.

Pages

Tuesday, August 30, 2016

துபாயில் தென் அமெரிக்க இயற்கை சூழலில் உள்ளரங்க மழைக்காடு ! ( படங்கள் )

அதிரை நியூஸ்:
துபாய், ஆகஸ்ட் 30
எந்த இயற்கை சூழலையும் செயற்கையாய் பாலைவனத்துக்குள் பதியம் செய்துப்பார்க்க துபை தயங்கியதே இல்லை. பல்லாண்டுகளுக்கு முன்பே மால் ஆப் தி எமிரேட்ஸ் உள்ளே வந்த பனிமலை (Ski Dubai) ஆகட்டும், பிரம்மாண்ட மீன் தொட்டியாகட்டும் (Aquarium), எண்ணற்ற பூங்காக்கள் ஆகட்டும், விரைவில் திறக்கப்படவுள்ள உயிரியல் பூங்காவாகட்டும் (Dubai Safari) என தொட்ட எதிலும் தனி முத்திரை பதிக்கத் தவறியதே இல்லை.

2018 ஆம் ஆண்டில் ஓர் பிரமாண்ட கட்டிட உச்சியில் மழவேனிற்காடு உருவாக்கும் திட்டம் ஒன்று கருக்கொண்டுள்ள நிலையில் எதிர்வரும் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் 4 அடுக்கு சூழல் மண்டபத்தில் (Eco Dome) தென்னமெரிக்க மழவேனிற்காடு ஒன்று அதே இயற்கை சூழலில் வாழும் சுமார் 3000 செடி, கொடி, மரங்கள் மற்றும் வன உயிரினங்களுடன் "பிறப்பு விழா" காணவுள்ளது.

துபாயில், வெயில் விடைபெற்று சாதாரண காலநிலையும் குளிரும் நிலவும் அடுத்த 7 மாதங்களுக்கு மடைத்திறந்த வெள்ளம்போல் வரும் சர்வதேச சுற்றுலாப் பயணிகளை குறிவைத்து ஈர்க்கும் நடவடிக்கைகள் துவங்கும், அதிலொன்று துபை வர்த்தக திருவிழா என்பதும் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. வழமைபோல் எதிர்வரும் செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் புதிய தீம் பார்க்குகள் உள்ளிட்ட பல பொழுதுபோக்கு தொடர்புடைய புதிய அம்சங்கள் திறப்பு விழா காணவுள்ளன.

அதனடிப்படையில், ஜூமைரா வட்டத்தில் அல் சபா சாலையில் அமைந்துள்ள சிட்டி வாக் 2 பகுதியில் 'தி கிரீன் பிளேனட் துபாய்' (the Green planet Dubai) எனும் இயற்கை சூழலியல் உள்ளரங்க மழவேனிற்காடு (Indoor Eco Tropical Rain Forest) 4 அடுக்குமாடி உயரத்தில் கல்விசார் நோக்குடன் உருவாகியுள்ளது.

பள்ளிச்சிறார்களுக்கான பல்வேறு கல்வித்திட்டங்களுடன் உருவாகியுள்ள இக்காட்டின் மத்தியில் 'செயற்கை பிரமாண்ட மரம்" (manmade tree)  ஒன்று நான்கு அடுக்கு மாடிகளுக்கும் கிளை பரப்பி நிற்கிறது, இந்த மரத்தை சுற்றி அமைக்கப்பட்டுள்ள சுழல் படிக்கட்டுகள் (Spiral Walkway) வழியாக அல்லது லிப்ட் வழியாக எறி, இறங்கி இதன் அழகை ரசிக்கலாம்.

தினமும் காலை 10 மணிமுதல் இரவு 10 மணி வரை திறந்திருக்கும் காடு வியாழன், வெள்ளிகளில் மட்டும் நள்ளிரவு 12 மணிவரை திறந்திருக்கும். பெரியவர்களுக்கான கட்டணம் 95 திர்ஹம் என்றும் 2 முதல் 12 வயது வரையிலான குழந்தைகளுக்கு 70 திர்ஹம் எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

தரையிலிருந்து சுமார் 45 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள மேல்மாடியில் பல வகை வண்ணத்துப்பூச்சி உள்ளிட்ட பறவையினங்களும், 3 வது மாடியில் பல வகை வண்ண மலர்களுடன் ஒங்கி வளர்ந்த செடி, கொடி, மரங்களும், இரண்டாவது மாடியில் சிறு வன உயிரினங்களும், தரை தளத்தில் வருடத்திற்கு 3 மி.மீ. மழைபெய்யும் செயற்கை வசதியுடன் தரை மற்றும் நீர்வாழ் உயினங்களுக்கேற்ற குகைகள், நிர்வீழ்ச்சி, ஓடைகள், மீன் வளர்ப்பு தடாகங்கள் என கண்களுக்கு விருந்தளிக்கவுள்ளது.

