.

Pages

Thursday, July 28, 2016

கழிவு மேலாண்மையின் முன்மாதிரி பேரூராட்சி!

வீரபாண்டி பேரூராட்சி நூறு சதவீத கழிவு சேகரிப்பிலும், முழுமையான மறு சுழற்சியிலும் வெற்றி அடைந்திருக்கிறது.

தேனி மாவட்டம், வீரபாண்டி பேரூராட்சி கழிவு மேலாண்மையில் முன்மாதிரி என்ற பெயரெடுத்திருக்கிறது. கழிவுகளை பாதுகாப்பாக அகற்றுவதிலும், மட்கிப் போகாத கழிவுகளை மறு சுழற்சிக்கு உட்படுத்துவதிலும் முன்னிலை வகித்து வருகிறது. அத்தோடு கழிவுகளில் இருந்து இயற்கை உரம் மற்றும் மண்புழு உரங்களை விவசாயிகளுக்கு தொடர்ந்து குறைந்த விலையில் வழங்கி, வேதியியல் பூச்சிக்கொல்லிகளின் பரவலையும் தடுக்கிறது.

எப்படி இது சாத்தியமானது?
வீரபாண்டி பேரூராட்சியின் முன்னாள் செயல் அலுவலர் செந்தில் குமாரின் தொடக்கம் இன்று பலனைத் தந்து வருகிறது. இப்போது பேரூராட்சி முழுவதிலும் அனைத்து வீடுகளில் இருந்தும் கழிவு சேகரிக்கப்படுகிறது. அவற்றை முறையாக அகற்றுவதாலும், மறு சுழற்சி செய்வதாலும் கழிவுகள் தேங்கிக் கிடப்பதில்லை.

இங்கு ஒவ்வொரு நாளும் 1.5 டன் மக்காத கழிவுகள் சேர்த்து சுமார் 3 டன் கழிவுகள் சேகரிக்கப்படுகின்றன. குப்பை சுத்திகரிப்புக் கிடங்கு மற்று உரக்கிடங்கு மூலம் அக்கழிவுகளை தினமும் சுமார் 500 முதல் 600 கிலோ இயற்கை மற்றும் மண்புழு உரங்களாக மாற்றுகிறது. இயற்கைக் கழிவுகள் உரங்களாகவும், மண்புழு உரங்களாகவும் மாற சுமார் 40 நாட்கள் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.

பிளாஸ்டிக் கழிவுகள் சிறு சிறு துண்டுகளாக்கப்படுகின்றன. ஒப்பந்ததாரர்களிடம் 1 கிலோ 20 ரூபாய்க்கு விற்கப்பட்டு சாலை போடப் பயன்படுத்தப்படுகின்றன. மண்புழு உரம் கிலோ 3 ரூபாய்க்கும், இயற்கை உரம் கிலோ 1 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. இதன் மூலம் ஊராட்சி நிர்வாகத்துக்கு வருடம் ஒரு லட்ச ரூபாய் வருமானம் கிடைக்கிறது. குப்பை சுத்திகரிப்புக் கிடங்கைச் சுற்றிலும் 200 மூங்கில் மரங்கள் இருப்பதால் துர்நாற்றம் எழுவதில்லை.

இதே முறையைப் பின்பற்றி அருகிலிருக்கும் தென்கரை பேரூராட்சி தினமும் 2 டன் கழிவுகளை மேலாண்மை செய்து வருகிறது. இரண்டு பேரூராட்சிகளையும் ஆய்வு செய்து திரும்பிய தேனி மாவட்ட ஆட்சியர் என். வெங்கடாச்சலம், குப்பை இல்லாத ஊராட்சியை உருவாக்குவதில் ஏராளமான உழைப்பு செலவிடப்பட்டிருக்கிறது என்று பாராட்டு தெரிவித்துள்ளார்.

நன்றி: தி இந்து தமிழ்

சவூதிக்கு உம்ரா யாத்திரை வந்தவர்கள் விசா கெடுவிற்குள் வெளியேற உத்தரவு !

சவூதி அரேபியா நாட்டிற்கு சுமார் 6 மில்லியன் புனித யாத்ரீகர்கள் வருகை தந்திருந்த இந்த வருட உம்ரா சீசன் நிறைவுற்றதை தொடர்ந்து அனைத்து உம்ரா யாத்ரீகர்களும் விசா தேதி முடிவு கெடுவிற்குள் சவூதி நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என சவூதி அரசு அறிவித்துள்ளது.

