தேசிய விளையாட்டு தினத்தை முன்னிட்டு அதிராம்பட்டினம் அரிமா சங்கம் சார்பில், இறகுப் பந்து போட்டியில் சாதனை நிகழ்த்திய அரசுப் பள்ளி மாணவன் இன்று (29-08-2019) வியாழக்கிழமை கெளரவிக்கப்பட்டார்.
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் நடுத்தெரு ஊராட்சி ஒன்றிய நடு நிலைப்பள்ளி 3 ஆம் வகுப்பு மாணவன் அ.ஆத்திப் அகமது. இவர், பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற 10 வயதிற்குட்பட்ட ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறகுப்பந்து போட்டிகளில் கலந்துகொண்டு சிறப்பிடம் பெற்றுள்ளார்.
இந்நிலையில், தேசிய விளையாட்டு தினத்தை முன்னிட்டு, அதிராம்பட்டினம் அரிமா சங்கம் சார்பில், சங்க மாவட்ட உயர்கல்விக்கான வழிகாட்டுதல் பிரிவு (Higher studies guidance ) தலைவர் பேராசிரியர் எம்.ஏ முகமது அப்துல் காதர் கலந்துகொண்டு,சாதனை மாணவன் ஆத்திப் அகமதுக்கு சால்வை அணிவித்து நினைவுப் பரிசு வழங்கி பாராட்டுத் தெரிவித்தார்.
நிகழ்ச்சிக்கு, அதிராம்பட்டினம் அரிமா சங்கத் தலைவர் எம். அப்துல் ஜலீல் தலைமை வகித்தார். செயலாளர் எம். நிஜாமுதீன், பொருளாளர் எஸ்.எம். முகமது முகைதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளித் தலைமை ஆசிரியை எஸ். மாலதி வரவேற்றார். இந்நிகழ்ச்சியில், அதிராம்பட்டினம் அரிமா சங்க முன்னாள் தலைவர் என். ஆறுமுகச்சாமி, இணைச் செயலாளர் எம். முகமது அபூபக்கர், பள்ளி ஆசிரியர் டேவிட் ஆரோக்கியராஜ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
























































