.

Pages

Wednesday, August 3, 2016

துபாயில் 23 வகையான அபராதங்கள் அறிமுகம் !

அதிரை நியூஸ், துபாய், ஆகஸ்ட் 03
சிங்கப்பூரை ஆங்கிலத்தில் FINE CITY என இரட்டை அர்த்தத்தில் (HOMOPHONE) அழைப்பார்கள், அதாவது அழகிய மாநகர் என்றும் அபராதங்கள் அதிகம் விதிக்கப்படும் நகரம் என்றும் பொருள்படும். இந்த சொல்லாடலை தமிழ் இலக்கணம் இரட்டை கிளவி என்று நமக்கு சொல்லித் தருகிறது. நிற்க!

அழகிய, நவீன கட்டிடங்களுக்கும் இதர பிரமாண்ட கட்டுமானங்களுக்கும் பெயர் பெற்ற துபை மாநகரின், துபை நிலத்துறையின் (DUBAI LAND DEPARTMENT) மனைகள் ஒழுங்குமுறை அமைப்பின் (REAL ESTATE REGULATORY AGENCY - RERA) வழிகாட்டலின் கீழ் இயங்கும் கட்டிட உரிமையாளர்கள் சங்கம் (OWNERS ASSOCIATION or MASTER DEVELOPERS) 'குடியிருப்பு கட்டிடங்கள்' தொடர்பில் குடியிருப்பாளர்களுக்கு 4 பிரிவுகளின் கீழ் 23 வகையான புதிய தண்டங்களையும் மீறல்கள் சரிசெய்யப்பட வேண்டிய கால அளவையும் அறிவித்துள்ளனர்.

பிரிவு 1: பொது மீறல்கள் என்ற பிரிவின் கீழ் அதிக சத்தம், தொல்லை, ஊழியரை அவமதித்தல், முறையில்லா வளர்ப்பு பிராணி கையாளுதல், அபாயகரமான நடவடிக்கைகள், தவறான குப்பை மேலாண்மை, வன்முறை நடவடிக்கைகள், உள்வாடகைக்கு விடுதல், சட்டவிரோதமாக பணியாளர்கள் வைத்திருத்தல், குடியிருப்பு நுழைவு கட்டுப்பாட்டை மீறுதல் ஆகிய குற்றங்களுக்கு திர்ஹம் 500 முதல் 1000 வரை தண்டம் செலுத்த நேரிடும்.

பிரிவு 2: குடியிருப்பு மற்றும் பொது உபயோகப் பகுதிகளை சேதப்படுத்துதல் மற்றும் தவறாக உபகோகித்தல் என்ற பிரிவின் கீழ் பொழுதுபோக்கு இடங்களான விளையாட்டு மைதானங்கள், நீர்நிலைகள், பூங்காக்கள், பிரத்தியேக விளையாட்டுக் களங்கள், நீச்சல் குளங்கள், செடி கொடிகள், வடிகால் அமைப்புகள், டெலிபோன் அறைகள் மற்றும் கட்டிட அமைப்புகளுக்கு சேதம் விளைவித்தால் ஒவ்வொன்றிற்கும் 500 திர்ஹம் தண்டம் செலுத்த வேண்டும்.

பிரிவு 3: வாகன நிறுத்தம் மற்றும் போக்குவரத்து சட்டங்களை மீறுதல் என்ற பகுதியின் கீழ் வாகன நிறுத்த விதிகளை மீறுதல், சாலை பாதுகாப்பு மீறல் மற்றும் சாலையை தவறாக பயன்படுத்துதல், வணிகரீதியான வாகனங்களை தவறாக உபயோகப்படத்தினால் அரசின் சாலை போக்குவரத்து நிர்வாக அதிகாரிகள் (LOCAL AUTHORITIES) அழைக்கப்பட்டு அவர்களால் அபராதம் விதிக்கப்படும்.