Source: Gulf News & The Green Planet
தமிழில்: நம்ம ஊரான்
 

அதிராம்பட்டினத்தில் 23 மி.மீ மழை பதிவு !

அதிராம்பட்டினம், ஆகஸ்ட் 30
அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கடும் வெப்பம் நிலவி வந்த நிலையில் நேற்று இரவு குளிர்ந்த காற்றுடன் மழை பெய்தது. நள்ளிரவு வரை நீடித்து பெய்தது. இன்று காலை 8.30 மணி நேர நிலவரப்படி அதிரையில் 23 மி.மீ மழை பதிவாகி உள்ளது. மாவட்டத்தில் அதிகபட்சமாக தஞ்சையில் 105 மி.மீ மழை பதிவாகி உள்ளது.

Monday, August 29, 2016

சிஎம்பி லேன் பகுதியில் ரூ 8 லட்சம் மதிப்பீட்டில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி: கவுன்சிலர் இப்ராகிம் நேரில் ஆய்வு !

அதிராம்பட்டினம், ஆகஸ்ட் 21
தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினம் பேரூராட்சி 21 வது வார்டுக்கு உட்பட்ட சிஎம்பி லேன் பகுதியில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணியை அதிராம்பட்டினம் பேரூராட்சி 21 வது வார்டு கவுன்சிலர் முகம்மது இப்ராகிம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அதிராம்பட்டினம் பேரூராட்சி 21 வது வார்டு சிஎம்பி லேன் ஹனீப் பள்ளிவாசல் முதல் சிஎம்பி லேன் விகேஎம் ஸ்டோர் வரையிலான சாலையோர வடக்கு - தெற்கு குடியிருப்பு பகுதி இரு புறங்களிலும் அதிராம்பட்டினம் பேரூராட்சி பொதுநிதி ரூ. 8 லட்சம் மதிப்பீட்டில் 800 மீட்டர் நீளத்தில் குழாய்கள் அமைத்து மழைநீர் வடிகால் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதன் பணிகளை அதிராம்பட்டினம் பேரூராட்சி 21 வது வார்டு கவுன்சிலர் முகம்மது இப்ராகிம் இன்று மாலை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின் போது ஒப்பந்ததாரர் சுல்தான் அருகில் இருந்தார்.

இதுகுறித்து கவுன்சிலர் முகம்மது இப்ராகிம் நம்மிடம் கூறுகையில்; 
அதிரை பேரூராட்சியின் 21 வது வார்டு பகுதிக்கு உட்பட்ட சிஎம்பி லேன் பகுதியில் முறையான கழிவு நீர் வாய்க்கால் அமைக்கப்படாததால். இப்பகுதி குடியிருப்புகளில் வெளியேறும் கழிவு நீர் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான சிஎம்பி வாய்க்காலில் தேங்கி விடுகிறது. இதனால் துர் நாற்றம் வீசி சுகாதார சீர்கேடு ஏற்படுத்தி வந்தது.

இதையடுத்து அதிரை பேரூராட்சி பொதுநிதி ரூ. 8 லட்சம் மதிப்பீட்டில் 800 மீட்டர் நீளத்தில் குழாய்கள் அமைத்து மழைநீர் வடிகால் அமைக்கும் பணி கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது. இதன் பணிகள் சில வாரங்களில் நிறைவுபெரும். இதனால் இப்பகுதியின் சுமார் 100 குடியிருப்புவாசிகள் பயன் பெறுவார்' என்றார்.
 
 
 

அதிராம்பட்டினத்தில் புற்றுநோய் விழிப்புணர்வுக் காணொளி விளக்க முகாம் ! ( படங்கள் )

அதிராம்பட்டினம், ஆகஸ்ட் 29
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் தாருத் தவ்ஹீத் சேவை அமைப்பின் சார்பில் புற்றுநோய் விழிப்புணர்வுக் காணொளி விளக்க முகாம் பவித்ரா திருமண மஹாலில் திங்கட்கிழமை காலை நடைபெற்றது.

முகாமிற்கு அதிரை தாருத் தவ்ஹீத் சேவை அமைப்பின் செயலர் ஜமீல் எம். சாலிகு தலைமை வகித்தார். முகாமில் புற்றுநோய் சிகிச்சை நிபுணர் டாக்டர் எம். முஹம்மது இப்ராஹீம் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு புற்றுநோய் ஏற்படக்காரணம் என்ன?, இதன் பாதிப்புகள் எவ்வாறு இருக்கும் ? இவற்றை தவிர்ப்பது எப்படி? சிகிச்சை முறைகள் என்ன என்பது பற்றி காணொளிக் காட்சிகள் மூலம் விளக்கிக் கூறினார்.

