.

Pages

Wednesday, April 2, 2014

அதிரை பைத்துல்மால் சார்பில் அதிரையில் திருக்குர்ஆன் மாநாட்டை நடத்த முடிவு !

அதிரை பைத்துல்மால் - அதிரை வாழ் ஏழை எளியோருக்காக இருபது ஆண்டுகளுக்கும் மேலாக அதிரையில் செயல்பட்டு வரும் ஒரு இஸ்லாமிய நிதி நிறுவன அமைப்பு. இங்கு வட்டியில்லா நகைக்கடன் வழங்கும் திட்டம், கைவிடப்பட்ட முதியோர்கள், விதவைகள் ஆகியோருக்கான பென்ஷன் வழங்கும் திட்டம், ஏழைக்குமர்களுக்கான திருமண உதவி வழங்கும் திட்டம், வறிய  மாணவ மாணவிகளுக்கான கல்வி உதவி வழங்கும் திட்டம் மற்றும் மருத்துவ உதவி சுன்னத் உதவி ஆகியன சிறப்பாக நடைபெற்று வருகின்றன.

அதிரை பைத்துல்மால் சார்பில் மாணவ மாணவிகளின் இஸ்லாமிய மார்க்க அறிவுத்திறனை வளர்க்கும் நோக்கில் ஆண்டுதோறும் திருக்குர்ஆன் மாநாடு நடத்தப்படுவது வழக்கம். அதே போல் இந்த வருடமும் திருக்குரான் மாநாட்டை நடத்துவது என நிர்வாகிகளின் முடிவை அடுத்து இதுகுறித்து விவாதிப்பதற்காக நமதூர் வழக்கறிஞர் அப்துல் முனாப் அவர்களின் இல்லத்தில் நேற்று இரவு சிறப்புக்கூட்டம் நடைபெற்றது.

இதில் அதிரை பைத்துல்மால் தலைவர் பேராசிரியர் பர்கத் அவர்கள் தலைமை வகிக்க, சிறப்பு அழைப்பாளர்களாக காதிர் முகைதீன் கல்லூரியின் பேராசிரியர் செய்யது அஹமது கபீர், பைத்துல்மால் அபுதாபி கிளையின் நிர்வாகி அபுல் கலாம் ஆகியோர் கலந்துகொண்டனர். இதில் எதிர்வரும்  மே 30, 31, ஜூன் 1 ஆகிய மூன்று தினங்களில் 14 வது திருக்குர்ஆன் மாநாட்டை அதிரையில் சிறப்பாக நடத்தி முடிப்பது என தீர்மானிக்கப்பட்டது.

இந்த கூட்டத்தில் அதிரை பைத்துல்மால் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டு கருத்துரைகளை வழங்கினார்கள். வந்திருந்த அனைவரையும் அதிரை பைத்துல்மால் துணைத்தலைவர் வழக்கறிஞர் அப்துல் முனாப் அன்புடன் வரவேற்றார்.


தஞ்சை தொகுதியில் வெற்றி வாய்ப்பு யாருக்கு !? அதிரை நியூஸின் முதல் தகவல் அறிக்கை [ FIR ] !

தேர்தல்களம் - 2014 :
தொகுதி மறுசீரமைப்புக்கு பின் தஞ்சாவூர் பாராளுமன்ற தொகுதியில் தஞ்சாவூர், மன்னார்குடி, திருவையாறு, ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி ஆகிய 6 சட்டசபை தொகுதிகள் இடம் பெற்று உள்ளன. கடைமடை பகுதியான தஞ்சையில் கள்ளர் சமூகத்தை சார்ந்தவர்கள் அதிகமாக வசிக்கின்றனர். இவர்களை அடுத்து கணிசமான அளவில் இஸ்லாமியர்களும், ஆதிதிராவிடர்களும், ஏனைய சமூகத்தினர் சராசரியாகவும் உள்ளனர்.

நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் 6 அணிகள் களத்தில் இருக்கின்றன. இதில் ஆளுங்கட்சியான அதிமுக ஒரு அணியாகவும், திமுக தலைமையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகள் 'ஜனநாயக முற்போக்கு கூட்டணி அணியாகவும், மத்தியில் ஆளும் காங்கிரஸ் கட்சி தனி அணியாகவும், தேமுதிக தலைமையில் பாட்டாளி மக்கள் கட்சி, மதிமுக, பிஜேபி, ஆகியன தேசிய ஜனநாயக கூட்டணி என்றும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் தனி அணியாகவும், ஆம் ஆத்மி மற்றொரு தனி அணியாகவும் மோத உள்ளனர். இம்முறை தமிழக அளவில் போட்டிகள் மிகவும் பலமாக காணப்படும் என அரசியல் வல்லூனர்கள் கணித்துள்ள நிலையில் பிரதான கட்சிகளின் வெற்றி தோல்விகள் சொற்ப எண்ணிக்கையில்தான் வாக்கு வித்தியாசங்கள் அமையும் என்பதையும் மறுக்க இயலாது.

