.

Pages

Monday, May 2, 2016

TIYA சார்பில் அதிரையில் மாபெரும் புற்றுநோய் மருத்துவ முகாம் நடத்த முடிவு !

அண்மைக் காலமாக தமிழகமெங்கும் - குறிப்பாக காலம் காலமாக அமைதியும் ஆரோக்கியமும் செழித்துத்திகழும் நமதூரில் உயிர்க்கொல்லி நோயான “கேன்ஸர்” என்ற புற்று நோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவருவதும், இக்கொடிய நோயால், நமது உற்றத்திலும் சுற்றத்திலும் உள்ள பல சகோதர சகோதரிகள் விலைமதிக்க முடியாத நமது இன்னுயிரை இழப்பதும், நமது அனைவரையும் மிகுந்த கவலையிலும் பெரும் அதிர்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது.

இந்த அபாயகரமான நிலையிலிருந்து நமது மக்களை இறைவன் அருளால் முடிந்த அளவு மீட்டு எடுக்கும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியது நம் அனைவரின் பொறுப்பும் கடமையுமாகும்.

இம் முயற்சியின் ஒரு பகுதியாக புற்றுநோய் குறித்து சிறு விழிப்புணர்வு நமதூரிலும் ஏற்படுத்தும் விதமாக இந்த பயங்கர நோய் ஏன் ? எதனால் ஏற்படுகிறது ? எப்படியெல்லாம் பரவுகிறது ? இதற்கான பரிசோதனைகள், சிகிச்சைகள் என்னென்ன ? இந்நோயிலிருந்து பாதுகாப்பதற்கான வழி முறைகள் என்னென்ன ? என்பது குறித்து விபரங்கள் பொது மக்கள் நலன் கருதி நம்மை சுற்றியுள்ளவர்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தி, இறைவன் கிருபையால் இக்கொடிய நோயை விட்டு பொதுமக்களை பாதுகாக்கும் முயற்சியில் TIYA ஈடுபட முடிவு செய்துள்ளது.

இதன் முதற்கட்ட முயற்சியாக கடந்த 29-04-2016 அன்று MEHA அமீரக நிர்வாகிகளை நமது TIYA நிர்வாகிகள் சந்தித்து இதுதொடர்பாக கலந்துரையாடல் நடைபெற்றது. இன்ஷா அல்லாஹ் விரைவில் நமதூர் அதிரையில் மிகப்பெரிய புற்று நோய் விழிப்புணர்வு முகாம் மற்றும் மருத்துவ முகாம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஆரம்பகட்ட முயற்சியில் அமீரக TIYA நிர்வாகிகள் ஈடுப்பட்டு வருகிறோம்.

எல்லாம் வல்ல அல்லாஹ் நாம் அனைவருக்கு ஆரோக்கியத்தைத் தந்து எல்லாவிதமான் நோய் நொடிகளை விட்டும் பாதுகாப்பானாக! ஆமீன்.

என்றும் அன்புடன்
அமீரக TIYA நிர்வாகிகள்

தனியார் பள்ளிகளில் 25% இட ஒதுக்கீடு: நாளை முதல் விண்ணப்பம் விநியோகம்!

தஞ்சாவூர் மாவட்டத்தில் தனியார் பள்ளிகளில், அரசாணைப்படி ஏழை மாணவர்களுக்கு 25% இடஒதுக்கீடு திட்டத்தில் செவ்வாய்க்கிழமை (மே 3) முதல் விண்ணப்பங்கள் விநியோகம் செய்யப்படவுள்ளன.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் என். சுப்பையன் தெரிவித்திருப்பது:
மாவட்டத்தில் உள்ள அனைத்து சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி பள்ளிகளில் குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக்கல்வி உரிமைச் சட்டம் 2009-ன்படி நுழைவு நிலை வகுப்பில் 25% இட ஒதுக்கீட்டை நலிவடைந்த பிரிவினர் மற்றும் வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவுகளைச் சார்ந்த மாணவர்களுக்கு வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

அரசாணைப்படி பள்ளிகளின் நுழைவு நிலை வகுப்பில் மொத்தமுள்ள இடங்களில் 25% இடங்களை நலிவடைந்த மற்றும் வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவுகளைச் சார்ந்த மாணவர்களுக்கு வழங்க வேண்டும். இதற்கான சேர்க்கை விண்ணப்பங்கள் அனைத்து மெட்ரிகுலேஷன் பள்ளிகள், மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளிகளிலும், அனைத்து கல்வி அலுவலகங்களிலும் இலவசமாக வழங்கப்படும். இந்த வாய்ப்பைப் பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

