள சுவர்களில் ஏறிப் பழகுங்கள்.

2. மலையேறுமுன் சம்மந்தபட்ட துறைக்கு உங்களுடைய திட்டம், குழுவினர் மற்றும் இடம் குறித்த விபரங்கள் என அனைத்தையும் தெரிவியுங்கள்.

3. சமூக வலைத்தளங்களின் வாயிலாக புதிய தகவல்களையும், மலையேற்றத்திற்கு தகுதியான மலைப்பகுதிகள் குறித்த உள்ளூர் தகவல்களையும் பெற்றுக் கொள்ளுங்கள்.

4. பிறருடன் தொடர்பு கொள்வதற்கு ஏதுவாக ஒரு மொபைல் போன் அல்லது சேட்டிலைட் போன் அல்லது குறைந்தபட்சம் ஒரு விசிலையாவது வைத்துக் கொள்ளுங்கள்.

5. எப்போதும் நீங்கள் மலையேறும் பகுதியின் தன்மை குறித்தோ, வானிலை குறித்தோ குறைத்து மதிப்பிட வேண்டாம். மலைப்பகுதியில் திடீரென பெய்யும் மழையால் ஏற்படும் வெள்ளத்தில் நீங்கள் சிக்க நேரிடலாம்.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்
* File Image

துபாயில் மூடுபனியால் விமான போக்குவரத்து கடும் பாதிப்பு !

அதிரை நியூஸ்: துபாய், ஜன-02
துபாயில் நிலவும் கடும் மூடுபனியால் தொடர்ந்து இரண்டாவது நாளாக விமான போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பல விமானங்களின் வருகை தாமதமாகின மேலும் பல விமான புறப்பாடுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

நேற்று ( ஞாயிற்றுக்கிழமை ) பகல் வரை முழு அமீரகத்தையும் பனி போர்த்தியிருந்தது குறிப்பிடத்தக்கது, இன்றும் அதே நிலை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சாலை போக்குவரத்தும் மிகக்கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இன்று காலை 8 மணி நிலவரப்படி, துபைக்கு வரவேண்டிய 28 விமானங்கள் தாமதமாக வருகின்றன, இவை இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து, இலங்கை, ஓமன் மற்றும் குவைத்திலிருந்து வரவேண்டிய விமானங்கள். மேலும், பிளைதுபையின் 9 விமான புறப்பாடுகள் இதுவரை ரத்து செய்யப்பட்டுள்ளன, நேற்று மட்டும் 21 விமான சேவைகளை பிளைதுபை ரத்து செய்திருந்தது.

ஓவ்வொரு ஆண்டும் ஆங்கில வருடப் பிறப்பின் முதல் வாரம் எப்பொழுதுமே துபை வரும் பயணிகளால் விமான நிலையங்கள் பரபரப்பாக காணப்படும் நிலையில் விமான ரத்துக்கள் பயணிகளுக்கும் விமான சேவை நிறுவனங்களுக்கும் பல இடர்பாடுகளை ஏற்படுத்தியுள்ளன என்றாலும் துபை சர்வதேச விமான நிலையங்கள் வழியாக ஜனவரியின் முதல் 3 நாட்களுக்குள் சுமார் 2.5 லட்சம் பயணிகள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

அதிரையில் ரேஷன் கடைகளில் உள்தாள் ஒட்டும் பணி துவக்கம் !

அதிராம்பட்டினம், ஜன-02
தமிழகத்தில் குடும்ப அட்டைகளில் மேலும் ஓராண்டு பதிவுக்கான உள்தாள் ஒட்டப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது.

தற்போதுள்ள குடும்ப அட்டைகளின் காலம் இந்த ஆண்டு டிசம்பர் 31-ம் தேதி வரை நீட்டிப்பதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, அச்சிடப்பட்ட உள்தாளை, இன்று முதல் குடும்ப அட்டைகளில் ஒட்டும் பணி ரேஷன் கடைகளில் தொடங்கியது. குடும்பத் தலைவர், அல்லது வயது வந்த குடும்ப உறுப்பினர்களில் ஒருவர் ரேஷன் கடைக்கு நேரில் சென்று, உள்தாளை இணைத்து கொள்ளலாம்.

