.

Pages

Friday, July 28, 2017

தமிழகத்துக்கு முன்னுதாரணமான 'செருவாவிடுதி' கிராம ஆரம்ப சுகாதார நிலையம் (படங்கள்)

பசுமையைத் தூவி நிற்கும் மரங்கள், பள பள கட்டடங்கள், சுற்றுப்புறம் எங்கும் தூய்மை என ஒரு அழகிய பூங்காவைப் போல இருக்கிறது அந்த இடம். மருந்து வாடை, மருத்துவக் கழிவுகள் என மருத்துவமனைக்கு உரிய எந்த அடையாளங்களும் இல்லாமல் கார்ப்பொரேட்  மருத்துவமனைக்கு நிகராக நிமிர்ந்து நிற்கிறது ஒரு அரசு ஆரம்ப சுகாதார நிலையம்.

ஆரம்ப சுகாதார நிலையம்
தஞ்சாவூர் மாவட்டத்தின் கடைமடை பகுதிதான் பேராவூரணி. இங்கிருந்து, 11 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது செருவாவிடுதி. விவசாயத்தையே ஜீவாராதரமாகக் கொண்ட கிராமம்.  மண்ணையும்,தென்னையையும் கவனிக்கும் அளவுக்குத் தங்கள் உடல் நிலை குறித்த எந்தவிதமான கவனிப்பும், விழிப்புணர்வும் இல்லாமல் வாழும் மக்கள். இந்த ஊரில் 1968-ல் ஆரம்பிக்கபட்டது அரசு ஆரம்ப சுகாதார நிலையம். ஆரம்பத்தில் எல்லா அரசு மருத்துவமனைகளை போலவேதான் இதுவும் செயல்பட்டு வந்தது.

இன்று ஆபரேஷன் தியேட்டர், பிரசவம், குடும்பக் கட்டுபாடு, விஷ முறிவு, சித்தமருத்துவம், உள் நோயாளிகள், வெளி நோயாளிகள் பிரிவு என ஒவ்வொன்றுக்கும் தனித் தனி கட்டடங்கள். மெகா சைஸ் ஜெனரேட்டர் என ஆச்சர்யமூட்டும் வகையில் வளர்ச்சி அடைந்து வருகிறது.

இந்தச் சுகாதார நிலையத்தின் சுற்றுச்சுவரே ஈர்க்கிறது. இங்கு என்ன என்ன சிக்கிச்சைகள் கொடுக்கப்படுகின்றன? அரசு வழங்கும் திட்டங்கள் என்னென்ன? என  அனைத்து விபரங்களையும் மக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் விளக்கமாக எழுதி வைத்துள்ளார்கள்.

மருத்துவர் சௌந்தராஜன்
சுற்றுச்சூழல், சிகிச்சை, வசதிகள், உபசரிப்பு என எல்லா வகையிலும் தனித்துவமாகச் செயல்பட்டு வரும் இந்த மருத்துவமனையின் மாற்றத்துக்கு யார் காரணம் என்று கேட்டால், "எங்க டாக்டர்தான்" என்று செளந்தராஜனை நோக்கி கை நீட்டுகிறார்கள் மக்கள்.

நாம் அவரைச் சந்திக்க சென்ற போது, சிகிச்சைக்காக வந்திருந்தவர்களின் கூட்டம் அதிகமாக இருந்தது. எல்லோரிடமும்  அக்கறையாக விசாரிக்கிறார். எழுபது வயது இருக்கும்  வயதான பாட்டி, "எனக்கு என்ன நோவுன்னே தெரியலை... இடுப்புக்கு கீழே ஒரே வழியா இருக்கு... அந்த ஒவத்திரியம் தாங்க முடியல சாமி" என தன் மகனிடம் சொல்வதை போலச் சொல்லிக் கொண்டிருக்கிறார். "காலம் முழுக்க உழைத்த  உடம்பு...  எலும்பு தேய்ந்திருக்கும் இந்த மருந்த சாப்பிடு ஆத்தா சரியாயிடும்" என அன்போடு சேர்த்து மாத்திரையையும் கொடுத்து அனுப்புகிறார்.

