அல் மகாதிப்பின் இனிய அறிவிப்பு எங்களை சுமார் 25 ஆண்டுகளுக்கு பின் இழுத்துச் சென்றது. மேலத்தெருவில் பழைய ஜூம்ஆ பள்ளியை மையமாக கொண்டு 'சுன்னத்வல் ஜமாஅத் இளைஞர்கள் சங்கம்' என்ற பெயரில் அன்றைய மாணவர்களும் இளைஞர்களும் இணைந்து செயல்பட்டோம், இந்த சங்கம் புதுப்பள்ளியை மையமாக கொண்டு இன்றும் இயங்கி வரும் 'ஹிமாயத்துல் இஸ்லாம் சங்கத்தினை' முன்மாதிரியாக கொண்டு உருவாக்கப்பட்டது. இதன் மூலம் எங்கள் சக்திக்குட்பட்டு பல்வேறு மார்க்க மற்றும் சமுதாய பணிகளை செய்துள்ளோம். நிற்க!
80களின் மத்தியில் கும்பகோணம் அல் அமீன் மெட்ரிக் பள்ளியில் படித்தபோது, அய்யம்பேட்டையில் ஊர் ஜமாஅத் சார்பாக வருடந்தோறும் நடைபெறும் இஸ்லாமிய அறிவுத்திறன் போட்டியில் கலந்து கொண்டு எங்கள் பள்ளியின் சக மாணவர்கள் பரிசுகளை அள்ளி வருவார்கள் அதனால் உந்தப்பட்ட எங்கள் உள்ளங்களும் நம்முடைய அதிரையிலும் இதைப்போன்ற இஸ்லாமிய அறிவுத்திறன் போட்டிகளை நடத்த வேண்டும், மாணவர்களின் இஸ்லாமிய அறிவுத்திறன் வளர நம்மால் இயன்றதை செய்வதுடன் நாமும் கற்றுக் கொள்ள வேண்டும் என அவா கொண்டதை 'சுன்னத்வல் ஜமாஅத் இளைஞர்கள் சங்கம்' வழியாக நிறைவேற்றிக் கொள்ள அல்லாஹ் நாடினான், அல்ஹம்துலில்லாஹ்.
80களின் இறுதியில் என்று நினைக்கின்றேன், மேலத்தெரு ஜூம்ஆ பள்ளியின் பின்புறம் அமைந்துள்ள மைதானத்தில் இஸ்லாமிய அறிவுப் போட்டிகள் என்ற தலைப்பின் கீழ் 'பேச்சுப் போட்டி' 'வினாடி வினா' 'கிராஅத் போட்டி' (இக்ராஹ் அல் குர்அன் என்பதே சரியான சொல் என்பதை பின்பு அறிந்து கொண்டோம்) பாங்கு சொல்லும் போட்டி என 4 பிரிவாக, மாணவ மாணவியருக்கு தனித்தனியாகவும் நடத்தினோம்.
முதல் நாள் மேலத்தெரு சங்கத்தில் வைத்து தேர்வு போட்டிகளும் மறுதினம் மக்கள் முன் மேடையில் இறுதிப்போட்டிகள் எனவும் நடத்தப்பட்டன. இதில் கலந்து கொண்டு ஏராளமான பரிசுகளை அள்ளிச் சென்றவர்கள் இமாம் ஷாபி பள்ளி மாணவ, மாணவிகளே. அவர்களுடன் போட்டியிட்டி காதிர் முகைதீன் பள்ளி மாணவர்களும் பல பரிசுகளை பெற்று நாங்களும் சளைத்தவர்கள் இல்லை என நிரூபித்தனர். அதிரை அளவில் மட்டுமே நடத்தப்பட்ட இப்போட்டிகளில் தனிப்போட்டியாளர்களும் கலந்து கொண்டுள்ளனர்.
இந்த போட்டிகளின் நடுவர் பெருமக்களாக காலம்சென்ற அதிரையின் அறிஞர், கண்ணியத்திற்குரிய அலி அலீம் அவர்களும், செய்யதலி அலி அலீம் அவர்களும், பேராசிரியர் பரக்கத் அவர்களும், பேராசிரியர் அப்துல் காதர் அவர்களும், காதிர் முகைதீன் பள்ளியின் ஆசிரியப் பெருந்தகைகளான ஹாஜா முகைதீன் சார் அவர்களும், ஷேக் தாவூது சார் அவர்களும், மும்தாஜ் டீச்சரும் நடுவர்களாக சிறப்புடன் செயலாற்றினர்.
