.

Pages

Friday, September 29, 2017

அதிராம்பட்டினம் பாரத ஸ்டேட் வங்கி மேலாளருக்கு பாராட்டு ~ வழியனுப்பும் விழா (படங்கள்)

அதிராம்பட்டினம், செப். 29
பதவி உயர்வு பெற்று பணியிடம் மாற்றம் செய்யப்பட்ட அதிராம்பட்டினம் பாரத ஸ்டேட் வங்கி கிளை மேலாளர் ஏ. ஹமீத்கானுக்கு பாராட்டு - வழியனுப்பும் விழா.

தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் பாரத ஸ்டேட் வங்கி கிளை மேலாளராக கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வந்தவர் ஏ.ஹமீத்கான். இந்நிலையில், பதவி உயர்வு பெற்று, திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் பாரத ஸ்டேட் வங்கிக் கிளைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டதை அடுத்து, சக பணியாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் சார்பில் பாராட்டு மற்றும் வழியனுப்பும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

விழாவிற்கு, வங்கி கிளை புதிய மேலாளர் பிரவின் குமார் தலைமை வகித்தார். விழாவில், அதிரை பேரூர் வர்த்தக சங்கத் தலைவர் கே.கே ஹாஜா நஜ்முதீன், முன்னாள் தலைமை ஆசிரியர் ஏ.மகபூப் அலி, வங்கி காசாளர் ஜெயா, பிரேம் நாத், பாண்டியன், நகை மதிப்பீட்டாளர் வாசு, ஜாகிர் உசேன் (ஜே.எஸ்), ராமசாமி, ஜமால் முஹம்மது உள்ளிட்டோர் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள்.

இதன்பின்னர் மேலாளர் ஏ. ஹமீத்கான் தனது ஏற்புரையில், அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புற பகுதி வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பிற்கும், ஆதரவிற்கும் நன்றி தெரிவித்துக்கொண்டார்.

தொடக்கத்தில், வங்கி வர்த்தகத் தொடர்பாளர் ஏ. ஷேக் அப்துல்லாஹ் வரவேற்றுப்பேசினார், விழா முடிவில் நன்றி கூறினார். இவ்விழாவில் வங்கி பணியாளர்கள், வாடிக்கையாளர்கள் கலந்துகொண்டனர்.

Thursday, September 28, 2017

தஞ்சை ~ பெற்றோரை தேடும் 5 வயது சிறுமி

கடந்த நான்கரை ஆண்டுகளுக்கு முன் 6 மாதப் பெண் குழந்தையாக இருந்த ஒரு பெண் குழந்தை, தஞ்சை பெரிய கோயில் அருகிலிருந்து குழந்தையை கடத்தி விற்பனை செய்யும் பெண் ஒருவரால் கடத்தி கேரளாவுக்கு விற்பனைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டம், வாண்டூர் காவல் துறையினரால் அந்தப் பெண் குழந்தை 2016-இல் மீட்கப்பட்டது.  பின்னர், மலப்புரம் குழந்தைகள் நலக் குழுமத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, தற்போது குழந்தைகள் இல்லத்தில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளது. அந்த பெண் குழந்தைக்கு யாழினி என்று காப்பக நிர்வாகிகள் பெயர் சூட்டியுள்ளனர்.

முறைப்படி குழந்தையை வேறு தகுதியான தம்பதியினருக்கு தத்துக் கொடுக்கவோ அல்லது ஆதரவற்றோர் என பிறப்பு சான்றிதல் பதிவேற்றம் செய்ய வேண்டுமானால், அந்த குழந்தை தொலைந்து போன இடத்தில் உள்ள வட்டாட்சியர் மூலமாக சான்று பெறவேண்டும். அதற்காக அந்த குழந்தையை பறிகொடுத்தவர்கள் பற்றிய விபரங்களை பொதுமக்களிடம் தெரிவித்து, அக்குழந்தை குறித்த விபரங்களை பெறக்கோரி கோவை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலரிடம் ஒப்படைதுள்ளனர்.

தஞ்சையில் இருந்து கடத்தப்பட்ட யாழினியின் பெற்றோர் அல்லது உறவினர்கள் யாரும் குழந்தையைத் தவறவிட்டு இருந்தால், அதற்கான உரிய ஆவணங்களுடன் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்டக் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலருக்கு 30 நாள்களுக்குள் தகவல் தெரிவிக்கமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், விவரங்களுக்கு 0422-2300305 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம். என்றும் அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமீரகத்தில் போக்குவரத்தை புரட்டிப்போட்ட கடும் பனிமூட்டம் !