விசா முடிந்தும் சட்டவிரோதமாக தங்கும் நபர்களுக்கு அடைக்கலம் தரும் அனைவருக்கும் 1 லட்சம் சவூதி ரியால் வரை அபராதத்துடன் 2 வருட சிறைத் தண்டனையும் விதிக்கப்படும். மேலும், சட்ட விரோத அடைக்கலம் தருபவர் வெளிநாட்டு பிரஜையாக இருக்கும் பட்சத்தில் தண்டனை காலத்திற்குப் பிறகு அவரது நாட்டிற்கு திரும்ப அனுப்பப்படுவார் என்றும் சவூதி பாஸ்போர்ட் கட்டுப்பாட்டுத் துறை எச்சரித்துள்ளது.

நோயாளிகள் தகுந்த ஆவணங்களை வழங்கினால் மட்டுமே அவர்களது விசா காலம் மருத்துவமனையிலிருந்து வெளியேறும் காலம் வரை நீட்டிக்கப்படும் எனவும் விளக்கப்பட்டுள்ளது.

Source: Arab News
Dated: 27.07.2016
தமிழில் நம்ம ஊரான்

கார்கோ - சிறுகதை [ துபாயில் நிகழ்ந்த சோகம் ! ]

வனிக்கவும்: இது சிறுகதை வடிவிற்காக கற்பனை கலந்த உண்மைச் சம்பவம்

துபாயில் சற்று நல்ல சம்பளத்தில் பணிபுரியும் எனது நண்பன் புன்னகை தவழ மொபைலில் ஊரிலிருக்கும் சொந்தங்களுடன் பேசிவிட்டு அமர்ந்தான், அயல்நாட்டில் பணிபுரியும் பெரும்பாலானவர்களைப் போலவே இவனுக்கும் வருடத்தின் 11 மாதங்கள் மொபைல் போன் வாழ்க்கை!

புன்னகையின் ரகசியத்தை நான் கேட்பேன் என்பதை புரிந்தவனாக அவனே சொல்லத் தொடங்கினான். 15 நாட்களுக்கு முன் குடும்பத் தேவைக்கு அனுப்பிய கார்கோ சாமான்கள் கிடைத்து விட்டதாம், கார்கோவை பிரித்துப் பார்த்த பிள்ளைகளும் குடும்பத்தினரும் ரொம்ப சந்தோஷப்பட்டார்களாம், ஆமா அவங்க சந்தோஷத்திற்கு தானே நாம் சம்பாதிக்கிறோம் என முனுமுனுத்த அவன் உள்ளத்தின் வார்த்தைகள் மெல்லிசாக உதடுகள் வழியாய் ஈரமாய் கசிந்தது.

எதிர்வரும் பிள்ளையின் பள்ளிக்கூட விடுமுறையில் தனது மனைவி, பிள்ளை மற்றும் அம்மாவையும் விசிட் விசாவில் எடுக்கக் இருக்கும் தனது நீண்டநாள் ஆசைக்கு அவர்கள் சம்மதம் சொன்னதாக சொன்னவன் அதற்கான விசாவுடன் பிற முன்னேற்பாடுகளுக்கு உதவுமாறு கேட்டுக் கொண்டான்.

இதோ, என் நண்பனின் குடும்பத்தினர் துபாய் வரத் தேவையான விசா, ரிட்டர்ன் டிக்கெட், ஊருக்குச் சென்றிருக்கும் என் இன்னொரு நண்பனின் அறையை ஒரு மாதத்திற்கு பயன்படுத்திக் கொள்ள குறைந்த வாடகை பேசி வாங்கிக் கொடுத்தது என அனைத்தும் அவர்களின் வருகைக்காக தயார்.

குடும்பத்தினர் புடைசூழ்ந்து சந்தோஷமாக வழியனுப்ப தனி வேனில் சென்னை விமான நிலையத்திற்கு வந்துவிட்டார்கள். அனைவருடைய உள்ளங்களிலும் முதன்முதலாக விமானத்தில் செல்லும் குதூகலம், துபையை சுற்றிப் பார்க்கப் போகும் ஆசை, தலைவனை (என் நண்பனை) காணப்போகும் ஆவல் என அனைத்தும் சேர்ந்து வார்த்தைகளில் வடிக்க முடியாத பூரிப்பு அவர்களின் கண்களுள் பட்டாம்பூச்சிகளாய் பறந்து கொண்டிருந்தன, சூழலுக்கு ஏற்றார் போல் விமானங்களின் புறப்பாடு, வருகை குறித்த இனிய அறிவிப்புகளும் அவர்களின் உள்ளத்தை அவர்களின் விமானம் புறப்படுமுன்பே கற்பனை வானில் பறக்கச் செய்திருந்தது.