இன்னும் சிலருக்கு சிகிச்சை அளித்துவிட்டு, "கொஞ்சம் இருங்க தம்பி வரேன்..." என  நம்மிடம் சொல்லிவிட்டு 'மருத்துவமனை சுற்றிலும் சுத்தமாக இருக்கிறதா' என ஒரு ரவுண்ட் அடித்துப் பார்த்துவிட்டு வந்து பேச ஆரம்பிக்கிறார்.
சுத்தமான மருத்துவமனை வளாகம்
"ஒரு நோயாளி குணமாவதற்கு மருந்து மாத்திரைகள் மட்டும் போதாது... சுத்தமும், சுகாதாரமும் ரொம்ப அவசியம். சுற்றுப்புறம் அசுத்தமா இருந்தா அதுவே பல  நோய்கள் வருவதற்கு வழி வகுக்கும். அதனால்தான் தூய்மை விஷயத்தில் அதிகம் அக்கறை காட்டுகிறேன்.

நான் இந்த பகுதியின் வட்டார மருத்துவ அலுவலராகவும், இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தின் நிலைய மருத்துவராகவும் இருக்கிறேன். 1992 -ம் ஆண்டுதான்  நான் இங்கு பணிக்கு வந்தேன்.

நானும் கிராமப்பகுதியில் பிறந்தவன்தான்.  பொதுவாக, கிராமப் பகுதிகளில் இருக்கிற மக்களுக்குச்  சுகாதாரம் குறித்து போதிய விழிப்புஉணர்வு இல்லாமல் இருப்பார்கள். அதுவும் கர்ப்பிணிப் பெண்களுக்குச் சொல்லவே வேண்டாம். பிரசவம் குறித்த பயம், சத்துணவு இல்லாமை எனப் பல பிரச்னைகள். தாய், சேய் மரணம் அதிகமாக நடக்கும். இவற்றை முதலில் சரி செய்ய வேண்டும் என நினைத்தேன்.

வாரம்தோறும் செவ்வாய்கிழமைகளில் கர்ப்பிணி பெண்கள் சிகிச்சைக்காக வருவார்கள். அவர்களிடம், "சத்து குறைபாடுள்ள உணவுகளைச் சாப்பிடுவதால்தான் உங்களுக்கும்,குழந்தைக்கும் குறைபாடு ஏற்பட்டு விபரீதங்கள் நடக்கின்றன. சத்தான உணவுகளைச் சாப்பிடுங்கள்" என்று சொல்லி, எதெல்லாம் சத்தான உணவுகள் என்றும் சொல்லி அனுப்புவேன்.

ஒரு கட்டத்தில், "நாம ஏன் இதை சொல்வதோடு நிறுத்திக்கிறோம்... நாமே சத்தான உணவைத் தயாரித்துக் கொடுத்தால் என்ன" என்ற யோசனை வந்தது. உடனே  சில நண்பர்களைப் பிடித்து விஷயத்தை சொன்னேன். அவர்களும் ஆர்வமாக உதவ முன் வந்தார்கள். செவ்வாய்கிழமை தோறும் கர்ப்பிணிகளுக்கு சத்தான உணவு கொடுக்க ஆரம்பித்தோம். 2007-ம் வருடத்தில் இருந்து இந்தத் திட்டம் நடைமுறையில் இருக்கிறது. இங்கு செயல்படுத்திய பிறகே அரசு தமிழகம் முழுவதும் இந்தத் திட்டத்தை செயல்படுத்த உத்தரவிட்டது..."  எனப் பெருமிதமாகச் சொல்கிறார் டாக்டர் செளந்தராஜன்.
கர்பிணிப் பெண்களுக்கான சிகிச்சைகள்
தமிழக அரசு கர்ப்பிணிப் பெண்களுக்கு வளைகாப்பு நிகழ்ச்சியை நடத்தி வருகிறது. அதற்கும் முன்னுதாரணமாக இருந்தது இந்த ஆரம்ப சுகாதார நிலையம்தான்.   "கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு போடுவது, பிரசவகாலத்தின் போது ஏற்படும் பய உணர்வை போக்கத்தான். அது மட்டும் இல்லாமல் வளையல் சத்தத்தால் வயிற்றில் இருக்கும் குழந்தை ஆக்டிவாக இருப்பதோடு அதன் வளர்ச்சியும் அதிகமாகும். இந்த விழா இரு உயிர்களுக்கான நலன் சம்பந்த பட்ட விஷயம்.