முகாம் முடிவில் புற்றுநோய் குறித்து பார்வையாளர்களில் 3 பேர் எழுப்பிய சிறந்த கேள்விகளுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது. சுமார் 3 மணி நேரம் நடந்த முகாமில் பெண்கள் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டு பயனடைந்தனர். நிகழ்ச்சி ஏற்பாட்டினை அதிரை தாருத் தவ்ஹீத் சேவை அமைப்பின் நிர்வாகிகள் செய்து இருந்தனர்.

ஹஜ் செய்திகள்: ஹஜ் அவசரகால உதவி எண்: 911

அதிரை நியூஸ்:
சவூதி அரேபியா, ஆகஸ்ட் 29
சவூதி உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஒருங்கிணைந்த பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கான தேசிய மைய அறிவுறுத்தலின்படி, அவசரகால உதவி தேவைப்படுவோர் குறிப்பாக புனித மக்கா நகரில் உள்ளவர்கள் 911 எண்ணை தொடர்பு கொள்ள வேண்டும், இது குறித்த விழிப்புணர்வு குறுஞ்செய்திகளையும் அரபியிலும் ஆங்கிலத்திலும் அனைவருக்கும் அனுப்பியும் வருகின்றது.

இந்த பாதுகாப்புத் திட்டத்தில் சவூதி செம்பிறைச் சங்கம், உள்துறை அமைச்சகம், சுகாதார அமைச்சகம், தண்ணீர், சுற்றுச்சூழல் மற்றும் விவசாய அமைச்சகம், போக்குவரத்து அமைச்சகம் மற்றும் பல்வேறு அரசு செயலகங்கள் கை கோர்த்துள்ளன.

பாதுகாப்பு ரோந்து நடவடிக்கைகள், போக்குவரத்து நெரிசல்கள், சாலை பாதுகாப்பு, சமூக பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் உயர் தொழிற்நுட்ப கண்காணிப்பு கேமிராக்கள் மற்றும் ஹரம் ஷரீஃப் கண்காணிப்பு கேமிரா வளையத்தையும் இணைத்து பல்வேறு அவசரகால உதவித் திட்டங்கள் ஹஜ் யாத்ரீகர்களின் நலம் பேணலுக்காக தயார் நிலையில் உள்ளன.

Source: Arab News
தமிழில்: நம்ம ஊரான்

சவூதியில் யாசகம் கேட்பது குற்றம் !

அதிரை நியூஸ்:
சவூதி அரேபியா, ஆகஸ்ட் 29
சவூதியின் தொழிலாளர் மற்றும் சமூக நல மேம்பாட்டு அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளபடி, சவூதியில் பிச்சை எடுப்போரை ஊக்குவிக்கும் வண்ணம் அவர்களுக்கு பிச்சை வழங்காமல் அவர்களை அவர்களுக்கென சவூதி முழுவதும் செயல்படும் சிறப்பு நல மையங்களுக்கு அனுப்பும்படியும் வேண்டுகோள் விடுத்துள்ளது.

அவ்வாறு சிறப்பு நல மையங்களுக்கு அனுப்பப்படும் பிச்சைகாரர்கள் சுமார் 5 நாட்கள் தடுத்து வைக்கப்பட்டு தர்ம ஸ்தாபனங்கள் மூலம் தேவையான வாழ்வியல் உதவிகளை பெறுவதுடன் சமூகத்தில் பிச்சை எடுக்காமல் கௌரவமாக வாழவும் பயிற்சியளிக்கப்படுவர்.

இந்த வருட ஆரம்பத்தில் நடைபெற்ற 'குடும்பம், சமூகம் மற்றும் இளைஞர் நலனுக்காக' நடைபெற்ற சூரா கவுன்சிலின் கூட்டத்தில், குழந்தைகளையும் மாற்றுத் திறனாளிகளையும் வைத்து பிச்சை எடுப்போருக்கு 2 வருட தண்டனையுடன் 30,000 ரியால்கள் அபராதம் விதிக்கவும் ஆலோசிக்கப்பட்டுள்ளது.

சவூதியை சேர்ந்தவர்கள் யாராவது பிச்சை எடுத்தால் அவர்கள் முதன்முறை எனில் 6 மாதம் தடுத்து வைக்கப்படுவர் அல்லது 10,000 ரியால் அபராதம் செலுத்த நேரிடும். இரண்டாம் முறையும் ஈடுபட்டால் 1 வருட சிறையுடன் 20,000 ரியால் அல்லது இரண்டும் சேர்த்தோ விதிக்கப்படும்.

மூன்றாம் முறையும் பிச்சை எடுத்து பிடிபட்டால் 30,000 ரியால் மற்றும் 2 வருட சிறை. நான்காம் முறையும் பிடிபட்டால் மேற்படி தண்டனை அப்படியே இரட்டிப்பாகும் மேலும் அவர் பிச்சை எடுத்து சேர்த்துள்ள பணம் முழுமையாக பறிமுதல் செய்யப்பட்டு தர்ம ஸ்தாபனங்களுக்கு வழங்கப்படும்.