தஞ்சையை பொறுத்தவரை இதுவரையில் கட்சிகள் அறிவித்துள்ள வேட்பாளார்களில் அதிமுக சார்பில் திரு. கு. பரசுராமனும், திமுக சார்பில் திரு. டிஆர் பாலுவும், காங்கிரஸ் சார்பில் திரு. கிருஷணசாமி வாண்டையாரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் எஸ். தமிழ்செல்வியும், பிஜேபி சார்பில் கருப்பு (எ) முருகானந்தமும், ஆம் ஆத்மி கட்சியின் சார்பில் திரு. பழனிராஜனும் களத்தில் உள்ளனர். இவர்களிடேயே போட்டிகள் சற்று கடுமையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

களத்தில் உள்ள ஒவ்வொரு வேட்பாளரின் வெற்றி வாய்ப்பு நிலவரம் குறித்த முதல் தகவல் அறிக்கையை பார்ப்போம்.

திரு. டிஆர் பாலு ( திமுக ) :
தொகுதியில் திமுக தொடர்ந்து வெற்றியை தக்க வைத்துக்கொண்டுள்ளது. எஸ்எஸ் பழனிமாணிக்கத்திற்கு கட்சியில் இந்த முறை சீட் வழங்கப்படவில்லை என்பதால் ஆரம்பத்தில் இவரது ஆதரவாளர்கள் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தின. இதையடுத்து  டிஆர் பாலு மற்றும் எஸ்எஸ் பழனிமாணிக்கம் ஆகியோரிடையே ஏற்பட்ட சமரசத்தை அடுத்து களத்தில் மும்முரமாக தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். மன்னார்குடி, பட்டுக்கோட்டை, பேராவூரணி ஆகிய சட்டசபை தொகுதிகளில் இவருக்கு ஆதரவான வாக்குகள் அதிகமாக காணப்படுகின்றன. பட்டுக்கோட்டை தொகுதியை பொறுத்தவரை திமுகவின் கோட்டையாக இருந்து வருவதற்கு இஸ்லாமியர்களின் வாக்கு வங்கியே காரணம். இந்த முறை இஸ்லாமியர்கள் அதிகமாக காணப்படும் அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுவட்டார மக்களின் மனநிலை சற்று மாறியே காணப்படுகிறது. காரணம் திருவாரூர் - காரைக்குடி அகல ரயில் பாதை திட்ட பணிகளை கிடப்பில் போடப்பட்டதற்கு இவர்தான் காரணம் என்ற குற்றச்சாட்டு. இந்த குற்றச்சாட்டை போக்கும் வகையில் மக்களை நேரடியாக அணுகி வாக்குறுதி கொடுத்தால் நிச்சயம் அதிராம்பட்டினம் மற்றும் சுற்று வட்டார மக்களின் வாக்கு வழக்கம் போல் திமுகவிற்கே கிடைக்கும். கூட்டணி கட்சிகளாகிய மனிதநேய மக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆகியவற்றின் ஆதரவு இவருக்கு கூடுதல் பலமாக அமையும். தஞ்சையின் மற்ற சட்டசபை தொகுதிகளாகிய ஒரத்தநாடு, திருவையாறு, தஞ்சை ஆகியவற்றில் சற்று கூடுதல் கவனம் செலுத்தினால் வெற்றியை சுலபமாக தட்டிச்செல்லலாம்.