ஆச்சு, செக் இன், எமிக்கிரேசன், பாதுகாப்பு பரிசோதனைகள் என எல்லா சம்பிரதாயங்களும் முடிந்து விமானத்தில் ஏறும் போது விமானப் பணிப்பெண்களின் இன்ஸ்டன்ட் புன்சிரிப்பு வாயில் வரவேற்புடன் பறந்து வந்து துபாய் விமான நிலையத்தில் இறங்கி இங்குள்ள இமிக்கிரேசன் இத்யாதிகள் முடிந்து வெளியில் வந்தவர்களை வரவேற்க என் நண்பனும் நானும் எங்கள் அலுவலக பணியை முடித்துவிட்டு நேராக விமான நிலையம் வந்திருந்தோம், எல்லோரும் வீடு சேர நள்ளிரவாகிவிட்டது.

என் நண்பன் அவர்களுடைய பாஸ்போர்ட் மற்றும் ரிட்டர்ன் விமான டிக்கெட்டுகளை வாங்கி மிகவும் பத்திரமாக வைத்துக் கொண்டான். அனைவரையும் நன்கு ஓய்வெடுக்கச் சொல்லிவிட்டு நாளை விடுமுறை நாளான வெள்ளிக்கிழமை பகல் உணவிற்குப்பின் 'புருஜ் கலிபா' எனும் உலகின் உயரமான கட்டிடத்தை சுற்றிப் பார்க்க அழைத்துச் செல்ல காருடன் வருவதாகவும் அனைவரும் தயாராக இருக்கும்படியும் சொல்லி விடைபெற்றேன்.

சொன்னபடியே வெள்ளிக்கிழமை மாலை காருடன் என் நண்பன் வீட்டிற்கு போன என்னை வரவேற்றது நேற்றைய மகிழ்ச்சிக்கு சம்பந்தமில்லாத அழுகுரல்கள், புருஜ் கலிபா செல்லத் தயாராகி கொண்டிருந்த அவன் அம்மா எனக்கு ஏதோ செய்கிறது மகனே என நெஞ்சை பிடித்தவாறு அமர்ந்தவரின் உயிர் வேகமாய் வெளியேறி இருந்தது, விடைபெற்றுச் செல்வதில் எத்தனை அவசரம்!

சட்டப்படி உடனடியாக துபை போலீஸிற்கு தகவல் கொடுக்கப்பட்டு, ஆம்புலன்ஸ் வந்து அம்மாவின் உடலை ஏற்றிச் செல்ல, மருத்துவ கூராய்வு உட்பட அனைத்து சம்பிரதாயங்களும் முடிந்து உடலைப் மீண்டும் கண்ணில் காண 3 நாட்களாகிவிட்டன. ஊரிலுள்ள குடும்பத்தார் கேட்டுக் கொண்டபடி இனி ஊருக்கு அனுப்பும் வேலைகளில் ஈடுபட வேண்டும், இது இன்னொரு கிணற்றை தாண்டும் வேலை.

ரிட்டர்ன் டிக்கெட்டில் பயணியாக வந்தவர் இனி அந்த டிக்கெட்டில் திரும்ப பயணம் செய்யவே முடியாதாம், இனி அந்த கார்கோவை (உயிரற்ற பயணியை) ஊருக்கு அனுப்ப புதிய டிக்கெட் எடுக்க வேண்டுமாம். ஓரிரு நாளிலேயே பயணி கார்கோவாக கணக்கிடப்பட்டு சிறப்பு இருமடங்கு கட்டணத்தில் விமானத்தில் ஏற்றப்பட்டார், இப்போது புன்சிரிப்புடன் வரவேற்க விமானப் பணிப்பெண் யாருமில்லை, விமான நிலைய இனிய அறிவிப்புகளும் காதில் விழவில்லை.

சென்னை விமான நிலையத்தில் ஆம்புலன்ஸூடன் குடும்பத்தினர் கார்கோவை பெற காத்திருந்தனர். யாருக்கும் மகிழ்ச்சி தராத 'கார்கோ' இது.

- நம்ம ஊரான்

Wednesday, July 27, 2016

அரை இறுதிக்கு கண்டனூர் அணி தகுதி !