சுமார் 500 கேள்விகள் அடங்கிய வினாடி வினா போட்டிக்கான கேள்வி பதில்களை குர்ஆனிலிருந்தும் ஹதீஸிருந்தும் அல்லாஹ்வினுடைய உதவியால் தொகுத்தேன் மேலும் இமாம் ஷாபி பள்ளி உஸ்தாதாக்களும் அவர்களே மனமுவந்து விரும்பி உதவினர். கேள்வி பதில் தொகுப்பை போட்டியாளர்களிடம் வழங்குமுன் கண்ணியத்திற்குரிய அலி அலீம் அவர்களிடம் காட்டி ஒப்புதல் பெற்றுக் கொண்டோம்.
80களின் இறுதியில் நாங்கள் நடத்திய முதலாம் ஆண்டு போட்டியில் வெற்றி பெற்ற சகோதரிகள் இருவர் இன்று அதிரை பேரூராட்சி மன்ற கவுன்சிலர்களாக உள்ளனர் அதிலும் ஒருவர் தான் பெற்ற மார்க்கக் கல்வியை இன்று பலரும் பெற்றும் பயனடைய வேண்டும் என்ற நன்னோக்கில் அதிரை தாருத் தவ்ஹீத் நடத்தும் பிலால் நகர் தர்பியா சென்டரில் சம்பளமில்லா ஆசிரியையாக பணியாற்றிக் கொண்டுள்ளார், அல்லாஹ் அவர்களுக்கு இம்மையிலும் மறுமையிலும் வெற்றியை தருவானாக. அதேபோல் தொடர்ந்து பல வருடங்கள் பரிசு பெற்ற சேக்கனா நிஜாம் அவர்களும் வெற்றிகரமாக ஒரு இணையதளத்தை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது. இன்னும் கலந்து கொண்ட, வெற்றிபெற்ற பலரும் பல்வேறு உயர்நிலைகளில் இருப்பீர்கள் என நம்புகிறேன் (அனைவருடைய பெயரையும் ஞாபகத்தில் கொண்டுவர இயலவில்லை என்ற என் குறையை தவிர பிறருடைய பெயரை மறைக்க வேண்டும் என்ற எண்ணமில்லை).
காலச்சூழலால் பலரும் பல திசைகளுக்கு சென்று விட்டதாலும், அப்போது தொடங்கப்பட்ட, பேராசிரியர் பரக்கத் அவர்களின் தலைமையிலான பைத்துல்மால் அமைப்பு அதிரையில் திருக்குர்ஆன் மாநாட்டில் இதுபோன்ற போட்டிகளை சுவீகரித்துக் கொண்டு இன்னும் இளமையுடன் தொடர்ந்து நடத்தி வருவதாலும் நாங்கள் விடைபெற்றுக் கொண்டோம். அது இன்று அல் மகாதிப் போன்றோர்களாலும் முன்னெடுத்து செல்லப்படுவதால் மிக்க அகம் மகிழ்கின்றோம், ஒரு நல்ல காரியத்திற்கு தூண்டுகோளாய் அமைந்ததற்காக அல்லாஹ்விற்கு நன்றி செலுத்துகின்றோம்.
அன்று சில வருடங்கள் நாங்கள் இதுபோன்ற இஸ்லாமிய அறிவுத்திறன் போட்டிகளை நடத்திட உறுதுணையாய் இருந்த சக சுன்னத்வல் ஜமாஅத் இளைஞர் சங்க நிர்வாகிகளையும், உறுப்பினர்களையும், நன்கொடைகள் பரிசுகள் என வழங்கியோர்களையும், நடுவர்களாய் பணியாற்றியோரையும், இன்னும் போட்டிகளில் கலந்து கொண்ட அனைவரையும், போட்டிகள் நிறைவுறும் வரை பொறுமையுடன் காத்திருந்து நல்லாதரவு அளித்த பொதுமக்களையும், அனைத்திற்கும் மேலாக எல்லாம் வல்ல ரஹ்மானையும் நன்றியுடன் நினைவுகூர்ந்து விடைபெறுகிறேன்.
குறிப்பு:
அதிரைஅமீன்
&
S.அப்துல் காதர்

Wow
ReplyDeleteMasha Allah
பதிவுக்கு நன்றி.
ReplyDeleteதகவலுக்கும் நன்றி.
