.

Pages

Monday, December 1, 2014

அதிரை அமீனின் பார்வையில் துபாய் மியூசியம் ! [ படங்கள் இணைப்பு ]

014 டிசம்பர் 2 ஆம் நாள் அமீரகம் தனது 43வது தேசிய தினத்தை கொண்டாட உள்ள நிலையில், சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த துபையை பற்றியும் கொஞ்சம் எழுதுப்பா என நண்பர்கள் உசுப்பேற்ற, நவீன துபையை பற்றி எழுத அதிகமானோர் உள்ளதால் நாம் பழமையை போற்றுவோம் என தீர்மானித்தோம்.

பர்துபை மற்றும் தேரா பகுதியில் கைகெட்டிய ( காலுக்கெட்டிய ) தூரத்தில் பலப்பல வரலாற்று பொக்கிஷங்கள் நிறைந்திருந்தாலும், நம்மில் எத்தனை பேர் அவைகளைப் போய் ஆர்வமுடன் பார்த்திருப்போம் என்பது மிகப்பெரும் கேள்விக்குறியே!

பொதுவாக நகரங்களில் மியூசியம் இருக்கும் பார்த்திருப்போம் ஆனால் மியூசியங்களுக்கு நடுவில் அமைந்துள்ளதோர் நகரம் துபை என்றால் அது மிகையில்லை எவ்வாறெனில் பர்துபை மியூசியம், நைஃப் போலீஸ் மியூசியம், முர்ஷித் பஜார் மியூசியம், அஹமதியா ஹெரிடேஜ் ஸ்கூல் மியூசியம், ஷிண்டாகா ஹெரிடேஜ் வில்லேஜ் என்ற பிரம்மாண்ட மியூசியத் தொடர் என ஆங்காங்கே பல அருங்காட்சியகங்கள் அமைந்துள்ளன.

அனைத்தையும் இனி ஒவ்வொன்றாக பார்க்கலாம்...

முதலில் பர்துபை மியூசியம்.

இந்த அல் பஹீதி காவற்கோட்டையும் (AL FAHIDI FORT) அல் ஷிண்டாகா காவல் அரணும் அந்நியர்களின் கடல்வழி தாக்குதல்களிலிருந்து  காப்பதற்காக CREEKஐ முன்னோக்கி கட்டப்பட்டது. இக்கோட்டைகளை சுற்றியும் பின்னும் தான் ஆரம்பகால குடியேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இந்த அரண்களின் பாதுகாப்பின் கீழ் தான் CREEKன் இருபுறமும் அன்றைய OLD SOUK மற்றும் முர்ஷித் பஜார் ஆகியவை உருவாகி இன்றும் அதன் பழமை மாற தோற்றத்துடன் துபை மாநகருக்கு பெருமையையும் மிகப்பெரும் பொருளாதாரத்தையும் வழங்கிக் கொண்டுள்ளது.

நம்ம ஊர் இப்ராஹிம் அன்சாரி காக்கா போன்ற வரலாற்று எழுத்தாளர்கள், ஆய்வாளர்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய இடங்கள் இவை. ஏனென்றால் துபையின் வரலாற்றை புரிந்து கொள்ள உள்ளே செல்லும் நாம் இந்தியாவின் பெருமைமிகு வரலாற்றை ஒரளவு அறிந்து கொண்டு வரலாம். ஆங்காங்கே (இந்தியவுடனிருந்த கடல்வழி வணிக தொடர்புகள் குறிப்பிடப்பட்டுள்ளது). பண்டைய இந்தியாவும் இன்றைய இந்தியர்களும் இல்லை என்றால் துபை மாநகரம் இன்றும் ஒரு குக்கிராமமாகவே இருந்திருக்கும் அல்லது அதன் வளர்ச்சி இன்னும் பல ஆண்டுகள் தாமதப்பட்டிருக்கும்.

3 திர்ஹம் அனுமதிக்கட்டணம் வாங்கிக் கொண்டு அனுமதிக்கிறார்களே 3 திர்ஹம் வாங்கும் அளவிற்கு இங்கே என்ன இருக்கு? என்ற குழப்பத்தோடு மேல்மட்டத்தை மட்டும் பார்த்து உள்ளே சென்ற நமக்கு 10 நிமிடத்தில் வந்த வேலை முடிந்து விட்டதாகவே தோன்றியது ஆனால் இந்த மியூசியத்தை பார்வையிட 30 திர்ஹம் கூட தரலாம் என தோன்றியது நிலவறைக்குள் இறங்கிய பின்னரே, அதாங்க மண்ணுக்கு அடியில் ஒரு நவீன மின் அருங்காட்சியகத்தை நிர்மாணித்து பிரமிக்க வைத்துள்ளனர்.