அதனால் நமது மருத்துவமனையிலேயே வளைகாப்பு விழாவையும் நடத்த வேண்டும் என நினைத்தேன். அதற்காக ஒரு திருமண மண்டபத்தை பிடித்து  700 கர்ப்பிணி பெண்களை அழைத்து வந்து ஒரே இடத்தில் அமர வைத்தோம். கூடவே அவர்களின் உறவினர்களும். கர்ப்பிணி பெண்களுக்கு வளையலிட்டு வகை வகையான விருந்து வைத்து மருத்துவ குழுவினரோடு ஊரே கூடி வளைகாப்பு நடத்தபட்டது. அந்த நேரத்தில் பிரசவம் குறித்த விழிப்புஉணர்வையும் ஏற்படுத்தினேன். மிக பிரமாண்டமாக  நடந்த இந்த வளைகாப்பு திருவிழாவில் அரசியல் பிரமுகர்கள், தன்னார்வ தொண்டர்கள், நன்கொடையாளர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டார்கள். பின்னர்  தமிழக அரசு எல்லா ஊர்களிலும் வளைகாப்பு விழாவை நடத்த வேண்டும் என ஒரு திட்டமாகவே  உத்தரவிட்டது.  இன்று எங்கும் இந்த விழா நடப்பதற்கு நாங்கள்தான் முன்னோடி எனச் சொல்வதில் பெரும் மகிழ்ச்சி எங்களுக்கு.

சிகிச்சை பெறும் மக்கள்
ஒவ்வொரும் மாதமும் 20 முதல் 30 பிரசவங்கள் இங்கு நடக்கின்றன. கடந்த மாதம் ஒரே நேரத்தில் 18 பேருக்குக் குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அந்த அளவிற்கு இங்கு அனைத்து வசதிகளும் உள்ளன. எங்கள் செயல்பாட்டைப் பார்த்து மாவட்ட ஆட்சியர் விருது வழங்கியுள்ளார். ISO தரசான்றும் எங்கள் ஆரம்ப சுகாதார நிலையத்துக்குக் கிடைத்துள்ளது. இந்த வளர்ச்சி நன்கொடையாளர்கள் மற்றும் எங்க ஊழியர்களால்தான் சாத்தியமானது என்று நெகிழ்ச்சியோடு சொல்கிறார் டாக்டர் சௌந்தர்ராஜன்.

மருத்துவமனையைச் சுற்றி ஐந்து ஏக்கர் நிலம் இருக்கிறது. அதில் காய்கறித் தோட்டம், பசு மாடுகள் வளர்ப்பது அதன் மூலம் கிடைக்கும் பாலை கர்ப்பிணிகளுக்குக் கொடுப்பது, குழந்தைகள் விளையாட்டுப் பூங்கா அமைப்பது எனப் பல திட்டங்கள் அரசு மற்றும் நன்கொடையாளர்கள் உதவியோடு செய்ய இருக்கிறார்கள். நன்கொடையாளர்களை மறக்காமல் அவர்களின் பெயர்களைக் கல்வெட்டிலுல் எழுதி நன்றி செலுத்துகிறார்கள்.

"சுத்தமா இருக்கும், சிகிச்சை தரமா இருக்கும் என்றுதான் எல்லோரும் தனியார் மருத்துவமனைக்குச்  செல்கிறார்கள்.  எங்களுக்கு எல்லா வசதிகளும்  இங்கேயே கிடைத்து விடுகின்றன..." என்கிறார்கள் இப்பகுதி மக்கள்.

ஒரு மருத்துவர் மனது வைத்ததால்  ஓர் ஆரம்ப சுகாதார நிலையம் மாறியது. எல்லா அரசு மருத்துவர்களும் மனது வைத்தால்..?

நன்றி: விகடன்

அதிரையில் காங்கிரஸ் கட்சி உறுப்பினர் சேர்க்கை கலந்தாய்வு கூட்டம் !