அதன்படி, ரேஷன் கார்டில் 2016 ம் ஆண்டுக்கான உள்தாள் ஒட்டும் பணி இன்று காலை முதல் அதிரையில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் தொடங்கியது. பொதுமக்கள் வரிசையில் நின்று  உள்தாளை ஒட்டி வருகின்றனர். இன்று முதல் நாள் என்பதால் பொதுமக்களின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
 

Sunday, January 1, 2017

சவூதியில் ஓநாய் தாக்கி 3 வயது சிறுவன் காயம் !

அதிரை நியூஸ்: சவூதி அரேபியா, ஜன-01
ஈராக் நாட்டு எல்லையருகே அமைந்துள்ள சவுதி அரேபியா நகரம் அர்அர் (Arar). இங்குள்ள மால் ஒன்றில் மக்களை ஈர்ப்பதற்காக கூண்டில் வைக்கப்பட்டிருந்த ஓநாய் ஒன்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த 3 வயது சிறுவனின் கையை கடித்தது.

சம்பவத்தை தொடர்ந்து கடிபட்ட சிறுவனுக்கு மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டது என்றாலும் காட்டு மிருகங்களை காட்சிப் பொருளாக வைத்திருப்பது குறித்து கடும் கண்டனங்களும் தவறுசெய்தோர் மீது நடவடிக்கை எடுக்கவும் கோரிக்கைகள் எழுந்துள்ளன.

சவுதியில் கடந்த 2 மாதங்களில் காட்டு மிருகங்களால் தாக்கப்படும் 2வது சம்பவம் இது. சவுதியின் சகாகா என்ற ஊரில் இதேபோன்று மாலில் வைக்கப்பட்டிருந்த புலி ஒன்று சிறுமியை தாக்கியது பலரது கண்டனத்தையும் பெற்றிருந்தது.

அதிரை நியூஸில் வெளியிடப்பட்ட அந்த செய்தியை வாசிக்க:

சவுதியில் புலி தாக்கி சிறுமி காயம் !

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான

கிர்கிஸ்தான் நாட்டு ராணுவ தளபதியான இந்திய வம்சாவழி மலையாளி

அதிரை நியூஸ்: ஜன-01
சவுதி மற்றும் அமீரகத்தில் மிகப்பெரும் தொழிலதிபராக கொடிகட்டிப் பறக்கும் மலையாள வம்சாவழி பிரமுகர் ஷேக் ரபீக் முஹமது என்பவர் மத்திய ஆசிய நாடுகளில் ஒன்றான கிர்கஸ்தான் (Kyrgystan) என்ற முன்னாள் சோவியத் ஒன்றிய நாட்டின் ராணுவ தளபதியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்த அறிவிப்பை கிர்கிஸ்தான் நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் அலி மிர்ஸா அவர்கள் வெளியிட்டுள்ளார்.

கேரள மாநிலம் கள்ளிக்கோட்டைச் (Calicut) சேர்ந்த 5 ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ள ஷேக் ரபீக் முஹமது மும்பையில் வளர்ந்தவர் பின்பு தனது திறமையால் முன்னேறி பல ஆசியா, மத்திய கிழக்கு, ஐரோப்பா மற்றும் வட ஆப்பிரிக்க நாடுகளில் பிரம்மாண்ட பாலங்கள் (Bridges), துறைமுகங்கள் Sea ports), சர்வதேச நாடுகளுக்கிடையே பெட்ரோலிய தயாரிப்புக்களை கொண்டு செல்வதற்கான பைப் லைன்கள் (Petrol & Gas pipelines between international countries), அனல் (Thermal) மற்றும் அணுமின் உற்பத்தி நிலையங்கள் (Nuclear Power Plants), அணைக்கட்டுக்கள் (Dams), பிரம்மாண்ட கட்டிடங்கள் (High Structural Buildings), விமான நிலையங்கள் (Airports), நெடுஞ்சாலைகள் (Highways), உரத் தொழிற்சாலைகள் (Chemical Fertilizer Factories) என அரசாங்கங்கள் சார்ந்த கட்டுமானங்களை கட்டித் தருவதில் வெற்றிகரமாக ஈடுபட்டுள்ளார். இவரது கம்மோன் குழும நிறுவனங்களில் (Gammon Group of Companies) சுமார் 2 லட்சம் பேர் 28 நாடுகளில் பணியாற்றுகின்றனர்.