அதிராம்பட்டினம், ஜூலை 27
தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினம் இளைஞர்கள் கால்பந்துக் கழகம் 22 ஆம் ஆண்டு, S.S.M குல் முஹம்மது அவர்களின் நினைவு 16 ஆம் ஆண்டு மாபெரும் எழுவர் கால்பந்து தொடர் போட்டி கடந்த [ 07-07-2016 ] அன்று முதல் கடற்கரைத்தெரு விளையாட்டு மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இன்று நடைபெற்ற கால் இறுதி ஆட்டத்தில் அ த்திக்கடை, கண்டனூர் அணிகள்க மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற ஆட்ட இறுதியில் 2-0 என்ற கோல் கணக்கில் கண்டனூர் அணி வெற்றி பெற்றது. இதையடுத்து நாளை நடைபெற உள்ள அரை இறுதி ஆட்டத்தில் தஞ்சை அணியோடு மோத உள்ளது.

வழமை போல் இன்றைய ஆட்டத்தை காண ஏராளமான விளையாட்டுப் பிரியர்கள், பொதுமக்கள் மைதானத்திற்கு வருகை தந்து ரசித்தனர்.

அதிரை அருகே கலாம் நினைவு தினத்தையொட்டி மரக்கன்று நடும் நிகழ்ச்சி !

தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் அருகே உள்ள நரசிங்கபுரம் ஊராட்சி, மேலமங்கனங்காடு கிராமத்தில் ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் மேலமங்கனங்காடு இளைஞர் பேரவை சார்பாக முன்னாள் ஜனாதிபதியும் அணுசக்தி விஞ்ஞானியுமான டாக்டர் ஏபிஜே. அப்துல் கலாம் அவருக்கு முதலாமாண்டு நினைவு நாளில் மரக்கன்று நடும் பணி நடைபெற்றது.

இவ்விழாவில் ஊராட்சி மன்ற தலைவர் K. ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார்.  ஊராட்சி மன்ற துணைத் தலைவர் V. தியாகராஜன் மற்றும் N.சின்னப்பா BA, ஆகியோர் முன்னிலை வகித்தனர். இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளராக N. சண்முகசுந்தரம் MA,M.Phil. V.ராஜேந்திரன், T.சரவணன், Mr. நல்லதம்பி ,Mr.வீரமணி, ஆகியவர்கள் கலந்து கொண்டனர்.மற்றும் மேலமங்கனங்காடு இளைஞர் பேரவை பொறுபாளர்களாக S.பழனி, J. சரவணன் DME, M. விஜய் DEE. A. அஜித் DEEE .C.தினேஷ் BSC.A. அழகேசன் DHMCT,  மற்றும் கிராமவாசிகள் கலந்து கொண்டு அவர்களின் திருஉருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் அஞ்சலி செலுத்தினர். பின்னர் மரக்கன்றுகள் நடப்பட்டது. முன்னதாக K.கார்த்திக் வரவேற்புரை ஆற்றினார். விழா முடிவில் ஊராட்சி மன்ற உறுப்பினர் P.மாரிமுத்து நன்றி கூறினார்.
 

தஞ்சை மாவட்ட ஆட்சியராக ஏ. அண்ணாதுரை நியமனம் !

தமிழகத்தில் உள்ள ஐ.ஏ.எஸ்., மற்றும் ஐ.பி.எஸ்., அதிகாரிகளை மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதில் தஞ்சை மாவட்ட ஆட்சியராக ஏ. அண்ணாதுரை நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பட்டியல்:
நிர்மல் ராஜ் - திருவாரூர் மாவட்ட கலெக்டர்.
கோவிந்தராஜன் - கருர் மாவட்ட கலெக்டர்.
அண்ணாதுரை - தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர்.
ஆசிய மரியம் - நாமக்கல் மாவட்ட கலெக்டர்.
ராமன் - வேலூர் மாவட்ட கலெக்டர்.
வினய் - திண்டுக்கல் கலெக்டர்.
ஞான சேகரன்- கடலூர் கலெக்டர்.
ராஜாராமன் - நகராட்சி நிர்வாக இணை ஆணையர்.
அர்ச்சனா - தோட்டக்கலைதுறை மற்றும் பயிர்கள்துறை இயக்குநர்.
சுரேஷ்குமார் - நிலநிர்வாக இணை ஆணையர்.
நந்தகுமார் - கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளத்துறை இணை செயலாளர்.
மதிவாணன் - சென்னை பெருநகர வளர்ச்சிகுழும தலைமை நிர்வாக அதிகாரி.
சுப்பையன் - வேலை வாய்ப்பு , பயிற்சி துறை இயக்குனர்.
காக்கர்லா உஷா- தமிழக நகர்புற கட்டமைப்பு நிதி சேவைகள் நிர்வாக இயக்குநர்.