அதிராம்பட்டினம், ஜூலை 28
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் வழிகாட்டுதல்படி, தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவர் கிருஷ்ணசாமி வாண்டையார் அறிவுறுத்தலின் பேரில், அதிராம்பட்டினம் பேரூர் காங்கிரஸ் கட்சி சார்பில், கட்சி உறுப்பினர் சேர்க்கை குறித்த கலந்தாய்வு கூட்டம் கட்சி அலுவலகத்தில் வியாழக்கிழமை இரவு நடைபெற்றது.

அதிரை பேரூர் காங்கிரஸ் தலைவர் எஸ்.எம் முகமது முகைதீன் கூட்டத்திற்கு தலைமை வகித்தார். மாவட்ட பார்வையாளர் ஏ. துரைமாணிக்கம் கூட்டத்தில் கலந்துகொண்டு உறுப்பினர் சேர்க்கை பணியை ஆய்வு செய்து பேசினர்.

கூட்டத்தில், கட்சி நிர்வாகிகள் அனைவரும் அதிராம்பட்டினம் பகுதி வார்டு வாரியாகச் சென்று புதிய உறுப்பினர்களை அதிக அளவில் சேர்த்து அதன் விவரங்களை மாவட்ட கட்சி அலுவலகத்தில் விரைவில் சமர்ப்பிக்க வேண்டும் என்று கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

கூட்டத்தில், காங்கிரஸ் கட்சி அதிரை பேரூர் நிர்வாகிகள் அதிரை பாருக், ஏ கோவிந்தன், நாராயண சாமி, கார்த்திகேயன், பி.திலகராஜ் கட்டபொம்மன், தாவூது பாட்சா, தெளலத் பாட்சா என்கிற சேக்தாவூது, சம்சுல் ஹக் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 
 
 
 
 
 

புனித மக்கா அருகே 'அல் பைஸாலியா' எனும் புதிய ஸ்மார்ட் மாநகரம் !

அதிரை நியூஸ்: ஜூலை 28
புனித மக்கா மற்றும் ஜித்தாவில் காணப்படும் ஜன மற்றும் வாகன நெரிசலை குறைக்கும் நோக்குடன் 'அல் பைஸாலியா' (Al Faisaliah) எனும் புதிய ஸ்மார்ட் துணை நகரம் சுமார் 2,450 சதுர கி.மீ சுற்றளவில் புதிய விமான நிலைய வசதியுடன் அமைக்கப்படுகிறது.

இந்த புதிய நகரில் 2050 ஆம் ஆண்டிற்குள் சுமார் 6.5 மில்லியன் மக்கள் தங்கும் வசதியுடன் சுமார் 995,000 வீட்டுத் தொகுதிகள் கட்டப்படும். சுகாதாரம், கல்வி, தொழிற்நுட்பம் மற்றும் சேவைத்துறைகளில் சுமார் 1 மில்லியன் வேலைவாயப்புக்கள் உருவாக்கப்படும். இந்த துணை நகரம் புனித மக்கா மாநகரின் நீட்சியாகவே விளங்கும்.

இந்த துணை நகரில் குடியிருப்பு பகுதிகளுடன், வர்த்தக மையங்கள், கலாச்சார மையங்கள், சுகாதார மையங்கள், கல்விசார் மையங்கள், சேவைத்துறைகள், அரசு அலுவலகங்கள், விமான நிலையம், ரெயில், மெட்ரோ, டிராம், பஸ் வசதிகளுடன் மாற்றத்தக்க எரிசக்தியில் தயாராகும் மின்சாரம் மற்றும் நிலையான விவசாய வசதிகளும் ஏற்படுத்தப்படும். மேலும், ஹஜ் மற்றும் உம்ராவுக்கான சிறப்பு அலுவலகம், இஸ்லாமிய சட்ட (பிக்ஹ்) மையம், தூதரக அலுவலகங்கள், வணிக மண்டலங்கள், கடைவீதிகள், கடற்கரை மற்றும் பொழுதுபோக்கு மையங்கள் என அனைத்து வசதிகளும் ஏற்படுத்தித் தரப்படும்.