இதற்கான விண்ணப்பங்கள் செவ்வாய்க்கிழமை முதல் மே 18-ம் தேதி வரை வழங்கப்படும். நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பங்களை தொடர்புடைய பள்ளிகளில் மே 18-ம் தேதி மாலை 5 மணிக்குள் அளிக்க வேண்டும். தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களின் பட்டியல் அந்தந்தப் பள்ளியில் உள்ள அறிவிப்புப் பலகையில் மே 20-ம் தேதி 5 மணிக்கு வெளியிடப்படும்.

நிர்ணயிக்கப்பட்ட இடங்களைவிட கூடுதலாக விண்ணப்பங்கள் வந்தால், தற்செயல் தேர்வு முறை மே 23-ம் தேதி காலை 10.30 மணிக்கு நடத்தப்படும். தேர்வு செய்யப்பட்ட மாணவர்களின் பட்டியல் அதே நாளில் (மே 23) பிற்பகல் 2 மணிக்கு வெளியிடப்படும்.

மாவட்டத்தில் உள்ள மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் நுழைவு நிலை வகுப்பில் (எல்.கே.ஜி.) உள்ள மொத்த உத்தேச இடங்கள் 7,710. இதில், 25% இடஒதுக்கீட்டின்படி உத்தேச இடங்கள் 1,955.

மழலையர், தொடக்கப் பள்ளிகளில் நுழைவு நிலை வகுப்பில் உள்ள மொத்த உத்தேச இடங்கள் 7,830. இதில், 25% இடஒதுக்கீட்டின்படி உத்தேச இடங்கள் 1,875.

செந்தில்குமாரை ஆதரித்து அதிரையில் எம்.எல்.ஏ ரெங்கராஜன் பேச்சு ! [ முழு விவரம் ]

அதிராம்பட்டினம் மே-2
பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதி தேமுதிக-தமாகா-மக்கள் நலக்கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் என். செந்தில் குமாரை ஆதரித்து பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதி உறுப்பினர் என்.ஆர் ரெங்கராஜன் எம்எல்ஏ அதிரை பகுதிகளில் பிரசார பணியில் ஈடுபட்டார்.

பட்டுக்கோடை சட்டமன்ற தொகுதி தேமுதிக-தமாகா-மக்கள் நலக்கூட்டணி வேட்பாளர் என். செந்தில் குமாரை ஆதரித்து பேசியதாவது:
'பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் மூன்று முறை வேட்பாளராக தேர்வு செய்த வாய்ப்பளித்த தொகுதி மக்களுக்கு எனது நன்றியை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறேன். குறிப்பாக அதீத பாசம் கொண்ட சிறுபான்மை மக்களுக்கு எனது நன்றி. பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதி மேம்பாடு நிதி மூலம் பல்வேறு திட்ட பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. குறிப்பாக அதிரை பகுதி பொதுமக்கள் வைத்த கோரிக்கையின் அடிப்படையில் அதிரை பேரூராட்சி மற்றும் இதனை சுற்றியுள்ள ஏரிபுறக்கரை, நரசிங்கபுரம் உள்ளிட்ட பகுதிகளில் புதிய தார் சாலைகள் அமைத்தல், சிமெண்ட் சாலைகள் அமைத்தல், பயணிகள் நிழற்குடை, அங்கன் வாடி அமைத்தல், சமுதாயக்கூடம் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு திட்ட பணிகளுக்கு 2011-2016 ஆம் ஆண்டு சட்டமன்ற தொகுதி மேம்பாடு நிதி சுமார் ரூ 60 லட்சம் வரை செலவிடப்பட்டுள்ளது.

'அதிரை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மின்னழுத்த ஏற்ற தாழ்வுகளை குறைக்கும் வகையிலும், அனைத்து பகுதிகளுக்கும் மின்சாரத்தை சீராக கொண்டு செல்லும் வகையில் நான் மேற்கொண்ட முயற்சியின் கீழ் தமிழ்நாடு மின்வாரியம் சார்பில் அதிரையில் 110 கிலோ வோல்ட் திறன் கொண்ட துணை மின் நிலையம் அமைக்கப்பட உள்ளது. தேர்தல் முடிந்து இதன் பணிகள் தொடங்க உள்ளன.