சவுதி மற்றும் அமீரகத்தை தனது தொழில்களின் பாசறைiயாக கொண்டுள்ள ஷேக் ரபீக் முஹமது தனது இளம்வயதில் ஈரான் நாட்டிற்காக இரும்பு ஆலை ஒன்றை வெற்றிகரமாக கட்டித்தந்தார் அப்போது அவருடன் தற்செயலாக பழகி நண்பரானவர் கிர்கிஸ்தான் நாட்டைச் சேர்ந்த 'குர்மன்பெக் சாலியேவிச் பாகியேவ்'. (Kurmanbek Saliyevich Bakiyev)

குர்மான்பெக் பின்னாளில் அரசியலில் ஈடுபட்டு கவர்னராக இருந்தபொழுது அவரது வேண்டுகோளை ஏற்று கிர்கஸ்தானிலும் அதேபோன்றதொரு இரும்பு ஆலையை உருவாக்கித் தந்தார். தொடர்ந்து நடந்த அதிபர் தேர்தலில் போட்டியிட்டு கிர்கிஸ்தான் ஜனாதிபதியாக 2 முறை பதவி வகித்த போது குர்மானபெக்; ஷேக் ரபீக் முஹமது அவர்களை ஜனாதிபதியின் முதன்மை ஆலோசகராக (Cheif Advisor) நியமித்துக் கொண்டார்.

ஷேக் ரபீக் ஜனாதிபதியின் ஆலோசகராக இருந்தபோது சர்வதேச அளவில் பல வர்த்தக நண்பர்கள் கிடைத்ததுடன் கிர்கிஸ்தான் நாட்டில் பல்வேறு அந்நிய முதலீட்டாளர்கள் பெருமளவில் முதலீடு செய்வதற்கும், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் காரணமாக இருந்தார். நன்றியின் விளைவு, குர்மான்பெக் வேண்டுகோளை ஏற்று கிர்கிஸ்தான் குடிமகனாக தன்னை மாற்றிக் கொண்டார்.

பின்பு, சவுதி அரேபியாவின் வேண்டுகோளை ஏற்று துபையில் செயல்படும் வரியில்லா வர்த்தக மண்டலம் (Dubai model Freezone) போன்றதொரு திட்டத்தை சவுதியிலும் நிறுவிட கேட்டுக் கொள்ளப்பட்டார். இவர் வழியாக கிர்கிஸ்தான் நாடும் வளைகுடா நாடுகளின் முக்கிய வர்த்தக கூட்டாளியாக திகழ்வதுடன் ஜித்தாவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பிலும் (Organisation of Islamic Countries - OIC) ஒரு உறுப்பினராக உள்ளது.

கேரளாவில் பிறந்து மும்பையில் வளர்ந்து சவுதியில் தொழிலதிபராக கால்பதித்து பின்பு அமீரகம், ஈரான், ஆப்பிரிக்க நாடுகள் என தொழில் வளர்த்து, கிர்கிஸ்தான் ஜனாதிபதியின் முதன்மை ஆலோசகராகவும் குடிமகனாகவும் மாறி, தற்போது துபையில் குடும்பத்துடன் வசிக்கும் ஷேக் ரபீக் முஹமதுக்கு நன்றி செலுத்தும் விதமாக அந்நிய நாட்டில் பிறந்த ஒருவருக்கு 'ராணுவ தளபதி' என்ற உயரிய பொறுப்பை வழங்கி அழகுபார்த்துள்ளது கிர்கிஸ்தான் நாடு.

பன்முகத் திறமைமிக்க இந்தியன் ஒருவனை இந்தியா பயன்படுத்த தவறியிருந்தாலும் நம் சமகால வம்சாவழி இந்தியன் ஒருவன் மிக உயர்ந்த பொறுப்புக்கு அந்நிய நாட்டில் தேர்ந்தெடுக்கப்படுவது இந்தியர்கள் என்ற அடிப்படையில் நமக்கெல்லாம் பெருமை தானே! மலையாளிகள் என்ற அடிப்படையில் நம் அண்டை மாநில கேரள சகோதரர்கள் காலரை உயர்த்திக் கொள்வது வேறு விஷயம்.

சத்தமின்றி ஒரு சாதனை செய்தவர் ஷேக் ரபீக் முஹமது மட்டுமல்ல, அவருடைய திறமையை கண்டறிந்து தனது நாட்டின் வளர்ச்சிக்காக பயன்படுத்திக் கொண்ட குர்மான்பெக் அவர்களும் ஒரு சாதனையாளர் தான்.

