.

Pages

Thursday, May 2, 2019

பிலால் நகர் பள்ளியில் மக்தப் முதலாம் ஆண்டு விழா (படங்கள்)

அதிராம்பட்டினம், மே 02
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் பிலால் நகர் பள்ளிவாசல் வளாகத்தில் மக்தப் பள்ளி மாணவர்களின் முதலாம் ஆண்டு விழா நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

விழாவிற்கு, மக்தப் அதிராம்பட்டினம் சென்டர் பொறுப்பாளர் முஃப்தி அப்துல் ஹாதி பாகவி தலைமை வகித்து, 'பிள்ளைகள் வளர்ப்பில் பெற்றோரின் கடமை' என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.

விழாவில், பள்ளி மக்தப் ஆசிரியர்கள் ஹாபிழ் அபூபக்கர், மவ்லவி தன்வீர், சாபீர் ஆகியோர் கலந்துகொண்டு மார்க்க அறிவுத்திறன் போட்டிகளை நடத்தினர். இதில், மக்தப் மதரசா மாணவர்கள் 62 பேர் கலந்துகொண்டனர். இதில், 28 பேர் வெற்றி பெற்றனர். இவர்களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும், ஒழுக்கம், தொழுகை, வருகைப் பதிவேடு, சீருடை அணிவித்தல் போன்றவற்றில் சிறந்து விளங்கிய மாணவர்களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டதுடன் போட்டியில் கலந்துகொண்ட அனைத்து மாணவர்களுக்கும் ஆறுதல் பரிசுகள் வழங்கப்பட்டன.

விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பிலால் நகர் ஜமாஅத் தலைவர் முகமது முகைதீன், அதிரை அமீன் ஆகியோர் கலந்துகொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டுத் தெரிவித்தனர்.

பிலால் நகர் பள்ளிவாசல் வளாகத்தில் கடந்த ஓர் ஆண்டாக தினமும் மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை மாணவர்களுக்கான மக்தப் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. இதில், இப்பகுதியை சேர்ந்த 70 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டு பயனடைகின்றனர்.
 

உலகில் முதல் முறையாக "அரபு மொழியில் திருக்குறள்" ஒப்புவித்தல் போட்டி (படங்கள்)

அதிரை நியூஸ்: மே 02
குவைத் தமிழ் இஸ்லாமிய சங்கம் (கே-டிக்) ஏற்பாடு செய்த உலகில் முதல் முறையாக அரபு மொழியில் திருக்குறள் சொல்லும் நிகழ்ச்சியுடன் அல் ஃபத்ஹ் திருக்குர்ஆன் & மொழிகள் பயிற்சி மையத்தின் ஆண்டு விழா சங்கத்தின் தலைவர் மவ்லவீ எம்.எஸ். முஹம்மது மீராஷா ஃபாஜில் பாகவீ தலைமையில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு (26.04.2019) ஃகைத்தான் தமிழ் பள்ளிவாசலில் சிறப்பாக நடைபெற்றது.

இவ்விழாவில் அல் ஃபத்ஹ் திருக்குர்ஆன் & மொழிகள் பயிற்சி மையத்தின் மதரஸா பிரிவு மாணவ, மாணவியரின் கிராஅத், ஸூரா, கலிமா & துஆக்கள் ஒப்புவித்தல், அதான் (பாங்கு) சொல்லுதல், கவிதை படித்தல், சொற்பொழிவு, தமிழ் & உர்தூ பாடல்கள் பாடுதல் மற்றும் அரபு உரையாடல் நிகழ்ச்சிகளும், தமிழ்ப் பிரிவு மாணவ, மாணவியரின் சொற்பொழிவு, அரபு மொழியில் திருக்குறள், ஆத்திச்சூடி மற்றும் தமிழ் மாதங்கள் ஒப்புவித்தல் நிகழ்ச்சிகளும் உள்ளிட்ட பல்சுவை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

பயிற்சி மையத்தின் தேர்வில் வெற்றிபெற்ற அனைவருக்கும், சங்கத்தின் குடும்பங்கள் சங்கமம் நிகழ்ச்சியில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றிப்பெற்றோருக்கும் சிறப்பான பரிசுகளும், தமிழ்ப் பிரிவு மாணவ, மாணவியருக்கு சான்றிதழ்களுடன் பரிசுகளும் சங்கத்தின் பொறுப்பாளர்கள், ஆலோசகர்கள், சமூக நல ஆர்வலர்கள், சகோதர அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் விளம்பரதார்கள் ஆகியோரால் வழங்கப்பட்டன.

பள்ளியின் தலைமை இமாம் அஷ்-ஷைஃக் அபூ ஆதிஃப் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். இளவல் முஹம்மது ஆதிஃப் (எகிப்து) கிராஅத் ஓதி தொடங்கி வைத்தார். துணைத்தலைவர் மவ்லவீ எஸ்.ஏ.கே. முஹம்மது இப்ராஹீம் நூரானீ காஷிஃபி இஸ்லாமியப் பாடல் படித்தார். பொதுச்செயலாளர் மவ்லவீ அ.பா. கலீல் அஹ்மத் பாகவீ ஒருங்கிணைப்பு செய்தார். இணைப் பொருளாளர் ஹச். முஹம்மது நாஸர் நன்றியுரையாற்றினார். துணைத்தலைவர் மவ்லவீ ஹாஃபிழ் எம். முஹம்மது நிஜாமுத்தீன் பாகவீ துஆ ஓத விழா இனிதே நிறைவுற்றது.