திரு. கு. பரசுராமன் ( அதிமுக ) :
ஆளுங்கட்சி வேட்பளாராகிய இவர் பலம் பொருந்திய வேட்பாளருடன் மோத இருப்பது பெரும் சவால்தான். மாநில அமைச்சர் வைத்திலிங்கத்திற்கு மிகவும் வேண்டப்பட்டவர் என்கிறார்கள். இவருக்கு சாதகமாக ஒரத்தநாடு, திருவையாறு, தஞ்சை ஆகிய சட்டசபை தொகுதிகளில் பெரும் வாக்குகளே. இதற்கு காரணம் கடந்த உள்ளாட்சி தேர்தலில் அதிக இடங்களை அதிமுக கட்சியை சேர்ந்தவர்கள் தட்டிச்சென்றதுதான். மேலும் அமைச்சரின் சொந்த தொகுதியாக இருப்பதால் இந்த பகுதிகளில் அதிகமான அரசு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டிருப்பதும் இவருக்கு கூடுதல் பலம். மேலும் அதிமுகவிற்கு இந்த தேர்தலில் தமிழக தவ்ஹீத் ஜமாத்தினர் ஆதரவு தருவதால் இவருக்கு கூடுதல் பலமாக இருக்கும். இந்த தொகுதியில் உள்ள பிற சட்டசபை தொகுதிகளாகிய மன்னார்குடி, பட்டுக்கோட்டை, பேராவூரணி ஆகியவற்றில் மிகுந்த கவனம் செலுத்தி கூடுதல் வாக்குகள் பெற முயற்சிப்பது அமைச்சர் வைத்திலிங்கத்திற்கு முதல்அமைச்சரின் நன்மதிப்பு லிஸ்டில் தொடர நிச்சயம் உதவும். தேர்தல் பணிகளில் கூடுதல் சுறுசுறுப்பு தேவை.

திரு. கிருஷ்ணசாமி வாண்டையார் ( காங்கிரஸ் ) :
காங்கிரஸ் கட்சியில் பல்வேறு பொறுப்புகளில் இருந்தவர். மத்திய அமைச்சர் ஜிகே வாசனின் ஆதரவாளர். மதசார்பற்ற அரசு அமைய எண்ணுவோர் இவருக்கு வாக்களிக்க விரும்பலாம். மேலும் இந்த தொகுதியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் பாரம்பரிய வாக்குகள் மற்றும் இவர் சார்ந்த சமுதாய வாக்குகள் அப்படியே சிதறாமல் கிடைக்கும். பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் என்ஆர் ரெங்கராஜன் அவர்கள் ஆதரவாக இருந்து தனது தொகுதியில் வாக்கு சேகரித்து கொடுப்பது இவருக்கு கூடுதல் பலமாக அமையும். மற்றபடி இரு பிரதான கட்சிகளின் பலம் பொருந்திய வேட்பாளர்களோடு மோதுவதால் வாக்கு சேகரிக்கும் வியூகத்தை சற்று துரிதப்படுத்த வேண்டும். அதிமுக, திமுக வேட்பாளர்களுக்கு சிம்ம சொப்பனமாக இருப்பது மட்டும் உறுதி.

எஸ். தமிழ்செல்வி ( மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ) :
கட்சியின் சார்பில் தஞ்சை தொகுதியில் போட்டியிடும் முதல் பெண் வேட்பாளர் என்ற பெருமையை தட்டிச்செல்கிறார். பல்வேறு போராட்டங்களில் கலந்துகொண்டவர். சொந்த ஊரில் இவருக்கு கூடுதலான வாக்குகள் கிடைக்கும். இவர் வாங்கும் வாக்குகளில் பெரும்பாலானவை அதிமுகவிற்கு விழும் வாக்குகளாக அமையும். மற்றபடி டெபாசிட் பெறுவதற்கு கடும் முயற்சியில் ஈடுபட வேண்டியிருக்கும்.

திரு. எஸ். பழனிராஜன் ( ஆம் ஆத்மி ) :
பி.இ பட்டதாரியான இவர் அரசு  மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரிந்துள்ளார். ஊழலை ஒழித்துக்கட்ட எண்ணுவோர், புதிய மாற்றத்தை எதிர்பார்ப்போர் இவருக்கு வாக்களிக்க முற்படலாம். குறிப்பாக நகர்புறங்களில் படித்தவர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளதால் இக்கட்சிக்கு வாக்குகள் கிடைக்க வாய்ப்பு உண்டு. கிராம புறங்களில் இந்த கட்சிக்கு கூடுதல் அறிமுகம் தேவை. மற்றபடி டெபாசிட் பெறுவதற்கு கடும் முயற்சியில் ஈடுபட வேண்டியிருக்கும்.

'கருப்பு' (எ) முருகானந்தம் ( பிஜேபி ) :
தேஜ கூட்டணியின் சார்பில் பிஜேபி வேட்பாளராக முதன்முறையாக தொகுதியில் போட்டியிடுகிறார். முத்துப்பேட்டை பகுதியை சேர்ந்தவரான இவர் தீவிர இந்துமத பக்தர். கட்சியில் பல்வேறு பொறுப்புகளை வகித்தவர். தீவிர மத ஆர்வலர்கள் இவருக்கு வாக்கு செலுத்த முற்படலாம். எனினும் கூட்டணி கட்சிகளான மதிமுக, தேமுதிக, பமக ஆகியன இந்த தொகுதியில் வலுவிழந்து காணப்படுவதால் வாக்குகள் இவருக்கு கிடைப்பது சற்று சிரமம்தான். மற்றபடி டெபாசிட் பெறுவதற்கு கடும் முயற்சியில் ஈடுபட வேண்டியிருக்கும்.