அதிரை மற்றும் சுற்றுப்புற பகுதி வீடுகளின் எண்ணிக்கை பெருகி வருவதால், மின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால், அங்கு அடிக்கடி, 'ஓவர்லோடு' ஏற்படுகிறது. அதிரை வளர்ந்து வரும் பகுதி, இங்கு பல இடங்களில் மின்கம்பிகள் ஆபத்தான நிலைமையில் உள்ளது, குறிப்பாக பிலால் நகர் பகுதியில் உயர் மின் அழுத்த கம்பிகள் உயிருக்கு ஆபத்தான நிலை ஏற்படுத்தக்கூடிய வகையில் உள்ளது. அரசு இவற்றை சரி செய்ய நடவடிக்கை எடுக்குமா ? என கடந்த [ 23-09-2015 ] அன்று நடைபெற்ற சட்டசபை கூட்டத்தில் நான் எழுப்பிய கேள்வி தொடர்பாக சம்பந்தப்பட்ட பகுதியில் தாழ்வாக சென்ற மின்கம்பிகள் சரிசெய்யும் நடவடிக்கையை மின்சார வாரியம் மேற்கொண்டது.

அதிரை நியூஸ் இணையதளம் குழுவினர் கடந்த [ 01-06-2013 ] அன்று நேரில் சந்தித்து என்னிடம் நேர்காணல் நடத்தினர். இதில் அதிரை பொதுமக்கள் வைத்த கோரிக்கைகள் தொடர்பாக கேள்வி எழுப்பினர். அதன் அடிப்படையில் நான் மேற்கொண்ட தீவிர முயற்சியின் கீழ் அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்திலிருந்து பழைய போஸ்ட் ஆபிஸ் சாலை, கடைத்தெரு, கீழத்தெரு, மேலத்தெரு வழியாக மகிழங்கோட்டை வரையிலான பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றிய கிராம இணைப்பு சாலை ரூ 61 லட்சம் திட்ட மதிப்பீட்டில் 5 கிலோ மீட்டர் நீளத்தில் மறு சீரமைக்கப்பட்டது.

மேலும் அதிரை அரசு பொதுமருத்துவமனையில் கூடுதல் மருத்துவர் வசதியுடன் 24 மணி நேர சேவை செயல்படுத்த வலியுறுத்தி கடந்த 01-06-2013 அன்று அதிரை நியூஸ் இனையதள ஊடகம் வைத்த கோரிக்கையின் அடிப்படையில் கடந்த 18-11-2013 அன்று சென்னையில் மக்கள் நல்வாழ்வு துறை செயலர் திரு ராதாகிருஷ்ணன் இ.ஆ.ப அவர்களை நேரடியாகச் சந்தித்து முறையிட்டேன்.

அதிராம்பட்டினம் ஈசிஆர் சாலையில் அடிக்கடி நிகழும் வாகன விபத்துகளை தடுக்கும் நோக்கிலும், பள்ளி, கல்லூரி மாணவர்கள் அதிகளவில் புழங்கி வரும் ஈசிஆர் சாலை காலேஜ் முக்கத்தில் வாகன வேகத்தடுப்பு அரண் அமைத்து தர கோரி மாவட்ட ஆட்சியர் முனைவர் என். சுப்பையன்,  தஞ்சை சரக போலீஸ் டி.ஐ.ஜி.சஞ்சய்குமார், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தர்மராஜன் ஆகியோரை பட்டுக்கோட்டையில் நடந்த நிகழ்ச்சியில் சந்தித்து முறையிட்டேன். எனது கோரிக்கை காவல்துறை சார்பில் உடனடியாக ஏற்றுக்கொள்ளப்பட்டு தம்பிக்கோட்டை மற்றும் காலேஜ் முக்கம் ஆகிய இரண்டு இடங்களின் சாலையின் இருபுறங்களிலும் வாகன வேகதடுப்பு அரண் ( பேரிகாட் ) அமைக்கப்பட்டது.

நான் மேற்கொண்ட முயற்சியின் கீழ் அதிரை பேருந்து நிலையத்திலிருந்து சேர்மன்வாடி வழியாக பட்டுக்கோட்டை செல்லும் சாலையை 800 மீட்டர் தூரத்தில், 7 மீட்டர் அகலத்தில் மேம்படுத்தும் விதத்தில் சுமார்  ₹ 1.50 கோடி மதிப்பீட்டில் கடந்த [ 13-11-2014 ] அன்று டெண்டர் விடப்பட்டு இதற்கான பனி தமிழக அரசு நெடுஞ்சாலை துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டன.

