அதிராம்பட்டினம், அக்.24
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் நள்ளிரவில் தொடங்கிய மழை, நேற்று புதன்கிழமை இரவு தொடங்கி இன்று வியாழக்கிழமை அதிகாலை வரை பலத்த மழை பெய்தது.
அதிராம்பட்டினம், பிலால் நகர் குடியிருப்பு பகுதிகளில் மழை வெள்ளம் புகுந்ததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்தன. இப்பகுதியில், முறையான மழைநீர்/கழிவு நீர் வடிகால் வசதி இல்லாததால் சாலைகளில் ஆங்காங்கே மழை நீர் தேங்கிக் காணப்படுகின்றன. இதனால், சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இப்பகுதியின் பிரதான சாலைகள் முற்றிலும் சேதமடைந்து, சேரும் சகதியுமாகக் காட்சியளிகின்றன. பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள், வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
அதிராம்பட்டினத்தில் இன்று (அக்.24) வியாழக்கிழமை காலை 7 மணி நேர நிலவரப்படி 44.70 மி.மீ மழை பதிவாகியது. தஞ்சை மாவட்டத்தில் 577.40 மி.மீ மழையளவு பதிவானது. அதிகபட்சமாக வல்லத்தில் 90 மி.மீட்டரும், குறைந்தபட்சமாக அய்யம்பேட்டையில் 11 மி.மீட்டரும் பதிவானது.
மாவட்டத்தில் பதிவான மழையளவு வருமாறு (மி.மீ):
தஞ்சாவூர் 25, வல்லம் 90, குருங்குளம் 14, திருவையாறு 25, பூதலூர் 36.20, திருக்காட்டுப்பள்ளி 36.60, கல்லணை 65.20, ஒரத்தநாடு 23, நெய்வாசல் தென்பாதி 13.80, வெட்டிக்காடு 11.60, கும்பகோணம் 13, பாபநாசம் 18.20, அய்யம்பேட்டை 11, திருவிடைமருதூர் 16, மஞ்சளாறு 42.20, அணைக்கரை 14.40, பட்டுக்கோட்டை 12.50, அதிராம்பட்டினம் 44.70, ஈச்சன்விடுதி 22.40, மதுக்கூர் 20, பேராவூரணி 22.60 மி.மீ என பதிவானது.