.

Pages

Saturday, April 2, 2016

அதிரையில் வாக்காளர் விழிப்புணர்வு பிரச்சார பணி: சப் கலெக்டர் தொடங்கி வைத்தார்!

அதிராம்பட்டினம், ஏப்-02
சட்டமன்ற தேர்தல் நியாயமாகவும், நேர்மையாகவும் நடைபெறவும், ஜனநாயக கடமையாற்றிடவும், அனைவரும் உறுதியேற்க வலியுறுத்தி விழிப்புணர்வு பிரச்சாரப் பணிகள் மாவட்டம் முழுவதும் தொடர்ந்து நடைபெறும் என மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் என்.சுப்பையன். இ.ஆ.ப அவர்கள் தெரிவித்து இருந்தார்.
இதையொட்டி இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி அதிராம்பட்டினம் துணை கிளை சார்பில் அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுவட்டார கிராம பகுதிகளின் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேரணி மற்றும் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கும் பணி இன்று 02-04-2016 சனிக்கிழமை காலை நடந்தது.

நிகழ்ச்சிக்கு பட்டுக்கோட்டை தாலுகா சப் ஆட்சியர் ராஜசேகர் இ.ஆ.ப அவர்கள் தலைமை ஏற்று வாக்காளர் விழிப்புணர்வு பிராசார பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விளம்பர பதாகைகளை கைகளில் ஏந்தி அதிராம்பட்டினம் பேருந்து நிலையப் பகுதிகளில் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி உறுப்பினர்கள் மற்றும் தன்னார்வலர்கள் வாக்காளர் விழிப்புணர்வு பிரச்சார பணியில் ஈடுபட்டனர்.

முன்னதாக சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி தஞ்சை மாவட்ட  தலைவர் ராஜமாணிக்கம், பட்டுக்கோட்டை வட்டாட்சியர் குருமூர்த்தி ஆகியோர் வாக்காளர் விழிப்புணர்வு பிரச்சார உரை நிகழ்த்தினார்கள். இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி அதிராம்பட்டினம் பிரசிடென்ட் மேஜர் முனைவர் கணபதி அனைவரையும் வரவேற்றார்.

இந்த நிகழ்ச்சியில் வருவாய் ஆய்வாளர் ராஜேஸ்வரி, கிராம நிர்வாக அலுவலர் இளங்கோவன், இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி தஞ்சை மாவட்ட துணை தலைவர் ஜெயக்குமார், இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி அதிராம்பட்டினம் துணை கிளைத் தலைவர் மரைக்கா இத்ரீஸ் அஹமது, செயலாளர் நிஜாமுதீன், பொருளாளர் அப்துல் ஹமீது மற்றும் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி உறுப்பினர்கள் - தன்னார்வலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
 

கண் அறுவை சிகிச்சை மேற்கொண்ட 64 பேருக்கு மறுபரிசோதனை முகாம் !

அதிரை லயன்ஸ் சங்கம் - மற்றும் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து நடத்திய முழுமையான இலவச கண் பரிசோதனை முகாம் நமதூர் சாரா திருமண மண்டபத்தில் கடந்த [ 25-02-2016 ] அன்று நடந்தது.. அன்றைய முகாமில் 525 பேர்கள் கலந்துகொண்டு ஆலோசனை பெற்றனர். இதில் 64 பேருக்கு இலவசமாக கண் அறுவை சிகிச்சை மேற்கொள்ளபட்டது.

இதைதொடர்ந்து அதிரை சாரா திருமண மஹாலுக்கு இன்று காலை வருகை தந்த மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை குழுவினர் கண் அறுவை சிகிச்சை மேற்கொண்டோருக்கு இலவசமாக மறுபரிசோதனையை மேற்கொண்டனர். இதில் லயன்ஸ் சங்க மாவட்ட தலைவர்கள் சாரா அஹமது, சாகுல் ஹமீது, லியோ கிளப் முன்னாள் பொறுப்பாளர் அதிரை மைதீன் ஆகியோர் பார்வையிட்டனர்.

Friday, April 1, 2016

அதிரை அருகே ஒரே தென்னை மரத்தில் ஒன்பது கிளைகள் உள்ள அதிசய தென்னை மரம் !

அதிரை அருகே உள்ள மகிழங்கோட்டை கிரமத்தில் வசித்து வருபவர் நடராஜன் சங்கீதா தம்பதியினர். இவர்களுக்கு சொந்தமான மூன்று ஏக்கர் நிலத்தில் மா மரம், பலாமரம், வாழைமரம் மற்றும் 250க்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் வைத்து வளர்த்து வருகின்றனர். இவர்கள் தோப்பில் உள்ள ஒரு தென்னை மரம் கடந்த வருடம் மரத்தின் தலைபகுதியில் கிளை வெடித்து இரண்டு கிளைகள் வந்துள்ளது. அதன் பிறகு அந்த மூன்று கிளைகளில் இருந்தும் இரண்டு கிளைகள் வீதம் வெடித்து தற்போது ஒரே தென்னை மரத்தில் ஒன்பது கிளைகளுடன் ஒரு தென்னை மரம் இருப்பது அந்த பகுதி விவசாயிகளிடம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிலும் ஒவ்வொரு புதிய குருத்து தவிர மற்ற கிளைகள் அனைத்திலும் பாலை விட்டு காய்கள் காய்ப்பது வியப்பினை ஏற்படுத்துகிறது.