'கடும் மழை காரணமாக பழுதடைந்த அதிராம்பட்டினம் பட்டுக்கோட்டை மெயின் சாலை, தம்பிக்கோட்டை சாலை, துவரங்குறிச்சி சாலை,நாட்டுச்சாலை வரை உள்ள சாலை, பரக்கலக்கோட்டையிலிருந்து கல்யாண ஓடை வரையிலான சாலை, பட்டுக்கோட்டை பாளையம் பகுதி சாலை ஆகியவற்றை சீரமைத்து தருமாறு கேட்டுக்கொண்டதன் அடிப்படையில் குறிப்பிட்ட சாலைகள் மேம்படுத்தப்பட்டன.

அதிராம்பட்டினம் பேரூராட்சி எல்லையில் ஏரிபுறக்கரை ஊராட்சியின் ஒரு பகுதியான பிலால் நகரில் கடும் மழையால் அதிக பாதிப்பு ஏற்பட்டது. இதற்கு காரணமாக உள்ள வாய்க்கால் ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும். மேலும் இந்த பகுதி மக்கள் நிர்வாக எல்லை பகுதி தெரியாமல் ஒரே தெருவில்  ஒருவர் ஏரிபுறக்கரை ஊராட்சிக்கும், மற்றொருவர் அதிரை பேரூராட்சிக்கும் வரியை செலுத்தி வருகின்றனர். இதனால் முறையான தூய்மைபணிகள் இந்த பகுதியில் நடைபெறவில்லை. எனவே வருவாய்துறை மூலம் இப்பகுதி எல்லைகளை வரையறுத்து ஒழுங்குபடுத்த வேண்டும்' என மாவட்ட ஆட்சியருக்கு நான் வைத்த கோரிக்கை அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளபட்டன. மேலும் பிலால் நகர் பகுதி பொதுமக்கள் வைத்த கோரிக்கையின் அடிப்படையில் சட்டமன்ற தொகுதி மேம்பாடு நிதி ரூ 4 லட்சம் மதிப்பீட்டில் வெள்ள பாதிப்பு ஏற்பட்ட பிலால் நகரில் புதிதாக பேவர் பிளாக் சாலை அமைக்கப்பட்டுள்ளது.

அதிரை மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் நிகழும் இன்ப-துன்ப நிகழ்வுகளில் பங்கெடுப்பதில் அதிக ஆர்வம் காட்டியுள்ளேன். பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதி தேமுதிக-தமாகா-மக்கள் நலக்கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் என். செந்தில் குமார் எளிமையானவர். கடின உழைப்பாளி. இதே தொகுதியில் இரண்டு முறை போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தவர். மூன்றாவது முறையாக வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த முறை அனைவரும் தவறாமல் முரசு சின்னத்தில் வாக்களித்து செந்தில்குமாரை வெற்றி பெற செய்ய வேண்டும். வெற்றி பெற்றால் தொகுதியில் விடுபட்ட பணிகளை செய்துகொடுக்கும் முயற்சியில் ஈடுபடுவார்' என இவ்வாறு பேசினார்.

Sunday, May 1, 2016

மரண அறிவிப்பு [ மஹ்மூதா அம்மாள் அவர்கள் ]

மேலத்தெரு வாத்தி வீட்டு குடும்பத்தை சேர்ந்த மர்ஹும் K.M. சாகுல் ஹமீது அவர்களின் மகளும், மர்ஹூம் M.K.M முகைதீன் அப்துல் காதர் அவர்களின் மனைவியும், அப்துல் காதர், முஹம்மது புஹாரி ஆகியோரின் சகோதரியும், M.K.M ஹாஜா அலாவுதீன், A. சகாபுதீன், A. சிராஜுதீன் ஆகியோரின் மாமியாரும், M.K.M சாகுல் ஹமீது, M.K.M முஹம்மது பாருக் ஆகியோரின் சிறிய தாயாரும், M.K.M நசீர் அஹமது, M.K.M ஜமால் முஹம்மது, M.K.M சரபுதீன், M.K.M ஹாஜா அலாவுதீன், மர்ஹூம் M.K.M பகுருதீன் ஆகியோரின் தாயாரும், மர்ஹூம் VKM சேக் நசுருதீன், மர்ஹூம் VKM சாகுல் ஹமீது ஆகியோரின் மருமகளுமாகிய மஹ்முதா அம்மாள் அவர்கள் இன்று இரவு மேலத்தெரு சவுக்கு கொல்லை இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா இன்று இரவு 10 மணியளவில் பெரிய ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

அதிரை பைத்துல்மால் நிர்வாகிகளிடம் செந்தில்குமார் வாக்கு சேகரிப்பு !