குவைத் வெல்டன் ரியர் புரோமோட்டர்ஸ், என்.க்யூ.ஜி ஸ்டேஷனரி, அறந்தை கணேசன் அறக்கட்டளை, வின்வே கார்கோ & கூரியர் சர்வீசஸ், குவாலிட்டி ஃப்ரஷ் சிக்கன் மற்றும் ஏ.எஸ்.ட்டி செக்யூரிட்டி சிஸ்டம்ஸ் ஆகியோர் பரிசுகளுக்கான பங்களிப்பை செய்திருந்தனர்.

வாகனங்கள் நிறுத்த விசாலமான மைதானம், பெண்களுக்கு தனியிட வசதியுடன் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சிறப்பான முறையில் சங்கத்தின் நிர்வாகிகள், கல்விக் குழு & சுற்றுலாக் குழு பொறுப்பாளர்கள், சங்க உறுப்பினர்கள் மற்றும் களப்பணியாளர்கள் செய்திருந்தனர். பெண்கள், குழந்தைகள் உட்பட ஏறக்குறைய 400க்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கு வருகை தந்த அனைவருக்கும் இரவு உணவு வழங்கப்பட்டது.

செய்தி மற்றும் படங்கள்:
குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic),

Wednesday, May 1, 2019

ஏழை மாணவிகளுக்கு காவல்துறை உதவி ஆய்வாளர் உதவி!

தஞ்சாவூர் மே.01-
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி பகுதியைச் சேர்ந்த, படிப்பில் சிறந்து விளங்கும், பொருளாதாரத்தில் பின்தங்கிய ஏழை மாணவர்களுக்கு பேராவூரணி காவல்துறை உதவி ஆய்வாளர் இல.அருள்குமார் தனது சொந்த நிதியிலிருந்து ரூ 10 ஆயிரம் அன்பளிப்பாக வழங்கி, படிப்பில் மேலும் சிறந்து விளங்கி உயர் பதவி அடைய வேண்டும் என வாழ்த்தினார்.

பேராவூரணி ஊராட்சி ஒன்றிய வடகிழக்கு தொடக்கப்பள்ளியில் 3 ஆம் வகுப்பு படிக்கும் மாணவி கு.அபிநயா, 4 ஆம் வகுப்பு படிக்கும் மாணவி ஹா.ஜெசிமா மற்றும் ஆதனூர் கிழக்கு பள்ளி மாணவர் மனோஜ்குமார், மாணவி இரா.தேவகி ஆகிய 4 பேருக்கும் தலா ரூ 2 ஆயிரத்து 500 வீதம் மொத்தம் ரூ 10 ஆயிரத்தை அன்பளிப்பாக வழங்கி மாணவர்களை வாழ்த்தினார்.

அப்போது வட்டாரக்கல்வி அலுவலர் கோ.ரவிச்சந்திரன், நகைக்கடை உரிமையாளர் சங்க நிர்வாகி தி.சாமியப்பன், வட்டாரக் கல்வி அலுவலக ஊழியர் தங்கராமன், தலைமை ஆசிரியர்கள் இரா.சித்ரா தேவி, கு.செல்வி ஆகியோர் உடனிருந்தனர்.

SSLC தேர்வில், சிறப்பிடம் பெற்ற மாணவிகளுக்கு திமுக நிர்வாகிகள் பாராட்டு (படங்கள்)

அதிராம்பட்டினம், மே.01
தமிழகமெங்கும் SSLC தேர்வின் முடிவு திங்கட்கிழமை காலை வெளியானது. இந்த தேர்வில் தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் அடுத்துள்ள பள்ளிகொண்டான் லாரல் மெட்ரிக். பள்ளியில் கல்வி பயின்ற ராஜமடம் எஸ்.இளங்கோவன்- இ.கனிமொழி தம்பதி மகள் ரிஷிவந்தினி (493/500) மதிப்பெண்கள் பெற்று மாவட்ட அளவில் சிறப்பிடமும், அதிராம்பட்டினம் அரசு மகளிர் உயர் நிலைப்பள்ளியில் (1 ம் நம்பர்) கல்வி பயின்ற அதிராம்பட்டினம் முத்துராமன்-அபிராமி தம்பதி மகள் எம். ஹம்சத்வனி (477/500) மதிப்பெண் பெற்று பள்ளி அளவில் சிறப்பிடமும், அதிராம்பட்டினம் அடுத்துள்ள புதுக்கோட்டை உள்ளூர், ஆக்ஸ்போர்டு மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியில் கல்வி பயின்ற அதிராம்பட்டினம் ஜெ.பாலமுருகன்-மாலா தம்பதி மகள் பி.பவ்யதர்ஷிணி (478/500) மதிப்பெண் பெற்று பள்ளி அளவில் சிறப்பிடமும், அதே பள்ளியில் கல்வி பயின்ற எச்.பாலகிருஷ்ணன்- விஜயலட்சுமி தம்பதி மகன் சந்தோஷ் (476/500) மதிப்பெண் பெற்று பள்ளியளவில் சிறப்பிடம் பெற்றுள்ளனர்.

இதையடுத்து, திமுக அதிராம்பட்டினம் பேரூர் செயலாளர் இராம. குணசேகரன் தலைமையில், பொருளாளர் கோடி.முதலி, மூத்த உறுப்பினர்கள் எம். இப்ராஹீம், இ.வாப்பு மரைக்காயர், மாவட்ட பிரதிநிதி எம்.பகுருதீன், மாவட்ட மீனவரணி துணை அமைப்பாளர் நாகராஜ், வார்டு பொறுப்பாளர்கள் முகமது சரீப், ராஜா, வீரசேகரன் ஆகியோர் சாதனை மாணவ, மாணவிகளை பாராட்டி பொன்னாடை அணிவித்து, இனிப்பு வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.