.

Pages

Thursday, March 1, 2018

பட்டுக்கோட்டை ~ காரைக்குடி ரயில் வழித்தடத்தில் அதிவேக சோதனை ஓட்டம்!

பட்டுக்கோட்டை, மார்ச்.01
காரைக்குடி - திருவாரூர் இடையேயான, அகல ரயில் பாதை பணி கடந்த 2012 ஆம் ஆண்டு தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், காரைக்குடி முதல் பட்டுக்கோட்டை வரையிலான 73 கிலோ மீட்டர் பாதையில் பணிகள் முடிந்துள்ளதை அடுத்து. இந்த வழித்தடத்தில் சிறப்பு ரயிலைப் பயன்படுத்தி அதிவேக சோதனை ஓட்டம் இன்று வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், தென் மண்டல ரயில்வே பாதுகாப்பு ஆணையர் கே.ஏ மனோகரன் கலந்துகொண்டு இந்த வழித்தடத்தில் ஆய்வை மேற்கொண்டார். இதில்,  திருச்சி கோட்ட ரயில்வே மேலாளர் உதயகுமார்ரெட்டி, சுதாகர் ராவ் உள்பட ரயில்வே அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
 
 
 

தஞ்சை மாவட்டத்தில் 30,280 மாணவர்கள் +2 அரசு பொதுத் தேர்வு எழுதினர் !

தஞ்சாவூர் மாவட்டத்தில் மேல்நிலை இரண்டாம் ஆண்டு அரசு பொதுத் தேர்வு இன்று 01.03.2018 தொடங்கப்பட்டுள்ளதை  ஒரத்தநாடு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மேல்நிலை இரண்டாம் ஆண்டு அரசு பொது தேர்வு மையத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை பார்வையிட்டு செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது;
தஞ்சாவூர் மாவட்டத்தில் 29,502 பள்ளி மாணவ மாணவியர்கள் 95 தேர்வு மையங்களில் தேர்வு எழுதுகின்றனர். இதில் 13,267 மாணவர்களும், 16,235 மாணவியர்களும் தேர்வு எழுதுகின்றனர்.

தனி தேர்வர்களுக்கு  மூன்று மையங்கள் அமைக்கப்பட்டு மொத்தம் 778 தனி தேர்வர்கள் தேர்வு எழுதுகின்றனர்.  மொத்தம் நமது மாவட்டத்தில் 30,280 மாணவ மாணவியர்கள் தேர்வு எழுதுகின்றனர். 86 மாற்றுத்திறனாளி மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர். மாற்றுத்திறனாளி மாணவர்கள் தேர்வு எழுத வசதியாக தரை தளத்தில் தேர்வு அறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. உடல் ஊனமுற்றோர், கண் பார்வையேற்றார். காது கேளாதோர் மற்றும் வாய் பேசாதோர், டிஸ்லெக்சியா மற்றும் மனவளர்ச்சி குன்றிய மாணவர்களுக்கு கூடுதலாக ஒரு மணி நேரம் ஒதுக்கியும் சொல்வதை எழுதுவதற்கு ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளது.

தேர்வு நடைபெறும் 95 தேர்வு மையங்களில் 2668 பணியாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தேர்வு மையங்களை கண்காணிக்க பறக்கும் படை அமைக்கப்பட்டு மாவட்டம் முழுவதும் கண்காணிக்கப்பட்டு வருகிறது.  ஒவ்வொரு தேர்வு மையங்களுக்கும் குடிநீர் வசதி உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.

மார்ச் 2018 மேல்நிலை இரண்டாம் ஆண்டு அரசு பொது தேர்வு எழுதும் மாணவர்கள் அனைவரும் முழு தேர்ச்சி பெற வேண்டும். அதிக மதிப்பெண்கள் பெறவும், சிறந்த மாணவர்களாக வர வேண்டும். வீட்டிற்கும், நாட்டிற்கும் பெருமை சேர்க்க வேண்டும்.  இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் ஆ.அண்ணாதுரை தெரிவித்தார்.

இவ்வாய்வின் போது முதன்மை கல்வி அலுவலர் சுபாஷினி மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

அமீரகத்தில் சலுகை, விழிப்புணர்வு வீடியோ எடுங்க! தள்ளுபடி பெறுங்க!

அதிரை நியூஸ்: மார்ச் 01
அமீரகம், ராஸ் அல் கைமா போக்குவரத்து போலீஸ் புதிய அதிரடி சலுகையை வெளியிட்டுள்ளது. சிறு போக்குவரத்து விதிமீறல் குற்றங்களுக்காக அபராதம் கட்ட வேண்டியுள்ளதா? அதை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டுமா? உங்கள் மொபைல் போனில் 1 நிமிடங்களுக்கு மிகாத போக்குவரத்து விதிகளை மதிப்பதன் அவசியத்தை உணர்த்தும் விழிப்புணர்வு குறும்படம் ஒன்றை எடுத்து வாட்ஸப் மூலம் பரப்புவதுடன் 056-524580 என்ற இந்த நம்பருக்கும் அனுப்புங்கள்.