ஐ.பி.எஸ்.அதிகாரிகள் பட்டியல்:
சஞ்சய்குமார் - சேலம் மாநகர கமிஷ்னர்.
சுமித்சரண் - சென்னை குற்றஆவண காப்ப ஐ.ஜி.
பாரி - கோவை மேற்குமண்டல ஐ.ஜி.
மஞ்சுநாதா- திருச்சி கமிஷ்னர்.
சஞ்சய் மாத்தூர் - திருப்பூர் கமிஷ்னர்.
ராஜன் - சேலம் எஸ்.பி.
அமித்குமார் சிங் - நெல்லை துணை கமிஷ்னர்.
மகேஸ்வரன் - நாமக்கல் எஸ்.பி.
சிவகுமார் - ஈரோடு எஸ்.பி.
ராஜசேகரன் - கரூர் எஸ்.பி.
வந்திதா பாண்டே - சென்னை கண்ட்ரோல் ரூம் துணை கமிஷ்னர்.
ஜெயசந்திரன் - சிவகங்கை எஸ்.பி.
துரை - நாகப்பட்டிணம் எஸ்.பி.
உமா - திருப்பூர் எஸ்.பி.
சந்தோஷ் ஹதிமணி - சென்னை போலீஸ் பயிற்சி பள்ளி எஸ்.பி.
மகேஷ்குமார் - கிருஷ்ணகிரி எஸ்.பி.
சேவியர் தன்ராஜ் - சென்னை கியூ பிரிவு எஸ்.பி.

துபாயில் நோல் கார்டுகளை பயன்படுத்தி பூங்கா, அருங்காட்சியக நுழைவு கட்டணம் செலுத்தலாம்

துபாயில் சாலை மற்றும் போக்குவரத்துத்துறையின் (RTA) கீழ் இயங்கும் பேருந்துகள், மெட்ரோ ரயில்கள், தண்ணீரில் செல்லும் பேருந்து வகை படகுகள் (Water Buses), டேக்ஸிகள், வாகன நிறுத்தம் (Vehicle Parking) என அனைத்திற்கும் ஓரே நோல் கார்டுகள் (NOL Cards) மூலம் கட்டணம் செலுத்தும் வசதி நடைமுறையிலுள்ளது. இது மேலும் பல்வேறு சேவைகளுக்கும் படிப்படியாக விரிவுபடுத்தப்படும் என்றும் நோல் அட்டைகள் வரும்காலத்தில் மின்-பணப்பையாக (e-wallet) மாற்றத்தக்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

தற்போது நோல் கார்டுகளை கொண்டு பூங்கா (Parks) மற்றும் அருங்காட்சியக (Museum) அனுமதி சீட்டுக்களை பெறவும், வாகனங்களுக்கு உள்ளது போல் ஒவ்வொருவருக்கும் தனித்தனி நோல் அட்டைகள் என்றில்லாமல் ஒரே அட்டையை கொண்டு எத்தனை பேருக்கு வேண்டுமானாலும் கட்டணம் செலுத்தலாம் என்றும் ஆனால் அதற்குத் தேவையான முன்பணம் நிரப்பப்பட்டிருக்க (Prepaid) வேண்டும் எனவும் துபை மாநகராட்சி அறிவித்துள்ளது. இதற்கான சிறப்பு நுழைவு வாயில்கள் (Smart Gates) ஏற்படுத்தப்படும்.

மேலும், சுமார்ட் துபை (Smart Dubai) திட்டத்தின் அடிப்படையில் எதிர்வரும் 2018 ஆம் ஆண்டிற்குள் அனைத்து மின்-சேவை (e-services) திட்டங்களும் மொபைல் சேவை (Smart Services) திட்டங்களாக மாற்றப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே நடைமுறையிலுள்ள 351 மின்-சேவைகளில் 204 சேவைகள் மொபைல் சேவைகளாக மாற்றப்பட்டுள்ளதும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

131 ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்ட புனித மக்காவின் அரிய புகைப்படம் வெளியீடு !

சவூதி பத்திரிகை ஏஜெல், 131 ஆண்டுகளுக்கு முன்பு 1885 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட புனிதமிக்க மெக்கா மாநகரின் அரிய புகைப்படத்தை வெளியிட்டுள்ளது. உலகின் மிகப்பெரிய பள்ளியான இங்கு தினமும் பல்லாயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் தொழுகை நடத்தி வருகின்றனர்.

தற்போது தோற்றமளிக்கும் புனிதமிகு மக்காவின் புகைப்படம்

Source: Emirates247
Dated:27-07-2016