பிரிவு 4: வீட்டை கேவலமாக பராமரித்தல் மற்றும் தோற்றமுறச்செய்தல் என்ற பிரிவின் கீழ் தோட்டங்கள் மற்றும் நிலங்களை மோசமாக பராமரித்தல், வீட்டை கேவலமான முறையில் பராமரித்தல், அனுமதியில்லாமல் வெளிப்புறங்களை ஆக்கிரமித்தல் மற்றும் வீட்டமைப்பில் மாறுதல் செய்தல், அனுமதியில்லா விளம்பர நடவடிக்கைகள், போர்டிகோ மற்றும் பால்கனிகளை தவறாக உபயோகப்படுத்தல், முறையான பூச்சி கட்டுப்பாடு (PERIODIC PEST CONTROL)  செய்யாதிருத்தல் (PEST CONTROLக்கு மட்டும் அரசின் உள்ளாட்சி நிர்வாகத்திடம் புகார் அளிக்கப்படும்) ஆகிய மீறல்களுக்கு அபராதங்கள் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Source: Emirates247
தமிழில்: நம்ம ஊரான்

ஐபோன் 6 வெடித்ததில் இளைஞர் படுகாயம் !

ஆஸ்திரேலிய நாட்டின் சிட்னி நகரில் கரீத் க்ளீயர் என்ற நபர், மேலாண்மை ஆலோசகராக பணியாற்றி வருகிறார். இவர் தன்னுடைய பின்பக்க பாக்கெட்டில் ஐபோன் 6 செல்போனை வைத்து, இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.

இந்நிலையில் இருசக்கர வாகனத்தில் இருந்து இறங்கும் போது, தவறி கீழே விழுந்துள்ளார். அப்போது பின்பக்க பாக்கெட்டில் இருந்த ஐபோன், திடீரென தீப்பிடித்துள்ளது. இதை உணர்ந்த கரீத், உடனடியாக அதனை எடுக்க முயன்றுள்ளார். ஆனால் அதற்குள் ஐபோன் வெடித்துள்ளது. இதில் அவருடைய பின்பக்கத்தில் தோலின் இரண்டு பகுதியில் காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உடனடியாக சிட்னியில் உள்ள ராயல் நார்த் ஷோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. செல்போனின் மெட்டல் பகுதி முழுவதும் சேதமடைந்து விட்டது. மேலும் அதிலிருந்த லித்தியம் கீழ்ப்பகுதி வழியாக வெளியேறிவிட்டது. இதுகுறித்து ஆப்பிள் நிறுவனத்திடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

நன்றி: மாலை மலர்

உள்ளாட்சி தேர்தலில் திமுகவில் யாருக்கு சீட் !

தமிழ்நாட்டில் 12 மாநகராட்சி, 125 நகராட்சி, 529 பேரூராட்சி, 385 ஊராட்சி ஒன்றியம்,  12 ஆயிரத்து 524 ஊராட்சி ஆகிய உள்ளாட்சி அமைப்புகள் உள்ளன. இந்த அமைப்புகளில் பதவியில் இருப்பவர்களின் 5 ஆண்டுகள் பதவிக்காலம் வரும் அக்டோபர் மாதத்துடன் முடிவடைகிறது.

உள்ளாட்சித் தேர்தலில் இந்த தடவை முதன் முதலாக பெண்களுக்கு 50 சதவீதம் இட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் பெண்கள் போட்டியிடுவதற்கான வார்டுகளை பிரிக்கும் பணியில் யார் ? யார் ? போட்டியிட உள்ளார்கள் என அடையாளம் காணப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் தமிழகத்தின் அதிமுக, திமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் தேர்தலில் வெற்றி பெற்று அதிக இடங்களை கைப்பற்றுவதற்கு பல்வேறு வியூகங்கள் வகுத்து வருகின்றன. இதில் திமுக அதிக இடங்களில் வெற்றி பெற்றுக் காட்ட வேண்டிய நிர்ப்பந்தம் உள்ளதால் கடந்த முறை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற / தோல்வியுற்ற பழைய முகங்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்க திமுக தலைமை முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் திமுக சார்பில் கடந்தமுறை போட்டியிட்ட பழைய முகங்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

