.

Pages

Thursday, December 1, 2016

அதிரை கடலோரப் பகுதிகளில் ஆட்சியர் ஆய்வு ( படங்கள் )

அதிராம்பட்டினம், டிச-1:
நாடா புயல் எச்சரிக்கையை அடுத்து தஞ்சை மாவட்ட ஆட்சியர் ஆ. அண்ணாதுரை அதிராம்பட்டினம் பகுதிலுள்ள கடலோர கிராமங்களான ஏரிப்புறக்கரை,  கீழத்தோட்டம் ஆகிய இடங்களில் உள்ள புயல் பாதுகாப்பு இல்லங்களில் பொதுமக்கள் தங்குவதற்கு செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளை வியாழக்கிழமை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

புயல், மழை வெள்ள பாதிப்புகளை கண்காணிக்கவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தாழ்வான பகுதியில் வசிக்கும் பொதுமக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கவும் உரிய ஏற்பாடுகளைச் செய்யுமாறு வருவாய்த்துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

மேலும், அதிரை பகுதி கிராமங்களில் இயந்திரம் மூலம் சம்பா நெல் நடவு செய்யப்பட்டுள்ள வயல்களையும் ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆட்சியருடன் பட்டுக்கோட்டை எம்எல்ஏ சி.வி. சேகர், வருவாய்க் கோட்டாட்சியர் ஆர். கோவிந்தராசு, வட்டாட்சியர் ரவிச்சந்திரன், வட்டார வளர்ச்சி அலுவலர் மைதீன் பிச்சை மற்றும் அலுவலர்கள் சென்றனர்.
 

தொழில் தொடங்க மானியத்துடன் கடனுதவி: வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் விண்ணப்பிக்க அழைப்பு !

தஞ்சாவூர் மாவட்டத்தில் படித்த வேலை வாய்பற்ற இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் தொழில் தொடங்க ரூ.10 இலட்சம் கடனுதவி 25 சதவிகித மானியத்தில் வழங்கப்படுகிறது.
தொழில் தொடங்க விருப்பமுள்ள இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை தகவல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பது:
தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பினை உருவாக்கும் நோக்கத்தின் அடிப்படையிலும், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் வளர்ச்சிக்காகவும் இந்த திட்டம் தமிழக அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

படித்த வேலைவாய்ப்பற்ற  இளைஞர்கள் இந்த திட்டத்தின் கீழ் தொடங்க உள்ள தொழில்களில் உற்பத்தி பிரிவின்கீழ் ரூ.5 இலட்சம் வரையிலும் சேவைப்பிரிவில் ரூ.3 லட்சம் வரையிலும், வியாபாரங்களுக்கு ரூ.1 இலட்சம் வரையிலும் உள்ள கடன் திட்டங்களுக்கு கடன் பெற மாவட்ட தொழில் மைய பொது மேலாளரைத் தலைவராகக் கொண்ட தேர்வுக்குழு வங்கிகளுக்கு பரிந்துரை செய்யும், திட்ட மதிப்பீட்டில் 25 சதவீதம் மானியமாக கணக்கிட்டு ரூபாய் 75,000 முதல் அதிகபட்சமாக  ரூபாய் 1,25,000 ஆயிரம் வரை மாவட்ட தொழில் மையம் மூலம் பரிந்துரைக்கப்படும்.

தற்போது தமிழக அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அரசு ஆணை அரசு ஆணை எண்.35, நாள்:11.11.2016 ன்படி உற்பத்திப்பிரிவில்  ரூபாய் 5 இலட்சத்திலிருந்து ரூபாய் 10 இலட்சமாக உயர்த்தப்பட்டு அதற்கான மானியத்தொகை அதிகபட்சமாக ரூ.1,25,000/- வரை வழங்கப்படும் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  இத்திட்டத்தின் கீழ் பயன் பெற குறைந்தபட்சம் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பொதுப்பிரிவினர் 18 முதல் 35 வயது வரையிலும், சிறப்பு பிரிவினர் மற்றும் பெண்கள் 18 முதல் 45 வயது வரையிலும் இருக்கலாம் மற்றும்   குடும்ப ஆண்டு வருமானம் ரூபாய் 1, 50,000/- வரை இருக்கலாம்.    திட்ட மதிப்பீட்டில் பொது பிரிவினர் 10 சதவீதமும் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர், முன்னாள் இராணுவத்தினர், உடல் ஊனமுற்றோர், மகளிர் மற்றும் திருநங்கைகள் 5 சதவீதமும் தமது பங்காக செலுத்த வேண்டும்.