சிங்கப்பூர் மற்றும் மலேஷியாவின் புத்ரா ஜெயா ஆகியவற்றை முன்மாதிரியாக கொண்டு சர்வதேச முதலீட்டாளர்களை ஈர்க்கத் தேவையான கட்டமைப்புகளுடன் 9.5 கிகாவாட்ஸ் சக்தி மாற்றத்தக்க மின்சாரமும் (Gigawatts form Renewable energy) தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளதுடன் ஹஜ் உம்ரா பயணிகள் உட்பட வருடத்திற்கு சுமார் 10 மில்லியன் சுற்றுலாவாசிகளையும் ஈர்க்க திட்டமிடப்பட்டுள்ளது.

Source: Saudi Gazette
தமிழில்: நம்ம ஊரான்

தமிழ்ச் சொல்லாளர் மென்பொருள் குறுந்தகடு வெளீயிடு !

தஞ்சாவூர் தமிழ் பல்கலைக் கழக கூட்ட அரங்கில் அம்மா மென்தமிழ் - தமிழ்ச் சொல்லாளர் மென்பொருள் குறுந்தகட்டினை மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை இன்று (27.07.2017) வெளியிட தமிழ் பல்கலைக் கழக துணைவேந்தர் முனைவர் திரு.க.பாஸ்கரன் அவர்கள் பெற்றுக் கொண்டார்.

அம்மா மென்தமிழ் - தமிழ்ச் சொல்லாளர் மென்பொருள் குறுந்தகட்டினை வெளியிட்டு மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை பேசியதாவது;
உலகத்தில் உள்ள மொழிகளில் எல்லா மொழிகளுக்கும் மூத்த மொழியாக தமிழ் மொழி இருந்துள்ளது.  மற்ற மொழிகளுக்கு  கால வளர்ச்சிக்கு ஏற்றாற்போல் தமிழ் மொழியும் உலக அரங்கில் மென்பொருள் சிறந்து விளங்குகிறது. அனைத்து அரசு அலுவலகங்களின் செயல்பாடுகளும், முழுமையாக தமிழில் அமைதல் வேண்டும்.  அந்த வகையில் கணினி தொழில் நுட்ப வளர்ச்சிக்கேற்ப தமிழ் வளர்ச்சியை கருத்தில் கொண்டு கணினியில் ஆங்கில மொழிகளுக்கென பிழை திருத்தி இருப்பதை போல், தமிழில் ஒற்றுப்பிழை, சந்தி, மயங்கொலி உள்ளிட்ட இலக்கணப் பிழைகள் ஏதுமின்றி வரைவுகளை தயார் செய்யும் வகையில், “அம்மா மென்தமிழ்ச் சொல்லாளர்” என்னும் மென்பொருள் உருவாக்கப்பட்டுள்ளது.  தமிழ்-ஆங்கில அகாரதி, அயற்சொல் அகாரதி, மயங்கொலி சொல் அகாரதி, தமிழ்நாடு ஆட்சிச் சொல்லகராதி ஆகிய மின்னகராதிகளாக இம்மென்பொருளில் இணைக்கப்பட்டுள்ளது. மற்ற மொழிகளுக்கேற்றாற் போல் நாம் தமிழ் மொழியில் கணினியில் மாற்றிக் கொள்ள இந்த அம்மா  மென்தமிழ் உருவாக்கப்பட்டுள்ளது.

தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழத்தில் மென்பொருள் குறுந்தகடு அனைத்துத்துறை அரசு அலுவலர்களுக்கும் இலவசமாக வழங்கப்படுகிறது. இந்த அம்மா தமிழ் மென்பொருள் முழுமையாக பயன்படுத்தி மேன்மேலும் தமிழ் மொழி வளர்ச்சியடைவதற்கும் கணினியுடன் மென் தமிழ் பயன்படுத்துவதற்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது. கணினி பயன்படுத்தும் அனைத்து நபர்களும் அம்மா தமிழ் மென்பொருள் பயன்படுத்திக் கொள்ளலாம்.  இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை தெரிவித்தார்.

இவ்விழாவில் தமிழ் வளர்ச்சி இயக்குநர் கோ.விசயராகவன், மொழி பெயர்ப்பு துறை இயக்குநர் ந.அருள், கலை பண்பாட்டுத்துறை துணை இயக்குநர் இரா.குணசேகரன், தமிழ் வளர்ச்சித் துறை உதவி இயக்குநர் க.பொ.இராசேந்திரன், பேராசிரியர் ந.தெய்வசுந்தரம், தமிழ் பல்கலைக்கழக பதிவாளர் ச.முத்துக்குமார் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ரெ.சிங்காரம் மற்றும் பல்வேறுத் துறை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Thursday, July 27, 2017

ஜித்தாவில் போலி கோமியம் விற்றவர் கைது !