அதிரை நியூஸ்: செப். 23
இன்று ( செப்.28 ) அமீரகத்தின் பல பகுதிகளிலும் ஏற்பட்ட கடும் மூடுபனியால் இயல்பான போக்குவரத்து பாதிக்கப்பட்டது. துபை, அபுதாபி, ஷார்ஜா ஆகிய எமிரேட்டுக்களில் இப்பனிமூட்டத்தால் வாகன விபத்துக்கள் ஏற்பட்டதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

மூடுபனியை தொடர்ந்து நத்தையாக நகரும் போக்குவரத்தை சீர்படுத்தத் தேவையான நடவடிக்கைகளை துபை போக்குவரத்துத் துறை, துபை போலீஸ், அபுதாபி போக்குவரத்து போலீஸார் உட்பட பலரும் மேற்கொண்டு வருகின்றனர்.

இன்னொரு புறம், இம்மூடுபனியால் ஏற்பட்டுள்ள சீதோஷ்ண நிலை மாற்றத்தால் பொதுமக்கள் அதீத வியர்வையால் சிரமப்பட்டு வருகின்றனர்.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

அதிராம்பட்டினத்தில் 11.20 மி.மீ மழை பதிவு !

செடியன் குளத்தில் குளித்து மகிழும் சிறுவர்கள்
அதிராம்பட்டினம், செப். 28
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில், நேற்று புதன்கிழமை இரவு 7 மணியளவில் பலத்த மழை பெய்தது. இதனால் அதிரையின் பிரதான சாலைகளில் வெள்ளம் ஆறுபோல் பெருக்கெடுத்து ஓடியது. அதிரை மற்றும் சுற்றுப்புற பகுதியில் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவுகிறது. வானம் மேகக்கூட்டத்துடன் சூழ்ந்து காணப்படுகிறது.

இன்று வியாழக்கிழமை காலை 8.30 மணி நேர நிலவரப்படி அதிராம்பட்டினத்தில் 11.20 மி.மீ மழை பதிவாகியது. தஞ்சை மாவட்டத்தில்
அதிகபட்சமாக நெய்வாசலில் 26.40 மி.மீ, பட்டுக்கோட்டையில் 7 மி.மீ, பேராவூரணி 1 மி.மீ, மதுக்கூரில் 15.60 மி.மீ மழை பதிவாகியது. 

கேரளாவில் ஷார்ஜா டிரைவிங் லைசென்ஸ் வழங்கல் மையம் !

அதிரை நியூஸ்: செப்.29
கேரளாவில் ஷார்ஜா ஆட்சியாளர் டாக்டர். ஷேக் சுல்தான் பின் முஹமது அல் கஸீமி அவர்கள் அரசுமுறை பயணமாக கடந்த ஞாயிறு முதல் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார்.

டாக்டர். ஷேக் சுல்தான் அவர்களிடம் கேரள முதன்மந்திரி கோரிக்கை விடுத்ததை தொடர்ந்து ஷார்ஜாவில் செல்லுபடியாகும் டிரைவிங் லைசென்ஸ் வழங்கும் மையம் ஒன்றையும், அரபி மொழி பயிற்சி மையம் ஒன்றை ஏற்படுத்தவும் ஒப்புதல் வழங்கியுள்ளார். அமீரகத்திற்கு வேலைவாய்ப்பின் நிமித்தம் செல்பவர்கள் இந்த கேரளா - ஷார்ஜா மையத்திலேயே டிரைவிங் லைசென்ஸ் பெற்றுக் கொள்ளலாம்.

தற்போது கேரளாவில் வாடகை கட்டிடத்தில் இயங்கிவரும் அமீரக துணை தூதரகத்திற்கு சொந்தமான கட்டிடம் கட்டத் தேவையான நிலத்தை வழங்கவும் கேரளா அரசு ஒப்புக் கொண்டுள்ளது. அதேபோல், ஷார்ஜாவில் 20 ஏக்கர் நிலத்தில் கேரளா கலாச்சார மையம் ஒன்றை அமைக்க அனுமதி தரும்படியும் கேரள முதல்வர் வேண்டுகோள் விடுத்தார்.

இந்த நிலத்தில் 10 ஏக்கரில் கட்டடப்படும் கட்டுமானத்தில் கேரள மக்கள் குடும்பத்துடன் வசிப்பர், எஞ்சிய 10 ஏக்கர் இடத்தில் உலகத்தரம் வாய்ந்த மருத்துவமனை ஒன்றும், ஆயுர்வேத மருத்துவமனை ஒன்றும், கேரளாவின் காலச்சாரத்தையும், கலை பண்பாடுகளையும் எடுத்துக்கூறும் மையம் ஒன்றை அமைக்கவும், கேரள மக்கள் அந்த மையத்திற்குள் தங்களுடைய சமூக கூட்டங்களையும், கலை நிகழ்ச்சிகளை நடத்திக் கொள்ளவும் அனுமதியளிக்கும்படியும் வேண்டுகோள் விடப்பட்டுள்ளது.