தகுதியான தொழில்களாக நேரடியான விவசாயம் தவிர பொருளாதார அடிப்படையில் லாபகரமான தொழில்கள்   தொடங்கலாம்.  திட்ட இலக்கீடாக தஞ்சாவூர்  மாவட்டத்திற்கு 2016-17ஆம் நிதியாண்டில் 175 நபர்கள் பயன் பெற ரூ. 87.50  லட்சம் மானியம் வழங்க தமிழக அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.  

தொழில் தொடங்க விருப்பமுள்ள இளைஞர்கள் தஞ்சாவூர் மாவட்டம், நாஞ்சிக்கோட்டை ரோட்டில் உள்ள மாவட்ட தொழில் மையம், பொது மேலாளர் அவர்களிடம் விண்ணப்பித்து பயன் பெற வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை தெரிவித்துள்ளார்கள்.

அதிரையில் 24.50 மி.மீ மழை பதிவு !

அதிராம்பட்டினம், டிச-01
தென்கிழக்கு வங்கக் கடலில் உருவான நாடா புயல் நாளை (வெள்ளிக்கிழமை) காலை புதுச்சேரி - வேதாரண்யம் இடையே கடலூர் அருகில் கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், கடலோர மாவட்டங்களில் நேற்று இரவு முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. இதில் தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் இன்று அதிகாலை குளிர்ந்த காற்றுடன் மழை பெய்தது. தொடர்ந்து குளிர்ந்த காற்று வீசி வருகிறது. வானம் மேகம் கூட்டங்களால் சூழ்ந்து ரம்மியமாக காட்சியளிக்கின்றன.

இன்று மாலை 4 மணி நேர நிலவரப்படி அதிரையில் 24.50 மி.மீ மழை பதிவாகி உள்ளது. பட்டுக்கோட்டையில் 20.52 மி.மீ, பேராவூரணி 7 மி.மீ, மதுக்கூரில் 10.5 மி.மீ மழை பதிவாகி உள்ளது. 

அபுதாபியில் 31 மில்லியன் திர்ஹத்திற்கு நம்பர் பிளேட் ஏலம் எடுத்தவர் கைது !

அதிரை நியூஸ்: டிச-01
அபுதாபி, துபை மற்றும் ஷார்ஜாவில் பேன்ஸி நம்பர் பிளேட்டுகளை ஏலம் விடப்பட்டு பல மில்லியன் டாலர்கள் திரட்டப்படுவது கிட்டதட்ட ஒரு தொழிலாகிவிட்டது. கடந்த மாதம் துபையில் நடைபெற்ற ஏலத்தில் இந்தியர் ஒருவர் D5 என்ற நம்பர் பிளேட்டை 33 மில்லியன் திர்ஹத்திற்கு ஏலம் எடுத்த செய்தி பரபரப்பாக பேசப்பட்டது அனைவரும் அறிந்ததே.

அதேபோல், கடந்த நவம்பர் 19 ஆம் தேதி அபுதாபியில் நடைபெற்ற ஏலத்தில் 'அபுதாபி 1' என்ற எண்ணை 31 மில்லியனுக்கு 32 வயதுடைய இளைஞர் ஒருவர் ஏலமெடுத்தார் ஆனால் அவர் கொடுத்த செக் போதிய பணமில்லாமல் வங்கியிலிருந்து திரும்பியதால் 'செக் மோசடி' வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளர்.

அந்த நம்பர் பிளேட்டை வாங்கியவர் மீண்டும் பிறரிடம் மறுவிற்பனை செய்வதாக இருந்தால் ஏலத்தொகையை முழமையாக அடைத்தால் மட்டுமே மறுவிற்பனை செய்ய முடியும் என்பது சட்டம்.