நிலவறை உள்நுழையும்போதே நம்மை வரவேற்குமுகமாக 1930 முதல் 2010 வரையான துபையின் ஒவ்வொரு 10 ஆண்டின் வளர்ச்சியை காணொளி ஆவணப்படமாக காட்சிப்படுத்தியுள்ளனர் மேலும் 1960ல் தான் துபை பொருளாதார வளர்ச்சியின் பக்கம் முதல் அடியை எடுத்து வைத்து இன்று உலகின் ஒரு அசைக்க முடியாத பொருளாதார வல்லரசாய் உயர்ந்து நிற்கிறது என்ற உண்மையை அறியும் போது உள்ளங்கால் சில்லிடுகிறது.

'இன்றைய நவீன மின் சாதனங்களின் துணை கொண்டு மிக அழகாக நம்மை பண்டைய துபைக்குள் பயணிக்க வைத்து', மீன்பிடித்தல் மற்றும் முத்துக்குளித்தலில் சிறந்து விளங்கிய துபை மக்களின் ஆட்சி, மக்கள், வணிகம், போர், பயணம், வெளியுலக தொடர்புகள், வாழ்க்கை முறை எவ்வாறு இருந்தது மற்றும் அகழ்வாய்வு பொருட்கள் மீதான நிறுவுதல்கள், இந்தியாவுடனிருந்த கடல் வணிகத் தொடர்பு குறித்த குறிப்புகள், துபை சர்வதேச கடல் வணிகர்களின் இளைப்பாருமிடமாக மாறியதால் ஏற்பட்ட தொழில் புரட்சி போன்ற வரலாற்றை ஒலி ஒளி வடிவில் வழங்கி அசரடித்து விடுகிறார்கள்.

இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம் என்றாலும் நேரில் பார்க்க விளைபவர்களின் ரசனைக்காக விட்டுவிட்டு புகைப்பட தோரணங்களாய் ரசிப்போம் வாருங்கள்...

அன்றும் இன்றும் நம் இந்தியாவை சார்ந்து தான் துபை, துபையை சார்ந்து தான் இந்தியா என்பதற்கான ஆதாரங்கள் அடுத்த தொகுப்பில் இன்ஷா அல்லாஹ். இங்கே மிகச்சிலவற்றை மட்டுமே புகைப்படங்களாய் தர முடிந்துள்ளது என்றாலும் இன்னும் காண வேண்டியவை, பதிய வேண்டியவை ஏராளம் உள்ளன.

இன்ஷா அல்லாஹ், ஷிண்டாகா அரண் மியூசியத்தின் விபரங்களுடன் விரைவில் உங்களை சந்திக்கவிருப்பது...

அதிரை அமீன்
 

அதிரையில் பலத்த இடியுடன் மழை !

அதிரையில் இன்று காலை முதல் விட்டுவிட்டு தூறல் மழை பெய்து வந்தது. குளிர்ந்த காற்றும் வீசி வந்தது. வானம் மேகங்களால் சூழ்ந்து காணப்பட்ட நிலையில் இன்று பிற்பகல் முதல் பலத்த இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது. இதனால் தனியார் பள்ளி நிறுவனங்கள் மாணவ மாணவிகளுக்கு பகுதிநேர விடுமுறை அளித்துள்ளது. தொடர்ந்து கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மரண அறிவிப்பு !