நம்ம தமிழக ஆட்சியாளர்கள் ஒரு வருடத்திற்கு முன் இறந்த தங்கள் தலைவியின் மரணம் குறித்தே இதுவரை ஒரு முடிவுக்கு வர முடியாமல் தவித்துக் கொண்டுள்ள நிலையில் வெளிநாடு வாழ் தமிழர்களை பற்றி அவர்களுக்கு சிந்திக்க எங்கே நேரமிருக்கப் போகிறது?

Source: Msn / Khaleej Times
தமிழில்: நம்ம ஊரான்

ரோஹிங்கிய முஸ்லீம்கள் இனப் படுகொலையைக் கண்டித்து, அதிரையில் கண்டனப் பொதுக்கூட்டம் (படங்கள்)

அதிராம்பட்டினம், செப். 28
தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகம் அதிராம்பட்டினம் பேரூர் சார்பில், மியான்மர் ரோஹிங்கிய முஸ்லீம்கள் இன படுகொலை கண்டித்தும், மத்திய அரசு கொண்டு வந்த நீட் தேர்வை நிரந்தரமாக ரத்து செய்யக்கோரியும் கண்டனப் பொதுக்கூட்டம் அதிராம்பட்டினம் பேருந்து நிலையம் அருகில் புதன்கிழமை இரவு நடைபெற்றது.

கூட்டத்திற்கு, அவ்வமைப்பின் அதிரை பேரூர் செயலர் எம்.ஆர் கமாலுதீன் தலைமை வகித்தார். தமுமுக - மமக மாவட்டத் தலைவர் எஸ். அகமது ஹாஜா, மாநில ஊடகப்பிரிவு துணைச்செயலாளர் எம். ஃபவாஸ்கான், மாவட்ட செயலர் எஸ். சேக் முகைதீன், மமக மாவட்ட செயலர் எம். ஜபருல்லா, மாவட்ட துணைச் செயலாளர் எஸ்.எஸ் முகம்மது சேக்காதி, மாவட்ட மருத்துவ அணி செயலாளர் ஏ. சலீம், மாநில செயற்குழு உறுப்பினர் எம்.ஓ செய்யது முகமது புஹாரி, அதிரை பேரூர் துணைத் தலைவர் எச். செய்யது புஹாரி, மமக அதிரை பேரூர் வணிகர் அணிச் செயலர் ஆர்.எம். நெய்னா முகமது, தமுமுக அதிரை பேரூர் பொருளாளர் எஸ். முகமது யூசுப், இஸ்லாமிய பிராசாரப் பேரவை அதிரை பேரூர் பொருளாளர் எஸ். சாகுல்ஹமீது, மமக அதிரை பேரூர் தொழிலாளர் அணிச் செயலாளர் ஜே. அப்துல் ஹக்கீம், மாவட்ட பொருளாளர் இன்ஜினியர் ஏ. முகமது இலியாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு விருந்தினராக மனிதநேய மக்கள் கட்சி மாநில பொதுச்செயலாளர் ப. அப்துல் சமது கலந்துகொண்டு கண்டன உரை நிகழ்த்தினார். மேலும், அவ்வமைப்பின் மாநில பேச்சாளர் பழனி பாருக், மமக மாநில அமைப்புச் செயலாளர் வழக்குரைஞர் ஐ.எம் பாதுஷா ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினார்கள்.