நமதூரிலும், நமதூரை சுற்றியுள்ள ஊர்களிலும் இஸ்லாமியர்கள் மத்தியில் இதுபோன்ற மார்க்க சம்பத்தப்பட்ட ஏனைய நிகழ்ச்சிகள் தொடங்குவதற்கு முக்கிய காரணமாக இருந்த அன்று 1970களில் இலங்கை ஒலிபரப்பு கூட்டுஸ்தாபனம் தமிழ் சேவை ஒன்றில் தினமும் இரவு 8.00 மணிமுதல் 9.00 மணிவரை ஒளிபரப்பி வந்த முஸ்லிம் நிகழ்ச்சியே காரணம் என்றால் அதுவே சாலப் பொருந்தும்.
அந்த நிகழ்ச்சி ரேடியோ அலைவரிசை வகையில், மத்தியஅலைவரிசை (MW-285M/1089Khz)285மீட்டர்/1089கிலோஹெட்ஸ், சிற்றஅலைவரிசை(SW-60M/5120Khz)60மீட்டர்/5120கிலோஹெட்ஸ் ஆகிய அலைவரிசைகளில் நடத்தி வந்த “ராவுத்தர் நெய்னா முஹம்மது மற்றும் ஆமினா பேகம்” இவர்கள் தொகுத்து வழங்கிய ஏனைய இஸ்லாமிய நிழச்சிகள் நம் தமிழகத்திலும் அதிக வரவேற்ப்பை பெற்று இருந்தது என்பதை நான் இங்கு பதிய விரும்புகின்றேன்.
வாரத்தில் மூன்று நாட்கள் “திங்கள், புதன் மற்றும் வெள்ளி” இந்த கிழமைகளில் அறிவுக்களஞ்சியம் என்ற நிகழ்ச்சி நடைபெறும், இதில் பெரும்பாலும் மாணவச் செல்வங்களே பங்கு பெறுவார்.
வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்.
இப்படிக்கு.
கோ.மு.அ. ஜமால் முஹம்மது.
த/பெ. மர்ஹூம். கோ. முஹம்மது அலியார்.
Human Rights & Consumer Rights Included, Thanjavur District Organizer
Adirampattinam-614701. Email:- consumer.and.humanrights614701@gmail.com
இது குறித்து விரிவான ஒரு ஆக்கம் எழுதினால்தால் தெளிவாக புரியும் என்பது என்கருத்து, இன்ஷா அல்லாஹ்.
Deleteஇப்பவெல்லாம் யாரு ரேடியோ கேட்கிறாங்க , டிவி முன்னால உட்கார்ந்து அழுகிறாங்க. சரி அது போகட்டும், துல்லியமா அலைவரிசைகளை நினைவு வட்சிகிரீங்க, ம் .. சூப்பர் சூப்பர்.
Deleteஎன்னை 1970களில் "அதிராம்பட்டினம் ஜமால் முஹம்மது" என்ற பெயரளவில் வெளி உலகுக்கு அறிமுகப்படுத்தியது என்றால், அந்தப் பெருமை இலங்கை வானொலிக்கு மட்டும்தான் உண்டு.
Deleteஆடம்பர அரங்கில் கிராத் போட்டி அவசியமா?
ReplyDeleteகிராத் போட்டி போன்றவை நடத்தப்படுவது தவறில்லை. சிறுவர்களை ஊக்குவிக்கும் இதுபோன்ற போட்டிகள் மிகவும் அவசியமனது. ஆனால் இவற்றை ஆடம்பர செலவு செய்து. அலங்கரிக்கப்பட்ட பந்தல்கள் இட்டு நடத்தப்படுவது அவசியமா?
இதற்கு செய்யும் செலவை வேறு ஏதாவது நல்ல காரியங்களுக்கு உபயோகப்படுத்தலாமே. இனி வரும் காலங்களில் நிகழ்ச்சி நடத்துபவர்கள் ஆடம்பரம் இல்லாமல் எளிமையாக நடத்தவும்
மக்களுக்கு உபதேசம். பித்அத், ஆடம்பரம். தனக்கு அவசியம். இதுதான் இவர்கள் காட்டும் மார்க்கம். சிந்திக்க மறுக்கும் உலகம்.
ReplyDeleteகாலம் கருதி நினைவலைகளை பகிர்ந்தகொண்டமைக்கும், சமுதாய தொண்டுகள் தொடர அதிரைஅமீன், S.அப்துல் காதர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்,
ReplyDelete