மேலும் நடந்து முடிந்துள்ள சட்டசபைத் தேர்தலில் மக்களிடம் செல்வாக்கு பெற்ற ஒட்டுக்கு பணமே கொடுக்காத வேட்பாளர்கள் வெற்றி பெற்ற வரலாறு நிகழ்ந்துள்ளது. அதனால், மக்கள் செல்வாக்கு பெற்ற, கட்சிக்கு விசுவாசமுள்ள, தகுதியான நபர்களை தேர்வு செய்ய அக்கட்சி முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு தேர்தல் செலவுக்கான 75 சதவீத பணத்தை திமுக மேலிடமே வழங்க முடிவு செய்துள்ளதாக கடந்த வாரம் நாளிதழ் பத்திரிகை வெளியிட்ட செய்தியில் கூறப்பட்டு இருந்தது. தேர்தல் செலவை கண்காணிக்கவும், தேர்தல் பணிகளை ஒருங்கிணைக்கவும், திமுக மேலிடத்தில் நிர்வாகிகள் நியமிக்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் வருகின்ற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட மக்கள் செல்வாக்கு பெற்றவர்கள் திமுகவில் சீட் கேட்பது அதிகரிக்கக்கூடும்.
*File Image

மரண அறிவிப்பு [ ஜமீலா அம்மாள் அவர்கள் ]

அதிராம்பட்டினம், நடுத்தெரு மேல்புறம் பகுதியை சேர்ந்த மர்ஹூம் காதர் சாஹிப் மரைக்காயர் அவர்களின் மகளும், முஹம்மது சம்சுதீன் அவர்களின் மனைவியும், முகைதீன் மன்சூர் அவர்களின் சகோதரியும், கமால், ரஹ்மத்துல்லாஹ் ஆகியோரின் மாமியாரும், அபூதாகிர், சேக் நெய்னா, அஹமது அஸ்லம், முஹம்மது தாஹா, முஹ்ம்மது சாலிஹ் ஆகியோரின்   பெரிய தாயாருமாகிய,  ஜமீலா அம்மாள் அவர்கள் இன்று அதிகாலை 4 மணியளவில் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா இன்று காலை 10.30 மணியளவில் தக்வா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

Tuesday, August 2, 2016

இஸ்லாத்திற்கும் தீவிரவாதத்திற்கும் தொடர்பில்லை போப்பாண்டவர் திட்டவட்டம் !

ஸ்லாத்தை தீவிரவாதத்துடன் தொடர்புபடுத்தவே கூடாதென்றும் இளைய சமுதாயத்தை ஐரோப்பியர்களின் தவறான போக்கு பயங்கரவாதத்தின் பக்கம் தள்ளிவிடும் என்ற எச்சரிக்கையையும் கடந்த ஞாயிரன்று போலந்திலிருந்து வாடிகன் திரும்பும் வழியில் தனது சிறப்பு விமானத்தில் போப் பிரான்ஸிஸ் அவர்கள் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டியளிக்கும் போது இவ்வாறு கூறினார்.

கடந்த வாரம் ஃபிரான்ஸ் நாட்டின் சர்ச் ஒன்றில் பாதிரியார் ஒருவர் பயங்கரவாதி ஒருவனால் கழுத்தறுக்கப்பட்டு கொல்லப்பட்டதை மிகவும் வன்மையாக கண்டித்த போப் இந்த பயங்கரவாதியின் செயலை இஸ்லாத்துடன் தொடர்புபடுத்தக் கூடாதென திட்டவட்டமாக கூறினார். பாதிரியாரின் படுகொலைக்கு எதிராக முஸ்லீம்கள் கிளர்ந்தெழுந்து கிருஸ்தவர்களுக்கு ஆதரவளித்ததையும் சுட்டிக்காட்டினார்.