தற்போது கம்பி எண்ணிக் கொண்டுள்ள அந்த நபர், நம்பர் பிளேட்டை ஏலம் எடுத்தவுடன் விட்ட ஸ்டேட்மெண்ட் என்ன தெரியுமா? 'அமீரகத்தை உலகின் நம்பர் 1 நாடாக மாற்ற உழைத்துக் கொண்டிருக்கும் ஆட்சியாளர்களின் மதிப்பை உயர்த்தவே ஏலம் எடுத்தேன்' என்று பீலா அடித்துவிட்டு விட்டு இப்ப செமையா நாறிப்போனார்!

Source: 7 Days
தமிழில்: நம்ம ஊரான்

அபுதாபியில் 3 தினங்களுக்கு இலசவ பார்க்கிங் !

அதிரை நியூஸ்: அபுதாபி, டிச-01
அமீரக தேசிய தினத்தை முன்னிட்டு இன்று 01.12.2016 முதல் 04.12.2016 வரை 3 விடுமுறை நாட்களிலும் சாலையோர பார்க்கிங் கட்டணங்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை தடை செய்யப்பட்ட பகுதிகளிலோ அல்லது பிற வாகனங்களுக்கு இடைஞ்சல் தரும் வகையிலும் வாகனங்களை நிறுத்தக்கூடாது என்றும் குடியிருப்புவாசிகளுக்கு என இரவு 9 மணிமுதல் காலை 8 மணிவரை ஒதுக்கப்பட்டுள்ள பார்க்கிங்களிலும் யாரும் தங்களுடைய வாகனங்களை பார்க்கிங் செய்யக்கூடாது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பார்க்கிங் கட்டணங்களை மீண்டும் 04.12.2016 ஞாயிறு காலை 8 மணிமுதல் செலுத்த வேண்டும். அதேபோல், வாடிக்கையாளர் சேவை மையங்கள் வழமைபோல் 04.12.2016 காலை முதல் இயங்கும்.

Source: Emirates 247
தமிழில்: நம்ம ஊரான்

குளிர்ந்த காற்றுடன் மழை: அதிரையில் 8.70 மி.மீ பதிவு !

அதிராம்பட்டினம், டிச-01
தென்கிழக்கு வங்கக் கடலில் உருவான நாடா புயல் நாளை (வெள்ளிக்கிழமை) காலை புதுச்சேரி - வேதாரண்யம் இடையே கடலூர் அருகில் கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், கடலோர மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதில் தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் இன்று அதிகாலை குளிர்ந்த காற்றுடன் மழை பெய்தது. குளிர்ந்த காற்று தொடர்ந்து வீசி வருகிறது. வானம் மேகம் கூட்டங்களால் சூழ்ந்து ரம்மியமாக காட்சியளிக்கின்றன.

இன்று காலை 8.30 மணி நேர நிலவரப்படி அதிரையில் 8.70 மி.மீ மழை பதிவாகி உள்ளது. பட்டுக்கோட்டையில் 5.40 மி.மீ, பேராவூரணி 7 மி.மீ, மதுக்கூரில் 5 மி.மீ மழை பதிவாகி உள்ளது. 

மரண அறிவிப்பு ( ஜரீனா அம்மாள் அவர்கள் )

அதிராம்பட்டினம், கீழத்தெரு பாட்டன் வீடு குடும்பத்தை சேர்ந்த மர்ஹூம் சி.சு கமருல் ஜமான் அவர்களின் மகளும், மர்ஹூம் ஹாஜி எஸ்.எஸ் சேக்தாவூது அவர்களின் மனைவியும், ஜாவித் அஹமது, அப்துல்லா ஜிப்ரி, ஜம்சித் முஹம்மது, செய்யது யாசர் ஆகியோரின் தாயாருமாகிய ஜரீனா அம்மாள் அவர்கள் நேற்று இரவு வஃபாத்தாகிவிட்டார்கள்.

"இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஹூன்"

அன்னாரின் ஜனாஸா இன்று ( 01-12-2016 ) காலை 10 மணியளவில் பெரிய ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

நாடா புயல் - தஞ்சை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை !

'நாடா' புயல் எச்சரிக்கை காரணமாக தஞ்சை, புதுக்கோட்டை மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.