இது குறித்து மதுக்கூர் வேளாண்மை அலுவலர் நவீன் சேவியரை தொடர்புகொண்டு கேட்டபோது. 'ஒரு மரத்தில் இரண்டு கிளைகள் இருக்கும் அதிலும் ஒரு கிளைதான் காய்க்கும் , இதில் மூன்று கிளைகள் முளைத்து, அதிலிருந்து தலா இரண்டு கிளைகள் வந்து ஒவ்வொன்றும் காய்ப்பது அதிசயமாக இருக்கிறது. இந்த தகவலை வேப்பங்குளம் தென்னை ஆராய்ச்சி நிலையத்தில் தெரிவித்து ஆய்வு செய்ய போவதாக கூறியவர். இது பெரும்பாலும் மரபனு மாற்றத்தினால் ஏற்பட்டதாக இருக்கம்' என்றார்.

செய்தி மற்றும் படங்கள்:
நிருபர் ஐ.எம் ராஜா, பட்டுக்கோட்டை
 

அதிரையில் திடீர் மழை !

தமிழகத்தில் கடும் வெப்பம் நிலவி வந்த நிலையில் இன்று அதிகாலை அதிரை சுற்றுவட்டார ஒரு சில பகுதிகளில் திடீர் மழை பெய்தது. சுமார் 1/2 மணி நேரம் நீடித்து பெய்த மழையால் அதிகாலை வாக்கிங் செல்வோருக்கு இதமாகவும், குளுமையாகவும் காட்சி அளிக்கிறது.
* File Image

மெட்ரிக் பள்ளிகளுக்கு இணையாக வாய்க்கால் தெரு பள்ளி ஆண்டு விழா நிகழ்ச்சி !

வாய்க்கால் தெருவில் அமைந்துள்ள நடுத்தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி 77 ஆம் ஆண்டு விழா நிகழ்ச்சி இன்று மாலை பள்ளி வளாகத்தில் நடந்தது.

விழாவிற்கு பட்டுக்கோட்டை உதவி தொடக்கக் கல்வி அலுவலர் கோ. ரவிச்சந்திரன் தலைமை வகித்து ஆண்டு விழா உரை நிகழ்த்தினார். பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் எஸ்.கே.எம் ஹாஜா முகைதீன், பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர் முஹம்மது ஹனீபா, பள்ளி கல்வி குழு தலைவர் கவுன்சிலர் முஹம்மது செரீப், வட்டார வளமைய மேற்பார்வையாளர் அருள் ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பள்ளி கல்வி குழு உறுப்பினர்கள் முஹம்மது மாலிக், வழக்கறிஞர் அப்துல் முனாப், முஹம்மது இப்ராஹீம், வட்டார வளமைய பயிற்றுனர் டேவிட் ஆரோக்கியராஜ், பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்கள்  ஜமால் முகமது, ஜாகிர் ஹுசைன், நிருபர் சாகுல்ஹமீத் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்

விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட பாரத ஸ்டேட் வங்கி மேலாளர் ஹமீத்கான் சிறப்புரை வழங்கி, பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டு தெரிவித்தார்.

முன்னதாக பள்ளி பட்டதாரி ஆசிரியர் கவிக்குமார் வரவேற்புரை ஆற்ற, பள்ளி தலைமை ஆசிரியை ஆர். மாலதி ஆண்டறிக்கை வாசித்தார். விழா முடிவில் பள்ளி உதவி ஆசிரியை கே. கலாதேவி நன்றி கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் பள்ளி கல்விக்குழு உறுப்பினர்கள், பெற்றோர் ஆசிரியர் கழக பொறுப்பாளர்கள், ஊர் பிரமுகர்கள், பள்ளி ஆசிரியை ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவ மாணவிகள் கலந்துகொண்டனர்.

மெட்ரிக்குலேஷன் பள்ளிகளில் நடைபெறும் ஆண்டுவிழாற்கு இணையாக வாய்க்கால் தெருவில் அமைந்துள்ள நடுத்தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆண்டு விழா நிகழ்ச்சி அமைந்து இருந்ததாக பலர் கருத்து தெரிவித்தனர்.

செய்தி மற்றும் படங்கள்:
அஃப்ரீத் ( மாணவ செய்தியாளர் )