கூட்டத்தில், ரோஹிங்கியா முஸ்லீம்கள் மீது நடத்திவரும் தாக்குதலை தடுக்காத மியான்மர் அரசை வன்மையாக கண்டிப்பது எனவும், இப்பிரச்சனையில் மத்திய அரசு தலையிட்டு, இந்தியாவில் உள்ள மியான்மர் அரசின் தூதரை திருப்பி அனுப்ப வேண்டும் எனவும், மத்திய அரசு கொண்டு வந்த நீட் தேர்வை நிரந்தரமாக ரத்து செய்ய வேண்டும், அதிராம்பட்டினம் பேரூராட்சி பகுதிகளில் சுகாதரச் சீர்கேட்டால் வேகமாக பரவி வரும் காய்ச்சலை கட்டுப்படுத்தி, இப்பகுதியில் சுகாதாரப் பணிகளை துரிதப்படுத்த வேண்டும், அதிராம்பட்டினம் பேருந்து நிலையம், ஈஸ்ட் கோஸ்ட் சாலை ஆகிய பகுதிகளில் உள்ள மதுக்கடைகளில் சட்டவிரோதமாக முழு நேரமும் இயங்கி வரும் மது விற்பனையை தடுத்து நிறுத்தி, சம்பந்தப்பட்டவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும், அதிராம்பட்டினம் பகுதிகளில் சட்டவிரோதமாக விற்பனையாகும் கஞ்சா, லாட்டரி சீட்டுகள் போன்றவற்றை தடுத்து நிறுத்தவேண்டும், அதிராம்பட்டினம் அருகே உள்ள ஏரிப்புறக்கரை ஊராட்சி பிலால் நகர், ஆதம் நகர் பகுதிகளில் ஏற்பட்டுள்ள சுகாதரச் சீர்கேட்டினை சீர்படுத்தக் கோருவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தீர்மானங்களை தமுமுக, மமக மாவட்டத் தலைவர் அகமது ஹாஜா வாசித்தார்.

முன்னதாக, மமக அதிரை பேரூர் செயலாளர் எஸ்.ஏ இத்ரீஸ் அகமது வரவேற்றுப்பேசினார். கூட்ட முடிவில் தமுமுக அமெரிக்கா பொறுப்பாளர் மரைக்கான் என்கிற அப்துல் கபூர் நன்றி கூறினார். இக்கூட்டத்தில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
 

Wednesday, September 27, 2017

எதிஹாத் விமானத்தின் விமானி நடுவானில் மரணம் !

அதிரை நியூஸ்: செப். 27
அபுதாபி எமிரேட்டுக்குச் சொந்தமானது எதிஹாத் விமான நிறுவனம். இந்நிறுவனம் அபுதாபியிலிருந்து உலகின் பல நாடுகளுக்கும் பல்வேறு சொகுசு விமான சேவைகள், சரக்கு விமான சேவைகள் என பலவகையான சேவைகளை வழங்கி வருகிறது.

அபுதாபிலிருந்து ஆம்ஸ்டர்டாம் நகருக்கு புறப்பட்ட எதிஹாத் சரக்கு விமானத்தின்  விமானி ஒருவர் திடீரென நடுவானில் இறந்ததால் குவைத்தில் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. எனினும் குவைத் விமான நிலையத்தில் தயாராகயிருந்த மருத்துவ உதவிக்குழு விமானியை சோதித்து அவர் இறந்ததை உறுதி செய்தனர்.

Source: Msn / Khaleej Times
தமிழில்: நம்ம ஊரான்

துபையில் விறுவிறுப்புடன் நடைபெற்று வரும் ஜீடெக்ஸ் ஷாப்பர் 2017 (படங்கள்)

அதிரை நியூஸ்: செப்.27
துபையில் கம்ப்யூட்டர், மொபைல், வீட்டு உபயோக மின்பொருட்கள் போன்ற பல புதிய சாதனங்களின் சில்லரை விற்பனைக்காக ஆண்டில் 2 முறை ஜீடெக்ஸ் எனப்படும் எலக்ட்ரானிக் பொருட்களின் விற்பனை கண்காட்சி நடைபெறும்.

இதில் ஏராளமான முன்னனி நிறுவனங்கள் பங்குபெற்று தங்களுடைய ஸ்டால்களை அமைப்பதுடன் தங்களுடைய ஷோரூம்களிலும் ஜீடெக்ஸ் சிறப்புத் தள்ளுபடி விலைக்கே பொருட்களை விற்பனை செய்வார்கள்.

27வது மற்றும் இந்த வருடத்தின் இலையுதிர்கால ஜீடெக்ஸ் ஷாப்பர்ஸ் (Gitex shopper Autumn) திருவிழா கடந்த 23.09.2017 சனிக்கிழமை முதல் நடைபெற்று வருகிறது அறிந்ததே.

8 நாட்கள் நடைபெறும் இந்த எலக்ட்ரானிக் பொருட்களின் விற்பனைத் திருவிழா எதிர்வரும் 30.09.2017 சனிக்கிழமையுடன் நிறைவுறும். காலை 11 மணிமுதல் இரவு 11 மணிவரை திறந்திருக்கும் இந்த ஜீடெக்ஸ் ஷாப்பர் விற்பனை கண்காட்சி வழமைபோல் துபை டிரேட் சென்டரில் நடைபெற்று வருவதுடன் நுழைவு கட்டணமாக 30 திர்ஹம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்