ஐரோப்பிய நாடுகளில் சமீபகாலமாக ஐ.எஸ் என்ற இயக்கத்தினரால் நிகழ்த்தப்பட்டு வரும் தொடர் வன்முறை சம்பவங்கள் குறித்து கேள்வியெழுப்பிய போது அவர்கள் மிகச்சிறிய குழுவினரென்றும் அவர்களை போன்ற குழுவினர்கள் நம் (கத்தோலிக்கர்கள்) மத்தியிலும் உள்ளனர் என்றும் விளக்கமளித்ததார். சமீபத்திய செய்திகளில் இத்தாலியில் நெருங்கிய உறவினர்களை கொன்ற வன்முறையாளர்கள் ஞானஸ்னானம் செய்யப்பட்ட கத்தோலிக்க கிருஸ்தவர்கள் இல்லையா? என வினா எழுப்பினார்.

கத்தியை போன்றே நாவும் ஒரு கொலை ஆயுதம் தான் என்றும், மக்களின் மத்தியில் இனவாதங்களை எண்ணெய் ஊற்றி வளர்ப்பதிலும் (அகதிகள் போன்ற) வெளிநாட்டவர்கள் குறித்த துவேஷங்களை பரப்புவதிலும் சில அரசியல் கட்சிகள் முன்னிற்பதாகவும் சாடினார்.

எந்தவொரு தீவிரவாதத்தின் பின்னும் பொருளாதார சுரண்டலே ஒளிந்திருப்பதாகவும், நாம் இளைய சமுதாயத்திற்கு சரியான வழிகாட்டததன் விளைவாக பல ஐரோப்பிய இளைஞர்கள் வேலை இன்றியும் பின்பு போதை அடிமைகளாகவும் மாறியும் இறுதியாக பயங்கரவாத இயக்கங்களின் சதிவலைகளில் சிக்கியும் உள்ளனர் என்றும் ஐ.எஸ் பயங்கரவாதிகளின் அடையாளம் வன்முறையே அன்றி இஸ்லாமிய மார்க்கம் அல்ல எனவும் தெளிவுபட கூறினார்.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

Monday, August 1, 2016

ஒன்றாம் வகுப்பு முதல் ஆதார் அட்டை அவசியம்: மத்திய அரசு அறிவிப்பு

தமிழக அரசு பள்ளிகளில் பயிலும் ஒன்றாம் வகுப்பு மாணவர்களின் விவரங்களையும் அவர்களின் ஆதார் எண்ணுடன் எமீஸ் கணிணி திட்டத்தில் பதிவு செய்யும் பணியை விரைவுபடுத்தியிருக்கிறது.  தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழக அரசின் 14 வகை நலத்திட்டங்கள் செயல்படுவதில் பல்வேறு முறைகேடுகள் உள்ளன.  அதை தடுக்கும் வகையில் எமீஸ் எனப்படும் கல்வி மேலாண்மை தகவல் ஏற்படுத்தப்பட்டுள்ளது.  இதில் ஆண்டுதோறும் பயிலும் முதல் வகுப்பு தொடர்ந்து படிக்கும் மாணவர்களின் பெயர் முகவரி, பெற்றோர் பெயர், அவரின் பள்ளி, முன்பு படித்த பள்ளி ஆகிய விபரங்கள் பற்றி ஆதார் எண்ணுடன் அவர்களின் ரத்த பிரிவை சேர்த்து இணைக்க வேண்டும்.

இந்நிலையில் முதல் வகுப்பு படிக்கும் மாணவர்களின் விபரங்களை பதிவு செய்து அதை மாநில கணினி தொகுப்பில் இணைக்க வேண்டும் என்று அனைவருக்கும் கல்வி இயக்கமான எஸ்.எஸ். ஏ. அதிகாரிகள் உத்தரவிடுள்ளனர்.  இந்த பணிகளை ஆசிரியர்கள் வரும் ஆகஸ்ட் 7க்குள் முடிக்க வேண்டும் என்று அந்த உத்தரவில்  கூறப்பட்டுள்ளது.

அதிரை அருகே நடந்த ஆம்புலன்ஸ் அர்பணிப்பு விழாவில் ஆளூர் ஷாநவாஸ் பங்கேற்பு !