சிறந்த விழிப்புணர்வு வீடியோ கவுரவிக்கப்படுவதுடன் அவரது சிறு குற்றங்களுக்கான போக்குவரத்து அபராதமும் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும். போக்குவரத்து விதிமீறல் குற்றங்களில் ஈடுபடாத பொதுவானவர்களும் வீடியோவை அனுப்பலாம். அதிகாரிகளின் பரிசீலணைக்குப் பின் சிறந்த விழிப்புணர்வு வீடியோக்கள் தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்படும். பெரும் விதிமீறல் குற்றங்களில் ஈடுபட்டவர்களுக்கு இச்சலுகை பொருந்தாது.

இந்த விழிப்புணர்வு வீடியோவை விதிமீறலில் ஈடுபட்டு அபராதம் விதிக்கப்பட்ட 10 நாட்களுக்குள் எடுத்து அனுப்ப வேண்டும். இந்த வீடியோக்கள் மூலம் குறைந்தது 5 வயது சிறார்கள் முதல் பெரியவர்கள் வரை பயன்படும் வகையிலான நல்வாக்குகள் எடுத்துச் சொல்லப்படுவதுடன் குறைந்தது 5 பேராவது திருந்தி போக்குவரத்து விதிகளை கடைபிடிக்க முன்வரும் வகையில் அதன் உள்ளடக்கம் வலிமையாக அமைந்திருக்க வேண்டும் என வழிகாட்டப்பட்டுள்ளது.

Source: Khaleej Times / Msn
தமிழில்: நம்ம ஊரான் 

அமீரகத்தில் இருந்து 4,700 சடலங்களை சொந்த நாடுகளுக்கு அனுப்ப உதவிய சமூக நல ஆர்வலர் அஷ்ரப்!

அதிரை நியூஸ்: மார்ச் 01
துபையின் வானுயர்ந்த கட்டிடங்களுக்கு நேர்மாற்றமான நகரம் அஜ்மான். கவர்ச்சிக்கும், தூசிக்கும் உதாரணங்களாகத் திகழும் இந்த 2 நகரங்களுக்கும் இடைப்பட்ட தூரம் சுமார் 35 கி.மீ மட்டுமே. இங்கு ஒரு மெக்கானிக் ஷாப் நடத்தி வருவதுடன் மனைவி மற்றும் மகளுடன் அளவான ஒரு பெட்ரூம் வீட்டில் வாழ்ந்து வருகிறார் 44 வயதேயான அஷ்ரப் தாமாரஸேரி என்கிற சமூக நலத் தொண்டர். கேரளாவைச் சேர்ந்த இவரை தேடிவந்த பல விருதுகள் வீட்டின் வரவேற்பறையை அலங்கரிக்கின்றன.

எப்போதும் சிணிங்கிக் கொண்டே இருக்கும் இவரது மொபைலில் அதிகமான அழைப்புக்கள் இவர் தொழில் சார்ந்ததை விட உதவிகள் கேட்டே வருகின்றன. குறிப்பாக அஜ்மான், ஷார்ஜா, துபை மற்றும் பிற எமிரேட்டுகளில் இறந்த வெளிநாட்டு உறவுகளிடமிருந்தே.

நேரகாலம் பார்க்காமல் ஓடோடிச் சென்று உதவும் இவரால் சுமார் 38 நாடுகளைச் சேர்ந்த சுமார் 4,700 சடலங்கள் சொந்த ஊர்களுக்கு சங்கடங்கள் தீர்ந்து பறந்துள்ளன, சமீபத்தில் இறந்த நடிகை ஸ்ரீதேவி என்பவரின் உடல் உட்பட. கடைசியாக போலீஸாரின் தடையில்லா சான்றிதழைப் பெற்று அவரது உடலை அனுப்ப ஏற்பட்ட தாமதத்திற்கு இடையில் இந்தியாவின் நூற்றுக்கணக்கான மீடியாக்கள் இவரையே செய்திகளுக்கு தொடர்பு கொண்டன.

நடிகை ஸ்ரீதேவியின் உடலை அனுப்புவதற்கான பணிகளில் ஈடுபட்டிருந்த போதே வேறு 3 சடலங்களுக்குமான ஆவணங்களையும் சேர்த்தே செய்துள்ளார். ஏழையோ, பணக்காரரோ எனக்கு எல்லோரும் ஒன்றே எனக்கூறும் அஷ்ரப் பலருக்கும் இங்குள்ள சட்டங்கள் தெரியாததாலேயே தன்னுடைய உதவியை நாடுவதாகவும் இந்தப் பணியை தன்னால் இயன்றவரை தொடர்வேன் என்றும் உறுதிபடக் கூறுகின்றார்.