கடற்கரை தெருவை சேர்ந்த மர்ஹும் ரா.மு. ராவுத்தர் நெய்னா மலை அவர்களின் மகனும், ரா.மு முகம்மது மொய்தீன், ரா.மு முஹம்மது சேக்காதி, மர்ஹூம் ரா.மு அஹமது ஜலாலுதீன் ஆகியோரின் சகோதரரும், மர்ஹூம் அப்துல் லத்தீப், சாகுல் ஹமீது, ஜுபைர்  ஆகியோரின் மச்சானும்,முஹம்மது இப்ராஹீம் அவர்களின் சகலையும், பதுரு ஜமான்,முகம்மது ஸாலிஹ், அப்துல் ஹக்கீம் ஆகியோரின் மாமனாரும்,ஜமால் முஹம்மது, அப்துல் ஹலீம் ஆகியோரின் தகப்பனாருமாகிய ஹாஜி ரா.மு முஹம்மது புஹாரி அவர்கள் இன்று காலை 10.30 மணியளவில் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

அன்னாரின் ஜனாஸா இன்று மாலை 5 மணியளவில் கடற்கரை தெரு ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.

அதிரையில் நடந்த அட்டுழியம் ! கொள்ளையர்கள் மீண்டும் வெறிச்செயல் !! [ படங்கள் இணைப்பு ]

அதிரை ஆப்பக்காரத்தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணி பத்தர் இவருடைய மகன்கள் ராதாகிருஷ்ணன் [ வயது 50 ], சேகர் [ வயது 45 ] அண்ணன் தம்பிகளான இவர்கள் இருவரும் ஆஸ்பத்திரி தெருவில் கடந்த சில வருடங்களாக பேபி ஜுவல்லரி என்ற பெயரில் நகைகடை நடத்தி வருகின்றனர்.

வழக்கம் போல் இன்று காலை சேகர் வீட்டிலிருந்து எடுத்து வந்த நகை பையை கீழே வைத்துவிட்டு தனது கடையை திறந்திருக்கிறார். அப்போது திடீரென இருசக்கர வாகனத்தில் முகமுடி அணிந்திருந்த ஒரு கொள்ளையரும், முகமுடி அணியாமல் மற்றொருவரும் சேகர் வைத்திருந்த நகை பையை பிடுங்கியுள்ளனர். இதில் நகை பையை கொள்ளையரிடமிருந்து பாதுகாக்க சேகர் கடுமையாக போராடியுள்ளார். இதில் சேகரை தாக்கியுள்ளனர். சேகரின் அலறல் சத்தம் கேட்டு அருகே இருந்த வர்த்தகர்கள் கொள்ளையரிடமிருந்து சேகரை மீட்க வந்துள்ளனர். இதில் சுதாரித்தகொண்ட கொள்ளையர்கள் சட்டை பையில் மறைத்து வைத்திருந்த அருவாளால் தாக்கிவிட்டு தப்பியோடிவிட்டதாக கூறப்படுகிறது. சம்பவம் நடந்த பகுதியில் பொதுமக்கள் கூடியதால் பெரும் பரபரப்பு நிலவியது.

தகவலறிந்த அதிரை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதே நகை கடையில் கடந்த [ 19- 02-2014 ] அன்று நகைகளை பறிப்பதற்காக மர்ம நபர்கள் தான் கொண்டு வந்திருந்த ஆயுதத்தால் இருவரையும் சரமாரியாக தாக்கியதில் ராதாகிருஷ்ணனுக்கு தலையில், கைககளில், முதுகில் பலத்த வெட்டு காயங்களும், சேகருக்கு கையிலும், முதுகிலும் காயங்கள் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.


மரண அறிவிப்பு !

கடற்கரை தெருவை சேர்ந்த மர்ஹும் முஹம்மது அப்துல் காதர் அவர்களின் மகனும், முக்தார் அலி அவர்களின் தகப்பனாரும், மர்ஹூம் கே.என் முஹம்மது இப்ராஹீம் அவர்களின் சகோதரரும், அன்வர்தீன், ஜஃபருல்லா, நிஜாம் அலி ஆகியோரின் மாமாவும், அப்துல் ஹலீம் அவர்களின் சிறிய தகப்பனாமாகிய குலாம் காதர் அவர்கள் இன்று காலை மலேசியாவில் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

அன்னாரின் ஜனாஸா மலேசியாவில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.