Source: Khaleej Times
தமிழில்: நம்ம ஊரான்

சவூதியில் பள்ளி இமாம்கள், பிரச்சாரகர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்!

அதிரை நியூஸ்: சவூதி அரேபியா, ஜன-01
சவுதியில் இமாம்கள் மற்றும் இஸ்லாமிய போதகர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இனி முறையாக மார்க்கத்தை பயின்று பட்டம் பெற்றவர்கள் மட்டுமே பள்ளி இமாம்கள் மற்றும் இஸ்லாமிய போதகர்களாக பணியமர்த்தப்படுவர்.

வெள்ளிக்கிழமை ஜூம்ஆ பிரசங்கம் நிகழ்த்தும் வாய்ப்பை பள்ளி இமாம்கள் தன்னிச்சையாக பிறருக்கு மாற்றித்தர இயலாது, இஸ்லாமிய விவகாரத்துறை அமைச்சகத்தின் முன் அனுமதியை பெற்றாலே தவிர.

தொழுகைகள் நிறைவுற்றபின் யாரும் இஸ்லாமிய விவகாரத்துறை அமைச்சகத்தின் முன் அனுமதியில்லாமல் பிரசங்கம் செய்ய முடியாது.

பள்ளிவாசல்களில் இனி எத்தகைய நன்கொடைகள் திரட்டும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கும், அதுகுறித்த துண்டு சீட்டுக்கள் விநியோகம் மற்றும் பள்ளி சுவர்களில் ஒட்டுவதற்கும் இமாம்கள் யாரையும் அனுமதிக்கக்கூடாது.

இமாம்கள் தங்களுடைய உரைகளில் யார் மீதும் வெறுப்புணர்வை உமிழ்ந்தோ, பிற நாடுகளை சாடியோ, ஆட்களை சாடியோ, அரசியல் பிரச்சனைகள் மற்றும் பழங்குடியின மக்களை விமர்சித்தோ பேசுதல் கூடாது.

அதேபோல் இமாம்கள் மற்றும் பிரச்சாரகர்கள் தொழுகைக்கு வருவோரின் யாருடைய நிர்பந்ததிற்கும் பயந்தோ, பணிந்தோ தங்களுடைய மார்க்க உபதேசங்களை அமைத்துக் கொள்ளக்கூடாது.

மேற்காணும் புதிய வழிகாட்டுதல்களை மீறுவோர் மீது சம்பள குறைப்பு மற்றும் பணிநீக்கம் போன்ற தண்டனைகள் வழங்கப்படும் என்றாலும் தண்டனை வழங்குமுன் இமாம்களுக்கு தங்கள் தரப்பு நியாயத்தை எடுத்துச்சொல்ல போதிய வாய்ப்பு வழங்கப்படும்.

சவுதி அரேபியாவின் தலைமை இமாம் முப்தி. அப்துல் அஸீஸ் அல் ஷேக் அவர்கள் கூறும் போது, இமாம்கள் மக்களின் பிரச்சனைகளை பற்றி பேசுவதுடன் அவர்களின் தவறான நம்பிக்கைகளை களைவதற்கு முக்கியத்துவம் தர வேண்டும் நல்ல விஷயங்களை நோக்கி மக்களை ஈர்க்கும் வகையில் பேச வேண்டும் என்றும் இஸ்லாமிய விவகாரத்துறை அமைச்சகத்தின் ஆலோசனையின் அடிப்படையில் முக்கியமான விஷயங்களை கையாள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

Source: Okaz / Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

மரண அறிவிப்பு ( அப்துல் பதூத் அவர்கள்)

அதிராம்பட்டினம், நடுத்தெருவை சேர்ந்த மர்ஹூம் கொப்பரா வாடி அப்பா என்கிற நெ.மு.க முஹம்மது முகைதின் அவர்களின் பேரனும், நெ.மு.க அப்துல் ரஹீம் அவர்களின் மகனும், மர்ஹூம் மர்ஜூக், முகமது முகைதீன் ஆகியோரின் சகோதரருமாகிய அப்துல் பதூத் வர்கள்  நேற்று மாலை வஃபாத்தாகிவிட்டார்கள்.

"இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஹூன்"

அன்னாரின் ஜனாஸா இன்று (01-01-2017 ) காலை 9 மணியளவில் தக்வா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.