கடந்த ஜூன் மாதத்தில் ரியாத் மாநகரிலும், கிழக்கு மாகாணத்திலும் 150 பிச்சைக்காரர்கள் பிடிபட்டுள்ளனர். புனித ரமலான் மாதத்தின் ஆரம்ப 4 நாட்களில் ரியாத் நகரில் பிடிபட்ட 90 பிச்சைக்காரர்களில் 34 குழந்தைகளும் அடங்குவர். இவர்கள் பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள். கிழக்கு மாகாணத்தில் பிடிபட்ட 60 பேரில் 3 சவூதி நாட்டவர்களும் அடக்கம்.

முஸ்லீம்களின் ஈகை குணத்தால் இதுபோன்ற பிச்சைக்காரர்களின் நடமாட்டம் புனித ரமலான் மாதத்தில் அதிகரித்து காணப்படுகின்றன. மேலும் இவர்களை தடுக்கும் நோக்குடன் டிராபிக் சிக்னல்கள், மஸ்ஜிதுகள், பூங்காக்கள், கடைவீதிகள் மற்றும் ATM சென்டர்கள் அருகிலும் திடீர் சோதனைகள் அதிகரிக்கப்பட உள்ளன.

Source: Arab News
தமிழில்: நம்ம ஊரான்

ஹஜ் செய்திகள்: தடுப்பூசி போடாதவர்களுக்கு ஹஜ் இல்லை

அதிரை நியூஸ்:
சவூதி அரேபியா, ஆகஸ்ட் 29
சவூதி அரசின் சுகாதார அமைச்சகம்,இந்த வருடம் வருகை தரும் ஹஜ் யாத்ரீகர்கள் மத்தியில் 'தடுப்பூசி போடாதவர்களுக்கு ஹஜ் இல்லை' (No Vaccine, No Haj) என பொருள்படும் புதிய பிரச்சார திட்டத்தை தொற்று நோய்களை தடுத்திடும் நோக்குடன் முதன்முதலாக கையிலெடுத்துள்ளது. இனி வரும் ஹஜ் காலங்களிலும் இந்த தடுப்பு நடவடிக்கைகள் தொடர்வதுடன் உம்ரா பயணிகளுக்கும் விரிவுபடுத்தப்படும்.

இந்த திட்டத்தின்படி, பருவகால காய்ச்சல், இளம் பிள்ளைவாதம், மூளைக்காய்ச்சல் போன்ற நோய்களால் பாதிக்கப்பட்ட நாடுகளிலிருந்து வருவோருக்கு ஏற்கனவே அவர்கள் எடுத்துக் கொண்ட தடுப்பூசி மருந்திற்கும் கூடுதலாக இந்த ஊசியும் போடப்படும்.

பரவும் தன்மையுடைய கொள்ளை நோய்களையும், தொற்று வியாதிகளை கட்டுப்படுத்தும் நோக்குடன் செயல்படும் இத்திட்டத்தில் அடிப்படையில் வெளியுறவு துறை அமைச்சகமும் அனைத்து நாட்டு தூதரகங்களுக்கு நோய் தடுப்பு நடவடிக்கைகளை ஹஜ் யாத்ரீகர்களுக்கு மேற்கொள்ள அறிவுறுத்தியுள்ளது.

Source: Arab News
தமிழில்: நம்ம ஊரான்

அமீரகத்தில் பெட்ரோல் விலை 2 காசுகள் உயர்கிறது !

அதிரை நியூஸ்:
துபாய் ஆகஸ்ட் 29
அமீரகத்தில் மாற்றியமைக்கப்பட்ட புதிய சில்லறை விலையின்படிஈ செப்டம்பர் மாதம் பெட்ரோல் விலையில் 2 பில்ஸ் (Fils) உயர்த்தப்படுகிறது அதேவேளை டீசல் விலையில் 4 பில்ஸ் குறைக்கப்படுகிறது.

அல்ஜீரியாவில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள எண்ணெய் வள நாடுகளின் மாநாட்டை தொடர்ந்து கச்சா எண்ணெய் விலை ஓரளவு உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் பேரல் ஒன்று 49.92 டாலருக்கும், அமெரிக்காவில் 47.64 டாலருக்கும் வர்த்தகமாகி கொண்டுள்ளது.

ஆகஸ்ட் மாத சில்லறை விலைக்கும் தற்போது உத்தேசிக்கப்பட்டுள்ள செப்டம்பர் மாத விலைக்கும் உள்ள வித்தியாசத்தை படத்தைப் பார்த்து அறிந்து கொள்க.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்