அதிரை நியூஸ் தேர்தல் குழுவினர்

அதிரையில் TNTJ நடத்தும் இரத்ததான முகாமில் பங்கேற்க அழைப்பு !

தமிழக தவ்ஹீத் ஜமாத் அதிரை கிளையின் சார்பில் எதிர்வரும் [ 05-04-2014 ] அன்று காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை இரத்ததானம் மற்றும் இரத்த வகை கண்டறிதல் முகாம் அதிரை ECR சாலையில் அமைந்துள்ள தவ்ஹீத் பள்ளியில் நடைபெற உள்ளது. இந்த முகாமில் பங்கேற்க அழைப்பு விடப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தகவல் : M.I. அப்துல் ஜப்பார்

Tuesday, April 1, 2014

அதிரையின் மஹல்லா நிர்வாகிகள், பைத்துல்மால் நிர்வாகிகள், பஞ்சாயதார்களை சந்தித்து ஆதரவு திரட்டிய காங்கிரஸ் வேட்பாளர் ! [ படங்கள் இணைப்பு ]

காங்கிரஸ் கட்சியின் தஞ்சை தொகுதி வேட்பாளர் திரு. கிருஷ்ணசாமி வாண்டையார் மற்றும் பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் திரு. N.R. ரெங்கராஜன் MLA ஆகியோர் இன்று மாலை 5 மணியளவில் அதிரைக்கு வருகை தந்து மஹல்லா நிர்வாகிகள், பைத்துல்மால் நிர்வாகிகள், பஞ்சாயத்தார்கள் ஆகியோரை சந்தித்து ஆதரவளிக்க வேண்டினர்.

முதலில் M.M.S குடும்பத்தினரை சந்தித்த வேட்பாளார் அதனை தொடர்ந்து மேலத்தெரு தாஜுல் இஸ்லாம் சங்க நிர்வாகிகள், கீழத்தெரு ஜமாத் நிர்வாகிகள், நெசவுத்தெரு ஜமாத் நிர்வாகிகள், சம்சுல் இஸ்லாம் சங்க தலைவர், அதிரை பைத்துல்மால் நிர்வாகிகள், முத்தம்மாள் தெரு பஞ்சாயத்தார்கள், புதுத்தெரு ஜமாத் நிர்வாகிகள், தரகர் தெரு ஜமாத் நிர்வாகிகள், கடற்கரைதெரு ஜமாத் நிர்வாகிகள், ஹாஜா நகர் வார்டு கவுன்சிலர் ஜபுரன் ஜெமிலா, கரையூர் தெரு, காந்தி நகர், பழஞ்செட்டி தெரு பஞ்சாயத்தார்கள் ஆகியோரை சந்தித்து ஆதரவு திரட்டினார்.

சந்திப்பின் போது வேட்பாளரிடம் மஹல்லா நிர்வாகிகள், பஞ்சாயத்து நிர்வாகிகள் அதிரை பொதுநலன் சார்ந்த முக்கிய கோரிக்கைகளை முன்வைத்தனர். கங்கிரஸ் கட்சியின் நகர நிர்வாகிகள் அதிரையின் முக்கிய பகுதிகளில் உள்ள நிர்வாகிகளை சந்திப்பதற்காக ஒவ்வொரு இடமாக அழைத்துச்சென்றனர்.






















மதுக்கூர் அர்ரஹ்மான் பள்ளிக்கு ஆசிரியைகள் தேவை !

அன்பார்ந்த சகோதரர்களுக்கு...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ்​...

தஞ்சை மாவட்டம்- பட்டுக்கோட்டை தாலுகா- மதுக்கூரில்  5 வருடங்களாக இயங்கிகொண்டிருக்கும் இன்ஷாஅல்லாஹ் உயர் நிலைப்பள்ளியாக தரம் உயர போகும் அர்ரஹ்மான் நர்சரி & பிரைமரி பள்ளிக்கு தகுதியான ஆசிரியைகள் மற்றும் அனுபவமில்லாத  புதிய ஆசிரியைகள் தேவை,தகுதிகேற்ப கூடுதல் சம்பளம்( குறைந்த பட்ச சம்பளம் ரூ 5000  ) ..... அணுகவும் +91 9600427690

மேலும் புதிய ஃசாப்ட்வேர் ( ADMIN+ ACCOUNTS ) தேவை..... துபையில் உள்ளவர்கள் +97150 4950191 /+97150 6577372 என்ற தொடர்பு எண்ணுக்கும் ,தமிழ் நாட்டில் உள்ளவர்கள் ++91 9600427690 என்ற எண்களையும் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

அர்ரஹ்மான் நர்சரி & பிரைமரி பள்ளி

தகவல் : M. அயூப்கான்

அதிரையில் புதியதோர் உதயம் 'குளோபல் ஸ்டார் பில்டர்ஸ்' கட்டுமான நிறுவனம் !