அதிராம்பட்டினம், ஆகஸ்ட் 1
தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் அருகே செந்தலைப்பட்டினம் பொதுநலச் சங்கம் சார்பில் புதிய அலுவலக திறப்பு விழாவும், ஆம்புலன்ஸ் சேவை தொடக்க விழாவும் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு சங்கத்தின் தலைவர் எம்.முகமதுஹனீபா தலைமை வகித்தார். ஜமாஅத் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். கௌரவ தலைவர் ஆர்.ஹெச்.எம்.ராவுத்தர் வரவேற்றார். மதுவிலக்கு அமல் பிரிவு மாவட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் பி.சேகர் பொதுநலச் சங்க புதிய அலுவலகத்தை திறந்து வைத்தார். பேராவூரணி வட்டாட்சியர் கோ.இரகுராமன் அனைத்து சமுதாய மக்களும் பலனடையும் வகையில் ஆம்புலன்ஸ் சேவையை தொடங்கி வைத்தார். எழுத்தாளர் ஆளூர் ஷாநவாஸ் சிறப்புரையாற்றினார்.

கடற்படை அலுவலர் பி.என்.சேத்தி, அதிராம்பட்டினம் பேரூராட்சி பெருந்தலைவர் எஸ்.ஹெச்.அஸ்லம், தஞ்சை மீனாட்சி மருத்துவமனை பி.ஆர்.ஓ. ஜேம்ஸ், காவிரி விவசாயிகள் கூட்டமைப்பு மாநில துணைத்தலைவர் டி.பி.கே.ராஜேந்திரன், காவல்துறை ஆய்வாளர் க.அன்பழகன் ஆகியோர் உரையாற்றினர்.

விழாவில் காதிர் முகைதீன் கல்லூரி பேராசிரியர் செய்யது அகமது கபீர், ரெட்கிராஸ் சொசைட்டி சேர்மன் மரைக்கா இத்ரீஸ் ஆகியோர் கருத்துரை வழங்கினார்கள்.

விழாவில் காதர் முகைதீன் கல்லூரி முதல்வர் ஏ.உதுமான் முகைதீன், டாக்டர் எம்.ராமலிங்கம், ஊராட்சி மன்ற தலைவர்கள் செந்தலைப்பட்டினம் எம்.முகமது ரபீக், சம்பைப்பட்டினம் தஸ்தகீர், கிராம நிர்வாக அலுவலர் டி.ஜெயதுரை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

நிர்வாகிகள் பி.நாகூர்கனி, எம்.ரஹ்மத்துல்லா, ஏ.ஜகபர்அலி மற்றும் நிர்வாகிகள், இளைஞர் மன்றத்தினர், ஜமாஅத்தார்கள், கிராமத்தினர் ஏற்பாடுகளை செய்திருந்தனர். செயலாளர் எம்.பகுருதீன் நன்றி கூறினார்.
 

நம்பாதீங்க ! அமீரக மனிதவள அமைச்சகம் அறிவிப்பு

கடந்த ஜூலை 30 ஆம் தேதி முதல் அமீரக மனிதவள அமைச்சகத்தின் பெயரைப் பயன்படுத்தி 'ஆண்டு விடுமுறை குறித்து அமீரகத்தின் புதிய சட்டம்' என்ற பெயரில் ஒரு பொய்யான செய்தி முகநூல், டிவிட்டர் போன்ற சமூக ஊடகங்களிலும் சில இணைய தளங்களில் மேற்காணும் படத்துடன் பரப்பப்படுகிறது.

மேலும், இந்த பொய்யான அறிவிப்பில் விடுமுறை குறித்த அமீரக பெடரல் சட்ட எண் (8) 1980 மேற்கோள் காட்டப்பட்டு பரப்பப்படுகிறது என்றும் எனவே, பொதுமக்கள் இதுபோன்ற தவறான தகவல்களை நம்ப வேண்டாம், பரப்ப வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

மனிதவள அமைச்சகம் சம்பந்தப்பட்ட உண்மையான தகவல்களைப் பெற அமைச்சகத்தின் அதிகாரபூர்வ இணைய தளத்தையோ அல்லது அமைச்சகத்தின் செயலியை தரவிறக்கியோ தொடருமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Source: Khaleej Times
தமிழில்: நம்ம ஊரான்