அதிரை நியூஸ்: ஜூலை 27
இதை எழுதும் போதே குமட்டுகிறது, இருந்தாலும் என்ன செய்ய! உலகில் சிலர் இப்படித்தான் என தெரிந்து கொள்வதில் தவறில்லையே.

வட நாட்டு இந்தியர்களில் ஒரு சிறு பிரிவினர் தங்களின் மத நம்பிக்கையின் அடிப்படையில் மாட்டு மூத்திரத்தை புனித மிகுந்த கோமியம் என அருந்துவார்கள். அதேபோல் வெகுசிலர் ஓட்டக மூத்திரத்தை மருத்துவ நம்பிக்கையில் பயன்படுத்தி வரும் செய்தியும், அதில் அவர்கள் ஏமாந்த செய்தியும் வெளியாகியுள்ளது.

ஜித்தா அருகில் குர்ஷித் என்ற பாகிஸ்தானியர் ஒருவர் ஓட்டக கோமியத்தை பாட்டில்களில் அடைத்து விற்பனை செய்து வந்துள்ளார். இவருடைய வாடிக்கையாளர்கள் யார், எந்த நாட்டை சேர்ந்தவர்கள் என்பது குறித்து விபரம் ஏதும் வெளியாகவில்லை.

விஷயம் இது தான், ஒட்டகம் மூத்திரம் என தனது மூத்திரத்தையே பாட்டில்களில் அடைத்து விற்பனை செய்து வந்தது லேப் டெஸ்ட் மூலம் உறுதியானதை தொடர்ந்து சவுதி போலீஸார் அவனை கைது செய்துள்ளனர்.

உவ்வே.......

Source: Emirates 247
தமிழில்: நம்ம ஊரான்

பொதுமன்னிப்பு காலம் நிறைவு: சவுதியில் சட்டவிரோதமாக தங்கியிருப்போர் மீது கடும் நடவடிக்கை !

அதிரை நியூஸ்: ஜூலை 27
சவுதி அரேபியாவில் கடந்த ஜூன் 5 ஆம் தேதி முதல் 3 மாத காலத்திற்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டு சவுதியில் சட்ட விரோதமாக தங்கியுள்ளவர்கள் வெளியேற அவகாசம் வழங்கப்பட்டது மேலும் 1 மாதத்திற்கு நீட்டிக்கப்பட்டு கடந்த திங்கட்கிழமையுடன் அதுவும் நிறைவடைந்தது.

நீட்டிக்கப்பட்ட 4 மாத பொதுமன்னிப்புக் காலம் இனியும் நீட்டிக்கப்படமாட்டாது என்றும் சட்ட விரோதமாக தங்கியுள்ளவர்கள் பிடிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்படுவதுடன் கடும் அபராதமும் விதிக்கப்படும் என்றும் அவர்கள் மீண்டும் சவுதிக்குள் வர தடை செய்யப்படுவார்கள் என்றும் சவுதி ஜவாஜத் துறையின் பொது மேலாண்மை இயக்குனர் மேஜர் ஜெனரல் சுலைமான் அல் யஹ்யா தெரிவித்துள்ளார்.

இந்த 4 மாத பொதுமன்னிப்பு காலத்தில் சுமார் 6 லட்சம் சட்ட விரோத குடியேற்றக்காரர்கள் வெளியேறியுள்ளதாகவும், சுமார் 15,000 பேர் மீண்டும் முறையான ஆவணங்களுடன் திரும்பி வந்துள்ளதாகவும், சிலர் நாட்டை விட்டு வெளியேறுவதற்கான நடைமுறைகளை முடித்துவிட்டு இன்னும் வெளியேறாமல் இருப்பதாகவும் அவர்களும் பிடிக்கப்பட்டு அபராதம் மற்றும் சிறை தண்டனை விதிக்கப்படுவார்கள் எனவும் தெரிவித்தார்.