செடியன் குளம் வடிகால் உடைந்து பிலால்நகர் குடியிருப்பில் தண்ணீர் புகுந்தது ! [ படங்கள் இணைப்பு ]

கடந்த இரண்டு வருடங்களாக நீரின்றி வறண்டு காணப்பட்ட செடியன் குளம் கடந்த சில வாரங்களாக அதிரை சுற்று வட்டார பகுதிகளில் பெய்த தொடர் மழையாலும், கடந்த வாரம் சிஎம்பி வாய்க்கால் மூலம் பெத்தான் குளம் வழியாக வந்த ஆற்று நீராலும் நிரம்பி, ஏரி போல் காட்சியளித்தது. இதனால் அதிரையர்கள் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. குளத்தில் தினமும் ஏராளமானோர் குளித்தும் வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த இரண்டு தினங்களாக செடியன் குளத்தில் காணப்படும் வடிகாலின் ஒரு பகுதி உடைந்து அதிலிருந்து தண்ணீர் வெளியேறி அருகில் உள்ள தாழ்வான பகுதியாகிய பிலால் நகர் குடியிருப்பு, பிராதான சாலைகளில் வெள்ளம் ஆறு போல் ஓடுகிறது. இதனால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ மாணவிகளும், பள்ளிவாசல்களுக்கு தொழுகைக்கு செல்வோரும், வாக்கிங் செல்வோரும் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். மேலும் செடியன் குளத்தின் தண்ணீர் பிலால் நகர் பகுதியில் ஆங்காங்கே தேங்கி காணப்படுவதால் தொற்று நோய் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக எச்சரிக்கின்றனர் அப்பகுதியின் ஆர்வலர்கள்.

பல்வேறு தரப்பின் கடின முயற்சியின் கீழ் கொண்டு வந்த தண்ணீர் வீணாக வெளியேறி வருவது மிகுந்த கவலை அளிப்பதாக கூறுகின்றனர். குளத்திலிருந்து இன்னும் சில வாரங்கள் தொடர்ந்து தண்ணீர் வெளியேறி வந்தால் குளம் காலியாகிவிடும் என்ற எச்சரிக்கையும் விடுத்துள்ளனர்.

உடனடியாக சம்பந்தப்பட்டவர்கள் தண்ணீர் வீணாக வெளியேறுவதை தடுப்பதற்குரிய நடவடிக்கையில் ஈடுபட வேண்டும் என வேண்டுகோள் விடப்பட்டுள்ளது.

துபாய் மனார் சென்டர் திறந்தவெளி அரங்கில் நடைபெற்ற இஸ்லாமிய மார்க்க நிகழ்ச்சி ! [ படங்கள் இணைப்பு ]

சென்ற 28.11.2014 வெள்ளிக்கிழமை பின்னேரம் இரவு சுமார் 7 மணியளவில் துபை அல் மனார் சென்டர் திறந்தவெளி அரங்கில் மவ்லவி அப்துல் பாஸித் புஹாரி அவர்கள் 'மண்ணறை முதல் மறுமை வரை' என்ற தலைப்பில் பேரூரையாற்றினார்கள்.

எதிர்பார்ப்பிற்கு மேல் ஆண்கள் திரண்டு வந்திருந்தனர். இடவசதி பற்றாக்குறையை நிவர்த்தி செய்திடும் வண்ணம் விரிப்புக்கள் விரிக்கப்பட்டு புரோஜக்டர் வழியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. ஆண்களுக்கு நிகரான ஆர்வத்துடன் பெண்களும் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியின் இறுதியில், அபுதாபியிலிருந்து சுய ஆர்வத்துடன் வந்து கலந்து கொண்ட பிற மத சகோதரர்களுக்கு அல் மனார் சென்டர் உள்ளரங்கில் பிரத்தியோக சிறப்பு தர்பியா நடத்தப்பட்டு இஸ்லாத்தை தழுவிட அழைப்பு விடுக்கப்பட்டது. மேலும் குர்ஆன் தமிழாக்கமும் வழங்கப்பட்டது.

முஸ்லீம் சகோதரர்களை பொருத்தவரையில் அவர்களுக்கு இஸ்லாத்தை அறிந்து கொள்ள பல வழிகள் இருப்பதாலும் பிற மதத்தினருக்கு அத்தகைய வாய்ப்புக்கள் குறைவு என்பதாலும் எதிர்வரும் காலங்களில் பிற மத சகோரர்களுக்கென்றே சிறப்பு ஏற்பாடுகளை தமிழ் தஃவா குழுவினர் செய்ய வேண்டும் என்ற எதிர்பார்ப்பு முன்னை விட அதிகம் அதிகரித்துள்ளது

துபையிலிருந்து
எஸ். அப்துல் காதர், நூவன்னா