அதிராம்பட்டினம் மே-1
பட்டுக்கோடை சட்டமன்ற தொகுதி தேமுதிக-தமாகா-மக்கள் நலக்கூட்டணி வேட்பாளர் என். செந்தில் குமார் அதிரை பகுதிகளில் ஜமாஅத் பிரமுகர்கள், கிராம பஞ்சாயத்தார்களை சந்தித்து தீவிரமாக வாக்கு சேகரித்து வருகிறார்.

அதிரை பைத்துல்மால் நிர்வாகிகளின் கலந்துகொள்ளும் மாதாந்திரக் கூட்டம் நேற்று இரவு பைத்துல்மால் அலுவலகத்தில் நடந்தது. இந்த நிலையில் அதிரை பைத்துல்மால் அலுவலகத்திற்கு வருகை தந்த வேட்பாளர் செந்தில் குமார் பைத்துல்மால் நிர்வாகிகளிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது கூறுகையில், இதே தொகுதியில் இரண்டு முறை போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்த எனக்கு மூன்றாவது முறையாக வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த முறை அனைவரும் தவறாமல் முரசு சின்னத்தில் வாக்களித்து என்னை வெற்றி பெற செய்ய வேண்டும்' என்றார்.

அப்போது தமாகா அதிரை பேரூர் தலைவர் எம்எம்எஸ் அப்துல் கரீம், எம்எம்எம் சேக் நசுருதீன், அக்பர் சுல்தான் ( தேமுதிக ), நூர் ( தேமுதிக ) காளிதாஸ் (இந்திய கம்யூ), உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
 

மகேந்திரனை ஆதரித்து பட்டுக்கோட்டையில் கனிமொழி எம்பி பேச்சு !

பட்டுக்கோட்டை, மே 1:
ஜெயலலிதா மீண்டும் ஆட்சிக்கு வந்து விடக்கூடாது என்றார் மாநிலங்களவை உறுப்பினரும், திமுக மகளிரணிச் செயலருமான கனிமொழி.

பட்டுக்கோட்டையில் நேற்று ( சனிக்கிழமை ) இரவு நடைபெற்ற திமுக கூட்டணி தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பட்டுக்கோட்டை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் கே. மகேந்திரனை ஆதரித்து அவர் பேசியது: 
பட்டுக்கோட்டை தொகுதியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள மகேந்திரன் இந்த மண்ணின் மைந்தர். என்றைக்கும் உங்களோடு இருப்பார். உங்களுக்காக உழைப்பார். மக்கள் தேவைகள் அனைத்தையும் நிறைவேற்றுவார்.

ஆட்சிக்கு வந்த 5 ஆண்டுகளில் முதலமைச்சர் ஜெயலலிதா வாக்களித்த மக்களைச் சந்தித்தாரா ? அதிகாரிகளை சந்தித்தாரா ? என்றால் யாரையும் சந்திக்கவில்லை. தமிழக முதல்வரை சந்திக்க முடியவில்லை என மத்திய அமைச்சரே புகார் கூறுகிறார். இப்படி யாருமே சந்திக்க முடியாத ஒரு முதலமைச்சர் நமக்குத் தேவையா ?

தமிழக விவசாயிகள் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி பலமுறை போராட்டம் நடத்தினார்கள். ஜெயலலிதா அதைப் பற்றி கொஞ்சமும் கவலைப்படவில்லை. விவசாயிகளின் உண்மை நிலையை உணர்ந்து கொள்ளவும் இல்லை. எனவே, தமிழகத்தில் மீண்டும் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்து விடக் கூடாது. ஜெயலலிதா ஆட்சி முடிவுக்கு வந்தால்தான் விவசாயிகள் மற்றும் அனைத்துத் தரப்பு மக்களின் நலன் பாதுகாக்கப்படும். திமுக ஆட்சிக்கு வந்தால் தேர்தல் அறிக்கையில் தந்த வாக்குறுதிகள் அனைத்தையும் கருணாநிதி கண்டிப்பாக நிறைவேற்றுவார்' என்றார் கனிமொழி.
 