Source: AP / Msn
தமிழில்: நம்ம ஊரான் 

அமீரகத்தில் அடுத்து 3 ஆண்டுகளுக்கு சேவைக் கட்டணங்கள் ஏற்றம் இல்லை!

அதிரை நியூஸ்: மார்ச் 01
அமீரகத்தில் வெளிநாட்டு முதலீடுகளை இன்னும் அதிகமாக ஈர்ப்பதற்காகவும் பொருளாதார, சமூக ஸ்திரத்தன்மையை நிலைப்படுத்துவதற்காகவும் எதிர்வரும் 3 ஆண்டுகளுக்கு மத்திய பெடரல் அரசு சார்பாக வசூலிக்கப்பட்டு வரும் சேவைக்கட்டணங்களை ஏற்றுவதில்லை என அமீரகப் பிரதமரும் துணை ஜனாதிபதியும் துபை எமிரேட்டின் ஆட்சியாளருமான ஷேக் முஹமது பின் ராஷித் அல் மக்தூம் அவர்கள் தலைமையில் கூடிய அமைச்சரவை கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இந்த முடிவானது தொழில் உற்பத்தி மற்றும் வர்த்தகத் துறையை மேலும் வலுப்படுத்தும் என்றும், பெட்ரோலிய வருமானத்தை மட்டும் நம்பியிராத மாற்றுப் பொருளாதார திட்டங்களை ஊக்குவிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இக்கூட்டத்தில் அமீரக ரயில்வேக்கான வரைவு திட்டங்களும், சுற்றுலா சார்பான கப்பல் ஊழியர் மற்றும் பணியாளர்களுக்கு (The crews of tourism cruises) 6 மாதத்திற்கு செல்லுபடியாகும் பன்னுழைவு அனுமதி கொண்ட விசாவை (Multiple Entry Visa for 6 Month) வழங்கவும் தீர்மானிக்கப்பட்டது.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான் 

மரண அறிவிப்பு ~ கே.எம் அகமது ஜலாலுதீன் (வயது 70)

அதிரை நியூஸ்: மார்ச்.01
அதிராம்பட்டினம், தரகர் தெருவைச் சேர்ந்த மர்ஹூம் முகமது சாலிகு அவர்களின் மகனும், சேக் நூர்தீன், சாகுல் ஹமீது அவர்களின் சகோதரரும், நெய்னா முகமது அவர்களின் தகப்பனாரும், மர்ஹூம் நாகூர் பிச்சை, முகமது பாருக், மர்ஹூம் அப்துல் சலாம் ஆகியோரின் மச்சானும், சவுக்கத் அலி அவர்களின் மாமனாருமாகிய, கே.எம் அகமது ஜலாலுதீன் (வயது 70) அவர்கள் இன்று காலை ஆதம் நகர் இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா இன்று (01-03-2018) மாலை மஹ்ரிப் தொழுகைக்கு பிறகு தரகர் தெரு முகைதீன் ஜும்மா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

அமீரகத்தில் மார்ச் மாத பெட்ரோல் சில்லறை விற்பனையில் 3 காசுகள் குறைப்பு!

அதிரை நியூஸ்: மார்ச்.01
அமீரகத்தில் மாதந்தோறும் சர்வதேச கச்சா எண்ணெயின் சந்தை நிலவரத்திற்கு ஏற்ப மாற்றியமைக்கப்படும் பெட்ரோல் சில்லறை விற்பனையில் லிட்டருக்கு 3 காசுகளும், டீசல் விற்பனையில் 6 காசுகளும் குறைக்கப்பட்டுள்ளன.

மார்ச் மாத புதிய சில்லறை விலையுடன் அடைப்புக்குறிக்குள் கடந்த மாத விலை ஒப்பீட்டுக்காக,
1. சூப்பர் 98 : 2.33 திர்ஹம் (2.36)
2. ஸ்பெஷல் 95 : 2.22 திர்ஹம் (2.25)
3. ஈ பிளஸ் : 2.14 திர்ஹம் (2.17)
4. டீஸல் : 2.43 திர்ஹம் (2.49)

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான் 

முழு வீச்சில் நடைபெறும் அதிராம்பட்டினம் ரயில் நிலையம் கட்டுமானப் பணி (படங்கள்)

அதிராம்பட்டினம், மார்ச்.01
காரைக்குடி - திருவாரூர் இடையேயான, 147 கி.மீ., துார மீட்டர் கேஜ் பாதை, ரூ. 711 கோடி செலவில், அகல ரயில் பாதையாக மாற்றியமைக்கும் பணிகள் தீவிராக நடைபெற்று வருகிறது. இதில், காரைக்குடி முதல் பட்டுக்கோட்டை வரையிலான 73 கிலோ மீட்டர் பாதையில் பணிகள் முடிந்துள்ளதை அடுத்து. இந்த வழித்தடத்தில் சிறப்பு ரயிலைப் பயன்படுத்தி அதிவேக சோதனை ஓட்டம் இன்று (மார்ச்.01) வியாழக்கிழமை நடைபெற உள்ளது. இதில், தென் மண்டல ரயில்வே பாதுகாப்பு ஆணையர் கே.ஏ மனோகரன் கலந்துகொண்டு ஆய்வு மேற்கொள்ள உள்ளார்.