Source: Saudi Gazette
தமிழில்: நம்ம ஊரான்

67 நாடுகளுக்கு ஆன்லைன் மூலம் டூரிஸ்ட் விசா: ஓமன் அறிவிப்பு !

அதிரை நியூஸ்: ஜூலை 27
வளைகுடா நாடுகள் உட்பட 67 சர்வதேச நாடுகளைச் சேர்ந்த சுமார் 116 வகையின் கீழ் வருபவர்கள் (Professionals) ஓமன் டூரிஸ்ட் விசாக்களை இனி ஆன்லைன் வழியாக பெற்றுக் கொள்ளலாம். இந்த டூரிஸ்ட் விசாக்களை பெற ஸ்பான்ஸர்கள் யாரும் தேவையில்லை.

https://evisa.rop.gov.om/ என்ற இந்த இணைய தளத்திற்குள் சென்று விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை பதிவேற்றிய பின் அங்கீகரிக்கப்பட்ட கிரடிட் கார்டுகள் வழியாக கட்டணத்தை செலுத்திவிட்டால் ஆன்லைன் வழியாகவே விசா குறித்த விபரங்கள் தெரிவிக்கப்படும்.

எதிர்வரும் ஆண்டுகளில் டூரிஸ்ட்களுடன் வர்த்தகர்கள், முதலீட்டாளர்கள், ஆராய்ச்சியாளார்கள், மாணவர்கள் போன்றோரும் இவ்வசதியை பெற்றுக் கொள்ளும் வகையில் இவ்வசதி விரிவுபடுத்தப்படவுள்ளது. கடந்த ஆண்டு 3 மில்லியன் சுற்றுலாவாசிகள் ஓமனுக்கு வருகை தந்துள்ள நிலையில் இது எதிர்வரும் 2020 ஆம் ஆண்டிற்குள் 4 மில்லியனுக்கு மேல் எகிறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

ஷார்ஜா சுவர்களில் நோட்டீஸ் ஒட்டினால் கடும் தண்டனை !

அதிரை நியூஸ்: ஜூலை 27
பொதுவாக இந்த சட்டம் அமீரகத்தின் அனைத்து பகுதிகளிலும் நடைமுறையில் உள்ள சட்டம் தான் என்றாலும் சட்டத்தை மீறிபவர்கள் தொடர்ந்து நோட்டீஸ் ஒட்டிக் கொண்டுள்ளதால் வெகுண்டெழுந்துள்ள ஷார்ஜா மாநகராட்சி அதிகாரிகள் இனி நோட்டீஸ் ஒட்டி பிடுபடும் நபர்கள் மீது போலீஸ், மாநகராட்சி மற்றும் ரியல் எஸ்டேட் துறை ஆகியவற்றில் புகார் அளிக்கப்பட்டு கடும் அபராதத்துடன் கூடிய தண்டனைகள் வழங்கப்படும் என எச்சரித்துள்ளது.

பொதுவாக ஷேரிங் அக்காமடாமேசன் (வாழுமிடத்தை பகிர்ந்து கொள்ளுதல்), பெட் ஸ்பேஸ் (படுக்கை வசதி) குறித்த விளம்பரங்களை ஏ4 சைஸ் தாளில் பல படிகள் எடுத்து கண்ணில்படுகின்ற சுவர்கள், விளக்கு கம்பங்கள், நோட்டீஸ் போர்டுகள், பாலங்கள், சுரங்கவழிப் பாதைகள் போன்றவற்றில் ஒட்டிவிட்டு செல்வதால் நகரின் தூய்மையும், அழகும் கெடுகின்றன.

மேலும் சக நண்பர்களுடன் ஏற்படும் மனஸ்தபாங்களை, சண்டை சச்சரவுகளை பழி தீர்த்துக் கொள்ளும் வகையிலும் போலி நோட்டீஸ் விளம்பரங்களையும் சிலர் ஒட்டி தொடர் தொலைபேசி அழைப்பின் வழியாக தொந்தரவு தருவதன் மூலம் எதிராளியை பழிவாங்கிவிட்டதாக அற்ப சந்தோஷமடைந்து கொள்கின்றனர் என்றும் இத்தகையவர்களும் இனி தப்ப முடியாது தெரிவித்தனர்.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்