சவூதி ஜித்தாவில் மெப்கோ நடத்திய பள்ளி குழந்தைகளுக்கான அறிவுத்திறன் போட்டி !

சவூதி ஜித்தாவில் மெப்கோ Muslim Educational Promotional Counsel சார்பில் பள்ளி குழந்தைகளிடேயே படைப்பாற்றலையும், பேச்சாற்றலையும் வளர்க்கும் நோக்கோடு பேச்சுப்போட்டி, ஓவியப்போட்டி, களிவார்ப்பு போட்டிகள் நடந்தது.

இரு தினங்கள் நடந்த போட்டிகளில் தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த பள்ளி குழந்தைகள் கலந்துகொண்டனர். அய்டா தலைவர் ராஃபியா அஹமது, ஹாஜா ஆகியோர் நடுவர்களாக இருந்து போட்டிகளை நடத்தினார்கள். போட்டிகளில் வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு சிறப்பு பரிசுகள் வரும் 13 ஆம் தேதி ஜித்தா லக்கி தர்பார் அரங்கில் நடைபெறும் நிகழ்ச்சியில் பொதுமக்கள் முன்னிலையில் வழங்கப்படும்.

நிகழ்ச்சி ஏற்பாட்டை குலாம் முகைதீன், இப்ராகிம் அலி, சாகுல், இஜாஸ் மற்றும் ஜாஹிர் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.

ஏர்போர்ட் அதிகாரிகளின் கண்களில் மண்ணை தூவிய சிறுமி!

ரஷ்யா தலைநகர் மாஸ்கோவில் உரிய ஆவணங்கள் ஏதுமின்றி 11 வயது சிறுமி விமானத்தில் பயணம் மேற்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அடையாள அட்டை, பயணச்சீட்டு என எதுவும் இன்றி சிறுமி ஒருவர் விமானத்தில் பயணம் மேற்கொண்ட சம்பவம் தொடர்பாக ரஷ்ய அதிகாரிகள் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளனர். பாதுகாப்பு காமிராவில் பதிந்துள்ள காட்சிகளை அதிகாரிகள் ஆய்வு செய்தபோது இச்சம்பவம் வெளிவந்துள்ளது.

மாஸ்கோவின் Vnukovo விமான நிலையத்தில் தனியாக வந்த 11 வயது மதிக்கத்தக்க இந்த சிறுமி விமான நிறுவன ஊழியர்களை முதலில் ஏமாற்றியுள்ளார். அவர்களின் சோதனையில் இருந்து தப்பிய அவர், விமான பயணச்சீட்டு மற்றும் ஆவணங்கள் பரிசோதனைக்கு உட்படுத்தும் பகுதியில் பயணிகளில் ஒருவராக வரிசையில் நின்றுள்ளார்.

சக பயணிகளின் ஆவணங்களை சரிபார்த்துக் கொண்டிருக்கும் போது அவர்களை ஏமாற்றிவிட்டு இவர் உள்ளே நிழைந்துள்ளது தெரிய வந்துள்ளது. கூட்ட நெரிசல் காரணமாகவும், அங்கிருந்த ஒரு குடும்பத்துடன் இணைந்து காணப்பட்டதாலும் விமான நிலைய அதிகாரிகளுக்கு சந்தேகம் எழவில்லை என்பது மட்டுமல்ல, எவரும் அந்த சிறுமியை கேள்வி கேட்கவும் இல்லை.

இதனையடுத்து பாதுகாப்பு சோதனையும் முடித்து அவர் பீட்டர்ஸ்பர்க் நகரில் தரையிறங்கும் வரை எவருக்கும் அவர் மீது சந்தேகம் எழவில்லை. 90 நிமிட பயணத்தின் பின்னர் தாயாரிடம் இருந்து வந்த தொலைப்பேசி அழைப்பு தான் சிறுமியை விமான நிலைய அதிகாரிகளின் கைகளில் சிக்க வைத்தது.

இதனையடுத்து சமூக ஆர்வலர்கள் சிலர் ஒன்றிணைந்து சிறுமியை மீண்டும் மாஸ்கோவுக்கே திருப்பி அனுப்பியுள்ளனர். இச்சம்பவம் விமான நிலையத்தில் உள்ள பாதுகாப்பு குறைபாடுகளை சுட்டிக்காட்டுவதாக குறிப்பிட்ட அதிகாரிகள் அதுகுறித்து தீவிர விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளனர்.