பட்டுக்கோட்டை - திருவாரூர் வரையிலான 76 கிலோ மீட்டர் அகல ரயில் பாதை பணியின் ஒரு பகுதியாக, தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் ரயில் நிலையம் சுமார் ரூ. 3.5 கோடி மதிப்பீட்டில் கட்டுமானப்பணி கடந்த ஜூலை முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. சுமார் ரூ. 3.5 கோடி மதிப்பீட்டில், 65 மீட்டர் நீளத்தில் ரயில் நிலையம், 420 மீட்டர் நீளத்தில் நடைமேடை மற்றும் வாகனங்கள் நிறுத்துமிடம், கழிப்பறை கட்டிடம், டிக்கெட் கவுண்டர், பயணியர் ஓய்வு அறை என பயணிகளுக்கு தேவையான அனைத்து வசதிகள் ஒருங்கிணைந்த நிலையம் அமைப்பதற்கான பணிகள் தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

இதில், அதிராம்பட்டினம் ரயில் நிலைய மேற்கூரை அமைக்கும் பணிக்கு மொத்தம் 100 டன் எடை இரும்பு பயன்படுத்தப்படுகிறது. முதல் கட்டமாக 50 டன் இரும்பில், 65 மீட்டர் நீளத்தில் ரயில் நிலைய மேற்கூரை, 1 மற்றும் 2-வது பிளாட் பாரம் ஆகியவற்றை இணைக்கும்  படிக்கட்டு நடைமேடை மேற்கூரை, 2-வது பிளாட் பாரத்தில் தலா 32 மீட்டர் நீளத்தில் 4 மேற்கூரைகள், 1-வது பிளாட் பாரத்தில், தலா 32 மீட்டர் நீளத்தில் 3 மேற்கூரைகள் ஆகிய பணிக்கான வெல்டிங் பணிகள் முடிந்துள்ளது.

அதிராம்பட்டினம் ரயில் நிலையத்தில், ஒரே நேரத்தில் 2 ரயில்கள் நிறுத்தும் வகையில் இரண்டு பிளாட் பாரம் அமைப்பதற்கான தடுப்பு சுவர்கள் எழுப்பட்டு வருகிறது. ரயில் நிலைய தரை தளத்திற்கும், நடை மேடை தடுப்பு சுவருக்கும் இடையே மண் நிரப்பட்டு உள்ளது.

பட்டுக்கோட்டையில் இருந்து அதிராம்பட்டினம், முத்துப்பேட்டை, தில்லைவிளாகம் வழியாக திருத்துறைப்பூண்டி வரையிலான சுமார் 50 கிலோ மீட்டர் ரயில் பாதையில் தண்டவாளங்கள் அமைக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. முன்னதாக, பட்டுக்கோட்டை முதல் பள்ளிக்கொண்டான் வரையிலான பாதையில் உள்ள தற்காலிகமாக பொருத்தி இருந்த பழைய தண்டவாளங்கள் அகற்றிவிட்டு, டெல்லியிலிருந்து கூட்ஸ் ரயில் மூலம் கொண்டு வரப்பட்ட  360 மீட்டர் நீளமுள்ள புதிய தண்டவாளங்கள் இப்பாதையில் பொருத்தப்பட்டன.

இதைதொடர்ந்து, இரண்டாம் கட்டமாக பள்ளிக்கொண்டான் முதல் அதிராம்பட்டினம் வரையிலான பாதையில், தண்டவாளங்கள் பொருத்தும் பணி நடைபெற உள்ளது. இப்பணிக்காக, பணிக்காக ஸ்லீப்பர் கட்டைகள் டிப்பர் லாரிகளில் கொண்டுவரப்பட்டு ஜே.சி.பி இயந்திரம் உதவியோடு ரயில் பாதையில் அடுக்கி வைக்கப்படுகின்றன. ஜல்லிகள் கொட்டப்பட்டு வருகிறது.

பட்டுக்கோட்டை - திருவாரூர் அகல ரயில் பாதைப் பணி வரும் ஜூலை மாதத்திற்குள் முடிக்க திட்டமிட்டுள்ளதை அடுத்து, இந்த வழித்தடத்தில் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.