அதிரை எவர்கோல்ட் வணிக வளாகத்தில் புதியதோர் உதயமாக 'குளோபல் ஸ்டார் பில்டர்ஸ்' கட்டுமான நிறுவனம் இன்று [ 28-03-2014 ] காலை முதல் செயல்பட துவங்கியது. திறப்பு நாளான இன்று ஏராளமான அதிரையர்கள் கலந்து கொண்டனர். வந்திருந்த அனைவரையும் நிறுவனத்தின் உரிமையாளர் தமீம் மற்றும் தீனுல் ஹக் ஆகியோர் அன்புடன் வரவேற்றனர்.

தொழில் குறித்து நிறுவனத்தின் உரிமையாளர்கள் தமீம் மற்றும் தீனுல் ஹக் நம்மிடம் கூறுகையில்...
எங்களால் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு துவக்கப்பட்டு சிறப்பாக நடத்திவருகிறோம். நிறுவனத்தை விரிவுபடுத்தும் நோக்கில் இன்று முதல் புதிய அலுவலகத்தில் தொடர்கிறோம். தரமான முறையில் வீடுகள், வணிக வளாகங்கள் உள்ளிட்ட அனைத்து வகை கட்டிடங்கள் கட்டித்தரப்படும். மேலும் தரமான தொழிநுட்ப வல்லூனர்களை கொண்டு நவீன முறையில் வீட்டின் உட்புற மற்றும் வெளிப்புற தோற்றத்தை புதிய முறையில் வடிவமைத்தல் உள்ளிட்ட பணிகளும் நியமான விலையில் செய்து தருகிறோம். பணிகளுக்கு பயன்படுத்தும் அனைத்துவித பொருட்களும் நீடித்த உழைப்பை தரும் தரமான நிறுவனங்களின் மூலம் கொள்முதல் செய்கிறோம். என்றார்.

தொடர்புக்கு : 
தீனுல் ஹக் 0091 8124579997
தமீம் 0091 9095869587


குறிப்பு: அதிரையரின் தொழில் ஆர்வத்தை ஊக்குவிக்க வேண்டும் என்ற நோக்கில் தளத்தில் இலவசமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் ஏற்படும் நிறை / குறைகளுக்கு அதிரை நியூஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது.

அதிரை நியூஸ் செய்தி எதிரொலி ! காலியான கடற்கரையோர சூதாட்ட கூடாரம் !!

'அதிரை கடற்கரையில் களைகட்டும் சூதாட்டம் !'என்ற தலைப்பில் கடந்த [ 25-03-2014 ] அன்று தளத்தில் செய்தி வெளியிட்டிருந்தோம். இதில் சமூக ஆர்வலர்கள் கவலையுடன் தெரிவித்த கருத்துகளும் அதில் இடம்பெற்றிருந்தன. செய்தி வெளியான சில நாட்களில் மும்முரமாக நடைபெற்று வந்த சூதாட்டம் தற்போது நிறுத்தப்பட்டுள்ளது.

இந்த பகுதியில் நடைபெறும் சூதாட்டம் நிரந்தரமாக நிறுத்தி வைக்கப்பட வேண்டும் என்றும், மீண்டும் சூதாட்டம் நடைபெறாமல் இருப்பதற்கு இந்த பகுதியை காவல்துறையினர் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்பது சமூக ஆர்வலர்கள் பலர் நம்மிடம் வலியுறுத்தும் முக்கிய கோரிக்கையாக இருக்கிறது.

தஞ்சை தொகுதியின் ஆம் ஆத்மி வேட்பாளராக எஸ். பழனிராஜன் தேர்வு !

ஆம் ஆத்மி கட்சியின் தலைமையகம் வெளியிட்டுள்ள 13-வது வேட்பாளர்கள் பட்டியலில் தஞ்சை தொகுதியின் வேட்பாளராக திரு. எஸ் பழனிராஜன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். தஞ்சை தொகுதியின் வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்படலாம் என பெரும்பாலான அதிரையர்கள் எதிர்பார்த்திருந்த அதிரை உமர் தம்பி மரைக்காவுக்கு சீட் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.